மகாபெரியவா மந்தஸ்மிதம் என் மனத்தில் உதிக்கட்டும்

நேத்திக்கு பௌர்ணமி இன்னிக்கு ‘ப்ரதிபத்’ அப்படின்னு சொல்லுவா ஸம்ஸ்க்ருதத்துல, ப்ரதமை அப்படின்னு தமிழ்ல சொல்றோம். கிருஷ்ண  ப்ரதமை, அதாவது, பௌர்ணமிக்கு அடுத்த நாள் வருகிற ப்ரதமையும்,  அம்பாள் பக்தர்களுக்கு ரொம்ப விசேஷம். In fact இன்னைக்கும் சந்திரன், பூரண சந்திரன் மாதிரியே இருக்கும், ஒரு கலை தான் குறைஞ்சு  இருக்கும். சில நாள் ப்ரதமை சந்திரன் பூரண சந்திரனை விடவே அழகா இருக்கும். இன்னைக்கும் கொஞ்ச நேரம் மாடியில் போய் சந்திர தர்சனம் பண்ணினேன்.

இந்த ப்ரதமை, ப்ரதிபத் அப்படின்னு சொன்ன உடனே, மஹாபெரியவா அனுபவம் ஒண்ணு ஞாபகம் வரது. களக்காடு ராம நாராயண ஐயர் அப்படின்னு ஒரு சங்கீத வித்வானை, மஹாபெரியவா, லலிதா ஸஹஸ்ர நாமத்துக்கு ராகம் போட்டு, அதை கீர்த்தனைகளா பண்ணி, பாடச் சொன்னா. அவர் நல்ல பண்டிதர். இந்த மாதிரி லலிதா ஸஹஸ்ரநாமத்தை பெரியவா கிட்ட பாடுவார்.

அவர், நம்ம மடத்துலேயும் ஆஸ்தான வித்துவானா இருந்தார். ஸ்ருங்கேரி மடத்துலேயும் ஆஸ்தான வித்துவானா இருந்தார். ஒரு நவராத்திரிக்கு, அவரை ஸ்ருங்கேரி மடத்துல இருந்து கூப்பிட்டு அனுப்பிச்சு இருந்தா. இவர் போய் அங்க ஸ்ருங்கேரி மடத்துல ஒன்பது நாளும் இருந்து பாடி இருக்கார். அப்பறம், பெரியவா கூப்பிட்டு அனுப்பிச்சு, இங்க பௌர்ணமிக்குள்ளே இங்க வந்து reachஆகி பௌர்ணமி அன்னிக்கு பெரியவா சன்னிதில பாடறார். அப்போ பெரியவா சொன்னாளாம், லலிதா ஸஹஸ்ரநாமம் பாடிண்டே வரும்போது,  “ப்ரதிமன் முக்ய ராகாந்த திதி மண்டல பூஜிதா” ன்னு ஒரு நாமாவளி, ப்ரதமை ஆரம்பிச்சு ராகா, ராகான்னா  பௌர்ணமி பர்யந்தம், இந்த பதினைந்து திதிகளிலும், பூஜை செய்யப்படுபவள்ன்னு ஒரு அர்த்தம். இந்த பதினைந்து திதிகளிலும் அம்பாளை பூஜை பண்ணுறதுன்னு ஒரு அர்த்தம், இந்த திதி மண்டலங்கள் அம்பாளை பூஜை பண்ணுறதுன்னு,  அப்போ, பெரியவா சொன்னாளாம் “நவராத்திரியின் போது உனக்கு காமாக்ஷி சன்னிதியில  பாடல்லியேன்னு ஒரு குறை இருந்தது. அந்த ப்ரதிபத்ல இருந்து ஆரம்பிச்சு பௌர்ணமி பர்யந்தம், எல்லா திதிகளும் அம்பாளை பூஜை பண்ணுறதுன்னு சொல்றா, அதனால நவராத்ரி இந்த பௌர்ணமி பர்யந்தம் இருக்கு, அதனால நீ பௌர்ணமிக்கு இங்க வந்து பாடிட்டியே” அப்படின்னு சொன்னாளாம். என்ன அன்பு!

