இலங்கையில் பொருதாரன்றே மறைகளுக்கு இறுதியாவார்

இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகம், யுத்தகாண்டத்துல நூற்றி இருபதாவது ஸர்க்கத்துல ஒரு ஸ்லோகம்.

अमोघं दर्शनं राम अ च मोघस्तवस्तवः | अमोघास्ते भविष्यन्ति भक्तिमन्तस्च ये नरा ||

அமோகம் தர்சனம் ராம ந ச மோகஸ்தவஸ்தவஹ |

அமோகாஸ்தே பவிஷ்யந்தி பக்திமந்தஸ்ச யே நராஹா ||

அப்படின்னு ஒரு ஸ்லோகம். இதுல ‘அமோகம் ‘ அப்படின்னு ஒரு வார்த்தை வறது. சம்ஸ்க்ருதத்துல , ‘ஹ’ன்னு  ஒண்ணு இருக்கு, ‘மோஹம்’ங்கறது எல்லாருக்கும் தெரிஞ்ச வார்த்தை, ‘மோஹம்’னா englishல greedன்னு வெச்சிண்டு இருக்கா.  சரியான அர்த்தம் வந்து, ‘எது துக்கத்தை கொடுக்குமோ அதுல சுகம் னு போய் மாட்டிக்கறது’, அதுக்கு ‘மோஹம்’ன்னு  சம்ஸ்க்ருதத்துல வார்த்தை. அதாவது, ஞாயமா கிடைக்கிற சந்தோஷங்கள் ஒண்ணும் துக்கத்தை கொடுக்காது, அதுமேல பேராசை பட்டுண்டு போய் சந்தோஷத்தையோ பணத்தையோ அனுபவிக்கணும்ன்னு ஆசைப்பட்டா அது கஷ்டத்துல முடியும். அதனால அந்த  greedங்கறது ஒரு close meaningதான். அது வந்து மோஹம் ஷ ச  ஸ ஹ, அந்த ‘ஹ’ வறது. சம்ஸ்க்ருதத்துல இன்னொரு வார்த்தை இருக்கு मोघम् ‘மோகம்’ அப்படின்னு,  ‘மோகம்’ நாலாவது ‘க’, அதுக்கு என்ன அர்த்தம்னா, wasted அப்படிங்கற மாதிரி அர்த்தம். अमोघम् ‘அமோகம்’ அப்படின்னா அது வீணாபோகாது அப்படின்னு அர்த்தம். இந்த ஸ்லோகத்துல ‘அமோகம் தர்சனம் ராம’ உன்னை தர்சனம் செய்வது, பலனை கொடுக்கும், வீணாகாது  ‘ந ச மோக ஸ்தவஸ் ஸ்தவஹ’ ஹே  ராம உன்னுடைய ஸ்தோத்தரம் ஆனது வீண் போகாது, ராமனை துதித்தால் க்ஷேமம் உண்டாகும். அது பலன் கொடுக்காமல் போகாது. ‘அமோகாஸ்தே பாவிஷ்யந்தி பக்திமந்தஸ்ச யே நராஹா’ யாரு உன்கிட்ட பக்தி பண்ணுகிறாளோ அவா நன்மையை அடைவார்கள், க்ஷேமத்தை அடைவார்கள். அவாளுக்கு குறை இருக்காது. அப்படின்னு இந்த ஸ்லோகம். பிரம்ம ஸ்துதி அப்படின்னு ஒரு யுத்தகாண்டத்துக்கு உள்ளேயே ஒரு ஸர்கம் இருக்கு.

தேவர்கள் எல்லாம் வந்து ராமர் கிட்ட “ஹே ராம நீ ஸாக்ஷத் பரம்பொருள்” அப்படின்னு சொல்றா, ராமர் आत्मानं मानुषं मन्ये रामं दशरतात्मजम् “ஆத்மானம் மனுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்” நான் என்னை தசரத குமார ஆனா ராமன் ஆகத்தான் அறிந்திருக்கிறேன் सोऽहं यस्य यतश्चाहं भगवान्स्तद्ब्रवीतु मे  “யோஹம் யஸ்ய யதாஸ்சாஹம் பகவான் தத் ப்ரவீதுமே” நான் யார் என்பதை நீங்கள்  எனக்கு சொல்லுங்கோ”  என்று கேட்கும் போது, பிரம்மா சொல்றார் “நீ அழிவில்லாத பரம்பொருள், நீ இந்த உலகத்தையே படைத்து, காத்து, அழிக்கும் பகவான்” அப்படின்னு அந்த ஒரு இருவது ஸ்லோகங்கள், பிரம்ம ஸ்துதி அப்படின்னு சொல்லுவா. அதுல கடைசில இந்த ஒரு ஸ்லோகம் வறது

அமோகம் தர்சனம் ராம ந ச மோகஸ்தவஸ்தவஹ |

அமோகாஸ்தே பவிஷ்யந்தி பக்திமந்தஸ்ச யே நராஹா ||

அப்படின்னு ராமபக்தர்களுக்கு எல்லாம் ரொம்ப இஷ்டமான ஒரு ஸ்லோகம். ஸ்வாமிகள் மாதிரியான ராம பக்தர்கள் இதை நம்பிதான் வாழ்க்கையே நடத்தினா. அப்படி ஒரு அருமையான ஒரு ஸ்லோகம்.

இன்னைக்கு  தமிழ்ப் புத்தாண்டா  இருக்கு, ஹேமலம்ப வருஷம் ஆரம்பிச்சு இருக்கு. ஸ்வாமிகள் இந்த புத்தாண்டு அன்னிக்கு, மூகபஞ்ச சதில ஒரு ஸ்லோகம் இருக்கு, அதை படிப்பார். இந்த பஞ்சாங்க படனம் அப்படின்னு பஞ்சாங்கத்துல இருக்கிற, யார், எந்தெந்த கிரஹங்கள் இந்த வருஷத்துக்கு ராஜா, மந்த்ரி, எந்தெந்த கிரஹங்கள் எங்கெங்கே ஸஞ்சாரம் பண்ண போறது, குறிச்சு கொஞ்சம் பலன்கள் கொடுத்து இருப்பா. அது போக ஸ்வாமிகள் இந்த ஸ்லோகத்தை சொல்வார். மூகபஞ்ச சதி  ஸ்லோகம்

