Categories
Ramayana One Slokam ERC

சபர்யா பூஜித: ஸம்யக்


இன்னிக்கி வால்மீகி ராமாயணத்துல, ஆரண்ய காண்டத்து முடிவுல, ராமர் சபரி அப்படிங்கற ஒரு தபஸ்வினியை பார்க்கறார், அந்த எழுபத்தி நாலாவது சர்க்கத்துல ஒரு ஸ்லோகம்,

तौ च दृष्ट्वा तदा सिद्धा समुत्थाय कृताञ्जलिः ।

रामस्य पादौ जग्राह लक्ष्मणस्य च धीमतः।।

தௌ ச திருஷ்ட்வா ததா ஸித்தா சமுத்தாய க்ருதாஞ்ஜலி: |

ராமஸ்ய பாதௌ ஜக்ராஹ லக்ஷ்மணஸ்ய ச தீமத: ||

அப்படின்னு , சபரி ராமலக்ஷ்மணாளை பார்த்த உடனே எழுந்து வந்து கைக்கூப்பி, அவர்களுடைய பாதங்களை பற்றினாள், அப்படின்னு வர்றது. இந்த எடத்துல “சித்தா’ அப்படின்னு ஒரு வார்த்தை வர்றது, அவள் சித்தபுருஷர்களை போல இருக்கா, அப்படின்னு சொல்றார் வால்மீகி. எப்படி அவ ஸித்தி அடைஞ்சா? ஒரு வேடுவ ஸ்த்ரீ,  எப்படி, வேதம் படிச்சு, கர்ம, பக்தி, ஞானமார்கத்துல போய், மஹான்கள் அடையக் கூடிய நிலைமையை எப்படி அடைஞ்சா! அப்படின்னு கேட்டுண்டு ஸ்வாமிகள் அவளுடைய பூர்வ வ்ருத்தாந்தத்தை சொல்வார்.

பக்தி தான் முக்யம், அப்டிங்கிறது, இந்த சபரியோட கதை நமக்கு காண்பிச்சு குடுக்கறது. அவள் ஒரு வேடுவ குலத்துல பிறந்தாலும், அவளுக்கு “ஜாயமான கடாக்ஷம்” அப்படின்னு, பிறந்த போதே பகவானோட கடாக்ஷம், சிலர் பேர் மேல விழறது. அவாளுக்குத் தான் இந்த சாது மார்கத்துல இருந்து பகவானை அடையனும், அப்டிங்கிற இந்த எண்ணமே வர்றது. அப்படி அந்த சபரிக்கு இருந்ததுனால, அவளுக்கு ஒரு அஞ்சு வயசு ஆகும் போது பாக்கறா, அந்த வேடுவ குலத்தல எல்லாரும் ரொம்ப ஹிம்சை பண்றா. வேடுவ ஸ்த்ரீகள்லாம் கல்யாணம் பண்ணிண்டா, நாலுபேர பெத்துக்கறா. அவாளும் வேடர்களா இருக்கா, மேலும் மேலும் பாப மூட்டையைத்தான் ஏத்திக்கறா, இதுல, இந்த மாதிரி நம்ம ஜென்மாவிலேயே இருந்துற கூடாது, நாம இதுலேருந்து, மீளணும், அப்படின்னு அவளுக்கு தோண்றது. உடனே, யார் கிட்டயும் சொல்லிக்காம அந்த கூட்டத்லேருந்து விலகிடறா. அப்படின்னு ஒரு வார்த்தை, “யார் கிட்டயும் சொல்லாம விலகறது” எங்கிறது முக்கியம், ஏன்னா, ஒரு சிறைல இருக்கும்போது ஒரு திருடனுக்கு தப்பறத்துக்கு வழி தெரிஞ்சுடுதுத்ன்னா, அவன்பாட்டு தப்பிச்சு போய்டுணும், இன்னொரு கைதி கிட்ட சொன்ன , அந்த இன்னொருத்தன், அவன் weak-minded ஆக இருப்பான், அவன் போய் jail warden கிட்ட சொல்லிடுவான். அந்த மாதிரி நமக்கு வழிதெரிஞ்ச, நம்ம தப்பிச்சு போயிடணும். அந்த மாதிரி அவ அங்கேர்ந்து வேடுவ கூட்டத்துலேர்ந்து கிளம்பறா.

