ஸுப்ரமண்ய புஜங்கம் – பத்தாவது ஸ்லோகம் – மனதுக்குகந்தது முருகனின் ரூபம்

ஸுப்ரமண்ய புஜங்கதுல இதுவரைக்கும் ஒன்பது ஸ்லோகங்கங்கள் பார்த்து இருக்கோம். நேற்றைக்கு பாதரவிந்த மஹிமையை பத்தி  அழகான ஒரு ஸ்லோகம் பார்த்தோம். முன்னேயே சொன்ன மாதிரி, இந்த ஸ்தோத்திரத்துல ஒரு அமைப்பு இருக்கு. இந்த க்ஷேத்ரத்துக்கு அழைச்சிண்டு வந்து, ஸ்வாமி சன்னிதி, சுத்தி இருக்கக்கூடிய மத்த ஸ்வாமி சன்னிதிகள், அந்த கந்தமாதன பர்வதம், பள்ளியறை, அப்படி எல்லாத்தையும் காண்பிச்சுட்டு, அப்பறம் இப்ப சுவாமி சன்னிதியில நிறுத்தி, பாதாதி கேசம் ஸ்வாமியோட ரூபத்தை ஆச்சார்யாள் வர்ணணை பண்றார். இது ஒரு சம்ப்ரதாயம். ஸ்த்ரீ தெய்வமா இருந்தா கேசாதி பாதம், புருஷ தெய்வமா இருந்தா பாதாதி கேசம் அப்படீன்னு வர்ணனணை பண்றா. பக்தி மார்கத்துல, இந்த ரூப த்யானத்தை முக்யமா சொல்லி இருக்கா. நாம சங்கீர்த்தனம், அந்த தெய்வத்தை பத்தின ஸத்கதா ச்ரவணம், அந்த தெய்வத்தோட ரூபத்தை த்யானம் பண்றது. இந்த மூணும், பக்தி ஏற்படறதுக்கும் , வளர்றதுக்கும் ரொம்ப முக்கியம்ன்னு மஹான்கள் சொல்லியிருக்கா. அவாளோட அனுபவத்தை அவா சொல்றா. அப்படி ஒரு ரூபத்தில் பகவான் அவாளுக்கு காட்சி கொடுத்துனால, இதுல மனசு ரொம்ப லயிக்கறதுனு புரிஞ்சிண்டு, அதையே அவா தன்னோட பக்தர்களுக்கும் சொல்லி கொடுத்துருக்கா. அருணகிரிநாதர் கூட தன்னுடைய நிறைய பாடல்கள்ல முருகப்பெருமானோட ரூபத்தை வர்ணணை  பண்ணி, இந்த மாதிரி என் கண் முன்னாடி வந்து தர்சனம் தரமாட்டியான்னு பாடுவார்.

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்

தண்கழல்சி லம்புடன்  கொஞ்சவேநின்

தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்

சந்தொடம ணைந்துநின்றன்புபோலக்

கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்

கஞ்சமலர் செங்கையுஞ்சிந்துவேலும்

கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்

கண்குளிர என்றன்முன் சந்தியாவோ

ன்னு ஒரு பாட்டு. நீ நடமாடிண்டு என் முன்னாடி வரணும், அப்படி நிறைய பாடல்கள்ல என் முன்னாடி வந்து நீ தர்சனம் கொடுக்கணும், அப்படீன்னு அருணகிரிநாதர் பாடி இருக்கார்.

மஹா பெரியவாளும் ரூபவர்ணணையை சொல்லியிருக்கா. பெரியவா குருபக்தியை பத்தி  பேசும் போது ஒண்ணு சொல்றா. பரமேஸ்வரனுடைய ரூபத்தை த்யானம் பண்ணோம்னா சந்திரன், மழு மான், கையில அக்னி அப்படியெல்லாம் யோசிக்கலாம். ஆனா மனசுல ஒண்ணை த்யானம் பண்றதுக்குள்ள இன்னொன்னு மறைஞ்சு போயிடறது, குரு பக்தி ரொம்ப சுலபம். நம்ம குருவை நாம  தர்சனம் பண்ணியிருக்கோம். மஹா பெரியவாளை நினைச்சா அந்த ரூபம் வந்துடறது. தெய்வ அனுக்ரஹம் பெற்ற மஹான்கள் எப்படி இருக்கான்னா, அவாளோட physical features விஷயம் இல்லை. ஞானத்துனால அவா கிட்ட இருக்கற அந்த கருணையும், சாந்தமும், அந்த இனிமையும் பொங்கி வழியறது. அதை நம்மால feel பண்ண முடியறது. அந்த தேஜஸ். அதனால நாம அவாளை ஓடிப் போய்  தர்சனம் பண்றோம். ஆனா மஹா பெரியவா வேடிக்கையா சொல்லியிருக்கா “எங்க அப்பா ரொம்ப அழகா இருப்பாராம், எங்க அம்மாக்கு கண்ணுல கொஞ்சம் உபாதை உண்டு. எனக்கு அப்பாவோட  அழகு ஒண்ணும் வரலை. ஆனா எங்க அம்மாவோட கண்ணு உபாதை வந்துடுத்துன்னு” வேடிக்கையா பெரியவா சொல்றா. queue-ல நின்னு நாங்க எல்லாம் தர்சனம் பண்றோம். ஆனா  வேடிக்கையா பெரியவா T V ஸ்வாமிநாதன்னு ஓரு IAS officer கிட்ட அப்படி சொல்லியிருக்கா. அந்த மாதிரியெல்லாம் ரொம்ப  விளையாட்டா பேசுவா பெரியவா. ஆனா ஸாக்ஷாத் காமாக்ஷி தேவியே தர்சனம் கொடுக்கறா என்கறதை பாத்தவா எல்லாரும் உணர்ந்தா. செக்க செவேல்ன்னு ஒரு glow-வோட, golden aura வோட மஹாபெரியவா தர்சனம் கொடுத்தான்னா ஒரு மாசத்துக்கு அந்த காட்சி கண்ணுல நிக்கும். அந்த மாதிரி ஒரு ரூபத்துல மனசு நிக்கறது. நமக்கு நம் குழந்தைகள், நம் ப்ரியமானவாளோட ரூபம் வந்து கண்ணுல நிக்கறது இல்லையா? அதுல ஒரு சந்தோஷம் ஏற்படறது. ஆனா இது மாறக் கூடிய அழகு. மாறக் கூடிய சந்தோஷம். அதனால மாறாத சந்தோஷத்தை தேடும் போது அந்த பாகவனோட ரூபத்தை த்யானம் பண்றதுங்கிறதை மஹான்கள் காண்பிச்சு கொடுத்திருக்கா. இப்படி இந்த முருகப் பெருமானுடைய பாதரவிந்தத்தை பத்தி நேத்திக்கு ஒரு ஸ்லோகத்துல பார்த்தோம். அடுத்தது கடி பிரதேசம்ன்னு இடுப்பை பத்தின ஒரு ஸ்லோகம்.

