Categories
Govinda Damodara Swamigal

ஸ்ரீராம: சரணம் மம; மகாபெரியவா திருவடிகளே சரணம்


தர்மாத்மா சத்யசந்தஸ்ச (Click on the link to hear a 24 min audio in tamil. Transcript given below)

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண பாராயணத்தோட ஆரம்பத்துல தியான ஸ்லோகங்கள்னு, நம்ம ஸ்மார்த்த சம்பிரதாயத்துல ஒரு இருபது ஸ்லோகங்கள் சொல்றோம். அந்த இருபதாவது ஸ்லோகம்,
नमोस्तु रामाय सलक्ष्मणाय देव्यै च तस्यै जनकात्मजायै ।
नमोस्तु रुद्रेन्द्र यमानिलेभ्यः नमोस्तु चन्द्रार्क मरुद्गनेभ्यः ॥
நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை |
நமோஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ய:
நமோஸ்து சந்திரார்க மருத்கணேப்ய: ||
அப்டீன்னு இந்த ஸ்லோகத்தோட முடியறது.

ஸ்வாமிகள் என்கிட்ட, இதோட இன்னுமொரு நாலு ஸ்லோகங்கள் சொல்றேன். அதையும் சேர்த்துண்டு, தினம் விடாம சொல்லுன்னு சொன்னார். அது என்னன்னா,
बुद्धिर्बलं यशो धैर्यं निर्भयत्वमरोगिता । अजाड्यं वाक्पटुता च हनुमत्स्मरणाद्भवेत् ॥
புத்திர்பலம் யசோதைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம்ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||
இந்த ஸ்லோகத்துக்கு மஹாபெரியவா ரொம்ப அழகா ஒரு வியாக்யானம் பண்ணி இருக்கா. சில பேர்கிட்ட புத்தி இருக்கும், ஆனா நோஞ்சானா, பலஹீனமா இருப்பா. ரொம்ப பலசாலியா இருக்கிறவா எல்லாரும் புத்தியோட இருப்பான்னு சொல்ல முடியாது. புத்தி பலம் ரெண்டும் இருந்தாலும் தைர்யம் இருக்காது சிலபேருக்கு. தைர்யம் இருந்தாலும் புலனடக்கம் இருக்காது. மகாபெரியவா அஜாட்யம்ங்கிறதுக்கு புலனடக்கம் அப்டீன்னு அர்த்தம் சொல்லிருக்கா. அப்படி ஒண்ணு இருந்தா ஒண்ணு இருக்காது. ஹனுமார் கிட்டதான் எல்லா குணங்களும் இருக்கு. அந்த ஹனுமாரை நாம வேண்டிண்டோம்னா நமக்கும் எல்லாத்தையும் கொடுப்பார். புத்திர்பலம் யசோதைர்யம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம்ச்ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத், அப்டீன்னு எல்லாத்தையுமே ஹனுமார் நமக்கு கொடுப்பார். அப்டீன்னு பெரியவா அழகா சொல்லியிருக்கா. அந்த ஸ்லோகம்.

அடுத்தது
दूरीकृतसीतार्तिः प्रकटीकृतरामवैभवस्फूर्तिः ।
दारितदशमुखकीर्तिः पुरतो मम भातु हनुमतो मूर्तिः ॥
தூரிக்ருத சீதார்த்தி: பிரகடீக்ருத ராமவைபவ ஸ்பூர்த்தி: |
தாரித தச முக கீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி: ||
அப்டீன்னு ஒரு ஸ்லோகம். இது ஆதிசங்கர பகவத்பாதாள் பண்ணின ஹனுமத் பஞ்சரத்னத்துல இருக்கிற ஸ்லோகம்.
‘புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி:’ – சீதா தேவியினுடைய கஷ்டத்தை போக்கின அந்த ஹனுமார், என் கண் முன்னாடி இப்போது ஒளியோடு விளங்கட்டும் அப்டீன்னு அந்த ஸ்லோகம். இந்த ஸ்லோகத்தை ஆதிசங்கர பகவத்பாதாள் சொன்ன உடனே, அவருக்கு ஹனுமத் தரிசனம் கிடைச்சது, அப்டீன்னு கதை. அதனால நம்ம ராமாயண பாராயணத்தும் போது ஹனுமாரை பக்கத்துல உட்கார வெச்சுண்டு, அவர் தான் ராமாயணம் கேட்கறதுல ரொம்ப சந்தோஷப் படறவர். யாரும் இல்லேனா கூட, ராமாயணம் கேட்கறதுன்னா ஹனுமார் இருந்தா போறும். அப்படி இந்த ‘தூரிக்ருத சீதார்த்தி:’ என்கிற ஸ்லோகத்தை சொல்லி, ஹனுமாரை வர வெச்சுடணும்.

அப்புறம், ராமாயணத்துலேர்ந்தே இந்த ரெண்டு ஸ்லோகங்கள்
धर्मात्मा सत्यसन्धश्च रामो दाशरथिर्यदि।
पौरुषे चाप्रतिद्वन्द्वश्शरैनं जहि रावणिम्॥
தர்மாத்மா சத்யசந்தஸ்ச ராமோ தாசரதிர் யதி |
பௌருஷே சாப்ரதித்வந்த்வ: ஷரைனம் ஜஹி ராவணிம் ||
அப்டீன்னு இந்த ஸ்லோகம். லக்ஷ்மணஸ்வாமி இந்திரஜித்தை வதம் பண்ணும்போது சொன்னது. ரொம்ப முக்யமான ஸ்லோகம்.

