ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி ஒன்றாவது ஸ்லோகம் – உயிர் மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வரவேணும்

ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி ஒன்றாவது ஸ்லோகம் (9 min audio file. Same as the script above)

நேத்திக்கு ஸுப்ரமண்ய புஜங்கத்துல இருபதாவது ஸ்லோகம் பார்த்தோம். அதுல என்னுடைய இந்த வாழ்வின் கடைசி நேரத்துல, நீ வந்து என் முன்னாடி தர்சனம் குடுக்கணம்னு வேண்டறார். இன்னிக்கும் கிட்டத்தட்ட அதே மாதிரி தான். நாளைக்கு ஸ்லோகத்திலயும் எமன் வரும்போது என்னை காப்பாத்துன்னு சொல்றார். ஆனால் subtle difference இருக்கு. இன்னிக்கு ஸ்லோகம்

कृतान्तस्य दूतेषु चण्डेषु कोपाद्

दहच्छिन्द्धि भिन्द्धीति मां तर्जयत्सु ।

मयूरं समारुह्य मा भैरिति त्वं

पुरः शक्तिपाणिर्ममायाहि शीघ्रम् ॥२१॥

க்ருதாந்தஸ்ய தூதேஷு சண்டேஷுகோபாத்
தஹச்சிந்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸு |
மயூரம் ஸமாருஹ்ய மாபைரிதி த்வம்
புர : ஸக்திபாணிர் மமாயாஹி ஸிக்ரம் ||

க்ருதாந்த: னா எமன், ‘க்ருதாந்தஸ்ய தூதேஷு’ – எமனுடைய தூதர்களால், அவா எப்படி இருக்கான்னா – ‘சண்டேஷு’ – ரொம்ப உக்ரமா இருக்கா, பயங்கரமா இருக்கா. ‘கோபாத்’ – அவா கோபத்தோடு ‘தஹ’ – எரி இவனை. ‘ச்சிந்தி’ – வெட்டு, ‘பிந்தி’ – இவனை வெட்டி இரண்டா பிளந்து போடு. இப்படியெல்லாம் ‘மாம் தர்ஜயத்ஸு’ – என்னை அதட்டி பயமுறுத்தி ஹிம்ஸை பண்றா. அப்போ ‘ஹே ஸ்வாமின்’ – ஹே குமாரக் கடவுளே ‘ த்வம்’ – நீ ‘சக்திபாணி’ கையில் வேலோடு ‘மயூரம் ஸமாருஹ்ய’ மயில் மேல் ஏறி என் முன்னாடி வந்து ‘மா பைஹி’ பயப்படாதே என்ற உபதேசத்தை பண்ணி ‘இதி மம புர:’ என் முன்னாடி சீக்கிரம் வா. சீக்கிரம் வந்து அபயத்தைக் கொடு. ‘மா பைஹி’ என்ற வார்த்தைகளைச் சொல்லி அபயம் கொடுன்னு கேட்கறார். இந்த பயப்படாதேன்னு குரு சொல்ற வார்த்தை அது சொன்ன நாள்லேயிருந்து உயிர் பிரியற நாள் வரைக்கும் கூட துணையாக நிற்கும். ‘பயந்த தனிவழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே’ அப்டினு சொன்னா மாதிரி அந்த ‘மா பைஹி’ எங்கறது ஒரு மந்திரம். அது கொடுக்கற தைரியம், எத்தனை ஜன்மா வேணா எடுக்கலாம். அவ்ளோ தைர்யம் கொடுக்கும்.

இங்க தேதியூர் சாஸ்திரிகள் இரண்டு ஸ்கந்த புராண ஸ்லோகங்களை quote பண்ணியிருக்கார். அவ்ளோ அழகா இருக்கு. மயில் மேல் ஏறி வந்து உன்னோட வேலை காண்பிச்சு ‘மா பைஹி’ ன்னு எனக்கு அபயம் கொடுன்னு சொன்னதுக்கு ஸ்கந்த புராணத்துலேருந்து ஒரு ஸ்லோகம் எடுத்திருக்கார்.

