Categories
Bala Kandam

வால்மீகி ராமாயணம் பிறந்த கதை

5. வால்மீகி முனிவர் தமஸா நதியில் ஸ்நானத்திற்கு செல்கிறார். வழியில் வேடன்ஒருவன் அம்பால் ஒரு பக்ஷியை அடித்ததைப் பார்த்து சோகத்தால் அவர்சொன்ன வார்த்தைகள் அனுஷ்டுப் சந்தத்தில் ஒரு ஸ்லோகமாக வெளிப்படுகிறது. வியப்படைந்த முனிவருக்கு பிரம்மதேவர் தர்சனம் தந்து, நாரதர் சொன்ன ராம சரிதத்தை, அனுஷ்டுப் சந்தத்தில் ஸ்லோகங்களாகஇயற்றி விஸ்தாரமாக, ஒரு காவியமாக பாடும்படி அநுக்ரகம் செய்தார்.

மாநிஷாத பிரதிஷ்டாம் த்வம் (Audio file. Transcript given below)

வால்மீகி பகவான், நாரத மகரிஷி கூறிய இந்த இராமச்சரித்திரத்தை கேட்டு பரமானந்தம் அடைந்தார். நாரதரை வெகுவாக கொண்டாடினார். இந்த இராம சரித்திரத்தையும் போற்றினார். பின், நாரத பகவான் த்ரிலோக சஞ்சாரியாக பக்தியை பரப்புபவர் ஆதலால் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டார். அதிலிருந்து வால்மீகி பகவானின் மனதில் இந்த ஸ்ரீ ராமச்சரித்திரமே ஓடிக் கொண்டிருந்தது.

அதற்குபின், வால்மீகி முனிவர் தமஸா நதியில் ஸ்நானம் செய்வதற்காக சென்றார். அவருடன் பரத்வாஜர் என்ற ஒரு சிஷ்யரும் வல்கலம், மான்தோல் போன்றவற்றை ஏந்திகொண்டு சென்றார். தமஸா நதியைப் பார்த்த வால்மீகி முனிவர், “இந்த ஜலம் எவ்வளவு தெளிவாக இருக்கிறது பார். நல்ல மனிதர்களுடைய மனதைப் போல…” என்று கூறிக் கொண்ட சுற்றியுள்ள மரங்கள், பூக்கள், பக்ஷிகள் போன்ற இயற்கை அழகை ஸ்நானம் செய்வதற்கு முன் கண்டார்.

அப்போது, விளையாடிக் கொண்டிருக்கு ஒரு ஆண்-பெண் கிரௌஞ்ச பக்ஷி ஜோடியில், ஆண் பக்ஷியை ஒரு வேடன் தன அம்பால் அடித்து விடுகிறான். சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்த அந்த ஆண் பக்ஷி அடிபட்டு கீழே விழுந்துவிட்டதைப் பார்த்த பெண் பக்ஷி அலறித் துடித்தது. பரிதாபமாக கதறுகிறது. வால்மீகி முனிவருக்கு அதைப் பார்த்தவுடன் கருணையினால் மிகவும் சோகம் ஏற்படுகிறது. அவர் அந்த வேடனைப் பார்த்து, பின் வருமாறு கூறுகிறார்,

मा निषाद प्रतिष्ठाम्त्वं अगमः शाश्वतीः समाः |

यत् क्रौङ्च मिथुनात् एकमवधीः काम मोहितम् || १-२-१५

“மா நிஷாத! பிரதிஷ்டாம்ப்த மகம: சாஸ்வதீ: ஸமா: |

யத் கிரௌஞ்ச மிதுநாத் ஏகமவதீ: காம மோஹிதம் ||

“ஹே வேடனே! கிரௌஞ்ச பட்சிகள் சந்தோஷமாக இருக்கும் போது அதைப் போய் அடித்துவிட்டாயே? நீ வெகு காலம் இருக்கமாட்டாய்…”, என்று அந்த வேடனைப் பார்த்து சபிப்பது போல சில வார்த்தைகள் சொன்னார். அவை வால்மீகி வாக்கிலிருந்து வெளிப்பட்டுவிட்டது.

அப்படி வந்த அந்த வார்தைகள் அனுஷ்டுப் சந்தஸில் 32 அக்ஷரங்கள் கொண்ட ஒரு ஸ்லோகமாக அமைந்து விட்டது. வால்மீகி முனிவருக்கு ஒரே ஆச்சர்யமாக இருக்கிறது, “என்னடா! நம்ம வாக்கிலிருந்து ஒரு ஸ்லோகம் ஏற்பட்டதே? சோகத்தில் சொன்னோம் ஸ்லோகம் ஆகிவிட்டதே!”, என்று எண்ணி, உடன் வந்த சிஷ்யரிடம் கேட்கிறார்.

அவரும், “ஆம்! இது ஒரு ஆச்சர்யமான அழகான ஒரு ஸ்லோகமாக இருக்கிறது” என்று பதிலுரைத்தார். வால்மீகி முனிவரின் வாக்கிலிருந்து முதல் முதலாக வந்த அந்த ஸ்லோகத்திற்கு மகான்கள், “…’மா’ என்றால் லக்ஷ்மி தேவி. ‘மா நிஷாத’ என்றால் லக்ஷ்மி தேவியின் கணவர். அதாவது, மகாவிஷ்ணு. கிரௌஞ்ச என்றால், ராக்ஷசன் என்று ஒரு பொருள். ‘ராக்ஷஸ தம்பதிகளிலே, மண்டோதரி புலம்பும்படி  ராவணனை வதம் செய்து, உலகுக்கெல்லாம் நன்மை செய்த, ஹே ராமா!’…’சாஸ்வதி ஸமா: பிரதிஷ்டாம் த்வம்’, என்றால் ‘பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!’…என்று சொல்லும்படி இதில் ஒரு பொருள் இருக்கிறது…”, என்று சொல்லுவர்.

அப்பறம் வால்மீகி முனிவருடைய ஆசிரமத்திற்கு, பிரம்ம தேவர் வந்தார். பத்தாயிரம் வருஷம் கடுமையான தபஸ் செய்தவர்களுக்கு தான் அவர் தரிசனம் தருவார். இங்கே, வால்மீகி முனிவருக்கு அவர் கேட்காமலே தரிசனம் தர காரணம் என்ன? புற்று மண்ணுள்ளே, அவர் செய்த ராம நாம ஜபம் தான் காரணம்!

பிரம்ம தேவரைப் பார்த்தவுடனே, வால்மீகி முனிவர் பரபரப்புடன் அவரை நமஸ்காரம் செய்து, அர்க்யம், பாத்தியம், ஆசமனீயம் எல்லாம் கொடுத்து பூஜை செய்தார். பிரம்ம தேவர் மிகவும் சந்தோஷம் அடைந்து, வால்மீகி முனிவரை அருகே உட்காரச் சொன்னார். அவரருகே வால்மீகி முனிவர் பணிவுடன் அமர்ந்த போது, அந்த நேரத்திலும் வால்மீகி முனிவர் தன் வாக்கிலே வந்த ஸ்லோகத்தின் பற்றிய எண்ணம் அவர் மனதில் வந்தது. அப்போது பிரம்மதேவர், “யாமே ஸரஸ்வதி தேவியை உம் வாக்கிலே ஆவிர்பரித்திரிக்கிறோம். நாரதர் உம்மிடம் சொன்ன ராம சரித்திரத்தை நீர் விஸ்தாரமாக ஒரு காவ்யமாக எழுதுங்கள்…” என்று ஆசி கூறினார்.

மேலும், “உமக்கு ஸ்ரீ ராம சரித்திரத்தில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் உமது யோக சக்தியினால் உமக்கு தெரியும். அதில், ஸ்ரீ ராமருக்கும், சீதா தேவிக்கும் மறந்து போனவைகள் கூட உமக்கு தெரிய வரும்… ஒருவருக்கொருவர் தெரியாமல் நடந்த நிகழ்ச்சிகள் கூட, அவர்களுக்குள் ரகசியமாக பேசியது சிரித்தது, ஹனுமாரின் பிரபாவம், இப்படி எல்லா விஷயங்களும் உங்களுக்கு மனதில் தெரியும்… அதை அப்படியே எழுதவும். அதில், ஒரு பொய்யும் இருக்காது! ”, எனக் கூறினார்.

அந்த வால்மீகி முனிவரைப் பற்றியும், வால்மீகி ராமாயணத்தை பற்றியும் ஸ்ரீ பிரம்ம தேவர், “நீங்கள் எழுதும் அந்த காவியம், எது வரைக்கும் மலைகளும் நதிகளும் இந்த பூமியிலே இருக்கின்றதோ, அது வரைக்கும் அந்தக் காவியம் இருக்கும். எது வரைக்கும், அந்தக் காவியம் இருக்கின்றதோ, அது வரைக்கும் நீங்கள் பிரம்ம லோகம் பரியந்தம் எல்லா உலகத்திலும் சஞ்சாரம் செய்துக் கொண்டு சிரஞ்சீவியாக இருப்பீர்கள்!” என்றும் ஆசிக் கூறினார்.

அதைக் கேட்ட வால்மீகி முனிவர் மிகவும் புளகாங்கிதம் அடைந்தார். அந்த பிரம்ம தேவர் கூறியபடி நாரத மகரிஷியிடம் கேட்ட ஸ்ரீ ராம சரித்திரத்தை இருபத்தி நாலாயிரம் ஸ்லோகங்களில் ஒரு காவியமாக வடித்தார். ‘ஸீதாயா: சரிதம் மஹத்”- ஸீதா தேவியின் சரித்திரம், ஸ்ரீ ராமரின் கதை, இராவண வதம் என்று உள்ளது உள்ளபடி அனுஷ்டுப் சந்தஸில் இருபத்தி நாலாயிரம் ஸ்லோகங்களாக தன் மனதில் இயற்றிவிட்டார்.

தது3பக3த ஸமாஸ ஸன்தி4 யோக3ம் ஸம்மது4ரோபநதார்த2 வாக்ய ப3த்34ம்|

ரகு4வர சரிதம் முநிப்ரணீதம் த3ஸஸிரஸஶ்ச வத4ம் நிஸாமயத்4வம்||

அதில் அமைந்துள்ள ஸந்திகளையும், ஸமாஸங்களையும் பார்த்து அவரே சொல்லுகிறார், “இந்த ஆச்சர்யத்தை பாருங்கள்!” என்கிறார். “நிஷாமயத்வம்” என்றால் ‘பாருங்கள்’ என்று பொருள். அதாவது, வால்மீகி ராமாயணத்தை படித்தால், கேட்பது போல் அல்லாமல் நேரில் பார்ப்பது போல இருக்கும்.

இதை லவ குஷாளுக்கு சொல்லிக் கொடுத்தது, அதை அவர்கள், ஸ்ரீ ராமரின் முன்னிலையிலேயே, அஸ்வமேத மஹா மண்டபத்தில் கானம் செய்தது அடுத்தது பார்ப்போம்.

ஜானகீ காந்த ஸ்மரணம்… ஜெய்! ஜெய்! ராம ராமா!

 

Series Navigation<< ஸங்க்ஷேப ராமாயணம்வால்மீகி முனிவர் ராமாயணத்தை லவ குசர்களுக்கு கற்றுத் தந்தார் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.