ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினாறாவது ஸ்லோகம் – கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே

ஸுப்ரமண்ய புஜங்கம் பதினாறாவது ஸ்லோகம் (10 min audio file. Same as the script above)

இன்னிக்கி ஸுப்ரமண்ய புஜங்கதுல பதினாறாவது ஸ்லோகம். ஸுப்ரமண்ய ஸ்வாமியுடைய திருமார்புகளும், திருமுகங்களும், நேத்ர மஹிமையெல்லாம் சொல்லிண்டே வந்தார். இப்ப மஸ்தகம்ன்னு சொல்லக் கூடிய தலையை பத்தி ஒரு ஸ்லோகம்.

सुताङ्गोद्भवो मेऽसि जीवेति षड्धा

जपन्मन्त्रमीशो मुदा जिघ्रते यान् ।

जगद्भारभृद्भ्यो जगन्नाथ तेभ्यः

किरीटोज्ज्वलेभ्यो नमो मस्तकेभ्यः ॥ १६॥

ஸுதாங்கோத்பவோ மேஸி ஜீவேதி ஷட்தா

ஜபன்மந்த்ரமீசோ முதா ஜிக்ரதே யான் |

ஜகத்பாரப்ருத்யோ ஜகந்நாத தேப்ய

கிரீடோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய ||

ன்னு சொல்றார். பரமேஸ்வரன் தன் குழந்தையான முருகப்பெருமானை உச்சி முகர்ந்து ஆசிர்வாதம் பண்றாராம். ‘ஸுதா’ குழந்தை, ‘அங்கோத்பவோமேஸி’ என்னுடைய சரீரத்திலிருந்து நீ உண்டானவன். ‘ஜீவ’. ரொம்ப தீர்காயுசா இருன்னு, ‘ஷட்தா’ ஆறு தடவைகள், ஒவ்வொரு சிரசையும் எடுத்து உச்சி முகர்ந்து, ‘ஜிக்ரன்’ ன்னா உச்சிமுகர்ந்து பார்க்கறது. அப்படி ஆறு தலைகளையும் முகர்ந்து பார்த்து ஆறு தடவை இந்த மந்த்ரத்தை சொன்னாராம். ‘ஸுதாங்கோத்பவோமேஸி ஜீவ’-ன்னு ஒவ்வொரு தலையும் முகர்ந்து பார்த்து பரமேஸ்வரன் சந்தோஷத்தோடு சொல்றார். ஒரு பிள்ளையை பெற்ற அப்பாவுக்குத் தான் அந்த சந்தோஷம் தெரியும். தன் குழந்தை தன் கண் முன்னாடி வளரும்போது, எடுத்து உச்சி முகர்ந்து, ‘என் உடம்புலேர்ந்து இவன் உண்டானவன்’, ‘ஆத்மாவை புத்ர நாமாஸி’ ன்னு வேதத்துலேயே வர்றது. ஒருத்தன், தானே தான் தன்னோட குழந்தையா பிறக்கறான், என்கிற மாதிரி, தான் இந்த உலகத்துலேர்ந்து போனாலும் தான் இன்னும் இந்த உலகத்துல இருந்துண்டே இருக்கணும்ன்னு ஆசைப்படற இவன் தான் ஒரு குழந்தையை உண்டாக்கறான். தன் புத்ரன் மூலமா இந்த உலகத்துல இருக்கான்னு சொல்றா. அப்படி அந்த முருகக் குழந்தையை எடுத்து பரமேஸ்வரன் உச்சி முகர்ந்து சந்தோஷப்படறார்.

இந்த தலைகள் ‘ஜகத்பாரப்ருத்ய:’ உலகத்தோட பாரத்தையெல்லாம், உலகத்தின் யோக க்ஷேமத்தையெல்லாம் வஹிக்கக்கூடிய இந்த முருகப் பெருமானுடைய ஆறு தலைகள். ‘கிரீடோஜ்வலேப்யா:’ அப்படி உலகத்தையெல்லாம் காப்பாத்தறான்னா ராஜான்னு அர்த்தம். அதனால ராஜாவோட தலையில கிரீடம் இருக்கற மாதிரி, இந்த ஆறு ஆறு தலைகளிலேயும், ஆறு நவரத்ன கிரீடங்கள் இருக்கு. அந்த ‘தேப்ய: மஸ்தகேப்ய:’ உன்னுடைய அந்த ஆறு தலைகளுக்கு ‘நம:’ நான் நமஸ்காரம் பண்றேன்ன்னு ஆச்சார்யாள் சொல்றார்.

