ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பதாவது ஸ்லோகம் – எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ

நேத்திக்கு ஸூப்ரமண்ய புஜங்கத்துல வேலுடைய மஹிமையைப் பார்த்தோம்.

ம்ருகா பக்ஷிணோ தம்சகா யே ச துஷ்டா:

ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே |

பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா: ஸுதூரே

விநச்யந்து தே சூர்ணித க்ரெளஞ்ச சைல ||

ன்னு ‘முருகனுடைய வேல் பயங்களைப் போக்கும்’ அப்படிங்கிற விஷயத்தைச் சொன்னார். இந்த வேலைக் கொண்டு சூரபத்மாவை வதம் பண்ணினார் அப்படிங்கிறதுக்கு ‘சூரபத்மன்’ங்கறது ஆணவம், ‘வேல்’ங்கிறது ஞானம். இந்த ஞானத்தினால ஆணவம் என்கிற மலத்தைப் போக்கிண்டு முருகனோட ஒன்றாக ஆகிவிடலாம். இரண்டற கலந்திடலாம் அப்படின்னு சொல்லுவா. இந்த வேலை, அம்பாள் முருகப் பெருமானுக்கு கொடுத்தா அப்படிங்கிற விஷயத்தை அருணகிரிநாதர் நிறைய பாடறார். தேவேந்திர சங்க வகுப்பு ‘தரணியில் அரணிய’ ன்னு ஆரம்பிக்கும். அதுல,

“இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட இடுமன

கரதல ஏகாம்பரை யிந்திரை மோஹாங்க சுமங்கலை

எழுதிய படமென இருளறு சுடரடி இணைதொழு மவுனிகள்

ஏகாந்த ஸுகந்தரு பாசாங்குச சுந்தரி..:”

அப்படின்னெல்லாம் ஸ்தோத்ரம் பண்ணிட்டு,

“அரணெடு வடவரை அடியொடு பொடிபட

அலைகடல் கெடஅயில் வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன் குமரன் குகன்”

அந்த அம்பாள்கிட்டயிருந்து வேலை வாங்கிண்டு போய் சூரஸம்ஹாரம் பண்ணினார் அப்படின்னு சொல்றார். அந்த அம்பாளுடைய ஸ்மரணை வந்த உடனே அடுத்த ஸ்லோகம் இன்னிக்கு ,

जनित्री पिता च स्वपुत्रापराधं

सहेते न किं देवसेनाधिनाथ ।

अहं चातिबालो भवान् लोकतातः

क्षमस्वापराधं समस्तं महेश ||

ஜநித்ரீ பிதாச ஸ்வபுத்ரா பராதம்

ஸஹேதே ந கிம் தேவசேனாதி நாத |

அஹம் சாதிபாலோ பவான் லோக தாத:

க்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேச ||

ன்னு ஒரு ஸ்லோகம். ‘ஹே தேவசேனாதி நாதா’ – தேவர்களுடைய சேனைக்கு அதிபதியே. ‘ஜநித்ரீ’ – அம்மாவோ, ‘பிதாச’ – அப்பாவோ, ‘ஸ்வபுத்ராபராதம்’ – தன் குழந்தைகள் செய்த அபராதத்தை , ‘ஸஹேதே ந கிம்’ – பொறுத்துக்கிறது இல்லையா? பொறுத்துக் கொள்வார்கள். ‘ததா’ – அப்படியே , ‘அஹம் சாதிபால:’ – நானோ ரொம்ப சின்னக் குழந்தை, ‘பவான் லோக தாத:’ – நீங்கள் உலகத்துக்கே அப்பா , ‘ஹே மஹேச’ – பரமேஸ்வரா, ‘ஸமஸ்தம் அபராதம் க்ஷமஸ்வா’ – என்னுடைய எல்லா அபராதங்களையும் பொறுத்துக் கொள்ளுங்கள் அப்படின்னு ஒரு க்ஷமாபராதம் வேண்டி பகவான் கிட்ட சரணாகதி பண்றார்.

இந்த பரமேஸ்வரனும், பார்வதி தேவியும் ‘அம்மையும் அப்பனுமாக’ இருக்கா. அவா இரண்டு பேருமே ஆச்சார்யாளுக்கு இந்த முருகப் பெருமான் கிட்டேயே தெரியுறதுனால, ‘முருகப் பெருமானே! நீயே என்னுடைய அம்மை அப்பன் ‘ ன்னு சொல்லி, ‘உங்கிட்ட நான் வேண்டிக்கிறேன். என்னுடைய பிழைகளைப் பொறுத்து எனக்கு அநுக்கிரஹம் பண்ணு’ அப்படின்னு சொல்றார்.

பகவானை அம்மை அப்பனா பார்த்து அவா பண்ண அநுக்கிரஹத்த நினைக்கிறது நிறைய மகான்கள் பண்ணி இருக்கா. திருவாசகத்துல நிறைய அந்த மாதிரி பாடல்கள் வரும்.

அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே!

பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,

செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!

இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

அப்படின்னு ஒரு பாடல். அந்தப் பதிகத்திலயே,

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய

ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய

தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!

யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

அழுதா பால் கொடுக்கிற அம்மா ஒரு வகை. ‘பால் நினைந்தூட்டும் தாயினும்’ , குழந்தைக்கு பசிக்குமேன்னு நினைச்சு பால் கொடுக்கிற அந்த தாய் உயர்ந்தவள். அவளைக் காட்டிலும் சாலப் பரிந்து – அதைக் காட்டிலும் பரிந்து , எனக்கு நீ உடம்பெல்லாம் தேன் ஊறும் படியாக அப்படி ஆனந்தத்தைக் கொடுத்தியே!. நான் உன்னைப் பிடிச்சிண்டேன். இனிமே உன்னை விட மாட்டேன் அப்படின்னு சொல்றார்.

இன்னொரு பாடல்ல,

முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை,

பத்தி நெறி அறிவித்து, பழ வினைகள் பாறும்வண்ணம்,

சித்த மலம் அறுவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட

அத்தன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே! (‘அச்சோப் பதிகம்’)

‘அத்தன்’ னா அப்பான்னு அர்த்தம். மூர்க்கர்களோடு இருந்த என்னை பக்தி நெறி அறிவித்து, என்னுடைய சித்த மலத்தைப் போக்கி என்னை சிவமாக்கிட்டயே நீ, இந்த மாதிரி அநுக்கிரஹம் யாருக்குக் கிடைக்கும் அப்படின்னு சொல்றார்.

இராமலிங்க அடிகளார் இந்த மாதிரி ‘அம்மையே அப்பா’ன்னு பாடியிருக்கார். இராமலிங்க அடிகளாருக்கு full & full inspiration மாணிக்கவாசகர் தான்.’திருவாசகத் தேன்’ அப்படிம்பார். அப்படி அவர் இதே மாதிரி ஒரு பாடல் சொல்லியிருக்கார். ரொம்ப அழகா இருக்கும்.

தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்

தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்

வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்

மலரடி என் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்

காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்

கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்

சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்

சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.

(திருவருட்பா: ‘அருட்ஜோதி நிலை’)

வள்ளலார் இன்னொரு பாடல்ல ரொம்ப கருணை ஏற்படும் படியாச் சொல்றார்.

“தடித்தஓர் மகனைத் தந்தை ஈண்டடித்தால் தாயுடன் அணைப்பள் தாய் அடித்தால்

பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்

பொடித் திருமேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை

அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப்பா இனி ஆற்றேன்.”

(திருவருட்பா: ‘பிள்ளைச் சிறு விண்ணப்பம்’)

அப்படின்னு சொல்றார். ‘க்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேச’ ன்னு ஆச்சார்யாள் சொல்ற மாதிரி இவரும் சொல்றார். அருணகிரி நாதரும் கந்தர் அநுபூதியில,

எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ

சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்

கந்தா, கதிர் வேலவனே, உமையாள்

மைந்தா, குமரா, மறை நாயகனே.

அப்படின்னு வேண்டறார் இல்லையா!