அப்புறம் நாலாவது,
सकृदेव प्रपन्नाय तवास्मीति च याचते ।
अभयं सर्वभूतेभ्यो ददाम्येतद् व्रतं मम ॥
ஸக்ருதேவ பிரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே |
அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி எதத் வ்ரதம் மம ||
அப்டீன்னு விபீஷண சரணாகதிபோது ராமர் சொன்ன ஸ்லோகம். இந்த
நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய, தர்மாத்மா சத்யசந்தஸ்ச, ஸக்ருதேவ பிரபன்னாய
இந்த மூணும் ராமாயணத்துல ரொம்ப முக்யமான ஸ்லோகங்கள்.

இன்னிக்கு அதோட அர்த்தத்தை சொல்லி, அந்த கதையை சொல்லி, நமக்கெல்லாம் ராமர் மஹாபெரியவா. இந்த மூணு ஸ்லோகத்துல இருந்து எப்படி பெரியவா பக்தி பண்ணணும்ங்கிறத நாம கத்துக்கலாம், எப்படீன்னு நான் உங்களுக்கு சொல்றேன்.

सकृदेव प्रपन्नाय तवास्मीति च याचते । अभयं सर्वभूतेभ्यो ददाम्येतद् व्रतं मम ॥ அப்டீன்னு ராமர் சொல்றார். இது என்ன இடம்னா விபீஷணன் ராவணனோட சபையில சொல்றார் ‘சீதாதேவியை திருப்பிக் கொடுத்துடு ராமர்கிட்ட’ அப்டீன்னு சொன்னபோது இந்திரஜித் எழுந்து ‘இவன் ஒரு பேடி, சித்தப்பன்னு சொல்லி இங்க இருந்துண்டு இருக்கான்’ அப்டீன்னு ரொம்ப கர்வமா பேசறான். அப்போ, அவனை விபீஷணன் கண்டிக்கிறான். இது ராவணனுக்குப் பொறுக்கலை. இராவணன், விபீஷ்ணரை அவமானப் படுத்தி ‘நீ எல்லாம் பங்காளி. கூட இருந்து குழி பறிக்கறவன், ஏதோ கூடப் பிறந்தவன்னு உன்னை கொல்லாம விடறேன்’ அப்டீன்னு ஒரு வார்த்தை சொல்றான். இது விபீஷ்ணனுக்குத் தாங்கலை. இங்க நாம இனிமே இருக்கக் கூடாது அப்டீன்னு, அவன் ஆகாசத்துல கிளம்பிடறான். அவனோட அந்த நாலு மந்திரிகள் கிளம்பறா.

நேர கடலை தாண்டி இங்க வந்து, ஆகாசத்துல இருந்துண்டு சுக்ரீவன் முதலான வானரர்கள் எல்லாம் இருக்கா. அவாகிட்ட சொல்றான். ‘என் பேர் விபீஷணன். நான் ராவணனுடைய தம்பி. ராவணனைக் கைவிட்டு ராமரை, ‘சர்வலோக சரண்யாய ராகவாய மஹாத்மனே’, என்று ‘எல்லாருக்கும் புகலிடம் தரும் ராமரை’ சரணடைய வந்திருக்கேன், அவர்கிட்ட சொல்லுங்கோ’, அப்டீன்னு சொல்றான்.

உடனே, இந்த வானரா எல்லாம் ஓடி வரா ராமர்கிட்ட, ‘விபீஷணன்னு ஒருத்தன் வந்திருக்கான். உங்களை சரணாகதி பண்றேன்னு சொல்றான். ஆனால், எதிரி பக்ஷத்துல இருந்து வந்துருக்கான். அவனை சேர்த்துக்காதிங்கோ’ அப்டீன்னு சுக்ரீவன் சொல்றான். ‘யாரை வேணும்னாலும் நம்பலாம். எதிரி பக்கத்துல இருந்து வந்தவாளை நம்பக் கூடாது. பணம் கொடுத்துக் கூட, கூலிக்கு கூட படையை வாங்கிக்கலாம்.  எதிரியோட படையை உள்ள விட்டோம்னா, ஒண்ணு நமக்குள்ள கலகம் உண்டாக்கிடுவா. இல்லேன்னா தூங்கும்போது கொன்னுடுவா. இப்படி பல ஆபத்துக்கள் இருக்கு’ அப்டீன்னு சொல்றான்.

உடனே ராமர் சொல்றார். ‘நீ சொல்றது வாஸ்தவம்தான்.நீ நன்னா ராஜ்ய விவஹாரங்களைத் தெரிஞ்சவனா இருக்கறதுனால நல்ல ஒரு விஷயம் சொல்ற. ஒரு புத்திமதி சொல்ற. எல்லாரையும் கேட்போமே’ அப்டீன்ன உடனே ஆளுக்கு ஒண்ணு சொல்றா. ஒருத்தர் சொல்றார். ‘இவனுக்கு எதாவது வேலை கொடுத்து பார்ப்போம். அதுல இருக்கிற குண தோஷங்களை வெச்சுண்டு இவனை சேர்த்துக்கலாமா, வேண்டாமான்னு தீர்மானம் பண்ணலாம்’, அப்டீன்னு சொல்றார். இன்னோர்த்தர் சொல்றார். ‘இவனை பத்தி ஒற்றர்களை அனுப்பி விசாரிச்சுண்டு வந்து அதுக்கபுறம் நாம தீர்மானம் பண்ணலாம். சேர்த்துக்கறது ஆபத்து தான்’ அப்டீன்னு எல்லாருமே சொல்றார். ஜாம்பவான் சொல்றார். ‘இவன் வந்து இருக்கிற வேளை சரியில்லாம இருக்கே’ அப்டீன்னு சொல்றார். இன்னோருத்தன் மைந்தன்னு ஒருத்தன் சொல்றான் ‘இவன்கிட்ட பேசி பார்ப்போம். பேசறதை வெச்சு இவனுடைய எண்ணம் என்னங்கிறது புரிஞ்சுடும். அப்புறம் வேண்ணா சேர்த்துக்கலாம்’, அப்டீன்னு சொல்றார்.

