Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – மூன்றாவது ஸ்லோகம் – வேதப் பொருளாக விளங்கும் முருகன்


ஸுப்ரமண்ய புஜங்கம் மூன்றாவது ஸ்லோகம் (12 min audio file. Same as the script below)

ஆதி சங்கர பகவத் பாதாள் அருளிய ஸுப்ரமண்ய புஜங்கத்துல ஒவ்வொரு ஸ்லோகமா பார்த்துண்டு இருக்கோம். முதல் ஸ்லோகம் ‘ஸதா பாலரூபாபி விக்னாத்ரி ஹந்த்ரீ’ என்கிற ஸ்லோகத்துல, குழந்தை வடிவினராக இருந்தாலும், முழுமுதற் கடவுளாகிய பிள்ளையார், மலை போன்ற விக்னங்களையும் போக்கிடுவார். மங்கள வடிவானவர்ங்கிற ஸ்லோகம். அந்த ‘காபி கல்யாண மூர்த்தி’ ங்கிற பதத்தையும், ‘விக்னாத்ரி ஹந்த்ரீ’ ங்கிற பதத்தையும் சேர்த்து பார்க்கும் போது, நமக்கு முருகருடைய கதையிலேயே வள்ளி கல்யாணம் நடக்கறதுக்கு பிள்ளையார் தான் ஸஹாயம் பண்ணினார் இல்லையா, அது ஞாபகம் வரது. முருகன்வள்ளி கிட்ட கிழவனா போனார். விளையாட்டு பண்ணி, “என்னை கல்யாணம் பண்ணிக்கோ” ன்னு சொன்னார், அப்போ “போ தாத்தா, உன்னைப் போய் யார் கல்யாணம் பண்ணிப்பா” ன்னு சொல்றா வள்ளி. அப்போ சுப்பிரமண்ய ஸ்வாமி அண்ணா கணபதியை வேண்டிக்கிறார், அப்போ பிள்ளையார் யானை மாதிரி வந்த உடனே, வள்ளி பயந்து போய் முருக தாத்தாவை கட்டிக்கிறா. அப்பறம் முருகர் காட்சி கொடுத்து, வள்ளியை திருத்தணிக்கு கொண்டு போய் கல்யாணம் பண்ணிக்கிறார் ன்னு ஒரு கதை.

‘ அத்துயர் அதுகொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபம் ஆகி

அக் குறமகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே”

ன்னு இதைத்தான் அருணகிரிநாதர் பாடறார்.

அடுத்த ஸ்லோகத்துல ஆசார்யாள் “எனக்கு ஸ்லோகமெல்லாம் பண்ணத் தெரியாது, இந்த ஷண்முக பெருமானுடைய வடிவம், அந்த ஒளி என் மனசுல இருக்கறதுனால, தானா என் வாக்குலேர்ந்து இந்த ஸ்லோகம்  வர்றது” ன்னு வினயமா சொல்றார்.
மூணாவது ஸ்லோகம் இன்னிக்கு

मयूराधिरूढं महावाक्यगूढं मनोहारिदेहं महच्चित्तगेहम् ।

महीदेवदेवं महावेदभावं महादेवबालं भजे लोकपालम् ॥ ३॥

மயூராதிரூடம் மஹாவாக்யகூடம்

மனோஹாரிதேஹம் மஹத்சித்தகேஹம் |

மஹீதேவதேவம் மஹாவேதபாவம்

மஹாதேவ பாலம் பஜே லோகபாலம் ||

எட்டு பதங்களும் ‘ம’ அப்ப்டீங்கிற எழுத்துல  ஆரம்பிக்கிற அந்த ஒரு அழகு. இந்த புஜங்க வ்ருத்தம்.

‘மயூராதிரூடம்’-ன்னா, மயூரம்-னா மயில், அதிரூடம்-ன்னா ஏறி அமர்ந்து இருக்கார். முருகப் பெருமான் மயில் வாகனத்தில் ஏறி அமர்ந்து இருக்கிறார். பரம்பொருள் பூமியில ராமனா அவதாரம் பண்ணின போது, வேதம் வால்மீகி முனிவர் வாயிலாக ராமாயணமாக வெளிப்பட்டது ன்னு ஒரு ஸ்லோகம் இருக்கு.  அந்த மாதிரி, பரம்பொருள் முருகப்பெருமானாக அவதாரம் பண்ணின போது, வேதமே மயிலாக வந்து முருகப் பெருமானை தாங்கி, ரொம்ப சந்தோஷபட்டது அப்படீன்னு ஸ்காந்த புராணத்துல  வர்றது.

मयूरभावं निगमा: तपसा प्राप्य षण्मुखम् ।

उद्वाह्य तृप्तिं परमां सम्प्रापु: सर्वदा भुवि ।।

மயூரபாவம் நிகமா: தபஸா ப்ராப்ய ஷண்முகம் |

உத்வாஹ்ய த்ருப்திம் பரமாம் ஸம்ப்ராபு: ஸர்வதா புவி ||

ன்னு ஒரு ஸ்லோகம் இருக்கு. வேதம் தான் மயில்  எங்கிறதுக்கு இது ப்ரமாணம். அப்படி ‘மயூராதிரூடம்’

‘மஹாவாக்ய கூடம்’ நான்கு வேதங்கள்ல நான்கு  மஹா வாக்யங்கள் ன்னு இருக்கு,  ‘பரக்ஞானம் ப்ரம்மா’ ‘அயமாத்மா ப்ரம்மா’ ‘தத்வமஸி’ ‘அஹம் ப்ரம்ம்மாஸ்மி’ என்கிற இந்த நாலும் மஹாவாக்யங்கள்.  ‘பரக்ஞானம் ப்ரம்மா’ எங்கிறது லக்ஷண வாக்யம்ன்னு சொல்றா. ‘அயமாத்மா ப்ரம்மா’ எங்கிறது ப்ரமாண வாக்யம்ன்னு  சொல்றா.  ‘தத்த்வமஸி’ அப்படீங்கிறது, உபதேச வாக்யம், ‘அஹம்ப்ரம்ம்மாஸ்மி’-கிறது (फल) பல வாக்யம். அப்படி மஹா வாக்யங்களுடைய லக்ஷிய பொருளே சுப்ரமண்ய சுவாமி தான். இது ரஹஸ்யமான விஷயம், அர்த்தத்தை பார்க்கிறோம். ஆனா இதோட பொருளாக, அனுபவமாக விளங்குவது யாருன்னா முருகப் பெருமான் தான், அப்படீன்னு ஆதி சங்கரரே சொல்றார். அவர் உபநிஷத் பாஷ்யம் எழுதினவர், இது நாலும் ஒவ்வொரு வேதத்துல இருக்கற உபநிஷத்துல இருக்கற வாக்கியங்கள். ‘கூடம்’ மஹாவாக்ய மறை பொருளாக விளங்குவது முருகப் பெருமான் தான்ன்னு ஆதி சங்கரரே  சொல்றார்ன்னா அந்த பரப்ரம்மம் , நமக்காக முருகப் பெருமான வடிவம் எடுத்து வந்து இருக்கு, எங்கிறதை உணர்ந்து சொல்றார். ‘மஹாவாக்ய கூடம்’

‘மனோஹாரி தேஹம்’ , அந்த பரம்பொருள் எதுக்காக இந்த மாதிரி உருவம் எடுத்து வந்து இருக்குன்னா, உலகத்துல இருக்கிறவா எல்லாம் மனசை உலக விஷங்கள்ல கொடுத்து, அந்த பற்று ஜாஸ்தியா இருக்கறதுனால, ரொம்ப பந்தம் ஜாஸ்தியாகி கஷ்டப் பட்டுண்டு இருக்கா. மனசை இந்த  உலக விஷயங்கள்லேர்ந்து எடுத்து, பரப்பிரம்மதுல வெச்சா தான், மோக்ஷம் ஏற்படும். அப்படி மோக்ஷம் குடுக்கறதுக்காக, கருணையினால் அந்த பகவான் பூமியில அவதாரம் பண்றார். அதுல இந்த முருகப் பெருமானோட அவதாரம் ரொம்ப அழகா, கோடி மன்மத லாவண்யத்தோட முருகனாக வந்து இருக்கார். அந்த குமார வடிவமான அந்த முருகனோடு அழகுல மனசைக் கொடுத்தா, உலக விஷங்கள்லேர்ந்து தானா மனசு விலகி,  அந்த முருகனோடு அழகு மூலமாவே, அழகே அருள், அது மூலமாவே அந்த பரப்பிரம்மத்து கிட்ட போகலாம் என்பதால், ‘மனோஹாரி தேஹம்’ அப்படி மனத்தை கொள்ளை கொள்ளும் அழகு படைத்த உருவத்தோட முருக பெருமான் இருக்கார்.