அவளுடைய பூர்வ புண்யத்துனால மதங்க முனிவரோட ஆஸ்ரமத்து பக்கத்துல வந்து, அந்த முனிவரை தர்சனம் பண்றா. உடனே  அவளுக்கு இந்த முனிவருக்கு நாம் ஏதாவது கைங்கர்யம் பண்ணனும் அப்படிங்கற நல்லெண்ணம் வரது. என்ன பண்ணலாம் அப்படின்னு பாக்கறா. அவர் தினம், பம்பைங்கிற ஏரி பக்கத்துல இந்த மதங்க ஆஸ்ரமம் இருக்கு. அவர் தினமும் ஏரில போய் ஸ்னானம் பண்றாங்கிறத பாத்துட்டு, அவரும், அவரோட சிஷ்யர்களும் போற வழில இருக்கிற , சுள்ளியெல்லாம்  பொறுக்கி, கொஞ்சம் தென்னம்குச்சி எடுத்து ஒரு தொடப்பம் பண்ணி, பெருக்கி, அவா நடக்கும் போது, கால்ல முள்ளெல்லாம் குத்தாம. சமையலுக்கு விறகு கொண்டு வந்து போடறா. அந்த மாதிரி சாஸ்த்ர சம்மதமான கைங்கர்யங்கள் பண்றா. அப்போ முனிவர் “யார் இந்த மாதிரி தினம் பண்றா?” அப்படின்ன உடனே, “ஒரு சின்ன குழந்தை வந்துருக்கா, அவ இந்த மாதிரி பண்றா” ன்ன உடனே, “சரி, நீங்கள் எல்லாம் சாப்பிட்ட உடனே அவளுக்கும் சாப்பாடு போடுங்கோ”,  அப்படின்னு சொல்றார், அப்படி அவ அந்த இடத்துல இருந்துண்டு இருக்கா,  தினம் முனிவரை தள்ளி நின்னு தர்சனம் பண்றது, அந்த கைங்கர்யங்கள்  பண்றது, அப்படின்னு இருந்துண்டு இருக்கா. அவளுக்கு, அந்த மாஹானுடைய  கடாக்ஷம் கிடைச்சதுனால, தனியான  ஒரு த்ருப்தியோட இந்த சேவைகள்  பண்ணிண்டு இருக்கா.

இந்த சபரிய பத்தி, முதல் சர்க்கத்துலயே , பால காண்டத்தோட முதல் சர்க்கத்துலயே, சங்க்ஷேப ராமாயணத்துலேயே, ரெண்டு மூணு வாட்டி, சபரி ராமரை சென்று தர்சனம் செய்தார், சபரியால் நன்கு பூஜிக்கப்பட்டார், சபரியிடம் விடைபெற்று கொண்டு, ரிஷ்யமுகமலைக்கு சென்றார், அப்படின்னு வரது. அந்த, இருக்கறதே நூறு ஸ்லோகம். அதுல, முழு ராமாயணத்தை சொல்லும்போது, யுத்தகாண்டத்தையே ரெண்டு ஸ்லோகத்துல சொல்றார், ஆனா சபரியைப் பத்தி இவ்ளோ பேசறா, அப்படி, “சபர்யா பூஜித: ஸம்யக்” சபரியால் மிக நன்றாக புஜிக்கப்பட்ட ராமர், அப்படியென்ன அவா நன்னா பண்ணிணா? மத்த ரிஷிகளெல்லாம், ராஜாக்களெல்லாம் பண்ணிணதை விட சபரி என்ன பண்ணான்னா, அவ வந்து ராமருடைய அடியவர்களுக்கு பூஜை பண்ணா, மதங்கருக்கும், மதங்க சிஷ்யர்களுக்கும் கைங்கர்யம் பண்ணா, அப்படி, அடியவர்களுக்கு, அடியவளா இருந்து அவ பண்ணதுதான்,  “சபர்யா பூஜித: ஸம்யக்” அது தான் உயர்ந்த பூஜை அப்படின்னு வால்மீகி முனிவர் குறிப்பிடறார். அப்படி அந்த, குஹன் போன்ற படகோட்டியும், ஜடாயு போன்ற பக்ஷிகளும், ஜாம்பவான் போன்ற கரடிகளும், ஹனுமார் சுக்ரீவன் போன்ற வானரர்களும், சபரி போன்ற வேடுவ ஸ்த்ரீயும், யாராயிருந்தாலும் பக்தி தான் முக்கியம் அப்படின்னு ராமாயணம் காண்பிக்கறது,

