கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஆராதனைஎங்கள் சத்குருநாதர் ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய ஆராதனை வைபவம் பழுவூர் கிராமத்துல, ரொம்ப ‘அமோகமா’ நடந்தது. அதுல கலந்துக்கிற பாக்கியம் எனக்கு கிடைச்சது. இந்த வைபவம் ‘அமோகமா’ நடந்ததுங்கிற வார்த்தையை ரொம்ப specific ஆ நான் உபயோகப்படுத்தறேன்.

ஸ்வாமிகள் ஸந்யாசம் வாங்கிக்கணும், அப்டீன்னு ஆசைப்பட்டார். சிவன் சார்கிட்ட உத்தரவு கேட்டார். சிவன் சார், ‘வாங்கிக்க சொல்லுங்கோ, அமோகமா இருப்பார்’, அப்டீன்னு சொன்னார். அந்த வார்த்தையோட பலத்தை இன்னிக்கும் நாங்கள் அதை  கண்கூடாகப் பாக்கறோம். இந்த ஒரு ஆராதனை வைபவம் “எல்லாரும் பொருளுதவி பண்ண வேண்டியது, வந்து நடத்தி தர வேண்டியது”, அப்டீன்னு ஒருவிதமான வேண்டுதலும் இல்லாமல், தானா, அவா அவா சிஷ்யர்கள் வந்து அவா அவா ஒரு கார்யத்தை எடுத்துண்டு, அந்த ஆராதனையை ரொம்ப விமரிசையா நடத்தறா.

ஸ்வாமிகளை, அவருடைய சித்திரத்தை, அலங்காரம் பண்ணி, இப்ப அவருக்கு ஒரு அழகான விக்ரஹமூர்த்தியும் ஏற்பாடு பண்ணியிருக்கா. அந்த ஸ்வாமியை, அந்த பழுவூர் அக்ரஹாரத்துல, ஸ்வாமி புறப்பாடு (ஊர்வலம்) பண்றா. அதுல  எல்லாருமாக அந்த ஸ்வாமியைத் தூக்கிண்டு போகும் போது, ஒவ்வொரு ஆத்து வாசல்லயும் ஸ்வாமிக்கு ஆரத்தி காண்பிக்கறதும், கூட வேத கோஷங்கள், ஹரி பஜனம், குழந்தைகள் எல்லாம் திருப்புகழ் பாடறது இப்படி. அங்கே பதினாறு பிராமணர்களை ரொம்ப ஆச்சாரமா, அவாளை ஸ்நானம் பண்ணி வெச்சு, அவாளுக்கு, சாப்பாடு போட்டு, அங்கே இருந்து  அவாளை, மேளதாளத்தோட  அதிஷ்டானத்துக்கு அழைச்சுண்டு வந்து, அந்த தீர்த்த நாராயாண பூஜைன்னு, அவாளுடைய பாத தீர்த்தத்தை பூஜை பண்ணி, அவாளை பிரதக்ஷிணம் பண்ணும்போது அந்த பாத தீர்த்தத்தை தலையில வெச்சுண்டு, “இன்னிக்கு நம்முடைய குருநாதர், இந்த பிராமணர்கள் வடிவத்துல வந்தார், அவருடைய பாத தீர்த்தம் கிடைச்சுதே” அப்டீன்னு, சந்தோஷத்துல குதிக்கணுமாம், பிரதக்ஷிணம் பண்ணி ஆடணுமாம், அப்போ அந்த ஜலம் அவா மேல சிந்தனும், இப்படி மஹா பெரியவாளே பண்ணுவாளாம், தன்னுடைய குருநாதாளோட ஆராதனையை. ஸ்வாமிகளுடைய பூர்வாஸ்ரமப் பிள்ளை, ராகவ சாஸ்த்ரிகள், அவரும் அந்த தீர்த்த நாராயண பூஜை பண்ணி, அப்படி ஜலம் சிந்தும் படியாக பிரதக்ஷிணம் பண்ணுவார். அப்பறம் அந்த பெரியவா கையில இருந்து, அக்ஷதையை வாங்கிண்டு, தலையில போட்டுண்டு, ஆத்துல வந்து, குழந்தைகளுக்குப் போடறதுதான், இந்த ஆராதனையில முக்யமான நிகழ்ச்சிகள். அதிஷ்டானதுல, ருத்ர ஜபங்கள் சொல்லி, மஹாலிங்க ஸ்வாமிக்கு அபிஷேகம், அப்படி, அந்த ஊரே கோலாகலமா கொண்டாடறது.