वेद एव मयूरस्यात् प्रणव: षण्मुखस्तथा |

ब्रह्मविद्यापि शक्तिस्यात् मोक्ष: तद्दर्शनात् स्मृत: ||

‘வேத ஏவ மயூரஸ்யாத்’ – வேதம் தான் மயூரம். வேதம் தான் மயில். ‘ப்ரணவஹ: ஷண்முகஸ் ததா’ – ஆறுமுகத்தோடு கூடிய முருகப் பெருமான் தான் பிரணவ ஸ்வரூபம். ‘ப்ரம்ம வித்யாபி சக்திஸ்யாத்’ – அந்த சக்தி என்கிற வேல் தான் ப்ரம்ம வித்யை அப்படின்னு சொல்றார். ஞானம் அது தான். ‘மோக்ஷ: தத் தர்ஸனாத் ஸ்மிருத:’ – இந்த மாதிரி ஸ்வாமியை தர்சனம் பண்ணா மோக்ஷம் கிடைக்கும் அப்படிங்கற ஒரு அழகான அவ்ளோ ஒரு relevant ஆன ஸ்கந்த புராண ஸ்லோகத்தை எடுத்திருக்கார். அதுல என்னன்னா இந்த மாதிரி முருகப் பெருமானோட தர்சனம் கிடைக்கணும்னா நாம விடாம முருகனை பஜனம் பண்ணணும். அதுக்கு ஆச்சரியமான ஒரு ஸ்லோகத்தை எடுத்திருக்கார். இந்த ஸ்லோகத்தை நான் கேட்டதேயில்லை.

कृतेतु ब्रह्मजिज्ञास्यं त्रेतायां जानकी पति: |

द्वापरे भगवान् कृष्ण: कलौ सक्न्द: प्रकीर्तित: ||

‘க்ருதேது பிரம்மஜிக்ஞாஸ்யம்’ – க்ருத யுகத்தில் பிரம்ம விசாரத்தினாலும், ‘த்ரேதாயாம் ஜானகீ பதி:’ – த்ரேதா யுகத்தில் ராமரை வழிபடுவதினாலும், ‘த்வாபரே பகவான் கிருஷ்ண:’ – த்வாபர யுகத்தில் கிருஷ்ணரை வழிபடுவதாலும் ‘கலௌ ஸ்கந்த: ப்ரகீர்த்தித’ – இந்தக் கலியில் ஸுப்ரமண்ய உபாசனையினாலும் மோக்ஷம் என்கிற புருஷார்த்தம் சித்திக்கிறது. அப்படின்னு கலியுக வரதன் ஸுப்ரமண்ய ஸ்வாமி, ‘இந்தக் கலியில் ஸுப்ரமண்ய ஸ்வாமியைத் தான் வழிபட வேண்டும்’ அப்படின்னு அடிச்சு சொல்றார் சாஸ்திரிகள்.

அப்படி அந்த முருகப் பெருமான் ஸபரிவாரமாக மயில், வேல், வள்ளி தெய்வயானை உடன் வந்து தர்சனம் கொடுத்து ஞானத்தை அநுக்கிரகிக்கணும் அப்படிங்கிற இந்த பிரார்த்தனை. அதுக்கு நாம் இன்னியிலேயிருந்தே விடாம முருகனோட பஜனத்தைப் பண்ணனும் அப்படிங்கிறதை சாஸ்திரிகள் சொல்றார். ஸ்லோகத்துல என்னமோ ‘வெட்டு, குத்து’ னு வருது. அதை அவர் ரொம்ப elaborate பண்ணலை. முருக தரிசனம் மோக்ஷம் குடுக்கும் என்று கொண்டு போறார்.

இந்தக் கடைசிக் காலத்துல படுக்கையில படுத்துண்டு படற அவஸ்தை, அப்போ முருகப் பெருமான் வந்து காப்பாத்தணுங்கிற வேண்டுதல் அருணகிரி நாதரும் சில பாடல்கள்ல சொல்லியிருக்கார்.

‘தலைவலி மருத்தீடு’ன்னு பழனித் திருப்புகழ் ஒண்ணு. பெரிய பாட்டு. அதுல பல விதமான வியாதிகள் வந்து அது ஒவ்வொண்ணுக்கும் பேர் வெச்சுடறா. வயசான காலத்தில காது கேட்க மாட்டேங்கிறது. கண் தெரிய மாட்டேங்கிறது. ஒவ்வொரு பிரச்சனைக்கும் வைத்தியன் ஒரு பேர் வைக்கிறான். “அவருக்கெல்லாம் காது கேட்காது விடு விடு.” …’சரியும் வயதுக்கேது தாரீர், சொலீர்’ …அவர் கிட்டப் போய் என்ன பேச்சுன்னு சொல்லி ஜனங்கள்லாம் ஏசறா. இப்படி இருக்கும் போது,

” …உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்

வகைவகை யெடுத்தே தொடா மாலிகாபரணம்

உனதடியினிற் சூடவே நாடு மாதவர்கள் இருபாதம்

உளமது தரித்தே வினாவோடு பாடியருள்

வழிபட எனக்கே தயாவோடு தாளுதவ

உரகமதெடுத்தாடும் ஏகார மீதின்மிசை. வரவேணும் ..”

ன்னு ஒரு வேண்டுதல். அழகான பூக்களை தேர்ந்து எடுத்துத் தொடுத்து, மாலையாக பண்ணி உன்னுடைய பாதத்துல போடறதில சந்தோஷப் படற அடியவர்களுடைய திருப்பாதங்களை என்னுள்ளத்தில் தரித்து, எனக்கும் அந்த பக்தி வருமா, மோக்ஷம் கிடைக்குமா, எனக்கும் அந்த முருகப் பெருமானுடைய பக்தர்கள் கூட்டத்தில் சேர முடியுமா அப்படின்னு ஏங்கி வேண்டிண்டு, அந்த தயவுக்காக காத்திருக்கும் எனக்கு உதவ, உரகமது (வாசுகி என்ற பாம்பை) எடுத்தாடும் அந்த மயில் ‘ஏ’கார மீதின் மிசை வரவேணும்ன்னு ஒரு பாட்டுல சொல்றார்.

திருவருணைத் திருப்புகழ் ஒண்ணு இருக்கு. அந்தப் பாட்டுல

“வீடுதவியாள வெற்றி வேல் கரமதே யெடுத்து

வீறுமயில் மீதிலுற்று வருவாயே”

(‘கேதகைய பூமுடித்த’ எனத் தொடங்கும் திருவண்ணாமலை திருப்புகழ்)

அப்படின்னு சொல்றார். ‘வீடுதவி’ன்னா மோக்ஷம். எனக்கு மோக்ஷம் கொடுக்கறதுக்கு வெற்றிவேல் கரமதே எடுத்து (கையில வேல் எடுத்துண்டு) வீறுமயில் மீதிலுற்று வரவேணும். அப்படியே அந்த

कृतान्तस्य दूतेषु चण्डेषु कोपाद्

दहच्छिन्द्धि भिन्द्धीति मां तर्जयत्सु ।

मयूरं समारुह्य मा भैरिति त्वं

पुरः शक्तिपाणिर्ममायाहि शीघ्रम्

அப்படிங்கிற ஸ்லோகத்துக்கு தமிழாக்கம் மாதிரி இருக்கு இது.

“வீடுதவியாள வெற்றி வேல் கரமதே யெடுத்து

வீறுமயில் மீதிலுற்று வருவாயே” அப்படின்னு அழகான ஒரு திருப்புகழ்.

“சோதியன லாவுதித்த சோணகிரி மாமலைக்குள்

சோபைவட கோபுரத்தி …… லுறைவோனே

சோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றி

தோளின்மிசை வாளெடுத்த …… பெருமாளே.

வீடுதவியாள வெற்றி வேல் கரமதே யெடுத்து

வீறுமயில் மீதிலுற்று வருவாயே”

அப்படின்னு ஒரு பிரார்த்தனை. அதனால நாம இடையறாது முருகப் பெருமானுடைய பஜனத்தைப் பண்ணி, அந்த ஞானம் அடைஞ்சுட்டா, அதுக்கப்புறம் இந்த உலக வாழ்க்கையில அர்த்தம் ஒண்ணுமே இல்லை. அதுக்காக வேண்டனும். அந்த ஞானத்துக்காக தான் வேண்டணும். அதுக்கு இடையறாது வழிபாடு பண்ணணும்ங்கறது தான் இந்த மூணு ஸ்லோகத்தோட தாத்பர்யமா இருக்கு. கடைசி காலத்துல வந்து என்னை காப்பாத்து கை விட்டுடாதேன்னு சொல்றார், அதுக்கு இன்னியிலேர்ந்தே எனக்கு உன்னிடத்திலே மனசு வைக்க கூடிய புத்தி கொடுங்கற ப்ரார்தனையைத்தான் stress பண்ணி தேதியூர் சாஸ்திரிகள் எடுத்து கொடுக்கறார். அது தான் மஹான்களோட பெருமை. அடுத்த ஸ்லோகத்துல ‘மனாகபி உபேக்ஷா’ அந்த நேரத்துல கொஞ்சம் கூட என்னை மறந்துடாதே. அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கறேன், என்னை வந்து காப்பாத்து முருகான்னு சொல்ற அந்த ஸ்லோகத்தை நாளைக்கு பார்ப்போம்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Series Navigation<< ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபதாவது ஸ்லோகம் – கணத்தில் என் பயமற மயில் முதுகினில் வருவாயேஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி இரண்டாவது ஸ்லோகம் – நின் ஞான சிவமான பதம் அருள்வாயே >>
Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.