‘மஹத்சித்த கேஹம்’ இந்த உண்மையை உணர்ந்த மஹான்கள், தன்னுடைய மனசையே, முருகனுடைய  இருப்பிடமாக, வீடாக கொடுத்துட்டாளாம். முருகனை இங்க வந்து தங்கிக்கோன்னு சொல்லி, ‘மஹத் சித்த கேஹம்’ மஹான்களுடைய, சித்தத்தை வீடாக, ‘கேஹம்’-னா வீடுன்னு அர்த்தம், வீடாக கொண்டு இருக்கிறார் முருகர். மஹான்கள் தன்னுடைய மனத்தை முருகனுக்கு அர்ப்பணித்து விட்டார்கள் ன்னு அர்த்தம்.

‘மஹீதேவதேவம்’ ‘மஹீதேவஹன்னா பூமியில் இருக்கக் கூடிய தேவர்கள் ப்ராஹ்மணர்கள். ப்ராஹ்மணர்களுடைய தெய்வம் ஸுப்ரமண்ய ஸ்வாமி, அப்படீன்னு ஆதிசங்கரர் சொல்றார். அவர் ஷண்மத ஸ்தாபனாசார்யாள், “ஆதித்யம் அம்பிகாம் விஷ்ணும் கணநாதம் மஹேஸ்வரம்” ன்னு அந்த  அஞ்சு தெய்வங்களோடு முருகனையும் இணைத்து, முருக வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மஹா பெரியவாகூட இந்த பஞ்சாயதன பூஜையில ஒரு வேலை வெச்சுண்டு முருகனையும் வழிபடணும் அப்படீன்னு சொல்லியிருக்கா. அப்படி அந்த  ‘மஹீதேவதேவம்’ ஸுப்ரமண்யம் அப்படீங்கிற வார்த்தைக்கே, ப்ராஹ்மணர்களுடைய தெய்வம், ப்ரம்மண்ய தேவ: ன்னு தானே பொருள். அப்படி ப்ராஹ்மணர்கள் முக்கியமா முருகனை வழிபட வேண்டும். சிவபூஜை பண்றது ப்ராஹ்மண லக்ஷ்ணம், அந்த சிவகுமாரனான ஸுப்ரமண்யர் கிட்டயும், ப்ராஹ்மணர்கள் பக்தியோட இருக்க வேண்டும்.

‘மஹாவேத பாவம்’ நான்கு வேதங்களுடைய தாத்பர்யமும் இந்த முருக பெருமான் தான் என்று சொல்றார்.

‘மஹாதேவ பாலம்’ மஹாதேவ பாலம்- ன்னா பரமேஸ்வரனுடைய புத்திரன்-னு ஒரு அர்த்தம், ‘महादेवोपि बाल: कदाचित् यस्य’ ‘மஹாதேவோபி பாலஹ கதாசித் யஸ்ய’ அப்படீங்கிற ஒரு ஸமாஸம் பண்ணி, பரமேஸ்வரன் கூட பிரணவத்தின் பொருளை தெரிந்து கொள்வதற்கு, ஸுப்ரமண்ய ஸ்வாமி சன்னதில வந்து பணிவோடு கத்துண்டார்ங்கிற அந்த கதை இருக்கு இல்லையா, மஹாதேவரும், எவருக்கு குழந்தையாக ஆகிவிட்டாரோ, ‘अज्ञं हि बालमित्याहु: पितेत्येव च मन्त्रदं’ ‘அக்ஞம் ஹி பாலமித்யாஹு: பிதேத்ஏவ ச மந்த்ரதம்’ எவர் மந்த்ரத்தை கொடுக்கிறாரோ அவர் பிதா, எவன் அக்ஞானியாக இருந்து அதை தெரிஞ்சுக்கறானோ அவன் பாலன். அப்போ இந்த இடத்துல சிவபெருமான் தான்  பாலன், முருகப் பெருமான் தான் பிதா. ஸ்வாமிமலையில தகப்பன் ஸ்வாமின்னு சொல்லுவா இல்லையா.

