Categories
Stothra Parayanam Audio

‘Greatness of Bhagavan Nama’ explained by Mahaperiyava with commentary from Govinda Damodara Swamigal

பகவன் நாம மஹிமை – ஸ்ரீ மஹா பெரியவா அருள்வாக்கு

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், தன்னிடம் வந்த எல்லோருக்கும் “இடைவிடாது ராம நாம ஜபம் பண்ணுங்கள்.  அது ஒன்றே உங்களுக்கு பக்தி, விரக்தி, ஞானம் அளித்து முக்தி அளிக்கும்” என்று சொல்வார். அதற்கு அவர் மஹாபெரியவாளின் இந்த கீழ்கண்ட அருள்வாக்கை அடிப்படையாக கொண்டிருந்தார்.

பகவன்நாமா – மஹாபெரியவா அருள்வாக்கு (click on the link to hear the audio. Transcript given below)

“நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே” னு, நாமத்தை சொல்லிண்டு இருந்தா போறும்னுட்டு, ஒரு கோடி காட்டி இருக்கா பெரியவா எல்லாரும். போதேந்த்ராள் “நீ பெரிய பரம பக்தனா இருந்தாலும் சரி, ப்ரபத்தி பண்ணினவனா இருந்தாலும் சரி, பெரிய நீ ஞானியா இருந்தாலும் சரி, ப்ரம்ம ஸாக்ஷாத்காரம் அடைஞ்சு ஸமாதியிலே நிஷ்டனா இருந்தாலும் சரி, எல்லாம் இருந்தாலும், இந்த இதுல உனக்கு ருசி, இது ஊறி, ஊறி, ஊறி, இந்த அம்ருதத்தை நீ பானம் பண்ணாத போனா, அதெல்லாம் ஒண்ணும் பிரயோஜனப் படாதுன்னுட்டு, கடைசீல தீர்மானம் பண்ணி, அவ்வளவும் இந்த ரெண்டு நாமா, ரெண்டு எழுத்து இருக்கும்படியான ராம நாமாவோ, ஶிவ நாமாவோ எதை வேணா வெச்சுக்கோ, அப்படினுட்டு, அந்த ரெண்டு எழுத்து இருக்கே அந்த ரெண்டு எழுத்துக்கு நிறைய கிரந்தங்கள் எழுதி, இந்த ரெண்டு தான் தாரகம்னு, தாரகம்னா உன்னை தாண்ட விடறது, பாபத்துலேர்ந்து தாண்ட விடறது, ஸம்ஸாரத்துலேர்ந்து, துக்கத்துலேர்ந்து தாண்ட விடறது. துக்கத்துலேர்ந்து தாண்ட விட்டாலும் சரி, வராது போனாலும் சரி, பாபத்துலேர்ந்து தாண்ட விட்டா போறும் நமக்கு.

“அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச:” னு, உனக்கு உனக்கு துக்கம் வராம இருந்ததானா, ஆபத்து வராம இருந்தா துக்கம் நிவர்த்தி ஆகும்னு சொல்றதுக்கில்லை. நீ பாபம் பண்ணாம இருந்தாலே உனக்கு போறும். எத்தனை ஆபத்து வந்தாலும் ஒனக்கு துக்கம் வராது உனக்கு. “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” உன்னுடைய பாபத்துலேர்ந்து உனக்கு மோக்ஷத்தை உண்டு பண்ணிடறேன். “மா ஶுச:” அப்பத்தான் உனக்கு சோகம்கிறது வராது.

அப்பேற்பட்ட தாரக நாமத்தை, போதேந்த்ராள் நாம ஸித்தாந்தம் பண்ணி, அதை அனுசரிச்சு ஐயாவாளும், ஐயாவாள் ஶிவ நாமத்தை பத்தி விசேஷமாச் சொல்லி, அப்படி கொஞ்சம் மனசு லயிக்கும்படியான ஒரு மார்கத்துல பகவன் நாமாவை சொல்லிண்டு இருந்தோமானா, அது கொஞ்சம் பஜன, பத்ததினுட்டு, அந்த மாதிரி ஸம்ப்ரதாயம் ஏற்பட்டிருக்கு. அதான்

“ஸததம் கீர்தயந்தோ மாம்”  “போதயந்த: பரஸ்பரம்” னு மூலத்துலேயே “அப்பா, சொல்லிண்டு இரு. ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிண்டு இரு. பத்து பேரா சேர்ந்து கோஷ்டி கானம் பண்ணு.” இப்படியெல்லாம், இப்படியெல்லாம் கொஞ்சம் ஸாதகம் அதுக்கு. எதானும் மருந்து சாப்படறதுக்கு, எதானும் கொஞ்சம் ஒரு ஸஹாயம் ஒரு திதிப்பு, கிதிப்பு, அது, இது குடுக்கற மாதிரி, பகவன் நாமாவுக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட இருந்தா, கொஞ்சம் சுலபமா பகவன் நாமாவை, நாம வந்து அந்த அம்ருதத்தை அனுபவிக்க முடியும்கிறத்துக்காக, வேறொண்ணும் வேண்டாம் உனக்கு. அது ஒண்ணு வெச்சுக்கோ.

