Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினான்காவது ஸ்லோகம் – இருபதமுமறுமுகமும் யானோத ஞானமதை அருள்வாயே

ஸுப்ரமண்ய புஜங்கம் பதினான்காவது ஸ்லோகம் (14 min audio file. Same as the script below)

ஸுப்ரமண்ய புஜங்கத்துல பதிமூணு ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். நேற்றைக்கு, ஆச்சார்யாள் ஸுப்ரமண்ய ஸ்வாமியோட ஆறுமுகங்களை வர்ணிக்கும் போது, சந்திரனைக் கூட இதற்கு உவமையா சொல்ல முடியாது. ஏன்னா சந்திரன் ஒரே சந்திரன், ஆனா ஆறுமுகங்கள் ஆறு சந்திரன்கள் போல இருக்கு. அதுவும் களங்கமில்லாத சந்திரனுக்கு நிகரான அழகுன்னு சொன்னார். இன்னிக்கும் இந்த ஆறு முகங்கள் பத்தி இன்னொரு ஸ்லோகம். இந்த ஆறு முகங்கள் பத்தி மஹான்கள் எல்லாம் ரொம்ப, திரும்ப திரும்ப அதை த்யானம் பண்ணி, தர்சனம் பண்ணி சந்தோஷப் பட்டிருக்கான்னு தெரியறது. கச்சியப்ப சிவாச்சாரியார் முருகனுடைய அவதாரத்தை சொல்லும் போது,

அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்

பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்

கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரெண்டும் கொண்டே

ஒரு திருமுருகன் வந்தாங்குதித்தனன் உலகம் உய்ய

னு பாடறார்.

அருணகிரிநாதர் ஆறுமுகத்தை நிறைய பாடல்களில் பாடியிருக்கார்.

பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்

தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்

புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்

தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.

நம்ம மாதிரி மஹா பெரியவாகிட்ட பக்தி இருக்கறவாளுக்குனே ஒரு கந்தர் அலங்காரப் பாடல் இருக்கு

திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப்

பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும்

மருவடி வான வதனங்க ளாறும் மலர்க்கண்களுங்

குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குதிகொண்டவே.

அப்படீன்னு அந்த மருவடிவான வதனங்கள் ஆறும், மலர்க் கண்களும் குருவடிவாய் வந்து என் உள்ளத்தில் குடி கொண்டவே, வந்து தங்கியாச்சு, என் உள்ளத்துலதான் இருக்கார்ன்னு சொல்லியிருக்கார். முருகப் பெருமான் அருணகிரி நாதருக்கு முத்து முத்தா பாடுன்னு, முத்துங்கற வார்த்தையை எடுத்து கொடுத்தார். உடனே அருணகிரிநாதர் என்ன பாடறார்.

முத்தைத் தரு பத்தி திருநகை அத்திகிறை சக்தி சரவண ன்னு பாடறார். அந்த முத்து போன்ற வரிசையான பற்களில் விளங்கும் புன்சிரிப்பு, முத்தை தரு பத்தி திருநகை-ன்னு புன்சிரிப்பைத் தான் பாடறார்.

அப்படி பாகவனோட தர்சனம் கிடைச்ச உடனே மஹான்கள் எல்லாம் முகத்தினுடைய அழகை பார்த்து ரொம்ப லயிக்கிறா. இன்னொரு பாடல் இருக்கு. அந்த ஆறுமுகம் தான் எல்லாமே, எனக்கு கிடைச்ச எல்லா நன்மைகளும் அந்த ஆறுமுகம் தான்னு அந்த பாடல்ல வரும். எல்லாரும் முழுத் திருப்புகழைப் பாடுங்கோ, எங்களுக்கு கேட்கணும்னு சொல்றா. அதனால முழுப்பாட்டையும் நான் பாடறேன்.

வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து  தெளியேனே

மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம ணிந்து பணியேனே

ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று   தெரியேனே

ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டதாடுமயி லென்ப  தறியேனே

நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானிலம லைந்து    திரிவேனே

நாகமணி கின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று    தொழுகேனே

சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற ஸோகமது தந்து எனையாள்வாய்

சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற பெருமாளே.