அப்போ, ஹனுமார் எழுந்து சொல்றார். ‘ஹே ராமா, நீ ப்ருஹஸ்பதி போல புத்திமான். உனக்கு நாங்க ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை. இருந்தாலும், நீ கேட்டியேன்னு, உன்னையும் கௌரவிச்சுண்டு, இந்த விஷயமும் ரொம்ப முக்யமா இருக்கறதுனால, என்னோட அபிப்ராயத்தை சொல்றேன். ஒருத்தன் சரணாகதின்னு கேட்டு வந்திருக்கான். அவன்கிட்ட இப்ப எதாவது வேலை கொடுத்து அதை போய் பண்ணிண்டு வா அப்டீன்னு சொல்றது நடக்காது. அவன் ஆகாசத்துல நின்னுண்டு இருக்கான். அவனை பத்தி, ஒற்றர்களை அனுப்பி விசாரிச்சுண்டு வர்றதுங்கிறதும் நடக்காது. அப்படி எல்லாம் நாம அவனை காக்க வெச்சாலும் அப்புறம் பின்னாடி நம்ம நட்புல அது வந்து ஒரு விரிசலாவேதான் இருக்கும். அவன் வந்திருக்கிற வேளை சரியில்லைன்னு சொல்றார். அதுல எனக்கு ஒரு அபிப்ராயம் இருக்கு. அவன், இராவணன் கிட்ட நீ பண்றது தப்புன்னு சொல்லி பார்த்துருக்கான். நாம் அதர்மத்தோட பக்கத்துல இருக்கோமேன்னு நினைச்சுண்டே இருந்துருக்கான். ஆனா, ஒரு க்ஷணத்துல இனிமே நாம இங்க இருக்கக் கூடாது, நாம ராமரோடதான் இருக்கணும் அப்டீன்னு இவன் மனசுல, ‘இந்த க்ஷணத்துல, இவனை நான் விட்டேன். இவனோட நான் இருக்க மாட்டேன். எனக்கு தர்மத்தோட பக்கத்துலதான் இருக்கணும்’னு நினைச்சப் பின்ன, பஞ்சாங்கமா பார்க்க முடியும். எப்ப நம்ம மனசுல தப்பு வழியில இருக்கோம்னு நினைச்சா அந்த க்ஷணமேதான மாறணும். அதை விட்டுட்டு, வேளை பாக்க முடியாது. மேலும் அவனோடு பேசி அவனை பத்தி தெரிஞ்சுக்கலாம், அப்டீன்னு ஒரு அபிப்ராயம் சொன்னா. வந்திருக்கிறவன் வில்லனா இருந்தா, எவ்வளவு பேசினாலும், அவன் சாமர்த்தியமா அவனோட எண்ணத்தை மறைச்சுண்டு பேச முடியும். அதுனால, பேசி பாக்கணும்ங்கிறது இல்லை.

எனக்கு தெரிஞ்ச வரையில், அதாவது ஹனுமார் அன்னிக்கு, இராவணன் சபையில இருந்தப்போ, இராவணன் ‘ஹனுமாரை கொல்லு’, அப்டீங்கிறான்.அப்போ விபீஷணன் எழுந்து ‘தூதனைக் கொல்ல வேண்டாம். அது தப்பு. நீ வேற ஏதாவது பண்ணு’ அப்டீங்கிறான். ‘வாலில் நெருப்பு வை’ என்கிறான். அந்த வாலில் வெச்ச நெருப்பலேயே ஹனுமார் லங்கையையே எரிச்சுட்டு வரார். தர்மத்தை எப்போதும் சொல்றவன் விபீஷணன், அப்டீங்கிரதுக்கு, ஹனுமாருக்கு ஒரு proof இருக்கு. அதை மனசுல வெச்சுண்டு ‘இவன் நல்லவன், இவன் வந்துருக்கிற நோக்கம், வேற தப்பு எண்ணத்தோட வந்தா, இவ்வளவு தைர்யமா வந்து, நேரடியா அவன் அபயம் கேட்க மாட்டான்.  அவனோட முக பாவம், அவன் பேசின வார்த்தைகள், அவன் சொன்ன அந்த tone. இதை எல்லாத்தையும் வெச்சுண்டு, அவனோட ஆர்ஜவம் அந்த sincerity ஐ நான் புரிஞ்சுண்டுடேன். சேர்த்துக்கலாம்ங்கிறதுதான் என்னோட அபிப்ராயம். இருந்தாலும் உங்க புத்தில எட்டினது மாதிரி நீங்க பண்ணனும் ராமா’ அப்டீன்னு ஹனுமார் சொல்லி முடிக்கறார்.