கடைசீ ஸித்தாந்தம் “நாக்கு இருக்கு, இரண்டு எழுத்து இருக்கு. சொல்லிண்டே இரு முழுக்க. அது ஒண்ணு உன்னை எல்லாத்தையும் தாண்டி விட்டுடும். இது, இது பாக்கி எல்லாம் எவ்வளவு பண்ணுமோ அவ்வளவு பண்ணிடும் இது. ஏதோ நம்மால முடிஞ்சதை வேண்டாம்னு சொல்ல வேண்டாம். முடிஞ்ச வரைக்கும் நல்ல கார்யங்கள் ல்லாம் பண்ணிண்டு இருப்போம். பாக்கி பக்தியோ, ஞானமோ, ஶரணாகதியோ, கர்மானுஷ்டானங்களோ இதெல்லாம் பண்ணுவோம். பண்ணாலும், அதுலேர்ந்து, நமக்கு வேறொண்ணும் அதிகாரம் இல்லியே, இது ஒண்ணு இருக்கட்டும் நமக்குன்னு, இது ஒண்ணை கெட்டியா, குரங்கு பிடியா பிடிச்சினுடு, இந்த பகவன் நாமாவை. அப்படின்னு உபதேஶம் பண்ணி, அதை ஸித்தாந்தம் பண்ணினவாள்,போதேந்த்ராள்னு கடைசீ ஆச்சார்யாள் முந்நூறு வருஷத்துக்கு முந்தி பண்ணினார்.

அவாளுடைய அனுசரிச்சு ஐயாவாள்னுட்டு அவாளும் நிறைய்ய பக்தி பண்ணி, அவாளுக்கு இப்ப கார்த்திகை அமாவாசையில தான் அவாளுடைய கங்கை வந்துது  அவாளுக்குனு திருவிசைநல்லுர்ல அந்த உத்ஸவம் அவாளுக்கு.  அதுக்கப்பறம் ஸத்குரு ஸ்வாமிகள்வாள்னு மருதாநல்லூர்ல அதை அனுஷ்டானத்துக்கு கொண்டு வந்து, எப்பவும் அந்த உஞ்சவ்ருத்தி, உஞ்சவ்ருத்தி அதுக்கப்பறம்  பகவன் நாமா, அந்த கீர்த்தனைகள், அந்த உத்ஸவங்கள், அவாளுடைய போதேந்த்ராளுடைய பாதுகையை ஆராதனை பண்றதுன்னு, அந்த ஸம்ப்ரதாயத்துல, ஒரு க்ரமம் ஒண்ணு, மடம் ஒண்ணு, அதுலேர்ந்து, அந்த பகவன் நாம ஸித்தாந்ததுக்காகனுட்டு, போதேந்த்ராள் பிரதான ஆச்சார்யாளாகவும், ஐயாவாளும், அதுக்கப்பறம் அனுஷ்டான ஸத்குரு ஸ்வாமிகள், அப்படி ஒரு பரம்பரை. இந்த போதேந்த்ராள், ஐயாவாள், ஸத்குரு ஸ்வாமிகள், இவாளோட பேரோடதான் இந்த பஜனை பத்ததில பஜனை சொல்றப்ப, இவா மூணு பேருடைய  ஶ்லோகங்கள், மூணு பேருடைய கீர்த்தனைகள், இதெல்லாம் சொல்லிட்டு தான் எல்லோரும் பகவன் நாம பஜனை பண்றது, பஜனை பண்றதுங்கற  ஸம்ப்ரதாயமானது ஏற்பட்டு இருக்கு.

ஆகையினால நாக்கு இருக்கு. நாமம் இருக்கு. அப்பறம் பயம் ஏது?

வடக்க உத்தர தேஶத்துல இந்த பஜனைங்கறது, கிருஷ்ண சைதன்ய மஹா ப்ரபுனுட்டு அவர் வங்காளத்துலயும், ஒரிஸ்ஸாவிலயும், அந்த பஜனை பத்ததி ரொம்ப விசேஷமா அங்க ஏற்பட்டது. நம்ம தஷிண தேஶத்துல ஏற்பட்டது, போதேந்த்ராளுடைய அனுக்ரஹம், போதேந்த்ராள், ஐயாவாள் ஸத்குரு ஸ்வாமிகள், இந்த க்ரமத்துலேர்ந்து நம்ம தஷிண தேஶத்துல பஜனை சம்ப்ரதாயம் ஏற்பட்டிருக்கு. வடக்க இருக்கற அந்த பஜனை பத்ததிகளும் நாம் சேர்த்துக்கறது உண்டு,  அவாளும்  எல்லாம் பகவன்நாமா தானே. அதனால அவாளுடைய கிரமமும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்துண்டு பண்ணிண்டு இருக்கறது. கொஞ்சம் இதே மாதிரி பஜனை, அந்த மாதிரி பண்றது மகாராஷ்ட்ரத்துல அவாளும்  துக்காராம் அவாளெல்லாம் பஜனை பண்ணிண்டு இருந்திருக்கா. அங்கேர்ந்து உத்தர தேஶத்துல மீராபாய் பஜனை பண்ணிண்டு இருந்திருக்கா. அந்த சைதன்ய மஹா ப்ரபு தான் உத்தர தேஶத்துல நிறைய பஜனை பத்ததி ஏற்படுத்தி இருக்கார். அந்த வாசனை அடிச்சு தான் நம்ம தேஶத்துலயும், இங்கேர்ந்து பஜனை பத்ததினுட்டு, இருந்தாலும் ஸ்வதந்தரமா இவா ரெண்டு மூணு பேர் மஹான்கள், நம்ம தக்ஷிண தேஶத்துலேயே  அவதாரம் பண்ணி, அவா ஸன்யாசிகளா போதேந்த்ராள், க்ருஹஸ்தாளா ஐயாவாள், இவா பாகவத ஸம்ப்ரதாயமா ஸத்குரு ஸ்வாமிகள்வாள் அவா மூணு பேரும் இந்த மாதிரி ஏற்பாடு பண்ணியிருக்கா.

