ஸ்ருங்கேரி சாரதாம்பா காஞ்சி காமாக்ஷி


அம்பாள் கிருபையினால, ஒரு நாலு நாள் ஸ்ருங்கேரி க்ஷேத்திரத்துல போய் தங்கி இருந்து, சாரதாம்பாளை தரிசனம் பண்ணி, சந்திரமௌலீஸ்வர பூஜை எல்லாம் பார்த்து ரொம்ப ஆனந்தமா கழிச்சோம். திருவண்ணாமலைன்னு சொன்னாலே நம்ம சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமண பகவான் ஞாபகம் வர மாதிரி, இந்த ஸ்ருங்கேரி க்ஷேத்ரத்தை நினைச்சாலே, இராமாயண காலத்துல ரிஷ்யஸ்ருங்கர், அவர் காட்டுல தபஸ் பண்ணிண்டு இருக்கார். பஞ்சத்தை போக்க அவரை ரோமபாத மன்னர், பெண்களை கொண்டு தன் நாட்டுக்கு வரவழைத்தார். முனிவர் கால் பட்ட உடன் அங்கே  மழை பெய்தது. அப்புறம் தசரத மஹாராஜா, ரிஷ்யஸ்ருங்கரை கூட்டிண்டு போயி, அஸ்வமேதயாகம், புத்ரகாமேஷ்டி பண்ணி, ராமர் அவதாரம் பண்ணார். அப்புறம் ரிஷ்யசிருங்கர் திரும்பவும் இந்த காட்டுக்கே வந்து, இங்க ‘கிக்க’ ங்கிற இடத்துல தபஸ் பண்ணி, அவர் பரமேஸ்வரனோட ஐக்யம் ஆயிட்டார் அப்டீன்னு ஐதீகம். அங்க ஒரு சிவலிங்கம். அந்த சிவலிங்கத்துக்கு  ஒரு கொம்பு இருக்கு. அதை ரிஷ்யஸ்ருங்கரோட அதிஷ்டானம் மாதிரி, அங்க பூஜை பண்றா.

ரிஷ்யஸ்ருங்கரோட  அப்பா விபண்டக முனிவர், அவருக்கு ஸ்ருங்கேரியிலையே, மலஹானிகரேஸ்வரர் கோயில்ன்னு ஒண்ணு இருக்கு. ஒரு நூற்றி ஐம்பது படி மேல ஏறி போனா, பவானி சமேத மலஹானிகரேஸ்வர் அப்டீன்னு சன்னிதி. விபாண்டகர் பூஜை பண்ணி, அங்க ஸ்வாமியோட ஐக்யம் ஆனார், அப்டீன்னு சொல்றா.

இந்த விபண்டகர், ரிஷ்யஸ்ருங்கர்ல இருந்து ஆரம்பிச்சு, ஆதி சங்கரர் அங்கே வந்து சாரதாம்பாளை பிரதிஷ்டை பண்ணினது, அப்புறம் சுரேச்வராச்சார்யாள் முதற்கொண்டு, ஸ்ருங்கேரில சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள், அந்த மஹான்களை எல்லாம் நினைக்கணும். சந்திரசேகர பாரதி ஸ்வாமிகளை நினைச்சா, உடனே நம்ம சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள், மஹாபெரியவா இப்படி எல்லா ஞானிகளையும் த்யானம் பண்றதுக்கு ஒரு நல்ல வாய்ப்பா இருந்தது.

மஹாபெரியவா தெய்வத்தின் குரல்ல, ஐந்தாவது பகுதியில, ஆதி சங்கரருடைய சரித்திரத்தை அவருக்கே உண்டான அழகான ஒரு ஷைலில விஸ்தாரமா சொல்லியிருக்கா. அதனால ஸ்ருங்கேரின்ன  உடனே அந்த பகுதிகளை எல்லாம்  எடுத்து படிச்சேன். என்ன ஆனந்தம்!

ஆதி சங்கரர், காசி க்ஷேத்ரத்துல,  தன்னுடைய பதினாறாவது வயசுல, பிரஸ்தான த்ரய பாஷ்யங்கள்  எழுதி முடிக்கிறார். அப்போ வியாசர் ஒரு கிழவர் மாதிரி வந்து, அவர்கிட்ட பலவிதமான வாதங்களை பண்றார். எப்படி மாத்தி மாத்தி வாதம் பண்ணினாலும் ஆதி சங்கரர், அதுக்கு அழகா பதில் சொன்ன உடனே, வியாசர் அவருக்கு தரிசனம் கொடுத்து, இன்னொரு பதினாறு வருஷம், இந்த பாரத  பூமி முழுக்க நீங்களே பிரயாணம் பண்ணி எல்லாருக்கும் தரிசனம் கொடுத்து, உங்க தரிசனத்துனாலயும், அங்கங்க இருக்கற பண்டிதர்களுக்கு, உங்களுடைய வாதத்துனாலயும், எல்லாருக்கும் தெளிவை கொடுக்கணும், அப்டீன்னு அனுக்ரஹம் பண்றார்.

