Categories
Ramayana One Slokam ERC

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே

இன்னிக்கு பௌர்ணமி சந்திரன்ல கொஞ்ச நேரம்  நின்னுட்டு வந்தேன். மூகபஞ்ச சதில கடாக்ஷ சதகத்துல ஒரு ஸ்லோகம்

यावत्कटाक्षरजनीसमयागमस्ते कामाक्षि तावदचिरान्नमतां नराणाम् ।

आविर्भवत्यमृतदीधितिबिम्बमम्ब संविन्मयं हृदयपूर्वगिरीन्द्रशृङ्गे ॥

யாவத் கடாக்ஷ  ரஜநீ ஸமயாகமஸ்தே

காமாக்ஷி தாவத், அசிராத் நமதாம் நராணாம் |

ஆவிர்பவதி அம்ருததீதிதி பிம்பம் அம்ப

ஸம்வின்மயம் ஹ்ருதய  பூர்வ கிரீந்தர ஸ்ருங்கே ||

அம்மா காமாக்ஷி ‘யாவத்’ – எதுவரையில், ‘கடாக்ஷ  ரஜநீ ஸமயாகமஸ்தே’ – உன்னுடைய கடாக்ஷம் என்கிற இரவு வேளை வருகிறதோ, அதுவரையில் ‘அசிராத்’ – இடையறாமல் ‘நமதாம் நராணாம்’ –  நமஸ்காரம் பண்ணிண்டே இருக்கக் கூடிய அந்த மனிதனுடைய, ‘ ஹ்ருதய  பூர்வ கிரீந்தர ஸ்ருங்கே’ மனமாகிய கிழக்கு சிகர முகட்டில், ‘ஸம்வின்மயம்’ ஞானம் என்கின்ற பூர்ண சந்திரன் உதயமாகும், அப்படின்னு ஒரு அழகான ஒரு ஸ்லோகம்.

யாவத் கடாக்ஷ  ரஜநீ ஸமயாகமஸ்தே

காமாக்ஷி தாவத், அசிராத் நமதாம் நராணாம் |

ஆவிர்பவதி அம்ருததீதிதி பிம்பம் அம்ப

ஸம்வின்மயம் ஹ்ருதய  பூர்வ கிரீந்தர ஸ்ருங்கே ||

அப்படின்னு அம்பாள் மேலே இந்த ஸ்லோகம் ஞாபகம் வந்தது. “சரி, இன்னைக்கு அம்பாள் பரமா ஏதாவது சொல்லலாம்” னு நினைச்சேன். ராமாயணத்தில் அம்பாள் னா ராமருடைய அம்மாவை பத்தி பேசுவோம் அப்படின்னு தோணித்து.

கௌசல்யா தேவியை பத்தி பேசணும்னா, quote பண்ண வேண்டிய ஸ்லோகம் வந்து,

यं पालयसि धर्मं त्वं धृत्या च नियमेन च । स वै राघवशार्दूल धर्मस्त्वामभिरक्षतु।।

யம் பாலயஸி தர்மம் த்வம் திருத்யா ச  நியமேன ச |

ஸவை ராகவசார்துல தர்மஸ்த்வாம் அபிரக்ஷது ||

அப்படின்னு கௌசல்யா தேவி ராமனை காட்டுக்கு அனுப்பும்போது. மங்களாசாஸனம் பண்ணறதுக்கு முன்னாடி ஒரு ஸ்லோகம் சொல்றா. எந்த தர்மத்தை நீ த்ருதியோட – ரொம்ப சந்தோஷத்தோடும், நியமத்தோடும் follow பண்றயோ, ஹே ராம ‘ ராகவசார்துல’ என்கிறாள். ‘தர்மஸ்த்வாம் அபிரக்ஷது’ அந்த தர்மமே உன்னை காப்பாற்றட்டும். அதாவது ஒரு தர்மம் பண்ணிணோம்னா, அதை விரும்பி பண்ணனும், ரொம்ப sincereஆக disciplined ஆக பண்ணனும் அப்படிங்கறது தெரியறது, அந்த மாதிரி ராமர் பண்றார்.

