Categories
Bala Kandam

ராமாயணத்தை ஏன் அடிக்கடி கேட்க வேண்டும்?

Swamigal reading Srimad Valmiki Ramayana

2. வால்மீகி ராமாயணத்தை ஏன் அடிக்கடி கேட்க வேண்டும்? காதுகள் என்கிற மடல்களில், வால்மீகி முனிவரின் முகம் என்கிற தாமரையில் இருந்து வெளிப்பட்ட ராமாயணம் என்னும் தேனை அடிக்கடி வாங்கி, விருப்பத்தோடு குடிப்பவர்கள், உபத்ரவம் மிகுந்த ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு சாஸ்வதமான விஷ்ணு பகவானின் பதத்தை அடைவார்கள்.

[வால்மீகி ராமாயணம் என்னும் தேன்] (Audio file. Transcript given below)

ய: கர்ணாஞ்ஜலி ஸம்புடைரஹரஹ: ஸம்யக் பிப3த்யாத3ராத்|

வால்மீகேர்வத3நாரவிந்த3 க3லிதம் ராமாயணாக்2யம் மது4||

ஜன்ம வ்யாதி4 ஜரா விபத்திநிதனைரத்யந்த ஸோபத்3ரவம்|

ஸம்ஸாரம் ஸ விஹாய க3ச்ச2தி புமான் விஷ்ணோ: பத3ம் சாஸ்வதம்||

எவனொருவன் தன் காது என்னும் மடலினால் , மீண்டும் மீண்டும் வாங்கிக் குடிக்கிறானோ…எதை வாங்கிக் குடிக்கிறான்? ராமாயணம் என்னும் தேனை! காதினால் ராமாயணம் என்னும் தேனை வாங்கி குடிக்கிறான்… இந்த தேன் எங்கே இருந்து வந்தது? வால்மீகி பகவானின் வாக், வாய் என்கிற தாமரையிலிருந்து வெளிப்பட்டது.

தேன் என்பது ஒரு மருந்தும் கூட. இந்த தேனை யார் விரும்பி குடிக்கிறார்களோ, அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? ஜென்மம், வியாதி, மிருத்யு என்று இருக்கிற குறைவான வாழ்நாளில், இந்த சம்சார வியாதியில் இருந்து அவன் விடுபட்டு சாஸ்வதமான விஷ்ணுவின் பதங்களை அடைவான்.

இந்த ராமாயணம் என்னும் தேன் என்று கூறுவது, இராமாயணத்தை படித்துக்கொண்டே இருப்பவருக்கு நன்றாக புரியும். ஸ்ரீ கோவிந்த தாமோதர சுவாமிகள் இந்த வால்மீகி ராமாயணத்தை ஆழ்ந்து அனுபவித்து பலவிதமான ரத்னங்கள் போன்றக் கருத்துகளை எடுத்துக் கொடுத்திடுக்கிறார். அதே சமயம், “அங்கே இருக்கிற வால்மீகி பகவானின் வாக்கை அப்படியே சொன்னால் போதும்” என்பார். அவருடைய ப்ரவச்சனத்தின் போது, ஆயிரக் கணக்கான வால்மீகி பகவானின் ஸ்லோகங்களை சொல்லி அதுக்கு அர்த்தமும் சொல்லுவார்.

அவருக்கு முன்னே, ஸ்ரீ மாயவரம் சிவராமகிருஷ்ண சாஸ்த்ரிகள் ராமாயணம் சொல்வார். அவர்களுக்கு  ‘ப்ரவசன மார்கதர்ஷி’ என்று மகாபெரியவா டைட்டில் கொடுத்தார்கள். அந்த மாயவரம் பெரியவா போன்றவர்கள் எப்படி ராமாயணம் சொன்னார்களோ, அந்த வழியில் ஸ்வாமிகள் ராமாயணம் சொன்னார். ஸ்வாமிகள் சொல்லுவார், “அப்படி இருக்கிற கதையை சொல்லணும். ரிஷிகளின் வாக்குக்கு மேலே நாம் சொல்லுவதற்கு கருத்தோ, தத்துவமோ ஒன்றும் இல்லை…”. ஸ்வாமிகள் சொல்வார், “கருத்து சொன்னால் கறுத்துப் போயிடும்!”, என்பார்.

அது மாதிரி, “இருக்கிற வால்மீகி ராமாயணத்தையே எடுத்து சொன்னால், அதுவே அப்படி ஒரு அமிர்தமா, தேனா இருக்கும்”, என்பது ஸ்வாமிகளிடம் ராமாயணம் கேட்பவர்கள்  நினைத்து நினைத்து பார்க்கும் ஓர் உண்மையாகும்.

நான் அவரிடம் நிறைய ராமாயணம் கேட்டிருக்கிறேன். அவர், “நீ உன் குழந்தைகளுக்கு இராமாயணம் சொல்லு…,” என்று சொன்னார். நானும் என் குழந்தைகளுக்கு தினமும் படுக்கும் போது, ஒரு அரைமணி நேரம் இராமாயணம் சொல்லுகிறேன்.  ஏழு-எட்டு தடவை ஆகியிருக்கும். ஒவ்வொருமுறையும் அதே கதைதான். ஆனால், இந்தக் குழந்தைகள் ஒவ்வொருமுறையும் இந்த இராமாயணக் கதை கேட்கவேண்டும் என்று தயாராகி ரொம்ப விருப்பத்துடன் கேட்பார்கள். நாம் எதோ ஒரு சிறு தகவலை மறந்துவிட்டால் கூட, குழந்தைகள் ஞாபமாக அதை சொல்லச் சொல்லிக் கேட்பார்கள்.

“ஸ்ரீ ராமருக்கு, தேவர்கள் எல்லாம் ‘நீ, சர்வஞன் சர்வ வியாபியான விஷ்ணு பகவான் தானே!’ என்று சொன்னார்கள். இந்திரன் கூட வரங்களை அளித்து மாண்டுபோன வானரர்களை உயிர்பித்தார்”, என்று சொன்னால், “அப்போ தசரதர் வருவாரே, அப்பா?”, என்று கூடவே சொல்லுவார்கள். இப்படி ஒவ்வொரு சின்ன தகவலையும் மனதிலே வாங்கிகொண்டு சந்தோஷப் படுகிறார்கள்.  அனுபவிக்கிறார்கள்.

‘சமுத்ர…இவ  ரத்னாட்யம்… சர்வ ஸ்ருதி மனோஹரம்…’  என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, நாஸ்திகனாயிருந்தாலும், இந்த வால்மீகி இராமாயண ஸ்லோகங்களைச் சொல்லி உள்ளபடி உள்ள பொருளை சொன்னால், கேட்பவர்களின் காது வழியே சென்று, அவர்களின் ஹ்ருதயத்திற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும்.

‘சமுத்ரமிவ  ரத்னாட்யம்…’

ராமாயணம் ஒரு சமுத்திரம் போல இரத்னங்கள் நிறைந்தது. அவரவர்கள் மூச்சைப் பிடித்துகொண்டு எவ்வளவு இரத்னங்களை எடுத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்.

வியாகரணப் பண்டிதர் என்றால், வ்யாகரண விஷயங்களை புரிந்துக் கொள்ளுவார். தர்க்கம் தெரிந்தவர் என்றால், தர்கத்திற்கான விஷயங்களை எடுத்துக் கொள்ளுவார். இந்த காலத்து விஞ்ஞானத்தில் (Science) விருப்பம் உள்ளவர் என்றால், அதில் உள்ள விஞ்ஞானம் விஷயங்களை எடுத்துக் கொள்ளுவார். இப்படி வால்மீகி இராமாயணம் என்பது ஓர் இரத்னங்கள் நிறைந்த பெரிய கடல். மேலாகப் பார்த்தல், கிளிஞ்சல்கள் தெரியலாம். ஆழ்ந்து பார்த்தோமானால், இரத்னங்கள் கிடைக்கும்.

இப்படி எனக்கு தெரிந்த வால்மீகி இராமாயண கதையை குழந்தைகளுக்கு எப்படி சொன்னேனோ, அதே விதத்தில் அதைக் கேட்பவர்கள், உலகில் எந்த மூலைமுடுக்கிலும் இருக்கும் குழந்தைகள் கேட்கவேண்டும் என்று ஆசை கொள்ளுவார்கள். அப்படி அந்த குழந்தைகள் கேட்டால், வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா தருமங்களையும், எல்லா க்ஷேமங்களையும் அடைவார்கள் என்பதாலும், அப்படி சொல்லுவது எனக்கு பிடித்தமான கார்யம் என்பதாலும் இதை சொல்ல முற்படுகிறேன்.

ஜானகீ காந்த ஸ்மரணம்… ஜய! ஜய! ராம ராம!

Series Navigation<< வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்வழிப்பறிக் கொள்ளைக்காரன் வால்மீகி முனிவராக ஆனதெப்படி? >>

2 replies on “ராமாயணத்தை ஏன் அடிக்கடி கேட்க வேண்டும்?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.