எல்லா வேளையும் சாப்பாடு, கார்த்தால டிபன் கல்யாணத்துல போடற மாதிரி பலவிதமான அயிட்டங்கள் போட்டு, டிபன் மத்யானம் சாப்பாடு, சாயங்காலம் டிரைனுக்கு கட்டிக் கொடுக்கறது அப்டீன்னு, ரொம்ப ஆசையா பண்றா. இந்த ஆராதனையில நான், முதல் நாளே போயிடுவேன், எனக்கு என்னன்னா, அங்க வரவா, ஸ்வாமிகளுடைய பெருமையை பேசுவா. गुणि निष्ट गुनभिदानं स्तव: (குணி நிஷ்ட குணாபிதானம் ஸ்தவ:) அப்டீன்னு, யாரிடத்துல குணங்கள் இருக்கோ அதை எடுத்து, பேசறதுக்கு ஸ்தோத்திரம்னு பேரு. அப்படி யாராவது, குணக்கடலா இருந்த ஸ்வாமிகளுடைய பெருமைகளை பேசினா கேட்கலாம்னு நான் ஓடிப் போயிடுவேன். பேசினா கேட்கறது, இல்லேன்னா யாராவது ஆசை பட்டா நாம சொல்றது, ரெண்டும் இல்லேன்னா பாராயணம் பண்ணிண்டு, அவரை தியானம் பண்றது, அப்டீன்னு வருஷத்துல ஒரு நாளாவது, நாம ஸ்வாமிகளோட தியானத்துல இருக்கலாம்னு, நான் ஆராதனைக்குப் போவேன். அருணகிரிநாதர் திருமுருகன்பூண்டித் திருபுகழ்ல, “அவசியம்முன் வேண்டிப் பலகாலும் (உன்னைத் தொழுவது அவசியமென அறிந்து பலமுறையும் பிரார்த்தித்து), அறிவினுணர்ந்து  ஆண்டுக்கொருநாளில் (எனது அறிவினில் உன்னை உணர்ந்து வருஷத்திற்கு ஒரு நாளாவது) தவசெபமுந் தீண்டிக் கனிவாகி (தவ ஒழுக்கத்தையும் ஜப நெறியையும் மேற்கொண்டு உள்ளம் கனிந்து) சரணமதும் பூண்டற்கு அருள்வாயே” அப்டீன்னு சொல்றார். இந்த திருப்புகழை எனக்கு சொல்லிக் கொடுத்ததும் ஸ்வாமிகள் தான். ஸ்கந்த சஷ்டி உற்சவத்துல, அட்டையில ஒவ்வொரு திருப்புகழ் வரிகளை எழுதி போட்டிருப்பாளாம், ஸ்வாமிகள் “ஆண்டுக்கொரு நாளாவது தவஜபங்கள் பண்ணி, பகவானோட சரணத்தை அடையணும் அப்டீன்னு திருப்புகழ் இருக்கு பாரு” அப்டீன்னு சொன்னார். அப்படி ஒரு நாளாவது ஸ்வாமிகளை நினைச்சுண்டு இருப்போம் அப்டீன்னு, நான் ஆராதனைக்குப் போவேன்.