ராமன் அந்த கைகேயி அரண்மனையில் இருந்து குடை, தேர் எல்லாம் விலக்கிட்டு கௌசல்யா தேவி கிட்ட வறார். அதுக்கு முந்தின காட்சியை கேட்டால் ரொம்பவே shockingஅ இருக்கும்.  ராமர் கைகேயி கிட்ட சொல்றார் “நான் பரதனை வரவழைத்து பட்டாபிஷேகம் பண்ணிட்டு, கிளம்புறேன் அம்மா”ங்கறார். அவ சொல்றா “இல்லை, இல்லை! நீ இப்பவே இன்னிக்கே கிளம்பிடு, நான் பரதனை வரவைத்து ராஜ்யத்தை கொடுத்துகறேன், நீ கிளம்பினா தான், தசரதர் ஸ்னானம் பண்ணுவார், சாப்பிடுவார்” அப்படின்னு சொன்ன உடனே, அதாவது அவளுக்கு சந்தேஹம், எதாவது இவா எதாவது நம்மளுடைய planஐ மாத்திவிடப் போறாளோ, அப்படின்னு கைகேயிக்கு ஸந்தேஹம். மனசு அவ்வளோ மாறி போய்டுறது அவளுக்கு “ராமனுக்கும் பரதனுக்கும் நான் ஒண்ணுமே வித்யாசம் பார்க்கவில்லை, ராமனுக்கு ராஜ்யம் கிடைச்சா, பரதனுக்கு  ராஜ்யம் கிடைச்சா மாதிரி தானே” அப்படின்னு சொல்றா மந்தரை கிட்ட. அப்படி சொன்னவள் , இப்போ “நீ உடனே கிளம்பு”ங்கறா.

இதை கேட்ட உடனே தசரதர் அட பாவமே! அப்படின்னு சொல்லி  திக்! அப்படிங்கறார், சீ! சீ! அப்படின்னு சொல்றார். என்ன பண்ணமுடியும் அவரால? மேலும் மேலும் அவரோட வருத்தத்தை ஜாஸ்தி பண்றா இந்த கைகேயி. அப்போ ராமர் ஒரு பதில் சொல்றார்

नाहमर्थपरो देवि लोकमावस्तुमुत्सहे । विद्धिमामृषिभिस्तुल्यं केवलं धर्ममास्थितम् ।।

நாஹம் அர்த்தபரோ தேவி லோகமாவஸ்தும் உத்சஹே |

வித்தி மாம் ரிஷிபிஸ்துல்யம் கேவலம் தர்மம் ஆஸ்திதம் ||

அம்மா! எப்படியாவது பணம் சம்பாதிச்சு அதை அனுபவிக்கணும்னு நினைக்கிற ஆள் கிடையாது, நான் ரிஷிகளைப்போல தர்மத்தை முக்கியமா நினைக்கிறவன். அதனால நான் இப்பவே கிளம்பறேன்” அப்படின்னு சொல்லிட்டு, “என்னுடைய அம்மா கிட்டேயும், சீதாதேவி கிட்டேயும் சொல்லிண்டு உத்தரவு வாங்கிக்றதுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் கொடுங்கோ”ங்கறார். இந்த ராஜ்யமே உன்னோடதுன்னு சொன்னது போக, நீ காட்டுக்கு போன்ன போது, கொஞ்ச நேரம் இங்க இருக்க, அனுமதி கொடுங்கோ”ன்னு கேட்கறார், அப்படி சொல்லிட்டு வெளில வந்துடறார்,