அங்கே இருந்து ஆதி சங்கரர், கிளம்பி முதல்ல பிரயாகை வந்து குமாரில பட்டரை பாக்கறார்,  அப்டீன்னு சரித்ரம்.  இந்த குமாரில பட்டர் சுப்ரமணிய ஸ்வாமியோட அவதாரம். அதுக்கு முன்னாடி பௌத்த மதம் தீவிரமா இந்தியாவில் இருந்தது. பௌத்த மதத்துல என்னன்னா,  ஒரு விளக்கை ஊதி அணைக்கற மாதிரி,  மனசை அழிச்சுடணும். ஆசையே துன்பத்திற்கு காரணம். மனசே எல்லா ஆசைக்கும் காரணம். மனசே இல்லாம பண்ணிக்கறது. அப்டீன்னு அதோட நிறுத்திடரா. அதுக்கு மேல, அந்த மனோலயம் ஆன பின்ன, ஆத்மா, ஸ்வச்சமா விளங்கும். அந்த ஆத்ம அனுபவம், மனசுக்கும் எட்டாத அந்த ஆத்ம அனுபவம், பேரானந்தம், அப்டீங்கிற அந்த ஞான மார்கத்தை அவா சொல்றதில்லை. அவா வேதத்தையே ஒத்துகாதவா. அதனால, அந்த பௌத்தர்கள் வேதத்துல சொன்ன கர்மாக்களை எல்லாமும் விட்டுட்டா. அதனால குமார ஸ்வாமியே குமாரிலபட்டரா அவதாரம் பண்ணி பூர்வ மீமாம்சைக்கு ரொம்ப உழைச்சு, வைதீக கர்மாக்களை எல்லோரும் பண்ண வெச்சார்.

அதுல ஒரு கதை என்னன்னா, குமாரில பட்டர் பௌத்தர்களை கண்டனம் பண்றதுக்கு, பௌத்தர்களோடையே போயி சேர்ந்துண்டு, அவாகிட்டயே ஏழு வருஷம், எல்லாத்தையும் படிச்சுக்கறார். ஆனா அவா இவர் வைதீகர் அப்டீன்னு கண்டு பிடிச்சுடரா. அதனால வஞ்சனையா அவரை ஏழாவது மாடிக்கு கூட்டிண்டு போயி, அஹிம்சாவாதிகள்னு பேரு. ஆனா அவரை அங்கிருந்து கீழ தள்ளி விட்டுடறா. அவர் விழும் போது ‘வேதம் ஸத்யம் என்பது உண்மையானால், எனக்கு ஒரு ஹானி வரக் கூடாது. ஆபத்து வரக் கூடாது’, அப்டீன்னு, சொல்லிண்டே விழறார். அவர் விழும் போது, அவர் உடம்புக்கு  ஒண்ணுமே ஆகலயாம். ஒரு எலும்பு உடையல. ஆனா கண்ல ஒரு கல் குத்தித்தாம். அவர் ‘என்ன இது?’ அப்டீன்னு கேட்டாராம். அப்போ அசரீரி கேட்டதாம். ‘நீங்கள் வேதமே ஸத்யம். அது என்னை காப்பாத்தட்டும்’, அப்டீன்னு சொல்லாம,  ஸத்யம் என்பது உண்மையானால், அப்டீ ‘யதி’னு சொன்னதுனால, இந்த ஒரு சின்ன ஹானி, அப்டீன்னு, சொன்னாளாம்.

அந்த மாதிரி, அப்படி அவர் வேதத்தையும், தர்ம சாஸ்திரங்களையும் நம்பறவர். கர்மமார்கத்துல இருக்கறவர். ஆனால், அவர், குருதுரோகம் பண்ணிட்டோம்னு, ஒரு எழுத்து சொல்லி கொடுத்தால் கூட குரு. அந்த பௌத்தர்களிடத்துல எல்லாத்தையும் கத்துண்டு, இன்னிக்கு இந்தியாவுல பௌத்த மதமே இல்லை. எங்கயோ  சீனா, ஜப்பான்ல தான் இருக்கு. அந்த மாதிரி, பண்ணினவர் குமாரில பட்டர்.

அப்படி நாம குரு த்ரோஹம் பண்ணிட்டோம். இதுக்கு என்ன பிராயச்சித்தம், அப்டீன்னு புஸ்த்தகத்துல தேடினாராம். தன் உடம்பை நெருப்புல கொஞ்சம் கொஞ்சமா வருத்தி உயிரை விடறதுதான் பிராயச்சித்தம், அப்டீன்னு எழுதி இருந்ததாம். மஹாபெரியவா வேடிக்கையா சொல்றா ‘இந்த மாதிரி ஒரு புஸ்தகத்துல போட்டு இருந்ததுன்னா நாம அந்த புஸ்தகத்தை நெருப்புல போட்டுடுவோம். குமாரில பட்டருக்கு தர்ம சாஸ்த்ரத்துல இருக்கற நம்பிக்கையினால இந்த பிராயச்சித்தத்தை பண்ணிண்டு இருந்தார்.  உமியை வெச்சு அதுல நெருப்பு மூட்டி அதுக்குள்ள அவர் உட்கார்ந்து இருந்தார்.’

