ஸ்ரீ சங்கர சரிதம் – பதினைந்தாம் பகுதி – காஞ்சியில் சங்கரர் விதேஹ முக்தி


நேற்றைய கதையில் ஆதி சங்கரர் தன்னோட ஆறாயிரம் சிஷ்யர்களோட பாரத தேசம் முழுக்க மூணு முறை பாத யாத்திரையாக திக்விஜயம் பண்ணினதை ஸ்தோத்திரங்கள் மூலமா சொல்லிண்டு இருந்தேன். மஹா பெரியவா சொல்றா “ஆச்சார்யாள் பண்ணின இந்த திக்விஜயம் national integration-ஆ  முடிஞ்சுடுத்து. எல்லாரையும் ஒரே வேத மதத்துக்கு கீழ கொண்டு வந்து, நாம எல்லாரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் அப்படிங்கற உணர்ச்சியை ஏற்படுத்தினார். பக்தியினால தான் எல்லாருக்குள்ள ஒருமைப்பாடு ஏற்படும். அப்படி  national integration பண்ணினா” ன்னு சொல்றா. எனக்கு தோணித்து, நம்ம மஹா பெரியவளோட திக் விஜயத்துனால international-integration-னே  ஆயிடுத்து. “மைத்ரீம் பஜத அகில ஹ்ருத ஜேத்ரீம்” அப்படீன்னு united nations-ல பாட வைச்சாரே! “ஸ்ரேயோ பூயாத் சகல ஜனானாம்” “எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்” அப்படீங்கிற அதே thoughtல எப்பவும் இருந்தா. உலகத்துல எந்த ஒரு ஜீவன் கிட்டயும் எந்த ஒரு த்வேஷத்தையும் காண்பிக்காம வாழ முடியும் அப்படீன்னு நூறு வருஷம் இருந்து காண்பிச்சா பெரியவா.

ஒரு Russian வந்து பெரியவாளை நமஸ்காரம் பண்ணி “எனக்கு ஏதாவது ஒரு இந்து பேர் கொடுக்கணும்” ன்னு கேட்ட போது “Russia-கே முதல்ல ரிஷி தேசம்னு தான் பேரு. இவரை பார்த்தாலே வெள்ளை தாடி வெச்சுண்டு ரிஷி மாதிரி தான் இருக்கார் இல்லையா? இவரை ரிஷின்னு பேரு வைச்சிக்க சொல்லு” அப்படீன்னு சொல்லி இருக்கா. அப்பறம் phone பண்ணி கூப்பிட்டு “தவரிஷி-ன்னு  பேர்  வைச்சுக்க சொல்லு”  அப்படீன்னு இருக்கா. இப்படி உலகம் முழுக்க எல்லா தேசத்துல இருந்தும் பண்டிதர்கள், ஞானத்தை நாடுபவர்கள், வந்து மஹா பெரியவளை நமஸ்காரம் பண்ணி, அனுக்ரஹம் வாங்கிண்டு  போயிருக்கா.