दधानो भास्वत्ताममृतनिलयो लोहितवपुः विनम्राणां सौम्यो गुरुरपि कवित्वं च कलयन् ।

गतौ मन्दो गङ्गाधरमहिषि कामाक्षि भजतां तमःकेतुर्मातस्तव चरणपद्मो विजयते ॥

‘தாதாநோ  பாஸ்வத்வாம்  அம்ருதநிலயோ லோகித வபுஹு

வினம்ராணாம் சௌம்யஹ குருரபி கவித்வம் ச கலயன் |

கதோ மந்தஹ கங்காதரமஹிஷி காமாக்ஷி பஜதாம்

தமகேதுர் மாத:  தவசரண பத்மௌ  விஜயதே ||

அப்படின்னு ஒரு ஸ்லோகம். இந்த ஸ்லோகத்துல நவகிரஹங்களுடைய பெயரும் வறது, அம்பாளுடைய சரணத்துக்கும் பொருத்தும்படியாவும் இருக்கு. ரொம்ப அழகான ஸ்லோகம். உன்னுடைய ‘தவ சரண பத்ம:’ உன்னுடைய பாதத் தாமரைகள், சூரியனை போல ஜொலிக்கறது, ‘தாதாநோ  பாஸ்வத்வாம்  ‘அம்ருதநிலயஹ’ பாதங்கள்ல அமிர்தம் இருக்கு, அப்படின்னு ஒரு ஐதீகம், அதனால ‘அம்ருதநிலயாஹ’ ‘லோஹித வபுஹு’  செக்கச்செவேல்னு இருக்கு, ‘வினம்ராணாம் சௌம்யஹ’ நமஸ்காரம் பண்றவாள் கிட்ட இந்த பாதம் ரொம்ப  சௌம்யமா  இருக்கு, அன்பா இருக்கு. ‘குருரபி’ ஞானத்தை கொடுக்கறதுனால உன்னுடைய பாதங்கள் குரு, ‘கவித்வம் ச கலயன்’ உன்னை நமஸ்காரம் பண்றவாளுக்கு நல்ல வாக்கு கொடுக்கற நீ, அதனால கவித்வம், ‘கவித்வம் ச கலயன்’ , ‘கதோ மந்தஹ’ பாதங்கள் மெதுவா நடக்கறது, ‘கங்காதரமஹிஷி காமாக்ஷி’ கங்கையை தரித்து கொண்டு இருக்கும் பரமேஷ்வரனுடைய பட்ட மஹிஷியான ஹே காமாக்ஷி, ‘தமஹ்கேது:’ அக்ஞான இருளுக்கு, எதிரியா இருக்கு உன்னுடைய பாதம், ‘தவசரண பத்மௌ  விஜயதே’ உன்னுடைய பாத தாமரைகள் சிறந்து விளங்கட்டும், அப்படின்னு அர்த்தம்.

இதுல இந்த, சூரியனை போல ஒளிவிடறது எங்கிறது சூரியனுக்கு, ‘அம்ருதநிலய’ எங்கிறது’ சந்திரனுக்கு, ‘லோஹித வபுஹு’ எங்கிறது செவ்வாய், ‘குரு’ வியாழ பகவான், ‘கவி’ன்னா சுக்ரன், ‘ஷனைச்சரஹ’ன்னா சனிபகவான், ‘தமஹ்கேதுஹு’, தமஸ் னா ராகு, கேதுனா கேது, நவகிரஹங்களுடைய சம்பந்தமும்  ஏற்படுத்தி அழகான ஒரு ஸ்லோகம். ‘அப்படி  காமாக்ஷி பாதத்துல நமஸ்காரம் பண்றவாளுக்கு நவ க்ரஹங்களும் அனுக்ரஹம் பண்ணும்’ அப்படின்னு சொல்வார் ஸ்வாமிகள்.

அந்த மாதிரி புது வருஷம் பிறந்து இருப்பதால், ராமருடைய தரிசனம், ராமருடைய கதை, ராமர் கிட்ட பண்ற பக்தி வீண் போகாது, என்பதை மனசுல வெச்சுண்டு அடிக்கடி ராம கதை கேட்போம். ராமரை தரிசனம் பண்ணுவோம். ராமர் கிட்ட பக்தி பண்ணுவோம். ராமருடைய ரூபத்தை த்யானம் பண்ணிண்டு அவருடைய கதையை கேட்டுண்டே இருந்தால் நமக்கும் அவரிடத்தில் பக்தி ஏற்படும்.

நல்ல குரு கிட்ட ராம கதை கேட்கணும். மாரீசன் கிட்ட ராவணன் வந்து சொல்றான், “யாரோ ராமன் ஒருத்தன் ஜனஸ்தானத்துக்கு வந்திருக்கான். நம்முடைய கர தூஷணாதிகளை எல்லாம் வதம் பண்ணிட்டான். சூர்ப்பனகையை மூக்கை அறுத்து இருக்கான். ரொம்ப கேட்டவன் னு தெரியறது. அவனுக்கு புலன்களை அடக்க தெரியலை. ரொம்ப கோபம் வரது. ஒரு தப்பு பண்ணாத கர தூஷணர்களை வதம் பண்ணிட்டான்” இதுராவணனுடைய ராம கதை. “அதுனால அவன் எனக்கு எதிரியாகி விட்டான். அவன் மனைவியை நான் அபகரிக்க போறேன். அதுனால நீ மாயமானாக போ” என்று சொல்கிறான். அப்போ மாரீசன் சொல்றான், “அவன் முன்னமே ராமர் கிட்ட ரெண்டு வாட்டி அடி வாங்கி இருக்கான். அதுனால அவனுக்கு ர அப்படின்னு சொன்னாலே பயம். ரதம், ரத்னம் அப்படின்னாலே பயந்து ஓடறான். அப்படி ராமர் கிட்ட பயம். அவன் சொல்றான். “நீ சொல்றது ராம கதை கிடையாது. ‘தர்மோ விக்ரஹவான் ராம: ஸாது: சத்யபராக்ரம:’ ராமர் தர்மமே வடிவானவர். பொய்க்காத பராக்ரமம் கொண்டவர். அவர் கிட்ட நீ வம்புக்கு போகாதே.” அப்படின்னு மாரீசனே சொல்றான். அந்த இடத்துல பெரியவாள் எல்லாம் சொல்வாளாம் மாரீசன்  ராவணன் கிட்ட “நீ எதோ போக்கிரி கிட்ட ராமாயணம் கேட்டு இருக்க” என்கிறான். அப்படி ராமாயணத்தை திரிச்சு சொல்லாமல் அங்கே இருக்கற கதையை உள்ளது உள்ளபடி பக்தியோடு சொல்றவா கிட்ட கேட்கணும்.