இதை ஆதி சங்கரர் கேள்வி பட்ட உடனே அவருக்கு தரிசனம் கொடுக்க ஓடோடி  வந்தார். அவருக்கு ஞானோபதேசமும் பண்ணார்.  கர்மாங்கிறது சித்த சுத்திக்கு. அதுக்கு மேல பக்தி பண்ணி ஸகுணோபாசனை, நிர்குணோபாசனை பண்ணி, கார்யங்கள் எல்லாம் விட்ட நிலைமை ஒண்ணு இருக்கு. அது ஜீவன் முக்த தசை, அப்டீன்னு அதை பத்தி சொன்ன உடனே அவருக்கு ஞானம் வந்துடறது. ஆதி சங்கரரை தரிசனம் பண்ணின உடனே அவருக்கு, அந்த அக்னியோட தாபம் போயிடுத்தாம். ஞானோபதேசத்தையும் கேட்ட உடனே அவர் ஞாநி ஆயிடறார். உடம்பு எரிஞ்சு போயிடறது. ஒண்ணும் கவலை இல்லை. அந்த மாதிரி மஹான்களோட தியாகம் இருக்கு நம்முடைய மதத்துக்கு. யாரும் இந்த வேத மதத்தை அசைக்க முடியாது,  அப்டீன்னு மஹா பெரியவா சொல்றா.

அந்த இடத்துல

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்குழல் வேனிலும்

மூசு வண்டறி பொய்கையும் போன்றதே

ஈசன்  எந்தன்  இணையடி நிழலே

அப்டீன்னு அப்பர் பெருமானை எப்படி சுண்ணாம்புக் காளவாயில போட்டபோது அவருக்கு ஒண்ணும் பாதிக்கலையோ, அந்த மாதிரி குமாரில பட்டருக்கு, ஆதி சங்கரரை பார்த்த உடனே அந்த தரிசனத்துனால அவருக்கு அந்த நெருப்பு சுடலை. அம்பாள் அனுக்ரஹத்துனால ஹனுமாருக்கு எப்படி அவருடைய வாலில் இருந்த நெருப்பு எப்படி சுடாம இருந்ததோ  அந்த மாதிரி இவருக்கு இந்த நெருப்பு சுடாம இருந்தது. ஒண்ணும் கஷ்டத்தை கொடுக்கலை. அவர் ஞானம் அடைஞ்சுட்டார்.

போறதுக்கு முன்னாடி, “நீங்க, மாஹிஷ்மதில மண்டன மிஸ்ரர் அப்டீன்னு ஒருத்தர் இருக்கார். அவருக்கு நூத்துக்கணக்கான சிஷ்யர்கள் இருக்கா. நிறைய யாகங்கள் எல்லாம் பண்ணிண்டு கர்ம மார்கத்துல ரொம்ப தீவிரமா இருக்கார்.அவரை நீங்க உங்க ஞான மார்க்கத்தை ஒத்துக்க வெச்சேள்னா, அத்வைதத்தை அவர் ஒப்புத்துண்டார்னா, இந்த பாரத தேசத்துல எல்லாருமே அதுனால மாறுவா” அப்டீன்னு, சொல்றார். ஆஹான்னு சொல்லி இந்த மாஹிஷ்மதிக்கு ஆதி சங்கரர் வரார். வந்த போது, மண்டன மிஸ்ரர் க்ருஹம்  எதுன்னு கேட்கறார். எந்த வீட்டு வாசல்ல பெண் கிளிகள் கூட சாஸ்த்ர விசாரம், ஸ்வத:ப்ரமாணம், பரத:ப்ரமாணம் பற்றி சர்ச்சை எல்லாம் பண்ணிண்டு இருக்கோ, அந்த வீடுதான். அப்டீன்னு சொல்றாளாம். அப்போ அதை வெச்சுண்டு தேடி போறார்.

அன்னிக்கு  மண்டன மிஸ்ரர் ஸ்ரார்த்தம் பண்ணிண்டு இருக்கார். அவருக்கு ஜைமினியும் வ்யாசருமே ஸ்ராத்த பிராமணர்களா வந்திருக்கா. அந்த மண்டன மிஸ்ரர்  தீவிர மீமாம்சகரா இருக்கர்துனால இந்த கர்மாவை விட்ட சன்யாசிகளை பாக்கறதே இல்லைன்னு சபதம் வெச்சுண்டு இருந்தார். அதுனால ஆதி சங்கரர் என்னடா பண்றதுன்னு யோசிச்சாராம். அந்த காலத்துல தென்னை மரத்துல ஏறி தேங்காய் பறிக்கரவா ஒரு மந்திரம் சொல்வாளாம். தென்னை மரம் வளைஞ்சு கொடுக்குமாம். அங்க ஒரு சாணான் கிட்ட அதை கத்துண்டு ஒரு தென்னை மரத்துல ஏறிண்டு அவா ஆத்துக்குள்ள போயி குதிச்சாராம், ஆதி சங்கரர்.

