Categories
Ramayana One Slokam ERC

சத்ரம் தாரயத க்ஷிப்ரம் ஆர்ய பாதெள இமெள மதௌ

இன்னிக்கு வால்மீகி  ராமாயண ஸ்லோகம், அயோத்யா காண்டத்துல நூத்தி பதினைந்தாவது  ஸர்க்கம் பாதுகா பட்டாபிஷேகம், அதுல ஒரு ஸ்லோகம்

छत्रं धारयत क्षिप्रमार्यपादाविमौ मतौ ।

आभ्यां राज्ये स्थितो धर्मः पादुकाभ्यां गुरोर्मम।।

சத்ரம் தாரயத ஷிப்ரம் ஆர்யா பாதெள இமெள மதௌ |

ஆப்யாம் ராஜ்யே ஸ்திதெள தர்ம: பாதுகாப்யாம் குரோர் மம ||

அப்படின்னு பரதன் ராம பாதுகையை சிம்மாசனத்தில வெச்சு, பட்டாபிஷேகம் பண்ணி, “சத்ரம் தாரயத ஷிப்ரம்” சீக்ரமா குடை பிடிங்கோ, “ஆர்ய பாதெள இமமெள மதௌ” இது என்னுடைய, அண்ணாவினுடய பாதங்கள் அப்படினு சொல்றான், என் அண்ணாவினுடய பாதுகைகள் னு சொல்லலை, அண்ணாவின் பாதங்கள், அந்த மாதிரி, பாதுகையா வெச்சு பூஜை பண்ணிணா,  ஸ்வாமிகள் மஹாபெரியவளோட பாதுகையை ஸ்வாமிகள் வெச்சு பூஜை பண்ணிணார் மஹாபெரியவாளே அங்க இருக்கற மாதிரி நெனச்சுதான்  ஒவ்வொண்ணும் பண்ணுவார். அந்த மாதிரி, ராமரே அங்க இருக்கறதா நினைச்சிண்டு, “ராமருக்கு குடை பிடிங்கோ, ராமருக்கு சாமரம் வீசுங்கோ, இந்த தேசத்தில் என்னுடைய அண்ணாவினுடைய இந்த பாதுகை தர்மத்தை நிலை நாட்ட போகிறது” அப்படின்னு சொல்றான்.

இந்த ஒரு மாசமா ராமாயணத்தை பத்தி ஸ்மரிக்கும்போது, பரதனை பத்தி அதிகமா நினைக்கவே இல்லயே, பரத பக்தியை நினைப்போம், அந்த பாதுகையோட பெருமையை நினைப்போம் அப்படின்னு தோணித்து. இந்த பாதுகையோட விசேஷம் என்னன்னா, இப்போ நமக்கு, அவசியமா ஒரு ஆயிரம் ரூபாய் வேண்டியிருக்குனா, ஒரு ரெண்டாயிரம் ரூபாய் பெருமானம் உள்ள நகைய கொண்டு போய் அடகு கடையில வெச்சா, அவன், ஆயிரம் ரூபாய் கொடுப்பான். அந்த மாதிரி, நம்ம எந்த பொருளை அடகு வைக்கறமோ அதுக்கு value ஜாஸ்தி. எது நமக்கு கடைக்கறதோ அதுக்கு value கம்மி. அந்த மாதிரி, ராமர் கிட்ட பரதன் வந்து சரணாகதி பண்ணிடறான். பண்ணி “நீ திரும்ப வரணும், அயோத்தில வந்து நீ தான் ராஜாவாக இருக்கணும்”, அப்படின்னு சொல்றான், ஆனா ராமர் அவதார கார்யம் இருக்கு, ராவணனை வதம் பண்ண வேண்டிய கார்யம் இருக்கறதுனால, தன்னை காட்டிலும் மதிப்பு மிகுந்த, தன்னுடைய பாதுகைகளை பதினாலு வருஷங்களுக்கு பரதன் கிட்ட அடகு வெச்சுட்டு, தன்னை மீட்டுண்டு, அந்த அவதார கார்யத்தை முடிக்கறதுக்காக போனார் அப்படின்னு சொல்லுவா.

ராமர் தன்னை காட்டிலும் உயர்வான  பாதுகைகளை பாரதன் கிட்ட கொடுத்தார். பாரதனுக்கு ராமர் கிட்ட என்ன மனப்பான்மை இருக்றதுங்கிறதுக்கு, எண்பத்திரெண்டாவது ஸர்கம்  அயோத்யா காண்டத்துல, அந்த ஸர்க்கத்தை கண் ஜலம் விடாம படிச்சு முடிக்கவே முடியாது, பரதன் கேகேய தேசத்துலேர்ந்து திரும்பி வரான். கைகேயி “உனக்காக ராஜ்யம் வாங்கி வெச்சிருக்கேன். அப்படின்னு சொன்ன உடனே, “அண்ணா எங்கே?”ன்னு கேக்கறான். “நான் வரம் கேட்டேன். அவா எல்லாம் காட்டுக்கு போய் இருக்கா”ன்ன உடனே கடும் கோபம் வறது அவனுக்கு, “என்னம்மா இப்படி பண்ணின?”, கோபம் வந்தாலும், அத்துமீறி பேசல, என்ன தான் இருந்தாலும் ராமனோட தம்பியாச்சே, அதனால, “என்னம்மா இப்படி பண்ண? என்னம்மா இப்படி பண்ண? ஒரு பிள்ளையை பெற்ற கௌசல்யையோட கஷ்டத்தைப் பத்திகூட நீ நினைக்கலையே, இவ்வளோ கொடுமையான ஒரு மனஸா இருக்கே உனக்கு, நீ உங்க கணவர் போன நல்லுலகத்துக்கு நீ போக மாட்ட, நீ நரகத்து போவ” இப்படின்னு சொல்றனே தவிர, பாபி சண்டாளின்னுலாம் சொல்றதில்லை,  இந்த கதை சொல்றவா, அவனுக்கு மேல, இவா சேர்ந்து திட்றா அப்படின்னு ஸ்வாமிகள் சொல்வார். அவன் வருத்தப்படறான், “எவ்வளோ உயர்ந்த குலம் இது, எவ்வளோ கௌரவத்தோட தசரதர் ஆண்டார், இப்படி நீ பண்ணிட்டியே, இதெல்லாம்கூட யோசிக்கலயா நீ, எதையுமே யோசிக்கலயா? இவ்ளோ புத்தி கெட்டு போச்சா? எங்கயாவது நான் ராமருடைய ராஜ்யத்தை எடுத்துப்பேனா”அப்படின்னு சொல்றான், “பிறந்ததுலேர்ந்து நான் ராமனுக்கு அடிமை. நீ இந்த மாதிரி பண்ணினதுனால, ராமரை கூட்டிண்டு வந்து பட்டாபிஷேகம் பண்ணி வைக்க போறேன் உன் கண்ணு முன்னாடி, அதான் நடக்கப் போறது” அப்படின்னு சொல்றான்.

அப்பறம் கௌசல்யா சந்தேக பட்றா, “ஓ பரதன் வந்துருக்கான் போலிருக்கு, ராஜ்யத்தை எடுத்துக்கறதுக்கு வந்துட்டான்” அப்படின்னு சொல்றா. அப்போ கௌசல்யா தேவியை போய் பரதன் பாக்கறான், அவ ஏதோ ஒரு வார்த்தை சொல்றா,  “என்னை  போய் நீங்க ஸந்தேஹ படலாமா, எவரோட அனுமதியின் பேரில் ராமர் காட்டுக்கு போனாரோ, அவர் இந்த பாபத்தையெல்லாம் பண்ணிணவாளா ஆகட்டும். இந்த கஷ்டத்தையெல்லாம் அநுபவிக்கட்டும்” அப்படின்னு ஒரு நூறு சபதம் பண்றான். “யார் அனுமதியின் பேரில் ராமன் காட்டுக்கு போனானோ, அவனுக்கு, மனைவி இருக்கும்போது, வேற எடத்துல மனசை வெச்ச பாபம் வரட்டும், அவனுக்கு பசுமாட்டை காலால் உதைச்ச பாபம் வரட்டும்”, அப்படினு பெரிய list. எந்தந்த பாபங்களை நாம தவிர்க்கணும் அப்டிங்கிறதுக்காக ஒரு list. “அவன் ப்ராஹ்மணர்களுக்கு தானம் பண்ணுவதை தடுக்கட்டும்”, அப்படினு அதாவது கஷ்டத்தைத் தான் சொல்றான், பாபத்தை சொல்றான், பாபம் பண்ணா துக்கம் தானா பின்னாடி வரும், அப்படின்னு த்வனி, அப்படி சொல்றான்.

உடனே கௌசல்யை “வேண்டாம்பா வேண்டாம், நீயும் லக்ஷ்மணனை மாதிரி ராம பக்தியோட இருக்கேங்கிறத புரிஞ்சின்டேன், ஏதோ தெரியாம பேசிட்டேன், இப்படியெல்லாம் நீ என் மனஸை வருத்தப்படுத்தாதே” அப்படின்னு சொல்றா. அப்பறம் மந்த்ரிகள் வந்து பாக்கறா, வசிஷ்டர் வந்து தசரதரோட அந்திம கார்யங்கல்லாம் பண்ண வேண்டியது இருக்குன்னு சொல்லி, பரதன் அதை பண்றான், ரொம்ப சோகமான கட்டங்கள்.  அவன், “இந்த மாதிரி ஆயிடுத்தே, ராமருக்கு பட்டாபிஷேகமோ, இல்லை ராஜா யாகம் பண்ணப் போறார் கூட பிள்ளைகள் இருக்கணும்னு கூட்டிண்டு வந்தான்னு நெனச்சேன், இந்த மாதிரி அப்பாவோட அந்திமகார்யங்கள் பண்ண வேண்டியதாக ஆயிடுத்தே”ன்னு வருத்தப்படறான்.

ஒரு பதினைந்து நாள் எல்லாம் முடியறது, அதுக்கப்பறம் ஒரு நாள் வசிஷ்டர், சபையை தசரதர் இருந்தா எப்படியோ அந்த மாதிரி அலங்காரம் பண்ணி ரொம்ப கௌரவமா பரதனை சபைக்கு வரவைக்கிறார். அதாவது, மனுஷாளுக்கு என்னென்னா, கைல கிடைச்ச பணத்தை யாரவது வேண்டாம்னு சொல்லுவாளா? சொத்தோ,பதவியோ, கையில கிடைச்சுதுனா வேணான்னு சொல்லுவாளா, அப்படின்னு அந்த எண்ணத்துல, வசிஷ்டர் அவனை கூப்பிட்டு சபையிலே வெச்சு “ஹே பாரதா ராமன் அப்பா பேச்சை கேட்டு காட்டுக்கு போய்ட்டான், அவன் இனிமே வரமாட்டான், எதோ உங்கம்மா கேட்டா, உங்கப்பா இந்த ராஜ்யத்தை உனக்கு கொடுத்தார், எங்களுக்கு ராஜா வேணும், அதனால, நீ இதை எடுத்தாண்டா தப்பில்ல, இந்த ராஜ்யத்தை ஏத்துக்கோ, எங்களுக்கு தயவு பண்ணு” அப்படின்னு சொல்றார்.

பரதனுக்கு வந்துதே கோபம், அவர் வஷிஷ்டர், முனிவர், குரு அதெல்லாம் பாக்கல, அவரை கண்டிக்கறான். “எங்களுக்கு தர்மத்தை சொல்ல வேண்டிய இடத்துல நீங்க இருக்கேள், என்னைப் பாத்து இந்த மாதிரி பேசலாமா?” அப்படிங்கிறான். அவன் சொல்றான் “நான் தசரதருக்கு பிள்ளை, தசரதர் ராமனை பிரிஞ்சு ஆறே நாள்ல உயிரை விட்டார், அப்பேற்பட்ட ராம பக்தி எங்களுக்கெல்லாம், நான்  எங்கேயாவது ராஜ்யத்தை எடுத்துப்பேனா?” அப்படின்னு சொல்றான். ” ராஜ்யம் ச அஹம் ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹ அர்ஹஸி”  நானும் இந்த ராஜ்யமும் ராமானுடையவை, ராமனுக்கு சேந்தது, நீங்க தர்மத்தை சொல்ல வேண்டியவர்கள், இப்படி சொல்லாதீங்கோ” அப்படிங்கிறான். அதாவது, தன்னை ராமனுடைய ஒரு அடிமையா நினைக்கிறான், ராமர் தான் உடையவர் நான் அவருடைய பொருள்”  அப்படின்னு சொல்றான். இந்த எடத்துல மஹான்கள் ஒண்ணு சொல்லுவா, ஒரு பெட்டிக்குள்ள ஒரு ரத்னம் இருக்குன்னா, அந்த ரத்னத்தை அந்த பெட்டி பாதுகாக்கறது, ஆனா அந்த பெட்டி வந்து இது என்னோட ரத்தனம்னு சொல்ல முடியாது, யாரு அந்த ரத்னத்துக்கு உடையவர்களோ அவா அந்த பெட்டில வெச்சு, சாவி போட்டு பூட்டி வெச்சிண்ட பின்ன, அந்த பெட்டி அந்த ரத்னத்தை பாதுகாக்க முடியுமே தவிர, என்னோடதுன்னு நினைக்க முடியாது. அப்படி, ராமன் பாதுகைங்கிற சாவியைப் போட்டு, பாரதன்ங்கற பெட்டில இந்த கோசல தேசம்ங்கிற ரத்தனத்தை வெச்ச போது, அவன் அதை trustee யாக பாத்துண்டான், அவ்வளவுதான். அவனுக்கு அதுல ஒருவிதமான, attachmentம் கிடையாது.

அப்படி அந்த பரதன் வந்து “யத்தி மாத்ரா க்ருதம் பாபம், நாஹம் ததபி ரோசயே | இஹஸ்தோ வனதுர்கஸ்தம் நமஸ்யாமி க்ருதாஞ்சலி: ||” நான் இங்கேயிருந்து கொண்டே, வனத்தில் இருக்கும் தர்மமே வடிவான என்னுடைய அண்ணா ராமரை அஞ்சலி பண்ணுகிறேன், என் மனசு இவா பேச்சினால மாறாம, எங்க அண்ணா எப்படி தர்மத்தில உறுதியாக இருக்காறோ, அதே மாதிரி  என் மனசும் இருக்கட்டும்”, அப்படின்னு சொல்றான். “ராமர் ‘யயாதி நஹுஷோபமஹ’ எப்பேர்பட்டவர், அவர் ஆட்சி பண்ண வேண்டிய எடத்துல, நான் சின்ன பையன் எங்கயாவது உட்காந்து ஆட்சி பண்ண முடியுமா, இந்த பேச்சே நீங்க பேசாதீங்கோ, அப்டின்னு சொல்லிட்டு, சுமந்தரரை பாத்து, “இது நடக்காது, இவளோட இருந்தா இதே தான் சொல்றா, நம்ம கிளம்புவோம், நீ தேரை எடு, நாம காட்டு கிளம்புவோம், எல்லா நாலு வகையான படைகளையும் அணி வகுத்துண்டு, எல்லாரையும் கூட்டிண்டு போவோம் , அம்மாவெல்லாம் கூட்டிண்டு போவோம்,  ரிஷிகளையெல்லாம் கூட்டிண்டு போவோம். கூட்டிண்டு போய், ராமனை அங்கேயே பட்டாபிஷேகம் பண்ணி, யானை மேல ஏத்தி, இங்க அயோத்திக்கு கூட்டிண்டு வந்துடலாம், கிளம்புங்கோ”, அப்படீங்கறான். எல்லா ஜனங்களுக்கும், அப்படியே கண் ஜலம் வரது. என்ன, ஒரு மனசு, இவனுக்கு! அண்ணா காட்டுல, கஷ்டப் படறாங்கிறதை நினைச்சு, தனக்கு கையில கிடைச்ச சொத்தை, துச்சமா விசிறி எறியறானே, அப்படீன்னு, அவனை எல்லாரும், கொண்டாடறா. எல்லாரும், கிளம்பறா. எல்லார்க்கும், ரொம்ப சந்தோஷம்

मेघश्यामं महाबाहुं स्थिरसत्त्वं दृढव्रतम् । कदा द्रक्ष्यामहे रामं जगत-श्शोकनाशनम् ।।

दृष्ट एव हि नश्शोक-मपनेष्यति राघवः। तम-स्सर्वस्य लोकस्य समुद्यन्निव भास्करः।।

மேகஷ்யாமம் மஹாபாஹும் ஸ்திரசத்வம் த்ருடவ்ரதம் |

கதா த்ரக்ஷ்யாமஹே ராமம் ஜகத: ஷோகநாஷனம் ||

திருஷ்ட ஏவ ஹி நஷ்ஷோகம் அபநேஷ்யதி ராகவ: |

தமஸ்ஸர்வச்ய லோகஸ்ய ஸமுத்யன்னிவ பாஸ்கர: ||

“எப்படி, சூரியன் வந்தா, உலகத்தோட இருள் எல்லாம் போறதோ, அந்த மாதிரி, ராமனோட முகத்தை பார்த்தா, நம்மோட சோகம் எல்லாம் போயிடும். வாங்கோ, போகலாம்”ன்னு, எல்லாரும், கிளம்பறா. காட்டுக்கு போறா. வழியில குஹன், பரதனை பார்த்த உடனே சந்தேகப் படறான். அவனை, convince பண்றான் பரதன். அடுத்தது, பரத்வாஜர், அவர் ஞானி. இருந்தாலும் சந்தேகமா ஒரு கேள்வி கேட்கறார். அவன் “நீங்க பகவான், என்னை இப்படி கேட்கலாமா?”ன்னு,அழறான். “வருத்தப்படாதே, உன்னோட உறுதியை பரீக்ஷை பண்றதுக்காக தான் கேட்டேன். நீ போய், ராமனைப் பாரு”ன்னு, “சித்ரகூடத்துல இருக்கார்” னு, வழி காண்பிக்கறார்.

பரதன், சித்ரகூடத்துக்கு, போறான். ராமரை, நமஸ்காரம், பண்றான்

भृशं संप्रार्थयामास राममेव प्रियंवदः ||

ப்ருஷம் ஸம்ப்ரார்த்தயாமாஸ ராமமேவ ப்ரியம்வத:

ப்ரியம்வத: – பிரியமான, வார்த்தைகளைச் சொல்லி, மிகவும் வேண்டினான். ப்ருஷம் – நிறைய வேண்டினான். அந்த மாதிரி, பகவானோட அனுக்ரஹம் நமக்கு கிடைக்கணும்னா, நிறைய பஜனம் பண்ணனும். ஒரு நாராயணீயம், மூகபஞ்சசதி மாதிரி, ஆதி சங்கரரோட ஸ்தோத்திரங்கள், அந்த மாதிரி, பிரியமான வார்த்தைகள். பகவானுக்கு பிரியமான ஸ்தோத்திரங்களை எடுத்துண்டு, அதை, “ப்ருஷம்” நிறைய ஆவர்த்தி, பண்ணனும். “ஸம்ப்ரார்த்தயாமாஸ” – நன்னா ஸ்ரதையா பண்ணனும். “ராமமேவ” – ராமன் ஒருத்தன் கிட்டேயே வேண்டிக்கணும். இப்படிதான், பக்தி பண்ணனும்கிறதை, பரதன், காண்பிச்சுத் தரான், அப்படீன்னு, ஸ்வாமிகள் சொல்வார்.

ஆனாலும் ராமர், “உங்க அம்மா, கேட்டதும் தப்பில்லை, அவ தசரதர் உயிர, காப்பாத்தியிருக்கா. ரெண்டு வரங்கள் கொடுத்த உடனே, என் குழந்தை, ராஜா ஆகணும்னு ஆசைப்பட்டு கேட்டா. நம்ம அப்பா, பண்ணதும் தப்பில்லை, அவருக்கு, பிள்ளைகளையோ, ராஜ்யத்தையோ எங்க வேணா வைக்கறதுக்கு உரிமையிருக்கு. அதனால, அவர் உனக்கு, நாட்டை கொடுத்தார், எனக்கு காட்டை கொடுத்தார். இதெல்லாம், இனிமே மாத்த முடியாது. எல்லாத்துக்குமே ஒரு காரணம் இருக்கும். இதெல்லாம் தெய்வச் செயல். நீ இந்த மாதிரி வருத்தப் படாதே. உன்னால நடந்ததுன்னு நான் ஒரு க்ஷணம் கூட நினைக்கலை. உன்னுடைய மனசு பத்தி எனக்குத் தெரியும். அதனால நீ போய் இந்த ராஜ்யத்தை எனக்காகப் பாத்துக்கோ”, அப்படீன்னு, சொன்ன உடனே,

வசிஷ்டர் சொல்படி ராம பாதுகையை, வாங்கிண்டு, யானை மேல வெச்சு, திரும்ப வர வழியில பரத்வாஜரை பார்த்து, அவர்கிட்ட, இந்த விஷயத்தை, சொல்லிட்டு, நந்திக்ராமத்துல வந்து, பாதுகையை, பட்டாபிஷேகம், பண்றான். ராமர் இல்லாத அயோத்தியில் அவனால் இருக்க முடியலை. எப்படி, ராமர் காட்டுல ஜடாமுடி போட்டுண்டு, தபஸ்வியா இருக்காரோ, அதைவிட கடுமையான, வ்ரத நியமங்களோட, இங்க நந்தி கிராமத்துல இருந்துண்டு, அப்படி பக்தி பண்றான்.

அந்த மாதிரி பரத பக்திங்கிறது, நமக்கெல்லாம் ஒரு உயர்ந்த ideal. ஸ்வாமிகள் அந்த மாதிரி மஹா பெரியவாளோட பாதுகையை வெச்சுண்டு, பரதன், எப்படி ராமன் கிட்ட இருந்தானோ, அந்த மாதிரி ஸ்வாமிகள், மஹாபெரியவா கிட்ட இருந்தார். அந்த பாதுகையிலிருந்து, ஸந்யாஸம் வாங்கிண்டு, உண்மையான துறவியா, 12 வருஷங்கள் இருந்து, இருந்து எத்தனையோ பேரோட மனசுல, பக்திங்கிற ஜோதியை, தீபத்தை ஏத்தினார்.

ச்சத்ரம் தாரயத க்ஷிப்ரம் ஆர்ய பாதெள இமமெள மதௌ (13 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

4 replies on “சத்ரம் தாரயத க்ஷிப்ரம் ஆர்ய பாதெள இமெள மதௌ”

பரதனின் பக்தியிலும் …ஸ்வாமிகளின் பக்தியிலும் கோடியில் ஒரு பங்காவது கிடைக்கணும்…ஜென்மம் சாபல்யம் அடையும்…
மஹாபெரியவா பாதம் சரணம்.

இந்த பதிவு இப்போ தான் படித்தேன்
பெரிவா பாதுகையை அபாரமா ஆஶ்ரயிக்கிற ஸ்வாமிகளின் நாமதேயம் தெரிஞ்சுக்கலாமா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.