பதகமலஸேவாம்ருதரஸம் அஹம் கதா லப்ஸ்யே?

இன்னிக்கி வால்மீகி ராமாயண ஸ்லோகம், கிஷ்கிந்தா காண்டத்துல ஆறாவது ஸர்க்கத்துல, ராமர் லக்ஷ்மணன் கிட்ட சீதா தேவியோட நகைகளை காண்பிச்சு, “ஹே லக்ஷ்மணா! பாத்தியா, இந்த நகைகள் இருக்கு, என் சீதையை காணுமே” அப்படின்னு சொல்லும்போது, லக்ஷ்மணன் ஒரு ஸ்லோகம் சொல்றான்,

नाहं जानामि केयूरे नाहं जानामि कुण्डले ।

नूपुरे त्वभिजानामि नित्यं पादाभिवन्दनात् ।।

நாஹம் ஜானாமி கேயூரே, நாஹம் ஜானாமி குண்டலே |

நுபுரே து அபிஜானாமி நித்யம் பாதாபிவந்தனாத் ||

அப்படின்னு சொல்றான. இந்த தோள்கள்ல போட்டுக்குற நகைக்கு கேயூரம் னு பேர், குண்டலங்றது காதுல போட்டுக்கறது, இந்த ஸ்லோகத்தோட அர்த்தம் என்னன்னா, “நாஹம் ஜானாமி கேயூரே”, இந்த தோள்கள்ல போட்டுக்கற கேயூரங்கள், தோள்வளைகள் எனக்கு அடையாளம் தெரியல, இந்த காதுல போட்டுக்கற குண்டலங்களும் எனக்கு தெரியல, கால்ல போட்டுண்டு இருக்கற நூபுரம், நூபுரம்னா, சதங்கை அல்லது கொலுசு, அது எனக்கு அடையாளம் தெரியறது, “நித்யம் பாதாபி வந்தனாத்”, தினமும் நமஸ்காரம் பண்ணும்போது பாத்திருக்கேன்,  இந்த கால்ல போட்டுண்டு இருந்த பாதஸரம் தான் எனக்கு அடையாளம் தெரியறது என்கிறார்.

இது context என்னன்னா, சீதாதேவிய ராவணன் தூக்கிண்டு போகும்போது, இந்த ரிஷ்யமூக மலைமேல, அஞ்சு வானராளை அவ பாக்காறா. சுக்ரீவன், ஹனுமார், நளன், நீலன், தாரன். அவாளை பார்த்த உடனே, சில நகைகள கழட்டி,  தான் மேல போட்டுண்டிருந்த துணில சுருட்டி, “ராமர பார்த்தா காட்டுங்கோ” ன்னு சொல்லி தூக்கி இவா கிட்ட போடறா, இதை ராவணன் கவனிக்கல.

ஒரு pick-pocket  வந்து எதையாவது எடுத்துண்டு அந்த sceneலேருந்து தப்பிச்சு  ஓடும் போது, purse-மேல கவனம் வைக்கமாட்டான், தப்பிச்சு ஓடறதுலதான் கவனமா இருப்பான், அந்தமாதிரி, அவன் சீதாதேவியை கவனிக்கல, இந்த spotல இருந்து ராமலக்ஷ்மணா வரதுக்குள்ள ஓடிப் போகணும் எங்கிறதலதான் அவன் இருக்கான். அந்த நகைகள் தெய்வாதீனமா எதோ புல் மேல விழறது, ஒண்ணும் நசுங்காம  இருக்கு, சுக்ரீவன் அதை எடுத்து வெச்சுக்கறான்.

பின்னாடி, ராமருக்கும் சுக்ரீவனுக்கு ஹனுமார் சக்யம் பண்ணி வைக்கறார். அப்போ, பேசிண்டு இருக்கும் போது சுக்ரீவன் சொல்றான், “ஒரு பெண்ணை ஆகாசத்துல, ஒரு ராக்ஷசன், தூக்கிண்டு போயிண்டு இருந்தான், அப்போ அவ ராம ராமன்னு கத்திண்டு போனா, அவ சில நகைகளை தூக்கி போட்டா” அப்படின்னு சொன்னஉடனே, ராமர் “ஆஹா, அது சீதாவாகத் தான் இருக்கணும். எனக்கு அந்த நகைகளை உடனடியா கொண்டு வந்து காண்பி” அப்படின்னு சொல்றார். அந்த நகைகளை கொண்டு வந்து காண்பிச்ச போது ராமர் புலம்பி அழறார்.

In fact, சுக்ரீவன், “இவ்வளவு துக்கப் படாதேங்கோ, உங்கள் உயிரே போயிடப் போறது, நீங்க படற துக்கத்தை பாத்தா, ரொம்பவே எனக்கு தாங்கலை. கொஞ்சம் சமாதானம் படுத்திக்கோங்கோ, நான் கூட மனைவியை இழந்து இருக்கேன், நான் ஒரு அளவுக்கு சமாதானப் படித்திண்டு இல்லையா? ரெண்டு பேருக்கு ஒரே துக்கம் இருந்தா, அதனால ஒரு friendship வரது. இவா ரெண்டு பேருக்கும், அந்த மனைவியை இழந்த துக்கம். “கொஞ்சம் பொறுத்துக்கோங்கோ, நான் எப்படியாவது சீதாதேவியை தேடித் தருகிறேன்” அப்படின்னு சொல்றான் சுக்ரீவன், அது ராமருக்கு ஆறுதலா இருக்கு.

அப்போ லக்ஷ்மணன் கிட்ட “இந்த நகைகள பாக்கறேன் என் சீதைய காணமே, இது அவ போட்டுக்கற கேயூரம், இது அவ போட்டுக்கற குண்டலம்” அப்படியெல்லாம் சொல்லும்போது, லக்ஷ்மணன் சொல்றார் “”நாஹம் ஜானாமி கேயூரே, நாஹம் ஜானாமி குண்டலே ,  நுபுரே து  அபிஜானாமி நித்யம் பாதாபிவந்தனாத்”

இந்த ஸ்லோகத்துக்கு, சாதாரணமாக அர்த்தம் எடுத்துக்கறதா இருந்தா, ஒரு fiction மாதிரி ராமாயணத்தை படிச்சா, லக்ஷ்மணன் சீதாதேவி போட்டுண்ட நகைகளை கவனிக்கலை. மனைவி போட்டுண்டிருக்கற நகைகளையே ஓரளவு தான் ஆம்பளைகள் கவனிப்பா, பெண்களுக்கு நகைகளில் இருக்கிற interest ஆம்பளைகளுக்கு இல்ல, அதனால “நன்னாயிருக்கா சரி” ன்னு அவ்வளவு தான். என்ன நகை என்ன design அதெல்லாம் உற்று பார்த்து, அடையாளம் சொல்ற அளவுக்கு தெரியாது. அப்படி இருக்கறச்சே லக்ஷ்மணனுக்கு சீதாதேவி மன்னி, அவ போட்டுண்ட நகை அடையாளம் தெரியலைனு சொல்றார், அப்படின்னு, ராமாயணத்தை கதை மாதிரி படிச்சா, இப்படி அர்த்தம் பண்ணிக்கலாம்.

இல்லை, ராமாயணத்திலேர்ந்து, நமக்கு நல்ல புத்தி வரணும், ஒழுக்கம் வரணும், அப்படின்னு நினைச்சு படிச்சோம்னா, “ஆஹா, எவ்வளோ உத்தமன் இந்த லக்ஷ்மணன்! ராமரையும் சீதாதேவியையும் அவன் நித்யம் நமஸ்காரம் பண்றான். அதனால பாதத்துல இருந்த நூபுரத்தைதான் அடையாளம் தெரியரது. மன்னியை கூட ஏறெடுத்து பார்க்காத குணம்”, அப்படின்னு அவன் ஒழுக்கத்தை போற்றி, நம்பளும் இப்படி இந்தமாதிரி, பிறர் மனைவிய ஏறெடுத்து பார்க்கக்கூடாது, அப்படிங்கிறது தெரிஞ்சிக்கலாம்.

ஆனா, ராமாயணத்தை ரொம்ப பக்தியோட படிச்சா, யாரு சீதாதேவியையும் ராமபிரானையும் நித்யம் நமஸ்காரம் பன்றாளோ, அவாளுக்கு லக்ஷ்மணன் மாதிரி காமமே அத்து போய்டும் அப்படின்னு புரிஞ்சுக்கலாம்.

அன்னிக்கு காட்டுக்கு கிளம்பும்போது சுமித்ரா தேவி சொன்னா, “ராமம் தசரதம் வித்தி”, ராமரை தசரதராக நினைத்துக் கொள்,  “மாம்  வித்தி ஜனகாத்மஜாம்”, ஜனகர் மகளான சீதாதேவியை நான்னு நினைச்சிக்கோ, அம்மான்னு  நினைச்சிக்கோ, “அயோத்யாம் அடவீம் வித்தி” காட்டை அயோத்தியாக நினைச்சுக்கோ, “கச்ச தாத யதாஸுகம்” நீ இஷ்டப் படுவது போல் ராமரோட போ, அப்டிங்கறா, போய்ட்டுவா ன்னு சொல்லலை அவ அம்மா. பகவான் கிட்ட போகும் போது எங்க திரும்ப வர்றது? அதனால, நீ உன்னிஷ்டப்படி ராமனோட போ என்கிறாள். “ராமனுக்காக நீ உயிரையும் கொடுக்கணும்” அப்படின்னு சொல்றா சுமித்திரை. அதே மாதிரி லக்ஷ்மணன் யுத்தத்துல உயிரையே குடுக்கறான். ஏதோ ஹனுமார் திரும்பவும் லக்ஷ்மணை உயிர்ப்பிச்சார். அப்படி அவன் அம்மா சொன்ன வார்த்தைய கேட்டு, எல்லாத்தையும்  துறந்து, தன்னுடைய சுக போகங்களையும்சு, மனைவியும் துறந்து, காட்டுக்கு வறான். அவனுக்கு ராம கைங்கர்யம் கிடைக்கிறது.

அப்படி ராமரையும் சீதையும் நித்யம் நமஸ்காரம் பண்றதுனால, லக்ஷ்மணனுக்கு காமத்தோட ஞாபகமே இல்லாம போயிடறது. நமஸ்காரம் பண்ணும்போது, பாதத்தில் இருந்த அந்த நூபுரங்கள் மட்டும் தான் எனக்கு அடையாளம் தெரியறது என்கிற அளவுக்கு, ஒரு தூய்மையான ஒரு மனசு அவனுக்கு வந்துடறது.

கதை கேட்கிறோம், நம்மால் எதையுமே விட முடியவில்லை அப்படின்னு தோன்றுகிறது. ஆனால் மகான்கள் நம் மனக்கவலைகள் போகறதுக்கு பதகமல சேவாம்ருத ரஸம் தான் என்ற மருந்துன்னு சொல்றா.

कदा दूरीकर्तुं कटुदुरितकाकोलजनितं महान्तं सन्तापं मदनपरिपन्थिप्रियतमे ।

क्षणात्ते कामाक्षि त्रिभुवनपरीतापहरणे पटीयांसं लप्स्ये पदकमलसेवामृतरसम् ॥

கதா தூரீகர்த்தும் கடுதுரித காகோல ஜனிதம்

மஹாந்தம் சந்தாபம் மதனபரிபந்திப்ரியதமே |

க்ஷணாத்தே காமாக்ஷி த்ரிபுவனபரீதாப ஹரணே

படீயாம்ஸம் லப்ஸ்யே பதகமலசேவாம்ருதரஸம் ||

அப்படின்னு மூக கவி சொல்றார். கடுதுரித காகோல ஜனிதம் – கடுமையான பாபங்கள் என்ற விஷத்தினால் ஏற்பட்ட, மஹாந்தம் சந்தாபம் – ஓயாத மனக்கவலை, இதை கதா தூரீகர்த்தும் – இதை நான் அப்படி போக்கிப்பேன்? மதனபரிபந்திப்ரியதமே – மதனனை எரித்தவருடைய மனைவியே, ஆனா இதுக்கு ஒரு மருந்து இருக்கு. த்ரிபுவனபரீதாப ஹரணே – மூவுலகத்தின் பரிதாபத்தையும் போக்க கூடிய படீயாம்ஸம் – திறமை வாய்ந்தது. அது எதுன்னா, அம்மா காமாக்ஷி, பதகமலசேவாம்ருதரஸம் – உன்னுடைய பாதகமலங்களுக்கு சேவை செய்வது என்ற அம்ருதம், இந்த மனக்கவலை என்ற விஷத்துக்கு முறிவு, அது எனக்கு எப்போது கிடைக்கும்? அப்படின்னு கேட்கறார்.

மாணிக்கவாசகரும்

புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகிப்

பல்விருகம், ஆகி, பறவையாய்ப் பாம்பாகி,

கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்,

வல்அசுரர் ஆகி, முனிவராய்த் தேவராய்,

செல்லா அநின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்!

மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்!

என்று பாடுகிறார். எந்த பிறவியாய் இருந்தாலும் எப்போது பகவானின் பாதங்களை பார்க்கிறோமோ அப்போது தான் மோக்ஷம். மோக்ஷம் னா ஆசைகளிலேர்ந்து விடுபடறது தான்.

அப்படி நாமும் லக்ஷ்மணன் மாதிரி நித்யம் சீதாராமரின் சரணகமலங்களில் நமஸ்காரம் பண்ணி, அவரை மாதிரி ராம கைங்கர்யமும் தூய்மையான மனுசும் நமக்கும் கிடைக்கணும்னு வேண்டிப்போம்.

பதகமலஸேவாம்ருதரஸம் அஹம் கதா லப்ஸ்யே (11 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

Share

Comments (1)

 • Sowmya Subramanian

  எத்தனை தடவை படித்தாலும் கேட்டாலும் அலுக்கவே அலுக்காது ! கேட்டுட்டே இருக்கலாம். அருமையான விளக்கம் 👌🙏🌸

  இந்த ஒரு வரியிலேயே வால்மீகி லட்சுமணனுடைய உயர்ந்த பக்தியை நமக்கெல்லாம் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறார்! அவன் செய்த ராம கைங்கர்யமும், ராமருக்கும் சீதைக்கும் பண்ணும் நமஸ்காரமும் காமங்களைப் போக்கி தூய்மையைக் கொடுக்கிறது!🙏🌸

  பாகவதத்தின் முடிவிலே, ஹரியுடைய நாம ஸங்கீர்த்தனம் ஸகல பாபத்தையும் நசிக்கிறது என்று சொல்லி, “ப்ரணாமோ து:க சமந: தம் நமாமி ஹரிம் பரம்” – ‘அவனுக்கு நமஸ்காரம் பண்ணுவது ஸகல துக்கத்தையும் போக்குகிறது. ஆகையினால் பரவஸ்துவான அந்த ஹரியை நமஸ்காரம் பண்ணுகிறேன்.’ என்று சொல்லியிருக்கிறது.🙏🌸

  காமாக்ஷியின் பாத சேவை, பாபங்களினால் உண்டாகும் மனக்கவலைக்கு முறிவு என்ற மூகபஞ்சசதி மேற்கோள் மிக அருமை 👌🙏🌸

  மாணிக்கவாசகரின் ‘புல்லாகிப் பூண்டாகி’ மேற்கோளும் அருமை! பகவத்பாதாள், சிவானந்தலஹரியில் ‘நரத்வம் தேவத்வம்’ என்ற ஸ்லோகம் ஞாபகம் வருகிறது. “பரமேசுவரனின் பாதாரவிந்தத்தை ஸ்மரித்து, அந்த ஆனந்த வெள்ளத்தில் முழுகியிருப்பதற்குத் தடையில்லை எனில், நான் எந்தப் பிறவியும் எடுக்கத் தயார்.” என்கிறார் 🙏🌸

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.