Categories
Ramayana One Slokam ERC

சீதாதேவி ஸ்ரீராமரோடு மகிழ்ச்சியாக இருந்த பொழுதுகள்

अर्थसिद्ध्यै हरिश्रेष्ठ गच्छ सौम्य यथासुखम्। समानयस्व वैदेहीं राघवेण महात्मना।।

அர்த்தசித்யை ஹரிஸ்ரேஷ்ட கச்ச சௌம்ய யதாஸுகம் |
ஸமானயஸ்வ வைதேஹீம் ராகவேன மஹாத்மனா ||

மைனாக மலைகிட்ட விடை பெற்றுக்கொண்டு, ஹனுமார் ஆகாசத்துல போகும் போது, ஸுரசா, அப்டீங்கிற ஒரு நாக மாதாவை பார்த்து தேவர்கள், “நீ போயி இந்த ஹனுமாருக்கு, எதாவது ஒரு தடை உண்டு பண்ணு. அவர் அதை, புத்தியினால ஜெயிச்சுண்டு போறாரா, இல்லை மனம் தளர்ந்து போறாரா அப்படீன்னு பாக்கணும்”னு சொல்றா. அந்த நாக மாதா தக்ஷனோட பொண்ணு. “தாக்ஷாயிணி  நமோஸ்து தே” அப்படீன்னு ஹனுமார் சொல்லி, நமஸ்காரம் பண்ணி, “எனக்கு வழி விடு. நான் ராம காரியமா போயிண்டு இருக்கேன்” அப்படீன்னு சொல்றார். அப்போ அந்த ஸுரசா சொல்றா, “இல்ல. தேவர்கள் எனக்கு வரம் கொடுத்துருக்கா. நான் இன்னிக்கு உன்னை சாப்பிடப் போறேன். நீ என் வாய்க்குள்ள நுழைஞ்சுட்டு தான் போகணும்” அப்படீன்னு சொல்றா.

அப்போ ஹனுமார், ராமர் கதையை சொல்றார். எப்பவுமே ராமர் கதைய சொன்னா அவருக்கு ஜயம்தான். ருக்ஷ பிலம்னு ஒரு குகைக்குள்ள மாட்டிண்டுடறா அவா வானரா எல்லாம். வழியே தெரியலை. அப்போ அங்க ஸ்வயம்பிரபான்னு ஒரு தபஸ்வி இருக்கா. அவகிட்ட, ஹனுமார் அப்போ ராம கதையை சொன்ன உடனே, அவள் தன் தபோபலத்துனால வெளியில கொண்டு வந்து விடறா. அப்புறம் சம்பாதி கிட்டயும் ராம கதையை சொல்றா. அவர் வழி காண்பிக்கறார். எங்க இருக்கா சீதை அப்டீன்ன உடனே, இலங்கையில இருக்கான்னு சொல்லி கொடுக்கறார்.

இங்க ஸுரசை கிட்டயும் ராம கதையை சொல்றார். சீதாதேவி கிட்டயும் மரத்துமேல உட்கார்ந்து ராம கதையை சொல்லி, அவ மனசை சமாதானம் பண்ணி, அவ உயிரை காப்பாத்தறார். இப்படி ராம கதை சொன்னா நமக்கு எங்கும் வெற்றிதானே அப்டீங்கிறதுனால, இந்த ஸுரசைகிட்டையும் ராம கதையை சொல்றார். அவ ஆனாலும் “நீ என் வாய்க்குள்ள போகணும்”, அப்டீன்னு சொன்ன உடனே, ஹனுமார் பாக்கறார். என்னடா இது, அப்டீன்னுட்டு, பெரிய உருவம் எடுத்து, “நான் இவ்வளோ பெரிய உருவமா இருக்கேன், எப்படி உன்னோட வாய்க்குள்ள போவேன்”னு கேட்கறார். அப்போ அவ இன்னும் பெருசா உருவம் எடுக்கறா, இவரும் பெருசா உருவம் எடுக்கறார். அப்படி ஆகாசத்துக்கும் கடலுக்கும் நடுவுல வாயை ஓன்னு அவ திறந்துண்டு இருக்கும்போது, ஹனுமார் ஒரு கட்டைவிரல் அளவுக்கு ஆகி, அவ வாய்க்குள்ள போயிட்டு வெளியில வந்துடறார். “அம்மா, உன் வாய்க்குள்ள போகணும்னு சொன்ன, போயிட்டு வந்துட்டேன், நீ வழிவிடு” அப்டீன்னு சொல்றார். அப்டீன்ன, உடனே, அவளும், “சரிப்பா, நீ சொன்ன வார்த்தையை பண்ணிட்ட. இனிமே நான் உன்னை தடுக்க மாட்டேன்”