ஆராதனைக்கு முந்தின நாள் சாயங்காலம், பாட்டுக் கச்சேரி, அப்படி ஏதாவது ஒரு ஏற்பாடு பண்ணி இருப்பா. எனக்கு ஸ்வாமிகள் சன்னிதியில மூக பஞ்சசதி படிக்கணும்னு  மனசுல ஒரு ஆசை இருந்தது.  இந்த வாட்டி, அந்த நேரத்துல அங்க இருக்கும்போது சில பேர், “மூக பஞ்சசதி படிக்கிறியா? கேக்கறோம்” அப்டீன்னு சொன்னா. சரின்னு, மூணறை மணியில இருந்து எட்டரை மணி வரைக்கும், சந்த்யாவந்தனம் break எடுத்துண்டு  மூகபஞ்சசதியை முழுக்கப் படிச்சேன்.  நிறைய பேர் உட்கார்ந்து கேட்டா. எனக்கு ரொம்ப சந்தோஷம். ஸ்வாமிகள் கிட்ட ஒண்ணு வேண்டிண்டா கிடைக்கும்கிறதுக்கு, அந்த சந்நிதியில மூகபஞ்சசதியை படிக்கணும்னு ஆசை பட்டேன். அது கிடைச்சுது.

கேட்கறவா எல்லாம், நீ நன்னா உபன்யாசம் பண்ற, நீ உபன்யாசமே பண்ணலாம் அப்டீன்னு சொன்னா. எனக்கும் அந்த ஆசை இருக்கு. ஆனா அது எப்படி பண்ணனும், அப்டீங்கிறதுக்கு, இப்படி பண்ணிணா என்ன கிடைக்கும், அப்டீங்கிறதுக்கு, ரெண்டு பேர் என்கிட்ட தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துண்டா. இதெல்லாம் எதேச்சையா நடக்கறதுதான். நாம போயி கேட்கணும்கிறது இல்ல. வர்றவா ஸ்வாமிகளை பத்தி பேசுவா.

ராகவ ஐயங்கார்னு எண்பத்தெட்டு வயசுக்காரர், என்கிட்ட வந்து பேசினார். ஸ்வாமிகள் கூட postal department ல ஒண்ணா வேலை பண்ணினவர். அவர் அந்த ஆரம்பக் கால அனுபவங்களை எல்லாம் சொல்லிண்டு இருந்தார். ஸ்வாமிகள் , postal department ல வந்து சேர்ந்தார். அவர்  வந்தபோது ரொம்ப சாதுவா இருக்கார்னு, வேலை எல்லாத்தையும் அவர் தலையில கட்டப் பாத்தபோது, அந்தண்டை போ அப்டீன்னு, நான் அவரை protect பண்ணினேன். அதனால எங்க ரெண்டு பேர்க்குள்ள ஒரு நட்பு வளர்ந்தது. அப்புறம் பழகப் பழக, அவர் நேரம் கிடைக்கும்போதேல்லாம், ஸ்தோத்திரப் பாராயணம், நாராயணீயம் எல்லாம் படிச்சிண்டு இருக்கறதை பார்த்தேன், என்னத்துக்கு இதெல்லாம் அப்டீன்னு கேட்டேன்.ஜென்ம லாபம், பகவானை அடையறது, அப்டீன்னு சொல்வார். இவர் ஒரு விலக்ஷணமா இருக்கார். Unique ஆ இருக்கார்னு நான் புரிஞ்சுண்டேன். அவரை கொண்டு ஒருவாட்டி என் நண்பர்களுக்கு ப்ரஹ்லாத சரித்ரம் சொல்ல சொன்னேன். எல்லாரும் உருகி கேட்டா. ரொம்ப ஆனந்தப்பட்டா.