கௌசல்யா தேவியோட அரண்மனைக்கு வரார். கௌசல்யா தேவி, ராமர் வந்த உடனே, தங்க பலகையை போட்டு “ராமா உட்காரு, பத்து இல்லாம ஒரு sweet பண்ணி வெச்சிருக்கேன். சாப்பிட்டு விட்டு போ, எத்தனை நேரம் ஆகுமோ. இந்த பட்டாபிஷேகம் முடிஞ்சு வரத்துக்கு” அப்படின்னு, அம்மா என்கிறவளுக்கு, குழந்தை சாப்பிடணும். அது மாதிரி சொல்றா. அப்போ ராமர் “அம்மா! இந்த தங்க பலகையில் உட்காருகிற காலம் மாறி போயிடுத்து. தர்பாஸனத்துல உட்கார வேண்டிய காலம் வந்திருக்கு, என்னை பெருந்தகையான தசரத மஹாராஜர், பதினான்கு வருடங்கள் காட்டுக்கு போகச் சொல்லி இருக்கார்” அப்படின்னு சொல்றார். அவ அப்படியே அடியற்ற மரம்போல மூர்ச்சை போட்டு விழுந்துடறா.

கௌசல்யா தேவி அப்பறம், எழுந்துண்டு, கதறுகிறாள். “நான் என்ன பாவம் பண்ணினேன்? இப்படி ஒரு நல்ல குழந்தையைபெற்று வளர்த்து ஆளாக்கி, அவனுக்கு ராஜ்யம்னு சொல்லிட்டு இப்படி காட்டுக்கு போன்னு சொல்றாளே, நான் என்ன பண்ணுவேன்? இந்த கைகேயி பொல்லாதவன்னு தெரிஞ்சு தான் நான் ரொம்ப ஜாக்ரதையாக, உனக்கு எதுவும் கஷ்டம் வந்துடக் கூடாதுன்னு, நான் மூத்த மனைவியாக இருந்தாலும் பணிஞ்சு போயிண்டு இருந்தேன். அவளுக்கு கௌரவத்தை குடுத்தேன். ஆனா இப்ப அந்த கஷ்டமே விடிஞ்சுடுத்தே. இந்த மாதிரி ஒரு குழந்தையைப் பெற்று எங்கேயோ காட்டுக்கு அனுப்பறதுக்கு நான் மலடியாகவே இருந்திருக்கலாமே” அப்படி பலது புலம்பறா.

அதுக்கப்பறம் அவ சொல்றா, “இல்லை. நான் உன்னை காட்டுக்கு போக அனுமதிக்க மாட்டேன். என் சக்களத்தி நினச்சதை நடத்திக்க பாக்காறா. நானும் பிடிவாதம் பிடிக்கறேன். அவ பிடிவாதம் பிடிக்கறா இல்லையா? நானும் பிடிவாதம் பிடிக்கறேன். உனக்கு காட்டுக்கு போக நான் அனுமதி தர மாட்டேன். அவ்வளவு தான். இங்கே இருந்து நீ எனக்கு கைங்கர்யம் பண்ண வேண்டும். மாத்ரு ஸுஸ்ரூஷையும் ரொம்ப முக்கியம் தானே. இங்கே இருந்துண்டு நீ எனக்கு கைங்கர்யம் பண்ணு” என்கிறாள்.

அப்போ ராமர் “அம்மா! அப்பா சத்தியத்துக்கு கட்டுப்பட்டு வேறே வழி இல்லாமல் என்னை காட்டுக்கு போகச் சொல்றார், அதனால அவர் தர்மத்தோட வழியில் தான் இருக்கார். நானும் அவர் சொன்னதை கேட்கணும்னு நினைக்கிறேன். இது வந்து நான் ஏதோ புதுமையா பண்றது இல்லை. எவ்வளோவோ மஹான்கள், அப்பா வார்த்தையை கேட்டு, கஷ்டத்தை அனுபவிச்சு, பின்னாடி நன்மையை அடைஞ்சு இருக்கா. அதுனால அப்பா வார்த்தையை கேட்டா, கெடுதலே வராது” அப்படின்னு நிறைய கதைகள் எல்லாம் சொல்றார், “எனக்கு அனுமதி கொடும்மா”ன்னு கேட்கிறார்.

அப்போ லக்ஷ்மணர் கூட சொல்றார், “அம்மா, எனக்கும் இது கொஞ்சம்கூட பிடிக்கவே இல்லை, என்ன இது ஒருபாவமும் பண்ணாத ராமனை, எதிரிகளுக்குகூட  கருணை பண்ணகூடிய ராமனை, ஒரு குற்றமும் சுமத்தாமல், பதினாலு வருஷம் காட்டுக்கு போன்னா, என்னது இது! வயசான காலத்துல புத்தி மழுங்கிப் போயி இந்த தசரத மஹாராஜா இப்படி பண்றார். வயசானாவா தர்மத்தைத் மீறி கார்யங்கள், பண்ணிணா, அவாளை, அடக்கலாம். அதனால நான், அந்த தசரதரை ஜெயில்ல போட்டுட்டு, ராமனை ராஜாவாக்கறேன். யார் வந்து தடுக்கறான்னு, பார்க்கலாம். பரதன் வரானா? அவனோட ஆட்கள் வராளான்னு, பார்க்கறேன். நான் ஒண்ணும் சும்மா இந்த தோள்களை சந்தனம் பூசிக்கறதுக்கும், கேயூரம் போட்டுக்கறதுக்கும் வளர்க்கலை. இந்த கத்தி வில்லெல்லாம் show காக வெச்சுருக்கலை. என் ராமனை காப்பாத்தறதுக்காக தான் நான் இந்த உடம்பை வளர்த்திருக்கேன். ராமர் ஒரு நெருப்புல விழணும்னு சொன்னா, அவனுக்கு முன்னாடி நான் போயி விழுவேன். அதனால இந்த ராமனை நான் இன்னிக்கு ராஜாவாக்கறேன்” அப்படீன்னு, சொல்றான்.

அப்ப ராமர், “ஹே, லக்ஷ்மணா நீ அம்மாவோட திருப்திக்காக பேசற. என் மனசை, புரிஞ்சுக்காம பேசறியே” அப்படீன்னு சொல்றா. இது வந்து, கைகேயி பண்றது இல்ல. இது தெய்வங்களோட கார்யம். இது விதி வசமா வந்துருக்கு. நேத்திக்கு, ராஜ்யம்னு சொல்லி இன்னிக்கு கூப்பிட்டு, வனவாசம்னு சொன்னா, இது கைகேயி நினைச்சு நடக்கறது இல்ல. இது விதி. இதை நாம ஏத்துக்கணும். அதை மீற முடியாது”ன்னு, சொல்றார். அப்போ, லக்ஷ்மணர் சொல்றார், “என்ன ஒரு வீரனா இருந்துண்டு விதியை நொந்துக்கறே! விதியை நான் பௌருஷத்தால் மாத்திக் காண்பிக்கறேன். எனக்கு உத்தரவு கொடு”, அப்படீங்கறார். அப்போ ராமர், சொல்றார், “எனக்கு உத்தரவு கொடுங்கிறேள்ளோல்யோ, நான் உனக்கு, தசரதரை,  ஜெயில்ல போடறதுக்கு, உத்தரவு, கொடுக்க மாட்டேன். நான் அப்பா வார்த்தையை தான் கேட்கப் போறேன். காட்டுக்குத் தான், போகப் போறேன். நீயும் இதைத் தான், ஒத்துக்கப் போறே, அப்படி இருக்கறச்சே, விதிதான், வெல்லும், அப்படீன்னு சொல்றார். அவன் என்ன பண்ணுவான், பாவம்.

அப்புறம், கௌசல்யை சொல்றா.

