Categories
Ramayana One Slokam ERC

மீளாஅடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே

இன்னிக்கி வால்மீகி ராமாயணத்துல அயோத்யாகாண்டம் அம்பத்திரெண்டாவது ஸர்கத்துல ஒரு ஸ்லோகம்

यदि मे याचमानस्य त्यागमेव करिष्यसि ।

सरथोऽग्निं प्रवेक्ष्यामि त्यक्तमात्र इह त्वया ।।

யதி மே யாசமானஸ்ய த்யாகமேவ கரிஷ்யஸி |

ஸரதோக்னிம் பிரவேக்ஷ்யாமி த்யக்தமாத்ர இஹ த்யா ||

அப்படின்னு சுமந்திரர் ராமர் கிட்ட சொல்றார்.

இன்னிக்கி எங்க கபாலீஸ்வரர் கோவில்ல தேரோட்டம், அதனால இந்த சுமந்திரர்ங்கிற தேரோட்டிய பத்தி பேசறேன்.

சுமந்திரர்ங்கிறவர் தசரதரோட மந்த்ரி. தசரதர் வயசு அவருக்கு, தசரதருக்கு நண்பர், அவர் “ரிஷ்யஸ்ருங்கரை கொண்டு யாகம் பண்ணா, உங்களுக்கு குழந்தைகள் பிறப்பான்னு ஸனத்குமார யோகி சொன்னார்”, அப்படின்னு ரிஷ்யஸ்ருங்கரை வரவழைச்சு, அஸ்வமேத யாகத்துக்கு எல்லா ஏற்பாடெல்லாம் பன்றார், அப்படி அவர் கூடவே இருந்து ராமர் பிறந்ததுலேர்ந்து எல்லாம் பாத்துண்டு இருக்கார்.

அன்னிக்கு தசரதர் ராம பாட்டாபிஷேகம்னு தீர்மானம் பண்ணிண அன்னிக்கு, சுமந்திரர் போய் தசரதரை நல்ல வார்த்தைகள் சொல்லி எழுப்புறார், கைகேயி “நீ போய் ராமனை அழைச்சிண்டு வா”னு சொன்ன உடனே, ராமனை வந்து பாக்கறார், ராமர் சீதாதேவியோட இருக்கற அழகை பார்த்து, ரொம்ப சந்தோஷபட்டு, ராமனை தேர்ல அழைச்சிண்டு போறார். ராமர்  கைகேயி அரண்மனைக்குள்ள போகிறவரைக்கும் அவருக்கு விஷயம் தெரியாது.

அவர் காத்தால தசரதரை எழுப்ப வரும்போது, late ஆயிடுத்து, தசரதர் வெளில வரலை. வாசல்ல எல்லா ராஜாக்களும் நிக்கறா, வசிஷ்டர் வந்துட்டார், முன்னாடி நாள் சொன்னமாதிரி எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு, புண்ணிய தீர்த்தங்கள் எல்லாம் வந்தாச்சு, கன்யா பெண்கள், சுமங்கலிகள், சிம்மாசனம் அப்படின்னு யார் யார் எல்லாம் அபிஷேகம் பண்ணணுமோ, யார் யார் எல்லாம் அங்க வரணுமா எல்லாரும் அங்க வந்துட்டா. நகரமே கோலாஹலமா இருக்கு. தசரதர் வெளியில வரலை. சுமந்திரரும் அதே சந்தோஷ களிப்பிலேயே இருக்கார். அதே சந்தோஷ களிப்பிலேயே போய், ராமரை போய் அழைச்சிண்டு வறார். கைகேயி அரண்மனைக்குள்ள  ராமர் போகற வரைக்கும் அவருக்கு விஷயமே தெரியாது. ராமர் உள்ள போய் “கைகேயி வரங்கள் கேட்டதை, அதை வந்து அவ ராமர் கிட்ட சொல்றா. அதை வந்து ராமர் “அப்படியே ஆகட்டும்”னு சொல்லிட்டு, கொஞ்சம்கூட முகம் வாடாமல் வெளியே வரார்.