அதுக்கு இந்த ராம நாராயண ஐயர் சொன்னாராம் “பெரியவா, பௌர்ணமி இன்னிக்கு ஒரு நாள் தான் ஆகாசத்துல சந்திரன், எங்களுக்கு பெரியவா தான் பூர்ண சந்திரன், அதனால, எங்களுக்கு நித்யமே பௌர்ணமி”  அப்படின்னு சொன்னாராம். அப்படி அவ்ளோ அழகா அவர் பதில் சொல்லி இருக்கார். அப்படி பக்தியா இருந்திருக்கார். பெரியவா “அவா ஆத்துல காமாக்ஷி இருக்கா, அங்க போய் பாடுங்கோ,  கத்துக்கோங்கோ”ன்னு  எல்லாம் சொல்லி இருக்கார்.

அதுனால இன்னிக்கு அம்பாள் சம்பந்தமா ஏதாவது சொல்லலாம்னு ஒரு ஆசை.

இன்னிக்கு வட நாட்ல எல்லாம், ஹனுமத் ஜெயந்தின்னு கொண்டாடறா. இப்ப தான், இந்த சித்ரா பௌர்ணமியை ஹனுமத் ஜெயந்தின்னு கொண்டாடறா. சித்திரைனா, அவாளுக்கு சாந்திராமான பஞ்சாங்கம்னு ஒண்ணு இருக்கு,  அதுல போன அமாவாஸ்யையோடவே  சித்ரா மாசம் ஆரம்பிச்சிடறது. அதனால தான் அந்த நவமியை  ராம நவமின்னு கொண்டாடறோம்.  ‘சைத்ரே   நாவாமிகே திதௌ’ன்னு புஸ்தகத்துல இருக்கு,  சித்திரை மாசத்தோட  நவமி திதின்னு, நமக்கு எல்லாம்  சித்திரை  இன்னும் வறல,  இந்த சாந்திராமானத்துல அமாவாஸ்யையோடவே  சித்ரா மாசம் ஆரம்பிக்கிறது, அவா யுகாதி கொண்டாடறா இல்லையா! அதுலேருந்து ஒன்பதாவது நாள் நவமி அன்னிக்கி ராம நவமி கொண்டாடறோம். அதுலேருந்து பதினைஞ்சாவது நாள் இந்த சித்ரா பௌர்ணமி அன்னிக்கி ஹனுமத் ஜெயந்தின்னு விசேஷமா கொண்டாடறா.

அதனால ஹனுமாரையும், அம்பாளையும் ஸ்மரிக்கும்படியா என்ன ஸ்லோகம் அப்படினு நினைச்சேன், ஒரு அழகான ஸ்லோகம் இருக்கு, பதிமூணாவது ஸர்கம் சுந்தரகாண்டத்துல

तदुन्नसं पाण्डुरदन्तमव्रणं शुचिस्मितं पद्मपलाशलोचनम्।

द्रक्ष्ये तदार्यावदनं कदान्वहं प्रसन्नताराधिपतुल्यदर्शनम्।। ”

ததுந்நஸம் பாண்டுரதந்தமவ்ரணம் ஷுசிஸ்மிதம்  பத்மபலாஷலோசநம் |

த்ரக்ஷ்யே ததார்யாவதநம் கதாந்வஹம் ப்ரஸந்நதாராதிபதுல்யதர்ஷநம்৷

அப்படின்னு ஒரு ஸ்லோகம், நான் எப்போ அந்த சீதாதேவியோட முகத்தை பார்ப்பேன், அப்படின்னு ஹனுமார் சொல்றார், ‘ததுந்நஸம்’ நிமிர்ந்த மூக்கும், ‘பாண்டுரதந்தம்’ வெள்ளைவெளேர்ன்னு அந்த பற்களும், ‘அவ்ரணம்’, எந்த வித அப்பழுக்கும் இல்லாத வரிசையான அந்த பற்களும், ‘ஷுசிஸ்மிதம்’ அழகான அந்த, தூய்மையான அந்த சிரிப்பும், ‘பத்மபலாஷலோசநம்’ பத்மம்னா தாமரை, பாலஷம்னா இதழ், தாமரை இதழ் போன்ற கண்களும், கொண்ட  ‘ப்ரஸந்நதாராதிபதுல்யதர்ஷநம்’ தாராதிபஹ னா நக்ஷத்திரங்களுக்கு ராஜா, யாரு? சந்திரன். அந்த சந்திரனை போன்ற முகமும் கொண்ட, இந்த ஆர்யா வதனம், உன்னதமான அந்த பெண்ணினுடைய முகத்தை, ‘அஹம் கதா த்ரக்ஷ்யே’ நான் எப்பொழுது பார்ப்பேன், அப்படின்னு சொல்றார்.