அப்போ சுக்ரீவன் திரும்பவும் ‘ராமா, அண்ணனை விட்டுட்டு வந்து இருக்கான் இவன், எதுக்கு வேணுமானாலும் துணியறான், சேர்த்துக்க வேணுமா, ஆபத்து’, அப்டீன்னு சொல்றான். ராமர் சிரிச்சுக்கிறார். ஏன்னா, சுக்ரீவனும் வாலியை விட்டுட்டுதான் வந்தான். இருந்தாலும் அவன் சொல்றதை கௌரவிச்சுண்டு, ராமர் சொல்றார், ‘ஹே சுக்ரீவா, ஒரு friendனா உன்னை மாதிரியும், அண்ணாக்கு தம்பினா பரதனை மாதிரியும், அப்பாக்குப் பிள்ளைனா என்னை மாதிரியும் எல்லாரும் இருப்பாளா?’ அப்டீன்னு சொல்றார். ‘அவனுடைய அண்ணன் பொல்லாதவனா இருக்கான். வேற வழி இல்லாம, அவன், அண்ணனை விட்டுட்டான். இங்க வந்துட்டான். மேலும், என்னுடைய எண்ணம் என்னங்கிறத நான் சொல்றேன்’, அப்டீன்னு பேசறார்.

ஒரு கார்யத்தை முடிவு பண்ணனும்னா வேதம், தர்ம சாஸ்திரங்கள், மகான்கள் நடத்தை, அப்புறம் தன்னுடைய மனசாட்சி இப்படி எல்லாத்தையும் வெச்சுண்டு இந்த orderல முடிவு பண்ணனும்னு இருக்கு. அப்டீன்னு சொல்லி, ராமர் வேதத்துல இருந்து ‘வந்து சரணாகதி பண்ணவனை ஏத்துக்கணும், அது உயர்ந்த தர்மம்’, அப்டீன்னு quote பண்றார். அப்புறம் ரிஷிகளுடைய வார்த்தைகளை quote பண்றார். அப்புறம் ஒரு புறா, தன்னுடைய மனைவியான புறாவை பிடிச்சுண்டு ஒரு வேடன் வரான். ஆனா மழைக்கு பயந்துண்டு இந்த மரத்துக்கு கீழ நின்னுண்டு இருக்கான். அவன் பசியால வாடறான். அப்போ அந்த புறா சுள்ளிகளை போட்டு நெருப்பு மூட்டி, தன்னை அந்த நெருப்புல போட்டு ‘என்னை நீ சாப்டுக்கோ அப்டீ’ன்னு சொல்றது. ‘ரொம்ப பசியா இருக்க. என் வீட்டுக்கு நீ வந்துருக்க. சரணம்ங்கிற வார்த்தைக்கு வீடுன்னு ஒரு அர்த்தம் இருக்கு. என் வீட்டுக்கு நீ வந்து இருக்க. அதனால நீ என்னை சரணாகதி பண்றதா நினைச்சுண்டு நான் உனக்கு சாப்பாடு கொடுக்கறேன்’, அப்டீன்னு சொல்லி அந்த பெண் புறாவும் விழுந்துடறது. இப்படி சரணாகதி பண்ணவாளை காப்பாத்தணும், அப்டீங்கற தர்மத்தை மகான்கள் நடத்தி காண்பிச்சிருக்கா. அதெல்லாம் இருக்கு.

மேலும் என்னுடைய தர்மம் என்ன, நான் சொல்றேன் கேளு, அப்டீன்னு சொல்லிட்டு, सकृदेव प्रपन्नाय तवास्मीति च याचते । अभयं सर्वभूतेभ्यो ददाम्येतद् व्रतं मम ॥ ‘ஸக்ருதேவா பிரபன்னாய’, ஒரு தடவை வணங்கி, ஸக்ருத் னா once ஒரு தடவை நமஸ்காரம் பண்ணி, ‘பிரபன்னாய’, ‘தவாஸ்மி’, உன்னை சேர்ந்தவனா நான் இருக்கேன், ‘இதியாசதே’ என்று யார் யாசிக்கறார்களோ, ‘அபயம் ஸர்வபூதேப்ய:’ அவனுக்கு சர்வ பிராணிகளிடதிலிருந்தும் நான் அபயம் கொடுப்பேன். எந்த கோணத்துல இருந்தும், எந்த நேரத்துலயும், யாரிடத்திலருந்தும் அவனுக்கு எந்த ஆபத்தும் வராமல் பாத்துக்கறது, இது என் பொறுப்பு. ‘ஸர்வபூதேப்யோ அபயம் ததாமி எதத் வ்ரதம் மம’ அப்டீன்னு ராமர் சொல்றார்.