ஒரு நாள் ஸ்வாமிகள் (கல்யாணராம பாகவதர்), தன்னோட ஜாதகத்தை, நான் ஜாதகம் பாக்கறேன்னு சொல்லி, என்கிட்ட காண்பிச்சார். எனக்கு பகவத் தரிசனம் கிடைக்குமா, மோக்ஷம் கிடைக்குமா அப்டீன்னு கேட்டார்.சின்னப் பிள்ளையா இருந்துண்டு இவ்வாளவு பெரிய விஷயம் கேட்கராறேன்னு அப்டீன்னு சொல்லி, எனக்குத் தெரிஞ்சது சொன்னேன். “உன் ஜாதகத்தில் மோக்ஷத்துக்கு ஆதரவா நிறைய கிரகங்கள் பலத்தோட இருக்கு. ஆனா நாம வாழ்கையை எப்படி எடுத்துண்டு போறோம்னு ஒண்ணு இருக்கு. நீ ரொம்ப நன்னா பகவானை பத்தி பேசற. ராத்திரி பகல் பகவத்குணத்துலயே இருக்கணும், அப்டீன்னு ஆசைப்படற. பாராயணம் பண்ணறே. பிரவசனம் பண்ணறே. இதையே நீ பண்ணிண்டு இருக்கலாம். இப்படி பண்ணும் போது உனக்கு நிறைய பணம் கிடைக்கும், புகழ் வேணும்னு கேட்டா அது கிடைக்கும். அதை வேண்டாம்னு நீ மனசுல தீர்மானம் பண்ணி வெச்சேன்னா, உனக்கு பகவத் தரிசனம் கிடைக்கும்”, அப்டீன்னு எனக்கு தெரிஞ்சதை சொன்னேன். இதை அவர் மனசுல வாங்கிண்டுட்டார்.

அப்புறம் ஒரு தடவை, “நாகபட்டினம் என்னோட ஊர். அங்கே நான் உன்னை கூட்டிண்டு போறேன், அங்க நிறைய படிச்சவா இருக்கா. நீ ராமாயணம் சொல்லு, கேட்க ஆசைபடுவா”ன்னு சொன்னேன். சரின்னு சொன்னார். கூட்டிண்டு போனேன். அப்போ எனக்கு தெரிஞ்ச பத்து பேரை வரச் சொன்னேன், ஒரு நரசிம்மர்  கோயில்ல அவரை பிரவச்சனம் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணினேன். ஒருத்தர் கிட்டையும் பணம் கேட்கலை. அதனால் யாரும் வந்து நடுவில பேசக் கூடாது. வந்தா கதை கேட்டுட்டு போகணும், அப்டீன்னு strict ஆ சொல்லிட்டேன். அது என்ன அப்டீன்னு சண்டைக்கு வந்தா. உன்கிட்ட பணம் கேட்டேன்னா, உனக்கு வேண்ணா கதை கேளு, இல்லேனா போயிண்டே இரு, அப்டீன்னு அடிச்சுப் பேசிட்டேன். இந்த மாதிரி என்னோட friends வந்து பத்து பேர் கேட்டா. அதுல ஒருத்தர் கதை முடிஞ்ச பின்ன, என்னை தனியா கூட்டிண்டு போயி, “இவ்வளவு படிச்சவரா இருக்கார், இவ்வளவு அழகா கதை சொல்றார். இவரை போயி பத்துப் பேருக்கு இங்க வந்து, கதை சொல்றதுக்காக ஏற்பாடு பண்ணியிருக்கியே, அது தப்பு இல்லையா”, அப்டீன்னு சொல்லி, நான் எல்லாரையும் கூப்பிடறேன்னு, அவர் நோட்டீஸ் அடிச்சு, நிறைய பேருக்கு சொல்லி, அடுத்த நாள் நூறு பேர் வந்தா. அதுக்கு அடுத்த நாள், முந்நூறு பேர் வந்தா, ஒன்பது நாள், ஏற்பாடு பண்ணியிருந்த கதையை பதினைஞ்சு நாளா சொல்லுங்கோ அப்டீன்னு, சொன்னா. அந்த மாதிரி பதினஞ்சு நாட்கள் உபன்யாசம் நடந்தது.

