ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி எட்டாவது ஸ்லோகம் – சகல செல்வ யோக மிகக் பெருவாழ்வும் சிவஞான முக்தியும் நீ குடுத்து உதவ வேண்டும் முருகா

ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி எட்டாவது ஸ்லோகம் (10 min audio file. Same as the script above)

ஸுப்ரமண்ய புஜங்கத்துல இருபத்தியேழு ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். நேத்திக்கு இருபத்தியேழாவது ஸ்லோகத்துல, கடையனுக்கும் கடைத்தேற்றம் என்கிற மாதிரி, முருகப் பெருமான் எந்த பேதமும் இல்லாம, எல்லாருக்கும் அனுக்ரஹம் பண்ணக் கூடிய தெய்வம் அப்படிங்றதை பார்தோம். அதனால நமக்கு யோக்யதை இல்லேன்னா கூட முருகன் கிட்ட நாம நெருங்காலம்ங்கற சௌலப்யத்தை புரிஞ்சுண்டோம்.

இன்னிக்கு அழகான ஒரு ஸ்லோகம்.

कलत्रं सुता बन्धुवर्गः पशुर्वा

नरो वाथ नारि गृहे ये मदीयाः ।

यजन्तो नमन्तः स्तुवन्तो भवन्तं

स्मरन्तश्च ते सन्तु सर्वे कुमार ॥ २८॥

களத்ரம் ஸுதா பந்துவர்க பசுர்வா

நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா |

யஜந்தோ நமந்த: ஸ்துவந்தோ பவந்தம்

ஸ்மரந்தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார ||

இதோட அர்த்தம் சொல்றேன். ‘ஹே குமாரா:’ – குமரக் கடவுளே ‘க்ருஹே:’ – என்னுடைய வீட்டில் உள்ள ‘களத்ரம்’, – என்னுடைய மனைவி, ‘ஸுதா:’ – என் பிள்ளைகள் ‘பந்துவர்க:’ – அப்பா, அம்மா, அண்ணா தம்பி, இன்னும் பந்து வர்கத்துல இருக்கறவா, ‘பசுர்வா:’ – வீட்டுல இருக்கற மிருகங்கள், ‘நரோவாத நாரீ வா:’ – மத்த மனிதர்கள், பெண்களோ, புமான்களோ ‘யே மதீயா:’ – என்னைச் சேர்ந்தவான்னு நான் நினைக்கக்  கூடிய யாரா இருந்தாலும், அவா என்னுடைய நண்பர்களாக இருந்தாலும் சரி, என்னுடைய தொழில்ல கூட வேலை செய்யறவாளா இருந்தாலும் சரி, எனக்கு சம்பத்தப்பட்ட எல்லாரும், ‘தே ஸர்வே’ – அவா எல்லாரும் முருகா, ‘பவந்தம்’ – உன்னை, ‘யஜந்த:’ – பூஜை பண்றவாளாகவும் ‘நமந்த:’ – உன்னை  நமஸ்காரம் பண்றவாளாகவும் ‘ஸ்துவந்த:’ – உன்னை ஸ்தோத்ரம் பண்றவாளாகவும் ‘ஸ்மரந்த:’ – உன்னையே ஸ்மரிக்கறவர்களாகவும் ‘ஸந்து’ – இருக்கட்டும்ன்னு அழகான ஒரு ஸ்லோகம்.

இதுல இந்த பசுர்வான்னு சொன்னதை ‘எனக்கு தெரிஞ்ச பசுக்கள் கூட உன்கிட்ட பக்தியா இருக்கணும்’ என்கிற போது, குருவாயூர் கேசவன்-னு ஒரு யானை ஞாபகம் வரது. அந்த யானை குருவாயூரப்பனுக்கு அறுவது வருஷம் service பண்ணித்து. அப்புறம் ஒரு குருவாயூர் ஏகாதசி அன்னிக்கு, அன்னிக்கு நாளெல்லாம் ஒண்ணும் சாப்பிடாம இருந்து, அந்த ஸ்வாமி சன்னதியைப் பார்த்துண்டு, தன் தும்பிக்கையை மேல தூக்கி, ஒரு  வாட்டி பிளறிட்டு உயிரை விட்டது. அந்த யானை மேலே ஸ்வாமியை வச்சுண்டு யாராவது  வந்தா ஸ்ரீவேலிம் போது ஏறாலமே தவிர வேற யாரும் ஏற முடியாது. அது ஏற விடாது. அப்பப்போ அதை  கட்டி வெச்சுருக்கற இடத்துலேயிருந்து கிளம்பி, நேரா ஸ்வாமி சன்னதிக்கு வந்து கோயிலை ப்ரதக்ஷிணம் பண்ணிட்டு போகும். இப்படி ஒரு அற்புதமான யானை. அதுக்கு கஜராஜன்-னு தேவஸ்வத்துலேர்ந்து title கொடுத்திருந்தா. பூர்வ ஜென்மத்துல பக்தி பண்ணின வாசனைனால, எவ்வளவு மிருகங்கள் கூட பகவானோட பக்தி பண்றது.

இப்ப  கூட பார்க்கறோம். ராமாயணம் நடக்கறதுன்னா தீடிர்னு எங்கயிருந்தோ ஒரு வானரம் வந்து  அந்த ராமாயணத்தைக் கேட்டுட்டு பழத்தை எடுத்துண்டு போறதுன்னு எல்லாம் சொல்றா. பசுக்கள் பால் கொடுக்கறது ஸ்வாமி புஜைக்குன்னா நிறைய யதேஷ்டமா பால் கொடுக்கறது நம்மாத்துல நாம பார்த்திருப்போம். அப்படி என்னுடைய வீட்டுல இருக்கற  பசுக்கள் கூட  உன்கிட்ட பக்தியா இருக்கணும் ன்னு வேண்டிக்கறார்.

ஏணிப்படிகளில் மாந்தர்கள் புஸ்தகத்துல மனுஷாள்ல பல விதமான gradations இருக்கு அப்படீன்னு நேத்திக்கு ஒரு விஷயம் சொல்லிண்டிருந்தேன் இல்லையா? இந்த காலத்துல நாம வந்து பிறக்கும் போதே, நாமளும், நம்மளைச் சுத்தி எல்லாருமே பாமரர்களாகத் தான் இருக்கா. நாம ஏதோ ஒரு ஸத்சங்கத்துனால வாழ்க்கையோட பயன் என்னன்னு புரிஞ்சுண்டு, பகவானை அடையணும் ன்னு நினைச்சு ஏதோ ஒரு சின்ன முயற்சி பண்ணும் போது மனைவி குழந்தைகள் support வேணும். Sir book-ல கேளிக்கை காட்சிகளை பார்க்க விரும்புகிறவன்  பாமரன்-னு போட்டு இருக்கார். பையன் ‘வாப்பா சும்மா சும்மா திருப்புகழ்  பஜனை போகணும் எங்கற. சினிமா போகலாம்’ ன்னு கூட்டிண்டு போய்ட்டா முடிஞ்சுது. Sir book-ல தன் குழந்தைகளையும் மத்தவா குழந்தைகளையும் ஒரே மாதிரி நினைக்கறவன் “விவேகி”. தன் குழந்தைகளுக்கு செல்லம் கொடுக்கறவன் “பாமரன்” அப்படிங்கறார். பிள்ளைகள் தப்பு பண்ணினா, chain-ல வெச்சு கட்டி, அல்லது பட்டினி போட்டு அப்படி திருத்தணும், அப்படி பண்ணினா விவேகிங்கறார். எங்க இருக்கோம் நம்ப? நாம பாமரர்களா இருக்கோம்னு சொல்ல வரேன். அவர் என்ன சொல்றார், நூத்தி எண்பது (விளக்கங்களை) ‘பாமரர்கள்’னு லிஸ்ட் பண்ணிட்டு, இதுல நூத்தி எழுபத்தொண்பதுல நீ ‘விவேகி’யா இருந்து, ஒண்ணுல பாமரனா இருந்தாலும் நீ பாமரன் தான் என்கிறார். அதனால நாம ரொம்ப பயப்பட வேண்டிய ஒரு காலமா இருக்கு. நாம ஏதோ கொஞ்சம் நல்ல வழியில இருக்கணும்ன்னு நினைச்சாலும், நாம நினைக்கிறதே அபூர்வம், சுத்தி இருக்கிறவாளும் அப்படி நினைக்கணும். மனைவி வசதியா வாழணும்ன்னு தீவிரமா ஆசைப் பட்டா, நாம என்னென்னவோ பஞ்ச மாபாதகங்கள் பண்றவா கிட்ட இருந்து கெட்ட பணத்தை வாங்கி தான் அந்த மாதிரி வசதியா வாழ முடியும். எளிமையா வாழணும், தெய்வ பக்தி பண்ணனும், தான தர்மங்கள் பண்ணனும் ன்னு நினைச்சா, சுத்தி இருக்கிறவாளும், மனைவியும் கூட நினைச்சா தான் நாம ஒரு சத்ஸங்கத்துல ஈடுபட முடியும். பஜனம் பண்ண முடியும். அப்படியெல்லாம் இருக்கு. அதனால இந்த பிரார்த்தனை அவ்ளோ முக்கியமான பிரார்த்தனை. அவ்வளவு அழகா, ஸந்நியாசியா இருந்த ஒரு ஆச்சார்யாள் நம்ம நிலைமையை புரிஞ்சிண்டு நமக்காக இப்படி ஒரு ஸ்லோகத்தை எழுதிக் கொடுத்திருக்கார்.