அர்த்தசித்யை ஹரிஸ்ரேஷ்ட கச்ச சௌம்ய யதாஸுகம் |
ஸமானயஸ்வ வைதேஹீம் ராகவேன மஹாத்மனா ||

அர்த்தசித்யை ஹரிஸ்ரேஷ்ட – உன் கார்யம் வெற்றி அடையும் பொருட்டு, கச்ச சௌம்ய யதாஸுகம் – நீ நல்லபடியாக போயிட்டு வா. ஹரிஸ்ரேஷ்ட – வானரர்களில் ஸ்ரேஷ்டமானவனே, சௌம்யமானவனே, கச்ச யதாஸுகம் – உன்னிஷ்டபடி போ, ஸமானயஸ்வ வைதேஹீம் ராகவேன மஹாத்மனா – ராமரையும் சீதாதேவியையும் சேர்த்துவை அப்டீன்னு சொல்றா. இந்த ஸ்லோகத்தை, தம்பதிகள் மனஸ்தாபமா இருந்தாலோ, பிரிஞ்சு இருந்தாலோ, இந்த ஸ்லோகத்தை சொல்லி, ஸுந்தரகாண்ட ஆவர்த்தியின் போது, ஸ்வாமிகள்,

அர்த்தசித்யை ஹரிஸ்ரேஷ்ட கச்ச சௌம்ய யதாஸுகம் |
ஸமானயஸ்வ வைதேஹீம் ராகவேன மஹாத்மனா ||

அப்டீன்னு சொல்லி ஸ்வாமிகள் வேண்டிப்பார். அவா சேர்ந்துடுவா. அப்டீன்னு ஒரு மஹா மந்த்ரமாக இந்த ஸ்லோகம் எவ்வளோவோ பேரை சேர்த்து வெச்சிருக்கு. நான் பாத்துருக்கேன். இந்த மாதிரி தம்பதிகளுக்குள்ள ஒற்றுமைக்காகவும், பிரிந்த தம்பதிகள் சேருவதற்காக, ஹனுமாரைத் தானே நாம வேண்டிக்க முடியும். அவர்தான், ராமரையும் சீதையையும் பிரிஞ்சு இருந்தவாளை சேர்த்து வெச்சார், அதுனால அந்த ஹனுமாரிடம் பிரார்த்தனை பண்ணிண்டு ஸ்வாமிகள், ஸுந்தரகாண்டத்தை படிக்கும்போது, இந்த ஸ்லோகத்தை சொல்லுவார்.

இந்த ஸ்லோகத்தை படிக்கும் போது, சீதாதேவி, முதலில் எவ்ளோ சந்தோஷமா இருந்தா என்பதையும் நினைக்கணும் என்று தோன்றுகிறது. ஸீதா கல்யாணத்தும் போது, ஜனக மகாராஜா, சீதையோட கைகளை எடுத்து, ராமரோட கைகள்ல வெச்சு,

इयं सीता मम सुता सहधर्मचरी तव।प्रतीच्छ चैनां भद्रं ते पाणिं गृह्णीष्व पाणिना।।
पतिव्रता महाभागा छायेवानुगता सदा। इत्युक्त्वा प्राक्षिपद्राजा मन्त्रपूतं जलं तदा।।

இயம் ஸீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ |
ப்ரதீச்ச சைனாம் பத்ரம்தே பாணிம் க்ருஷ்ணீஷ்வ பாணிநா ||
பதிவ்ரதா மஹாபாகா சாயேவானு கதா ஸதா|
இத்யுக்த்வா ப்ராக்ஷிபத் ராஜா மந்த்ரபூதம் ஜலம் ததா ||