ஆகையினால பகவன் நாமாங்கிறது சுலபம் நமக்கு. எப்ப நாம வேணும்னாலும் அத  உபயோகப்படுத்திக்கலாம். நமக்கு ரொம்ப ஸுலபமான உபாயம். நம்ம மதத்துல எல்லாம் கஷ்டமா இருக்கே, கடினமா இருக்காப்பல இருக்கே, யோகம், யோகம், த்யானம், ப்ராணாயாமம்னு பெரிய கடினமானா இருக்கு நம்முடைய  மதத்துல அப்படீன்னு நமக்கு ஸந்தேஹமா இருந்ததானா, இதைக் காட்டிலும் ஸுலபமான வழியே கிடையாதுங்கறதும் நம்ம மதத்துலதான் இருக்கு. அதுனால எல்லாம் என்ன பிரயோஜனமோ அந்த பிரயோஜனம் இதுனால ஸுலபமா வந்துடும் அப்படினுட்டு.  ஆனா அதுகள்ல ஒரு அலக்ஷிய புத்தியா, அது தப்பு, இது தப்புனு,வெஸ்ஸிண்டு மாத்திரம் இருக்காதே. வெஸ்ஸா  இந்த நாமம் போய்டும். அப்படினுட்டு நாமத்துலேர்ந்து பகவதனுக்ரகம் வீணாபோயிடும். ஒண்ணையும் வையாதே நீ. அந்தந்த மார்கங்கள் சரி.  நமக்கென்னமோ நாம ரொம்ப அல்பம், நமக்கு இதுதான் னு ரொம்ப humble ஆ இருந்துக்கோ. அப்போ  உனக்கு,  இது உன்னை கடைத்தேறி விட்டுடும்.

அப்படீங்கற  அது தான் “நாம அபராதா: தச” னுட்டு “நாமாஸ்தீதி நிஷித்த கர்ம விஹித த்யாகோ” னுட்டு ஸத்கர்மாவை விடறது, கெட்ட கார்யத்தை செய்யறது இதெல்லாம் பண்லயா, பண்ணிடறேன்  நான், நாமா தான் இருக்கே அப்படின்னு அந்த எண்ணத்துக்கெல்லாம் அஹம்பாவத்தோட போகாதே. எல்லாத்துக்கும் அடி, கீழ் படியில இரு நீ. அதெல்லாம் அவாளெல்லாம் பெரிய மஹான்கள். குடுத்து வெச்சவா. நமக்கு கதியில்லையே, நாம இந்த வழியிலே போறோம் அப்படின்னு நினச்சுக்கோ நீ, அப்படீன்னுட்டு,

“அந்த மாதிரி எல்லாம் பகவன்நாமா தான். ஆரக்கண்டாலும் நாமாவைச் சொல்லிச் சொல்லிச் சொல்லி உன்னுடைய க்ஷேமத்தை அடை” அப்படிங்கற மார்கத்தை போதேந்த்ராள் உபதேஶம் பண்ணி அந்த மாதிரி அனுக்ரஹம் பண்ணி இருக்கா.

நம: பார்வதீ பதயே ஹர ஹர மஹாதேவா

மேற்கண்ட மஹா பெரியவாளின் உபதேசத்தைக் கேட்ட போது, நம் ஸ்வாமிகள் இதை ஒட்டியே பகவன் நாமத்தைப் பற்றி சொன்ன பல உயர்ந்த கருத்துக்கள் நினைவுக்கு வந்தது. அவற்றை பேசி இங்கே பதிவு செய்துள்ளேன்.

பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் (click on the link to hear the audio. Transcript given below as an article) இதையே ஒரு கட்டுரையாகவும் எழுதி உள்ளேன்