அந்த பதினைஞ்சாவது நாள், என்கிட்ட ரொம்ப  வேண்டிண்டு, சரீன்னு இடம் கொடுத்த உடனே, எல்லாரும் அவரை, ரொம்ப கொண்டாடினா. நூறு வருஷம் முன்னாடி பெரியவாள் கிட்ட கேட்ட மாதிரி இருந்ததுன்னு ஒருத்தர் சொன்னார், அம்பாளே வந்து அவர் மடில உட்கார்ந்து பேசறார், அப்டீன்னு ஒருத்தர் சொன்னார். எல்லாரும் ரொம்ப சந்தோஷப் பட்டா. எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் பணம் கொடுத்தா. ஒரு இருநூறு ரூபாய் collect ஆச்சு. நான் வந்து பணத்தை collect பண்ணிண்டு வந்த உடனே, ஸ்வாமிகள், அங்க ரெகுலரா வந்து பத்து நாளாய் கேட்டுண்டு இருக்கற, வித்வான்கள், படிச்சவா, வைதீகா எல்லாம் இருக்காளான்னு பார்த்து, “எதாவது கொஞ்சம் பணம் சேர்ந்து இருந்துந்துன்னா, வெத்தலை பாக்குல வெச்சு ஒரு இருவது ரூபா இவருக்கு கொடேன்”, “இவருக்கும் கொடு”, அப்டீன்னு சொல்லி சொல்லி, அங்க எட்டு பேருக்கு, வந்த இருநூறு ரூபாயில நூற்றி அறுபது ரூபாய கொடுக்க சொல்லிட்டார். train charge இருந்தது, திரும்பி வந்தோம்.

இதே மாதிரி, அவருக்கு ஒரு பதினெட்டு, இருபது உபன்யாசங்கள் ஏற்பாடு பண்ணி கொடுத்தேன். போன இடத்துல எல்லாம் நல்ல பேர். ஆனா “எவ்வளவு collect ஆச்சு?”ங்கிற வார்த்தையை அவர் என்கிட்ட கேட்கவே இல்லை. அந்த பணத்துல மனசு வெக்காம இருந்தா பகவான் கிடைப்பார், அப்டீன்னு நான் சொல்ல முடியும், என்னால அந்த மாதிரி வைராக்யமா இருக்க முடியாது. ஆனா அவர் அப்படி வைராக்யமா இருந்தார். எவ்வளவு பணம் collect ஆச்சுன்னு ஒரு தடவை கூட கேட்கலை. எதாவது சேர்ந்து இருந்துதுனா, இன்னாருக்கு குடு, கொஞ்சம் இவருக்கு குடு அப்டீன்னு, நிறைய, வந்த பணத்துல இருந்து, தானம் பண்ணார். அப்பேற்பட்ட மஹா புருஷர்.

ராகவ ஐயங்கார் இன்னொன்னும் சொன்னார். நான் நம்முடைய தீர்மானம், வாழ்கையை எப்படி எடுத்துண்டு போறது, அப்டீன்னு சொன்னதுக்கு, என்னுடைய எழுபது வயசுல proof கிடைச்சது. இன்னொரு ஜாதகம் பார்த்தேன், இவருக்கு, (ஸ்வாமிகளுக்கு)  few minutes differenceல அதே நாள்ல, அதே நேரத்துல பொறந்த ஒருத்தர் இருந்தார். இவருக்கு வர மாதிரி தசாபுக்திகள் அவருக்கு வந்தது. அதே லக்னம். அதே நக்ஷத்ரம். இவருடைய தசா புக்தி பக்கத்துலையே அவருக்கு வந்தது. அவர் IAS officers க்கு விஷேங்களுக்கு சமைச்சு போட்டு பத்து கோடி ரூபா சம்பாதிச்சார். ஆனா என்கிட்ட வந்தபோது, நிம்மதியே இல்லை. எப்ப உயிர் போகும்., அப்டீன்னு கேட்டார். பிள்ளைகள் எல்லாம் என்னை கொல்ல பாக்கறா, அப்டீன்னு சொன்னார், அந்த மாதிரி ஜாதகத்துல, இருக்கற பலாபலன்களோட, நாம சில கொள்கைகள் வெச்சுக்கணும், அப்டீன்னு நான் சொன்னேன். எனக்கு தெரிஞ்ச அறிவுல சொன்னதுக்கு, எனக்கு பதில் கிடைச்சது, அப்டீன்னு அந்த ராகவ ஐயங்கார் சொல்லி முடிச்சார்.