அவர் மண்டன மிஸ்ரர், ஸ்ரார்த்தம் பண்ணிண்டு இருக்கார். அவருக்கு சன்யாசியை பார்த்த உடனே கோபம் வரது. எங்கே இருந்து முண்டி? அப்டீன்னு கேட்டாராம். முண்டினா மொட்டை அடிச்சுண்டவர்னு அர்த்தம். ஆதி சங்கரர் விளையாட்டா,  கழுத்துக்கு மேல முண்டி அப்டீன்னு சொன்னாராம் ஆதி சங்கரர். சன்யாசிகள் கழுத்துக்கு கீழ வபனம் பண்ணிக்க மாட்டா. அப்படி வேடிக்கையா பதில் சொன்னாராம். அப்படி அவர் கேட்டதுக்கு எல்லாமே  இப்படி, அவர் தர்க்க சாஸ்த்ரத்துல நிபுணரா இருந்ததால் அதுக்கு மேல அழகா பதில்கள் சொன்னாராம். எங்க வந்தேள்? நான் ஸ்ரார்தம் பண்ணனும்,  என்ற போது ஜைமினி முனிவரும் வியாச முனிவரும், விஷ்ணு இலையில சன்யாசியை உட்கார வைக்கலாம் அப்டீன்னு சொல்றா. உடனே மண்டன மிச்ரரும் நீங்க பிக்ஷைக்கு வாங்கோ அப்டீன்னு கூப்பிடறார். அப்போ ஆதி சங்கரர் நான் அன்ன பிக்ஷைக்கு வரலை வாத பிக்ஷைக்கு வந்திருக்கேன். அப்டீன்னு சொல்றார். இப்போதைக்கு சாப்பிடுங்கோ அப்புறம் வாதம் பண்ணலாம் அப்டீன்னு, ஸ்ரார்தத்தை நல்ல படியா முடிச்ச பின்ன, ஆதி சங்கரரும், மண்டன மிச்ரரும் உட்கார்ந்து வாதம் பண்றா. இதுக்கு மத்யஸ்தம் , யாரை வைக்கலாம்னா,  மண்டன மிஸ்ரரோட  மனைவி சரசவாணி.

இந்த மண்டன மிச்ரரும் சரசவாணியும், பிரம்மாவும், சரஸ்வதி தேவியும்தான். அந்த கிளிகளே புத்திமதிகளா,  இருக்கிறபோது சரசவாணி சாக்ஷாத் சரஸ்வதி தேவி. உபய பாரதி அப்டீன்னு பட்டம் எல்லாம் வாங்கி இருக்கா. அவளை மத்யஸ்தமா வெச்சு, வாதம் பண்றா. அவ தன்னுடைய கணவரையும் தோத்துட்டார்னு சொல்ல முடியாது. இந்த சன்யாசியையும் தோத்துட்டார்னு சொல்ல முடியாதுன்னு சொல்லி, ரெண்டு மாலையை கொடுத்து, அவா கழுத்துல போட்டுக்க சொல்லி,  யார் கழுத்துல இருக்கிற மாலை முதலில் வாடறதோ அவா அபஜயம். யார் மாலை வாடாம இருக்கோ அவா ஜெயிச்சா. அப்டீன்னு சொல்லி தன்னுடைய சித்தத்தை அந்த மாலையில வெச்சிருக்கா. இல்லேன்னா நாட் கணக்குல அந்த மாலை வாடாம இருக்குமா?

அந்த மாதிரி ரெண்டு பேரும் இருபத்தொரு நாள் வாதம் பண்றா. ஆதி சங்கரர்  சொல்றத கேட்க கேட்க, மண்டன மிஸ்ரருக்கு அதுதான் ஸத்யம்,  அத்வைதம் தான் தத்வம்னு புரியறது. மனசுக்கு புரிஞ்ச உடனே அவர் கழுத்துல இருக்கிற மாலை வாடிடறது.

அப்போ சரசவாணியும் சில கேள்விகள் கேட்டா. அதுக்கு பதில் சொன்னார்னு ஒரு கதை இருக்கு.  சரஸ்வதி தேவியையே ஆதி சங்கரர் ஜெயிச்சார். சர்வக்ஞர்ங்கிறதுக்கு. அப்படி ஒரு கதை. அதுக்கபுறம் “ரெண்டு பேரும் பிக்ஷைக்கு வாங்கோ” அப்டீன்னு கூப்பிட்டாளாம் சரஸ்வதி தேவி. அதாவது ரெண்டு பேரும் சன்யாசிகள் இப்போ.  முதல்ல ஒரு பந்தயம் வெச்சுக்கறா. மண்டன மிஸ்ரர் தோத்து போனா, அவர் சன்யாசி ஆயிடனும், ஆதி சங்கரர் தோத்து போனா கிருஹஸ்தர் ஆயி ,கர்மா எல்லாம் பண்ணணும் அப்படி ஒரு பந்தயம் வெச்சுக்கறா. இப்ப ரெண்டு பேரையும் பிக்ஷைக்கு வாங்கோன்னு கூப்பிடறா, அதாவது இப்ப ரெண்டு பேரும் இப்ப சன்யாசிகள் அப்டீன்னு அர்த்தம். தன் பர்த்தா சன்யாசம் வாங்கிக்கறதை பத்னி ஒத்துண்டா னா எவ்வளவு பெரிய த்யாகம்! சங்கரரை போல மதத்துக்காக இவாளும் அப்படி த்யாகம் பண்ணி இருக்கா!

