Categories
Ramayana One Slokam ERC

ராமனைக் கண்டால் க்ஷேமம் உண்டாகும்


இன்னிக்கு வால்மீகி இராமயண ஸ்லோகம், அயோத்யா காண்டத்துல, 17வது சர்கத்தில

यश्च रामं न पश्येत्तु यं च रामो न पश्यति।। निन्दितस्सर्वसेल्लोके स्वात्माऽप्येनं विगर्हते।

யஸ்ச்ச ராமம் ந பஸ்யேத் து யம்ச ராமோ ந பஸ்யதி |

நிந்தித: ஸ வசேல்லோகே ஸ்வாத்மாபி ஏனம் விகர்ஹதே ||

“யஸ்ச்ச ராமம் ந பஸ்யேத் து” எவன் ராமனை பார்க்கவில்லையோ,
“ராமோ ந பஸ்யதி “ எவனை  ராமன் பார்க்கவில்லையோ,
“நிந்தித: ஸ வசேல்லோகே” அவனை ஜனங்களெல்லாம் நிந்தை பண்ணுவா,
“ஸ்வாத்மாபி ஏனம் விகர்ஹதே.” அவனுடைய மனசே அவனை நொந்து கொள்ளும்,

அப்படின்னு ஒரு ஸ்லோகம்.

இதை வந்து, பிரிச்சு, முதல் பாதத்தை மூணாவது பாதத்தோட, ரெண்டாவது பாதத்தை நாலாவது பாதத்தோட சேர்த்து பொருள் படுத்திக்கணும். எவன் ராமனை பார்க்கவில்லையோ, அவனை ஜனங்கள் நிந்திப்பார்கள், எவனை ராமன் பார்க்கவில்லையோ அவன் தன்னையே நொந்து கொள்வான்; அப்டின்னு அர்த்தம்.

இது எங்க வரதுன்னா, ராமர், தேர்ல ஏறி லக்ஷ்மணனோட கைகேயி அரணமனைக்கு போயிண்டுருக்கார், அந்த அழகை ஜனங்களெல்லாம் பார்த்து ரசிக்கறா. அவன் தெரு திரும்பிட்டா கூட, கண்லேர்ந்து அவனோட அழகு போகலை, அவனுடைய ரூபம் அவாளுக்கு அப்படி மனசுல பதிஞ்சிருக்கு, அப்போ, இந்த ஸ்லோகத்தை சொல்றா.

வால்மீகி முனிவருடைய ஒரு speciality என்னன்னா, அவர் contrast ரொம்ப அழகா present பண்ணுவார். ரொம்ப சோகமான ஒரு கட்டம் வரும், அடுத்து, ரொம்ப சந்தோஷமான ஒரு கட்டம் வரும். இராக்ஷஸர்கள் வருவதை ரொம்ப பிரமாதமாக வர்ணிப்பார், அடுத்தது அந்த இராக்ஷஸன் வந்து யுத்தம் பண்ணி மாண்டு போனான்னு வரும், அப்டி அந்த contrast குடுத்தாத்தான் ரொம்ப பரிமளிக்கும்.

அந்த மாதிரி, கைகேயி அரண்மனைல தசரதர் இருக்கார், அவருக்கு அது ரொம்ப ரொம்ப கஷ்டமான ஒரு ராத்திரி, ரொம்ப வருத்தத்தை ஏற்படுத்தின ஒரு ராத்திரி. அவர் சந்தோஷமா இந்த ராம பட்டாபிஷேகத்தை சொல்லலாம்னு கைகேயி அரண்மனைக்கு போறார், அங்கே போனா அவள் பலவந்தமா, எனக்கு குடுத்த ரெண்டு வரங்கள குடுக்கணும், ராமன் காட்டுக்கு போகணும், பரதன் ராஜாவாகனும்னு கேட்டு, அதை கேட்கிறாள். அதை கேட்டவுடனே, தசரதர் தவிச்சுபோயிடறார், “நான் எப்படி இந்த மாதிரி ஒரு காரியத்தை பண்ணுவேன்! ராமன் ஒரு தோஷம் இல்லாதவன், குணக்கடல், அவனை என்ன சொல்லி நான் காட்டுக்கு அனுப்புவேன், அப்படி தப்பில்லாத ஒருத்தனை காட்டுக்கு அனுப்பினா, ஜனங்களெல்லாம் என்னை நிந்தை பண்ணமாட்டாளா? ராமனை நான் காட்டுக்கு அனுப்பிச்சா, சத்யம் குடுத்ததுக்காக, அவர், தசரதர் காட்டுக்கு அனுப்பிச்சார்ன்னு ஜனங்கள் சொல்ல போறதில்லை. வயசான காலத்துல புத்தி மழுங்கிபோய், பொண்டாட்டி பேச்சை கேட்டுண்டு, ஏதோ கைகேயி பரதனுக்கு ராஜ்ஜியம் கேட்டாளாம், இவரும், பல்லை இளிச்சுண்டு, சரின்னு சொல்லி, ராமனை காட்டுக்கு அனுப்பி இருக்கார்ன்னு, அப்படின்னு ஜனங்களெல்லாம் என்னை கேலி பேசமாட்டாளா. ஒரு பிராமணன் குடிச்சுட்டு திரிஞ்சா எப்படி உலகம் அவனை பரிகசிக்குமோ, அது மாதிரி என்னை உலகம் நிந்தை பண்ண போறது, இந்த கடைசி காலத்துல எனக்கு இது தேவையா, நீ இப்படி பண்ணலாமா?” அப்படின்னு கெஞ்சறார்.