அதனால பகவானை பேசணும்னா “அது profession கிடையாது. எதிரில் இருக்கறவாளோட திருப்தி முக்யமில்லை, இதுல இருந்து சம்பாதிக்கலாம், அப்டீன்னு எண்ணமே வெச்சுக்கக் கூடாது. அந்த வைராக்கியம் வந்தா, இந்த ப்ரவசனமே பண்ணிண்டு இருக்கலாம்” அப்டீன்னு எனக்கு ஒரு தோணித்து. அதுக்கு பகவான் அனுக்ரஹம் பண்ணனும். அப்படி, ஸ்வாமிகள், என்னிக்காவது ஒரு நாள்  வழி விடுவார், அப்டீன்னு நினைக்கிறன்.

இப்படி வைராக்யமா இருந்தா என்ன கிடைக்கும், அப்டீங்கிறதுக்கு, அன்னிக்கு ராத்திரி, ஸ்ரீரங்கம் ஸ்டேஷன்ல வந்து உட்கார்ந்துண்டு இருக்கோம். பதினொரு மணிக்கு வண்டி. பத்தரை மணிக்கு, குஞ்சிதபாதம் ஐயர் அப்டீன்னு ஒருத்தர், அவரும் எழுபத்தேழு வயசுக்காரர். அவர் பக்கத்துல வந்து உட்கார்ந்துண்டார். என்ன பழூர் அதிஷ்டானம் ஆராதனைக்கு வந்தேளா. அப்டீன்னு கேட்டார். ஆமாம், வந்துருந்தோம்னு சொன்ன உடனே, “ஸ்வாமிகள், மாதிரி ராமாயணம், பாகவதம் யாரவது படிக்கிறவா இருப்பாளா இருக்கும், அவரை மாதிரி, ஒழுக்கம், நேர்மை, அவரை மாதிரி, வைராக்கியம், பக்தி, கருணை இதெல்லாம் கத்துக்கணும்ப்பா”, அப்டீன்னு சொல்லிட்டு, அவர் ஒரு நிகழ்ச்சி சொன்னார்.