களத்ரம் ஸுதா பந்துவர்க பசுர்வா

நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா |

யஜந்தோ நமந்த: ஸ்துவந்தோ பவந்தம்

ஸ்மரந்தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார || ன்னு கேட்கறார்.

ஸ்வாமிகள் திருவல்லிக்கேணியில இருந்தார். அப்போ பக்கத்துல வேற ஒரு ஸ்வாமிஜி இருந்தார். அவர்  இமயமலையில இருபத்தி நாலு கோடி காயத்ரி ஜபம் பண்ணிட்டு வந்திருக்கார்ன்னு சொல்லுவா. அந்த ஸ்வாமிஜிக்கு ஒரு பிள்ளை இருந்தான். அவருக்கு அந்த பிள்ளை மேல ஒரு பாசம். அதனால அந்த பையன் வந்து அவரைப் பாக்கணும்ன்னு, அவர் ஐயாயிரம் ரூபா கொடுக்கணும். அவரை வந்து பார்த்தவுடனே அவன் ஏதாவது கஷ்டத்தைச் சொன்னா, உடனே அவர் வந்து ஏதோ பிரார்த்தனை பண்ணுவார். ஹோமம் பண்ணுவார். கஷ்டம் சரியா போயிடும்ன்னு ஒரு நம்பிக்கை. அவன் நன்னா சம்பாதிச்சான் . ஊருக்குத் தள்ளி ஒரு இடத்துல ஆஸ்ரமம் கட்டிண்டான். தலையில இருந்து கால் வரைக்கும் தங்க நகைகள் போட்டுண்டு இருப்பான் . ஸ்வாமிகள் வருத்தப்படுவார், ‘இவ்வளவு தபஸ் பண்ணினவர்ன்னு சொல்றா. அப்படி தபஸ் பண்ணி அந்த பகவானோட அனுபவம் கிடைச்சவர், பாவம் இந்த பையன் கிட்ட வந்து மாட்டிண்டார் பாரு. யாராவது அவ்ளோ பெரிய தெய்வானுக்ரஹம் கிடைச்ச பின்ன இந்த உலக விஷயங்கள்ல போய் விழுவாளா. வாந்தி பண்ணதை எடுத்து சாப்பிடற மாதிரி இல்லையா அது. அதுனால நாம ஜாக்ரதையாக இருக்கணும். நாம இந்த ஸ்லோகத்தை சொல்லி பிரார்த்தனை பண்ணணும். நாம ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும். சில சமயம் சிஷ்ய கோடிகளா வந்து சேர்றவா நம்ம பேரை யூஸ் பண்ணி ஒரு சங்கம் ஆரம்பிச்சிடுவா. அப்படியெல்லாம் danger இருக்கு, ஜாக்கிரதையா இருக்க வேண்டிய ஒரு காலம். அது நம்ம புத்தியினால ஓரளவு தான் ஜாக்கிரதையா இருக்க முடியும் . நாம அதுக்கு பகவான் கிட்டதான் வேண்டிக்கணும்.