“உன் கால்ல விழுந்து கேக்கறேன், நான் உங்கிட்ட ராஜ்யத்தை குடுக்கறேன், நீ அதை ராமனுக்கு குடு, உனக்கு பெருமையா இருக்கும், இந்த மாதிரி என்ன நிர்பந்தப் படுத்தாதே, நான் இவ்ளோ நாள் உன்ன அன்பு பாராட்டி வெச்சிருந்தேனே, என் மேல தயவு பண்ணமாட்டியா, நான் வீட்ல பாம்பை வளர்க்கற மாதிரி இல்ல உன்னை நான் வளர்த்துட்டேன், இப்போ, அது விஷத்தை கக்கற மாதிரி நீ என் மேல விஷத்தை கக்கறியே, என் ராமனை பிரிஞ்சு ஒரு நிமிஷம் கூட நான் உயிரோடு இருக்க மாட்டேனே, நீ விதவையா இருந்துண்டு தான் இந்த ராஜ்யத்தை ஆள முடியும்.”

“மேலும் பரதன், ராமனை விட தர்மாத்மா, அவன் இதுக்கு ஒரு நாளைக்கும் ஒத்துக்க மாட்டான், உனக்கு இதெல்லாம் ஒண்ணுமே புரியலையா? இந்த குலத்துக்கே ஒரு கெட்ட பெயர வாங்கி வைக்கறியே”. அப்படின்னு பலது சொல்லி புலம்பறார். அவள் பிடிவாதமா இருக்காள், “என் பரதனுக்கு ராஜ்ஜியம் வேணும், நீங்க சொன்ன வார்த்தைய காப்பத்துங்கோ, சொன்ன வார்த்தயை காப்பத்தறதுக்காக அவாவா கண்ணையே குடுத்துருக்கா, உடம்பையே வெட்டி குடுத்துருக்கார் சிபி சக்கரவர்த்தி”, அப்டின்னு, “நீங்க இப்போ சொன்ன வார்த்தைய நீங்க காப்பதலேன்னா, நான் என் உயிரை விட்டுடுவேன்”, அப்டின்னு சொல்றாள்.

அவர் என்ன பண்ணுவார் பாவம், “என் ராமனை எனக்கு பார்க்கணும்” அப்படிங்கறார், பொழுது விடிஞ்சுடறது, சுமந்தரர் வந்து மங்களகரமான வார்த்தைகளை சொல்லி, தசரதரை எழுப்பறார், “இன்னிக்கு ஒரு பொன்னான நாள், ராமனுக்கு பட்டாபிஷேகம், எல்லாரும் காத்துண்டிருக்கா, எப்படி சூரிய பகவான் சமுத்திர ராஜனை எழுப்பறானோ, எப்படி வேதங்கள் பிரம்மாவை எழுப்பறதோ, எப்படி மாதலி இந்திரனை எழுப்பறானோ, அந்த மாதிரி உங்களை எழுப்ப வந்திருக்கேன்”, அப்டின்னு அவர் சந்தோஷத்துல அவர் பேசறார். அது தசரதருக்கு துக்கத்தை ஏற்படுத்தறது, கைகேயி ரொம்ப சாமர்த்தியமா, “தசரத மஹாராஜா, ரொம்ப களைச்சு போய்ட்டார், பட்டாபிஷேகத்தை பத்தி பேசி பேசி, நீ போய் ராமனை அழச்சிண்டு வா”, அப்டின்னு சொல்றாள்.