பகவன் நாம மஹிமை – மஹாபெரியவா உபதேசம் – ஸ்வாமிகள் விளக்கம்

“நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லு நா நமச்சிவாயவே னு, நாமத்தை சொல்லிண்டு இருந்தா போறும் னுட்டு, கோடி காட்டி இருக்கா பெரியவா எல்லாரும்” அப்படீன்னு ஆரம்பிச்சு மஹாபெரியவா நாம சித்தாந்தத்தை பத்தி ஒரு அஞ்சு நிமிஷம் பேசி இருக்கா. அது பிரம்ம ஸுத்ரம், நாரத பக்தி ஸுத்ரம் போல, நாம சித்தாந்தத்துக்கு ஒரு ஸுத்ர புஸ்தகம் மாதிரி இருக்கு. அப்படி ஒவ்வொரு வார்த்தையும் ரத்னமா இருக்கு. அதுல இருக்கற ஒவ்வொரு வரியையும் எடுத்து நாம நிறைய சிந்தனம் பண்ணலாம். மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள் “ஒவ்வொரு நாளும் ராத்திரி படுத்துக்கறதுக்கு முன்னாடி யாராவது ஒருத்தருக்கு ஒரு அஞ்சு நிமிஷம் பகவன் நாம மஹிமையை சொல்லிட்டு அப்பறம் தூங்கணும்” னு சொல்லி இருக்கார். அதனால நம்ம கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தினமும் பகவன் நாமத்தோட மஹிமையை சொல்வார். நிறைய சொல்லுவார். அதைக் கேட்டு கேட்டு கேட்டு, எனக்கு இந்த அஞ்சு நிமிஷத்துல மஹாபெரியவா சொன்னதுலேர்ந்து ஒவ்வொரு வரியையும் எடுத்து அதுக்கு ஸ்வாமிகள் சொன்ன விசேஷ அர்த்தங்களை சிந்தனம் பண்ணி, அது மூலமாக நமக்கு நாம பக்தி வருமான்னு நினைச்சு, அதைப்பேச ஆசைப் படறேன்.

“நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லு நா நமச்சிவாயவே” ங்கறது சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுடைய தேவாரம். சிவநாமத்துக்கு, நமசிவாய மந்த்ரத்துக்கு, தேவாரத்துல நிறைய பாட்டுகள் இருக்கு. “காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய் பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே” னு நாமத்தோட மஹிமையைப் பத்தி திருஞானசம்பந்தர் பாடி இருக்கார். “சொற்றுணை வேதியன் சோதிவானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சிவாயவே” அப்படினு  அப்பர் சுவாமிகளை கல் தூணிலே கட்டி, கடல்லே போட்ட போது கூட “என்னை நமசிவாயம் காப்பாத்தும்” னு சொல்லி, அந்த கல் தூண் கடலில் மிதந்து  அவரைக் கரை சேர்த்தது. அப்படி பகவானோட நாமம் ஆபத்துலேர்ந்து காப்பாத்தும், அப்படிங்கற மாதிரி பதிகங்கள் எல்லாம் இருக்கு.

மஹாபெரியவா நாமத்தைப் பத்தி சொல்ல வரும்போது, “நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லு நா நமச்சிவாயவே” அப்படிங்கற இந்த பதிகத்தை எடுத்து இருக்கா. ஏன்னா, இதுல emphasis என்னன்னா, நாமத்தை மனசு வெச்சு சொல்லணும், பக்தியோட சொல்லணும், அப்படிங்கறதெல்லாம் இல்லை. நாக்கு நாமத்தை சொன்னா போறும். இன்னொருத்தர் ஸ்வாமிகள் கிட்ட “ப்ராணாயாமம் பண்ணி மூச்சை அடக்கி நாம ஜபம் பண்ணினா தான் பலன்” அப்படின்னார். ஸ்வாமிகள் “எனக்கே ரொம்ப வயசு ஆயிடுத்து. என்னால அதெல்லாம் முடியலை. ஏதோ பெரியவா சொன்னதை நம்பி நான் நாமத்தை சொல்லிண்டு இருக்கேன்” அப்படின்னார். அது மாதிரி, அதெல்லாம் ஒண்ணும் வேண்டியதில்லை. நாம ஜபம் என்பது நாக்கு இருக்கு. நாமத்தை சொல்லணும். நம்பிக்கையோடு சொன்னா, பகவான் மனசுக்குள்ள வந்துடுவார் என்று அந்த emphasis குடுக்கறதுக்காக மஹாபெரியவா இந்த பதிகத்தை எடுத்து இருக்கா.

அப்பறம் பெரியவா, “மஹான்கள் இப்படி கோடி காண்பிச்சு இருக்கா, அதாவது hint குடுத்து இருக்கா. நாக்கு நாமத்தை சொல்லிண்டே இருந்தா போறும்னு, போதேந்தராள் நாமத்தை சொல்லிண்டே இருந்தா போறும்கிறதை ஒரு சித்தாந்தமாகவே பண்ணினார்” னு சொல்றார். போதேந்தராள் காஞ்சி காமகோடி பீடத்துல ஆசார்யாளாக இருந்தவர். அவர் சங்கர பாஷ்யங்கள் எல்லாம் படிச்சு, பக்தி பண்ணி, பகவான் கிட்ட பிரபத்தி பண்ணி, ஞானத்தை அடைஞ்சு, ப்ரம்ம ஸாக்ஷாத்காரம் அடைஞ்சு நிஷ்டையில இருக்கறவர். அப்படி நிஷ்டையில இருக்கறவர், ராம நாமத்தை சொல்லி, அந்த நாமத்துல ருசி ஏற்பட்டு, அதுல ஊறி ஊறி ஊறி அந்த அம்ருதத்தை பானம் பண்றது இதுக்கெல்லாம் மேலே. ராம நாமம்கிற அம்ருதத்தை பானம் பண்ணலைனா இதெல்லாம் ஒண்ணும் பிரயோஜனம் இல்லை, னு தீர்மானம் பண்ணி, அதுக்கு ஒரு லக்ஷம் ஸ்லோகங்கள் எழுதி நாம சித்தாந்தம் பண்ணி இருக்கார். அதை பெரியவா எடுத்து பேசறதுனால, மஹாபெரியவா அதை endorse பண்றா.

நம்ம ஸ்வாமிகள் சொல்வார், “மஹாபெரியவா மடாதிபதியா இருக்கறதுனால கர்மாநுஷ்டானம், பூஜை, பக்தி, ஞானம், சங்கரருடைய பாஷ்ய பாடம், எல்லாம் பண்றா. ஆனா அவர் மனசுக்குள்ள எப்பவும் ராம நாம தான். மஹாபெரியவா ஒரு மணி ஜபம் பண்றது கூட ராம நாமம் தான்னு நினைக்கிறேன். சன்யாசிகள் பிரணவ ஜபம் பண்றானு சொல்லுவா. என் நம்பிக்கை, அது ராம நாம ஜபம் தான். ஏன்னா சின்ன வயசுலேர்ந்து அவருக்குள்ள அந்த ராம நாம பக்தி இருக்கு. What life has taught me? னு Bhavan’s journal ல பெரியவாளைக் கேட்டு ஒரு article எழுதி இருக்கா. அதுல பெரியவா சொல்றா, “என்னை பதிமூணு வயசுல அம்மாகிட்டேர்ந்து தனியா ஒரு வண்டியில கூட்டிண்டு போகும் போது, வண்டி ஒட்டிண்டு வந்த அந்த மேஸ்த்ரி சொன்னார், “தம்பி, இனிமே நீ வீட்டுக்கு திரும்ப போக முடியாது. நீ மடத்துல சந்நியாசி ஆகப்போற. அம்மா அப்பாவெல்லாம் இனிமே பார்க்க முடியாது” னு சொன்னார். அப்ப எனக்கு இது என்ன புது திருப்பமா இருக்கேன்னு நினச்சு கலக்கமா இருந்தது. மீதி வழி முழுக்க “ராம ராம ராம ராம” னு சொல்லிண்டு இருந்தேன்” னு பெரியவா எழுதி இருக்கா. அப்படி அன்னிக்கு ஆரம்பிச்சு, எந்த ஒரு ஆபத்துலேர்ந்தும், எந்த பயத்துலேர்ந்தும், நம்மை காப்பாத்தறது ராம நாமம் என்று உணர்ந்து, அதிலிருந்து பெரியவா தினமும் ஒரு மணி நேரம் ராம நாம ஜபம் பண்ணி, எவ்வளவெல்லாம் தாண்டி வந்திருக்கா. ராம நாமம், எவ்வளவு ஆபத்திலேர்ந்து அவாளை காப்பாத்தி, அவருக்கு பூரண ஞானத்தை குடுத்தது! அப்படி ஒரு மணி நேர ராம நாம ஜபம் பண்ணினதுனால தான் அவா பெருமை மேலும் மேலும் வளர்ந்துண்டே போச்சு. அப்படி சித்தர்களுக்கெல்லாம் வழிகாட்டும் ஞானியா விளங்கினார்” எப்படின்னு ஸ்வாமிகள் சொல்வார்.

அடுத்தது பெரியவா “இந்த ரெண்டு நாமா, ரெண்டு எழுத்து இருக்கும்படியான ராம நாமாவோ சிவ நாமாவோ எதை வேணா வெச்சுக்கோ” னு சொல்றா. ஸ்ரீசேஷயோர்பேததீ: னுட்டு ஸ்ரீஷ: என்றால் ரமா பதியான விஷ்ணு பகவான். ஈச: என்றால் பரமேஸ்வரன். இவா ரெண்டு பேர்க்குள்ள பேத புத்தி இருக்க கூடாது. அது ஒரு நாம அபராதம். சிவ நாமமும் ராம நாமமும் ஒண்ணு தான். ஒனக்கு எதுல பக்தி ஏற்படறதோ, பிடித்தம் வரதோ, அதை நீ பண்ணு என்கிறதுக்காக “இந்த ரெண்டு நாமத்துல ஏதாவது ஒண்ணை வெச்சுக்கோ. இந்த ரெண்டு நாமமும் தாரகம்” அப்படினு சொல்றா.

தாரகம்னா “உன்னை தாண்ட விடறது, ஆபத்துலேர்ந்து தாண்ட விடறது, பாபத்துலேர்ந்து தாண்ட விடறது.” “ஆபத்துலேர்ந்து தாண்ட விட்டா போறாது நமக்கு.” அப்படிங்கிறார். ஆபத்துலேர்ந்து தாண்ட விடணம். ஆபத்துல இருக்கும் போது நம்மைப் போல எளியவர்களுக்கு ராமநாமம் சொல்லவே முடியாது. ஆனா ஆபத்துலேர்ந்து வெளில வந்தா நாம என்ன பண்றோம்? திரும்பியும் பாபத்துல போயிடறோம். அப்படி போகாமல் இருக்கறதுக்கு, இந்த நாமம் உன்னை பாபத்துலேர்ந்து தாண்டி விட்டுடும். என்ன ஒரு அழகான அர்த்தம்! பகவத்கீதையோட சாரம் highest point இந்த ஸ்லோகம்.

