ஸத்கதா ச்ரவணம்

கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய 12வது ஆராதனை இன்னும் ரெண்டு நாட்களில் 26ம் தேதி (26-01-2017)  திருச்சிக்கு பக்கத்தில் பழூர் என்ற அக்ரஹாரத்தில் அவருடைய அதிஷ்டானத்தில் அவருடைய பக்தர்கள் எல்லாரும் விமரிசையாக கொண்டாடப் போறா. ஸ்வாமிகள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ராமாயண பாகவத பாராயண பிரவசனம் பண்ணிண்டு இருந்தார்.  மஹாபெரியவா ஸ்வாமிகள் கிட்ட நிறைய பாகவத சப்தாஹம் கேட்டிருக்கா.

ஒரு வாட்டி பெரியவா உட்கார்ந்து பாகவதம் கேட்டுண்டு இருக்கா. அப்போ சுத்தி இருக்கும் ஜனங்கள் எல்லாம் பேசிண்டு கொஞ்சம் சத்தம் பண்ணிண்டு இருக்கா. பெரியவா காசிக் கண்ணன் என்கிறவரிடம் ‘கொஞ்சம் புண்டரீகம் போடுங்கோ’னு சொல்றா. அவர் எழுந்து ‘கோபிகா ஜீவன ஸ்மரணம்’ னு சொன்ன உடனே எல்லாரும் ‘கோவிந்தா…. கோவிந்தா….’ னு சொல்றா. அப்ப பெரியவா சொன்னாளாம் ‘ஆயுசே கொஞ்சம். அதுல தூக்கத்துல, மத்த கார்யங்களில் பொழுது போயிடறது. கொஞ்சம் பாகவதம் கேட்டு புண்யம் தேடிக்கலாம்னு பார்க்கறேன். எனக்கு கொஞ்சம் ஒத்தாசை பண்ணுங்கோ. சத்தம் போடாதேங்கோ. நீங்கள் எல்லாமும் பெரியவா கிட்ட பாகவதம் கேளுங்கோ’ அப்படின்னு சொன்னாளாம்.

அப்படி ஸத்கதா ச்ரவணத்துக்கு மஹாபெரியவா அவ்வளவு முக்யத்துவம் குடுத்து இருக்கா. பகவானுடைய கதைகளைக் கேட்டால் அதன் மூலமாக பகவான் நம் மனசுக்குள்ளே வந்து விடுவார் என்று நம்பிக்கை. பெரியவா நம் ஸ்வாமிகளிடம் சப்தாஹம் கேட்டு இருக்கா. அதுக்கு முன்னாடி மாயவரம் பெரியவா கிட்ட கேட்டு இருக்கா. அப்படி பாகவதம் கேட்கறதுனு, ஆயுஸ் முழுக்க ஒரு கடமையாக ஸத்கதா ச்ரவணம் பண்ணி இருக்கா. தானும் நிறைய கதைகள் சொல்லி இருக்கா.

ஔவைப் பாட்டியைப் பத்தி சொல்லும்போது

‘ஆதரம்பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டவரோடே முன்நாளினில்,

ஆடல்வெம்பரி மீதேறி மாகயிலையில் ஏகி ஆதியந்த உலா

ஆசுபாடிய சேரர் கொங்கு வைகாவூர் நன்நாடதனில்

ஆவினன் குடிவாழ்வான தேவர்கள் பெருமாளே’ (நாத பிந்து கலாதீ என்று தொடங்கும் திருப்புகழ்)

அப்படிங்கற அருணகிரிநாதர் திருப்புகழை quote பண்ணி, சுந்தரமூர்த்தி நாயனார், பரவை நாச்சியாரோடும் சங்கிலி நாச்சியாரோடும் பகவான் (சிவபெருமான்) அனுப்பிச்ச ஐராவதத்தில் ஏறி கைலாசத்துக்கு போய் கொண்டு இருக்கார். அதைப் பார்த்த உடனே அவருடைய உற்ற தோழரான சேரமான் பெருமாள் நாயனார், தன்னுடைய குதிரையின் காதில்பஞ்சக்ஷரத்தை சொல்றார். உடனே அந்த பஞ்சகல்யாணி குதிரை, ஆகாசத்தில் பறந்து அந்த யானைக்கு முன்னாடி போயிண்டு இருக்கு. இதை ஔவைப் பாட்டி பார்த்தாளாம். அவ அப்போ பிள்ளையார் பூஜை பண்ணிண்டு இருந்தாளாம். அந்த பூஜையை கொஞ்சம் அவசரம் அவசரமாக பண்ணினாளாம்.  அப்போ பிள்ளையார் சொன்னாராம் ‘நீ மெதுவாகவே பூஜை பண்ணு. அவாளுக்கு முன்னாடி உன்னைக் கொண்டு போய் நான் கைலாசத்தில் சேர்த்துடறேன்’ னு சொன்னாராம். அப்பறம் அவ நிதானமா பூஜையை பண்ணி முடிச்ச பின்ன, பிள்ளளையார் தன் தும்பிக்கையாலேயே ஔவைப் பாட்டியை அவாளுக்கு முன்னாடி கொண்டு போய் கைலாசத்துல வெச்சுட்டாராம்.


பெரியவா இந்த கதையைச் சொல்லி ‘இந்த மாதிரி இந்த ஔவைப் பாட்டி பிள்ளையார் பக்தி பண்ணினதுனால தான், இந்த தமிழ் தேசத்துல தெருவுக்கு தெரு, ஒவ்வொரு மூலையிலேயும், ஒவ்வொரு குளந்தங்ககரையிலேயும் பிள்ளையார் உட்கார்ந்து இருக்கார். அந்த ஔவைப் பாட்டி பண்ணின விநாயகர் அகவலை நாம எல்லாரும் படிக்கணும். புரியறதோ இல்லையோ அதைப் படிச்சுண்டே வந்தா யோகீஸ்வராளா ஆயிடலாம்’ அப்படின்னு பெரியவா சொல்லி இருக்கா. இப்படி எந்த விஷயத்தை எடுத்தாலும் அழகாக ஒரு கதை சொல்லி பெரியவா பக்தியை ஊட்டி இருக்கா.

ஞானாம்பிகை, ச்யமந்தகமணி உபாக்யானம், ராமாயணத்துலேர்ந்து நிறைய காட்சிகளை கதையாக சொல்லி இருக்கா. ஆதி சங்கரருடைய சரித்ரத்தை ஆயிரம் பக்கத்துக்கு விஸ்தாரமாக சொல்லி இருக்கா. அதே மாதிரி anecdotesனு சொல்லக்கூடிய மணிக்குட்டி சாஸ்த்ரிகள். ரொம்ப அழகாக அவருடைய கதையை பெரியவா சொல்லி இருக்கா. இப்படி கதை சொல்றது ஒரு புண்ய கார்யம். சேஷாத்ரி ஸ்வாமிகள் ‘ஹரிகதை பண்ணினா மோக்ஷம் கிடைக்கும்’ னு சொல்லி இருக்கார். அப்படி மஹான்கள் அதை ஒரு புண்ய கார்யமாக நினைச்சு இருக்கா.

சிவன் சார், அவருடைய ஏணிப்படிகளில் மாந்தர்கள் புஸ்தகத்துல ‘மனுஷ்ய ஜன்மா தூய்மையில் உயர வேண்டி அருளப்பட்டு இருக்கிறது. நாம் விவேகிகள் ஆகி, ஸாதுக்கள் ஆகி, இன்னும் அதுக்கும் மேலே உயர்ந்த நிலைமைகள் இருக்கு’ னு சொல்லி அதோட விடாமல் புஸ்தகத்தோட மறு பாதி முழுக்க அந்த மாதிரி உயர்ந்த நிலைகளில் பிரகாசித்து வந்த மகான்களோட சரித்ரங்களை சொல்றார். மாணிக்கவாசகர், சதாசிவ பிரம்மேந்த்ராள், போதேந்த்ராள், ஸ்ரீதர ஐயாவாள், ஸத்குரு ஸ்வாமிகள் அப்படின்னு இந்த மகான்களோட சரித்ரத்தை தமக்கே உரிய அழகான ஒரு பாணியிலே சார் சொல்லி இருக்கார். சிவன் சாருடைய புஸ்தகத்துல இருக்கற மகான்களோட சரித்ரத்தை படிச்சா, பக்தி ஏற்படும்.

ஸ்வாமிகள் சொல்வார் ‘அந்த காலத்துல பிரவசனம் பண்றவா பகவான் கிட்ட பக்தி ஏற்படும்படியாக பிரவசனம் பண்ணுவா. பிரமிக்க வெக்கறதுக்காக ஒண்ணும் சொல்ல மாட்டா. அவாளுக்கு வேதாந்தமோ, வ்யாகரணமோ, தர்கமோ எந்த படிப்பு படிச்சு இருக்களோ, அதையும் கொஞ்சம் உபயோகப் படுத்திண்டு, இருக்கற ராமாயணத்தை சொல்லுவா. ஜனங்கள் கேட்டா அவா மனசுல ராம பக்தி ஏற்படும்படியாக, கிருஷ்ண பக்தி ஏற்படும்படியாக, அந்த காலத்துல பிரவசனம் பண்ணுவா’ அப்படின்னு சொல்வார். ஸ்வாமிகளும் அந்த மாதிரி பண்ணிண்டு இருந்தார். அதுனால தான் பெரியவா கூப்பிட்டு ஸ்வாமிகளை பாகவத பிரவசனம் பண்ண சொல்லி பெரியவாளே உட்கார்ந்து கேட்டா.

