விஸ்வமித்ரர் தசரதரிடம் ராமனை தன்னோடு அனுப்ப வேண்டுதல்


14. விஸ்வாமித்ரர் தசரதரிடம் தன் யாகத்தை காக்கும் பொருட்டு ராமனை தன்னோடு அனுப்பும்படி கேட்க, தசரதர் மனம் கலங்குகிறார். ராமனைத் தர மறுக்கிறார்.வசிஷ்டர் விஸ்வாமித்ரரின் மகிமையை எடுத்துச் சொன்ன பின் ராம லக்ஷ்மணர்களை முனிவரோடு அனுப்புகிறார்.

[தசரதர் சபையில் விஸ்வாமித்ரர் . Link to audi file. Transcript given below]

தசரத மஹாராஜா, விஸ்வாமித்ர மஹரிஷியை வரவேற்று பூஜை செய்து, தங்களுக்கு கைங்கரியம் செய்ய காத்திருக்கிறேன் என்று கூறியவுடன், விஸ்வாமித்ர மஹரிஷி மகிழ்ந்து புளங்காகிதமடைந்து தான் வந்த நோக்கத்தை கூறுகிறார்.

“ஹே ராஜன், நான் சித்தாஸ்ரமம் என்கிற இடத்தில், ஒரு யாகத்தை பூர்த்தி செய்து சித்தி அடையவேண்டும் என்று முயற்சித்து கொண்டிருக்கிறேன், ஆனால் மாரிசன், சுபாகு என்று இரண்டு இராக்ஷஸர்கள்  அதற்கு தடையாக மாமிசாதிகளை யாகத்தில் இட்டு,அதனை தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நீ உன்னுடைய ஜேஷ்ட புத்திரனான இராமனை என்னுடன் அனுப்பு. நான் இராமனுக்கு எல்லா அஸ்திரங்களையும் சொல்லிக்குடுத்து , அவன் மூலமாக இந்த யாகத்தை காப்பாற்றிக்கொள்வேன்.  நீ, இராமன் உன்னுடைய குழந்தை ஆயிற்றே என்று புத்திர ஸ்னேகத்தினை நினைக்காமல் என்னுடன் அனுப்பு. நான் அவனுக்கு பல விதத்தில் ஸ்ரேயஷை உண்டுபண்ணுவேன்”,

“ஷ்ரேயஸ்சாஸ்மை ப்ரதாஸ்யாமி பஹுரூபம் ந சம்ஷய:” என்று கூறுகிறார். அதாவது சீதா கல்யாணம் பரியந்தம் எல்லாம் செய்து வைப்பேன் உனது குழந்தைக்கு என்று சொல்வது போல மறைமுகமாக சொல்கிறார்.

மேலும் சொல்கிறார்

“அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம் |

வஸிஷ்டோபி மஹாதேஜா: ஏசேமே தபஸி ஸ்திதா: ||

தபஸ்விகளான வசிஷ்டர் போன்ற மஹான்களும், என்னை போன்றோரும் தான் இராமனுடைய பராக்கிரமத்தையும், அவன் உள்ளபடி யாரென்பதையும் அறிவோம். அதாவது ஞான கண் இருந்தால் தான் பகவானுடைய அவதாரங்கள் தெரியும். ஆதலால் உனது குழந்தையை என்னுடன் அனுப்பு “ராமம் மே தாதுமர்ஹசி” என்று பல்லவி பாடுகிறார்.

இதனை கேட்ட தசரதர் மயக்கம் அடைந்து விழுந்துவிட்டார்.  அப்புறம் தெளிந்து, “எத்தனையோ காலம் காத்திருந்து இந்த குழந்தை எனக்கு கிடைத்திருக்கிறான், இந்த நால்வரில், இவன் ஜேஷ்டன், தர்மத்திலும் ஜேஷ்டன், தர்மத்திலும் மூத்தவனாக இருக்கிறான் என்று இவன் மீது மிக அதிகமாக பிரியம் வைத்திருக்கிறேன்        .

ஸ்வாமிகள் இந்த இடத்தில், “அர்த்த ஜேஷ்டன்” ஆக, பணத்தில் பெரியவனாக இருப்பவனைதான் இந்த காலத்தில் தாய் தந்தையர்க்கு பிடிக்கிறது. இராமர் தர்ம ஜேஷ்டராக இருந்ததினால் தசரதர் அவரிடம் ப்ரியம் வைத்தார், என்று கூறுவார். தர்ம பிரதானமாக இருந்தால் எல்லாம் நல்லபடியாக முடியும் என்று ஸ்வாமிகள் அடிக்கடி இதனை வலியுறுத்தி கூறுவார்கள்.

தசரதர், என் குழந்தையை நான் தர மாட்டேன் , நான் எப்படி இந்த குழந்தையை தருவேன் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் “ந ராமம் நேதுமர்ஹஸி,   ந ராமம் நேதுமர்ஹஸி”  என்று அவர் பல்லவி பாடுகிறார்.

வந்திருக்கும் இந்த மாரிசன், சுபாகு முதளியவர்கலானவர்கள் யாரென்று தசரதர் கேட்கிறார், அவர்கள் இராவணனுடைய ஆட்கள் என்று விஸ்வமித்ரர் கூறியவுடன், அப்படியென்றால் நான் இராமனை தரவே மாட்டேன் என்று உறுதியாக கூறிவிடுகிறார்.

இதை கேட்ட விஸ்வாமித்ரர் கோபமடைகிறார், “என்ன வேண்டுமோ கேளுங்கள் செய்கிறேன் என்று கூறிவிட்டு, மறு நிமிடத்தில் பேச்சை மாற்றி பேசுகிறீர்களே, ரகு குலத்தில் பிறந்த உங்களுக்கு இது அழகா! க்ஷேமமாக இருங்கள் நான் வருகிறேன்” என்று கோபமுடன்  புறப்படுகிறார்.

இப்படி ரகு குலத்தினை ஏன் குறிப்பிடுகிறார் என்றால். ரகுவின் கதையான ரகுவம்சத்தில், (காளிதாசரின் ரகுவம்சம், வால்மீகி ராமாயணத்தில் இல்லை)  கௌத்ஸர் என்று ஒரு ரிஷி, படிப்பு முடிந்தவுடன் தனது குருவான வரதந்துவிடம், தங்களுக்கு குரு தக்ஷிணை என்ன தரவேண்டும் என்று கேட்கிறார், அவர் அதற்கு, நீ நன்றாக படித்தாய், அதுவே எனக்கு திருப்தி, சுஸ்ருக்ஷை எல்லாம் நல்லபடியாக செய்தாயே, அதுவே போதும் என்று சொல்கிறார். அனால் அவர் தன் குருவிடம் தாங்கள் எதுவேண்டுமோ கேளுங்கள் தருகிறேன் என்று மீண்டும் மீண்டும் கூறவே, குருவும், சரி, பதினான்கு கோடி வராகன் கொண்டுவா என்று ஒரு வார்த்தை கூறுகிறார்.

உடனே கௌத்ஸர், ரகு மகாராஜாவிடம் வந்து கேட்கலாம் என்று வருகிறார். இந்த ரகு மஹாராஜா ஆனவர், அப்பொழுது தான்  உலகத்தையெல்லாம் வெற்றி கொண்டு, “விஸ்வஜித்” என்கிற யாகம் செய்து, எல்லாவற்றையும் தானம் செய்துவிடுகிறார். அவரிடம் எதுவும் இல்லை. அதனை கண்ட கௌத்ஸர், திரும்ப செல்ல நினைக்கிறார், அவரிடம் ரகு மகராஜா, என்ன வேண்டும், வந்துவிட்டு திரும்ப செல்கிறீர்களே என்று கேட்கிரார். கௌத்ஸர் கூறுகிறார், எனக்கு பதினான்கு கோடி வராகன் வேண்டும், அதை தங்களிடம் யாசிக்கலாம் என்று வந்த பொழுது, தாங்கள் எல்லாவற்றையும் தானம் செய்து விட்டீர்கள் என்று அறிந்து திரும்பப் போகிறேன் என்கிறார்.

அதற்கு ரகு, இன்று ஒருநாள் இங்கு தங்குங்கள், நான் நாளை உங்களுக்கு, நீங்கள் கேட்டதை சம்பாதித்து தருகிறேன் என்று கூறி அவரை தங்க வைக்கிறார். அன்றிரவு, நாம் நாளை குபேரனை படையெடுப்போம் என்று முடிவு செய்து , அதற்கான ஏற்பாடு செய்துவிட்டு உறங்க போகிறார். இதனை அறிந்த குபேரன், ரகு படையெடுத்தால் நாம் என்னாவது, இந்த்ரனுடைய வஜ்ராயுதமே ரகுவை ஒன்றும் செய்யமுடியவில்லை என்று நினைத்து, பதினான்கு கோடி வராகனுக்கு மேலாகவே இரவோடு இரவாக, ரகுவின் கஜானாவில் ஸ்வர்ண மழையாக பொழிந்துவிடுகிறார்.

அடுத்த நாள் காலையில் இதை அறிந்த ரகு, ஆச்சரியப்பட்டு, கௌத்ஸரிடம் இவை எல்லாவற்றையும் எடுத்துகொள்ளுங்கள் என்று வேண்டுகிறார். அதற்கு கௌத்ஸர், எல்லாம் எனக்கு வேண்டாம், நான் கேட்ட பதினான்கு கோடி வராகன் மட்டும் வேண்டும், அதனை என் குருவிற்கு தரவேண்டும் என்று அதனை எடுத்துக்கொண்டு செல்கிறார்.

இதுபோல, இல்லாத போதும் ரகு கேட்டதை குடுத்தார், நீயோ கையில் ராமனை வைத்துக்கொண்டு, கேட்கும் பொழுது தரமறுக்கிறாயே என்று சொல்வது போல, ரகு வம்சத்தில் பிறந்து, இப்படி செய்யலாமா, அது அழகா என்று விஸ்வாமித்ர மஹரிஷி கேட்கிரார்.

அப்பொழுது, குல குருவான வஷிஸ்டர் தசரதருக்கு சதுபதேசம் செய்கிறார். தாங்கள் தர்மிஷ்டன் என்று பெயர்பெற்றுவிட்டு, இதுபோல குடுத்த வார்த்தையை மறுத்தல் கூடாது. குடுத்த வாக்கினை காப்பற்றவில்லை என்றால், இது வரைக்கும் சேர்த்த புண்ய பலன்கள் எல்லாம் போய்விடும்.

ஆதலால் தாங்கள், இந்த விஸ்வமித்ர மஹரிஷி பற்றி அறிந்துகொள் அவர், முன்பு அரசராக இருந்த பொழுது ஐநூறு அஸ்திரங்களையும் தெரிந்துகொண்டிருக்கிறார், பரமேஸ்வரனிடம் இருந்து தபஸ் செய்து பெற்றிருக்கிறார், அதனை எல்லாம் இராமனுக்கு உபதேசிப்பார். விஷ்வாமித்ரரின் ரக்ஷணையில் இருக்கும் போது, குழந்தைகளுக்கு ஒரு ஆபத்தும் இல்லை, தாங்கள் கவலைகொள்ளவேண்டாம், குழந்தையை அனுப்பி வையுங்கள் என்று எடுத்து சொல்கிறார்.

இப்படி குருவானவர் கூறியவுடன், தசரதர் மனம் தெளிந்து இராம லக்ஷ்மணர்களை அழைத்து விஸ்வமித்ரரிடம் ஒப்படைக்கிறார். விஷ்வாமித்ரரும் அவர்களை அழைத்து சென்று “பலா, அதிபலா” என்கிற மந்திர உபதேசம் செய்வதெல்லாம் அடுத்த அத்யாயத்தில் பார்க்கலாம்.

 

Series Navigation<< விஸ்வாமித்ரர் வருகைவிஸ்வமித்ரர் பலை அதிபலை மந்திரங்களை உபதேசித்தார் >>
Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.