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் ஷரணம் வ்ரஜ |

அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: ||

அப்படின்னு பகவான் கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு வாக்கு குடுக்கறார். “நீ உன்னுடைய தர்மங்களை எல்லாம் விட்டவனாக இருக்கே. என்கிட்ட சரணாகதி பண்ணு. அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி, உன்னை உன்னுடைய எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிச்சுடறேன். காமமும் க்ரோதமும் நம்மை பாபத்துல தூண்டறது. அப்படி பாபியாக பாமரனாக இருக்கற வரைக்கும் துக்கம் தான். நரகம் தான். பாபத்துலேர்ந்து உன்னை விடுவிச்சா தான், தூய்மையில உயரும் போது தான் உனக்கு துக்கம்கிறது போகும், சந்துஷ்டி ஏற்படும் அப்படிங்கற ஒரு அழகான அர்த்தம் பெரியவா சொல்லி, நாமத்தை நம்பி நீ ஜபம் பண்ணிண்டே இருந்தா, பாபத்துல உன் புத்தி போகாமல் உன்னை நான் காப்பாத்தறேன், அப்படின்னு இதுக்கு அர்த்தம் சொல்லி இருக்கா. மா சுச: அப்ப தான் உனக்கு சோகம் போகும்.

இதை நான் ஸ்வாமிகள் கிட்ட நேரே பார்த்து இருக்கேன். அவருக்கு ஆபத்துக்கள் வந்துண்டே இருந்தது. அதெல்லாம் ஒண்ணும் சரியும் ஆகலை. ஆனா அவர் அதப்பத்தி கவலைப் படலை. ஏன்னா அவர் பாபத்துலேர்ந்து விடுபட்டு இருந்தார். எந்த ஒரு பாபமும் வராமல் இருக்கறத்துக்கு, அவர் சதா சர்வதா பகவத் பஜனம் பண்ணிண்டே இருந்தார். அந்த பஜனத்தை குரங்கு பிடியா பிடிச்சுண்டு இருந்ததுனால, அவர் புத்தி பாப வழியிலே போகலை, அதுனாலயே பகவானை நம்பி ஒரு விதமான கவலையும் இல்லாம இருந்தார். அவருக்கு பயமோ, சோகமோ, மோஹமோ எதுவுமே இருக்கலை. அப்படி பக்தினா என்னங்கிறதை காண்பிச்சு குடுத்தார். வைராக்ய ஞானம் வந்து பகவானையே அடைஞ்சார்.

அடுத்தது பெரியவா ஸ்ரீதர ஐயாவாளை ஸ்மரிக்கிரார். ஸ்ரீதர ஐயாவாள் ஆக்யாஷஷ்டி ங்கிற புஸ்தகத்துல சிவ நாமத்தைப் பத்தி ரொம்ப விசேஷமா சொல்லி இருக்கா. பெரியவா “அவாளும் நிறைய்ய பக்தி பண்ணி” அப்படின்னு சொல்றார். அப்படினா என்ன அர்த்தம்? சிவ நாமத்தை கோடி கணக்கா ஜபம் பண்ணி இருக்கார்னு அர்த்தம். அந்த சிவ நாம ஜபத்தோட மஹிமை எப்படின்னா, அவர் கடைசியிலே திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி முன்னாடி வந்து நமஸ்காரம் பண்ணி, ஒரு ஜோதி வடிவமாகி லிங்கத்துக்குள்ளே கலந்துடறார். உடம்பையே காணலை. அப்பேற்பட்ட மஹான். அவரை ஸ்மரிக்கறார்.

அடுத்தது மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள். இப்படி போதேந்த்ராள், ஐயாவாள், ஸத்குரு ஸ்வாமிகள் அவா மூணுபேர் அனுக்ரஹத்துல பஜனை பத்ததி ஏற்பட்டது அப்படிங்கறதை சொல்லும் போது “ஸததம் கீர்தயந்தோ மாம்” “போதயந்த: பரஸ்பரம்” னு மூலத்துலேயே “அப்பா, சொல்லிண்டு இரு. ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிண்டு இரு. பத்து பேரா சேர்ந்து கோஷ்டி கானம் பண்ணு.” னு சொல்லி இருக்கு அப்படிங்கறார். பெரியவா மூலத்துலேயேனு சொல்றது ஸ்ரீமத்பகவத்கீதையிலே. பகவத்கீதை பத்தாவது அத்யாயத்துல

“மச்சிதஹா மத்கதப்ரணாஹா போதயந்த: பரஸ்பரம் |

கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்திச்ச ரமந்தி ச ||

தேஷாம் ஸதத யுக்தானாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் |

ததாமி புத்தி யோகம்தம் ஏன மாம் உபயாந்தி தே ||

தேஷாமேவ அனு கம்பார்த்தம் அஹம் அஞ்ஞானஜம் தமஹ |

நாசயாமி ஆத்ம பாவஸ்தஹ ஞான தீபேன பாஸ்வதா ||

என்று இந்த 3 ஸ்லோகங்கள் 10-வது அத்தியாத்துல வர்றது.

இதோட அர்த்தம் என்னன்னா,

“மச்சிதாஹா” என்னிடத்தில் மனசை வைத்தவர்கள்

“மத்கதப்ரணாஹா” தன்னுடைய புலன்கள், உயிர் எல்லாமே எனக்காகவே வாழறவா.