இவருக்கு அப்போ கூட ஒண்ணும் தப்பா படலை, அவர் சந்தோஷமா போய் ராமனை அழைக்கலாம்னு போனா, அங்கே ராமருடைய அரண்மனைல உற்சவமா இருக்கு. எல்லாரும் சீக்கிரம் எழுந்து ஸ்நானம் பண்ணிண்டு, நல்ல உடைகளை எல்லாம் உடுத்திண்டு, காத்திண்டுருக்கா, ராம பட்டாபிஷேகத்தை பாக்கணும்னு.

ராமரும் சீதையும் அலங்காரம் பண்ணிண்டு ராமர் சந்தனம் பூசிண்டு தங்க கட்டில்ல உட்காந்திருக்கா, சித்ரா நக்ஷத்ரத்தோட கூடிய சந்திரன போல ராமர் ஜொலிக்கிறார். அந்த சுமந்திரருக்கு, தேரோட்டின்னு ஒரு வேலை, மந்திரின்னு ஒரு வேலை, வந்தின்னு ஒரு வேலை, வந்தின்னா, நல்ல வார்த்தைகள் பேசறவர்னு அர்த்தம். அந்த, ராமரை ஸ்தோத்திரம் பண்ணனும்னு வந்தவர்,

வவந்தே வரதம் வந்தி விநயஞோ விநீதவத்…

அப்படின்னு நமஸ்காரமே பண்ணிடறார், ஒண்ணும் வார்த்தையே வரல, அவருக்கு அந்த அழகை பார்த்து. அப்புறம், கைகேயி அரண்மனைல தசரதர் இருக்கார், உங்களை அங்க வரச் சொன்னார், அப்படின்ன உடனே ராமர் சீதை கிட்ட, “நான், போயிட்டு வரேன், தசரத மஹராஜா, கைகேயி அம்மாவோட அரண்மனைக்கு போயிருப்பார், கைகேயி அம்மா, இந்த பட்டாபிஷேகத்தை பற்றி கேள்விப்பட்டு, ஆஹா அதை இப்படி விமரிசையா பண்ணனும், அப்படி விமரிசையா பண்ணனும், அப்படின்னு, பேசிண்டே இருந்திருப்பா, அதனால என்னை அங்க கூப்பிடறார், நான் போயிட்டுவரேன்”, அப்படின்னு கிளம்பறார்.

சீதா தேவியும், ரொம்ப சந்தோஷமா, “ஆமா, நீங்க ராஜாவானா, நீங்க ராஜசூய யாகம் பண்ணும்போது, நான் பக்கதுல நிற்பேன்”, அப்டிங்கறாள். “நீங்க ராஜாவாயிட்டேள்னா, நான் ராணி ஆகிடுவேன், நல்ல நகையெல்லாம் போட்டுப்பேன், தேர்ல ஏறிண்டு நாம ஊரெல்லாம் சுத்தலாம்”, அப்டின்னு சொல்லல, அவள் ஜனகர் மகள், ஜனக மாஹராஜா, கர்ம யோகி, ஞானி, அதுனால அந்த மாதிரி, “யாகம் பண்ணும்போது கூட நிற்பேன்”, அப்படின்னு சொல்றாள்.

அப்புறம், சீதை வாழ்த்துக்கள் சொல்லி, ஆரத்தி எடுத்து, ராமரை அனுப்பறாள். ராமர் வெளில வந்தா, லக்ஷமணன் காத்துண்டு இருக்கான், ரெண்டு பெரும் தேர்ல ஏறி, ராஜ வீதில வரும்போது, ஜனங்கள் இந்த மாதிரி சொல்றா,

ஒருத்தர் சொல்றார், “இந்த ராமன், இதற்கு முன்னாடி இருந்த ராஜாக்கள், இவ அப்பா தாத்தா நல்ல ராஜாவா இருப்பான்”, அப்டின்னுவுடனே, இன்னொருத்தர், “அதுவா, அதெல்லாம் விட ரொம்ப நல்ல ராஜாவா இருப்பார்”, அப்படிங்கறார்.

ஒருத்தர், “இவனை பட்டாபிஷேகம் பண்ணி பார்க்கணும், அதான் எனக்கு இன்னிக்கு. பசி கூட இல்ல, சாப்பாடே வேண்டாம் போல இருக்கு”, அப்படின்னு ஒருத்தர் சொல்றார், இன்னொருத்தர் “அவன் பட்டாபிஷேகம் பண்ணிண்டு, யானை மேல, வீதி உலா வரும்போது, அதை பார்க்கணும் எனக்கு”, அப்படிங்கறார். இப்படி சந்தோஷமா இருக்கா ஜனங்கள்.