ஆசார்யாளைப் பத்தி மஹா பெரியவா பேசும் போது, “ஆதி சங்கரர் ஒரு மாயவாதி, அத்வைத குரு” அப்படீன்னு சொல்றா. அது பொருத்தமில்லை, கர்ம, பக்தி, ஞானத்தை உபதேசம் பண்ண ஜகத்குரு அப்படீன்னு தான் புரிஞ்சுக்கணும்” னு சொல்றா. ஆதி சங்கரர் ‘பிரபஞ்ச சார தந்த்ரம்’ னு ஒரு புஸ்தகம் எழுதி, எல்லா தெய்வங்களையும் எப்படி வழிபடணும்னு சொல்லிக் கொடுத்து இருக்கார். பஞ்சாயதனை பூஜை ஏற்படுத்தினார். பாரத தேசத்துல  அஞ்சு மூலையில இருந்தும் எடுத்த  அஞ்சு கற்கள் தான் மூர்த்திகள். அது தான் அந்த பஞ்சாயதன  பூஜையில ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ஸ்வாமியா, சிகப்பா இருக்கறது பிள்ளையார், அம்பாள்  ஆந்திரத்துலிருந்து எடுத்து வந்த ஒரு கல், சாலக்ராமம் விஷ்ணு, ஸ்படிகம் மாதிரி ஒரு கல் தமிழ்நாட்டுலருந்து, சூர்யனுகாக, பாணலிங்கம் நர்மதைலருந்து சிவனாக, இப்படி அஞ்சு இடத்துல இருந்து  எடுத்துண்டு வந்த அந்த ஸ்வாமியை வைச்சு பூஜை. சிவபெருமானை மத்தியில வைச்சு பண்ணினா அது சிவ பஞ்சாயதனம். அவா அவா கொஞ்சம் மாத்தி பண்றவா உண்டு. சக்தி பஞ்சாயதனம் அப்படி. பஞ்சாயதன பூஜையை ஆச்சார்யாள் தான் சொல்லி கொடுத்தா. அது மட்டும் இல்லை. அவா அவா  ஸ்ரத்தையா கர்மா பண்றதே பகவானுக்கு பூஜை. அதன் மூலமாவே ஞானத்தை அடையலாம்-னு  ஆச்சார்யாள் சொல்லியிருக்கார். அதனால் கர்ம, பக்தி, ஞானத்தை சேர்த்து சொல்லி கொடுத்த ஒரு குரு, நம்ம ஆச்சார்யாள், அப்படீன்னு பெரியவா சொல்றா.

அப்பறம் முக்கியமா அஞ்சு இடங்கள்ல ஸ்ருங்கேரி, துவாரகா, புரி, பத்ரி, காஞ்சி.  இந்த அஞ்சு இடத்துலயும் சங்கர மடங்கள் ஸ்தாபனம் பண்ணினார்-னு எல்லா சங்கர விஜயத்துலேயும் இருக்கு. இப்படி ரொம்ப reach பண்ண முடியாத  பத்ரி-ல ஒண்ணு. இந்த கோடியில ஒண்ணு, அந்த கோடியில ஒண்ணுன்னு இவ்வளவு தான் பண்ணிருப்பார்-னு தோணலை. காசியிலேயே ஆச்சார்யாள் அஞ்சு மடங்கள் ஸ்தாபனம் பண்ணார்-னு ஒரு புஸ்தகத்துல இருக்கு. இப்ப நூறு வருஷம் முன்னாடி கூட ஒருத்தர்  இந்திர நாமத்தோட இருக்கற சன்யாசி, நாங்க ஆதி சங்கரர் ஸ்தாபிச்ச மடத்தோட சன்யாசிகள்-னு சொல்லிண்டு இருந்தா. இந்த foreign invasion-னால நம்ம தேசத்துல எப்படி  ஆலயங்கள்-லாம் சிரமப் பட்டுதோ, அப்படி மடங்களும் ரொம்ப சிரமப் பட்டிருக்கும். பல மடங்கள் மங்கி போயிடுத்து. ஆச்சார்யாள் திரிச்சூர்-ல அஞ்சு மடங்கள் ஸ்தாபனம் பண்ணார், அப்டீன்னு ஒரு புஸ்தகத்துல  இருக்கு. இப்படி நிறைய ஆதி சங்கரர் ஸ்தாபித்த அத்வைத மடங்கள்-னு சொல்லிக்கறதெல்லாம்  ஆதி சங்கரர் பண்ணினதா தான் இருக்கும் அப்படீன்னு பெரியவா சொல்றா.

அப்பறம்  ஆசார்யாளுக்கு தன்னோட அம்மாவோட அந்திம காலம் நெருங்கறது-ன்னு தெரியறது. அப்போ காலடிக்கு ஓடி வரார். வந்து அம்மாவை மடியில போட்டுக்கறார். அத்வைத பரமா  ஸ்லோகங்கள் சொல்லி ஞான உபதேசம் பண்ணினாராம். அந்த அம்மாவுக்கு அதை மனசுல வாங்கிக்க முடியலயாம். அப்போ சிவ பரமான ஸ்தோத்ரங்கள் சொன்னாராம்,  அப்போ  சிவபெருமானோட  பூத கணங்கள் ப்ரமத  கணங்கள்  கைலாசத்துக்கு கூட்டிண்டு போக வந்தாளாம். அந்த அம்மா கொஞ்சம் பயந்தாளாம். அப்போ கிருஷ்ணாஷ்டகத்தை சொல்லி விஷ்ணு பகவானை பிரார்த்தனை பண்ணின  உடனே, ஸுகுமாரர்களான விஷ்ணு சேவகர்கள் வந்தாளாம். அந்த அம்மா ரொம்ப சந்தோஷப் பட்டாளம். அவா வைகுண்டத்துக்கு அழைச்சிண்டு போனா அப்படீன்னு பெரியவா சொல்றா.