सुवर्णाभदिव्याम्बरैर्भासमानां

क्वणत्किङ्किणीमेखलाशोभमानाम् ।

लसद्धेमपट्टेन विद्योतमानां

कटिं भावये स्कन्द ते दीप्यमानाम् ॥  १० ॥

ஸுவர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம்

க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம்

லஸத்தேம பட்டேன வித்யோதமானாம்

கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம்

ன்னு ஒரு ஸ்லோகம். ஸ்கந்தா! அப்படீன்னு கூப்பிடறார், ‘தே தீப்யமானாம்’ – உன்னோட ஒளி பொருந்திய ‘கடீம்’ கடி ன்னா இடுப்பு. அதை  ‘பாவயே’ நான் த்யானிக்கிறேன். அந்த கடியோட வர்ணணை எப்படி இருக்குன்னா ‘ஸுவர்ணாபதிவ்யாம்பரைஹி’  தங்க மயமான வஸ்த்ரங்களால் அந்த இடுப்பு மறைக்கப்பட்டு இருக்கு. இடுப்புல தங்க மயமான ஜரிகையெல்லாம் வெச்சு  வேஷ்டி கட்டிண்டு இருக்கார். ‘க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம்’ சலங்கை கட்டின ஒரு மேகலை,மேகலைன்னா இடுப்புல  கடிக்கற ஒரு ஆபரணம். கடி ஸுத்ரம் மாதிரி. அந்த சலங்கையோட மணிகள் ‘க்வணத்கிங்கிணீ’-ன்னு சத்தம் பண்ணிண்டு இருக்கு. அந்த மேகலைய போட்டுண்டு  ‘லஸத்தேம பட்டேன வித்யோதமானாம்’ belt மாதிரி ஒரு பட்டம் ஒண்ணு கட்டியிருக்கு. அது தங்க மயமா இருக்கு. ‘ஹேம பட்டேன வித்யோதமானாம்’ ஒளிவிடும் உன்னுடைய இடுப்பு பிரதேசத்தை நான் த்யானம் பண்ணுகிறேன்ன்னு ஒரு ஸ்லோகம்.

இப்படி அடுத்து மார்புபை பத்தி, அடுத்தது கரங்களை பத்தி, அடுத்தது முகத்தை பத்தி, அதுல இருக்கற அந்த  புன்சிரிப்பு, அதிலிருக்கிற அந்த பன்னிரெண்டு கண்கள், அதோட கருணை பார்வை, இப்படி அந்த  ரூபத்தை வர்ணிக்க போறார்.

இடுப்புல ஓட்டியாணத்தோட ஒரு ஸ்வாமியை நினைச்ச உடனே, மூக பஞ்சசதியில ஒரு ஸ்லோகம் வர்றது. ஸ்துதி சதகத்துல நூறாவது ஸ்லோகம், இது மஹாபெரியவாளுக்கு ரொம்ப இஷ்டமான ஸ்லோகம். ‘இந்த ஸ்லோகத்தை மௌன விரதமா இருந்தா கூட உதடு அசைய ஜபிச்சிண்டே  இருப்பா. நான் பார்த்திருக்கேன்’ ன்னு வீழிநாதன் மாமா சொல்லியிருக்கா. அந்த ஸ்லோகத்தை சொல்லி  பூர்த்தி பண்ணிக்கிறேன்.

क्वणत्काञ्ची काञ्चीपुरमणिविपञ्चीलयझरी-

शिरःकम्पा कम्पावसतिरनुकम्पाजलनिधिः ।

घनश्यामा श्यामा कठिनकुचसीमा मनसि मे

मृगाक्षी कामाक्षी हरनटनसाक्षी विहरतात् ॥

க்வணத்காஞ்சீ காஞ்சீபுரமணிவிபஞ்சீலயஜரீ-

சிர:கம்பா கம்பாவஸதிரனுகம்பாஜலனிதி: |

கனச்யாமா ச்யாமா கடினகுசஸீமா மனஸி மே

ம்ருகாக்ஷீ காமாக்ஷீ ஹர நடனஸாக்ஷீ விஹரதாத் ||

ஸுப்ரமண்ய புஜங்கம் பத்தாவது ஸ்லோகம் (8 min audio file. Same as the script above)

நம: பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவா…

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *