தந்தது உந்தன்னை கொண்டது என்தன்னை


இன்னிக்கு அறுபத்துமூவர் உத்சவம், நாயன்மார்கள் பக்தியை பத்தியே யோசிச்சிண்டு இருந்தேன், அந்த பக்தின்னா என்ன, அப்படின்னா? நாம நம்மளுக்கு வேண்டியதை சாப்படறோம், துணி வாங்கிக்கறோம், நம்முடைய சந்தோஷத்தை தேடிண்டே இருக்கோம். அது சில சமயம் கிடைக்கறது, unsullied pleasure அப்படின்னு ஒண்ணுமில்லை. சுகம்னு ஒண்ணு பின்னாடி போனா, அதுக்கு இடைஞ்சல் ஒண்ணு வரது, அந்த சுகத்தை கெடுக்க. ஒரு cinema பார்க்க போனோம்னா கூட இங்கேயிருந்து theater வரைக்கும் போக வேண்டியிருக்கு, car parking கிடைக்க மாட்டேங்கிறது. என்னவோ அந்த படம் நன்னா இருக்க மாட்டேங்கிறது, ஏதோ, அந்த மாதிரி, சுகம் எங்கிறது நாம நினைக்கறா மாதிரி எப்பவும் அமையறதில்லை. ரொம்ப சுகமாவே இருந்தா கூட, அது முடிஞ்சு போய்டறது, சுகம்ங்கிறது முடிஞ்சு, ஒரு வெறுமை வரது.

அப்படியில்லாம, மத்தவாட்ட ஒரு அன்பு காண்பிச்சோம்னா அதுல ஒரு திருப்தி வரது, அதே வந்து மத்தவாள் கிட்ட அன்பு காண்பிகும் போது கூட,  நம்ம கொழந்தைள் கிட்டேயோ, கணவன் மனைவிக்குள்ளயோ, இல்லை அப்பா அம்மா கிட்டயோ, அதுல கூட ஏதோ ஒரு கணக்கு வழக்கு இருக்கு. அப்படி இல்லாம  குணக்கடலான ஒரு பகவானானை உருவகம் பண்ணி, அந்த பகவானுக்கு அன்பு காண்பிச்சா அவருடைய அன்பை நாம் உணரமுடியும். அது, எல்லாத்தைக் காட்டிலும் த்ருப்தி, சந்தோஷத்தை கொடுக்றது, அப்படின்னு மஹான்கள் உணர்ந்து, அதுக்கு ஒரு வழியா ஒரு நித்ய பூஜை, பக்தியை develop பண்றதுக்கு, ஸ்தோத்ர பாராயணங்கள், பூஜை, நாம ஸ்னானம் பண்றோம், சாப்படறோம், அதையே பகவானுக்கு ஒரு ஸ்னானம், நைவேத்தியம், ஒரு ஷோடஷபசார பூஜை னு பண்றோம்., ஒரு மடங்களில் எல்லாம் , கோவில்களில் எல்லாம் பண்ணும் போது, சதுஷ்ஷஷ்டி உபசார பூஜை அப்படின்னு சொல்லிட்டு, அறுபத்தி ஆறு உபசாரங்கள், நிருத்யம், கீதம், வாத்யம், அப்படினு நாதஸ்வரம் வாசிக்கிறா, பாட்டு பாடறா., டான்ஸ் ஆடறா, பகவானுக்கு எல்லாக் கலைகளும் எல்லாம் அவருக்குத் தான் அர்ப்பணம் பண்ணனும், அப்படிங்கிற எண்ணத்துல சமூகமாக கூடி வந்து, பல விதமான உபசாரங்களை பகவானுக்கு பண்ணினா அதுல ஒரு சந்தோஷம் கிடைக்கறது.

அப்படி பக்திங்கறது, தன்னுடைய மனசை சுயநலத்துலேர்ந்து விடுவிச்சு கொஞ்சம் பகவனோட கார்யம் பண்றது. அதுல உயர்த்த பக்கதிங்கறது, இந்த மனுஷ்ய பாசமெல்லாம் விலகி, அந்த பகவானிடத்துல பாசத்துனால இயங்கறது. இங்க உலகத்துல வந்து ஒரு காதல் தோல்வினா தற்கொலை பண்ணிக்கிறாங்கிற மாதிரி, extremeஆக இந்த உலகத்துல பாசம் வெச்சு ஜனங்கள் behave பண்றதை நாம பார்க்கறோம், அப்படி அந்த கண்ணுக்கு தெரியாத பகவான், அந்த பக்தர்களுக்கு கண்ணுக்கு தெரியறார். அதனால  அவா, அந்த பக்தியை extremeஆக அந்த பக்தியை அவா காமிக்கிறா, பகவானும் அதை ஏத்துக்கறார். அப்பேர்பட்டவர்கள் அந்த நாயன்மார்கள், ஆழ்வார்கள். அவா ஏதாவது ஒரு பெரிய த்யாகம் பண்ணியிருப்பா.


திருநீலகண்ட நாயனார்ன்னு ஒருத்தர். அவர் வந்து மண்பாண்டம் பண்றவர். ஒரு குயவர். தினமும் அவர்  மண்பாண்டங்கள் பண்ணுவார். சிவனடியார்களுக்கு திரு ஓடு அப்படின்னு பிச்சை எடுக்கறதுக்கு எடுத்துண்டு போவாளே அந்த திருவோடு பண்ணி தானமா கொடுப்பார். சிவனடியார்கள் கிட்ட ரொம்ப பக்தியா இருப்பார், இவரோட மனைவியும் அதுக்கு அனுகூலமா இருந்தா. இவர் எப்பவும், அந்த சிவபெருமான் உலகத்தை காக்கிறதுக்காக ஆலகால விஷத்தை பானம் பண்ணிணார், கண்டத்துல நீலமாயிடுத்து, என்ற பாகவனோட அந்த அவஸரத்துல இவருக்கு ரொம்ப ப்ரியம். அதனால திருநீலகண்டம் திருநீலகண்டம்ன்னு சொல்லிண்டே இருப்பார், ஒரு “சாப்பாடு எடுத்து வையம்மா திருநீலகண்டம்”, “நன்னாயிருந்தது சாப்பாடு திருநீலகண்டம்”, “நான் கிளம்பறேன் திருநீலகண்டம், களத்து மேட்டுக்கு போறேன் திருநீலகண்டம்”, திருநீலகண்டம் திருநீலகண்டம்ன்னு அந்த பாகவனோட நாமத்தை சொல்லிண்டே இருப்பார். அதனால அவரோட இயற் பெயரையே மறந்து, எல்லாரும் அவரை திருநீலகண்டம்னே கூப்படறா. இவருக்கு ஏதோ ஒரு நாள் சபலத்துல, ஒரு வேசி வீட்டுக்கு போய்ட்டு வந்துடறார், இது அவர் மனைவிக்கு தெரிஞ்சுடறது, அவர் மனைவி சொல்றா “திருநீலகண்டத்து மீது ஆணை, இனிமேல் நீங்கள் என்னை தொடக் கூடாது” “ஹா சரிமா”ன்னு சொல்லிடறார். அதுலேர்ந்து அவர் அந்த இளமமையையே துறந்துடறார், திருநீலகண்டத்து மீது ஆணை வெச்சதுனால இளமைமையையே துறந்துடறார். ரெண்டு பேருக்கும் வயசாயிடறது, குழந்தைகள் இல்லை.

இவருக்கு அறுபது வயஸு ஆகும் போது, பகவான் இவாளோட பக்தியை உலகத்துக்கு காண்பிக்கறதுக்காக, ஒரு சிவனடியாராட்டும் வரார். சிவனடியார்களுக்கு பூஜை பண்ணிண்டு இருக்கா, இவாளுக்கு ஒண்ணும் குறைவில்லை., சிவபக்தி பண்ணிண்டு, சிவனடியார்களுக்கு பூஜை பண்ணிண்டு, மண்பாண்டம் பண்ணிண்டு, வித்துண்டு காலத்தை போக்கிண்டு இருக்கா. சிவனடியார் வரர், இவா பூஜை பன்றா, அவருக்கு சாப்பாடு போடறா, அவர் சொல்றார் “என்கிட்ட இந்த திருவோடு இருக்கு, இது எனக்கு சாக்ஷாத் பரமேச்வரனே கொடுத்தது, இதை நீ பத்திரமா வெச்சுக்கோ. நான் ஸ்னானம் பண்ணிட்டு வரேன்” அப்படிங்கறார், சரின்னு நாயனாரும் அதை வாங்கி வெச்சுக்கறார், ரொம்பவே பத்திரமா ஜாக்கிரதையா வைக்கறார்,

அவர் போய் ஸ்னானம் பண்ணிட்டு வரார். “என் திருவோட்டை கொடு”ங்கறார். போய் பாத்தா அங்க காணோம். வந்து இருக்கறது பகவான், அதனால அங்க போய் பார்த்தா அந்த திருவோட்டை காணும்.

“சுவாமி அதைக் காணுமே, அதை காணுமே! நான் ரொம்ப ஜாக்கிரதையா வெச்சிருந்தேனே, அதுக்கு பதிலா உங்களுக்கு இன்னொரு திருவோடு பண்ணித் தரேன்”,

“அதெல்லாம் நடக்காது, நீ என்ன! எத்தனை வாட்டி நான் சொன்னேன்! ஜாக்கிரதையாயிருன்னு, நீ தொலைச்சிட்டியே”, அப்டிங்கறார் பகவான்.

“அப்படியில்லை நான் என்ன வேணும்னா பண்றேன். தங்க திருவோடு.கூட பண்ணித்தரேன், எனக்கு என்ன பண்ணனும்னு நீங்க சொல்லுங்கோ”,

“இந்த பேச்செல்லாம் நடக்காது நீ பொய் சொல்கிறாய்” அப்டிங்கறார்,

“நான் பொய் சொல்லவில்லை சுவாமி! பாத்திரமா வெச்சுருந்தேன், அந்த அறையே பூட்டி வெச்சிருந்தேன், எங்க போச்சுன்னு தெரியலையே” அப்படின்ன உடனே,

“நீ உன் மனைவி கையை பிடிச்சுண்டு குளத்துல முங்கி சத்யம் பண்ணிணா தான் நான் நம்புவேன்” அப்படிங்கறார் பகவான்.

“சரி ஸ்வாமி”ங்கறர் திருநீலகண்டர்.,

ரெண்டுபேரும் குளத்தங்கரைக்கு போறா, இவர் மனைவி கையை தொட மாட்டேங்கிறதுனால, ஒரு கம்போட ரெண்டு பக்கம் ரெண்டு பேரும் பிடிச்சுண்டு தண்ணிக்குள்ள இறங்கறேங்கறா. “என்னத்துக்கு இப்படி”ன உடனே, கதையை சொல்றார், “இந்த மாதிரி இவ சத்யம் சொன்னா. அதனால நான் இவளை தொடறது இல்லை”, அப்டிங்கறார், “சரி”ன்னு சொல்றார் பகவான்.

ரெண்டு பேரும் தண்ணிக்குள்ள இறங்கி, வெளியில வரும்போது இருபத்தியஞ்சு வயசா வரா, அப்படி பகவான் ஒரு திருவிளையாடல் பண்ணுகிறார். இது திருநீலகண்டர் கதை.


அப்பூதி அடிகள்னு ஒரு பெரியவர், அவருக்கு திருநாவுக்கரசரை பகவான் எப்படி கல்தூணில் கட்டி கடலில் போட்டாலும் காப்பாத்தினார், சுண்ணாம்பு காளவாய்ல இருந்து காப்பாத்தினார், என்பதைக் கேட்டு அப்பூதி அடிகளுக்கு  திருநாவுக்கரசர் மேல ஒரு பக்தி. அதுனால அவர் அந்த திங்களூரில் எங்கே பார்த்தாலும் திருநாவுக்கரசர் பேரால் எல்லா தருமங்களும் பண்ணுகிறார். திருநாவுக்கரசர் பசு மடம், திருநாவுக்கரசர் அன்னசத்திரம், திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல், இப்படி எல்லாம் திருநாவுக்கரசர் பேரால பண்ணிண்டு இருக்கார். தன்னுடைய மூத்த பிள்ளைக்கு மூத்த திருநாவுக்கரசர் னு பேர் வெச்சு இருக்கார். இளைய பிள்ளைக்கு இளைய திருநாவுக்கரசர் னு பேர் வெச்சு இருக்கார். அப்படி திருநாவுக்கரசர் மேலே அவருக்கு பக்தி.

திருநாவுக்கரசரே அந்த ஊருக்கு வரார். அவர் இதையெல்லாம் பார்க்கிறார். “என்ன இது! யார் இப்படி செய்கிறார்கள்?” என்று கேட்ட உடன் அப்பூதி அடிகளைப் பத்தி சொல்றா. திருநாவுக்கரசர் மேலே அவருக்கு பக்தி னு சொல்றா. அப்பர் அவரைத் தேடி போகிறார். அப்பூதி அடிகள் ஒரு சிவனடியார் வந்திருக்கார் என்று அவரை வரவேற்று அவருடைய கைகால்களை கழுவி, அவருக்கு பாத பூஜை பண்ணி, அவரை அமர்த்தின உடன் திருநாவுக்கரசர் கேட்கிறார் “என்ன இந்த ஊரில் எல்லா புண்ய கார்யங்களுக்கும் திருநாவுக்கரசு என்று பேரிட்டு இருக்கிறார்கள்? யார்இப்படி செய்கிறார்கள்? என்று கேட்கிறார்?” அப்போது அப்பூதி அடிகள் “நான் தான் சுவாமி அப்படி செய்து வருகிறேன்” என்கிறார். அப்போ திருநாவுக்கரசர் “ஏன் உங்க பேரை வைக்காம யாரோ ஒருத்தர் பேரை வெச்சிருக்கேள்?”, அப்படீன்னு, திருநாவுக்கரசர் கேட்கறார். அந்த அப்பூதியடிகளுக்கு, கடுங்கோபம் வந்துடறது. “என்ன உம்மைப் பார்த்தா ஏதோ சிவனடியார்னு நினைச்சு உங்களை கூப்பிட்டு வெச்சு, பூஜை பண்ணிணேன். திருநாவுக்கரசரை தெரியாம இருக்கேளே”, அப்படீன்னு, கோவிச்சுக்கிறார். “பகவானே, அவரை ஆட்கொண்டு காப்பாத்தினார். அவர், பகவானோட உத்தம பக்தர். அவர் பேரை தெரியாம, இருக்கேளே”, அப்படீன்னு சொன்ன திருநாவுக்கரசர் நடுங்கறார். உடனே கைகூப்பி, “உங்கள் அன்புக்கு பாத்திரமான அந்த திருநாவுக்கரசு நான் தான்”, அப்படீன்ன உடனே, மன்னிச்சுக்கோங்கோன்னு கன்னத்துல போட்டுண்டு, எல்லாருமாக அவரை நமஸ்காரம், பண்றா. நாலு பேருமாக.

நீங்கள் இன்று இங்கு அமுது படைக்கணும்ன உடனே, சரின்னு, சொல்றார். அப்போ, “பின்னாடி, போயி, நீ வாழை இல்லை, பறிச்சுசுண்டு வா”ன்னு, மூத்த திருநாவுக்கரசை, அனுப்பறார். போனா அந்த பையனை, பாம்பு தீண்டிடறது. அங்க அவன், மரிச்சு விழுந்துடறான். இவா ரெண்டு பெரும், அம்மா, அப்பா, போயி பாக்கறா. பிள்ளை வரலையேன்னு, அந்த குழந்தை, இப்படி, இருக்கான்ன உடனே, வாழை இலையில அவனை மூடி வெச்சுட்டு, அப்பர் சாப்பிடாம போயிடப் போறாரேன்னு, இவருக்கு, அமுது படைக்கறா. குழந்தை, எங்கேன்னு, கேட்கறார், இவர். “சுவாமி அவன் வர முடியாத நிலமையில இருக்கான்”னு, சொல்றா. “நீ அவனை கூப்பிடு”, அப்படீன்னு உடனே, உண்மையை, சொல்லிடறா. அது மாதிரி, பக்தின்னா, இந்த அடியவருக்கு, அமுது படைக்கணும், இது தட்டி போகக் கூடாதுன்னு,நினைக்கறா, பாருங்கோ. அதுதான், உத்தம பக்தி. “ஆன்னு, திருநாவுக்கரசர் பரமேஸ்வரன் மேல ஒரு பதிகம் பாடறார். அந்த குழந்தை, உயிர்பிழைத்து திரும்பி வரான்.

இந்த மாதிரி, பக்தி வால்மீகி ராமாயணத்துல பரதனோட பக்தி. அவன் காட்டுக்குப் போறான். ராமர், காட்டுக்கு போயிருக்கார், அப்படீன்னா உடனே, எல்லாரையும் கூட்டிண்டு, காட்டுக்குப் போறான். அங்க குஹனை பார்க்கறான். குஹன் கிட்ட, கேட்கறான். “ராமர், வந்தாரா”ன்னு, “ஆமாம், இங்க வந்திருந்தார்” என்றவுடன் “ராமர், என்ன பண்ணிணார்? அவர் என்ன பேசினார்? எங்க சாப்பிட்டார்? எங்க தூங்கினார்?” அப்படீன்னு, கேட்கறான். அப்போ குஹன் சொல்றான். “அவர் வந்திருந்தார். அவர் நான் கொடுத்த உணவை எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டார்”. ராமரும், “காட்டுக்கு வந்திருக்கோம், இந்த மாதிரி, நாட்டை இழந்துட்டோம், அம்மா அப்பாவை பிரிஞ்சு வந்துட்டோம், காட்டுல கஷ்டப்பட போறோம்”, அப்படீன்னு, மனசு கொஞ்சம், சலிக்கதானே, செய்யும். அதுனால, அவர் என்ன பண்றார். அந்த முதல் நாளும், சரயு நதிகரையில, சாப்பிடலை. அடுத்த நாள், இங்க வந்து, குஹனைப் பாக்கறா. அன்னிக்கும், குஹன் கிட்ட எனக்கு எதுவும் சாப்பிட வேண்டாம்ம்னு, சொல்லிடறார். பட்டினி கிடந்தால் துக்கம் தெரியாது. இன்னொன்னு, க்ஷத்ரியர்கள் பிச்சை வாங்கி சாப்பிடக் கூடாது. க்ஷத்ரியர்கள், மத்தவாளை காப்பாத்தறவா. இவருக்கு, இப்ப அந்த காப்பாத்தற பொறுப்பு இல்லை. தசரதர் தான் ராஜா. இவர் தபஸ்வியா காட்டுக்கு போறார். அதனால தன்னுடைய உணவை தானே சம்பாதிச்சுக்கணும். இந்த  குஹன் கொடுக்கறதை வாங்கி சாப்பிடக் கூடாதுன்னு, சொல்லி, நீ எனக்காக, இந்த குதிரைகளுக்கு, ராஜாவோட குதிரைகளுக்கு புல்லு போடு. எனக்கு, லக்ஷ்மணன், கங்கை ஜலத்தை, கொண்டு, வருவான்” ன உடனே, கங்கை ஜலத்தை ஒரு பெரிய தொன்னை பண்ணி லக்ஷ்மணன், கொண்டு வந்து கொடுக்கறான். அதை சாப்பிட்டுட்டு, “இங்க புல்லை விரி”ங்கறார். லக்ஷ்மணன், புல் படுக்கை பண்றான். அதுல ராமரும் சீதையும், அன்னிக்கு ராத்திரி, படுத்துது தூங்கறா. இந்த விஷயங்களை, குஹன், பரதனுக்கு, சொல்றான்.

