ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினொன்றாவது ஸ்லோகம் – வள்ளியம்மை நாயகனே வா வா வா


ஸுப்ரமண்ய புஜங்கம் பதினொன்றாவது ஸ்லோகம் (11 min audio file. Same as the script above)

நேத்திக்கு ஸுப்ரமண்ய புஜங்கத்துல முருகப் பெருமானுடைய ‘கடீ’ பிரதேசம் அப்படிங்கற இடையைப் பத்தி ஒரு அழகான ஸ்லோகம் பார்த்தோம்.

ஸுவர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம்

க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம் |

லஸத்தேம பட்டேன வித்யோதமானாம்

கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம் ||

ன்னு ஒரு ஸ்லோகம்.

இன்னிக்கு முருகப் பெருமானுடைய திருமார்பைப் பற்றிய ஒரு ஸ்லோகம்.

पुलिन्देशकन्याघनाभोगतुङ्ग_
स्तनालिङ्गनासक्तकाश्मीररागम् ।
नमस्यामहं तारकारे तवोरः
स्वभक्तावने सर्वदा सानुरागम् ॥११॥

புளிந்தேச கன்யா கநாபோக துங்க

ஸ்தனாலிங்கநாஸக்த காச்மீர ராகம் |

நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர:

ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் ||

ன்னு ஒரு ஸ்லோகம். முருகப் பெருமானுடைய மார்பு செக்கச் செவேல்னு இருக்காம். பரந்து விரிந்த அந்த மார்புகள், சிகப்பா இருக்கு. அதுக்கு ஆசார்யாள் ரெண்டு காரணங்கள் சொல்றார். ‘ஹே தாரகாரே’’ தாரகாசுரனுக்கு சத்ருவான ஸுப்ரமண்யப் பெருமானே! ‘புளிந்தேச கன்யா கநாபோக துங்க ஸ்தனாலிங்க நாஸக்த காச்மீர ராகம்’ புளிந்தன் என்ற வேடனுடைய பெண்ணான வள்ளியம்மையினுடைய கடினமான பெரிய ஸ்தனங்களை ஆலிங்கனம் செய்து கொள்ளும் பொழுது, அந்த ஸ்தனத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ள குங்குமம் உன்னுடைய மார்பிலும் வந்துட்டதனால சிகப்பா இருக்கு, அப்படின்னு ஒரு காரணம்.

இன்னொரு காரணம், ‘ஸர்வதா ஸ்வபக்தாவனே’, எப்பொழுதும் உன்னுடைய பக்தர்களை காப்பாற்ற வேண்டும் என்று உன் மனசுக்குள்ள எப்பவும் ‘ஸானுராகம்’, அந்த அனுராகம், அந்த ஆசை இருந்துண்டே இருக்கிறதனால, ‘ராகம்’ ங்கிற ஸமஸ்கிருத வார்த்தைக்கு சிகப்புனு ஒரு அர்த்தம். உள்ளிருக்கக் கூடிய அந்த கருணை வெளில சிகப்பா தெரியறது. ‘தவ உர:’, உன்னுடைய மார்பு செக்கச் செவேல்னு ஆயிடுத்து. கருணையினால சிவந்திடுத்து உன்னுடைய மார்பு. அதை ‘அஹம் நமஸ்யாமி’, நான் நமஸ்கரிக்கிறேன்.

புளிந்தேச கன்யா கநாபோக துங்க

ஸ்தனாலிங்க நாஸக்த காச்மீர ராகம்

நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர:

ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம்!

வள்ளி தேவியை நினைக்கும் போது, இங்க திருத்தணிக்கு பக்கத்தில வள்ளிமலைனு ஒரு மலை இருக்கு. முருகப் பெருமான் அந்த வள்ளிமலைக்குப் போய், வள்ளி தேவியை தினைப் புனத்தில பார்த்து அப்புறம் நிறைய திருவிளையாடல்கள் இருக்கு. அதெல்லாம் பண்ணி முடிச்சு, திருத்தணிக்கு கொண்டு வந்து கல்யாணம் பண்ணின்டார்னு வரலாறு. அந்த வள்ளிமலைல ஒரு திருப்புகழ் சுவாமிகள், வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்னு ஒரு மஹான் பன்னிரண்டு வருஷம் தபஸ் பண்ணினார். தன் கையாலேயே ஒரு குகை பண்ணிண்டு, அதுக்குள்ள உட்கார்ந்துண்டு, அங்க வர்ற குறவர்கள் கொடுக்கக்கூடிய பழங்கஞ்சியை, ஒரு நாளைக்கோ, ரெண்டு நாளைக்கோ ஒரு தரம் சாப்டுண்டு தபஸ் பண்ணினார்.