அப்படி அவ, மதங்க முனிவருக்கும், சிஷ்யர்களுக்கும் கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கா, எல்லா கூட்டத்திலேயும் யாராவது ஒரு அசத்து இருப்பாளே, அந்தமாதிரி “இந்த வயசான காலத்துல முனிவருக்கு என்னாச்சோ தெரியல, இந்த மாதிரி யாரோ ஒரு பொண்ணு பக்கத்துல இருக்கா”, அப்படின்னு யாரோ ஒரு வார்த்தை சொல்றா, அப்படி சொல்லிண்டே ஸ்னானம் பண்ண போறா, அப்படி பேசினவன் பம்பைங்கிற ஸரஸ்ல எறங்கின உடனே, அது நாத்தம் அடிச்சு சாக்கடையா போய்டுறது, கூவமாட்டம்  ஆயிட்றது. எல்லாரும் பயந்து போய் முனிவர் கிட்ட சொல்றா, முனிவர் “நான் சொன்னேன்னு சபரியை போய் அதுல ஸ்னானம் பண்ண சொல்லு” அப்படிங்கிறார், அந்த சபரி “அப்படியே” ன்னு சொல்லி வந்து, அந்த பம்பைல எறங்குறா, எறங்கின உடனே அந்த ஏரி திரும்பவும்  முன்ன போல, தெளிவான ஸுத்த ஸ்படிக ஜலமாட்டம் தூய்மையாக ஆகிடறது. அப்படி அவளோட பெருமைய எல்லாரும் புரிஞ்சிக்கிறா.

அப்பறம் மதங்கமுனிவரோட காலம் முடியும்போது, அவர் சபரிய கூப்பிட்டு,”நீ இங்க இருந்துண்டுஇரு, இன்னும் கொஞ்ச காலம் கழிச்சு ராமலக்ஷ்மணா னு ரெண்டு பேர் வருவா, அவாளை தர்சனம் பண்ணிட்டு, உபசாரம் பண்ணி, பூஜை பண்ணிட்டு, அப்பறம் நீயும் மேலுலகத்துக்கு வரலாம்” அப்படின்னு மதங்கமுனிவர் சொல்றார், இந்த வார்த்தையை திடமாக மனசுல வாங்கிகிறா. அப்படி அவளுக்கு ராம நாம உபதேசம் அவளுக்கு கிடைக்கறது. ராம நாமத்தையே சொல்லிண்டு இருக்கா, மதங்கர் வைகுண்டத்துக்கு போய்டுறார். மதங்க சிஷ்யர்கள் கிட்ட, “ராமர் எப்படி இருப்பார்,  லக்ஷ்மணர்  எப்படி இருப்பார்” னு கேட்டுண்டு, அந்த ராமலக்ஷ்மண ரூபத்தையே த்யானம் பண்ணிண்டு இருக்கா, ராம நாமத்தையே இடையறாது ஜபிச்சிண்டு இருக்கா. தினமும், அவா வந்தா அவாளுக்கு கொடுக்கணும் அப்படின்னு  பழங்கள்லாம் எடுத்து வெச்சுக்கறா, இந்த சபரி கடிச்சு பாத்து, நன்னா இருக்கறத ராமருக்கு வெச்சாங்றது வால்மீகி ராமாயணத்துல இல்ல, அவ ரொம்ப, ஆச்சார, அனுஷ்டானத்தோட, ரொம்ப பாவனமான ரம்யமான அவளுடைய குடில் அப்படின்னு தான் இருக்கு. அந்த மாதிரி ராமலக்ஷ்மணாளை நெனைச்சிண்டே இருக்கா. எப்பாவது நாம தூங்கும் போது ராமலக்ஷ்மணா வந்துட்டு போய்ட்டா என்ன பண்றது, அப்படின்னு தூக்கத்தை விட்டா. அப்பறம் நம்ம சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது வந்துட்டு போய்ட்டா என்ன பண்றதுன்னு சாப்பாட்டையும் விட்டா. இப்படி சாப்பாடு, தூக்கத்தை விட்டு, ராம நாமத்தை சொல்லிண்டு, ராம ரூபத்தையே த்யானம் பண்ணிண்டு இருந்ததுனால, அவ ஜீவன் முக்தையா ஆயிட்டா.