இந்த மாதிரி பெரியவா எந்த ஒரு விஷயத்தை விளக்கறதுக்கும் கதைகள் சொல்லி இருக்கா என்பதற்கு ஒரு உதாரணம். சுப்ரமண்யம் ஸ்வாமி என்கிறவர் கிட்ட பெரியவா ‘நாம சீனா கூடவும், இஸ்ரேல் என்கிற நாட்டோடும் உறவை மேம்படுத்த வேண்டும்’ னு சொல்றார். அந்த காலத்தில் (1977) சோவியத் யூனியனும் அமெரிக்காவும் தான் ரொம்ப பலத்தோட இருந்தது. அதுனால அந்த சுப்ரமண்யம் ஸ்வாமிக்கு ஆச்சர்யம். ‘சீனாவா? நாம அவாளுக்கு எதிரி நாடு ஆச்சே’ னு சொல்றார். அப்போ பெரியவா சொல்றா, ‘மகாபாரதத்துல பீஷ்மர் அர்ஜுனனுக்கு ஒரு கதை சொல்லி இருக்கார். நீ கேட்டு இருக்கியா?’ என்றவுடன் அவர் ‘எனக்கு தெரியவில்லையே’ னு சொல்றார். அப்ப பெரியவா அந்த கதையை சொல்றார்.

ஒரு எலி தன்னுடைய வளையிலிருந்து சாப்பாடு தேடி வெளியிலே வரது. அப்ப ஒரு பாம்பு அதைப் பார்த்து அதை துரத்துகிறது. அப்ப அந்த எலி ‘என்னடா பண்றது? வளைக்குள்ள திரும்பவும் போக முடியாதே’ னு பார்க்கிறது. அப்ப அங்கே ஒரு பூனை மேலே ஒரு வேடன் வலையை போட்டு இருக்கான். அந்த எலி பூனை கிட்ட சொல்லித்தாம் ‘நான் என் பல்லால் இந்த வலையை கடிச்சு உன்னை விடுவிக்கறேன். இப்போ நீ க்ரீச் னு கத்தி இந்த பாம்பை பயமுறுத்தி விரட்டி விட்டுடு’ என்றவுடன் அந்த பூனை கீகீ னு கத்தித்தாம். அந்த பாம்பு பயந்து ஓடி போயிடுத்தாம். உடனே அந்த எலி வந்து பல்லால் அந்த வலையை கடிச்சுதாம். ஆனா ரொம்ப மெதுவாக கடிச்சுண்டு இருந்ததாம். பூனை ‘சீக்கரம் பண்ணு, சீக்கரம் பண்ணு’ னு சொல்லும் போது ‘இதோ இதோ’ னு எலி மெதுவாக கடிச்சு, அந்த வேடன் பக்கத்துல வரும்போது முழுக்க கடிச்சு, அந்த பூனையை விடுவிச்சுடுத்தாம். எலியும் தன்னுடைய வளைகுள்ள ஓடி வந்துடுத்து. பூனையும் வேடனுக்கு பயந்து ஓடிப் போயிடுத்து.

எலி அப்பறம் எட்டிப் பார்த்த போது பூனை கேட்டுதாம் ‘நீ ஏன் அந்த மாதிரி பண்ணினாய்? வேண்டும் என்றே மெதுவாக கடிச்சுண்டு இருந்தாயே?’ என்ற போது ‘உடனே கடிச்சு விடுவிச்சு இருந்தா நீ என்னை தின்னு இருப்பாய். இப்போ வேடனுக்கு பயந்து ஓடிப் போனாய்.’ என்று சொல்லித்தாம்.

இந்த கதையை மகாபெரியவா சுப்ரமண்யம் ஸ்வாமிக்கு சொல்லி ‘நாம சீனாவோடு இப்போதைக்கு நட்பாக இல்லை என்றாலும் தேவைக்கு ஏற்ற அளவுக்கு உறவு வெச்சுக்கலாம். friendship இல்லைனாலும் alliance வெச்சுக்கலாம். அவாளுக்கு ஒரு எதிரி இருப்பா அதை பாத்துக்கணும்’ அப்படின்னு சொல்லி இருக்கா. ‘அப்போ சீனா சோவியத் யூனியன் கிட்ட பயந்தது. இப்போ அமெரிக்கா கிட்ட பயப்படறது’ அப்படின்னு சுப்ரமண்யம் ஸ்வாமி சொல்றார். அப்படி எல்லாத்துக்கும் கதைகள் மூலமாக ஒரு படிப்பினை சொல்லி தரது, மஹான்கள் பண்ணி இருக்கா.

ஸ்வாமிகள் கிட்ட கஜேந்திர மோக்ஷம், துருவ சரித்ரம், ஜடபரத உபாக்யானம், கிருஷ்ணனுடைய பால லீலைகள், அதே போல ராமாயணத்துல எந்த கட்டமானாலும், ஸ்வாமிகள் சொல்றதை கேட்டால் அவருக்கு அடிமை ஆகி விடுவார்கள். அவ்வளவு அழகாக சொல்வார். நாமும் நிறைய ஸத்கதா ச்ரவணம் பண்ணுவோம். நமக்கு தெரிஞ்ச அளவுக்கு ராமாயணத்தையும் கிருஷ்ணன் கதைகளையும் குழந்தைகளுக்கு சொல்லிக் குடுப்போம்.

‘கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா…. கோவிந்தா…

ஸத்கதா ச்ரவணம் (8 min audio of the above speech)

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *