ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபதாவது ஸ்லோகம் – கணத்தில் என் பயமற மயில் முதுகினில் வருவாயே

ஸுப்ரமண்ய புஜங்கம் இருபதாவது ஸ்லோகம் (11 min audio file. Same as the script above)

ஸுப்ரமண்ய புஜங்கத்துல நேத்திக்கு

कुमारेशसूनो गुह स्कन्द सेनापते शक्तिपाणे मयूराधिरूढ ।

पुलिन्दात्मजाकान्त भक्तार्तिहारिन् प्रभो तारकारे सदा रक्ष मां त्वम् ॥  १९ ॥

குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா

பதே சக்தி பாணே மயூரா திரூட |

புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின்

ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் ||

என்கிற பத்தொன்பதாவது ஸ்லோகம் பார்த்தோம். அதுல முருகப் பெருமானுடைய பதினோரு நாமங்கள், அஞ்சு கர்ம இந்திரியங்கள், அஞ்சு ஞான இந்திரியங்களையும், அதற்கு நியாந்தாவாக இருக்கக் கூடிய அந்தக்கரணம் என்கிற மனசையும் கட்டுப்படுத்தறதுக்கு, இந்திரிய நிக்ரஹம் பண்றதுக்கு இந்த பதினோரு நாமங்களும் மஹா மந்த்ரம் ன்னு ஆச்சார்யாள் சொல்லியிருக்கான்னு பார்த்தோம்.

இந்த குமரேஸ ஸூனோ -வை படிக்கும் போது இன்னொன்னு தோணித்து. பக்தி மார்கத்துல, நமக்கு எந்த இஷ்ட தெய்வமோ, அதன் ரூபத்யானம், நாம சங்கீர்த்தனம், பகவானோட கதைகளை கேட்கறது, இந்த மூணும் தான் பக்தி வளர்றதுக்கு ரொம்ப முக்கியமா, மஹான்கள் சொல்லியிருக்கா. இந்த ஸ்லோகத்துலேயே, குமரேஷஸூனோ குஹ ஸ்கந்த சேனாபதே, அந்த ஸ்லோகத்துலேயே இந்த நாமாவளிகளுக்கு உள்ளேயே முருகப் பெருமானுடைய கதைகள் எல்லாமும் வந்துடறது. அம்பாள் கிட்டேயிருந்து வேலை வாங்கிண்டு போய் சூரஸம்ஹாரம் பண்றார். அதை சக்திபாணே-ன்னு சொல்லிடறார். ஈஷ ஸூனோ-ன்னு சொல்லும்போது பரமேஸ்வரனுடைய நெற்றிக் கண்லேயிருந்து முருகப் பெருமான் அவதாரம் பண்ணினது. புலிந்தாத்மஜாகாந்தாங்கறது, வள்ளியம்மையை கடி மணம் செய்து கொண்டது. மயூராதிருட- வேதமயமான மயில் மேல ஏறி அமர்ந்திருக்கிறார். இப்படி ஸகந்தபுராணத்துல இருக்கற கதைகள் இந்த நாமத்துக்குள்ளேயே வந்துடுத்துன்னு தோணித்து.

அப்படி பகவான் எதிரிலே வந்த உடனே, அவரை நாமங்களை எல்லாம் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணி, சந்தோஷப்படுத்தின பின்ன சில ப்ரார்தனைகள் பண்றார். அது முதல்ல

प्रशान्तेन्द्रिये नष्टसंज्ञे विचेष्टे कफोद्गारिवक्त्रे भयोत्कम्पिगात्रे ।

प्रयाणोन्मुखे मय्यनाथे तदानीं द्रुतं मे दयालो भवाग्रे गुह त्वम् ॥ २०॥

ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸம்க்ஞே விசேஷ்டே

கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே |

ப்ரயாணோன்முகே மய்யநாதே ததானீம்

த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹத்வம் ||

‘என்னுடைய கடைசி காலத்துல நீ என் முன்னாடி வந்து தர்சனம் கொடுத்து என்னை காப்பாத்த வேண்டும்’ ன்னு சொல்றார். இதை ஏன் முக்கியமா மொதல்ல எடுத்து சொல்றார்ன்னா, நமக்கு கடைசி காலம் என்னிக்கின்னு நமக்கு தெரியாது. இன்னிக்கு தூங்கறோம், நாளைக்கு பகவான் நினைச்சா எழுந்துப்போம். இந்த மூச்சு உள்ள இழுக்கறோம். பகவான் நினைச்சா தான் அது வெளியில வரும். நாம ரொம்ப சாஸ்வதமா இருக்கப் போறோம்னு நம்பிண்டு இருக்கோம். ஆனா நம் உயிர் பகவான் கையில தான் இருக்கு. அப்படி அந்த உயிர் பிரியறதுக்கு முன்னாடி, ‘ஜீவஸ்ய தத்துவ ஜிக்ஞாஸா’ ன்னு, இந்த ஜன்மா கொடுத்ததோட காரணமே, இதோட தத்வம் என்னன்னு விசாரிச்சு, உண்மையை உணர்ந்து காம, க்ரோத, மோகமெல்லாம் போய், பரம சாந்தமாகி உண்மையை அறிந்த பின்ன இந்த உடம்பிலேர்ந்து உயிர் பிரிந்தால், அதுக்கு மரணம்-ன்னு பேர் கிடையாது. அதற்கு பேர் அமிர்தம்-ன்னு பேரு, அந்த அமிர்தத்வத்தை அடையறதுக்காகத் தான் இந்த ஜன்மா. அப்படி நமக்கு உயிர் பிரியறதுக்கு முன்னாடி உண்மையை உணர்வதற்கு நாம முயற்சி பண்ணிண்டிருக்கணும். அந்த மாதிரி ஞானம் ஏற்படுவதற்கு முன்னாடி உயிர் பிரியாமல், அந்த கடைசி நேரத்துலேயாவது பகவத் தர்சனம் கிடைக்கணும். ஜன்மா முழுக்க நாம் பகவானை த்யானம் பண்ணிண்டு, பஜனம் பண்ணிண்டு இருந்தா தான் அந்த கடைசி நிமிஷத்துல பகவானோட ஞாபகம் வரும். அப்படி முருகா, நீ வந்து என்னை காப்பாத்தணும் என்கிறார்.

அந்த death bed-ல இருக்கும் போது, அந்த நிலைமை என்னங்கறதை வர்ணிக்கிறார். ‘ப்ரசாந்தேந்த்ரியே’ – இந்திரியங்கள் எல்லாம் அடங்கி போயிடறது. கண்ணு பார்க்கறது கிடையாது, காது கேட்கறது கிடையாது, கடைசி நேரத்துல. ‘நஷ்டஸம்க்ஞே’ – ஞாபக சக்தியும் போயிடறது. ‘விசேஷ்டே’ – கை, கால்லாம் ஒரு சேஷ்ட்டையும் பண்ண மாட்டேங்கறது. அடங்கி போயிடறது ‘கபோத்காரி வக்த்ரே’ – தொண்டையில கபம் அடைச்சுக்கிறது. பகவானோட நாமத்தை கூட, முருகான்னு சொல்றதுக்கு கூட தொண்டை வர மாட்டேங்கறது. ‘பயோத்கம்பி காத்ரே’ – எமபடர்கள் கனவுல வந்து பயமுடுத்தறா. அதனால உடம்பெல்லாம் நடுங்கறது. ‘ப்ரயாணோன்முகே’ அந்த நீண்ட யாத்திரை, உள்முகமா தயார் ஆகிடறோம், இந்த உடம்பை விடப் போறோம், யம லோகத்துக்கு போகப் போறோம், அந்த மாதிரி நிலைமையில ‘மய்யநாதே’ – அனாதையான என்னிடத்தில், பிள்ளைக்கிட்ட சொல்ல முடியுமா , பொண்டாட்டிகிட்ட சொல்ல முடியுமா, யாருமே அந்த நிலையில் நாதன் கிடையாது . பகவான் ஒருத்தர் தான் நாதன்ங்கற அறிவு இருந்தாதான், அந்த நேரத்துல பகவான் வந்து காப்பாத்துவார், ‘ததானீம்’ – அந்த நேரத்தில் ‘த்ருதம்’ – வெகு விரைவாக ‘மே அக்ரே’ – எனக்கு முன்னாடி வந்து முருகா ‘பவ த்வம்’ – நீ காட்சி தர வேண்டும். அப்படீன்னு ஒரு ஸ்லோகம். இதுக்கு தாத்பர்யம் சொல்லும்போது தேதியூர் சாஸ்திரிகள் சொல்றார்.

ओमित्येकाक्षरं ब्रह्म व्याहरन्मामनुस्मरन् ।

यः प्रयाति त्यजन्देहं स याति परमां गतिम् ॥

ஓமித்யேகாக்ஷரம் ப்³ரஹ்ம வ்யாஹரந்மாமநுஸ்மரந் |

ய: ப்ரயாதி த்யஜந்தே³ஹம் ஸ யாதி பரமாம் க³திம் || 8- 13||

ன்னு கீதா வாக்யம், ப்ரணவத்தை த்யானம் பண்ணிண்டு பகவானை நினைச்சுண்டு யார் உயிரை விடறாளோ அவா மோக்ஷத்தை அடைவான்னு சொல்றார். சாஸ்திரிகள் சொல்றார் முருகப் பெருமான் தான் ப்ரணவ ஸ்வரூபம், அந்த மயில் மேல் முருகன் தான் வேதத்தில் ப்ரணவ ஸ்வரூபம். அப்படி என் முன்னாடி வந்து நீ காட்சி கொடுத்தா, தானா மனசு அதுல லயிக்கும். நான் மோக்ஷம் அடைஞ்சுடுவேன். இது முக்கியமான பிரார்த்தனை எங்கறதனாலதான் முதல்ல இந்த பிரார்த்தனையைப் பண்றார். வற்புறுத்தி பகவான்கிட்ட இதை வேண்டிக்கணும். நித்தியம் வேண்டிக்கணும். ஏன்னா என்னிக்கு முடிவு வரும்ன்னு தெரியாது. அதனால ஓம்கார ஸ்மரணம் நம்மால பண்ண முடியுமோ இல்லையோ, முருகப் பெருமானுடைய ஸ்மரணத்தைப் பண்ணி பழகிண்டா, கடைசி நேரத்துல பகவான் வந்து நமக்கு தரிசனம் கொடுப்பார்ன்னு ரொம்ப அழகா சொல்லியிருக்கார்.

அருணகிரி நாதப் பெருமான் நிறைய பாடல்கள்ல இந்த மாதிரி ‘எம பயத்திலிருந்து தன்னை மீட்கணும்’ அப்படின்னு சொல்றார். நிறைய இடத்துல ‘முருகனை நான் நம்பி இருக்கேன். எமன் என்னை என்ன பண்ண முடியும்’ அப்படின்னும் அறைகூவல் விடறார். ‘கந்தர் அலங்காரம்’ன்னு ஒரு 106 பாடல்கள் இருக்கு. அதுல நிறைய பாட்டுல இந்த மரண பயத்தைப் போக்கணும்ன்னு வேண்டிக்கிறார். மரண பயம் எனக்கு கிடையாதுன்னும் சொல்றார். அதுல சில பாடல்கள் உங்களுக்கு சொல்றேன்.

மரண ப்ரமாதம் நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை

கிரணக் கலாபியும் வேலுமுண்டே கிண்கிணி முகுள

சரண ப்ரதாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா

பரண க்ருபாகர ஞானாகர சுர பாஸ்கரனே.

‘கலாபி’ன்னா மயில். அழகான சமஸ்கிருத ஸ்லோகம் மாதிரி இருக்கு. அவ்ளோ சமஸ்கிருத வார்த்தைகள்.

தண்டாயுதமுந் திரிசூலமும் விழத் தாக்கியுன்னைத்

திண்டாட வெட்டி விழவிடுவேன் செந்தில் வேலுனக்குத்

தொண்டாகிய வென்னவிரோத ஞானச்சுடர் வடிவாள்

கண்டாயடா அந்தகா வந்து பார் சற்றென் கைக்கெட்டவே.

யமனை ‘என் கிட்ட வந்து பார் ‘எங்கிறார். ‘வந்தேன்னா உன்னை வெட்டி விழ விடுவேன்’ எங்கிறார். ‘முருகப் பெருமான் பாதத்துல பக்தி பண்ணதுனால அவிரோத ஞானச்சுடர் வடிவாள் இருக்கு என்கிட்ட. நீ என்ன என்னை வந்து திரிசூலத்தை வச்சுண்டு பயமுறுத்துறது? அதெல்லாம் கீழ விழும்படியா உன்னை நான் தள்ளிடுவேன்’ங்கிறார்.நீலச் சிகண்டியிலேறும் பிரான் எந்த நேரத்திலுங்

கோலக் குறத்தியுடன் வருவான் குருநாதன் சொன்ன

சீலத்தை மெள்ளத் தெளிந்தறிவார் சிவ யோகிகளே

காலத்தை வென்றிருப்பார், மரிப்பார் வெறுங்கர்மிகளே

அப்படின்னு ஒரு பாட்டு. இதுல ‘காலம்’ங்கிறதுதான் எமன். இந்த காலத்தை வென்று ஞான வெளியில் கலக்கறதுதான் ஜன்மாவோட நோக்கம். அதை அருணகிரி நாதர் முருகப் பெருமானுடைய அநுக்கிரகத்தினால அடைந்து அந்தப் அனுபவத்தைப் பேசறார்.

படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினாற்

பிடிக்கும் பொழுது வந்தஞ்லென்பாய் பெரும் பாம்பினின்று

நடிக்கும் பிரான் மருகா கொடுஞ் சூரனடுங்க வெற்பை

இடிக்குங் கலாபத் தனிமயிலேறும் இராவுத்தனே

இந்த இடத்துல நடிக்கிறதுன்னா டான்ஸ் ஆடறதுன்னு அர்த்தம். ‘பெரும் பாம்பினின்று நடிக்கும் பிரான்’ , பாம்பு மேல கிருஷ்ணர் காளிங்க நர்த்தனம் ஆடினார் இல்லையா. அதைச் சொல்றார்.

பட்டிக் கடாவில் வரும் அந்தகாவுனைப் பாரறிய

வெட்டிப் புறங்கண்டலாது விடேன் வெய்ய சூரனைப்போய்

முட்டிப் பொருத செவ்வேற் பெருமாள் திருமுன்பு நின்றேன்

கட்டிப் புறப்படடா சத்தி வாளென்றன் கையதுவே

ன்னு ஒரு பாட்டு.

மாகத்தை முட்டி வரு நெடுங்கூற்றவன் வந்தாலென் முன்னே

தோகைப் புரவியிற்றோன்றி நிற்பாய் சுத்த நித்தமுத்தித்

த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந்தகனைத் த்ரியம்பகனைப்

பாகத்தில் வைக்கும் பரம கல்யாணி தன் பாலகனே

ன்னு ஒரு பாட்டுல சொல்றார். இன்னிக்கி மஹா ப்ரதோஷம். “சுத்த நித்த முத்தித் த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந்தகனைத் த்ரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரம கல்யாணி தன் பாலகனே ” அப்படின்னு மூணு பேரையும் சோமாஸ்கந்த மூர்த்தியா த்யானம் பண்ணிட்டோம். இப்படித் திருப்புகழ்ல எத்தனையோ பாடல்கள்.

கனைத்தெழும் பகடது பிடர் மிசைவரு

கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்

கதித்தடர்ந்தெறி கயிறடு கதைகொடு பொருபோதே

கலக்குறுஞ் செயல் ஒழிவற அழிவுறு

கருத்து நைந்து அலமுறு பொழுதளவை கொள்

கணத்தில் என் பயமற மயில் முதுகினில் வருவாயே

(‘உனைத் தினம்’ எனத் தொடங்கும் திருப்பரங்குன்றம் திருப்புகழ்)

‘கடைசி நிமிஷத்துல என் கண் முன்னாடி, மயில் முதுகுல வந்து என்னோட பயத்தைப் போக்கணும், தர்சனம் கொடுக்கணும்’ ன்னு வேண்டறார்.

தேதியூர் சாஸ்திரிகள் சொல்ற மாதிரி அந்த க்ஷணத்துல தோகை மயில் முருகனைத் தர்சனம் பண்ணினா, பகவானோட ஒண்ணா கலந்துடலாம். மறுபிறவி கிடையாதுன்னு தெரியறது. இது முதல் பிரார்த்தனை. அடுத்த ஸ்லோகத்திலேயும், இதே மாதிரி கடைசி நிமிஷத்துல என்னை கைவிட்டுடாதேன்னு இன்னொரு தடவைப் பிரார்த்தனை பண்றார். அந்த ஸ்லோகத்தை நாளைக்குப் பார்ப்போம்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Series Navigation<< ஸுப்ரமண்ய புஜங்கம் – பத்தொன்பதாவது ஸ்லோகம் – முருக நாம ஜபத்தால் மனமும் இந்த்ரியங்களும் அடங்கும்ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி ஒன்றாவது ஸ்லோகம் – உயிர் மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வரவேணும் >>
Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.