மகான்கள் சொல்வா, இப்படி பகவான் தன்னோட பக்தனை காப்பாத்தறதை கடமையாக நினைக்கறதுனால, இப்போ குழந்தைகளை படிக்க வைக்கறதை கடமைன்னு நாம நினைச்சோம்னா அது அவாளுக்கு ஒரு உரிமையாக போயிடறது. அதே மாதிரி பெரியவாளை பாத்துக்கறது கடமைன்னு நாம நினைச்சா, நம்மளை அவா ஆளாக்கினா, இப்போ அவாளை நாம் பாத்துக்கணும்னு நினைச்சா, அது அவாளுக்கு ஒரு உரிமையாக இருக்கு. இப்படி பகவான் ‘என்னை சரணாகதி பண்ணினவனை நான் காப்பாத்துவேன். இது என்னோட விரதம்’ அப்படின்னு சொல்லி இருக்கறதுனால நமக்கு அது உரிமை. நாம பண்ண வேண்டியதெல்லாம் ‘ராமா காப்பாத்து’ னு சொல்லி நமஸ்காரம் பண்ற கார்யம் ஒண்ணு தான், அப்படின்னு ஸ்வாமிகள் சொல்வார். அப்படி அந்த ஸ்லோகத்தோட பெருமை. வேதாந்த தேசிகர் இதுக்கு பக்கம் பக்கமாக வியாக்யானம் எழுதி இருக்கார். அவாளோட சரணாகதி தத்துவத்துக்கு இது ரொம்ப ஆதாரமான ஒரு ஸ்லோகம்.
सकृदेव प्रपन्नाय तवास्मीति च याचते । अभयं सर्वभूतेभ्यो ददाम्येतद् व्रतं मम ॥ அப்படின்னு, ராமர் இருக்கார். நம்மைக் காப்பாற்றுவார்.

நமக்கெல்லாம் ராமர் மஹாபெரியவா.

எப்படி ராமன் தர்மத்தையும் சத்யத்தையும் எந்த ஆபத்துலேயும் அவ்வளவு உறுதியாக காப்பத்தினானோ, அந்த மாதிரி நம்ம காலத்துல, பெரியவா, நூறு வருஷங்கள், ஒரு நாள் கூட ரிஷிகள் சொன்ன தர்மத்துலேர்ந்து நூல் கூட விலகாம காப்பாத்தினா. இன்னிக்கு அதுனால நாம எல்லாரும், கோவில்கள் இருக்கு போறோம். ஒரு சந்த்யாவந்தனம் பண்றோம். ஒரு திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம் பண்றோம். இவ்வளவு தூரம் நம்முடைய வேத மதம் மிஞ்சி இருக்குன்னா, அது அந்த மஹாபெரியவாளோட அவதாரத்துனால தான். அதுனால அவரை நமஸ்காரம் பண்ணி ‘உங்களை சேர்ந்தவனாக என்னை வெச்சுக்கோங்கோ’ அப்படின்னு பிரார்த்தனை பண்ணினோமானால் பெரியவா நிச்சயமாக நம்மை எல்லா ஆபத்துலேர்ந்தும் காப்பாத்துவா.

இந்த இடத்துல அந்த பாக்கி ரெண்டு ஸ்லோகத்துக்கும் அர்த்தம் சொல்றேன்.
नमोस्तु रामाय सलक्ष्मणाय देव्यै च तस्यै जनकात्मजायै ।
नमोस्तु रुद्रेन्द्र यमानिलेभ्यः नमोस्तु चन्द्रार्क मरुद्गनेभ्यः ॥
நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை |
நமோஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ய:
நமோஸ்து சந்திரார்க மருத்கணேப்ய: ||
அப்படிங்கற இந்த ஸ்லோகம் எங்கே வரதுன்னா, ஹனுமார் லங்கையில் போய் சீதாதேவியை தேடுகிறார். ராவணனோட அரண்மனையில் பார்க்கிறார். மந்தோதரியை பார்த்து இது சீதையா இருக்குமோ என்று ஒரு நிமிஷம் நினைக்கிறார். அப்பறம், ‘சீதை தபஸ் பண்ணிண்டு இருப்பா. இப்படி சுகமாக படுக்கையில் படுத்துண்டு இருக்க மாட்டா’ னு சொல்லி அப்பறம் அந்தபுரத்தில் மத்த பெண்களை பார்க்கிறார். நகரம் முழுக்க தேடறார். ‘ஒரு நாலு அங்குலம் கூட இடைவெளி இல்லாமல் இந்த நகரத்துல எல்லா இடத்திலும் தேடிட்டேனே! சம்பாதி சொன்னாரே, இங்க வந்து சீதையை தேடினேன். சீதையை காணோமே! இப்போ திரும்பி போய் சீதையை காணலைனு சொன்னா அங்க காத்துண்டு இருக்கற வானரர்கள் எல்லாம் உயிரை விட்டுடுவா. ராமர் உயிரை விட்டுடுவார். ராமர் உயிரை விட்டுட்டா லக்ஷ்மணன் உயிரை விட்டுடுவான். பரதசத்ருக்னர்கள், அவா அம்மாக்கள் உயிரை விட்டுடுவா. குடுத்த வாக்கை காப்பாத்த முடியலையேனு சுக்ரீவன் உயிரை விட்டுடுவான். தாரை, ருமை, போயிடுவா. இப்படி பெரிய அனர்த்தம் ஆகிவிடுமே! என்றெல்லாம் நினைச்சு ஹனுமாருக்கு ஒரு மனக்கலக்கம் ஏற்படறது. அப்போ நான் திரும்பி போகாமலே இருந்து விடுகிறேன். இங்கேயே உயிரை விட்டுவிடுகிறேன்’ அப்படின்னு சொல்றார்.