அப்டீன்னு “இந்த சீதை, என் மகள், பதிவ்ரதை, இவள் நிழல் போல உன்னை எங்கும் பின் தொடர்வாள், இவள் ரொம்ப பாக்யவதி, இவளை ஏற்றுக் கொள்” அப்டீன்னு, சொல்றார். அப்படி சொல்லிட்டு, கையில ஜலத்தை விட்டு, தாரை வார்த்துக் கொடுக்கறார். மந்திர பூதமான அந்த ஜலத்தை விட்டு சீதையை கன்னிகா தானம் பண்ணிக் கொடுக்கறார் ஜனகர். இந்த ஸ்லோகங்களே ஒரு மந்த்ரம்.

அப்புறம் ஊர்மிளையை, லக்ஷ்மணனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கறார், மாண்டவியை பரதனுக்கும், சத்ருக்னனுக்கு, ஸ்ருதகீர்த்தியையும் கன்யாதானம் பண்ணி கொடுக்கறார். நாலு பேருக்கும் ஒரே முஹூர்த்ததுல, உத்திர நக்ஷத்ரத்துல. கல்யாணம் பண்ணி கொடுக்கறார். அப்புறம் பன்னிரெண்டு வருஷங்கள் சீதை ராமரோட, அயோத்தில சௌக்யமா இருக்கா, அப்டீன்னு, அந்த இடத்துல சில ஸ்லோகங்கள் இருக்கு, அதெல்லாம் அவ்ளோ அழகா இருக்கு.

रामस्तु सीतया सार्धं विजहार बहूनृतून् । ராமஸ்து சீதையா ஸார்த்தம் விஜஹார பஹூன் ருதூன் – பல ருதுக்கள், ராமர் சீதையோடு, பன்னிரண்டு வருஷங்கள், ஒவ்வொரு வருஷத்துக்கும் ஆறு ஆறு ருதுக்கள், ராமர்  சீதையோட சந்தோஷமா இருந்தார். ஒவ்வொரு ருதுவுலேயும் சீதையோடு சந்தோஷமா இருந்தான்னா, அந்தந்த ருதுவுல, வெயில் காலம்னா இளநீர், குளிர் காலம்னா, ஒரு சூடான கஞ்சி அந்த மாதிரி, அந்தந்த ருதுக்களோட போகங்கள் என்னவோ, அதெல்லாம், அனுபவிச்சுண்டு ரொம்ப சந்தோஷமா இருந்தா.

मनस्स्वी तद्गतस्तस्याः नित्यं हृदि समर्पित:।। மனஸ்வீ தத்கதமனா: நித்யம் ஹ்ருதி ஸமர்பித: – சீதை தன்னோட மனசை முழுக்க ராமருக்கு ஸமர்ப்பணம் பண்ணிட்டா प्रिया तु सीता रामस्य दारा: पितृकृता इति। ப்ரியா து ராமஸ்ய தாரா பித்ருகிருதா இதி – இந்த சீதை ராமனுக்கு, தன்னுடைய அப்பா பார்த்து வெச்ச பெண் என்பதனால் ரொம்ப பிரியமானவளாக இருந்தாள், அப்டீன்னு, சொல்றார். அந்த மாதிரி arranged marriage உடைய, சந்தோஷம் அது, அதை  அனுபவிச்சவாளுக்கு, தெரியும்.

गुणाद्रूपगुणाच्चापि प्रीतिर्भूयोऽभ्यवर्धत।। குணாத் ரூபகுணாச்சாபி ப்ரீத்திர் பூயோப்யவர்த்தத: – சீதையோட குணத்துனாலயும், அவளோட அன்புக்கு கட்டுப்பட்டு அதுல சந்தோஷம் அடைந்தார். அவளுடைய அழகுனாலயும் அவள்கிட்ட பிரியமா இருந்தார். இந்த ரெண்டுனாலேயும் प्रीतिर्भूयोऽभ्यवर्धत ப்ரீத்திர் பூயோப்யவர்த்தத: –  ராமருடைய ப்ரீத்தி சீதைகிட்ட மேலும் மேலும் வளர்ந்துண்டே போச்சு तस्याश्च भर्ता द्विगुणं हृदये परिवर्तते। தஸ்யாஸ்ச பார்த்தா த்விகுணம் ஹ்ருதயே பரிவர்த்ததே – சீதைக்கு அதுபோல ரெண்டு மடங்கு அன்பு, ராமர் மேல நிரம்பி இருந்தாள். अन्तर्जातमपि व्यक्तमाख्याति हृदयं हृदा அந்தர்ஜாதமபி வ்யக்தம் ஆக்யாதி ஹ்ருதயம் ஹ்ருதா – இவா ரெண்டு பேரும் பேசிக்கவே இல்லையாம். மனசும் மனசும், பேசிக் கொண்டது, அப்டீன்னு சொல்றார்.

அந்த மாதிரி, எங்க அப்பா அம்மா ஐம்பது வருஷம், ரொம்ப அன்யோன்ய தம்பதிகள். எத்தனையோ ஜென்மங்கள் அவா கணவன் மனைவியா இருந்திருப்பா. எங்க அப்பா அம்மா அதிகம் பேசியே நான் பார்த்தது கிடையாது. கார்த்தால எழுந்துண்டார்னா, எங்க அப்பா ரெண்டு மணிநேரம் சிவபூஜை பண்ணிட்டு, சாப்டுட்டு office கிளம்பி போவார். சாயங்காலம் வந்தா திருப்புகழ், பஜனை, இப்படி போகும். அவா எப்ப தான் பேசிப்பான்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கும். ஆனா அவா கிட்ட டிமிக்கியே கொடுக்க முடியாது. அப்பாகிட்ட ஒண்ணு சொல்லிட்டு, அம்மாகிட்ட ஒண்ணு சொல்ல முடியாது. ரெண்டு பேரும் ஒரே மாதிரி, எண்ணமா இருப்பா. அந்த மாதிரி மனசும், மனசும் பேசிக்கறதுங்கிறது, இந்த காலத்துலேயே நாம பார்த்துருக்கோம்னா, ராமரும் சீதையும் கேட்கணுமா. देवताभि स्समा रूपे सीता श्रीरिव रूपिणी தேவதாபி: ஸமா ரூபே ஸீதா ஸ்ரீரிவ ரூபிணி –  சீதா தேவி லக்ஷ்மி தேவி போல விளங்கினாள்.

तया स राजर्षिसुतोऽभिरामया समेयिवानुत्तमराजकन्यया ।

अतीव राम श्शुशुभेऽतिकामया विभु श्श्रिया विष्णुरिवामरेश्वर:।।

தயா ஸ ராஜர்ஷி ஸூதோபிராமயா சமேயிவாநுத்தமராஜ கன்யயா |

அதீவ ராம: ஷுஷுபேதிகாமயா விபு: ஸ்ரீயா விஷ்ணுரிவாமரேச்வர ||

அந்த ராஜரிஷியின் பெண்ணான, அழகான சீதை,  உத்தமமான ராஜ கன்னிகை, ராமரோடு சேர்ந்து, சுகங்களை அனுபவித்துக் கொண்டு, லக்ஷ்மி தேவி விஷ்ணுவோடு இருப்பது போல, சௌக்யமாக இருந்தாள், அப்டீன்னு இந்த ஒரு ஸ்லோகம்.

இப்படி இவா ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தது பாலகாண்டத்துல வரது.