किं जीवितेनेह विना त्वया मे लोकेन वा किं स्वधयाऽमृतेन।

श्रेयो मुहूर्तं तव सन्निधानं ममेह कृत्स्नादपि जीवलोकात्।।

கிம் ஜீவிதேநேஹ விநா த்வயா மே லோகேந வா கிம் ஸ்வதயாமரிதேந |

ஷ்ரேயோ முஹூர்தம் தவ ஸந்நிதாநம் மமேஹ கரித்ஸ்நாதபி ஜீவலோகாத் ৷৷

“எனக்கு, சொர்க்கலோகமும் வேண்டாம், அமிர்தமும் வேண்டாம். எனக்கு இந்த அயோத்தி வாழ்க்கையும், வேண்டாம், உன்னுடைய சந்நிதி இல்லாம எனக்கு எது தான் இனிக்கப் போறது? எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம். ராமா, என்னை உன்னோட கூட்டிண்டு போ. காட்டுல ஆஸ்ரம வாசல்ல, ஒரு மானை கட்டி வைக்கறா மாதிரி, என்னை பக்கத்துல வெச்சுக்கோ. என்னை இங்க விட்டுட்டு போகாதே. இந்த கைகேயி கிட்ட” அப்படீன்னு, கேட்கறா. அப்போ, சொல்றா, “ஒரு புல்லை தின்னுண்டாவது, உன் பக்கத்துல, இருக்கேன், ராமா”ங்கறா. அப்படி அதுதான், உண்மையான பக்தி. அப்படி சொல்ற தாயார், அவள். அப்படி ராமன் கிட்ட அன்பு, வெச்சிருக்கா.

ஆனா ராமர், அதுக்கு சொல்றார். “அம்மா, கைகேயி தசரதரை கை விட்டுட்டா. அந்த மாதிரி நீயும் பண்ணலாமா? நீயல்லவா இப்ப தசரதருக்கு துணையா இருக்கணும்? அந்த வார்த்தை வாஸ்தவம்தான். தசரதர் வந்து, ராமன் காட்டுக்கு போன உடனே கீழே விழறார். கைகேயி வந்து தூக்க வரா. “என்னை தொடாதே, கைகேயி. உன்னை, தர்மத்தை கைவிட்ட உன்னை, நான் கைவிட்டேன், எனக்கு நீ மனைவி கிடையாது” அப்படீன்னு சொல்லிட்டு “என்னை கொண்டு போயி, ராமமாதா கௌசல்யா அரண்மனையில போடுங்கோ”ன்னு சொல்றார். தசரதர். அந்த மாதிரி, கௌசல்யா, ஒரு ஆறுதலா இருப்பான்னு தசரதர் நினைக்கறார். அது, ராமருக்கு, தெரிஞ்சதுனால “நீயும் அந்த மாதிரி தசரதரை, கைவிடக் கூடாது. நீ இங்க அவர் பக்கத்துல தான் இருக்கணும். அப்படீன்னு, சொல்லி ஒரு சில ஸ்லோகங்கள் வரது,

व्रतोपवासनिरता या नारी परमोत्तमा। भर्तारं नानुवर्तेत सा तु पापगतिर्भवेत्।।

भर्तु श्शुश्रूषया नारी लभते स्वर्गमुत्तमम्। अपि या निर्नमस्कारा निवृत्ता देवपूजनात्।।

शुश्रूषामेव कुर्वीत भर्तुः प्रियहिते रता। एष धर्मः पुरा दृष्टो लोके वेदे श्रुतः स्मृतः।।

வ்ரதோபவாஸநிரதா யா நாரீ பரமோத்தமா |

பர்தாரம் நாநுவர்தேத ஸா து பாபகதிர்பவேத்৷৷

பர்து ஷ்ஷுஷ்ரூஷயா நாரீ லபதே ஸ்வர்கமுத்தமம் |

அபி யா நிர்நமஸ்காரா நிவ்ருத்தா தேவபூஜநாத் ৷৷

ஷுஷ்ரூஷாமேவ குர்வீத பர்துஃ ப்ரியஹிதே ரதா |

ஏஷ தர்ம: புரா தரிஷ்டோ லோகே வேதே ஸ்ருத: ஸ்மருத:৷৷

எந்த ஒரு பெண், தன கணவனை, கவனிக்காமல், விரத, உபவாசங்கள், எல்லாம், பன்றாலோ, அவள், நரகத்துக்குப் போவாள். “பர்து ஷ்ஷுஷ்ரூஷயா நாரீ லபதே ஸ்வர்கமுத்தமம்” பர்த்ரு சிஸ்ருஷைனாலதான், ஒரு பெண், சுவர்க்கம், அடைவாள். “அபி யா நிர்நமஸ்காரா நிவ்ருத்தா தேவபூஜநாத்” எந்த பெண், பர்த்ரு ஸுஸ்ருஷை பண்ணிண்டு, தெய்வங்களை எல்லாம் நமஸ்காரம் பண்ணலை, ஒரு விதமான, விரதங்களையும், பூஜைகளையும் பண்ணலை, ஆனாலும், அவளைத்தான், எல்லாரும் தெய்வங்கள், போற்றும். பெய்யென பெய்யும் மழைன்னு சொல்றாரே, வள்ளுவர். அந்த மாதிரி, “ஏஷ தர்ம: புரா தரிஷ்டோ லோகே வேதே ஸ்ருத: ஸ்மருத:৷৷” வேதத்துலயும், ஸ்ருதியிலும், ஸ்மிருதியிலும் மஹான்களுடைய நடத்தையிலும், பெரியவா மூதன்னையர்கள் எல்லாரும் இதைத் தான் நடத்தி காண்பிச்சிருக்கா. இதைத் தான், புரிய வெச்சிருக்கா. அதனால, நீ உன், கணவனோட இரு. இங்கதான், உன்னோட இடம், அப்படீன்னு சொல்றார், ராமர். அப்புறம், சொல்றார்.

अग्निकार्येषु च सदा सुमनोभिश्च देवताः। पूज्यास्ते मत्कृते देवि ब्राह्मणाश्चैव सुव्रताः।।

அக்நிகார்யேஷு ச ஸதா ஸுமநோபிஷ்ச தேவதா: |

பூஜ்யாஸ்தே மத்கரிதே தேவி! ப்ராஹ்மணாஷ்சைவ ஸுவ்ரதா:৷৷

அப்படீன்னு, சொல்லிட்டு, அக்னி கார்யத்தையும்,  புஷ்பங்களை கொண்டு, விஷ்ணு பகவானை, ரங்கநாதருக்கு பூஜை பண்றதையும் விட்டுடாதே. பிராம்மணர்கள், பெரியவா எல்லாரையும், நமஸ்காரம், பண்ணிண்டு இரு. நான் அங்க காட்டுல க்ஷேமமா இருக்கணும்கிறதுக்காக, நீ இதெல்லாம் பண்ணு” அப்படீங்கறார்.

அதாவது, பூஜையை காட்டிலும், பர்த்ரு ஸுஸ்ருஷை பெரிசுன்னு சொல்றார். இந்த பர்த்ரு ஸுஸ்ருஷையை பண்ணிட்டு, பூஜையும் பண்ணு, எனக்காக பண்ணு, அப்படீன்னு சொல்றார்.

அப்போ, வேற என்ன பண்ணுவா, கௌசல்யா தேவி “சரி”ன்னு சொல்றா. அங்க தான், கௌசல்யையோட பெருமை தெரியறது. கைகேயி கிட்ட கால்ல விழுந்து தசரதர் கெஞ்சறார். அவள் மறுத்துடறா. “எனக்கு சொத்து தான் வேணும். என் பிள்ளைக்கு இந்த ராஜ்ஜியம் வேணும்”னு கேட்கறா.

இங்க கௌசல்யாதேவி “புல்லை தின்னுண்டாவது, உன் பக்கத்துல இருக்கேன் ராமா”ன்னு சொன்னாலும், “நீ தசரதர் பக்கத்துல இரு”ங்கறார் ராமர். இந்த கைகேயி கிட்ட ஆட்சி, போன பின்ன தசரதர் பக்கத்துல இருக்கறது, எவ்வளவு கஷ்டம், கௌசல்யைக்கு! ஆனால், தர்மம்னு எடுத்து சொன்ன உடனே, கேட்டுக்கறா. சரி, ராமா நீ சொல்றதுதான் சரி. நான் என்ன பண்ணுவேன்? சரி க்ஷேமமா நீ போயிட்டு வா” அப்படீன்னு சொல்லி அந்த இடத்துலதான்,