ராமாயண புஸ்தகத்தை முழுக்க படிக்க வேண்டும் என்று ஸ்வாமிகள் சொல்வார். இந்த புது வருஷத்தில் நாம் எல்லோரும் ராமாயணம் படிப்போம். ராமாயணம் கேட்போம். அதுனால நன்மையே உண்டாகும். சுக்ரீவனுக்கு பதவி கிடைச்சது. அது மாதிரி இந்த காலத்துல job security  பத்தி எல்லாரும் கவலை படறா. நல்ல வேலை, பதவி, கிடைக்கும். விபீஷணனுக்கு இலங்கை கிடைச்சது. அது மாதிரி செல்வம் கிடைக்கும். தசரத மஹாராஜாவுக்கு குழந்தை இல்லையே என்ற குறை இருந்தது. அவருக்கு குழந்தையாக பகவானே வந்து அவதாரம் செய்தார். இப்படி எல்லாருடைய குறைகளையும் ராமர் போக்கி இருக்கார். சபரி மாதிரி “வேறே ஒண்ணும் வேண்டாம். எனக்கு உன் தர்சனம் போறும்” அப்படின்னு பக்தி பண்ணினா ராம தர்சனம் கிடைக்கும்.

பரதன் போல ஒரு அபவாதம் வந்துடுத்து. பண்ணாத தப்புக்கு எனக்கு கெட்ட பேர் வந்துடுத்து அப்படின்னு வருத்த பட்டா ராம பாதுகையை நமஸ்காரம் பண்ணினா அந்த அபவாதம் போய்விடும். பரதனுக்கும் கைகேயிக்கும் தசரதர் “நீ என் பிள்ளையே கிடையாது. கைகேயி என் மனைவியே கிடையாது’ னு சாபம் கொடுத்து விடுகிறார். ஆனாள் இந்த ஸ்லோகம் வர சர்கத்துக்கு ரெண்டு ஸர்கம் தாண்டி பரமேஸ்வரன், மேல் உலகத்திலிருந்து தசரதரை அழைச்சுண்டு வரார். அப்ப ராமர் அவரை நமஸ்காரம் பண்றார். தசரதர் வாழ்த்தறார். அப்ப ராமர் “பரதனை நீங்கள் என் பிள்ளை இல்லைன்னு சொன்னேள். கைகேயி என் மனைவி இல்லைன்னு சொன்னேள். அதை திரும்ப வாங்கிக்க வேண்டும்” அப்படின்னு சொல்றார். தசரதரும் “அப்படியே ஆகட்டும்” என்கிறார். அப்படி ஜாதகத்தில் பித்ருதோஷம் ஏதாவது இருந்தாலும் ராமரை வேண்டினா, ராமரே பித்ருக்கள் கிட்ட recommend பண்ணி அந்த தோஷத்தை போக்குவார். அப்படி ராமகதை கேட்போம். ராமர் கிட்ட பக்தி பண்ணுவதை இந்த புது வருஷ சங்கல்பமாக வெச்சுப்போம்.

ராமரே பரம்பொருள் (1௦ min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

Share

Comments (2)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.