“போதயந்த: பரஸ்பரம்:” என்னுடைய விஷயத்தையே ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிப்பா.

“கதயந்தச்ச மாம் நித்யம்” – என்னையே பேசிண்டு, மத்த உலக விஷயங்களை பேசாம

“துஷ்யந்திச்ச ரமந்தி ச” – இதிலேயே திருப்திபட்டுண்டு இதுலேயே சந்தோஷப் பட்டுண்டு, “கரும்பும் துவர்த்து செந்தேனும் புளித்து அறக்கைத்ததுவே” அப்படீன்னு அருணகிரிநாதர் சொல்றமாதிரி, உலக விஷயங்கள் எல்லாம் அவாளுக்கு புளிச்சு போயிடறது.

“தேஷாம் சதத யுக்தானாம்”ஆடும் பரிவேல் அணிசேவலென பாடும் பணியே பணியாய் அருள்வாய், அப்படி திருப்புகழை பாடிண்டே, பகவானோட கதையை பேசிண்டே இருக்கற அந்த பணி யாரு பண்றாளோ

“பஜதாம் ப்ரீதி பூர்வகம்”, பக்தியோடு என்னோட பஜனத்தை பண்ணுகிறவர்களுக்கு

“ததாமி புத்தி யோகம் தம் ஏன மாம் உபயாந்தி தே” – அவர்களுக்கு என்னை வந்து அடையும்படியான ஒரு புத்தி யோகத்தை நான் அளிக்கறேன்.

“தேஷாமேவ அனுகம்பார்த்தம்” அவர்களுக்கு மட்டுமே கருணையினால்

“அஹம் அஞ்ஞானஜம் தமஹ நாசயாமி” நான் அவர்களுடைய அஞ்ஞான இருளை போக்குகிறேன். எப்படி என்றால்

“ஆத்ம பாவஸ்தஹ” அவா மனசுல நான் குடியிருந்து,

“ஞான தீபேன பாஸ்வதா” ஞான தீபத்தை அவா மனசுல ஏத்தி வச்சு, அதனால அஞ்ஞான இருளை போக்குகிறேன்.

மஹா பெரியவா பகவத்கீதையை தினமும் பாராயணம் பண்றவா. அவா மனசுல எந்த ஸ்லோகம் வந்திருக்கு பாருங்கோ! அதுக்கு மேலே “ஸததம் கீர்தயந்தோ மாம்” “போதயந்த: பரஸ்பரம்” ங்கறதுக்கு நாம ஜபம், பஜனைங்கறது மஹாபெரியவா போன்ற மஹான்கள் தான் சொல்லுவா. ஸ்வாமிகள் சொல்வார். கீத ஞான யக்ஞ lecture பண்றவா வேதாந்திகள் எல்லாம் சொல்ல மாட்டா. பகவானை பாடிண்டே இருந்தா மனசுக்குள்ள பகவான் வந்துடுவான். மனசுல ஞான தீபத்தை ஏத்தி வெச்சு அக்ஞான இருளை போக்குவான். அதுவும் கருணையினால். அனுகம்பார்த்தம் னு சொல்லி இருக்கார் பகவான். கருணையினால் ஞானத்தை குடுத்துடுவேன் என்று சொல்லி இருப்பதால், மூலத்துலேயே இந்த basis இருக்கறதுனால, இந்த மூணு மஹான்கள் பஜனை மார்க்கம்னு ஒண்ணை உண்டாக்கினா அப்படின்னு சொல்றார்.

பெரியவா அதுல ஒரு ஜாக்ரதை பண்றார். “எதானு மருந்து சாப்படறதுக்கு, எதானு கொஞ்சம் ஒரு ஸஹாயம், ஒரு திதிப்பு கிதிப்பு குடுக்கற மாதிரி, பகவன்நாமாவுக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட இருந்தா, கொஞ்சம் சுலபமா பகவன்நாமாவை, நாம வந்து அந்த அம்ருதத்தை அனுபவிக்க முடியும்கிறத்துக்காக” கோஷ்டி பஜனை அப்படினு சொல்றார். உலக விஷயங்கள் விஷம். ஆனா நமக்கு ரொம்ப தேனா இனிக்கிறது. பகவன்நாமம் அம்ருதம். ஆனாஅதுல ருசி வர மாட்டேன்கிறது. அது கசக்கறது. கசப்பு மருந்துக்கு ஒரு திதிப்பு கிதிப்பு, தேன் சேர்த்து சாப்படற மாதிரி, இந்த பத்து பேரா சேர்ந்து கோஷ்டி கானம் பண்றது. சங்கங்கள் வெச்சு பஜனை பண்றது. இப்படியெல்லாம் கொஞ்சம் சாதகம் அதுக்கு. அது ஒரு crutch, ஊன்றுகோல் மாதிரி தான் நினைக்கணுமே தவிர அதில மாட்டிக்க கூடாதுங்கற warning பெரியவா சொல்றதுல இருக்கு. இன்னொரு இடத்துல வெளிப்படையாகவே பெரியவா “சாஸ்வதமான புண்ய கீர்த்தியை உடைய வியாசர், வால்மீகி அவாளோட ஸுக்திகளை பாராயணம் பண்றது, அதுவே ஒரு பெரிய ஸத்சங்கம்” அப்படின்னு சொல்லி இருக்கா.