அப்பறம் சாப்பிட்ட பின்ன சரசவாணி, நான் பிரம்ம லோகத்துக்குப் போறேன்னு சொன்ன உடனே ஆதி சங்கரர், வன துர்கா மந்திரத்துனால கட்டி நீங்க இங்கயே இருக்கணும், இந்த பூமியில பிரதிஷ்டையா இருந்து எல்லாருக்கும், நல்ல புத்தியையும் ஆத்ம வித்தையும் உபதேசம் பண்ணனும், அப்டீன்னு கேட்கறார். அப்போ சரீன்னு சொல்லி, நீ பால சன்யாசி, நீ முன்னாடி போ, நான் பின்னாடி வந்துண்டே இருக்கேன். எங்க நீ திரும்பி பார்க்கறயோ  அங்கேயே நான் பிரதிஷ்டை ஆயிடறேன் , அப்டீன்னு அம்பாள் சொல்றா. சரீன்னு எல்லாரும்  போயிண்டு இருக்கா.  இப்படி போயிண்டே இருக்கும்போது ஆதி சங்கரர் இந்த ஸ்ருங்ககிரிக்கு வரார். அங்க துங்கா தீரத்துல கர்ப்பமா இருக்கிற தவளைக்கு ஒரு பாம்பு வெயில் படாம குடை பிடிச்சுண்டு இருக்கு. ஆதி சங்கரர் இதைப் பார்த்த உடனே ‘இயல்பாகவே எதிரிகளா இருக்கறவா கூட இந்த க்ஷேத்ரத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் நட்பாக இருக்காளே! இது ரொம்ப அபூர்வமான ஒரு க்ஷேத்ரம். இங்க அம்பாள் இருந்தா நன்னா இருக்கும்னு நினைக்கிறார். அதே நேரத்துல அம்பாளோட சலங்கை ஒலி கேட்கலை. அம்பாள் மணல் மேலே நடந்து வந்துண்டு இருக்கார். அப்ப சலங்கை ஒலி நின்னு போச்சு. என்னனு இவர் திரும்பி பார்க்கிறார். அங்கேயே அம்பாள் சிலை ஆகிவிடுகிறாள். அங்கேயே சாராதா தேவியை பிரதிஷ்டை பண்ணி ஒரு கோவில் கட்டி இருக்கார்.

அந்த கோவிலில் வெள்ளி ரதத்தில் புறப்பாடு. தங்க பாவாடை சாத்தி கையில் வீணையோடு ஒரு தர்சனம் இப்படி நாலு நாள் ஆனந்தமாக தர்சனம் பண்ணிண்டு இருந்தோம். அந்த சாரதாதேவி மேல கமலஜதயிதாஷ்டகம் னு ஒரு ஸ்லோகம் சச்சிதானந்த சிவாபிநவ நரஸிம்ம பாரதி ஸ்வாமிகள்னு சந்திரசேகர பாரதி ஸ்வாமிகளோட குரு, ஒரு அஷ்டகம் பண்ணி இருக்கார். அவர் நிறைய கிரந்தங்கள் பண்ணி இருக்கார். அவர் தான் ஆதி சங்கரருடைய எல்லா புஸ்தகங்களையும் அச்சுக்கு கொண்டு வந்தார். பெரிய மஹான். அந்தமஹான் மஹான் பண்ணின கமலஜதயிதாஷ்டகதுலேர்ந்து ஒரு ஸ்லோகத்தை கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் எல்லாருக்கும் சொல்வார்.

कर्मस्वात्मोचितेषु स्थिरतरधिषणां देहदार्ढ्यं तदर्थं

दीर्घंचायुर्यशश्च त्रिभुवनविदितं पापमार्गाद्विरक्तिम् ।

सत्सङ्गं सत्कथायाः श्रवणमपि सदा देवि दत्वा कृपाब्धे

विद्यां शुद्धां च बुद्धिं कमलजदयिते सत्वरं देहि मह्यम् ॥

கர்மஸு ஆத்மோசிதேஷு ஸ்திரதர திஷணாம் தேஹதார்ட்யம் ததர்த்தம்
தீர்க்கம்சாயு: யஷஸ்ச த்ரிபுவன விதிதம் பாபமார்காத் விரக்திம் |
ஸத்சங்கம் ஸத்கதாயா: ஸ்ரவணமபி சதா தேவி தத்வா
வித்யாம் சுத்தாம் ச புத்திம் கமலஜதயிதே ஸத்வரம் தேஹி மஹ்யம் ||

னு ஒரு அழகான ஸ்லோகம்.

கர்மஸு ஆத்மோசிதேஷு – அவரவர்களுக்கு வர்ணாஷ்ராமத்தின் படி உசிதமான கர்மத்தில்

ஸ்திரதர திஷணாம் – உறுதியான புத்தியும்

தேஹதார்ட்யம் ததர்த்தம் – அதற்கு தேவையான உடம்பில் வலுவும், சாப்பிட்டு தூங்கிண்டு இருக்கறதுக்கு உடம்பிலே வலு கேட்கலை. ஸத்கர்மம் பண்றதுக்கு உடம்பில வலிமை.