இந்த பாட்டுல ‘ஆதியோடு அந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகமென்று தெரியேனே ன்னு பாடறார். அப்படி மஹான்கள் எல்லாம் அந்த ஆறுமுக தரிசனத்துல ரொம்ப சந்தோஷப் பட்டிருக்கா. ஆறுமுகம், ஆறுமுகம்-ன்னு இதே ஒரு மந்த்ரமா ஆறுமுகம், ஆறுமுகம், ஆறுமுகம்ன்னு ஒரு பாடல் இருக்கு. முன்னமே நாம அதைப் பார்தோம். ஆச்சார்யாள் ஆறு திருமுகங்களை பத்தி இன்னொரு ஸ்லோகம் சொல்றார் ன்னு சொல்ல வந்தேன். அதை இப்ப படிக்கிறேன்.

स्फुरन्मन्दहासैः सहंसानि चञ्च-

त्कटाक्षावलीभृङ्गसङ्घोज्ज्वलानि ।

सुधास्यन्दिबिम्बाधराणीशसूनो

तवालोकये षण्मुखाम्भोरुहाणि ॥ १४॥

ஸ்புரன் மந்தஹாஸை ஸஹம்ஸானி சஞ்சத்

கடாக்ஷாவலீப்ருங்க ஸங்கோ ஜ்வலானி

ஸுதாஸ்யந்தி பிம்பா தராணீச ஸூனோ

தவாலோகயே ஷண்முகாம் போரு ஹாணி

நேத்தி ஸ்லோகத்துல இந்த ஆறு முகங்களை சந்திரனோட ஒப்பிட முடியாதுன்னு ஒரு கவித்துவமா சொன்னார். இந்த ஸ்லோகத்துல ஆனா அவற்றை தாமரையோட ஒப்பிடலாம் ன்னு சொல்றார். ‘ஹே ஈஷஸூனோ’ பரமேஸ்வரனுடைய புத்ரனான ஷண்முகக் கடவுளே ‘ஸ்புரன் மந்தஹாஸை’ உன்னுடைய முகத்துல மந்தஹாசம் ஒளிவிடுகிறது. மந்தஹாசம் என்றவுடன் எப்பயுமே மஹான்கள் வெண்மையா இருக்கு, வெள்ளையா சிரிக்கறது எங்கறதை வெச்சுண்டு, தூய்மையான புன்சிரிப்பு என்பதைப் பத்தி மூக கவி கூட காமாக்ஷியினுடைய மந்தஹாஸத்தை பத்தி நூறு பாடல்கள் எழுதியிருக்கார்.

அதுல வெண்மை, இனிமை, குளுமை இந்த மூணும் எடுத்து தான் பேசுவார். ஒரு ஐம்பது பாடல்கள்-ல வெள்ளையா சிரிக்கறது பத்தி வரும். அந்த மாதிரி அந்த தூய்மையான புன்சிரிப்புங்கறது எல்லாரும் சொல்றா. அதனால இங்க முகத்தை தாமாரைன்னு சொல்லும் போது இந்த ஜொலிக்கின்ற புன்சிரிப்புங்கற ஹம்ஸங்கள், தாமரைக்கு பக்கத்துல ஹம்சம் இருக்கும். அந்த மாதிரி இந்த முகமாகிய தாமரைக்கு பக்கத்துல அந்த புன்சிரிப்புங்கற வெண்மையான ஹம்ஸங்கள் இருக்குங்கறார்.

அடுத்தது ‘சஞ்சத் கடாக்ஷாவலீ ப்ருங்க ஸங்கோ ஜ்வலானி’ தாமரைன்னா அதுல வண்டுகள் இருக்கணும். முகத் தாமரையில் என்ன வண்டுன்னா, கடாக்ஷாவலீ, கடாக்ஷம்-ன்னா கண்கள் கிடையாது. அந்த கண்களிலிருந்து வர்ற பார்வை. அந்த பார்வை வந்து ஆவளி போல ஒரு வரிசையா கண்களிலேருந்து அந்த பார்வை வந்துண்டே இருக்கு. கறுப்பு தானே கண்ணோட பார்வைங்கறது. அது இப்படியும், அப்படியும் சலிக்கறது. ‘சஞ்சத்க டாக்ஷாவலீ’ கண்ணோட பார்வை இங்கேயும் அங்கேயும் போகும் இல்லையா? அது ‘ப்ருங்கங்கள்’ வண்டு போல இருக்கு. வண்டு தாமரை மேல வட்டமிடற மாதிரி, உன்னுடைய முகமாகிய தாமரையில இந்த கண்களில் இருந்து வெளி வரும் அந்த கடாக்ஷ வரிசைகளுடைய ப்ருங்கங்கள் இருக்கு, வண்டுகள் இருக்குங்கறார்.