கல்யாண நாள், கல்யாணம்கிறது, பெண்களுக்கு, அதை பத்தி நினைக்கறதே ஒரு சந்தோஷம், அப்டீங்கிற மாதிரி, இந்த அனுசுயா தேவி, அத்ரி முனிவருடைய மனைவி, அவளை போயி ராமரும், சீதையும், லக்ஷ்மணனுமா, அத்ரி அனுசுயா தேவியை நமஸ்காரம் பண்றா. அப்போ அனுசுயா தேவி சீதைகிட்ட “நீ இந்த மாதிரி பேச்சு துணைக்கு ஆளில்லாத காட்டுக்கு, கணவன் தான் முக்யம்னு வந்துருக்க”, அப்டீன்னு சொல்றா. அந்த மாதிரி பெண்கள், எது இல்லாமலும் இருந்துடுவா, ஆனா பேச்சு துணை இல்லேன்னா ரொம்ப கஷ்டப் படுவா. ஆனா, அது கூட வேண்டாம் அப்டீன்னு, சுகங்களை விடறது எல்லாம் கூட ஆச்சர்யம் இல்ல. friends எல்லாம் விட்டுட்டு வந்து இந்த காட்டுல, ராமரோட, கணவரோட இருக்கணும்னு வந்தியே, அது தாம்மா தர்மம்” அப்டீன்னு அந்த அனுசுயா தேவி கொண்டாடறா. “நல்லவனோ, கெட்டவனோ, ஏழையோ, பணக்காரனோ, கணவன்தான் ஒரு பெண்ணுக்கு தெய்வம். அவனுக்கு சிஸ்ருஷை பண்றதுதான் ஒரு பெண்ணுக்கு, எல்லாத்துக்கும் மேலான கடமை” அப்படீன்னு சொல்றா.

அதுக்கு சீதை சொல்றா. “ஆமாம் அம்மா, அக்னி முன்னாடி எங்கம்மாவும் இதை சொல்லி கொடுத்தா, கல்யாண காலத்துல. காட்டுக்கு கிளம்பும் போது, என்னுடைய மாமியாரும் அதை சொன்னா, இப்ப நீங்களும் இதை சொல்றேள். எனக்கு இன்னொரு தடவை அதை  ஞாபகப் படுத்தற, மாதிரி,  புதுப்பிச்ச மாதிரி ஆயிடுத்து”. எல்லாரும் இதையே சொல்றேளே அப்டீன்னு சொல்லலை, இப்படி கௌரவப் படுத்தி சொல்றா. குழந்தை எவ்வளவு அழகா பேசறாளே, அப்டீன்னு, அந்த அனுசுயை சந்தோஷப் படறா. இன்னொன்னு சொல்றா, சீதை, “ரொம்ப, கணவன் தூர்த்தனா ,பொல்லாதவனா இருந்தாக் கூட அவன்கிட்ட அன்பா இருக்கணும்னு, சொல்வா. என் கணவன் ‘மாத்ரு வத் பித்ரு வத் ப்ரிய:’ என்னுடைய அம்மா போலயும், அப்பா போலயும் என்கிட்ட இந்த ராமர், அவ்வளவு அன்பா இருக்கார். அவர் குணமே வடிவானவர், எல்லா நற்குணங்களும் பொருந்தியவர், அதனால அவரை விட்டுட்டு நான் எப்படி இருப்பேன், அதனால நான் அவர் கூட வந்துட்டேன்” அப்டீன்னு சொல்றா.

அப்போ அனுசுயை ரொம்ப சந்தோஷப் பட்டு, “உனக்கு, என்ன வேணுமோ கேளு, எனக்கு தபஸ் இருக்கு, என் சந்தோஷத்துக்காக நீ எதையாவது கேளு, நான் தரேன்”, அப்டீன்னா, எனக்கு எல்லாமே இருக்கே, அப்டீன்னு சொல்றா சீதை. அதாவது, “எனக்கு ஒண்ணும் கஷ்டமே இல்லை”, அப்டீன்ன உடனே, இன்னும் சந்தோஷம் அனுசுயைக்கு. அப்போ வாடாத மாலைகள், காயாத சந்தனம், கருகாத நகைகள் எல்லாத்தையும் தபஸ் மூலமாக வர வெச்சு, பூச்சுகள் எல்லாம் போட்டு, சீதையை அலங்காரம் பண்ணி ராமரோட சேர்த்து பாக்கறா.