அங்கே, பெண்களெலாம் “இந்த ராமனை பெற்ற, கௌசல்யா தேவி ரொம்ப குடுத்து வைச்சவ”ங்கறா, இன்னும் சில பேர், “இந்த ராமனை கை பிடிச்ச சீதா தேவி ரொம்ப பாக்கியசாலி” – அப்படிங்கறா, இப்படி ஸ்தோத்திரமெல்லாம் கேட்டுண்டு ராமர் வந்துண்டுருக்கார். அப்போ, இந்த ஸ்லோகம் வரது.

யஸ்ச்ச ராமம் ந பஸ்யேத் து யம்ச ராமோ ந பஸ்யதி |

நிந்தித: ஸ வசேல்லோகே ஸ்வாத்மாபி ஏனம் விகர்ஹதே ||

இந்த ஸ்லோகத்துக்கு, அப்படி அழகா ராமன் ராஜவீதில  பவனி வர, இந்த காட்சியை ஒருத்தன் பார்க்காம போயிட்டா ஜனங்களெல்லாம் அவனை நிந்திப்பாள, என்னடா உள்ள உட்கார்ந்திருந்தியா, ராமர் வந்தாரே, நீ பார்க்கலையான்னு சொல்வா. இன்னும் சில பேர், என்னை ராமர் பார்த்தார், என்னை ராமர் பார்த்தார்-ங்கறபோது, ஒருத்தன், என்ன ராமர் பார்கலையேன்னு நொந்துப்பான், அப்படின்னு இது ஒரு direct அர்த்தம்.

ஆனா ஸ்வாமிகள் சொல்வார், நாம கோவில்ல போய் ஸ்வாமி தர்சனம் பண்ணணும், ஒரு உற்சவத்ல வாசல்ல ஸ்வாமி வந்தா , ஓடிப்போய் தர்சனம் பண்ணனும், அப்படி இல்லாம, ஆத்துல டிவி பார்த்துண்டிருந்தா, அவனை சாதுக்களெல்லாம் நிந்தனை பண்ணுவா, என்னடா, ஸ்வாமி ஆத்து வாசல்ல வரார், நீ வந்து பாக்கமாட்டியா, அப்படின்னு நிந்தனை பண்ணுவாளாம், – அப்படின்னு இந்த முதல் பாதிக்கு அர்த்தம் சொல்வா,

இன்னொரு பாதிக்கு, ராமன் தன்னை பார்க்கலைன்னா நொந்துப்பா – அதுக்கு ஸ்வாமிகள் என்ன சொல்வார்ன்னா, சுந்தர காண்ட பாராயணம் நடக்கிறது, போலாமான்னு ஒருத்தன் கேட்பான், அந்த இன்னொருத்தன் friend சொல்வான், ஆமா அவருக்கு அது பொழப்பு, எனக்கு என் பொழப்பு இல்லையா, வேலைக்கு போகணும் – அப்படின்னு பதில் சொல்வான், அவன் போற வழில பைக்லேர்ந்து கீழே விழுந்து அடிபட்டுண்டு, கால்ல கட்டு போட்டுண்டு இருக்கும் போது, நான் ஏதோ எனக்கு வேலை இருக்குப்பா, நீ ரொம்ப குடுத்து வைச்சுருக்க, நீ போய் சுந்தரகாண்டம் கேளு அப்படின்னு சொல்லாம, அவர் பொழப்பு, என் பொழப்புன்னு வாயில வந்ததை பேசினேன், இப்போ இந்த மாதிரி அடிபட்டு கிடக்கிறேன், அன்னிக்கு நானும் போய், சுந்தரகாண்டம் கேட்டிருந்தேன்னா, ராமருடைய கடாக்ஷம் என் மேல பட்டிருந்தா எனக்கு இந்த ஆபத்தே வந்திருக்காது, அப்படின்னு தன்னையே நொந்துப்பான் – அப்படின்னு ஸ்வாமிகள் சொல்வார்.

அப்படி ஸ்வாமிகளுடைய ராம பக்தி. இது மாதிரி ராமரை பார்த்துண்டே இருக்கணும், அவருடைய கடாக்ஷம் நம்மேல விழும்படியா நடந்துக்கணும், ராமாயணம் படிக்கணும், ராமாயணம் கேக்கணும்.

யஸ்ச ராமம் ந பஸ்யேத் (13 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.