திருவண்ணாமலைல சேஷாத்ரி சுவாமிகள்னு ஒரு மகான் இருந்தார். அவர் சச்சிதானந்த சுவாமிகள் கிட்ட ‘உனக்குத் திருப்புகழ் மந்திரம். நீ வள்ளி மலைக்குப் போ.’ ன்னு சொன்னார். அதையே தெய்வ வாக்கா எடுத்துண்டு வள்ளிமலைக்கு வந்து பன்னிரண்டு வருஷங்கள் திருப்புகழை மந்திரமா ஜெபிச்சார். அவருக்கு வள்ளி அம்மையுடைய அநுக்கிரகம் கிடைச்சுது. அவருக்கு எழுத்துப் படிப்பே தெரியாது. அ, ஆ, இ, ஈ கூட தெரியாது. ஒரு நாலாவது படிக்கிற பையன் கிட்ட இருந்து சிலேட்ல எழுதி, அ, ஆ, இ, ஈ .. கத்துண்டு, அப்புறம் திருப்புகழ் பாடல்கள் எல்லாம் கேட்டு கேட்டு கத்துண்டு, அதை எழுதித் தரச் சொல்லி, அந்த பக்கத்த தன் கழுத்தில மாலையாட்டம் தொங்க விட்டுண்டு, யாராவது படிக்கத் தெரிஞ்சவா இருந்தா, ‘இதப் படி, படி’ ன்னு சொல்லி, படிக்கிறத கேட்டு கத்துண்டாராம். அப்படி அவருக்கு திருப்புகழ் மேல ஆசை. அதற்கப்புறம் எல்லா திருப்புகழையும் கத்துண்டு, அவ்வளவு இனிமையா பாடுவார். ராக, தாள ஞானத்தோட அவர் திருப்புகழ் பாடுவார். ஏன்னா திருப்புகழ்ல ரொம்ப கடினமான சந்தங்கள் எல்லாம் இருக்கு. ஒரு மிருதங்க வித்வான், இவரை ரொம்ப இளப்பமா நெனைச்சி ‘ நான் வாசிச்சா, நீங்க பாடுவேளா?’ அப்படின்னாராம். சந்தக் கட்டோட இவர் பாடுற திருப்புகழ கேட்ட உடனே, நடுங்கிப் போய் நமஸ்காரம் பண்ணி ‘அபசாரம். மன்னிச்சிடுங்கோ’ சொல்லி ஓடிப் போய்ட்டார்னு சொல்லுவா. இவருக்கு ஒரு சங்கீதமும் தெரியாது. வள்ளி அம்மையினுடைய அநுக்கிரகத்தினால ரொம்ப சங்கீதத்தோட, ராக, தாள ஞானத்தோட ‘கணீர்’னு பாடுவார்.

வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் அப்படி திருப்புகழை, தமிழகம் முழுக்கப் போய், எல்லா இடத்திலயும் பாடினார் தேன் மாரியாக பொழிந்தார். ஒவ்வொரு தேசத்திலயுமாக பன்னிரண்டு சபைகள் நிறுவினார். அதிலிருந்து இன்னிக்கி உலகம் முழுக்க திருப்புகழ எல்லாரும் பாடுறா. நாம எல்லாரும் இன்னிக்கி திருப்புகழ பாடுறோம்னா வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளை நினைச்சே ஆகணும். அப்படி வள்ளி அம்மையினுடைய அநுக்கிரகம் அவருக்கு இருந்தது.

இந்த திவ்ய தம்பதிகள், வள்ளி அம்மையோடு கூடிய ஸுப்ரமண்ய ஸ்வாமிய நினைக்கும் போது, எனக்கு ஒண்ணு தோண்றது. ஸ்வாமிகள் சந்நிதியில நடந்த ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வரது. மகான்கள் எல்லாரும் இக பர சௌபாக்யத்தத்தான் அநுக்ரகம் பண்ணியிருக்கா. இந்த ஸுப்ரமண்ய புஜங்கத்தோட கடைசிப் பாட்டுலேயே

புஜங்காக்ய வ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய:

படேத் பக்தியுக்த: குஹும் ஸம்ப்ரணம்ய |

ஸபுத்ரான் களத்ரம் தனம் தீர்கமாயுர்

லபேத் ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நரஸ்ஸ: ||

ன்னு நல்ல பிள்ளைகள், நல்ல மனைவி, பணம், தீர்க்காயுசு, தீர்க்காயுசா இருக்கணும்னா வியாதிகள் வரக்கூடாது இல்லையா, வியாதிங்கறதுதான் ஆயுச குறைக்கிறது. அதனால வியாதி இல்லாத நீண்ட ஆயுள், முடிவுல ஸ்கந்த சாயுஜ்யம், முருகனோடு ஒன்றாக கலக்கும் அந்த முக்தியும் இந்த ஸ்தோத்ரப் பாராயணம் கொடுக்கும் அப்படின்னு ஆச்சார்யாள் சொல்றார். அந்த மாதிரி, வள்ளி அம்மையை முருகப்பெருமான், தேடித் தேடிப் போய், ஓடி ஓடிப் போய், தினைப் புனத்தில, நடையா நடந்து, காதல் பண்ணி கல்யாணம் பண்ணிண்டார் அப்படின்னு வரது இல்லையா. எனக்கு அத படிச்சவுடன், ஸ்வாமிகள் கிட்ட நடந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வருது.

என் வயசு பையன் ஒருத்தனுக்கு கல்யாணம் நிச்சயம் ஆச்சு. அவன் ஸ்வாமிகள் கிட்ட வந்து ‘பொண்ணு ஒரளவு அழகு தான்’ அப்படின்னு சொன்னான். ஸ்வாமிகள் சொன்னார். ‘உங்க அப்பா அம்மாவும், அவா அப்பா அம்மாவும், நீ ஒத்துண்ட பின்ன லக்னம் குறிச்சிருக்கா. ஒருத்தருக்கொருத்தர் வாக்கு குடுத்திருக்கா. இனிமே நீ இந்த மாதிரி வந்து பேசக் கூடாது. பொண்ணு ஒரளவு அழகுதான் அப்படிங்கற எண்ணத்தையே விட்டுடு. இங்கிலீஷ்ல கூட சொல்லுவா இல்லையா. ‘ Beauty is in the eyes of the beholder’ ன்னு ஸ்வாமிகள் இங்கிலீஷ்லயே Quote பண்ணினார். அதனால அழகுங்கிறது நம்ம மனசுல இருக்கிறது தான். இவளை கடவுள் உனக்காக ஸ்ருஷ்டி பண்ணி குடுத்திருக்கார். உன்னுடைய அப்பா அம்மாவையும், உன்னையும், உன்னுடைய குழந்தைகளையும் நன்னா பாத்துப்பா. அன்பு தான் அழகு. நீ எதோ சினிமால பாத்துட்டு, அதெல்லாம் நெனைச்சிக்காத. இவகிட்ட மனச வை. இவகிட்ட அன்பா இரு’ ன்னு சொல்லிக் கொடுத்தார் ஸ்வாமிகள். ‘அதே மாதிரி உன்னுடைய படிப்ப வைச்சுண்டு, அவளோட புத்திய எடை போடாத. அவளோட ப்ரியத்த புரிஞ்சுக்கோ. நீயும் அந்த மாதிரி ப்ரியமா இரு’ அப்படின்னு சொன்னார். இந்த காலத்தில கல்யாணங்கள்ல நாள்பட ப்ரியம் குறைஞ்சு போயிடறதை நான் பாக்கிறேன். அதனால சொல்லணும்னு தோணித்து. கல்யாணாத்துக்கு முன்னாடி நமக்கும் கல்யாணம் ஆகாதான்னு, ஒரு டூ வீலர்ல யாராவது பின்னாடி ஒரு பொண்ண வைச்சுண்டு போகும் போது, இவன் ஏங்கி ஏங்கி, அப்புறம் ஒரு பொண்ணு வந்தா தலையை ஆட்டிட வேண்டியது. கல்யாணத்துக்கு அப்புறம் ‘நீ ஒண்ணும் அழகா இல்ல. நான் ரொம்ப புத்திசாலி. நீ அவ்ளோ புத்திசாலி இல்ல’ அப்படின்னு ஏதாவது குத்திக் காமிக்கிறத பாக்கும் போது மனசு கஷ்டமா இருக்கு.

எதுக்கு இத சொல்றேன்னா, வள்ளி ஒரு வேடுவ குலப்பெண். முருகப் பெருமான் தேடிப் போய், அவளை ஆசையா கல்யாணம் பண்ணிண்டு, இன்னிக்கி நாம அந்த திவ்ய தம்பதிகளை நமஸ்காரம் பண்றோம். இதெல்லாம் நாம ஒரு பாடம் கத்துக்கிறதுக்காகத் தான். அவ மேல ஆசைய முருகப் பெருமான் மாத்திக்கவே இல்லையே. அவளுக்கு படிப்பா? அழகுங்கிறது இவர் மனசுல ஆசை. அது தான் அழகு. அம்பாளோட அநுக்கிரகம், அழகே அருள்.

நாம ஒரு கிருஹத்தில பொறந்தோம். நம்ம அம்மா அழகானு நாம பாக்க முடியுமா? அம்மா காமிக்கிற அந்த அன்பு தான் ப்ரதானம். அம்மா எப்படி இருந்தாலும் குழந்தைக்கு அது அம்மா தான். அழகா இருக்கிற ஒரு மாமி வர்றானா குழந்தை அவள்ட்ட ஓடிப் போகுமா ? அம்மா காலைத் தானே கட்டிக்கும். எப்படி அங்க அன்பு தான் அழகுன்னு புரிஞ்சிக்கிறோமோ, அதே மாதிரி வர்ற மனைவி கிட்டயும், நமக்காக கடவுள் இவளை ஸ்ருஷ்டி பண்ணி அனுப்பிச்சிருக்கார்னு நினைக்கனும். எங்கயோ ஒரு காட்டுல போனா கூட, ஆண் பெண் மான் இணையாக இருக்கு. பட்டாம் பூச்சியோ ஒரு புறாவோ எல்லாம் ஜோடியாக பகவான் படைச்சிருக்கார். இவாளுக்காக இவானு அது பகவானோட ஸ்ருஷ்டி. அந்த மாதிரி கடவுள் நமக்கு கொடுத்த ஒரு வரமா மனைவிய நினைச்சு அன்பு பாராட்டணும்’ அப்படின்னு ஸ்வாமிகள் சொல்லிக் கொடுத்தது, அந்த பிள்ளை இன்னிக்கும் பதினெட்டு வருஷமா கல்யாணத்தில எந்த ஒரு கஷ்டமும் இல்லாம சௌக்கியமா இருக்கான்.

அதனால முருகப் பெருமானோட கூடியிருக்கிற இந்த வள்ளி தேவியை நினைக்கணும். அடிக்கடி அவாளை அருணகிரி நாதரும்

செண்ப காடவி யினுமித ணினுமுயர்
சந்த னாடவி யினுமுறை குறமகள்
செம்பொ னூபுர கமலமும் வளையணி …… புதுவேயும்

இந்து வாண்முக வனசமு ம்ருகமத
குங்கு மாசல யுகளமு மதுரித
இந்த ளாம்ருத வசனமு முறுவலு …… மபிராம

இந்த்ர கோபமு மரகத வடிவமு
மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு
மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய …… பெருமாளே

(கொந்துவார் குரவடி என்று தொடங்கும் திருத்தணிகை திருப்புகழ்)

என்றெல்லாம் அழகா பாடுவார். இந்த திவ்ய தம்பதிகளை நினைச்சு நம்முடைய மண வாழ்க்கையும் நன்னா இருக்கணும்னு வேண்டிப்போம்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Series Navigation<< ஸுப்ரமண்ய புஜங்கம் – பத்தாவது ஸ்லோகம் – மனதுக்குகந்தது முருகனின் ரூபம்ஸுப்ரமண்ய புஜங்கம் – பன்னிரண்டாவது ஸ்லோகம் – வீர மாது மருவிய ஈராறு தோளும் >>
Share

Comments (3)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.