தீர்க்கம்சாயு: – மனுஷ ஆயுசு நூறு வருஷம்னு சொல்றா. அதாவது இந்த ஜன்மாவிலேயே ஞானத்தை அடையணும். அதற்கு கர்மா பண்ணி சித்த சுத்தி, பக்தி, ஆத்ம விசாரம் அப்படி அந்த மார்கத்துல போறதுக்கு தீர்க்கம்சாயு: – நீண்ட ஆயுஸ்

யஷஸ்ச த்ரிபுவன விதிதம் – மூவுலகத்துலேயும் புகழ். நல்லவா புகழோட இருந்தா மத்தவா அவாளைப் பார்த்து நல்ல வழியில் இருப்பா. அதுல ஸ்வாமிகள் சொல்வார் ‘இந்த உலகத்துல போஸ்டர் அடிச்சு புகழ் வாங்கலாம். யஷஸ்ச த்ரிபுவன விதிதம் – மூவுலகத்துலேயும் புகழ்ணா தெய்வங்கள் சர்வ சாக்ஷி அவா, நம்ம மனசுல நினைக்கறது கூட அவாளுக்கு தெரியும். உத்தமமான நடத்தை இருந்தால் தான் தெய்வங்கள் கிட்ட நல்ல பேர் வாங்க முடியும். அந்த மாதிரி புகழைக் கேட்கிறார்.

பாபமார்காத் விரக்திம் – பாப வழியில் புத்தி போகவே கூடாது. அதுக்கு என்ன பண்ணனும்?

ஸத்சங்கம் –சாதுக்களோட சங்கத்துல இருக்கணம். கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் மாதிரி, மஹாபெரியவா மாதிரி, சிவன் சார் மாதிரி சாதுக்களை ஆஷ்ரயிக்கணும். அப்படி ஒரு ஸத்சங்கம் நேரிலே கிடைக்கலைனாலும்

ஸத்கதாயா: ஸ்ரவணமபி – அவாளோட கதைகளை கேட்டுண்டே இருக்கணும். ராமாயணம் கேட்கற மாதிரி மஹாபெரியவாளோட அனுபவங்களை கேட்டுண்டே இருந்தா அது தான் ஸத்கதா ஸ்ரவணம்

“ஸத்கதாயா: ஸ்ரவணமபி சதா தேவி தத்வா” எப்போதும் எனக்கு இதெல்லாம் வேணும்.

‘க்ருபாப்தே’ கருணைக் கடலே ‘வித்யாம் சுத்தாம் ச புத்திம்’ ஆத்ம வித்தையும் தூய்மையான புத்தியும், அதாவது சித்தசுத்தி,

‘கமலஜதயிதே’ தாமரையில் உதித்த பிரமனின் மனைவியான ஹே சாரதா தேவி,

‘ஸத்வரம் தேஹி மஹ்யம்’ வெகு சீக்ரமாக இன்னிக்கே அப்படி ஆத்ம வித்தையும் நல்ல புத்தியையும் கொடு இப்படி ஒரு ஸ்லோகம்.

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் எப்படின்னா, இப்படி ஒரு அருமையான அம்ருதமான விஷயத்தை, முதலிலேயே சின்ன குழந்தைகளுக்கு உள்ளுக்குள்ள எத்திடுவார். ‘ரொம்ப விஷமம் பண்றான்’ னு ஒரு அம்மா வந்து வருத்தப்பட்டு சொன்னால் ‘இந்த ஸ்லோகத்தை தினம் பன்னிரண்டு வாட்டி சொல்லுங்கோ’ம்பார். அவா அதைச் சொன்னா ரெண்டு பேருக்கும் ஒருத்தர் கிட்ட ஒருத்தருக்கு அன்பும் வளர்ந்துடும். இந்த ஸ்லோகத்தை சொல்லிண்டே வந்தான்னா நிச்சயமாக அவனுக்கு நல்ல குரு கிடைச்சு, நல்ல கதைகளைக் கேட்டு, நல்ல வழியில புத்தி இருந்து ஆத்ம ஞானத்தை அடைவான். அப்படி ஸ்வாமிகள் ஒண்ணு சொன்னதைக் கேட்டாலே இஹ பர க்ஷேமத்தை கொடுத்துடும். இந்த ஸ்லோகத்தை ஸ்வாமிகள் ரொம்ப விரும்பி சொல்வார்.

அந்த சச்சிதானந்த சிவாபிநவ நரஸிம்ம பாரதி ஸ்வாமிகளோட மஹிமை எப்படின்னா, ஸ்ருங்கேரியில ஒரு தம்பதிகளுக்கு பன்னிரண்டு குழந்தைகள் பிறந்து எல்லாமே தவறி போயிடறது. அவா இந்த ஆசார்யாள் கிட்ட முறையிட்டுக்கரா. அப்போ இந்த ஆசார்யாள் ஒரு சுவாசினி பூஜையின் போது ஆசீர்வாதம் பண்ணி ‘உனக்கு ஒரு குழந்தை பிறப்பான். அவனை மடத்துக்கு குடுத்துடு’ன்னு சொல்லி குழந்தை பிறந்த உடனே நரஸிம்ம சாஸ்த்ரினு பேர் வெச்சு மடத்துல கூட்டிண்டு வந்து அவரை வளர்த்து உருவாக்கினார். அவர் தான் அடுத்த ஆசார்யாள் சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள். அவரோட இருபது வயசுல அவரை மடாதிபதியாக வெச்சுட்டு நரஸிம்ம பாரதி ஸ்வாமிகள் பகவான் கிட்ட போயிடறார்.

அந்த சந்திரசேகர பாரதி ஸ்வாமிகளோட பெருமை அளவிட முடியாதது. நம்ம சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளும் (மஹாபெரியவா) சந்திரசேகர பாரதி ஸ்வாமிகளும் வேத தர்ம சாஸ்த்ரங்களில் நம்பிக்கை, எளிமை, துறவு எல்லாத்துலேயும் ஒரே மாதிரி. தெய்வத்தின் குரல் படிச்சா நமக்கு எவ்வளவு பெரிய விஷயங்களை மஹாபெரியவா எவ்வளவு எளிமையாக சொல்றாங்கர மாதிரி, சந்திரசேகர பாரதி ஸ்வாமிகளோட உபதேசங்களை படிச்சாலும் அதே ஆச்சர்யம் ஏற்படும். பெரிய சாஸ்திர விஷயங்களை, ரொம்ப அழகான தர்க்கங்களை சொல்லி, ரொம்ப எளிமையான உபமானங்களைச் சொல்லி மனசுல பதிய வெச்சுடுவார்.

ஸ்ருங்கேரி மடத்துல போட்ட புஸ்தகத்துல சந்திரசேகர பாரதி ஸ்வாமிகளைப் பத்தி இரண்டு விஷயங்களை படிச்சவுடனே எனக்கு ரொம்ப பரமானந்தம் ஆகிவிட்டது. அவரோட பத்து வயசுல, மடத்துல அவரை வளர்த்துண்டு இருக்கா. அவருக்கு மூக பஞ்சசதீ ஸ்தோத்ரத்துல ரொம்ப இஷ்டமாம். அவர் கிட்ட பணம் குடுத்து ஏதோ வாங்கிண்டு வான்னு சொல்லி அனுப்பி இருக்கா. அவர் மூக பஞ்சசதீ சொல்ல ஆரம்பிச்சு, என்ன கார்யம் சொன்னா, என்ன வாங்க சொன்னா எல்லாம் மறந்து போய், அந்த ஐநூறு ஸ்லோகமும் சொல்லி முடிச்ச பின்ன, ஒரு பத்து கிராமம் தள்ளி வந்து நின்னுண்டு, எங்கே வந்தோம் எதுக்கு கிளம்பினோம்னு புரியாம திரும்ப வந்து கேட்டாராம். அப்படி சின்ன வயசுலேயே இந்த மூக பஞ்சசதீ ஸ்தோத்ரத்தோட இனிமையில மயங்கி ஒருத்தர் சமாதி நிலைக்கு போக முடியும்னா, அவர் பிறவியிலேயே மஹான். அவரோட குரு, ஏதோ ஒரு யோகியை, ஒரு காரணமாக இங்கே பிறக்க வெச்சு, அந்த மடத்துல கொஞ்ச நாள் ஆசார்யாளாக இருக்க வெச்சுருக்கார்.

அந்த சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள், இருபது வயசுல பீடத்துக்கு வந்து ஒரு நாற்பது வயசு வரைக்கும் பூஜை, சஞ்சாரம் எல்லாம் பண்ணி, ஜனங்களுக்கு தர்சனம் குடுத்து, ஸதுபதேசங்கள் எல்லாம் பண்ணி இருக்கார். அவருக்கு வால்மீகி ராமாயணத்துல ரொம்ப ப்ரியம். சின்ன வயசுலேர்ந்தே வால்மீகி ராமாயணம் நிறைய பாராயணம் பண்ணி இருக்கார். பக்கத்துல ஒரு பலகை போட்டுண்டு ஹனுமார் கேட்கரார்னு ஹனுமாருக்கு ராமாயணம் படிச்சுண்டே இருப்பாராம். பீடத்துக்கு வந்த பின்னும், அவர் சந்திரமௌலீச்வர பூஜையை முடிச்சுட்டு மணிக்கணக்கா ராமாயணம் பிரவசனம் பண்ணுவார், அப்படீன்னு நம்ம ஸ்வாமிகள் சொல்வார். அப்படி ராமாயண பாராயணம், பிரவசனம்ங்கிறது ஏதோ புடவை வேஷ்டிக்காக பண்ற விஷயம் இல்லை, சன்யாசிகள் கூட அனுபவிக்கற, ஞானத்தை குடுக்க கூடிய ஒரு கிரந்தம் அப்படின்னு ஸ்வாமிகள் சொல்வார்.