அப்புறம் சீதா தேவிகிட்ட அனுசுயா தேவி, “சுயம்வரம் மூலமா ராமர் உன்னை அடைஞ்சார்னு கேள்வி பட்டிருக்கேன், அந்த கதையை சொல்லேன்”, அப்டீன்னு கேட்கறா, சீதை, ரொம்ப சந்தோஷமா சொல்ல ஆரம்பிக்கறா. “நான், ஜனக மஹாராஜா கலப்பையை உழும்போது, பூமியில இருந்து, நான் கிடைச்சேன். அவர், ஆஹா, இவ என்னோட குழந்தை, என் பெண் குழந்தை, நான் வளர்க்கப் போறேன்” அப்டீன்னு சொன்ன உடனே, ஆகாசத்துல அசரீரீ கேட்டது, “ஆமா, இவள் உன்னுடைய பெண்தான், இவளை வளர்த்துண்டு வா” அப்டீன்னு சொன்ன உடனே,  ரொம்ப சந்தோஷமா எடுத்து உச்சி முகர்ந்து, அவர் எடுத்துண்டு வந்து, தன்னுடைய மனைவி கிட்ட கொடுத்தார், அவாளும் என்னை, தன்னுடைய அம்மா போல வளர்த்தா.

அப்புறம் தக்க வயசு வந்த உடனே, நல்ல மாப்பிள்ளையா வரணுமேன்னு ஜனக மகா ராஜா கவலைப் பட்டார். அவர்கிட்ட, ஒரு சிவ தனுசு இருந்தது, “யாரு இதை வளைச்சு நாண் பூட்டராளோ அவாளுக்கு நான் என் பெண் சீதையை கொடுப்பேன்” அப்டீன்னு சொன்னார். “இந்த சிவ தனுசை வளைச்சு நான் ஏற்றது அப்டீங்கிறது, யாரும் கனவுல கூட நினைச்சு பாக்க முடியாது, அப்படீன்னு சொல்றா. சீதை பேசும்போது, எப்பவும் ரொம்ப ருசிகரமா இருக்கும், இந்த பேச்சு. ரொம்ப enthusiastic ஆ ரொம்ப bubling ஆ இருக்கும் அவ பேசறது. அப்புறம் சில பேர் வந்தா, வந்து அதை முயற்சி பண்ணிண்டு, வில்லுக்கு நமஸ்காரம் பண்ணிட்டு ஓடியேப போயிட்டா. ரொம்ப நாள் கழிச்சு ராமர் வந்தார்” அப்டீங்கறா சீதா தேவி.  வைகுண்டத்துல இருந்து வந்து காத்துண்டு இருக்கா சீதா தேவி, அதனால ராமர் வரதுக்கு இவ்வளவு வருஷம் கூட பொறுக்க முடியல, அவளுக்கு. கல்யாணத்தும் போது சீதைக்கு ஆறு வயசு, ராமருக்கு, பன்னிரண்டு வயசுன்னு கணக்கு.

சீதாதேவி சொல்றா “விஸ்வாமித்ரர் ராம லக்ஷ்மணாளை அழைச்சுண்டு வந்தார். ராமர், அனாயசமா அந்த வில்லை எடுத்து வளைச்சு, நாண் பூட்டினார். அப்போ அந்த வில்லை அவர் வளைச்ச போது,  அந்த வில் ஓடிஞ்சே விழுந்துடுத்து. எல்லாரும் ஆச்சர்யபட்டா. என்னுடைய அப்பா ஜலப் பாத்திரத்தை எடுத்துண்டு, என்னை, கன்னிகாதானம் பண்ணி கொடுக்க கிளம்பினார். ராமர், இந்த வில்லை வளைக்க சொல்லி விஸ்வாமித்ரர் சொன்னார், நான் பண்ணேன், கல்யாணம் பண்ணிக்கணும்னா எங்கப்பாவை கேட்கணும், அப்டீன்னு சொன்னார். அதே மாதிரி ஜனக மஹா ராஜா, என் மாமனாரான தசரதரை வரவழைத்து, அவர் கிட்ட உத்தரவு வாங்கிண்டு, என்னை ராமருக்கு, கன்னிகாதானம் பண்ணி கொடுத்தார், அப்டீன்னு சொல்றா. இதுல நிறைய, அழகு இருக்கு. இந்த ராமர், சரி பொண்ணு கொடுக்கறா, அப்டீன்னு வாங்கிக்கல. எங்கப்பா பேச்சை கேட்டுதான் நான் பண்ணுவேன் அப்டீன்னு சொல்றார். சீதை சொல்லும் போது, எங்கப்பா வில்லை வளைச்சு நாண் ஏற்றவனுக்குதான் என் பெண்ணை கொடுப்பேன்னு சொல்லிட்டார், என் மாமனாரான தசரதர் அப்டீன்னு சொல்றா அவ. அவளை பொறுத்த வரைக்கும், ராமன் தன் கணவன்னு அன்னிக்கே அவ மனசுல ஏத்துண்டுட்டா அவ. அப்புறம் அமோகமா அந்த கல்யாணம் நடக்கறது. அந்த காட்சிகளை எல்லாம் நினைச்சுண்டு, இங்க சீதைக்கு அலங்காரம் எல்லாம் பண்ணி, ராமரோட சேர்த்துப் பார்த்து, அந்த அத்ரி அனுசுயா அந்த திவ்ய தம்பதிகளை தரிசனம் பண்ணி, ரொம்ப பரம ஆனந்தப் படறா. இந்த சீதை சந்தோஷமா இருந்த நாளெல்லாம் நாம நினைக்கணும்.