அப்பறம் ‘ஆத்மஹத்தி பண்ணிக்கறது தப்பு. ஒருத்தன் உயிரோடு இருந்தால் நன்மை ஏற்படும்’ அப்படின்னு சொல்லிகிறார். அப்பறம் ‘நான் இங்கே எதுக்கு வந்தேன்? சீதாதேவி இங்கே இருக்காளானு தேடி கண்டுபிடிக்க வந்தேன். எதுக்கு உட்கார்ந்து விசனப்பட்டுண்டு இருக்கணும்?
यावत्सीतां हि पश्यामि रामपत्नीं यशस्विनीम्|
तावदेतां पुरीं लङ्कां विचिनोमि पुनः पुनः||
யாவத் சீதாம் ஹி பஷ்யாமி ராமபத்நீம் யஷச்விநீம் |
தாவதேதாம் புரீம் லங்காம் விசிநோமி புன: புன: ||
திரும்ப திரும்ப இங்கே தேடுகிறேன். உட்கார்ந்து யோசிச்சு என்ன ஆகப்போகிறது? சீதாதேவியை காணும் வரையில் தேடுவேன் அப்படின்னு சொல்றார். ஸ்வாமிகள் இந்த ஸ்லோகத்துக்கு ‘நாம் பகவத் தர்சனதுக்காக சுந்தரகாண்ட பாராயணம் பண்றோமானா, அம்பாளோட தர்சனம் கிடைக்கற வரைக்கும் திரும்ப திரும்ப பாராயணம் பண்ண வேண்டியது தான்’ அப்படின்னு இந்த ஸ்லோகத்துக்கு அப்படி ஒரு அழகான அர்த்தம் சொல்வார்.

அப்படி தீர்மானம் பண்ணிண்டு எழுந்த போது அப்பறம் அங்கே அசோகவனம் தெரியறது. அஹா! இந்த அசோகவனத்துல நாம இன்னும் பார்க்கலையே னு சொல்லிட்டு ‘இங்கேயாவது நான் சீதாதேவியை தர்சனம் பண்ணனும்’, என்று அங்கே இந்த ஸ்லோகத்தை சொல்லி வேண்டிக்கறார். நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய – ராம கார்யமாக வந்து இருக்கார். ராமரையே வேண்டுகிறார். ‘ராமரையும் லக்ஷ்மணனையும் சீதாதேவியையும் இன்னும் எல்லா தெய்வங்களையும் நமஸ்காரம் பண்ணிட்டு நான் இங்கே போய் தேடறேன். கட்டாயம் இங்கே பார்ப்பேன்’ னு சொல்லிட்டு போய் தேடறார். அங்கே சீதாதேவியை பார்த்துடறார். அவளை சமாதானப் படுத்தறார். அப்படி போறது கதை.

அப்படி இந்த ஸ்லோகம் ஒரு ஆபத்துலேர்ந்து நம்மை மீட்டு கொடுக்கற ஒரு ஸ்லோகம். இங்கே ஹனுமார் ராமரை நமஸ்காரம் பண்றார். ஏன்னா அந்த ராமரோட தர்மமும் சத்தியமும் தான் அபாரமான கார்யங்களை நடத்தி தரும். இந்த மாதிரி ஆபத்துலேர்ந்து மீட்டு கொடுக்கும்.
नमोस्तु रामाय सलक्ष्मणाय देव्यै च तस्यै जनकात्मजायै ।
नमोस्तु रुद्रेन्द्र यमानिलेभ्यः नमोस्तु चन्द्रार्क मरुद्गनेभ्यः ॥
அப்படின்னு எல்லா தெய்வங்களையும் வணங்கறார். ராமரை எல்லா தெய்வங்களுக்கும் மேலாக முதல்ல வெச்சு பிரார்த்தனை பண்றார். அப்படி அருமையான ஒரு ஸ்லோகம்.

அந்த காலத்துல, எதாவது ஒரு பேனா தொலைச்சா கூட ஆத்துல பெரியவா இந்த ஸ்லோகத்தை சொல்லி தேடுப்பானு சொல்லுவாளாம். சீதாதேவி தொலைஞ்சுட்டா. கிடைக்கணும். அதுக்காக தேடி வந்த இடத்துல இந்த ஸ்லோகத்தை சொல்றார். அதுனால தொலைஞ்ச பொருள் கிடைக்கணும்னா இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கோனு பெரியவா சொல்லுவாளாம். இதைக் கேட்ட போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

அப்பறம் இந்த மூணாவது ஸ்லோகம்
धर्मात्मा सत्यसन्धश्च रामो दाशरथिर्यदि।
पौरुषे चाप्रतिद्वन्द्वश्शरैनं जहि रावणिम्॥
தர்மாத்மா சத்யசந்தஸ்ச ராமோ தாசரதிர் யதி |
பௌருஷே சாப்ரதித்வந்த்வ: ஷரைனம் ஜஹி ராவணிம் ||
அப்படிங்கற ஸ்லோகம். லக்ஷ்மணஸ்வாமி இந்த்ரஜித்தோட யுத்தம் பண்றார். அந்த இந்த்ரஜித் முதல்ல என்ன பண்றான்னா, ஒரு சீதாதேவி மாதிரி மாயையால் சிருஷ்டி பண்ணிண்டு வந்து அதை ஹனுமார் முன்னாடி வெட்டி போட்டுடறான். ஹனுமார் தவிச்சு போயிடறார். அவர் ஒருத்தர் தான் சீதாதேவியை பார்த்து இருக்கார். ராம லக்ஷ்மணர்களை தவிர. அவர் கண்முன்னாடி அப்படி பண்ணின உடனே அவருக்கு ரொம்ப வருத்தம் ஜாஸ்தியாகி ராமர் கிட்ட இதை வந்து சொன்ன உடனே ராமர் மயக்கம் போட்டு விழுந்துடறார். ராமர் முகத்துல ஜலத்தை தெளிச்சு ரொம்ப முயற்சி பண்ணி அவரை தெளிவிக்கரா. அப்ப லக்ஷ்மணன் சொல்றான் ‘அண்ணா நான் அன்னிக்கே சொன்னேன். நீ நாட்டை விட்டுட்டு வராதேன்னு. செல்வம் தான் எல்லாத்துக்கும் ஆதாரம். நீ தர்மம் தர்மம்னு சொல்லி எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வந்தாய். தர்மம் பெரிசா இருந்தா அந்த ராவணன் மாண்டு போயிருக்கணும். நீ ஜெயிச்சு இருக்கணும். இப்போ பார் என்ன ஆச்சுன்னு’ அப்படின்னு ஒரு வார்த்தை சொல்றான். அவனுக்கு ராமர் கஷ்டப்பட்டா தாங்காது. அதுனால இப்படி ஆகிவிட்டதேங்கிற புலம்பல். அப்ப அந்த வார்த்தைகளை சொல்றான்.