“இரவில் சந்திரன் எப்படி பிரகாசிக்குமோ அதைபோல் ராமனின் முகம் பிரகாசித்தது” அப்படின்னு வரது. ராஜ்யம்ன்னு சொன்னபோதும் சரி, உனக்கு  பதினாலு வருஷம் வனவாசம்ன்னு சொன்னப் போதும் ஒரே மாதிரி அந்த முகம் பிரகாசித்தது. இரவில் சந்திரன் போலங்கிறது இன்னும் அழகு. ஏன்னா, கஷ்டகாலம் வரும்போது அது அவரை பாதிக்கவில்லை என்று அர்த்தம். நாம தர்மத்தை followபண்ண போறோம், அப்பா பேச்சை கேட்கப்போறம் அப்படிங்கிற த்ருப்திதான் அவர் முகத்துல இருந்ததே தவிர, காட்டுக்குப் போய் கஷ்டப்பட போறோம்ங்கிற வருத்தம் இல்லை, அதுனால இருட்டுல சந்திரன்கிறது ரொம்ப அழகா இருக்கு, தாமரை போல வாடாத முகம்னு அப்படின்னு  கம்பராமாயணத்துல வர்றது, அதைவிட இந்த உவமை ரொம்ப அழகா இருக்கு.

ராமர் வெளியில வரார் அப்பறம்தான், அந்த நியூஸ், கொஞ்சம் கொஞ்சமா leak ஆகறது, அந்த கைகேயி அரண்மனைல இருக்க மத்த மனைவிகள் எல்லாம்  அதை தெரிஞ்சிண்டு, புலம்பி அழறா, எங்க ராமன் காட்டுக்கு போறவனா அப்படின்னு. அப்ப தான் சுமந்த்ரருக்கு தெரியறது. அப்ப தான் அவருக்கு ரொம்ப வருத்தமும் கோபமும் ஏற்படறது, தசரதர் மேலயே கோபம் ஏற்பட்றது. ராமர் குடை, தேர் வேண்டாம்ன்னு சொல்லிடறார். பட்டாபிஷேகம் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணிண புண்ய தீர்த்தங்கள், அதெல்லாம் ஒரு ப்ரதக்ஷிணம் பண்ணிண்டு, நேரா வந்து முதல்ல கௌசல்யா தேவியை சமாதான படுத்தறார். அது ஒரு ரொம்ப அழகான அஞ்சு ஸர்கங்கள், அப்பறம் சீதாதேவிய, நீ இங்கயே அம்மா அப்பாவோட இருந்து, அவாளுக்கு ஸுஷ்ரூஷை பண்ணிண்டு இருன்னு சொல்லப் பாக்கறார், ஆனா சீதாதேவி “இல்லை, என்னோட இடம், காட்டில உங்க பக்கத்துல தான்”,னு ராமரை அவ convince பண்ணி கூட கிளம்பறா.

ராமரும், சீதாதேவியும் லட்சுமண ஸ்வாமியும், லக்ஷ்மணரும் அந்த மாதிரி வேண்டிண்டு அவரும் கூட கிளம்பறார், அவாளோட சொத்துக்களெலாம் பதினாலு வருஷம்ங்கிறது எவ்வளோ பெரிய காலம், அதனால ராமரும், சீதாதேவியும் அவளோட சொத்துக்களெல்லாம் முனிவர்களுக்கும், அங்க வேலை பண்றவாளுக்கும் எல்லாருக்கும் கொடுத்துட்டு, வெறும் கையோட, தசரதர் கிட்ட உத்தரவு வாங்கிக்கறதுக்கு வரா. அப்போ இந்த சுமந்திரர் உள்ள போய் சொல்றார் “சூரியனிடத்தில் கதிர்கள் போல, எல்லா  ராஜ குணங்களும் பொருந்தியிருக்கும் ராமன், காட்டுக்கு கிளம்ப உத்தரவு வாங்க வந்திருக்கான்”, அப்படின்னு சொல்றார், அதவாது, இப்பேற்பட்ட குழந்தையை போய் காட்டுக்கு அனுப்பறேளே அப்படின்னு சொல்றார்.

அப்போ, தசரதர் பாக்கறார், இவ்வளோ நமக்கு நெருங்கின சுமந்திரரே நம்மளை ஸந்தேஹ படறார், இன்னும் எல்லாரும் எவ்வளோ ஸந்தேஹ படுவாளோன்னு சொல்லி, சுமந்திரர் கிட்ட “நீங்க போய் என்னோட மத்த மனைவிகளை அழைச்சிண்டு வாங்கோ, தசரதருக்கு முன்னூத்தி அறுபது மனைவிகள். இந்த மூணுபேர் தவிர. அதாவது பரசுராமர் க்ஷத்ரியர்களை வதம் பண்ணனும் அப்படின்னு ஒரு முடிவு கட்டிண்டு அயோத்யைக்கு வரார். அவர் வர அன்னிக்கி தசரதர் ஒரு கல்யாணம் பண்ணிண்டுருவார். கைல கல்யாண காப்பு கட்டிண்டு இருந்தா கொல்லக் கூடாதுன்னு ஒரு சாஸ்திரம். உடனே பரசுராமர் போயிடுவார், அடுத்த நாளும் வந்தார், இப்படி அவர் வருஷம் முழுக்க வந்துண்டேஇருந்தாராம், இவர் வருஷம் முழுக்க கல்யாணம் பண்ணிண்டே இருந்தார், அதனால இவருக்கு முன்னூத்தி அறுபது மனைவிகள் அப்படின்னு கணக்கு. “அந்த எல்லா பெண்களையும் கூப்பிடு, நீங்களே இவ்வளோ ஸந்தேஹம் படும்போது, பெண்கள் எவ்வளோ ஸந்தேஹ படுவா”, அப்படிங்கிற எண்ணத்துல எல்லாரையும் கூப்பிடுங்கிறார். சுமந்திரர் எல்லாரையும் அழைச்சுண்டு வரார். எல்லா பெண்களையும், அந்தபுரத்துல இருக்க தசரதர் மனைவிகளை  அழைச்சுண்டு வரார். அப்பறம், இந்த ராமனை உள்ள கூப்பிடுன்னு சொல்றார். “ஹே ராம இந்த கைகேயினால், வரங்கள் என்ற பேரில் நான் வஞ்சிக்க பட்டேன். நீ என்னை சிறையில் போட்டுட்டு இந்த ராஜ்யத்தை எடுத்துண்டேன்னா நான் சந்தோஷப் படுவேன்” அப்படின்னு சொல்றார். ராமர் “அப்பா நான் அதை பண்ணவே மாட்டேன், உங்களுடைய வார்த்தை பொய்யாக நான் விடவே மாட்டேன். நீங்கள் கொடுத்த சத்தியத்தை நான் நிறைவேற்றுவேன். அதனால் எதை இழந்தாலும் ஒண்ணும் குறையில்ல. மேலும் பரதனுக்கு ராஜ்யம்ங்கிறது சந்தோஷம் தான், நீங்க வருத்தப் படாதிங்கோ” அப்படின்னு சொல்றார்.

இப்போ சுமந்திரருக்கு புரியறது, “ஆஹா தசரதருடைய தப்பில்லை இது. கைகேயி தான் பிடிவாதம் பிடிக்கிறா”ன்னு, கைகேயியை கடுமையா சுமந்திரர்  கண்டிக்கிறார், அவ மஹாராணி. இருந்தாலும் இந்த சுமந்திரர்க்கு தர்மத்து பக்கத்துல பேசாம இருந்து விடக்கூடாது இல்லையா, அதனால கடுமையா அவளை   கண்டிக்கிறார். “இப்படி பண்றியே நீ, உன் கணவர் எவ்வளோ பெரியவர், அவரை போய் இந்த மாதிரி வந்து ஓயாத கஷ்டத்துல ஆழ்த்தறியே, இது ஞாயமா?” அப்படின்னு கேட்கறார். ஒரு கதையெல்லாம் சொல்றார், பல விஷயங்கள், கண்டிப்பா சொல்றார், கெஞ்சிப் பாக்கறார். கைகேயி ஒன்னும் மனஸு மாறவில்லை. அப்பறம் அந்த காட்சி எல்லாம் முடியறது.

அப்பறம் சுமந்திரர் தான் ராமலக்ஷ்மணாளா தேர்ல ஏத்திண்டு வரார். ஜனங்களெல்லாம் தேர்முன்னால வந்து தடுத்துடறா போகவிடாம. ராமர் இறங்கி நடந்தே போறார், அப்படி அந்த sceneலாம் வருது, அப்பறம் சரயு நதிக்கரைல, சரயூநதியும் வந்து ராமரை தடுத்துடறதாம், நடுவுல நதி வரது, இந்த ஜனங்களெல்லாம் மாதிரி அந்த சரயூநதியும் அவாளை  தடுத்துடறது என்கிறார் வால்மீகி.

“சாயங்காலம் ஆறது. சந்தியா வந்தனம் பண்ணலாம், நீங்க  குதிரை அவிழ்த்து புல்லு காட்டுங்கோ, நீங்க தூங்காம இருங்கோ, குதிரைகளை தேர்லகட்டி readyயா இருங்கோ”ன்னு ராமர் சொல்லி வெச்சியிருக்கார். எல்லாரையும் தூங்கப் பண்ணிட்டு, ராத்திரி பன்னிரண்டு மணிக்கு எழுந்து, லக்ஷ்மணன் கிட்டேயும், சுமந்திரர்ட் கிட்டேயும், சீதாதேவிகிட்டயும் சொல்றார்,

पौरा ह्यात्मकृताद्दुःखाद्विप्रमोच्या नृपात्मजैः।

न तु खल्वात्मना योज्या दुःखेन पुरवासिनः।।

பௌராஹி ஆத்மக்ருதாத் தூக்காத் விப்ரமோக்ஷ்யா நருபாத்மஜை: |

ந து கலு ஆத்மானா யோஜ்யா: துக்கேன புரவாஸின: ||

அதாவது நம்முடைய ஜனங்களை அவாஏதாவது கஷ்டம்னு சொன்னா அதிருந்து காப்பாத்த வேண்டுமே தவிர, நம்மால் அவாளுக்கு ஒரு கஷ்டம் வரக்கூடாது” அப்படின்னு சொல்றார். இந்த மாதிரி ஒரு இளவரசன் இருந்தால் ஜஜனங்களுக்கு அவன் மேலே ப்ரியம் ஏற்படாமல் எப்படி இருக்கும்? இப்படி பேசும் ராமன் தர்மமே ஒரு வடிவமாக தெரிகிறான் என்கிறார் வால்மீகி. ஏன்னா இவா எல்லாரும் காட்டுக்கு வந்து ராமரோடு தான் இருப்போம் அப்படின்னு இந்த ஜனங்கள் எல்லாம் மரத்தடியில் கல்லிலும் முள்ளிலும் படுத்துண்டு இருக்கா. இவா விட்டுட்டு திரும்பி போக மாட்டான்னு ராமருக்கு தெரியும். ஆனா அது தப்பு என்கிறார். என்னால் இவா கஷ்டப் படக்கூடாது. இவாளுக்கு கஷ்டம் என்றால் சரிசெய்ய வேண்டிய பொறுப்பில் நான் இருக்கேன். என்னால் இவா இப்படி காட்டுக்கு வந்து கஷ்டப் படறது நியாயமா? என்கிறார்.

ஒருபெரிய நன்மை ஏற்படுமானால் ஒரு பொய் சொன்னால் தப்பு இல்லை என்று வள்ளுவர் சொன்னது போல, ராமர் சுமந்திரர் கிட்ட “நீங்க இந்த தேரை அயோத்தி பக்கமாக கொஞ்சம் தூரம் ஓட்டிட்டு வாங்கோ” என்கிறார். அப்படி அந்த தேர் தடங்கள் அயோத்தி பக்கம் போகிற மாதிரி பண்ணிட்டு, அப்பறம் தேரில் ராமரும், லக்ஷ்மணரும் சீதாதேவியும் மூன்று பேரும் ஏறிக்கொண்டு சரயு நதியை தாண்டி காட்டுக்குள்ள போயிடறா.

அடுத்த நாள் ஜனங்கள் எல்லாம் எழுந்து பார்த்து, தூக்கத்தை நொந்துக்கறா. தேடும் போது, தேர் அயோத்திக்கு போயிருக்கு என்று நினைத்து அயோத்தி பக்கம் வந்து அயோத்தி வந்து சேர்ந்துடரா. அவளோட மனைவிகள் எல்லாம், “என்ன இருக்குனு இங்க திரும்பி வந்தேள்? வாங்கோ சீக்கரம் அவாளோடவே போய் செர்ந்துப்போம். எங்களை, சீதாதேவி காப்பாத்துவா. உங்களை, ராமர், காப்பாத்துவார். நாம அவனோட போயி இருப்போம். இங்க பரதன், கிட்ட எப்படி வாழ முடியும்?” அப்படினு, சொல்றா.

இதெல்லாம் முடிஞ்சு ராமர் குஹனை போய் பாக்கறார். உயிர்த்தோழனான, குஹனை பார்த்தவுடன் எழுந்து போய், கட்டி அணைச்சு, அன்பு பாராட்டறார். அது ஒரு, காட்சி. அப்புறம், கங்கையை, கடந்து போறா. ஜடாமுடி எல்லாம் போட்டுண்டு, “நாங்க கங்கையை கடந்து போறோம். ஒரு படகை ஏற்பாடு பண்ணு”ன்ன உடனே, குஹன், ஒரு படகை ஏற்பாடு பண்ணி கொடுக்கறான். அவன் அவாளை கொண்டு போய் காட்டுல விடலை. பின்னாடி, பரதன் வந்து, ராமனை அழைச்சுண்டு வரலாம்ங்கிற போது, குஹன் “நானும் வரேன்”னு கிளம்பினான். இப்ப, காட்டுல கொண்டு போய் விடறதுக்கு, வேற ஒரு படகோட்டியை ஏற்பாடு பண்றான்.

இந்த கங்கையை, தாண்டறதுக்கு, முன்னாடி, ராமர் சுமந்திரரை பார்த்து, “சுமந்திரரே, நீங்க பண்ண உதவிகள் எல்லாம் நினைக்கறோம். எங்களோட குலத்துக்கே, நீங்க ஒரு பெரிய துணையா இருக்கேள்.” அப்படீன்னு, சொல்லிட்டு, “நீங்க திரும்பி அயோத்திக்கு போயிட்டு வாங்கோ”, அப்படீன்னு, சொல்ற இடத்துல, சுமந்திரர் சொல்றார். “ஹே ராமா, என்னையும் நீ திரும்பி போகச் சொல்றயா, நானும், இந்த தேரும், இந்த குதிரைகளும், உனக்கு, சேவை பண்றோம், எங்களுக்கு, நல்ல கதி கிடைக்கும், அப்படீங்கறார். அப்படி ராமர்கிட்ட பக்தியா இருக்கார், சுமந்திரர்.

इमे चापि हया वीर यदि ते वनवासिनः। परिचर्यां करिष्यन्ति प्राप्स्यन्ति परमां गतिम्।।

இமே சாபி ஹயாஹா வீர எதி தே வனவாஸின: |

பரிசர்யாம் கரிஷ்யந்தி ப்ராப்ஸ்யந்தி பரமாம் கதிம் ||

ஹயாஹா, இந்த குதிரைகள் கூட பரமாம் கதிம் ப்ரப்ஸ்யந்தி – உயர்ந்த கதியை, மோக்ஷத்தை அடையும். உனக்கு, சிஸ்ருஷை பண்ணா.

तव शुश्रूषणं मूर्ध्ना करिष्यामि वने वसन् । अयोध्यां देवलोकं वा सर्वथा प्रजहाम्यहम्।।

தவ சுஸ்ரூஷணம் மூர்த்னா கரிஷ்யாமி வனே வஸன் |

அயோத்யாம் தேவலோகம் வா சர்வதா பிரஜஹாம்யஹம் ||

“எனக்கு அயோத்தியோ, தேவலோகமோ, வேண்டாம். எனக்கு, உன்னுடைய சேவைதான், வேணும். நான் உன்னோட வரேன்”. அப்படீன்னு சொல்றார். அப்போ, அந்த இடத்துல, இந்த ஸ்லோகம் வர்றது. “ யதி மே யாசமானஸ்ய” நான், எவ்வளோ, தூரம் உன்னை வேண்டி கேட்கறேன், “தியாகமேவ கரிஷ்யஸி” நீ என்னை, கைவிட்டேயானால், ஸரத: அக்னிம் பிரவேக்ஷ்யாமி –  இந்த ரதத்தோட, நான், ஒரு அக்னி மூட்டி, அதுக்குள்ள, போயிடுவேன், இங்க என்னை, கைவிட்டேயானால், அக்னிகுள்ள, விழுந்துடப் போறேன்னு சொல்றார்.

அப்படி, பர்த்ருவத்சல: ன்னு, ஒரு வார்த்தை. தன்னுடைய எஜமானன்கிட்ட, அவ்வளோ பக்தி. ராமருக்கு, ப்ருத்யவத்சல: தன்கிட்ட, வேலை பார்க்கறவாகிட்ட அவ்வளோ, அன்பா இருக்கறவன் ராமன், அப்படீன்னு, ஒருத்தரை ஒருத்தர் அட்ரஸ் பண்ணிக்கற அந்த வார்த்தையே அழகா இருக்கு.

அந்த மாதிரி, “என்னை கை விடாதே”ன்னு, கேட்கறார். அப்போ, ராமர், சொல்றார், “இல்ல, நான், உங்களை கைவிடுவேனா! நீங்க திரும்பி போய், ராமனை, நான் காட்டுல விட்டுட்டேன். அவன் கங்கையை தாண்டி போயிட்டான். அப்படீன்னு கைகேயி காது பட தசரதர் கிட்ட சொன்னாதான், அவா அப்பாவை நிம்மதியா விடுவா.மேலும், பரதன் வருவான். அவனுக்கு, துணையா இருங்கோ. அவனுக்கு பண்ணிணா எனக்கு பண்ணிண மாதிரி இல்லையா”ன்னு, ராமர் அவ்வளோ தூரம், அன்பு வார்த்தைகள் பேசி, அவரை, சமாதானப் படுத்தி, திருப்பி அனுப்பறார்.

சுமந்திரரும்,குஹனும், அந்த கங்கை கரையில, நாலு நாள் wait பண்றா. எங்கேயாவது, ராமன் திரும்பி வருவாரான்னு. அப்புறம், சுமந்திரர் அயோத்தி திரும்பி வரார். தசரதர் கிட்ட சொல்றார். அதெல்லாம், விரிவா போயிடும்.

அப்படி, அந்த பர்த்ருவத்சல: ன்னு, அப்படீன்னு தன்னோட எஜமானகிட்ட, அவ்வளோ பக்தியா இருக்கார். அந்த மாதிரி நமக்கு, குரு, ஒரு வழி காண்பிச்சார்னா அதுலயே நாம த்ருடமா இருக்கணும், அப்படீன்னு, எனக்கு இங்கே இதைச் சொல்லணும்னு தோன்றது. ஏன்னா, என்கிட்ட பழகறவா எல்லாம், இந்த காலத்துல, ஏதாவது ஒரு corporate சாமியார்கிட்ட போறா. அவா overnight ல ஞானத்தை கொடுதுடறேன் என்கிறா. ஏதோ, அந்த முத்திரை, இந்த யோகம். அதாவது, நாலு யுகம் சத்யுகம் அல்லது கிருதயுகம், த்ரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம், அப்படீன்னு சொல்வா இல்லையா. அதுல முதல் யுகத்துல வந்து, இந்த meditation, இந்த தியானம் பண்ணி, பகவானை அடையலாம். இந்த ரெண்டாவது யுகத்துல யாகம் பண்ணி, பகவானை அடையலாம். மூணாவது யுகத்துல பூஜைகள் பண்ணி, பகவானை அடையலாம். இந்த கலியுகத்துல, பகவானோட நாமத்தையும், ஸ்தோத்திரத்தையும் சொல்லி, பகவானை அடையலாம். அப்படீன்னு ஸ்வாமிகள் பாகவதத்துல இருக்கறதை சொல்வார். அதுல தான் எனக்கு நம்பிக்கை. அவர் அந்த வழியில போய், அவர் பகவானை பார்த்தார் அப்படீங்கிறதும் என்னோட நம்பிக்கை. பெரியவாள்லாம் “விமானம், அவர் வைகுண்டம் போவார்”, அப்படீன்னு, சொன்னா.

அதனால, வேற ஒரு method ஐ பத்தி என்கிட்ட சொன்னாலோ, அவர் யாகம் பண்றார், பெரிய தீக்ஷிதர், இல்ல இவர் கோயில் கட்டறார். இல்ல இவர் வந்து, ரொம்ப கோலாகல பூஜைகள் பண்றா. அப்படீனெல்லாம், சொன்னா எனக்கு, “ஆஹா, ரொம்ப நல்ல காரியம்”, அப்படீன்னு சொல்லத் தோணறதே ஒழிய, அதை follow பண்ணனும்னு எனக்கு தோண மாட்டேங்கறது. ஸ்வாமிகள், சொன்ன ஸஹஸ்ரநாம பாராயணம், ராமாயணம், ஸ்தோத்திர பாராயணம், இது தான், safe, correct அப்படீன்னு எனக்கு தோன்றது. அந்த மாதிரி, நமக்கு ஒரு குரு காண்பிச்ச வழி. அந்த வழியில போறது, loyalty, அப்படீங்கிறது, இந்த சுமந்திரரோட ராம பக்தியை பார்க்கும் போது ஞாபகம் வரது.

மீளா அடிமை உமக்கே ஆளாய் (15 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

3 replies on “மீளாஅடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே”

Namaskaram Anna,

Seems the audio file related to this posting is missing. Kindly check if possible.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.