பரமேஸ்வரன் ‘நீ என் உடம்புலேர்ந்து உண்டானவன்’ ன்னு சொல்றதுல ஒரு விஷேஷம் இருக்கு. மஹா பெரியவா தெய்வத்தின் குரல் முதல் பகுதியில ஸனத்குமார யோகிதான் சுப்ரமண்ய ஸ்வாமியா அவதாரம் பண்ணார்ன்னு ஒரு கதை சொல்றா. ஸனத்குமார யோகிங்கறவர் ப்ரம்மஞானி, ப்ரம்ம நிஷ்டர். உலகத்துல எந்த விதமான பற்றும் இல்லாதவர். அவருக்கு ஒரு நாளைக்கு தான் தேவ சேனாதிபதியாக இருந்து அசுரர்களோட யுத்தம் பண்ற மாதிரி ஒரு ஸ்வப்னம் வந்துதாம். அவர் அப்பாவான ப்ரம்மா கிட்ட போய் கேட்டாராம். ‘எனக்கு இப்படி ஸ்வப்னம் வந்துதே என்ன அர்த்தம்’ ன்ன போது, “நீ அடுத்த ஜென்மத்துல, தேவ சேனாதிபதியாக இருந்து அசுரர்களோட யுத்தம் பண்ண போற. உன் கனவுல வந்தா, நீ ஞானிங்கறதுனால அது நடக்கும்னு’ சொன்னாராம். ‘ஓஹோ அப்படியா’ ன்னு சொல்லி கேட்டுண்டு போயிட்டார். ஞானிகளுக்கு ஜன்மா எடுக்கறதை பத்தி வருத்தமும் இல்லை, சந்தோஷமும் இல்லை. அவாளுக்கு அது ஒரு பொருட்டு கிடையாது.

அப்போ பரமேஸ்வரன் பார்த்தாராம். இவர் ப்ரம்மஞானி, ஜன்மா எடுக்கறதை பத்தி அவர் ஒண்ணும் நினைக்கப் போறது இல்லை, அதுனால நாம தான் இதை ஆரம்பிக்கணும் ன்னு, பார்வதி பரமேஸ்வராள் போய், ஸனத்குமார யோகிக்கிட்ட, ‘உன்னுடைய தபஸ்ல த்ருப்தியானேன், உனக்கு ஏதாவது வரம் வேணும்னா கேளு’ன்னாளாம். அவர் பார்வதி பரமேஸ்வராளைப் பார்த்து சிரிச்சிண்டு, ‘எனக்கு ஒண்ணும் தேவைகளே இல்லையே. எனக்கு ஒண்ணும் வரம் வேண்டாம். ஏதோ இந்த வரம் சாபம் இதிலேல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கற மாதிரி தெரியறது. உங்களுக்கு ஏதாவது வரம் வேணும்னா கேளுங்கோ’ன்னாராம். பரமேஸ்வரன் அதுக்கு தான் காத்துண்டு இருந்தார். ‘எனக்கு நீ குழந்தையா பொறக்கணும்’ ன்னு வரம் கேட்டாராம். இந்த சனத்குமாரர் யோகி ‘ஆகட்டும்’ அப்டீன்னாராம். ‘ஆனா நீங்க மட்டும் தான் என் கிட்ட கேட்டேள், அதனால நான் உங்களுக்கு மட்டும் குழந்தையா பொறக்கறேன்’ ன்னு சொன்னாராம். அப்போ பார்வதி தேவி ‘கணவர் கேட்டா அது மனைவிக்கும் தானே. நான் தனியா கேட்க முடியுமா? நீ இப்படி சொல்லலாமா?’ ன்னு கேட்ட போது, இந்த ஸனத்குமார யோகி சொன்னாராம், ‘என்ன இருந்தாலும் ஒரு ஸ்த்ரீ சம்பந்தத்துல, கர்ப்ப வாசம் பண்ணி, ஊர்த்வமுகமா பொறக்கறதுல எனக்கு இன்னும்கூட லஜ்ஜை இருக்கு, அதனால நான் பரமேஸ்வரன் என்னை தன்னிடத்திலேயிருந்தே எப்படி உற்பத்தி பண்ணுவாரோ, அந்த மாதிரி நான் பொறக்கறேன்’ னாராம். ‘எனக்கு அம்மான்னு ஆக வேண்டாமா, அம்மான்னு இருந்து குழந்தையை கொஞ்ச வேண்டாமா’ ன்னு பார்வதி கேட்டாளாம், அப்போ அவா ஒரு compromise பண்ணிண்டாளாம்.

பஸ்மாசுரன்னு ஒரு அசுரன் இருந்தான். அவன் யார் தலையைத் தொட்டாலும் அவா பஸ்மம் ஆயிடுவான்னு பரமேஸ்வரன் கிட்ட வரம் வாங்கிண்டு உன் தலையை தொடறேன்னு வந்தான்னு கதை இருக்கு இல்லையா! அப்பறம் விஷ்ணு பகவான் மோஹினியா வந்து விளையாட்டு காண்பிச்சு அந்த பஸ்மாசுரனை தன் தலையை தொட வச்சார்ங்கறது அப்புறம். அதுக்கு முன்னாடி ‘உன் தலையையே தொட வர்றேன்’ ன்னு சொன்ன போது அந்த இடத்துல பரமேஸ்வரன் அந்தர்த்யானம் ஆயிட்டாராம். மறைஞ்சு போயிட்டாராம். திடீர்னு பரமேஸ்வரன் மறைஞ்சு போயிட்டார் ன்ன உடனே பார்வதி தேவி, அம்பாள் எல்லாம் தெரிஞ்சவா தான், இருந்தாலும் விளையாட்டா இப்படி ஒரு கதை, அங்கேயே கணவனை காணோமேன்னு உருகி ஜலமா ஆயிட்டாளாம். அந்த ஜலம் சரவணப் பொய்கைன்னு இமயமலை அடிவாரத்துல ஒரு குளமாக இருந்தது. அந்த சரவணப் பொய்கையில முருகப் பெருமான் அவதாரம் பண்ணி, அந்த விதத்துல என் குழந்தைன்னு நான் சந்தோஷப் பட்டுக்கறேன்னு பார்வதி தேவியும் ஸனத்குமார யோகியும் ஒரு ராஜி (compromise) பண்ணிண்டாளாம். தெய்வத்தின் குரல்ல பெரியவா சொன்னதைத் தான் நான் அப்படியே திரும்பச் சொல்றேன்.

பரமேஸ்வரன் தன்னுடைய நெற்றியிலிருந்து அந்த ஸனத்குமார யோகியை ஆறு தீப்பொறிகளா ஆவிர்பவிச்சு, அதை அக்னி பகவான், கங்கைகிட்ட கொடுத்து, கங்கை தாங்க முடியாம அதை போய் சரவணப் பொய்கையில சேர்த்த போது, அங்க ஆறு தாமரைப் பூக்கள்ல ஆறு குழந்தைகளாக அவதரித்தார். அம்பாள் ஆறு குழந்தைகளையும் சேர்த்தணைத்த போது, ஆறு திருமுகங்களும், பன்னிரண்டு திருக்கரங்களும், ஒரு உடம்பு, ரெண்டு கால்களோட ஆறுமுகரா ஆனார்ங்கிற வரலாறு இருக்கு.

அப்படி பார்வதிக்கும் குழந்தை. ஆனா முருகப் பெருமானுடைய விசேஷம் என்னன்னா முழுக்க முழுக்க பரமேஸ்வரன் தன்னிடதிலேருந்தே சிருஷ்டி பண்ணின ஒரு குழந்தை. அதனால ‘ஸுதாங்கோத்பவோ மேஸி’ என்னுடைய அங்கத்துலருந்து நீ வந்துருக்கே, ‘ஜீவ’ நீ தீர்க்காயுசா இருன்னு எங்கிற ஸ்லோகத்துக்கு பரமேஸ்வரன் தானா ஸ்ருஷ்டி பண்ணின ஒரு குழந்தைன்னு ஒரு விசேஷ அர்த்தம் சொல்லலாம்.