तदुन्नसं पाण्डुरदन्तमव्रणं शुचिस्मितं पद्मपलाशलोचनम्।

द्रक्ष्ये तदार्यावदनं कदान्वहं प्रसन्नताराधिपतुल्यदर्शनम्।। ”

எத்தனை அழகான வார்த்தைகள்! பொருள்! எதுகை மோனை! உவமைகள்! அப்படி அழகான ஒரு meterல  ஒரு ஸ்லோகம். இந்த ஸ்லோகத்துல அம்பாள் தர்சனம் எனக்கு எப்போ கிடைக்கும், அப்படின்னு கேட்கறார். அந்த அம்பாள் தர்சனம் யாருக்கு  கிடைக்கும்னா, ரொம்ப humbleஅ, இருக்கறவாளுக்குத் தான்  கிடைக்கும்.

சுக்ரீவன், வானரா கிளம்பும்போது, நாலா திக்குலயும், என்னென்ன தேசங்கள் இருக்கு, என்னென்ன நதிகள்  இருக்கு, என்னென்ன மலைகள் இருக்கு, அடையாளங்கள் எல்லாம் சொல்லி, வழியில இருக்கிற ஆபத்துகளை எல்லாம் சொல்லி, வழியில இருக்கக் கூடிய ரிஷிகள் பேரை எல்லாம் சொல்லி, அவாளை நமஸ்காரம் பண்ணுங்கோ, அவா கிட்ட கேட்டுக்கோங்கோன்னு சொல்லி, அழகா வழி சொல்லி வானராளை நாலா திக்குலயும் அனுப்புறான். அப்போ அவன் ஒண்ணு சொல்றான், “யார் வந்து ‘திருஷ்டா ஸீதா’ சீதையை கண்டேன், என்று சொல்கிறார்களோ, அவர்களுக்கு என் ராஜ்யத்தில் பாதியை கொடுப்பேன், எனக்கு சமானமான அந்தஸ்தை கொடுப்பேன்” அப்படிங்கறான், “அவா என்கிட்ட பண்ணிண தப்பெல்லாம் மன்னிச்சுடறேன்” அப்படின்னு சொல்றான். ஆனால் யார் பாத்துட்டு வந்தா? ஒரு தப்பும் பண்ணாத, ஒரு அந்தஸ்துக்கும் ஆசைப்படாத ஹனுமார் தான், சீதா தேவியை தர்சனம் பண்றார். இந்த மாதிரி, “புராணங்களில் எல்லாம் பலஸ்ருதி கொடுத்து இருக்கும், இதை படிச்சா இன்ன பலஸ்ருதி அப்படின்னு, அந்த பலஸ்ருதிக்கு ஆசைபட்டா அது கிடைக்கும். ஆனா ராமாயணம் படிச்சா, ராமரே வேணும்னு ஆசைப்பட்டா ராமரே கிடைப்பார்” அப்டின்னு ஸ்வாமிகள் சொல்லுவார். அந்த மாதிரி இந்த ஹனுமார் தான் சீதா தேவியை தர்சனம் பண்றார்.

மூக பஞ்சசதில இந்த தூய்மையான மந்தஸ்மிதம் humble ஆக இருக்கறவாளுக்கு கிடைக்கும் அப்படீங்கறதை, படிச்சு உடனே, ஒரு ஸ்லோகம் ஞாபகம் வரது.