அப்புறம் ஆச்சார்யாள் அம்மாக்கு கார்யம் பண்றார். ஏகபுத்ரனா இருந்தா சன்யாசி தகனம் பண்ணலாம்-கிற சாஸ்த்ரத்தை கொண்டு ஆச்சார்யாள் தகனம் பண்ணார். ஆனா அதற்கு சிலபேர் எதிர்ப்பு தெரிவிச்சா. “சன்யாசிங்கறான், தகனம் பண்றான்” னு அப்படின்னு சொல்லி இருக்கா. இரண்டு குடும்பம் தான்  தகனம் பண்றதுக்கு துணையா இருந்தா. அந்த இரண்டு குடும்பங்களும் தகனம் பண்ணும் போது தலைமாட்டில்  ஒருத்தர் கால்மாட்டில் ஒருத்தர் நின்னா. இன்னிக்கும் அவாளை கௌரவப்படுத்திண்டு இருக்கா மடத்துலேர்ந்து அப்படீன்னு சொல்றா.

அந்த ஆசார்யாளோட மாத்ரு பக்தி அபூர்வம். மாத்ரு பஞ்சகம்-னு இந்த இடத்துல ஒரு அஞ்சு ஸ்லோகங்கள் சொல்றார். “நீ எவ்ளோ கஷ்டப்பட்டு, நான் வயத்துல இருக்கும்போது வாந்தி எடுத்து, சாப்பிட முடியாம, இப்படி பல  சிரமங்கள் பட்டு என்னை குழந்தையா பெற்று வளர்த்தியே அம்மா! உனக்கு பிரதியே பண்ண முடியாது. ராமர் போன்றவர்களாலேயே அம்மாவுக்கு பிரதி பண்ண முடியாது, என்னால எப்படி  முடியும்? அப்படீன்னு சொல்லி அம்மாவோட பெருமையை பத்தி ஒரு அஞ்சு ஸ்லோகங்கள் சொல்லி இருக்கார்.

இந்த மஹான்கள் எல்லாருமே ரொம்ப மாத்ரு பக்தியோட இருந்தா அப்படீன்னு சொன்னேன். ஆசார்யாளோட அப்பா சிவகுரு பத்தி அதிக  விஷயங்கள் தெரியலை. ஆனா மஹா பெரியவா ஒரு கதை சொல்லியிருக்கா. ஆச்சார்யாள் அப்பா சிவகுரு, ஒரு உத்தமமான அம்பாள் பக்தர். அவர் தினமும் காலடியில பக்கத்துல மாணிக்க மங்கலம் னு ஒரு கிராமத்துல ஒரு அம்பாள் கோவில் இருந்தது. காத்யாயனி-ன்னு அம்பாளுக்கு பேரு. அந்த அம்பாள் கோவில்ல தினமும்  பூஜை பண்ணுவார். அந்த மாதிரி பூஜை பண்ணும் போது, தினமும் பாலை எடுத்துண்டு போய், நைவேத்தியம் பண்ணிட்டு, கொஞ்சம் பாலை திரும்ப எடுத்துண்டு வந்து குழந்தை சங்கரருக்கு கொடுத்து, அம்பாளோட பிரசாதம்-ன்னு சொல்லி கொடுப்பார், அந்த சங்கரரும் அம்பாளே நமக்காக கொடுத்து அனுப்பிச்சு இருக்கான்னு நினைச்சு அதை குடிச்சிண்டு இருந்தார்.

ஒரு நாள் அப்பாவுக்கு கோவிலுக்கு போக முடியலை, அம்மாவும் ஆத்துல இல்லை. அப்பா குழந்தை கிட்ட பாலை கொடுத்து, “நீ போய் அம்பாளுக்கு நைவேத்தியம் பண்ணிட்டு வா” ன்னு சொன்னா. இவரும் அதை எடுத்துண்டு போய் அம்பாள் கிட்ட வெச்சு, “குடிம்மா” ன்னு சொல்றார். அப்போ அம்பாள் குடிக்கலைன்ன உடனே “என்னம்மா நான் கொடுத்தா குடிக்க மாட்டியா” ன்னு அழறார். உடனே அம்பாள் அந்த பாலை முழுக்க குடிச்சுட்டாளாம். உடனே “எனக்கு ஏன் மீதி வைக்கவே இல்லை, அப்பா எனக்கு தினமும் மீதி பால் கொண்டு வருவாளே, நீயே குடிச்சிட்டியே” ன்னு  அழுதாராம். அப்போ அம்பாள் தன்னோட முலைப்பாலையே, ஞானப்பாலை கொடுத்தா. அதை குடிச்சதுனால, அவர் ரொம்ப கவிகளுக்கெல்லாம் பெரிய கவியா ஆயிட்டார், அப்படீன்னு ஒரு கதை.  இந்த கதையை சௌந்தர்ய லஹரி 75-வது ஸ்லோகம் சொல்லும் போது பெரியவா சொல்றார். “அம்மா உன்னுடைய  முலைப்பால்  சரஸ்வதி வடிவமானது, அதை குடித்த ஒரு தமிழ் குழந்தை கவிகளுக்கெல்லாம் மேலான கவி ஆனான் அல்லவா”, அப்படீன்னு ஒரு ஸ்லோகம் இருக்கு. அந்த எடத்துல மஹா பெரியவா இந்த கதையை சொல்லி இருக்கா. அப்படி ஆசார்யாளோட அப்பாவே அம்பாள் பக்தரா இருந்து இருக்கார்ன்னு தெரியறது. தன்னோட அம்மாவுக்கும் ஆச்சார்யாள் நல்ல கதி கொடுத்தார்.

அப்பறம் பல க்ஷேத்ரங்களை தர்சனம் பண்ணிட்டு, பதரிநாதம், கேதாரநாதம் எல்லாம் போய், அங்கிருந்து யோக சக்தி மூலமா கைலாசத்துக்கு போனார். அங்கே பார்வதி பரமேஸ்வராளை தர்சனம் பண்ணார், அப்படீன்னு சங்கர விஜயத்துல வர்றது. பார்வதி பரமேஸ்வரா ரெண்டு பேரும் குழந்தை வந்தான்னு ரொம்ப சந்தோஷபட்டு, பரமேஸ்வரன் அஞ்சு ஸ்படிக லிங்கங்களை கொடுத்தாராம். அதன் பேர்கள் யோகலிங்கம், போகலிங்கம், வரலிங்கம், முக்திலிங்கம், மோக்ஷலிங்கம்-னு அஞ்சு லிங்கங்கங்கள். அந்த அஞ்சு லிங்கங்களை கொண்டு வந்து அஞ்சு மடங்கள்ல ஸ்தாபனம் பண்ணி, ஒவ்வொரு இடத்துலயும் பூஜை பண்ணிண்டு இருந்தார் ன்னு ஒரு வரலாறு.

அப்போ அம்பாள் பரமேஸ்வரன் தன் மேல மந்த்ரவத்தா எழுதின ஒரு நூறு ஸ்லோகங்கள், அதை சங்கரர் கிட்ட கொடுத்து, “இதை பிரச்சாரம் பண்ணு” ன்னு கொடுத்தாளாம். அவர் அதை எடுத்துண்டு வெளியில வரும் போது நந்திகேஸ்வரர், “என்னடா, நம்மோட கைலாச சொத்தான இந்த ஸ்தோத்ரத்தை இவர் எடுத்துண்டு போறாரே” ன்னு  ஆசார்யாள் கையிலேர்ந்து அதை பிடுங்கினாராம். ஒரு 41 ஸ்லோகங்கள் தான் ஆச்சார்யாள் கையில  மிஞ்சித்தாம். மீதி 59 ஸ்லோகங்கள் நந்திகேஸ்வரர் கையில போயிடுத்தாம். அப்போ ஆச்சார்யாள் வருத்தப்பட்ட போது, அம்பாள் “நீயே இந்த 59 ஸ்லோகங்களை எழுதி முடி” அப்படீன்னு சொன்னதாகவும். அந்த 59 ஸ்லோகங்களுக்கு சௌந்தர்ய லஹரி-ன்னு பேரு. முதல் 41 ஸ்லோகங்கள் ஆனந்த லஹரி-ன்னு பேரு. பொதுவாக இந்த 100 ஸ்லோகங்களுக்கு சௌந்தர்ய லஹரி-ன்னு பேர் இருக்கு. இப்படி ஒரு கதை சிஷ்டர்கள் எல்லாம் ஒத்துண்டு இருக்கா, அப்படீன்னு பெரியவா சொல்றா. பெரியவா அவ்வளவு அழகா ஜாக்கிரதையா  பேசறா.

அப்படி அந்த மடங்கள் ஸ்தாபனம் பண்ணது, கைலாசத்துக்குப் போயி ஸ்படிக லிங்கங்கள் வாங்கிண்டு வந்தது, இன்னிக்கும் எல்லா மடங்களிலும் அந்த சந்த்ரமௌலீச்வர பூஜை பண்றது, ஸ்ரீ ருத்ரத்தை மெதுவாக சொல்லி அந்த ஸ்படிக லிங்கத்தை அபிஷேகம் பண்ணி, ஆராதனம் பண்ணினா எல்லாமே கிடைக்கும்.

आपाताल-नभःस्थलान्त-भुवन-ब्रह्माण्ड-माविस्फुरत्-

ज्योतिः स्फाटिक-लिङ्ग-मौलि-विलसत्पूर्णेन्दु-वान्तामृतैः ।

अस्तोकाप्लुत-मेक-मीश-मनिशं रुद्रानु-वाकाञ्जपन्

ध्याये-दीप्सित-सिद्धये ध्रुवपदं विप्रो‌sभिषिञ्चे-च्चिवम् ॥

ஆபாதாள-நப : ஸ்தலாந்த-புவந-ப்ரஹ்மாண்ட மாவிஸ்புரஜ்-

ஜ்யோதி : ஸ்பாடிக-லிங்க-மௌளி விலஸத் பூர்ணேந்து வாந்தாம்ருதை : |

அஸ்தோகாப்லுத-மேக-மீச-மநிசம் ருத்ராநுவாகாஞ்-ஜபந்

த்யாயேதீப்ஸித ஸித்தயே (அ) த்ருத-பதம் விப்ரோ (அ) பிஷிஞ்சேச்-சிவம் ||

அப்படீன்னு ஒரு ஸ்லோகத்தை சொல்லி, பெரியவா ஸ்ரீ ருத்ரத்தை பதம், பதமாக, சரியாக உச்சாடனம் பண்ணி, இந்த ஸ்படிக லிங்கத்தை பூஜை பண்றவாளுக்கு எல்லாம் கிடைக்கும் அப்படீன்னு சொல்றா.

சிவ லிங்கத்துக்கு பூஜை பண்ணா ஜீவன் முக்தி கிடைக்கும், அப்படீன்னு வீழிநாதன் மாமா சொல்லியிருக்கா. மஹா பெரியவா எத்தனை வருஷம் அந்த சந்திர மௌலீஸ்வரருக்கு பூஜை பண்ணியிருக்கார்! பக்கத்துல மேரு வடிவத்துல திரிபுரசுந்தரி அம்பாள். இந்த அம்பாளும் “சாருசந்திர கலாதரா” அப்படீன்னு அந்த சந்திரனை தலையில் வெச்சுண்டு இருக்கக் கூடிய அம்பாள் தான். இப்படி இவா ரெண்டு பேருக்கும், எத்தனை வருஷங்கள் பெரியவா பூஜை பண்ணியிருக்கா. மடாதிபதியா இருந்தபோது ஒரு ஐம்பது வருஷம் பூஜை பண்ணியிருக்கா. அதன்பிறகு பூஜையை புதுப் பெரியவா கிட்ட கொடுத்த பின்னயும் தன்னுடைய திக்விஜயத்தும் போதும் கூட மானசீகமா, மணல்ல கோலம் போட்டு, அல்லது எப்படியோ ஒரு விதத்துல, ஆத்ம பூஜையா அந்த சந்திரமௌலீஸ்வர பூஜையை பண்ணிண்டே இருந்தா பெரியவா.

இப்படி பல தேசங்களுக்கு போய், பல லோக க்ஷேமமான கார்யங்கள் எல்லாம் பண்ணிட்டு ஆசார்யாள் காஞ்சிபுரத்துக்கு வந்தார். முக்தி க்ஷேத்ரமான காஞ்சிபுரத்துக்கு வந்து, அங்க கம்பாநதிக் கரையில காமாக்ஷியை பூஜை பண்ணிக்கொண்டு, ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டு பிரம்மானந்தம் அடைந்தார்னு இருக்கு. ரெண்டு சங்கர விஜயங்கள் ல ஸ்பஷ்டமாவே காமாக்ஷி தேவியை தரிசனம் பண்ணிண்டு அம்பாளோடவே லயம் அடைந்தார், விதேக முக்தி அடைந்தார்னு சங்கர விஜயங்கள் ல இருக்கு. மஹா பெரியவா, “ஒவ்வொரு புஸ்தகத்துல ஆச்சார்யாள் ஒவ்வொரு இடத்துல சித்தி ஆனார்னு இருக்கு. இதை பத்தி சர்ச்சை எதுக்கு பண்ணனும்? சதாசிவ ப்ரம்மேந்திராள் அஞ்சு இடங்கள்ல முக்தி அடைஞ்சார்னு இருக்கிற மாதிரி, ஆச்சார்யாள் நிறைய இடத்துல முக்தி அடைஞ்சார்னு வெச்சுக்கலாம். காஞ்சிபுரத்துல ஆசார்யாள் முக்தி அடைஞ்சார்ங்கிறது எங்களுடைய நம்பிக்கை” ன்னு சொல்றா.

இந்த சங்கர சரிதம் இவ்ளோ நாள் கேட்டோம். இந்த சங்கர சரிதம் கேட்டதற்கு பலன் என்னன்னு மஹா பெரியவா கேட்டுண்டு சொல்றா. இந்த நிர்மலமான அத்வைதமா பரம சாந்தமா ஒரு நிமிஷம் ஆச்சார்யாளை நினைச்சாலே மனசுல அந்த ஞானம் டால் அடிக்கறது. இது தான் சங்கர சரிதம் கேட்ட பலன்.

நாம என்ன பண்ணனும்னு கேட்டுண்டு மஹா பெரியவா சொல்றா. இந்த பேராசையும், அழுக்கும் கோபமும் எல்லாம் இருக்கக் கூடிய ஜீவன் இல்லை. நான் ஸ்வச்சமான பிரம்மானந்தத்துல லயித்திருக்கும் ஆத்ம ஸ்வரூபம்னு தியானம் பண்ணுங்கோ. ஒரு நிமிஷம் நாம் பிரம்ம வடிவம், அஹம் பிரம்மாஸ்மினு தியானம் பண்ணுங்கோ. அப்புறம் ஆச்சார்யாள் நமக்காக நிறைய ஸ்தோத்திரங்கள் எழுதி கொடுத்துட்டு போயிருக்கா. இந்த ஸ்தோத்திரங்களும் அவாளோட வாக்கெல்லாம் படிச்சா, அவாளையே நேரா பார்க்கிற மாதிரி இருக்கு. அதனால ஆச்சார்யாளோட கிரந்தங்களை படிங்கோனு சொல்றா.

”ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர” னு ஆசார்யாளுக்கு ஜயகோஷம் பண்ணனும். “ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர” ன்னு ஒரு அஞ்சு நிமிஷம் ஜபம் பண்ணுங்கோ னு சொல்றார்.

சங்கர ஜயந்திக்கு எப்படி பூஜை பண்ணனும்னா, நான் ஒரு ஷோடச உபசார பூஜை பண்ணி, ஆச்சார்யாள் அஷ்டோத்ரம் சொல்லி புஷ்பம் போட்டு பூஜை பண்ணி, தோடகாஷ்டகம் சொல்லி, நமஸ்காரம் பண்ணி,  இந்த ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரங்கிறதை அஞ்சு நிமிஷம் ஜபிக்கலாம்னு இருக்கேன். இதை தான் மஹா பெரியவா ஆசார்யாளுக்கு பண்ண வேண்டிய பூஜைன்னு சொல்றா. அதைத் தவிர ஆசார்யாள் ஸ்தோத்திரங்கள் எல்லாம் நிறைய பாராயணம் பண்ணனும் னு ஆசை படறேன்.

நாளைக்கு இந்த சங்கர ஜயந்தியோட பெருமை, ஆசார்யாளோட பெருமை இதை எப்படி கொண்டாடனும்னு மஹா பெரியவா பேசின ஒரு வ்யாக்யானம் இருக்கு. அதை அப்படியே ஒரு பத்து நிமிஷம் படிக்கலாம்னு ஆசை படறேன். அந்த புண்ய தினத்தோட பெருமையை  நினைக்கறதுக்கு அந்த வ்யாக்யானம் ரொம்ப அழகா இருக்கு. மெய் சிலிர்த்தது அதை படிக்கும் போது. அதனால அதை படிக்கலாம் னு நினைக்கறேன்.

மஹா பெரியவா, “இந்த ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர” சொல்லுங்கோ எங்கிறதுக்கு, இந்த அப்பர் பெருமானுடைய ஒரு தேவாரத்துல “சங்கரா சய போற்றி போற்றி” னு வர்றது. அதைச் சொல்றா. அந்த தேவாரத்துல, மனசு லயம் அடையணும் னா, பரமேஸ்வரன் கிட்ட பக்தி பண்ணினா நிலையில்லாத இந்த மனசு அடங்கும்னு அந்த பாசுரத்துல வர்றதுனால இதை சொல்லி முடிச்சிருக்கா. நானும் அதை படிச்சு இன்னிக்கு பூர்த்தி பண்ணிக்கறேன்.

நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா

நித்தலும் என் பிரானுடைய கோயில்புக்கு

புலர்வதன்முன் அலகிட்டு மெழுகுமிட்டு

பூமாலை புனைந்தேற்றி புனைந்து பாடி

தலையார கும்பிட்டு கூத்துமாடி

சங்கரா சய போற்றி போற்றி என்றும்

அனல் புனல் சேர் செஞ்சடை என் ஆதி என்றும்

ஆரூரா என்றென்றும் அலரா நில்லே

அப்படீன்னு சொல்றா.

இந்த சங்கர சப்தமே சம் ஆகிய  நித்ய மங்களத்தை கொடுக்கும். சங்கர மூர்த்தியோட ஸ்மரணமும், அவருடைய சரிதத்தை நாம் இவ்ளோ நாள் கேட்டதுனால மனசுல பரம மங்களங்களும், சாந்தியும் க்ஷேமமும் ஏற்படும்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய  சங்கர ஹர ஹர சங்கர

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய  சங்கர ஹர ஹர சங்கர

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய  சங்கர ஹர ஹர சங்கர

நம: பார்வதி பதயே….ஹர ஹர மஹா தேவ

காஞ்சி சங்கரர் (14 min audio file. Same as the script above)

நம: பார்வதி பதயே….ஹர ஹர மஹா தேவ

Series Navigation<< ஸ்ரீ சங்கர சரிதம் – பதினான்காம் பகுதி – ஸ்தோத்ரங்கள் மூலமாக சங்கர திக்விஜயம்ஸ்ரீ சங்கர சரிதம் – பதினாறாம் பகுதி – சங்கர ஜயந்தி ஸர்வ உத்கிருஷ்டமான புண்ய காலம் >>
Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.