பரதன், கதறி அழுதுடறான். எங்க அண்ணா

महाभागकुलीनेन महाभागेन धीमता । जातो दशरथेनोर्व्यां न रामस्स्वप्तु मर्हति ।।

“மஹாபாக குலீலேன எவ்வளோ fortunate family இது. நாலு திக்குல இருக்கற எல்லா தேசங்களையும், கட்டி ஆண்ட மஹாராஜா. அவ்வளோ, பாக்கியவானான உயர்ந்த குலத்துல பொறந்த அந்த தசரதருக்கு, பிள்ளையா பொறந்த ராமன், உர்வியாம்-தரையில்  ந ஸ்வப்துமர்ஹசி- அவன் இந்த மாதிரி, தரையில தூங்கக் கூடாது, அப்படீன்னு, சொல்றான். என்னிக்காவது, ஒருநாள் ராமரும் லக்ஷ்மணருமாவது, வேட்டையாட வந்தபோது, மரத்தடியில படுத்துண்டு, இருப்பா. சீதாதேவி இங்க வந்து, படுத்துண்டாளா? அவளுடைய அந்த துணியிலிருந்து, ஜரிகை எல்லாம், தெரியறதே, அவளுடைய தங்க நகைகளுடைய துகள்கள் எல்லாம், விழுந்திருக்கு. ஜனக மஹாராஜாவின் குமாரத்தி, ராமனுடைய பத்னி அவ. இங்க வந்து, புல்லுல படுத்துண்டாளா, கணவன் பக்கத்துல இருக்காங்கிறதுனால, அவ அதை நினைச்சிருக்கா மாட்டா. ஆனா என்னால இந்த காட்சியை, ஸஹிக்க முடியலையே, அப்படீங்கறான்.

ராமர், எப்படி தூங்கணும், அப்படீன்னு சொல்றான். எனக்கு இந்த ராமர், எப்படி சௌகரியமா தூங்கணும் அப்படீன்னு சொல்றது, ரொம்ப ரசிக்கும்படியா ரொம்ப grandஆ இருந்தது. அதாவது மேரு மலை மாதிரி ஒரு அரண்மனை. அதுல ஏழாவது மாடியில எங்க நல்ல தென்றல் காற்று வீசுமோ, அந்த மாதிரி ஒரு இடத்துல ஒரு பெரிய அறை. அந்த அறையில தரையெல்லாம், தங்கம் வேய்ஞ்சிருக்காம். அந்த தரையில காஷ்மீர கம்பளங்கள் போட்டிருக்கு. சந்தன கட்டில். அதுல ஹம்ஸ தூளிகா மஞ்சம் அப்படீன்னு, சொல்லி, நல்ல ஹம்ஸங்களுடைய இறக்கைகளை வெச்சு பண்ண ஒரு மெத்தை. அந்த மெத்தையில தூங்கணும். அயோத்தியில அப்படித்தான் தூங்குவா. கிளிகளோட சப்தங்களும், குயில்களோட சப்தங்களும்.கேட்கணும். அந்த படுக்கைக்கு நல்ல பூ மாலைகள் எல்லாம் கட்டி நல்ல அலங்காரம் பண்ணி, நல்ல சந்தனம், அகரு அப்படீன்னு நல்ல சுகந்தம் வீச, நல்ல குளிர்ச்சியா இருக்கக் கூடிய ஒரு அறையில வெண்மேகங்களைப் போல ஒரு ஒளி, ஒரு வெளிச்சம் இருக்கக் கூடிய அப்படீங்கறான். அந்த மாதிரி, ஏதோ ஏற்பாடு பண்ணி இருப்பா போல இருக்கு. அப்படி ஒளி வீசக் கூடிய அந்த அறையில ஆனந்தமா தூங்கிட்டு கார்த்தால, நல்ல வீணாவாத்யங்கள், ம்ருதங்கள்லாம் கேட்க வெச்சு, சங்கீதத்தோட எழுந்து சூத மாதக வந்திகள் எல்லாம் வந்து அவர் புகழை பாடி எழுப்பணும்.

இங்க தரையில படுக்கறதுக்கு, நான் காரணம் ஆயிட்டேனே! நான் இந்த மாதிரி, தரையில தான், இனிமே படுப்பேன். நான் தபஸ்வியா இருப்பேன். என் ராமரை அழைச்சுண்டு போயி பட்டாபிஷேகம் பண்ணுவேன், அவன் ராஜாவா இருக்கணும். அவனுக்கு, பதிலா நான் இந்த பதினாலு வருஷம் தபஸ்வியா இருப்பேன்.. இது சத்யம். என்னுடைய இந்த சத்யத்தை, தெய்வங்கள் நிறைவேத்தாதா?! அப்படீங்கறான். அந்த சத்யத்தை, தெய்வங்கள் நிறைவேத்தி கொடுத்தது அவனுக்கு, ஒரு விதமா. எப்படீன்னா, இந்த ராம பாதுகையை எடுத்துண்டு போயி பட்டாபிஷேகம் பண்ணான். ராமர் பாதுகை ராமர்தான். அதனால ராம பாதுகை ராஜாவாச்சு. அவன் தபஸ்வியா இருந்தான். ராமரைவிட கடுமையான வ்ரத நியமங்கள் எல்லாம், அனுஷ்டிச்சுண்டு, தபஸ்வியா இருந்தான். ராமர், அங்க கோதாவரில குளிக்கறார்னா, இவன் இங்க மூணு மணிக்கே எழுந்து குளிர்ல போயி சரயுல குளிச்சுண்டு இருந்தான்.