அப்புறம் தாமரைன்னா தேன் இருக்கணுமே. இதுல ‘ஸுதாஸ்யந்தி பிம்பா தராணீ’ உன் பிம்ப அதரங்கள், கோவைப்பழம் போன்ற உன்னுடைய உதடு முகத்துல செக்க செவேல்னு இருக்கு. அதுல அந்த சிகப்பழகு தாமரையில இருக்கற தேன் மாதிரி அமிர்த ப்ரவாகமா, அந்த அழகு உதடுலேர்ந்து வந்துண்டிருக்கு. இப்பேற்பட்ட ‘தவ ஷண்முகாம்போரு ஹாணி’ உன்னுடைய ஆறு முகங்கள் என்ற ஆறு தாமரைகளை ‘ஆலோகயே’ : நான் பார்க்கிறேன்னு இந்த அழகனா ஸ்லோகம்.

स्फुरन्मन्दहासैः सहंसानि चञ्चत्कटाक्षावलीभृङ्गसङ्घोज्ज्वलानि ।

सुधास्यन्दिबिम्बाधराणीशसूनो तवालोकये षण्मुखाम्भोरुहाणि ॥ १४॥

முகத்துக்கு அழகா இவ்வளவு உவமைகள் சொல்லி முகத்தை தாமரைன்னு சொல்றார். மூககவி காமாக்ஷியினுடைய முகத்தை பத்தி சொல்லும் போது ஒரு ஸ்லோகம் சொல்லியிருக்கார்.

ताम्राम्भोजं जलदनिकटे तत्र बन्धूकपुष्पं

तस्मिन्मल्लीकुसुमसुषमां तत्र वीणानिनादम् ।

व्यावृन्वाना सुकृतलहरी कापि काञ्चिनगर्याम्

ऐशानी सा कलयतितरामैन्द्रजालं विलासम् ॥

தாம்ராம்போஜம் ஜலதநிகடே தத்ர பந்தூகபுஷ்பம்

தஸ்மின்மல்லீகுஸுமஸுஷமாம் தத்ர வீணாநினாதம் |

வ்யாவ்ருன்வானா ஸுக்ருதலஹரீ காபி காஞ்சீநகர்யாம்

ஐஷானீ ஸா கலயதிதராமைந்த்ரஜாலம் விலாஸம் ||

ன்னு ஒரு ஸ்லோகம், காஞ்சிபுரத்துல, ஐந்திரஜாலம்ன்னா magic show. காஞ்சிபுரத்துல ஒரு magic show நடந்துண்டிருக்கு அப்படிங்கறார். என்னப்பா அதுன்னு கேட்டா.

‘தாம்ராம்போஜம் ஜலதநிகடே’ ஜலதம்னா மேகம். மேகத்துக்கு பக்கத்துல ஆகாசத்துல ஒரு பெரிய தாமரை தெரியறதாம். அந்த தாமரைக்குள்ள ‘தத்ர பந்துக புஷ்பம்’ அதுக்குள்ள செம்பரத்தை பூ தெரியறது. அந்த செம்பரத்தை பூக்குள்ள ‘தஸ்மின் மல்லி குஸுமஸுஷமாம்’அதுக்குள்ள ஒரு மல்லிகைச் செண்டு தெரியறது. அந்த மல்லிகைப் பூக்குள்ளேயிருந்து ‘தத்ர வீணாநினாதம்’ அதுக்குள்ளேயிருந்து வீணையோட இனிமையான நாதம் கேட்கறது. இப்படி magic பண்றார் ஒருத்தர், அப்படி யாருடா பண்றான்னு கேட்டா, காமாக்ஷி தேவிதான்னு சொல்றார். ‘ஐஷானீ’ ஈஷானனுடைய மனைவியான காமாக்ஷி தேவியினுடைய கூந்தல் மேகம் மாதிரி இருக்கு. முகம் தாமரையாட்டமாக இருக்கு . அந்த முகத்துல உதடு செம்பரத்தை பூ மாதிரி இருக்கு. அதற்குள்ள பற்கள் மல்லிகை பூ மாதிரி இருக்கு, அதுக்குள்ள அம்பாளுடைய குரல், அந்த த்வனி வீணா நாதம் போல இருக்குன்னு, இப்படி ஒரு magic ஐந்த்ரஜாலம் பண்ணிண்டிருக்கா காமாக்ஷி அப்படீன்னு அழகான ஸ்லோகம். இந்த மந்தஸ்மிதத்தை மஹான்கள் எப்பவுமே வெண்மைக்கு ஒப்பிடுவாங்கறது இந்த மந்தஸ்மித சதகத்துலேர்ந்து ஒரு ஸ்லோகம்.

क्षीराब्धेरपि शैलराजतनये त्वन्मन्दहासस्य च

श्रीकामाक्षि वलक्षिमोदयनिधेः किञ्चिद्भिदां ब्रूमहे ।

एकस्मै पुरुषाय देवि स ददौ लक्ष्मीं कदाचित्पुरा

सर्वेभ्यो‌sपि ददात्यसौ तु सततं लक्ष्मीं च वागीश्वरीम् ॥

க்ஷீராப்தேரபி ஷைலராஜதனயே த்வன்மந்தஹாஸஸ்ய ச

ஸ்ரீகாமாக்ஷி வலக்ஷிமோதயநிதே: கிம்சித்பிதாம் ப்ரூமஹே |

ஏகஸ்மை புருஷாய தேவி ஸ ததௌ லக்ஷ்மீம் கதாசித்புரா

ஸர்வேப்யோ‌sபி ததாத்யஸௌ து ஸததம் லக்ஷ்மீம் ச வாகீஷ்வரீம் ||

ன்னு ஒரு ஸ்லோகம். மூக கவி சொல்றார் ‘காமாக்ஷியோட மந்தஸ்மிதம் வெள்ளை வெளேர்னு இருக்கறதுனால இதை பாற்கடலுக்கு ஒப்பிடலாம்னு நான் நினைச்சேன். ஆனா பாற்கடலுக்கும் காமாக்ஷியினுடைய மந்தஸ்மிதத்துக்கும் ‘கிஞ்சித் பிதாம் ப்ருமஹே’ ஒரு சின்ன வித்யாசம் இருக்கு. அதை நான் சொல்றேன்கறார்.

‘ஏகஸ்மை புருஷாய தேவி ஸ ததௌ லக்ஷ்மீம் கதாசித்புரா’ முன்ன எப்பயோ ஒரு தடவை ஒரே ஒரு புருஷனுக்கு லக்ஷ்மிதேவியை அந்த பாற்கடல் கொடுத்தது. இங்கே ‘ஏகஸ்மை புருஷ:’ ங்கறதுக்கு ஒரு புருஷனுக்குன்னு ஒரு அர்த்தம், தன்னிகரில்லாத விஷ்ணு பகவானுக்குன்னு இன்னொரு அர்த்தம். அவருக்கு பாற்கடல் லக்ஷ்மி தேவியை கொடுத்தது. ஆனால், ஹே காமாக்ஷி உன்னுடைய மந்தஸ்மிதம் என்ன பண்றதுன்னா ‘ ஸர்வேப்யோ‌sபி ததாத்யஸௌ து ஸததம் லக்ஷ்மீம் ச வாகீஷ்வரீம் ” இன்னிக்கும் என்னிக்கும் கொடுத்துண்டே இருக்கு. என்ன கொடுக்கறதுன்னா ஸததம் எப்பவும் கொடுக்கறது. லக்ஷ்மிம்ச வாகீஸ்வரிம், லக்ஷ்மியையும் கொடுக்கறது, சரஸ்வதியையும் கொடுக்கறது உன்னுடைய மந்தஸ்மிதம். கா மா க்ஷி அப்படீங்கற பதத்துக்கே ‘கா’ன்னா சரஸ்வதி, ‘மா’ன்னா லக்ஷ்மி. அக்ஷி ன்னா கண்கள். பக்தர்களுக்கு தன்னுடைய கண்களால் படிப்பையும் பணத்தையும் கொடுப்பா காமாக்ஷி அப்படீன்னு சொல்வா. இந்த இடத்துல கவி, அந்த மதஸ்மிதமே ‘லக்ஷ்மிம்ச வாகீஸ்வரிம்’, லக்ஷ்மியையும் வாகீஸ்வரியையும் கொடுக்கறது-ன்னு அழகா சொல்றார்.