உடனே அங்க விபீஷணர் வரார். என்ன ஆச்சுன்னு கேட்கறார். இந்த மாதிரின்னு சொன்ன உடனே ‘இந்த மாதிரி நடக்கவே நடக்காது. ராவணன் சீதாதேவியை கொல்லறதுக்கு எல்லாம் அனுமதிக்க மாட்டான். அப்படி இருந்தால் இந்த யுத்தமே இல்லையே. அதுனால இது இந்த்ரஜித்தோட மாயை. அவன் நிகும்பலைங்கற எடத்துல ஒரு யாகம் பண்றான். அந்த யாகத்தை அவன் முடிச்சுட்டா மறைஞ்சு இருந்து திரும்பவும் அடிப்பான். இந்த வாட்டி அவனை ஜெயிக்கவே முடியாது. ராமா, நீங்க லக்ஷ்மணஸ்வாமியை என்னோடு அனுப்புங்கோ. நான் போய் அந்த இந்தஜித்தை வதம் பண்ணிட்டு வரேன்’னு சொன்ன உடனே ராமர் ‘லக்ஷ்மணா போயிட்டு வாப்பா’னு சொல்றார்.

லக்ஷ்மணன் போய் யுத்தம் பண்றான். மூணு நாள் ராப்பகலா யுத்தம் பண்றா. படிக்கறதுக்கு ரொம்ப நன்னா இருக்கும் அந்த சர்கங்கள் எல்லாம். அப்போ இரண்டு பெரும் மாத்தி மாத்தி அஸ்த்ரங்கள் போடறா. ஒரு அஸ்தரம் ஒரு அஸ்த்ரத்தை ஜெயிச்சுடறது. இரண்டுபேருக்கும் ஜயம் ஏற்படலை. இப்போ லக்ஷ்மணன் தளர்ந்து போறான். அப்போ இந்த ஸ்லோகத்தை சொல்றான்.
धर्मात्मा सत्यसन्धश्च रामो दाशरथिर्यदि। पौरुषे चाप्रतिद्वन्द्वश्शरैनं जहि रावणिम्॥
என் அண்ணா, தசரத குமாரரான ராமர் தர்மாத்மா, சத்யசந்தர், பராக்ரமத்தில் எல்லாருக்கும் மேலானவர், யாரும் அவருக்கு நிகரில்லை என்பது உணமையானால், என்னுடைய இந்த அம்பு இந்த இந்த்ர்ஜித்தை கொல்லட்டும் அப்படின்னு சொல்லி ஒரு அம்பு விடறான். धर्मात्मा सत्यसन्धश्च रामो दाशरथिर्यदि। पौरुषे चाप्रतिद्वन्द्वश्शरैनं जहि रावणिम्॥ னு சொல்லி அம்பு போடறான். இந்த்ரஜித் தலை கீழே விழுந்துடறது.

லக்ஷ்மணன் அதிகாயன்னு ஒருத்தனோட யுத்தம் பண்றான். அவன் மேலே பிரம்மஸ்த்ரத்தை போடறான். அந்த ப்ரம்மாஸ்த்ரம் வந்த போது அதிகாயன் பல விதமான அஸ்த்ரங்களை போடறான். ப்ரம்மாஸ்த்ரம் அதை ஒண்ணொண்ணா வீழ்த்திட்டு அப்பறம் அதிகாயனோட கவசத்தை பிளந்து அவனை வதம் பண்ணித்துனு வரும். அப்படி அந்த ப்ரம்மாஸ்த்ரம் கூட ஒரு முயற்சி பண்ண வேண்டி இருந்தது. ராமரோட பேரால லக்ஷ்மணன் போட்ட இந்த பாணம், பாணாத்தை போட்டான், இந்த்ரஜித்தோட தலை கீழே விழுந்தது அப்படின்னு வரது. அப்படி ராமரோட சத்தியமும் தர்மமும் தான் ஜெயிக்கறது. எந்த சத்தியத்தையும் தர்மத்தையும் மூணு நாள் முன்னாடி பழிச்சானோ, அந்த சத்தியமும் தர்மமும் தான் அவனுக்கு வெற்றியை கொடுத்தது.

