அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி ஒலிப்பதிவு (Kandar anubhoothi audio)

அருணகிரிநாத சுவாமிகள்

ஆசைகூர் பத்தனேன்மனோ பத்மமான பூ வைத்து …… நடுவேயன்
பானநூ லிட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி …… யொருஞான

வாசம்வீ சிப்ர காசியா நிற்ப மாசிலோர் புத்தி …… யளிபாட
மாத்ருகா புஷ்ப மாலைகோல ப்ரவாள பாதத்தி …… லணிவேனோ

என்று முருகனிடம் வேண்டிக் கொண்டார்.

முருகபக்தியில் தோய்ந்த என் மனம் எனும் தாமரையை நடுவில் வைத்து,
அன்பெனும் நூலால் சொற்கள் எனும் புஷ்பங்களை வைத்து ஒரு பாமாலை கட்டி
உன் அழகிய பாதங்களில் சமர்பிக்க வேண்டும்.
அதில் நீ ஞான மணம் வீசச் செய்யவேண்டும்.
அன்பர்களின் குற்றமற்ற புத்தி என்னும் வண்டுகள் இந்த மாலையை நுகர்ந்து பாடவேண்டும்.
மாத்ருகா அட்சரங்கள் 51 என்கிற கணக்கில் பாடல் அமைய வேண்டும்.

இப்படி வேண்டிய அவர் வாக்கில் உதித்தது  தான் கந்தரனுபூதி.

“அநுபூதி நிலை அடைய இது ஒன்றை நித்ய பாராயணம் செய்தாலே போதும்”
என்று கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பலரிடம் கூறுவதை பார்த்திருக்கிறேன்.


கந்தரனுபூதி ஒலிப்பதிவு (Audio of kandaranubhoothi)


காப்பு  

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத் தஞ்சத்தருள் ஷண்முகனுக்கியல் சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.

நூல்

ஆடும் பரிவேல் அணிசேவலெனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமாமுகனைச் செருவில் சாடும் தனி யானை சகோதரனே.

உல்லாச நிராகுல யோக விதச் சல்லாப விநோதனும் நீயலையோ
எல்லாமற என்னை இழந்தநலம் சொல்லாய் முருகா ஸுரபூபதியே.

வானோ புனல்பார் கனல் மாருதமோ ஞானோதயமோ நவில்நான்மறையோ
யானோ மனமோ எனையாண்ட இடம் தானோ பொருளாவது ஷண்முகனே.

வளைபட்ட கைமாதொடு மக்கள் எனும் தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட்டெழு சூர் உரமும் கிரியும் தொளைபட் டுருவத் தொடு வேலவனே.

மகமாயை களைந்திட வல்லபிரான் முகமாறும் மொழிந்தும் ஒழிந்திலனே
அகம் மாடை மடந்தையர் என்றயரும் ஜகமாயையுள் நின்று தயங்குவதே.

திணியான மனோசிலை மீதுனதாள் அணியார் அரவிந்தம் அரும்புமதோ
பணியா என வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயாபரனே.

கெடுவாய் மனனே கதிகேள் கரவாதிடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவேதனை தூள்படவே விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.

அமரும் பதிகேள் அகம் மாம் எனும் இப்பிமரங்கெட மெய்ப்பொருள் பேசியவா
குமரன் கிரிராஜ குமாரி மகன் சமரம் பொரு தானவ நாசகனே.

மட்டூர்குழல் மங்கையர் மையல்வலைப் பட்டூசல்படும் பரிசென்றொழிவேன்
தட்டூடற வேல் சயிலத்தெறியும் நிட்டூர நிராகுல நிர்ப்பயனே.

கார்மா மிசைகாலன் வரிற்கலபத் தேர்மா மிசை வந்தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி எனும் சூர்மா மடியத் தொடுவேலவனே.

கூகா என என் கிளைகூடி அழப் போகாவகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித் தியாகா ஸுரலோக சிகாமணியே.

செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருளொன்றும் அறிந்திலனே.

முருகன் தனிவேல் முனிநம்குரு என்றருள் கொண்டறியார் அறியும் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்று இருளன்று ஒளியன்றென நின்றதுவே.

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற் றுய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழி நாசியொடும் செவியாம் ஐவாய் வழிசெல்லும் அவாவினையே.

முருகன் குமரன் குஹனென்று மொழிந்துருகும் செயல் தந்து ணர்வென்றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவும் குருபுங்கவ எண்குண பஞ்சரனே.

பேராசையெனும் பிணியில் பிணிபட் டோராவினையேன் உழலத் தகுமோ
வீராமுது சூர்படவேல் எறியும் சூரா ஸுரலோக துரந்தரனே.

யாமோதிய கல்வியும் எம்அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்
பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர் நாமேல் நடவீர் நடவீர் இனியே.

உதியா மரியா உணரா மறவா விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமராவதி காவல சூரபயங்கரனே.

வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோகியவா
அடியந்தமிலா அயில்வேலரசே மிடியென்றொரு பாவி வெளிப்படினே.

அரிதாகிய மெய்ப்பொருளுக் கடியேன் உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண விக்ரமவேள் இமையோர் புரிதாரக நாக புரந்தரனே.

கருதா மறவா நெறிகாண எனக்கிருதாள் வனசம் தர என்றிசைவாய்
வரதா முருகா மயில்வாகனனே விரதா ஸுரசூர விபாடனனே.

காளைக்குமரேசன் எனக்கருதித் தாளைப்பணியத் தவமெய்தியவா
பாளைக்குழல் வள்ளி பதம் பணியும் வேளைச்சுரபூபதி மேருவையே.

அடியைக்குறியா தறியாமையினால் முடியக்கெடவோ முறையோ முறையோ
வடிவிக்ரம வேள் மகிபா குறமின் கொடியைப் புணரும் குணபூதரனே.

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே சேர்வேன் அருள்சேரவும் எண்ணுமதோ
சூர்வேரொடு குன்று தொளைத்த நெடும் போர்வேல புரந்தர பூபதியே.

மெய்யே எனவெவ்வினை வாழ்வை உகந்தையோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய் மயிலேறிய சேவகனே.

ஆதாரமிலேன் அருளைப் பெறவே நீதான் ஒருசற்றும் நினைந்திலையே
வேதாகம ஞானவிநோத மனோதீதா ஸுரலோக சிகாமணியே.

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயனிங்கிதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே மன்னே மயிலேறிய வானவனே

ஆனாஅமுதே அயில் வேல் அரசே ஞானாகரனே நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலைநின்றது தற்பரமே.

இல்லே எனும் மாயையில் இட்டனை நீ பொல்லேன்அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும் சுடர்வேலவனே.

செவ்வான் உருவில் திகழ் வேலவனன் றொவ்வாததென உணர்வித்தது தான்
அவ்வா றறிவார் அறிகின்றதலால் எவ்வாறொருவர்க் கிசைவிப்பதுவே.

பாழ்வாழ்வெனுமிப் படுமாயையிலே வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாமுளவோ வாழ்வாய் இனிநீ மயில் வாகனனே.

கலையே பதறிக் கதறித் தலையூ டலையே படுமாறதுவாய் விடவோ
கொலையே புரிவேடர்குலப் பிடிதோய் மலையே மலைகூறிடு வாகையனே.

சிந்தாகுல இல்லொடு செல்வமெனும் விந்தாடவி என்றுவிடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே கந்தா முருகா கருணாகரனே.

சிங்கார மடந்தையர் தீநெறிபோய் மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல ஷண்முகனே கங்கா நதிபால க்ருபாகரனே.

விதிகாணும் உடம்பைவிடா வினையேன் கதிகாணமலர்க் கழல் என்றருள்வாய்
மதிவாணுதல் வள்ளியை அல்லதுபின்துதியா விரதா ஸுரபூபதியே.

நாதாகுமரா நமவென்று அரனார் ஓதாஎன ஓதியதெப் பொருள்தான்
வேதாமுதல் விண்ணவர்சூடும் மலர்ப் பாதா குறமின் பதசேசகரனே.

கிரிவாய் விடுவிக்ரமவேல் இறையோன் பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே.

ஆதாளியை ஒன்றறியேனை அறத்தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராதகுலிக் கிறைவா வேதாளகணம் புகழ்வேலவனே.

மாஏழ் ஜனனம்கெட மாயைவிடா மூவேடணை என்று முடிந்திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும் தேவே சிவசங்கர தேசிகனே.

வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோ டருவித் துறையோடு பசும் திணையோடு இதணோடு திரிந்தவனே.

சாகா தெனையே சரணங்களிலே காகா நமனார் கலகம் செயுநாள்
வாகா முருகா மயில்வாகனனே யோகா சிவஞானொப தேசிகனே.

குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவற் றுலகோடுரை சிந்தையுமற் றறிவற்றறியாமையும் அற்றதுவே.

தூசா மணியும் துகிலும் புனைவாள் நேசா முருகா நினதன்பருளால்
ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே.

சாடும் தனிவேல் முருகன் சரணம் சூடும்படி தந்தது சொல்லுமதோ
வீடும் ஸுரர்மாமுடி வேதமும் வெங்காடும் புனமும் கமழும் கழலே.

கரவாகிய கல்வியுளார் கடைசென் றிரவாவகை மெய்ப்பொருள் ஈகுவையோ
குரவா குமரா குலிசாயுத குஞ்சரவா சிவயோக தயாபரனே.

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ சிந்தாகுலமானவை தீர்த்தெனையாள்
கந்தா கதிர்வேலவனே உமையாள் மைந்தா குமரா மறை நாயகனே.

ஆறாறையும் நீத்ததன் மேல்நிலையைப் பேறாஅடியேன் பெறுமாறுளதோ
சீறாவருசூர் சிதைவித் திமையோர் கூறா உலகம் குளிர்வித்தவனே.

அறிவொன்றற நின்றறிவார் அறிவில் பிறிவொன்றற நின்றபிரானலையோ
செறிவொன்றற வந்திருளே சிதைய வெறிவென் றவரோடுறும் வேலவனே.

தன்னந்தனி நின்றது தான்அறிய இன்னம் ஒருவர்க் கிசைவிப்பதுவோ
மின்னும் கதிர்வேல்விகிர்தா நினைவார்க் கின்னம் களையும் க்ருபைசூழ்சுடரே.

மதிகெட்டறவாடி மயங்கி அறக் கதி கெட்டவமே கெடவோ கடவேன்
நதிபுத்திர ஞானஸுகாதிப அத்திதி புத்திரர் வீறடு சேவகனே.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குஹுனே.

முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *