ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினேழாவது ஸ்லோகம் – முருகா! எனது முன் ஓடி வரவேணும்!

ஸுப்ரமண்ய புஜங்கம் பதினேழாவது ஸ்லோகம் (7 min audio file. Same as the script above)

இன்னிக்கு ஸுப்ரமண்ய புஜங்கத்துல பதினேழாவது ஸ்லோகம்,

स्फुरद्रत्नकेयूरहाराभिराम-

श्चलत्कुण्डलश्रीलसद्गण्डभागः ।

कटौ पीतवासाः करे चारुशक्तिः

पुरस्तान्ममास्तां पुरारेस्तनूजः ॥ १७॥

ஸ்புரத்ரத்ன கேயூரஹாராபிராம:

ஸ்சலத் குண்டல ச்ரீலஸத் கண்டபாக: |

கடெள பீதவாஸா கரே சாருசக்தி:

புரஸ்தான் மமாஸ்தாம் புராரேஸ் தனூஜ: ||

‘புரஸ்தான்’ என் முன்னால் ‘புராரேஸ்தனூஜ:’ புராரி ன்னா முப்புரங்களை எரித்த சிவபெருமானுடைய ‘ தனூஜ:’ன்னா பிள்ளை, அந்த முருகப் பெருமான் என் முன்னால் எழுந்தருளட்டும். எனக்கு காட்சி கொடுக்கட்டும் ன்னு வேண்டுகிறார். ‘புரதோ மம பா(4)து ஹனுமதோ மூர்த்தி:’ ன்னு ஹனுமத் பஞ்சரத்னத்துல பாடின போது அவருக்கு ஹனுமாரோட தர்சனம் கிடைச்சுதுன்னு சொல்லுவா. அந்த மாதிரி இந்த ஸ்லோகத்தை சொன்ன போது முருகப் பெருமானுடைய தர்சனம் கிடைச்சுது. திருச்செந்தூர்ல ஸ்வாமி சன்னிதி முன்னாடி தான் நின்னுண்டு பாடறார். ஸ்வாமி அவருக்கு நேராவே காட்சி கொடுத்துருப்பார்.

இந்த ஸ்லோகத்தை சொல்லும்போது ஸ்வாமிகள் ‘இங்கே வா இப்போ வா எந்தன் முன்னே வா வா வா’ ன்னு ஒரு பாட்டு பாடுவார். ‘இதை எங்க அத்திம்பேர் பாடுவார். இந்த ஸ்லோகத்துலேயும் எந்தன் முன்னே வான்னு ஆதிசங்கரர் ப்ரார்த்தனை பன்றார். இந்த ஸ்லோகத்தையும் அந்த மெட்டுல பாடலாம்ன்னு சொல்லி

ஸ்புரத்ரத்ன கேயூரஹாராபிராம:

ஸ்சலத் குண்டல ச்ரீலஸத் கண்டபாக: |

கடெள பீதவாஸா கரே சாருசக்தி:

புரஸ்தான் மமாஸ்தாம் புராரேஸ் தனூஜ: ||

ன்னு பாடுவார். இதுக்கு அர்த்தம் சொல்றேன் ‘ரத்ன கேயூரஹாராபிராம:’ ஹாரம்னா அவருடைய கழுத்துல போட்டுண்டிருக்கிற மாலை, கேயூரம்னா தோள் வளையம், ரத்னத்துனால பண்ணின மாலைகளும் கேயூரங்களும் ப்ரகாசிக்கறது. ‘ஸ்புரத்ரத்ன கேயூரஹாராபிராம’ அதனால, அந்த மாலைகள் எல்லாம் போட்டுண்டு, அவருடைய தோள்களும், மார்புகளும் ரொம்ப அழகா இருக்கு. ஆபரண விசேஷங்கள்லாம் சொல்றார். ‘சலத் குண்டலஸ்ரீ லஸத் கண்டபாக’ கண்டபாகம் ன்னா கன்னம் ன்னு அர்த்தம். காதுல போட்டுண்டிருக்க கூடிய அசையும் குண்டலிங்களின் ஒளி, அவருடைய கன்னத்துல பட்டு reflect ஆறது. கன்னம் ஒரு கண்ணாடி மாதிரி இருக்காம். அதுல பட்டு ப்ரகாசிக்கறது-ன்னு சொல்றார். ‘கடௌ பீதவாஸா’ கடி-ன்னா இடுப்பு. ‘பீதவாஸா’ பீதாம்பரம் பீதம்-ங்கற வார்த்தைக்கு மஞ்சள் வர்ணம்-னு அர்த்தம். மஞ்சள் பட்டு உடுத்திண்டு இருக்கார். ‘கரே சாருசக்தி’ கைகளில் அழகான சக்தின்னா வேல் ன்னு அர்த்தம். பராசக்தி கொடுத்த அந்த வேலாயுதம். அந்த ஆயுதத்தையும் வச்சுண்டு ‘புராரேஸ் தனூஜ’ பரமேஸ்வரனுடைய புத்ரனான குமாரஸ்வாமி ‘மம புரஸ்தாத்’ என் முன்னால் ‘ஆஸ்தாம்’ விளங்கட்டும்-ன்னு ஒரு அழகான ஸ்லோகம்.

அருணகிரிநாதர் இந்த மாதிரி நிறைய பாடல்கள்ல என் முன்னாடி வந்து நீ தர்சனம் கொடுக்கணும்-ன்னு சொல்றார்.

காரணம தாக வந்து …… புவிமீதே

காலனணு காதி சைந்து …… கதிகாண

நாரணனும் வேதன் முன்பு …… தெரியாத

ஞானநட மேபு ரிந்து …… வருவாயே

ஆரமுத மான தந்தி …… மணவாளா

ஆறுமுக மாறி ரண்டு …… விழியோனே

சூரர்கிளை மாள வென்ற …… கதிர்வேலா

சோலைமலை மேவி நின்ற …… பெருமாளே.

ஞானநட மேபு ரிந்து …… வருவாயே – ன்னு ஒரு பாட்டு.

‘இருநில மீதில் எளியனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும்’ ன்னு ஒரு பாடல்ல சொல்றார். இந்த இரண்டுமே பழமுதிர் சோலை பாட்டு. இந்த மூணாவது பாட்டுலேயும்

சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர்

சேருபொரு ளாசை நெஞ்சு …… தடுமாறித்

தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று

தேடினது போக என்று …… தெருவூடே

வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள்

மாதர்மய லோடு சிந்தை …… மெலியாமல்

வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன்

மாயவினை தீர அன்பு …… புரிவாயே

வாழு மயில் மீது வந்து தாளினிகள் தாழும் மயில்மேல் வந்து தாள் இணைகள் தாழும் எந்தன் மயில்மேல் வந்து உங்களுடைய தாள் இணைகளை பாத கமலங்களை தாழ்த்தி என்னுடைய தலையில் வெச்சு என்னுடைய மாய வினையெல்லாம் தீர்றத்துக்கு ஒரு கருணை பண்ணுங்கோங்ன்னு ஒரு ஸ்லோகம்.

சேலவள நாட னங்கள் ஆரவயல் சூழு மிஞ்சி

சேணிலவு தாவ செம்பொன் …… மணிமேடை

சேருமம ரேசர் தங்க ளூரிதென வாழ்வு கந்த

தீரமிகு சூரை வென்ற …… திறல்வீரா

ஆலவிட மேவு கண்டர் கோலமுட னீடு மன்று

ளாடல்புரி யீசர் தந்தை …… களிகூர

ஆனமொழி யேப கர்ந்து சோலைமலை மேவு கந்த

ஆதிமுத லாக வந்த …… பெருமாளே.

வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன்

மாயவினை தீர அன்பு ….. புரிவாயே

சோலை மலை மீது உகந்த பெருமாளேன்னு

இந்த மாதிரி அருணகிரிநாதர் அடிக்கடி ‘என் முன்னால் வந்து நீ தர்சனம் கொடுக்கணும் ன்னு வேண்டிப்பார்.

அப்படி முருகப் பெருமானை ஆசார்யாள் இந்த ஸ்லோகத்துலேயும் , அதற்கடுத்த ஸ்லோகத்துலேயும் மூணாவது ஸ்லோகத்துலேயும் பரமேஸ்வரனுடனும், பார்வதியோடும் ஸ்மரிக்கறார். இதுல ‘புராரேஸ் தனூஜ’-ன்னு சொல்றார். கையில பராசக்தி கொடுத்த வேலோட எனக்கு தர்சனம் கொடுன்னு சொல்றார். இப்படி இந்த பாட்டுலேயும் பார்வதி, பரமேஸ்வராளை ஸ்மரிக்கறார். அடுத்த பாட்டுலேயும் அந்த மாதிரி பார்வதி, பரமேஸ்வராளோடு கூட இருக்கும் முருகப்பெருமான்னு ஒரு அழகான ஸ்லோகம். அதற்கடுத்த ஸ்லோகத்துலேயும் ‘குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா சக்திபாணே’ ன்னு சொல்லி ‘ஈஷஸூனோ சக்திபாணே’ ன்னு பார்வதியையும் பரமேஸ்வரனையும் ஸ்மரிக்கிறார். முருகப் பெருமானை அப்படி தன் முன்னாடி தர்சனம் கொடுக்கும் படியா, வேண்டிண்டு அதற்கப்புறம் சில ப்ரார்தனை ஸ்லோகங்கள் வரும். ‘இஹாயாஹி வத்ஸேதி’-ங்கற ஸ்லோகத்தை நாளைக்கு பார்ப்போம்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Series Navigation<< ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினாறாவது ஸ்லோகம் – கயிலைமலை நாதர் பெற்ற குமரோனேஸுப்ரமண்ய புஜங்கம் – பதினெட்டாவது ஸ்லோகம் – மகதேவர் மனமகிழவேயணைந்து ஒருபுறமதாக வந்த மலைமகள் குமார >>
Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.