ஸ்வாமிகள் பத்தி தெரிஞ்சுண்டு, அவர் ரொம்ப எல்லார்கிட்டயும், சுலபமா பழகுவார், ரொம்ப இனிமையா பேசுவார். எங்காத்துல ஒரு பாகவத ஸப்தாஹம் வெச்சுக்கலாமான்னு கேட்டேன். ஆஹா ன்னு சொன்னார். நான் எங்காத்துல ஏற்பாடு பண்ணிணேன். கார்த்தால பாராயணம். சாயங்காலம் பிரவசனம் பண்ணிண்டு இருக்கார். அந்த நேரத்துல நான் ஐயப்ப ஸ்வாமிக்கு விரதம் இருந்தேன். அந்த காலத்துல எல்லாம், மொத்தமா ஒரு வருஷத்துக்கே ஐயப்ப ஸ்வாமி கோவிலுக்கு, ஒரு ஆயிரம் பேர்தான் சபரி மலைக்கு போன காலம். யாரோ பக்கத்துல ஒரு பெரியவர் இருந்தார். அவர் நான் கூட்டிண்டு  போறேன்னு சொன்னார். அதுதான் நான் முதல் தடவை, நான் பண்றேன். அந்த மாதிரி ரொம்ப தீவிரமா விரதம் இருந்து ஸ்வாமி தரிசனத்துக்காக, காத்துண்டு இருக்கோம். உங்காத்துல நாளைக்கு, ஐயப்ப பூஜை வெச்சுக்கோ, அப்டீன்னு சொன்னார். ஆஹான்னு சொன்னேன். அதுக்கு அவர் ஒரு விக்ரகம் வெச்சுண்டு இருந்தார். அதை நம்மகிட்ட  கொடுக்கப் போறார். அந்த ஸ்வாமியை வெச்சுண்டு நாம பூஜை பண்ணலாம்னு நான் நினைச்சுண்டு இருந்தேன். அவர்கிட்ட கேட்டபோது, அது இன்னொரு ஆத்துல இருக்கு. நீ வேணா நாளைக்கு கார்த்தால வந்து ஒரு மூணு மணிக்கு நீ அவர் ஆத்துல போயி வாங்கிக்கோ, அப்டீன்னு சொல்லிட்டார். நான்,என்னடா இது, இன்னிக்கு ஸ்வாமி கிடைச்சா, நிறைய புஷ்பங்கள், எல்லாம் ஏற்பாடு பண்ணி இருந்தேன். அலங்காரம் எல்லாம் பண்ணலாமேன்னு என் மனசுல ஒரு எண்ணம் இருந்தது. அதை ஸ்வாமிகள்கிட்ட சொல்லிண்டு இருந்தேன். ஐயப்ப ஸ்வாமி இன்னிக்கு நம்மாத்துக்கு வருவார்னு நினைச்சேன், நாளைக்கு கார்த்தால போயி கூட்டிண்டு வரணும் அப்டீன்னு சொல்லிண்டு இருந்தேன். ஸ்வாமிகள் கேட்டுண்டு சிரிச்சார்.

அவர் பாராயணம் பண்ணிண்டே இருக்கார், சாயங்காலம், பிரவசனம் பண்ணும்போது மோஹினி அவதாரம், சொல்லிண்டு இருக்கார். வாசல்ல, மேளதாளத்தோட ஏதோ ஸ்வாமி வர மாதிரி சத்தம் கேட்டுது. எல்லாரும் வெளியில வந்து பார்த்தோம். அந்த ஐயப்ப ஸ்வாமியை எடுத்துண்டு வந்துண்டு இருந்தா.  என்னன்னு கேட்டேன். இன்னிக்கு அவா ஆத்துல ஒரு தீட்டு வந்துடுத்து. நீ ஆசை பட்டியே, இன்னிக்கே உங்காத்துக்கு ஸ்வாமி வந்துட்டார், அப்டீன்னு என்னோட குருநாதர், ஐயப்ப ஸ்வாமியை உள்ள கூட்டிண்டு வந்தார். ஸ்வாமிகள் ரொம்ப கண் ஜலம் விட்டார். மோஹினி அவதாரம் படிக்கும்போது ஐயப்ப ஸ்வாமி வந்தாரே அப்டீன்னு, ரொம்ப சந்தோஷப் பட்டார். அந்த விஷ்ணு பகவான் மோஹினி அவதாரம் எடுத்தபோது தானே, ஹரிஹரபுத்ரனா ஐயப்ப ஸ்வாமி அவதாரம் பண்ணார். அதை நினைச்சு ஸ்வாமிகள் ரொம்ப சந்தோஷப் பட்டார். அந்த மாதிரி, பகவானையே பேசிண்டு இருந்தா என்ன கிடைக்கும் அப்டீன்னா, பகவானே கிடைப்பார். அப்டீங்கிறதுக்கு இது ஒரு ஸாக்ஷி.

அப்படி ஸ்வாமிகளை நினைச்சுண்டு இருக்கறதுக்கு இந்த ஆராதனை ஒரு வாய்ப்பா இருந்தது. ஸ்ரீ சுந்தர்குமார், ஸ்வாமிகளுடைய அத்யந்த பக்தர். ஸ்வாமிகள் சன்யாசம் வாங்கிண்ட அந்த பன்னிரெண்டு வருஷம், ஸ்வாமிகள்கிட்ட வந்து நிறைய  பாகவதம் கேட்டு இருக்கார். ஸ்வாமிகளும் அவர் பாகவத ஸப்தாஹம், சாய் சமாஜ்யத்துல படிக்கும்போது, நிறைய ஸ்ரவணம் பண்ணி இருக்கார். அவர் ஒவ்வொரு வருஷமும் இந்த ஆராதனையை ஒட்டி ஒரு ஸப்தாஹம் பண்ணுவார். ஆராதனையில வந்து கலந்துப்பார். அவருடைய பக்தி பாக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். அங்கப்ரதஷணம் பண்ணுவார். தோடகாஷ்டகம் சொல்லி நமஸ்காரம் பண்ணுவார். அஞ்சு நிமிஷம், ஸ்வாமிகளை பத்தி பேசுவார். அதை கேட்கறதுக்குகாகவே, நான் ஓடிப் போவேன். அந்த மாதிரி இந்த வாட்டி, பகவான் கபிலாவதாரம் பண்ணி, கபில முனியா வந்தபோது, தேவஹூதின்னு அவர் அம்மா, “எனக்கு, இந்த உலக பந்தங்கள் எல்லாம் விடறதுக்கு வழி சொல்லுங்கோ” அப்டீன்னு, கேக்கறா, “பகவான்கிட்ட பக்தி பண்றதுதான் வழி” அப்டீன்னு சொல்றார். அந்த பக்தி எப்படி ஏற்படும்னு கேட்கும் போது, நான் உனக்கு பக்தியை தரேன்னு சொல்லலை. பகவானே எதிரில் உட்கார்ந்துண்டு இருக்கார். ஆனாலும், தன்னுடைய அம்மாக்கு “உனக்கு பக்தியை அனுக்ருஹம் பண்றேன்”னு சொல்ல முடியலையாம். “மகான்களுடைய சரணத்தை நமஸ்காரம் பண்ணி, அந்த பாத துளியை தலையில ஏத்துண்டாதான் பக்தி ஏற்படும்”, அப்டீன்னு சொல்றார். அப்போ மகான்களோட லக்ஷணம் என்ன, அவா எப்படி இருப்பா, அப்டீன்னு கேட்டபோது, அழகான ஒரு நாலு ஸ்லோகங்கள் இருக்கு. அந்த ஸ்லோகங்கள் எல்லாம் சொல்லி, அதுல இருக்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும், அர்த்தம் சொல்லி, அந்த லக்ஷணம் எப்படி நம்ம ஸ்வாமிகள்கிட்ட இருந்தது, அப்டீன்னு சொன்னார். ரொம்ப பேரானந்தமா இருந்தது.

அப்பேற்பட்ட சத்குருநாதர் நமக்கு கிடைச்சிருக்கார். அவருடைய மகிமையை நினைப்போம். “இந்த உலகத்துல செல்வம் வேணும், நல்ல வாழ்கை வேணும்னாலும் ஞானிகளை ஆஸ்ரயிக்கணும்” அப்டீன்னு, உபநிஷத்லயும், வேதத்துலயும் இருக்கு. அது மாதிரி அந்த மகான்களை நாம எதுக்காக ஆச்ரயிச்சாலும், அவா, படிப்படியா நமக்கு சித்தசுத்தியையும், பக்தியையும், ஞானத்தையும், வைராக்யத்தையும், நமக்கு கொடுப்பா. அந்த நம்பிக்கையோட நான் அவரை தினமும் நினைச்சுண்டு இருக்கேன்.

மோக்ஷமென்னும் மாடிக்கு பக்தி மார்கத்தின் ஏணிப்படிகள்

கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா கோவிந்தா…

ஸ்வாமிகள் ஆராதனை 2017 (18 min audio of the above speech)

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.