இந்த ராமர், நன்னா தூங்கணும், காட்டுல வந்து, தரையில படுத்து கஷ்டப் படறாளே, கல்லுளையும், முள்ளுலயும் கஷ்டப்பட்டு தூங்கறாரேன்னு நினைச்சுண்டே இருக்கான். அவனுக்கு அது ரொம்ப உள்ள போயிருக்குங்கிறதுக்கு, ராமர், பதினாலு வருஷம் கழிச்சு திரும்பி வந்தபோது “ஹே ராமா! இந்த ராஜ்யத்தை உன்கிட்ட திரும்ப ஒப்படைச்சுடறேன் , இந்த பாரத்தை என்னால இனிமே தாங்க முடியாது”, அப்படீன்னு, சொல்றபோது கூட இந்த வார்த்தையை சொல்றான்.

तूर्यसङ्घातनिर्घोषैः काञ्चीनूपुरनिस्वनैः |

मधुरैर्गीतशब्दैश्च प्रतिबुध्यस्व राघव ||

“தூர்ய சங்காத நிர்கோஷை: – நல்ல நாதஸ்வரம் போன்ற இனிமையான சங்கீதத்தை கேட்டுண்டு காஞ்சீ நூபுர நிஸ்வனை: – இடுப்புல ஒட்டியாணம், கால்ல கொலுசு போட்டு பெண்கள் எல்லாம் நடக்கக் கூடிய அந்த சப்தத்தை எல்லாம்  கேட்டுண்டு மதுரை: கீதஷப்தைஸ்ச மதுரமான கீத சப்தம், நல்ல சங்கீதம், பெண்கள் நடமாடற அந்த சப்தம், இதையெல்லாம், கேட்டுண்டு ப்ரதிபுத்யஸ்வ ராகவ – நீ எழுந்துக்கணும். நீ திரும்பியும் பட்டாபிஷேகம் பண்ணிண்டு, ராஜாவாகி

यावदावर्तते चक्रन् यावती च वसुन्धरा |

तावत्त्वमिह सर्वस्य स्वामित्वमनुवर्तय ||

“யாவதாவர்த்ததே சக்ரம் யாவதீ ச வசுந்தரா |

தாவத் த்வம் இஹ சர்வஸ்ய ஸ்வாமித்வம் அனுவர்த்தய ||

நீதான் எங்களுக்கெல்லாம் கால சக்கரம் இருக்கற வரைக்கும் ராஜாவா இருக்கணும், அப்படீன்னு, கேட்டுக்கறான். ராமர் “ததா” அப்படியே ஆகட்டும் அப்படீன்னு சொல்றார்.

இந்த மாதிரி பரத பக்தியை பார்த்து தான், பின்னாடி வந்தவாள்லாம் ஒரு idealஆக தெய்வமாட்டமாக ஒருத்தர் கிடைச்சா, அவாகிட்ட பக்தி பண்ணனும்கிறதை தெரிஞ்சிண்டு இருப்பா. அந்த குரு பக்தி அப்படியே தெய்வ பக்தியா வளர்ந்திருக்கும். அதுல இருந்துதான், நாயன்மார்கள் எல்லாம், வந்து, பக்தி மார்கமே உருவாகி , அவாளை கொண்டாடனும்னு நாம தெரிஞ்சுண்டு, அறுபத்து மூவர் உத்சவம் பண்ணி கொண்டாடறோம். அதனால நமக்கும் ஒரு சொட்டு பக்தி வருமான்னு ஆசையோட.

தந்தது உந்தன்னை கொண்டது என்தன்னை (15 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

Share

Comments (3)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.