பின்னால, காட்டுக்கு வந்த போது, ராமர் சீதையை கூட்டிண்டு, வனத்துல சஞ்சாரம் பண்றார். இந்த சித்ரகூட மலையோட அழகையும் அந்த மந்தாகினி, நதியோட அழகையும் காமிச்சு, ஒரு ஐம்பது, நூறு ஸ்லோகம். இவ்வளவு பொறுமையா, ஒரு nature ஐ வர்ணிக்க றது, அவர் மனைவி அதை, ரசிச்சுக் கேட்கறது, அப்டீங்கிறதே, இதுவும் ராமாயணத்தில், ராமர் சீதை மட்டும் தான் பண்ணுவா நினைக்கறேன். அவ்வளவு அழகா இருக்கும் அந்த ஸ்லோகங்கள். ராமர் சொல்றார், “நீ என் பக்கத்துல  இருக்கும் போது, இந்த வனவாசம் எனக்கு அவ்வளவு ஆனந்தமா இருக்கு. எனக்கு தேவலோகத்து ராஜ்யத்தை கொடுத்தாலும் நான் ஆசைப் பட மாட்டேன். இந்த காட்டுக்கு வந்ததுல இந்த சந்தோஷத்தை எல்லாம் நான் அனுபவிக்கறேன். எனக்கு கூட நீயும் இருக்க, லக்ஷ்மணனும் இருக்கான். இன்னொரு லாபமும் ஆச்சு. எனக்குப் பிரியமான பரதனுக்கு, அந்த ராஜ்யத்தை எங்கப்பா கொடுத்தார்” அப்படீனெல்லாம் அழகா பேசிண்டு இருக்கார்.

“அங்க பாரு,  இந்த மந்தாகினி நதி தீரத்துல ரிஷிகள் எல்லாம், சந்தியாவந்தனம் பண்ணிண்டு இருக்கா. நாமளும் போயி ஸ்நானம் பண்ணுவோம், சந்தியாவந்தனம் பண்ணுவோம்” அப்டீன்னு சொல்றார். அதாவது, சந்தியாவந்தனம் பண்றவாளை, பகவானே, லக்ஷ்மி தேவியே நீ கண்ணெடுத்து பாரு அப்படீன்னு சொல்வாராம். அப்படி சந்தியாவந்தனம் பண்றவாளுக்கு, பகவதனுக்ரஹத்தில் லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும், சந்தியாவந்தனம் ஒழுங்கா பண்ணினா, அப்டீன்னு ஸ்வாமிகள் சொல்வார். “அப்புறம் இந்த மந்தாகினியையே நீ சரயு வா நினைச்சுக்கோ, இங்க இருக்கிற மிருகங்களையே நாம அயோத்தி வாசிகளா, நினைச்சுப்போம், சித்ர கூட மலையையே அயோத்தின்னு நினைச்சுப்போம்.  இங்க சந்தோஷமா நூறு வருஷம் கூட நான் இங்க இருப்பேன், பதினாலு வருஷம்கிறது இதோ ஓடி போயிடும்” அப்டீன்னு, ராமர் சொல்றார். இப்படி ராமரும் சீதையும், நிறைய சல்லாபம் பண்ணி சந்தோஷப் பட்டுருக்கா. இதெல்லாம் நினைச்சாதான் இவா பிரிஞ்ச போது ஏன் துக்கப் படறா. அப்படீன்னுபுரியும்.