களத்ரம் ஸுதா பந்துவர்க பசுர்வா

நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா |

யஜந்தோ நமந்த: ஸ்துவந்தோ பவந்தம்

ஸ்மரந்தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார ||

ன்னு இந்த ஸ்லோகத்த சொல்லி வேண்டிக்கணும். அதுக்கும் மேலே இந்த மாதிரி உலக விஷயங்கள்ல ரொம்ப பாசம் வெச்சு அல்லல் படாமல் இருக்கணும் னும் வேண்டிக்கணும். கூட இருக்கறவா எப்படி இருக்காளோ அது ஒண்ணும். நாம

வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்

தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?

கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,

தொளைபட்டு உருவத் தொடு வேலவனே. (கந்தர் அநுபூதி)

மக மாயை களைந்திட வல்ல பிரான்

முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே

அகம் மாடை, மடந்தையர் என்றயரும்

சகமாயையுள் நின்று தயங்குவதே. (கந்தர் அநுபூதி)

‘முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே’ ‘மாடை’ னா தங்கம், பணம். ‘மடந்தையர்’ னா பெண்கள். இதுலேயே என் மனசு தயங்கி தயங்கி அங்கேயே நிக்கறது. அதை உதறவே மாட்டேங்கறதே. ‘முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே!’  ‘ஆறுமுகம் ஆறுமுகம்’ ன்னு சொல்றேன். இதெல்லாம் இன்னமும் ஒழிய மாட்டேங்கறேதே அப்படின்னு பிரார்த்தனை பண்றார். அதே மாதிரி

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்

பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?

தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்

நிட்டூர நிராகுல, நிர்பயனே. (கந்தர் அநுபூதி)

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே

சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ

சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்

போர் வேல, புரந்தர பூபதியே. (கந்தர் அநுபூதி)

அப்படின்னு நம்மைச் சேர்ந்தவா நமக்கு அனுகூலமா இருக்கணும். அப்படி இல்லேன்னா நாம ரொம்ப ஈஷிண்டு, ரொம்ப கஷ்டப் படாம இருக்க நமக்காவது ஒரு ஞான வைராக்யம் வரணும் அப்படிங்கற பிரார்த்தனை இந்த ஸ்லோகத்துல இருக்கு. அதை நாம பண்ணி நல்ல friends, நல்ல பந்துக்கள், நாம வளர்க்கற மிருகங்களோ, நமக்கு வர்ற boss, நமக்கு வர்ற வேலைக்காராளோ, எல்லாரும் முருக பக்தியோட இருக்கணும்னு வேண்டிப்போம்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Series Navigation<< ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி எழாவது ஸ்லோகம் – என்னையும் அடியனாக்கி இருவினை நீக்கி ஆண்ட பன்னிரு தடந்தோள் வள்ளல்ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி ஒன்பதாவது ஸ்லோகம் – அயிலும் மயிலும் அழகும் உடைய பெருமாளே >>
Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.