அந்த சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள், நாற்பது வயசு ஆனப்பின்ன அவருக்கு இந்த மடத்து நிர்வாகம் பண்ணவே முடியலை. அவருக்கு பஹிர்முகமாக எதுவுமே பண்ண முடியலை. அப்படி ஜீவன்முக்தராக ஆத்மாராமராக அந்தர்முகமாக போய்விட்டார். ஒரு உத்தம சிஷ்யருக்கு சன்யாசம் குடுத்து அடுத்த ஆச்சர்யாளாக அமர்த்திவிட்டு அவர் எப்போதுமே தனிமையில் இருந்தார். ஏதோ சில சமயங்களில் சங்கர பாஷ்ய பாடங்களில் கலந்துண்டு இருக்கார். பண்டிதர்களை எப்பவோ பார்த்து இருக்கார். வெளியில வந்து ஜனங்களோட பழகவே இல்லை. அப்படி ஒரு இருபது வருஷங்கள் இருந்துவிட்டு துங்கா நதியில் ஜல சமாதி அடைந்துவிட்டார். அப்பேற்பட்ட மஹான்.

அந்த மாதிரி அவர் தனிமையில் இருக்கும்போது ஒரு பண்டிதர் மஹாபெரியவா கிட்டேர்ந்து அங்க போயிருக்கார். மஹாபெரியவாளுக்கு சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் மேலே அபார அன்பு, மதிப்பு. யாரோ ‘ஸ்ருங்கேரி ஆசார்யாளுக்கு பித்து பிடிச்சுடுத்தாமே’ னு சொன்ன போது மஹாபெரியவா கடும்கோபம் அடைந்து ‘நீ ரொம்ப புத்தி ஸ்வாதீனமா? பெரியவாளை அபசாரமாக பேசாதே! போய் சந்திரமௌலீச்வரரை நமஸ்காரம் பண்ணி மன்னிப்பு கேள். என்ன தெரியும் உனக்கு? அவாளை மாதிரி (சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள்) மாதிரி ஜீவன் முக்தர் ஒருத்தர் இருந்தாலே போதும். அவரால் தான் மழை பெய்யறது. உலகமே சுபிக்ஷமா இருக்கு. அபசாரம் பண்ணாதே!’ னு கடுமையாக கோச்சுண்டு இருக்கா.

அந்த காலத்துல பண்டிதர்கள் இரண்டு மடத்துக்கும் போயிண்டு வந்துண்டு இருக்கா. அப்படி காஞ்சீலேர்ந்து ஒரு பண்டிதர் ஸ்ருங்கேரி போன போது சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் அவர்கிட்ட சொல்லி இருக்கார் ‘இங்கே (என்னால்) பஹிர்முகமாக கார்யங்களே பண்ண முடியலை. இதற்கும் (எனக்கும்) சேர்த்துவெச்சு அவா (மஹாபெரியவா) நல்ல திட்டங்களெல்லாம் போட்டு ரொம்ப நன்னா தர்ம பிரசாரம் பண்றார். அவருக்கு நான் க்ருதஞ்தை தான் தெரிவிக்க முடியும்’ னு சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் பேசி இருக்கார். அப்படி அவரோட பெருமை.

இப்படி ஆனந்தமாக சந்திரமௌலீச்வர பூஜை பார்த்துட்டு, பக்கத்துல சில க்ஷேத்ரங்களையும் தர்ஷனம் பண்ணிண்டு ஆத்துக்கு வந்து சேர்ந்தோம். நினைச்சு நினைச்சு சந்தோஷப் படக்கூடிய ஒரு அனுபவமாக அமைஞ்சுது. துங்கா தீரம், நரஸிம்ம வனம், சாரதாம்பாள் சன்னிதி. அங்க இன்னும் கூட யானைகள், குதிரைகள், பெரிய காளைகள், பசுக்கள், நிறைய வெண்மையான கொக்கு போன்ற பறவைகள், துங்கா நதியில நிறைய மீன்கள் – அது அஹிம்சா க்ஷேத்ரம், மீன் பிடிக்க கூடாதுன்னு சட்டம் இருக்கு. அதனால இரண்டு அடி மூன்று அடிபெரிய மீன்கள், புறாக்கள், மான்கள், அப்படி ரம்யமான காட்சிகள் மனசுலேயே இருக்கு.

கர்மஸு ஆத்மோசிதேஷு ஸ்திரதர திஷணாம் தேஹதார்ட்யம் ததர்த்தம்
தீர்க்கம்சாயு: யஷஸ்ச த்ரிபுவன விதிதம் பாபமார்காத் விரக்திம் |
ஸத்சங்கம் ஸத்கதாயா: ஸ்ரவணமபி சதா தேவி தத்வா
வித்யாம் சுத்தாம் ச புத்திம் கமலஜதயிதே ஸத்வரம் தேஹி மஹ்யம் ||
னு வேண்டிப்போம்.

कर्मस्वात्मोचितेषु स्थिरतरधिषणां देहदार्ढ्यं तदर्थं

दीर्घंचायुर्यशश्च त्रिभुवनविदितं पापमार्गाद्विरक्तिम् ।

सत्सङ्गं सत्कथायाः श्रवणमपि सदा देवि दत्वा कृपाब्धे

विद्यां शुद्धां च बुद्धिं कमलजदयिते सत्वरं देहि मह्यम् ॥

ஸ்ருங்கேரி சாரதாம்பா காஞ்சி காமாக்ஷி (Click on the link to hear the above speech –  23 min audio in tamil)

Share

Comments (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.