அப்பேற்பட்ட அந்த சபரியை, ராமலக்ஷ்மணா தர்சணம் பண்றா, அந்த சபரி அவாளுக்கு பூஜை பண்றா, அந்த சபரி என்ன கொடுத்தார், ராமர் அதை சாப்பிட்டாரா அப்படிங்கிறது “நைவேத்தியத்தின் போது வால்மீகி திரை போட்டுட்டார்” அப்படின்னு வேடிக்கையாக சொல்லுவா. வால்மீகி ராமாயணத்துல, பழங்களை கொடுத்தாள் ங்கறது வரைக்கும்தான் இருக்கு, அவர் அதை சாப்பிட்டாரா ங்கறது, அந்த line அங்க இல்ளை. அதுக்கு அப்படி விளையாட்டா சொல்வா, வால்மீகி முனிவர்  “நைவேத்தியத்தின் போது வால்மீகி திரை போட்டுட்டார்”.

அந்த சபரிகிட்ட ராமர் கேக்கறார் “நீ பண்ண தபஸுக்குக்கு பலன் கடச்சுதா, உன்னுடைய காமம், கோபமெல்லாம், அடங்கிடுத்தா, நீ உன்னுடைய குருவுக்கு பண்ணிண சிஷ்ருஷைக்கு உனக்கு பலன் கிடைச்சுதா, திருப்தியா இருக்கியா?” அப்படின்னு கேக்கறார், அந்த சபரி சொல்றா “அவாளுக்கு பண்ணினதுக்கு அபார பலன் கிடைச்சுது. இன்னிக்கி உங்களுடைய தர்சனம்  கிடைச்சுதுனால, நான் புனிதம் அடைந்தேன். பூரணமா திருப்தி ஆயிட்டேன்” அப்படின்னு சொல்றா.

அதுக்கப்பறம், ராமர் “இங்க மதங்க  சிஷ்யர்கள் இருந்தா. அவாளோட மஹிமையை  பத்தி தனுங்கிற கந்தர்வன் சொன்னான், அதெல்லாம் எங்களுக்கு கொஞ்சம் காண்பி”, அப்படின்னு கேட்கறார், அதாவது “குரும் ப்ரகாஷயேத் தீமான்” அப்படின்னு ஒரு புத்திமானாக இருக்கிறவன், தன்னுடைய குருவினுடைய பெருமையை ப்ரகாசப் படுத்தணும், அப்படின்னு சாஸ்த்ரம், அப்படி அந்த சபரிக்கு அவளுடைய  குரு, இந்த மதங்கர் மதங்க சிஷ்யர்கள் தானே, அவாளுடைய பெருமையை அவ மூலமாவே உலகத்துக்கு தெரியப் படுத்தணும், அப்படின்னு ராமர் கேட்கறார்.