सन्नामैकजुषा जनेन सुलभं संसूचयन्ती शनै-

रुत्तुङ्गस्य चिरादनुग्रहतरोरुत्पत्स्यमानं फलम् ।

प्राथम्येन विकस्वरा कुसुमवत्प्रागल्भ्यमभ्येयुषी

कामाक्षि स्मितचातुरी तव मम क्षेमङ्करी कल्पताम् ॥

ஸன்னாமைகஜுஷா ஜனேன ஸுலபம் ஸம்ஸூசயன்தீ ஶனை-

ருத்துங்கஸ்ய சிராதனுக்ரஹதரோருத்பத்ஸ்யமானம் பலம் |

ப்ராதம்யேன விகஸ்வரா குஸுமவத்ப்ராகல்ப்யமப்யேயுஷீ

காமாக்ஷி ஸ்மிதசாதுரீ தவ மம க்ஷேமம்கரீ கல்பதாம் ||

அது மாதிரி, காமாக்ஷி மந்தஸ்மிதத்தை பத்தி ஒரு நூறு ஸ்லோகம் எழுதியிருக்கார், மூக கவி. அதுல இந்த ஒரு ஸ்லோகம், அதாவது, அனுக்ரஹம் னு ஒரு மரம் இருக்கு. அதுல ஞானம் அப்படீங்கிற ஒரு பழம் கிடைக்கப் போறது. அந்த பழம், கிடைக்க போறதுன்னு ஸுசகமா ஒரு பூ பூத்திருக்காம். அது என்ன பூன்னா, அம்பாளுடைய மந்தஸ்மிதம்ங்கிற புன்னகை, அப்படீங்கிற, அந்த பூ பூத்திருக்கு. இது ஸன்னாமைகஜுஷா ஜனேன ஸுலபம் – இந்த பழம், யாருக்கு, கிடைக்கும் அப்படீன்னா, மிக மிக வணக்கத்தோடு இருந்து கொண்டே இருப்பவர்களுக்கு, இந்த மந்தஸ்மிதம் கிடைக்கும். காமாக்ஷி ஸ்மிதசாதுரீ தவ மம க்ஷேமம்கரீ கல்பதாம் – இந்த புன்னகை, எனக்கு, க்ஷேமத்தை, உண்டு பண்ணட்டும், அப்படீன்னு அழகான ஒரு ஸ்லோகம்.

அப்படி, அந்த ஹனுமார், இவாளோட, வானரர்களோட தேடி வரார். அவருக்கு தான், இந்த காரியத்தை முடிச்சுடுவோம்ங்கிற கர்வப் பேச்சோ அதெல்லாம் ஒண்ணுமே இல்லை. அவர் இவாளோட வரார். இந்த தென் கோடியில வந்து கடற்கரையில காத்துண்டு இருக்கும்போது, சம்பாதி வந்து, “அங்க கடலுக்குள்ள ஒரு தீவு இருக்கு. லங்கா நகரம்னு, அங்க சீதா தேவி இருக்கா. நீங்க போயி பார்த்தா, அவள் இருப்பிடத்தை தெரிஞ்சுண்டு பேசிட்டு வரலாம்”னு சொல்றார். அப்போ இவா வானாரா எல்லாம் யார் போகப் போறான்னு, கவலை பட்டுண்டு இருக்கும்போது, ஜாம்பவான், “ஹனுமான் தான், இதை பண்ண முடியும்”, அப்படீன்னு எல்லாருமா சேர்ந்து, ஹனுமாரை, உத்சாகப் படுத்தறா. அப்போ, அவருக்கு தன்னோட திறமை ஞாபகம் வர்றது. ஆமா, நான் உங்களுக்காக இந்த காரியத்தை பண்றேன் னு, மகேந்திர மலையில ஏறி, கடலை தாண்டி, இலங்கையில குதிச்சு, தேடறார்.

தேடும்போது, இந்த இராவணனை பார்க்கறார். அந்தப்புரதுல மற்ற பெண்களைப் பார்க்கறார். மண்டோதரியை பார்க்கறார். ராமர் சொன்ன வயசும், அந்த லக்ஷணங்களும், பொருந்தி இருந்ததுனால, இந்த மண்டோதரி தான், சீதையோன்னு ஒரு நிமிஷம், நினைக்கறார். அப்புறம், “அது எப்படி இருக்க முடியும்? ராமனை பிரிஞ்ச சீதை, சுகமா அந்தபுரத்துல கட்டில்ல படுத்து தூங்குவாளா? இது சீதா தேவி இல்லை”, அப்படீன்னு, சொல்லிண்டு, இன்னும் தேடறார். அப்படி, தேடும்போது, சீதையை காணோம், அப்படீன்னு நினைச்சு, அவருக்கு ரொம்ப கவலை வந்துடறது. “என்னடா இது? சீதையை தேடி வந்தோம். காணோமே, ஏதோ, கூண்டுல அடைபட்ட கிளி மாதிரி சீதாதேவி இவாளோட கொடுமையினானால, இறந்து போயிட்டாளா? இல்லை இராவணன், தூக்கிண்டு வரும்போதே கடல்ல விழுந்துட்டாளா? என்ன ஆச்சுன்னு தெரியலையே? சீதையை காணோமே, நான் என்ன பண்ணுவேன்”னு கவலை படறார்.

அப்போ “ஒண்ணு நான் போயி இந்த சீதையை பார்க்கலை, சீதா தேவி இலங்கையில இல்லைன்னு, சொல்லணும், இதை ராமர்கிட்ட சொன்னா, அவர் உயிரை விட்டு விடுவார். ராமர், உயிரை விட்டா, லக்ஷ்மணனும், உயிரை விட்டுடுவான். லக்ஷ்மணன் உயிரை விட்டா, சொன்ன வார்த்தையை காப்பாதலை என்று, சுக்ரீவன் உயிரை விட்டுடுவான். அங்கதன் தாரை ருமை எல்லாரும் உயிரை விட்டுடுவா. இப்படி, பெரிய அனர்த்தமா ஆயிடும். அதனால நான் திரும்ப போகப் போறது இல்லை. நான் இங்க இருந்து, பட்டினி கிடக்கறேன். என்ன ஆறதோ, ஆகட்டும்”னு அப்படீன்னு நினைக்கறார். அப்புறம், அவர் சொல்றார். நான் எதுக்கு வந்தேன், சீதையை தேட வந்தேன்.

यावत्सीतां हि पश्यामि रामपत्नीं यशस्विनीम्।

तावदेतां पुरीं लङ्कां विचिनोमि पुनः पुनः।।

யாவத்ஸீதாம் ஹி பஷ்யாமி ராமபத்னிம் யஷஸ்விநிம்||

தாவதேதாம் புரிம் லங்காம் விசிநோமி புந: புந:|

எது வரைக்கும், சீதையை, பாக்கறேனோ அது வரைக்கும் தேடறேன், அப்படீன்னு சொல்லி தன்னோட மனக்கவலையை ஒழித்துட்டு, திரும்பியும், தேடறதுக்கு கிளம்பறார். அப்போ, அந்த அசோகவனத்தைப் பார்காறார். இங்க நாம பார்க்கவே இல்லையே அப்படீன்னு, சொல்லி, அவர்,

नमोस्तु रामाय सलक्ष्मनाय देव्यैचतस्यै जनकात्मजायै |

नमोस्तु रुद्रेन्द्र यमानिलेभ्यो नमोस्तु चन्द्रार्क मरुद्गणेभ्यः ||

நமோஸ்து ராமாய  ஸலக்ஷ்மணாய

தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை |

நமோஸ்து ருத்ரேந்திரமானிலேப்யோ

நமோஸ்து சந்த்ரார்க்கமருத்கனேப்ய: ||

அப்படீன்னு, எல்லா தெய்வங்களையும் வேண்டிண்டு, அந்த அசோக வனத்துல போயி தேடறார். அங்க சீதா தேவியை பார்த்துடறார். அந்த ராக்ஷசிகளுக்கு, மத்தியில சீதா தேவி இருக்கறதை பார்த்து ரொம்ப சீதைக்காக, feel பண்றார். மேகங்களுக்கு நடுவுல சந்திரனைப் போலவும், புகை மூட்டத்துக்கு நடுவுல அக்னியை போலவும், இந்த சீதை இவ்வளவு கஷ்டத்துக்கு நடுவுல இருக்காளே, அப்படீன்னு, ரொம்ப வருத்தப்படறார். அவர் சீதையை பார்த்த உடனே, சொல்ற உபமானங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கும். “ஆம்னாயானாம் அயோகேன வித்யாம் ப்ரஷிதிலாம் இவ” வேதப் படிப்பு, திரும்பி எப்படி சந்தை சொல்லலைன்னா மறந்து போயிடுமோ, அந்த மாதிரி, சீதை வந்து, அடையாளம்,தெரியாம இருக்கா, அப்படீங்கறார். அப்புறம், நல்ல சம்ஸ்காரம் “சம்ஸ்காரேண யதா ஹீனாம் வாசம் அர்த்தாந்தரம் கதாம்” நல்ல படிப்பு, இல்லைன்னா, பேசும்போது, பொருள் தப்பா போயிடும். அது மாதிரி சீதை அசோகவனத்தில் சோகமா இருக்கா அப்படீங்கிறதுக்கு, இந்த மாதிரி, இதெல்லாம் உவமை சொல்றார். அப்புறம், சீதையோட பெருமையை நினைச்சு பார்க்கறார். ராமர், இவளை பிரிஞ்சு இருக்கார்னு, அந்த ராமருடைய வருத்தத்தை நினைக்கறார்.