ராமாயணம் முழுக்க சத்யம் தர்மம். அன்னிக்கு ராமர் காட்டுக்கு கிளம்பும் போது கௌசல்யா தேவி ஒரு விதமாக சமாதனம் பண்ணிண்டு சொல்றா, ‘எந்த சத்யத்தையும் தர்மத்தையும் நீ இவ்வளவு நம்பிக்கையோடும் ப்ரியதோடும் காப்பாற்றுகிறாயோ ராமா, அந்த சத்தியமும் தர்மமுமே உன்னை காப்பற்றட்டும்’ அப்படின்னு சொல்லி கௌசல்யா தேவி மங்களாசாசனம் பண்ணி அனுப்பறா.

यं पालयसि धर्म त्वं घृत्या च नियमेन च । स वै राघव शार्दूल धर्मस्त्वामिभि रक्षतु ।।

மகாபெரியவா இந்த ஸ்லோகத்தை quote பண்ணி பேசி இருக்கா. ‘ஒரு நாள் ரெண்டு நாள் ஊருக்கு போறான்னா ஏதாவது கட்டி குடுக்கலாம். பதினாலு வருஷம் கண்காணாத காட்டுக்கு போக போறான். அதுனால தர்மமும் சத்தியமும் தான் உனக்கு நான் கட்டி குடுக்கற சோறு’ன்னு அவ ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிச்சா. அந்த வார்த்தைப்படி ராமர் சத்தியத்தையும் காப்பாத்தினதுனால, ராவணன் கிட்ட கோட்டை இருந்தது,  தம்பிகள், பிள்ளைகள் இருந்தா. கும்பகர்ணன் இருந்தான். பெரிய படை பலம் இருந்தது. அவ்வளவு எல்லாம் இராவணன் கிட்ட இருந்தாலும் அவனுடைய ஒரு தலை கூட மிஞ்சலை. ராமர் கிட்ட சத்தியமும் தர்மமும் தான் இருந்தது. ஆனா அவருக்கு வானரர்களும், கரடிகளும், ஜடாயு, சம்பாதி, போன்ற கழுகுகளும் எல்லாரும் வந்து சகாயம் பண்ணி ராமர் தான் ஜெயிச்சார். சத்தியமும் தர்மமும் காப்பாத்தும்.’ னு மகாபெரியவா பேசி இருக்கா.

அப்படி எந்த அரிய காரியம் நடக்க வேண்டுமானாலும், எந்த ஆபத்துலேர்ந்து மீள வேண்டுமானாலும் மஹாபெரியவாளை சரணாகதி பண்ணனும். எனக்கு, நான் பார்த்தது கோவிந்த தாமோதர சுவாமிகளும் பெரியவாளை நினைச்சு நினைச்சு ராமத் தன்மையை அடைஞ்சு, தன்கிட்ட வந்தவா எல்லாருக்கும் அபயம் குடுத்தார்.

ஆனா ஸ்வாமிகள் கிட்ட ‘பெரியவா மாதிரியே நீங்கள் அனுக்ரஹம் பண்றேள்’ அப்படின்னு சொன்னா ‘அப்படி சொல்லதே அப்பா. மஹாபெரியவா எல்லாருக்கும் மேலே. அவாளை மாதிரி நூறு வருஷங்கள் மன்மதனோட அம்புக்கே ஆட்படாம இருக்க முடியுமா? அவாளை மாதிரி வராது. அவா தனி.’ அப்படின்னு சொல்வார். நான் பெரியவாளை பார்த்த பின் அதே ஸாரூப்யத்தோட ஸ்வாமிகள் இருந்ததுனால, மஹாபெரியவாளோட அனுக்ரஹதை ஸ்வாமிகள் கிட்ட அடைஞ்சேன். அதுனால எனக்கு ஸ்வாமிகள் தெய்வமாக இருக்கார்.

மஹாபெரியவாளை நமஸ்காரம் பண்ணினா எந்த ஆபத்துலேர்ந்தும் மீளலாம். எந்த அரிய காரியமும் நடக்கும். அதுனால ‘குருமூர்த்தே த்வா நமாமி காமாக்ஷி’  னு பெரியவாளை நமஸ்காரம் பண்ணுவோம்.

ஜானகி காந்த ஸ்மரணம் ஜயஜய ராம ராம

5 replies on “ஸ்ரீராம: சரணம் மம; மகாபெரியவா திருவடிகளே சரணம்”

Dear Anna, Swamigala nerayadi pakkadha ennakku indha post ellam romba deiva prasadhama irukku. Hearty namaskarams for such inspiring posts

love and regards
Ramki

கோடிகோடி நமஸ்காரங்கள். பெரியவர்கள் மூலம் இது போன்ற நல்ல விஷயங்களை கிடைக்கபெறாத இக்கால மக்களுக்கு ஒவ்வொரு பக்கமும் ஒரு வரப்ரசாதம்… இதில் இந்த அஜாட்யம் என்பதற்கு மஹாபெரியவா சோம்பலின்மை, சுறுசுறுப்பு அல்லது செயல்திறன் என சொல்லியிருப்பதாக ஒரு இடத்தில் படித்தேன்..

சுவாமிகள் பெரியவாளிடம் புத்திர்பலம் ஸ்லோகத்திற்கு நேரடியாக பொருள் கேட்டபோது, அஜாட்யம் என்பதற்கு ‘காமத்தின் உடைய வாசனையே இல்லாதவர் அனுமார்’ என்று கூறக் கேட்டு அஜாட்யம் என்பதற்கு புலனடக்கம் என்ற பொருள் சொல்லி இருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.