ராமாயணத்துல என்னன்னா, தசரதர் பிள்ளையை பிரிஞ்சு அழுதார்னா நமக்கு, பிள்ளையை பிரிஞ்சு துக்கப் படற கஷ்டம் வராது. சீதா தேவி ராமரை பிரிஞ்சு வருத்தப் பட்டு அழுதா அப்டீங்கிறதை படிச்சா, கணவன் மனைவிக்குள்ள பிரிவே வராது, அப்டீன்னு ஸ்வாமிகள் சொல்வார். இந்த சோகமான கட்டத்தை ராமாயணத்துல  படிச்சா, நமக்கும் அந்த கஷ்டம் வரும்னு, சில பேர் அசட்டுத் தனமா சொல்லுவா. ராமாயணத்துல இருக்கிற எல்லாமே மந்திரம், எல்லாமே மங்களம். அதுல இருக்கிற எதை படிச்சாலுமே, நமக்கு க்ஷேமமே ஏற்படும் அப்படி, ஸ்வாமிகள் சொல்லுவார். அந்த மாதிரி பிரிஞ்சு இருக்கிற தம்பதிகளுக்காக ஒரு ஸ்லோகம்னு ஆரம்பிச்சேன், அந்த ராமரும் சீதையும் பிரிஞ்சு இருக்கா, ஹனுமார் அவாளை சேர்த்து வைக்கறார், அப்டீங்கிறதை படிச்சாலே நமக்கு, தம்பதிகளுக்குள்ள ஒத்துமை இருக்கும், சந்தோஷம் ஜாஸ்தி ஆகும். அப்டீன்னு ஸ்வாமிகள் சொல்வார்.

அர்த்தசித்யை ஹரிஸ்ரேஷ்ட கச்ச சௌம்ய யதாஸுகம் |
ஸமானயஸ்வ வைதேஹீம் ராகவேன மஹாத்மனா ||

அர்த்தசித்யை ஹரிஸ்ரேஷ்ட (16 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

2 replies on “சீதாதேவி ஸ்ரீராமரோடு மகிழ்ச்சியாக இருந்த பொழுதுகள்”

தொடர்ந்து 3 நாட்களாக பதிவுகள் வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு…தொடர்ந்து எழுத சக்தியையும் வசதியையும் பெரியவா தரணம்…தருவார்…

சீதா ராமரை நினைத்தாலே எந்தக் குறையும் வராதுங்கிறது 100% உண்மை! என் உறவினர் நித்யம் இராமாயண பாராயணம் செய்பவர் சொல்வார் , கோலம் போடும்போது ஸ்ரீராமஜெயம் மட்டும் போடாதே ஸ்ரீ சீதாராம.ஜயம் நு போடும்பார். .இன்றைக்கும் என்னாத்தில் அப்படித்தான் ! ஏன்னா ஒற்றுமைக்கு அவாதான் உதாரணம் !
என் அக்காவாத்தில் எல்லாரும் சுந்தர காண்டம் பாராயணம் தினம் செய்பவர்கள். ஆத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு, பெண் ஆனால் சீதாவின் நாமா ஆண் ஆனால் ராமர் நாமாதான் ! அப்படிப்பட்ட உதார ஜீவன்களா வாழ்ந்திருககிறார்கள் சீதா தேவியும், ஸ்ரீராம சந்திர மூர்த்தியும்!
கணவன் மனைவி என்றால் எப்படி வாழ வேண்டும் என்பதைக் காலை நேரத்தில் அழகாகச் சொன்னதற்கு நன்றி. ஸ்ரீசீதாராமாஜயம் !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.