क्षीराब्धेरपि शैलराजतनये त्वन्मन्दहासस्य च

श्रीकामाक्षि वलक्षिमोदयनिधेः किञ्चिद्भिदां ब्रूमहे ।

एकस्मै पुरुषाय देवि स ददौ लक्ष्मीं कदाचित्पुरा

सर्वेभ्यो‌sपि ददात्यसौ तु सततं लक्ष्मीं च वागीश्वरीम् ॥

இந்த ஸ்லோகத்தை பாராயணம் பண்ணினா படிப்பு, பணம் ரெண்டையும் சேர்த்து கொடுப்பா காமாக்ஷி. ஏன்னா படிப்பு இருந்தா பணம் இருக்காது. அப்படீம்பா. அப்படி இல்லாம ‘கவித்வ ஸ்ரீ மிஷ்ரீ கரண நிபுநௌ’ இன்னொரு இடத்துல சொல்றார் மூககவி. கவித்துவத்தையும், ஸ்ரீ – செல்வத்தையும் மிஷ்ரீகரணம் பண்ணி, சேர்த்து கொடுக்கக்கூடிய நைபுண்யம் காமாக்ஷிக் கிட்ட இருக்குன்னு சொல்றார். அப்படி இந்த அழகான ஸ்லோகம். இன்னிக்கி முருகப்பெருமானுடைய முகத்தை பத்தி ஆதிசங்கரர் சொன்ன ஸ்லோகத்துலேர்ந்து ஆரம்பிச்சு, அந்த வெண்மையான முத்தை தரு அத்தி திருநகை, புன்சிரிப்பு ஹம்ஸங்களைப்போல இருக்குன்னு ஆச்சார்யாள் சொன்னதுனால, அதுலேர்ந்து மூககவிக்கு வந்து காமாக்ஷியினுடைய வெண்மையான சிரிப்பையும் பத்தியும், அது பண்ணுகிற அனுக்ரஹத்தை பத்தி ஒரு ஸ்லோகம் பார்தோம்.

நாளைக்கு முருகனுடைய கடாக்ஷத்தை பத்தி ஒரு ஸ்லோகம் அதை பார்ப்போம்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Series Navigation<< ஸுப்ரமண்ய புஜங்கம் – பதிமூன்றாவது ஸ்லோகம் – ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினைந்தாவது ஸ்லோகம் – அவன் கடைக்கண் இயலையும் நினைந்திருக்க வாருமே >>

One reply on “ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினான்காவது ஸ்லோகம் – இருபதமுமறுமுகமும் யானோத ஞானமதை அருள்வாயே”

ஆச்சார்யாள் ஸுப்ரமண்ய ஸ்வாமியினுடைய ஆறுமுகத்தை வர்ணிக்கும் அழகான ஸ்லோகம்.

ஆறுமுகத்தை வர்ணிக்கும் திருப்புகழ் பாடல்கள் அருமை 👌🙏🌸 அம்பாள் செய்யும் இந்திர ஜாலமும், அம்பாளுடைய மந்தஸ்மிதத்தை வர்ணிக்கும் மூகபஞ்சசதி மேற்கோள்களும் அற்புதம்.🙏🌸

ஆச்சார்யாள் ஸ்வாமியின் கண்களை வண்டுக்கு உவமித்து சொல்கிறார். ஸௌந்தர்யலஹரியிலும் அம்பாளுடைய நேத்திரங்களை வர்ணிக்கும்போது, “அம்பாளுடைய கண்களை ‘ப்ரமரகளபௌ’ – குட்டி வண்டுகளாக உவமிக்கிறார். கவி வாணர்களின் கவிதைத் தேனைக் அம்பாளுடைய காதுகள் குடித்து ஸந்தோஷப்படுகின்றன. அம்பாளின் காதுக் கிண்ணத்தைப் போய்த் தொடுகிற கண்கள், கடாக்ஷம் என்ற pretext-ல் கவிதைச் சுவையை ருசிப்பதிலேயே முழுகிவிடுகின்றன என்று ஹாஸ்யமாக சொல்கிறார். நெற்றிக் கண்ணால் அந்தக் கவிதை என்னும் தேனை பருக முடியாததால் மற்ற இரண்டு கண்களிடம் அஸூயை பொங்குகிறது! இந்த அஸூயையிலே ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் அது சிவந்துவிட்டது!” என்று ஒரு புது கோணத்தில் வர்ணித்திருப்பார்.🙏🌸

Leave a Reply to Sowmya SubramanianCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.