அது மாதிரி பிள்ளையாரை எடுத்துண்டா, அவர் அம்பாள் தான் மட்டுமாகவே ஸ்ருஷ்டி பண்ணின ஒரு குழந்தை இல்லையா! அந்த கதை நாம கேள்வி பட்டிருக்கோம். தான் குளிக்கரதுக்கு வெச்சிருந்த அந்த மஞ்சள் பொடியை வெச்சு ஒரு குழந்தை பண்ணி, உயிர் குடுத்து, அந்த குழந்தையை தன்னோட கிருஹத்துக்கு காவலாக பார்வதி தேவி வெச்சிருந்தா. முன்னொரு தடவை நந்திகேஸ்வரரை காவலா இருக்க சொன்ன போது, பரமேஸ்வரன் வந்துட்டார். நந்திகேஸ்வரன் தன்னோட எஜமானன்னு சொல்லி உள்ளே விட்டார். பார்வதிக்கு வெட்கமா போயிடுத்து. அதனால தானே ஒரு பிள்ளையை ஸ்ருஷ்டி பண்ணி தன்னுடைய காவலுக்கு வாசல்ல நிற்க வெச்சிருந்த போது பரமேஸ்வரன் வரார். ‘நீ யார்? வழிவிடு’ ன்னு உடனே, நான் பார்வதியோட குழந்தை. அவா ஆணையை மீறி உன்னை விடமாட்டேன்’ ன்னு சொல்றது குழந்தை. எல்லா தேவர்களும், இந்திரன், விஷ்ணு, பிரம்மா எல்லாரும் சிவபெருமானோட வந்து எல்லாருமாக அந்த பிள்ளையோடு யுத்தம் பண்றா. ஜயிக்க முடியல. கடைசீல பரமேஸ்வரன் சூலத்தைப் போட்டு, இந்த குழந்தையோட தலை கீழ விழுந்துடறது. அப்ப பார்வதி கோவிச்சுண்ட உடனே, பரமேஸ்வரன் ஒரு யானையோட தலையை எடுத்துண்டு வந்து இந்த குழந்தைக்கு பொருத்தி உயிரை கொடுக்கறார். அது தான் கணபதின்னு அந்த கதை.

முருகப் பெருமானை சிவபெருமான் தன்னோட உடம்புலேயிருந்து ஸ்ருஷ்டி பண்ண ஒரு குழந்தை. ஸனத்குமார யோகியே முருகப் பெருமானா அவதாரம் பண்ணினார்ன்னு ஒரு அழகான கதை.

सुताङ्गोद्भवो मेऽसि जीवेति षड्धा

जपन्मन्त्रमीशो मुदा जिघ्रते यान् ।

जगद्भारभृद्भ्यो जगन्नाथ तेभ्यः

किरीटोज्ज्वलेभ्यो नमो मस्तकेभ्यः ॥ १६॥

இப்படி பாதரவிந்தத்துலேயிருந்து ஆறு சிரஸ் வரைக்கும் எல்லா பாகங்களையும் வர்ணனை பண்ணி, ஆச்சார்யாள், நம் மனசு முன்னாடி அந்த முருகக் குழந்தையை கொண்டு வந்துட்டார். அடுத்த ச்லோகத்துல முழு ரூபத்தையும் வர்ணித்து, என் முன்னே வரவேணும்ன்னு பிரார்த்தனை பண்ணப் போறார். ரொம்ப அழகா இருக்கும் அந்த ஸ்லோகம். அதை நாளைக்குப் பார்ப்போம்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Series Navigation<< ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினைந்தாவது ஸ்லோகம் – அவன் கடைக்கண் இயலையும் நினைந்திருக்க வாருமேஸுப்ரமண்ய புஜங்கம் – பதினேழாவது ஸ்லோகம் – முருகா! எனது முன் ஓடி வரவேணும்! >>
Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.