यं पालयसि धर्मं त्वं धृत्या च नियमेन च । स वै राघवशार्दूल धर्मस्त्वामभिरक्षतु।।

யம் பாலயஸி தர்மம் த்வம் திருத்யா ச  நியமேன ச |

ஸவை ராகவசார்துல தர்மஸ்த்வாம் அபிரக்ஷது ||

“உன்னோட தர்மமும் சத்தியமும், எதை இவ்வளவு உறுதியாகவும், இவ்வளவு நியமமாகவும், ஆசையாகவும், நீ அதை காப்பத்தறயோ. அது உன்னை காப்பாத்தும்னு” சொல்றா. மஹாபெரியவா இந்த ஸ்லோகத்தை, quote பண்ணி ராவணனுக்கு, தம்பிகள், இருந்தா கோட்டைகள் இருந்தது, அஸ்த்ரங்கள், இருந்தது. அதெல்லாம், அவனுடைய பத்து தலைகள் ல ஒண்ணைக் கூட காபாத்தல. இப்படி, கௌசல்யை, கட்டி கொடுத்த இந்த பொதிசோறு, பதினாலு வருஷம் கெட்டுப் போகாம, இருக்கக் கூடிய சாப்பாடு, என்ன கட்டி கொடுக்க முடியும்னு பார்த்தாளாம், கௌசல்யை. இந்த சத்தியத்தையும், தர்மத்தையும், தான் நீ காப்பாத்தற. இதுதான் உன்னை காப்பாத்தும், அப்படீன்னு சொல்லி அதை கட்டி கொடுத்தாளாம். அதுதான், ராமனை காப்பாத்தித்து”, அப்படீன்னு மஹா பெரியவா பேசியிருக்கா.

அதற்கப்புறம், அவ கை அலம்பிண்டு, அதாவது துக்கத்துல, கண் ஜலம், விட்டா, அந்த கண் ஜலம் கையில பட்டுதுன்னா, அது அஸூசி. அதனால கை அலம்பிண்டு, அவ பிராம்மணாளை கூப்பிட்டு ஒரு ஹோமம், பண்ணி அந்த ஹவிசை ராமனுக்கு கொடுத்து, அப்புறம், ஒரு நாலு ஐந்து ஸ்லோகங்கள்  சொல்லி, மங்களாசாசனம்பா. நித்யம், நாம இந்த இராமாயண பூர்த்தியில இந்த ஸ்லோகங்களை படிக்கறோம். அப்படி, அந்த கௌசல்யா தேவி சொன்ன வார்த்தைகள், எல்லாரும் ராமாயணம் பூர்த்தியில நித்யம் படிக்கும் படியா அமைஞ்சிருக்கு. அந்த ஒரு நாலு ஸ்லோகத்தை படிச்சுட்டு பூர்த்தி பண்றேன்.

यन्मङ्गलं सहस्राक्षे सर्वदेवनमस्कृते । वृत्रनाशे समभवत्तत्ते भवतु मङ्गलम्।।

यन्मङ्गलं सुपर्णस्य विनताऽकल्पयत्पुरा । अमृतं प्रार्थयानस्य तत्ते भवतु मङ्गलम्।।

अमृतोत्पादने दैत्यान् घ्नतो वज्रधरस्य यत् । अदितिर्मङ्गलं प्रादात्तत्ते भवतु मङ्गलम्।।

त्रीन्विक्रमान्प्रक्रमतो विष्णोरमिततेजसः । यदासीन्मङ्गलं राम तत्ते भवतु मङ्गलम्।।

ऋतवस्सागरा द्वीपा वेदा लोका दिशश्च ते । मङ्गलानि महाबाहो दिशन्तु शुभमङ्गलाः।।

யன்மங்களம் சஹஸ்ராக்ஷே ஸர்வ தேவ நமஸ்க்ருதே |

வ்ருத்ர நாசே சமபவத் தத்தே பவது மங்களம் ||

யன்மங்களம் சுபர்னஸ்ய வினதாsகல்பயத் புரா |

அம்ருதம் ப்ரார்தயானஸ்ய தத்தே பவது மங்களம் ||

அம்ருதோத்பாதனே தையத்யான் க்னதோ வஜ்ரதரஸ்ய யத் |

அதிதிர் மங்களம் ப்ராதாத் தத்தே பவது மங்களம் ||

த்ரீன் விக்ரமான் ப்ரக்ரமத: விஷ்ணோரமித தேஜஸ: |

யதாஸீன் மங்களம் ராம தத்தே பவது மங்களம் ||

ருதவ: சாகரா த்வீபா: வேதா லோகா திசஸ்ச தே |

மங்களானி மஹா பாஹோ திஸந்து சுபமங்களா: ||

மன்னு புகழ் கோசலை (15 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

5 replies on “மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே”

இதை படிக்கும் போது, ஒண்ணு நினைவுக்கு வரது: “குமரகோட்டம் குளக்கரையில் மஹாபெரியவா சிறுவனா தன் தாயார் மஹாலக்ஷ்மி அம்மாவோடு அமர்ந்து இருக்கார்.ஸ்ரீமடத்து பணியாளர் ..பெரியவாளை கலவைக்கு அழைத்து செல்ல உத்தரவாகி இருப்பதை தெரிவிக்க …”விரைந்து செல்லும் குதிரை வண்டியில் அவர்களை அனுப்பிவிட்டு ..பின்னால் வேறு ஒரு வண்டியில் கலவைக்கு செல்கிறார்…தாயும் தகப்பனும் அங்கே போய் சேர்வதற்குள் ஆஸ்ரம சுவீகாரம் முடிந்து விடுகிறது..எப்படி இருக்கும் அந்த தாயாருக்கு? இருப்பினும் பகவான் சித்தம்,குருவின் ஆக்ஞய் …அதன் பிறகு தன் அன்பு மகனை பார்க்கவேயில்லை..என்ன ஒரு தியாகம்..கௌசல்யா மாதாவாவது 14 வருஷம் கழித்து பார்த்தார்…இவர்..மஹாபெரியவா என்ற ஒரு மாணிக்கத்தோடு …சிவன் சார் என்ற ஒரு ரத்தினத்தையும் அல்லவா நமக்கு அளித்து இருக்கார்…தினம் இவரை நினைத்தாலே போது…ஜென்ம சாபல்யம் அடையும்…எல்லோருக்கும் நமஸ்காரம்.

என்ன அழகான விளக்கம் ! அதை நினைத்தாலே மனம் பாரமாகும் !

சாதாரணமா குழந்தைகள் எங்காவது நம்மளை விட்டுட்டு ஊருக்குப் போனாலே வருத்தமா, கவலையா இருக்கும், பதினாலு வருஷம் குழந்தை ராஜ சுகம் துறந்து காட்டுக்குப் போறது லேசான விஷயமா? என் பிள்ளை படிக்க அமெரிக்கா போனபோது ஒரு வாரம் சமைக்கக் கூடப் பிடிக்கலை. காட்டிலே போய் 14 வருஷமா? நினைச்சாலே பதை பதைக்கிறது!
இது போன்ற கஷ்டங்களை நல் ஆசார்யாள் குடும்பத்தை துறந்து துறவறம் பூண்டு கொண்டு வாழ்ந்த போது தாயார் மனம் என்ன பாரு பட்டிருக்கும்? அதான் பெரியவா தன் கடைசி பாதுகையை தன் அம்மா பிறந்த ஸ்தலம் ஈச்சங்குடியில் வைத்து பூஜிக்கச் சொல்லி வேத பாடசாலையும் ஏற்படுத்தக் சொன்னாளோ எத்தனை வருட தாபம் கடைசி கால கட்டத்தில் வெளிப்பட்டது! தங்கள் எழுத்தும் விளக்கமும் அபாரம் !

Leave a Reply to venugopal KCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.