நல்ல அப்பா அம்மா இந்த உலகத்துல கிடைச்சாலே, அவாளுடைய அன்பு , கண்டிப்பு இரண்டும் சேர்ந்து நமக்கு கிடைக்கும் போது அதுவே ஒரு தெய்வ அனுபவம். அந்த பாக்யம் இருந்தா ,தானா நமக்கு அந்த தெய்வம்ங்கிறது என்ன அப்படிங்கிறதோட முதல் taste இல்லையா. ‘அன்னையும் , பிதாவும் முன்னறி தெய்வம்’. அப்படி அம்மை அப்பனாக நாம அந்த பகவானை உணர ஆரம்பிக்கிறோம். இந்த biological parents , அவாளுக்கு, அவாளுடைய வினைகள் படி அவா வாழ்க்கை போயிண்டு இருக்கும். நமக்கு அதுக்கும் மேலான முக்தி நெறிய காண்பிக்கக் கூடிய நல்ல சத்குருவும் கிடைச்சா , அது ஒரு பெரிய பாக்கியம். அப்படி ‘அம்மை அப்பனா’ முருகனை அருணகிரிநாதர் நிறையப் பாடுறார். அதுல ரொம்ப இரக்கத்தோட, ரொம்ப கருணை வரும் படியான ஒரு பாட்டு இருக்கு.

“தகப்பன் முன்.மைந்தனோடிப்

பால்மொழிக் குரல் ஓலமிட்டிடில்

யாரெடுப்பதெனா வெறுத்தழ

பார் விடுப்பர்களோ எனக்கிது…… சிந்தியாதோ ”

அப்பா முன்னாடி போய் குழந்தை அழுதுதுன்னா உலகத்துல விட்டுடுவாளா ? நீதான எனக்கு அப்பா , என்னை ஆதரிக்கணும் அப்படின்னு ஒரு பாட்டு. இது முழுக்கவே ரொம்ப அழகா இருக்கும். இந்த பாட்டை நான் பாடறேன்.

“ஏது புத்தி ஐயா எனக்கினி

யாரை நத்திடு வேன் அவத்தினிலே

இறத்தல் கொலோ எனக்குனி…… தந்தை தாயென்றே

இருக்கவு நானு மிப்படியே

தவித்திடவோ சகத்தவர்

ஏசலிற் படவோ நகைத்தவர்…… கண்கள்காணப்

பாதம் வைத்திடையா தேரித்தெனை

தாளில் வைக்க நியே மறுத்திடில்

பார் நகைக்குமையா தகப்பன் முன்…… மைந்தனோடிப்

பால்மொழிக் குரல் ஓலமிட்டிடில்

யாரெடுப்பதெனா வெறுத்தழ

பார் விடுப்பர்களோ எனக்கிது…… சிந்தியாதோ

ஓத முற்றெழு பால் கொதித்தது

போல எட்டிகை நீசமுட்டரை

யோட வெட்டிய பாநு சத்திகை…… யெங்கள்கோவே

ஓத மொய் சடையாட வுற்றமர்

மான் மழுக்கர மாட பொற்கழ

லோசை பெற்றிடவே நடித்தவர்…… தந்தவாழ்வே

மாதினைப் புனமீதிருக்குமை

வாள் விழிக்குறமாதினைத் திரு

மார்பணைத்த மயூர அற்புத…… கந்தவேளே

மாரன் வெற்றிகொள் பூ முடிக்குழ

லார் வியப்புற நீடு மெய்த்தவர்

வாழ் திருத்தணி மாமலைப்பதி…… தம்பிரானே.”

தன்னுடைய அப்பா அம்மாவா முருகனை நினைச்சு ஆச்சார்யாள் சரணாகதி பண்றார். அடுத்த ஸ்லோகத்துல, உனக்கு நமஸ்காரம். உன்னுடைய சேவலுக்கு நமஸ்காரம். உன்னுடைய வேலுக்கு நமஸ்காரம். உன்னுடைய மயிலுக்கு நமஸ்காரம் அப்படின்னு நமஸ்காரம் பண்றார். அடுத்ததுல ஜய கோஷம் பண்ணறார். ‘ஜயாநந்தபூமன் ஜயாபாரதாமன் ‘அப்படின்னு. அப்புறம் ‘முக்திதான ஈச ஸூனோ’ – எனக்கு முக்தியை அளிப்பவனே அப்படின்னு அந்த வார்த்தையோட முடிக்கறார். அதுக்கு அப்புறம் பல ஸ்ருதி. அந்த ஸ்லோகங்கள்லாம் அடுத்து பார்ப்போம்.

ஸுப்ரமண்ய புஜங்கம் முப்பதாவது ஸ்லோகம் (12 min audio file,)

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Share

Comments (1)

  • ரசித்து படித்தேன். திருப்புகழும் புஜங்கமும் அருமையாக இணைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.