‘மஹாதேவ பாலம்’ங்கிற பதத்துக்கு சிவபெருமானுடைய குழந்தை அப்படிங்கிறது நேர் அர்த்தம், சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை  ஆறு தேஜஸை கொடுத்தார், அதை அக்னி பகவான் கங்கை கிட்ட கொடுக்க, கங்கை சரவண பொய்கையில சேர்த்து, ஆறு தாமரை பூக்கள்ல ‘ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய’ ன்னு கச்சியப்பர் பாடுகிறார் இல்லையா. அப்படி  ‘மஹாதேவ பாலம்’ன்னா பரமேஸ்வரனுடைய குழந்தை.

ஆனால் மஹாதேவரும், எவருக்கு குழந்தையாக  ஆனாரோ, அந்த கதை தெரிஞ்சு இருக்கும், இருந்தாலும் ஸ்வாரஸ்யமா இருக்கறதுனால இன்னொரு வாட்டி சொல்றேன். கைலாசத்து வாசல்ல ஸுப்ரமண்ய ஸ்வாமி, வீரபாஹு அவாளோட  விளையாடிண்டு இருக்கார். அப்போ ப்ரம்மா கைலாசத்துக்கு பரமேஸ்வர தரிசனத்துக்காக வரார். வந்த போது இந்த குழந்தைளை பார்த்த உடனே, அலக்ஷியமா உள்ள போயிடுறார். உள்ள போயிட்டு வெளியில வரார். வெளியில வரும் போது, “எங்க கிட்ட உத்தரவு வாங்காம ஏன் நீங்க கைலாசத்துக்கு உள்ள போனேள்?” அப்படீன்னு முருகப் பெருமான் பிரம்மாவை கேக்கறார், “நீ யாரு சின்ன பையன், என்னை கேள்வி கேட்கிறாயே? நான் யார் தெரியுமா, நான்கு முகங்களால் நான்கு வேதங்களையும் ஓதி, உலகத்தையே ஸ்ருஷ்டி பண்ணற ப்ரம்மா” அப்படீன்னு கர்வமா சொல்றார். “இவ்வளோ கர்வமா உங்களுக்கு, “சரி எங்கே வேதத்தை சொல்லுங்கோ ” ன்ன உடனே, அவர் ஓம்-னு ஆரம்பிக்கிறார், “நீங்கள் இப்போ சொன்ன ப்ரணவத்துக்கு அர்த்தம் சொல்லுங்கோ” ன்னு கேட்கறார் முருகப் பெருமான். பிரம்மாவுக்கு அதுக்கு அர்த்தம் தெரியலை. “அர்த்தமே தெரியாம நீங்க என்ன ஸ்ருஷ்டி  பண்ணப் போறேள்”ன்னு, முருகப் பெருமான் ப்ரம்மாவை குட்டி, அவரை சிறையில போட்டுடுறார். அப்பறம் தானே ஸ்ருஷ்டி பண்றார்.

இதை நந்திகேஸ்வரர் பரமேஸ்வரன் கிட்ட போய்ச் சொல்றார். பரமேஸ்வரன் குழந்தை கிட்ட வந்து “ஏன் நீ ப்ரம்மாவை சிறையில போட்ட?”, அப்படீன்ன உடனே முருகப் பெருமான், “அவருக்கு ப்ரணவத்துக்கு பொருள் தெரியல, அதுனால தான்” என்கிறார். உடனே, பரமேஸ்வரன் குழந்தையை தூக்கி வெச்சிண்டு, “எனக்கு ப்ரணவத்துக்கு பொருள் சொல்லு”ன்னு கேட்கறார். “எனக்கும் தெரியல எனக்கு சொல்லு” ன்ன உடனே, முருகப் பெருமான் பிரணவத்தின் பொருளை சிவபெருமானுடைய காதுல ஓதறார். அந்த கதையை இங்க ஞாபக படுத்திக்கணும். அப்படி “மஹாதேவ பால:” ங்கிறதுக்கு, மஹாதேவரும் எவருக்கு குழந்தையாக ஆனாரோ, எந்த முருகப் பெருமான் பிதாவைப் போல இருந்து, சிவபெருமான் குழந்தையாக இருந்து, பிரணவ மந்திரத்துக்கு அர்த்தம் சொன்னாரோ அந்த ஸ்வாமி.

‘லோகபாலம்’ உலகங்களை எல்லாம் காப்பவர் முருகர் தான். இந்த சுப்ரமண்ய பதமே ப்ராம்மணர்களுடைய தெய்வம் என்று பொருள். “கோ ப்ராம்மணேப்ய: சுபம் அஸ்து நித்யம் லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து” னு இருக்கு இல்லையா! பிராம்மணர்கள் முருகனை வழிபட்டு அது மூலமாக மழை பெய்து, பயிர்கள் பசுக்கள் எல்லாம் செழித்து, தான தர்மங்கள் வருத்தி ஆகி உலகமே சுபிக்ஷமாக இருக்கும். அப்படி ‘லோகபால’

‘பஜே’ இந்த ஸ்வாமியை நான் வழிபடுகிறேன் என்று ஆதி சங்கரர் சொல்றார்.

मयूराधिरूढं महावाक्यगूढं मनोहारिदेहं महच्चित्तगेहम् ।

महीदेवदेवं महावेदभावं महादेवबालं भजे लोकपालम् ॥ ३॥

நாளைக்கு ‘யதா ஸந்நிதானம் கதா மானவா மே’ என்கிற நாலாவது ஸ்லோகத்தை பாப்போம்.

வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரோ ஹரா.

Series Navigation<< ஸுப்ரமண்ய புஜங்கம் – இரண்டாவது ஸ்லோகம் – அறுமுக குமர சரணம் என அருள்பாடிஸுப்ரமண்ய புஜங்கம் – நான்காவது ஸ்லோகம் – முக்தி தரும் முருக தரிசனம் >>

2 replies on “ஸுப்ரமண்ய புஜங்கம் – மூன்றாவது ஸ்லோகம் – வேதப் பொருளாக விளங்கும் முருகன்”

மிகவும் அழகான ஸ்லோகம்… முருகனுடைய லீலைகளை கேட்க ஆனந்தமாக இருந்தது 🙏

முருகன் என்றாலே அழகன் என்று அர்த்தம். இந்த ஸ்லோகத்தில் ஆசார்யாள் “மனோஹாரி தேஹம்” என்று போட்டிருக்கிறார்.

தீக்ஷிதர் ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே க்ருதியில் ”மநஸிஜ கோடி கோடி லாவண்யாய” என்று பாடுகிறார். ‘மநஸிஜன்’ என்பது மன்மதனின் பெயர். அழகுக்குப் பெயரெடுத்தவன் மன்மதன். அப்படிப்பட்ட மன்மதர்கள் கோடி கோடி பேரின் அழகு சேர்ந்தால் எவ்வளவு அழகாயிருக்குமோ அத்தனை அழகானவர் ஸுப்ரஹ்மண்யர். – “மநஸிஜ கோடி கோடி லாவண்யாய”.

ஸுப்ரஹ்மண்யர் ஸர்ப்ப ஸ்வரூபர். மயில் ஸர்ப்பத்தின் பரம வைரி. அந்த மயிலின் மேலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறார் மயூராதிரூடராக !

‘மஹீதேவதேவம்’ – ப்ராஹ்மணர்களுடைய தெய்வம் என்று பாடுகிறார் ஆசார்யாள். திருமுருகாற்றுப் படையில் நக்கீரர், ஆறுமுகங்களில், ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு விசேஷமான காரியத்தைச் சொல்கிறபோது, “மந்திர விதி தப்பாமல், வைதிக சம்பிரதாயப்படி பிராமணர்கள் செய்கிற யாகங்களைக் கண்டு இன்புற்று அவற்றை வளர்க்கவே முருகனுக்கு ஒரு முகம் இருக்கிறது” என்று பாடுகிறார்.

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோஹரா🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.