அந்த மாதிரி, ஹனுமாருக்கு, சீதா தேவியோட, தரிசனம் கிடைக்கறது. சீதையை எப்போது காண்பேன் , அப்படீன்னு, சொன்ன ஹனுமார், சீதையை, கண்டு விடுறார். “எத்தனையோ, கோடிக் கணக்கான வானாராள் உலகம் முழுக்க தேடறா. ஏதோ தெய்வாதீனமா இன்னிக்கு, நான் சீதையை பார்த்தேன்”, அப்படீன்னு, சொல்றார். எந்த வெண்மையான சிரிப்பை பார்க்கணும்னு, ஆசைப்பட்டாரோ அந்த சீதாதேவியை பார்த்துடறார். அவ முகத்துல சிரிப்பு ஏற்படும்படியா சந்தோஷம் ஏற்படும்படியான வார்த்தைகளை, ஹனுமார் பேசறார்.

இந்த வெண்மையான தூய சிரிப்பு, அப்பட்டீங்கும் போது மூக பஞ்சசதில இன்னொரு ஸ்லோகம் இருக்கு.

पुम्भिर्निर्मलमानसैर्विदधते मैत्रीं दृढं निर्मलां

लब्ध्वा कर्मलयं च निर्मलतरां कीर्तिं लभन्तेतराम् ।

सूक्तिं पक्ष्मलयन्ति निर्मलतमां यत्तावकाः सेवकाः

तत्कामाक्षि तव स्मितस्य कलया नैर्मल्यसीमानिधेः ॥

பும்பிர்நிர்மலமானசைர்விதததே மைத்ரீம் த்ருடம் நிர்மலாம்

லப்த்வா கர்மலயம் ச நிர்மலதராம் கீர்திம் லபன்தேதராம் |

ஸூக்திம் பக்ஷ்மலயன்தி நிர்மலதமாம் யத்தாவகா: ஸேவகா:

தத்காமாக்ஷி தவ ஸ்மிதஸ்ய கலயா நைர்மல்யஸீமானிதே: ||

அப்படீன்னு ஒரு ஸ்லோகம். “ஹே காமாக்ஷி, உன்னுடைய புன்சிரிப்பு பாற்கடலை போல வெள்ளையா இருக்கு. அதுல ஒரு திவலை இந்த பக்தர்கள், மேல படறதுனால அவாளுக்கு தூய்மையான நண்பர்கள் கிடைக்கறா. எல்லா வினைகளும் போய் அவாளுக்கு தூய்மையான புகழ் கிடைக்கறது. அவாளுக்கு தூய்மையான வாக்கும் அமையறது” அப்படீன்னு சொல்றார்.

மூககவி நூறு பாடல்கள் காமாக்ஷியுடைய மந்தஸ்மிதத்தை பத்தி எழுதி இருக்கார். மத்த அம்பாள் பக்தர்கள் கூட அம்பாளோட மந்தஸ்மிதத்துல ரொம்ப லயிச்சு ரசிச்சு இருக்கா. அது ஒரு ஞானக் கலை அப்படிங்கற மாதிரி.

அபிராமி பட்டர் நிறைய அம்பாளோட மந்தஸ்மிதத்தை பத்தி பாடறார். மகாபெரியவா ஒரு தமிழ்ப் புலவர் கிட்ட அபிராமி பட்டருடைய வழிபடு தெய்வம் என்னனு கேட்கறா. அவர் அபிராமி அந்தாதி தானே எழுதி இருக்கார். அதுனால திருக்கடையூர் அபிராமி ன்னு சொல்றார். அப்ப பெரியவா “இல்லை. அபிராமி அந்தாதியில் நிறைய பாடல்களில் கரும்பு வில்லும் பஞ்ச புஷ்ப பாணமும் பாசாங்குசமும் சொல்லி இருக்கார். அது இங்கே காஞ்சி காமாட்சிக்கு தான். அதுனால அபிராமி பட்டருடைய இஷ்ட தெய்வம் காஞ்சி காமாக்ஷி” அப்படின்னு பெரியவா சொல்லி இருக்கா. அவரும் படிச்சுட்டு வந்து “ஆமாம். நிறைய பாடல்களில் கருப்பு சிலை, கரும்பு வில் பஞ்ச புஷ்ப பாணம் னு வரது. அது காஞ்சி காமாக்ஷி தான் என்று ஒத்துக்கறார்.