அப்போ சபரி  “ஆமா வாங்கோ. காண்பிக்கறேன்” என்று சொல்லி “அந்த மதங்க சிஷ்யர்கள் தினமும் ஏழு சமுத்திரத்தில் போய் ஸ்நானம் பண்ணிட்டு வருவா. வயசான காலத்தில் அந்த ஏழு சமுத்ரத்தையும் ஏழு கிணறுகளாக பக்கத்துலேயே வர வெச்சுண்டுட்டா. ஒண்ணுல பால் இருக்கு, ஒண்ணுல நெய் இருக்கு, ஒண்ணு கரும்பு சாறு, ஒண்ணு சுத்த ஜலம் அப்படி ஏழு கிணறுகள். அதுல ஸ்நானம் பண்ணிட்டு அவா பூஜை பண்ணின போது பகவானுக்கு போட்ட புஷ்பங்கள் இன்னும் வாடாமல் இருக்கு. அவா ஹோமம் பண்ணின அக்னி இன்னும் அணையாமல் இருக்கு” அப்படின்னு அந்த தனுங்கற கந்தர்வன் சொன்னதை எல்லாம் சபரி நேரே காண்பிக்கறா.

அதுக்கப்பறம் ராமர் கிட்ட “ஹே ராமா! எனக்கு இந்த உடம்பில் ரொம்ப தளர்ந்து போய் விட்டேன். நீ பார்க்க நான் என் குருநாதர் இருக்கற லோகத்துக்கு போகிறேன்.” என்றவுடன் ராமர் “சரி”ன்னு சொல்றார். அப்பறம் அவ ஒரு நெருப்பை மூட்டி அதுல தன் உடம்பைக் குடுத்துவிட்டு ஒரு திவ்ய தேஹம் எடுத்துக் கொண்டு சபரி ஆகாசத்துல போறா. இந்த ஆரண்ய காண்டத்தின் முதலில் சரபங்க முனிவர் ராமர் கிட்ட தன்னுடைய புண்யத்தை எல்லாம் அர்ப்பணம் பண்ணிட்டு ராமர் கிட்ட உத்தரவு வாங்கிண்டு, உடம்பை நெருப்புல குடுத்துட்டு திவ்ய தேஹம் எடுத்துண்டு பிரம்ம லோகம் போனார்னு வரது. அவர் வேதம் படிச்சவர். முனிவர். அதே போன்ற ஒரு பாக்கியத்தை, அதே ராம தர்சனத்தோடு இந்தஉடம்பை விட்டுட்டு திவ்ய தேஹத்தோட தன்னுடைய குருமார்களான மதங்க முனிவரும் மதங்க சிஷ்யர்களும் எங்கு போனார்களோ அந்த ஸ்வர்கத்தை, இங்க ஸ்வர்கம் என்பதற்கு “ஸ்வ: கீயதே இதி ஸ்வர்க:” ஸ்வர்லோகத்தில் எந்த இடத்தை புகழ்ந்து பாடுகிறார்களோ அந்த வைகுண்டம் அப்படின்னு அர்த்தம் பண்ணுவா. அப்படி சபரி வைகுண்டத்துக்கு போனாள். மோக்ஷம் அடைந்தாள்.

இந்த சபரி வ்ருத்தாந்தத்தை நினைக்கும் போது நாமும் அடியார்க்கடியனாக இருக்க வேண்டும் என்று தெரிஞ்சுக்கணும். அப்படி இருந்தால் அதில் பகவான் விரைவில் திருப்தி அடைந்து நமக்கு மோக்ஷம் குடுப்பார்.

சபர்யா பூஜித: ஸம்யக் (11 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

One reply on “சபர்யா பூஜித: ஸம்யக்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.