அந்த அபிராமி அந்தாதியில் ஆரம்பத்தில் ஒன்பதாவது பாட்டில் “முருத்தன மூரலும், நீயும், அம்மே வந்து என்முன் நிற்கவே” அப்படின்னு வேண்டிக்கறார். மூரல் னா மந்தஸ்மிதம் னு அர்த்தம். மயிலின் தோகையின் அடிப்பாகம் போல வெள்ளை வெளேர் னு இருக்கும் மந்தஸ்மிதம், அப்படின்னு சொல்றார். அப்பறம் இன்னொரு பாட்டில் “பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல் தவளத் திரு நகையும் துணையா” தவளம் னா வெள்ளை னு அர்த்தம். குளிர்ந்த வெண்மையான சிரிப்பு. களங்கமில்லாத தூய்மையான சிரிப்பை மகான்கள் பாடறா. இன்னொரு பாட்டுல “முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும்முகிழ் நகையே” அப்படின்னு சொல்றார். புன்னகை ஒரு பூ பூக்கற மாதிரி இருக்குனு சொல்றார். எல்லாத்துக்கும் மேலே கடைசி பாட்டுல

குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி

கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும்

விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்

உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!

வெண் நகையும்..நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே என்கிறார். இது நூறாவது பாடல். அந்தாதி என்கிறதுனால உதிக்கின்ற செங்கதிர்னு முதல் பாடல் ஆரம்பிக்கிறது. காமாக்ஷியினுடைய மந்தஸ்மித தர்சனம் கிடைக்க வேண்டுமானால் இந்த அபிராமி அந்தாதியை திரும்ப திரும்ப பாராயணம் பண்ணிண்டே இருக்க வேண்டும் என்று சொல்வது போல இருக்கு.

அபிராமி அந்தாதி நூறு பாடல்களை படிச்சா, அபிராமி பட்டருக்கு மூக பஞ்சசதி ரொம்ப இஷ்டமான ஸ்தோத்ரமாக இருந்து இருக்கும் என்று தோன்றுகிறது. பாதாரவிந்தத்தை பற்றியும், கடாக்ஷத்தைப் பற்றியும், மந்தஸ்மிதத்தை பற்றியும், அபிராமி பட்டரும் நிறைய சொல்றார். அம்பாளுடைய பாதங்களை நான் கெட்டியாக பிடிச்சுண்டு இருக்கேன். எனக்கு அம்பாள் பக்தி தான் ஒரே வழி, அப்படிங்கறதையும் மூக கவி மாதிரி திரும்ப திரும்ப சொல்றார்.

காமாக்ஷியின் மந்தஸ்மிதம் என்றவுடன் இதெல்லாம் ஞாபகம் வரது. நமக்கு காமாக்ஷி மகாபெரியவா. மகாபெரியவாளுடைய மந்தஸ்மிதம் நம் மனத்தில் உதிக்க வேண்டும்னு பிரார்த்தனை பண்ணிப்போம்.

அப்படி சீதா தேவியை ஹனுமார் தரிசனம் பண்ண இந்த காட்சியை மனசுல வெச்சுண்டு பூர்த்தி பண்ணிக்கறேன்.

காமாக்ஷி மகாபெரியவா மந்தஸ்மிதம் (17 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

Share

Comments (2)

 • Narayani

  Namaskaram.

  Reg – kalakkad ramanarayanan iyer – one request
  during my childhood my mother learnt Lalitha Sahasranamam keerthanais from the relative of Kalakkad Ramanarayana iyer. some of the songs I have forgotten. Any audio available for all Lalitha Sahasranama keerthanais? I am unable to recall the songs.

  Also, I learnt from net that Sri Kalakkad RAmanarayana iyer wrote ‘sakthi saranam aayiram’ in tamil. Any audio or lyrics available? Pls help me.

  thanks

 • Sethu. Ramachandran

  Super.What an amount of in depth knowledge
  in all the scripts quoted. Great you are.
  Great is anugram by the Guru to you,Sir.
  MY SINCERE PRAYERS TO SITARAMAL TO CONTINUE TO SHOWER THE BEST ON YOU.
  Sethu.R

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.