கூடவே மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள் அவாளைச் சொல்லி, அவர் நாம சித்தாந்தத்தை அனுஷ்டானத்துக்கு கொண்டு வந்தார்னு சொல்றா. அந்த அனுஷ்டானம் என்னன்னா, ஸத்குரு ஸ்வாமிகள் “பக்தி சந்தேக த்வாந்த பாஸ்கரம்” னு ஒரு புஸ்தகம் எழுதி இருக்கார். அதுல, தினமும் கார்த்தால ஒரு லக்ஷம் ராம நாம ஜபம் பண்ணனும். கிட்டதட்ட ஆறு மணி நேரம் ஆகும். அதுக்கப்பறம் ஆஹாரம் பண்ணின பின்ன, ராமாயண பாகவத பாராயணம் பண்ணனும். சாயங்காலத்துல மஹான்களோட கிருதிகளை கொண்டு தீப பிரதக்ஷிணம், சம்பிரதாய ஹரி பஜனை பண்ணனும். ராத்திரி படுத்துக்கறதுக்கு முன்னாடி யாராவது ஒருத்தருக்கு ஒரு அஞ்சு நிமிஷம் பகவன் நாம மஹிமையை சொல்லிட்டு அப்பறம் தூங்கணும். இப்படி ஒருத்தர் பண்ணிண்டு வந்தா, அவர் மூணு வருஷத்துல ஜீவன் முக்தராக ஆகி விடுவார்னு சொல்லி இருக்கார். இதைத்தான் பெரியவா, போதேந்த்ராளுடைய நாம சித்தாந்தத்தை ஸத்குரு ஸ்வாமிகள் அனுஷ்டானத்துக்கு கொண்டு வந்தார் அப்படினு சொல்றா.

அதுல போதேந்த்ராளுடைய பாதுகையை ஆராதனை பண்றது, ஐயாவாள், நாராயண தீர்த்தர், ஜெயதேவர் இப்படி மஹான்களோட கீர்த்தனைகள், அந்த புஸ்தகங்கள், அதெல்லாம் கொண்டு ஒரு பஜனை பத்ததி ஏற்படுத்தினார். அந்த சம்ப்ரதாயத்துல, க்ரமம் ஒண்ணு, மடம் ஒண்ணு, அதுலேர்ந்து, பகவன் நாம சித்தாந்ததுக்காக ஏற்பட்டு இருக்குனு மஹாபெரியவா சொல்றா.

இங்க என் மனசுல ஒண்ணு தோணறது.

நாம இந்த மஹா பெரியவா அஞ்சு நிமிஷம் சொன்ன நாம சித்தாந்த ஸுத்ரத்தை மூலமாக வெச்சுண்டு, சிவன் சார் ஏணிப்படிகளில் மாந்தர்கள் புஸ்தகத்துல போதேந்த்ராள், ஐயாவாள், ஸத்குரு ஸ்வாமிகள், அப்பர், மாணிக்கவாசகர், இவாளோட சரித்ரத்தை எல்லாம் ரொம்ப அழகாக சொல்லி, “ராம நாமத்தின் அப்பேற்பட்ட மஹிமை உலகுக்கு உணர்த்த மனம் கொண்டார் மஹான்” அப்படின்னு போதேந்த்ராள் சரித்ரத்துல சொல்றார். “மௌனத்தை ஏற்றாலும் பகவன்நாமாவை உச்சரிப்பவர் மஹான்” அப்படின்னு நாம ஜபம்கிறது மஹான்கள் பண்ற விஷயம்னு காண்பிச்சு புரிய வெச்சுருக்கார். நம் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், வாழ்க்கை முழுக்க ராமாயண பாகவதம், நாம ஜபம்னு பஜன மார்கத்துல இருந்தா. இப்படி சன்யாசிகளா போதேந்த்ராள், க்ருஹஸ்தாளா ஐயாவாள், பாகவத சம்ப்ரதாயமா ஸத்குரு ஸ்வாமிகள்வாள் அவா மூணு பேர் அவதாரம் பண்ணின மாதிரி, நம் காலத்துல, மஹாபெரியவா, சிவன் சார், கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் இவா மும்மூர்த்திகள் நமக்காக அவதாரம் பண்ணி இருக்கா. இந்த மூணு பேரை நாம ஸ்மரிச்சுண்டு, முடிஞ்ச வரைக்கும் தனிமையில் பஜனம், நாம ஜபம் பண்ணலாம்னு தோணறது.

தற்கால ஸத்சங்கங்கள் ஓரளவு தான். அங்க இருக்கும் போது கண் ஜலம் வரது. முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய், பொரு புங்கவரும் புவியும் பரவும் குரு புங்கவ எண்குண பஞ்சரனே அப்படினு சொல்றார் அருணகிரி. நாம பண்ற ஸத்சங்கதுனால முருகன் குமரன் குகன் னு சொல்லும் போது, மனசு உருகறது ஜாஸ்தி ஆச்சுனா அந்த சங்கம் வெச்சுக்கணம். இல்லைனா தனிமையில் அந்த கந்தர் அனுபூதியை நிறைய ஆவர்த்தி பண்ணனும் அப்படிங்கற hint பெரியவா சொல்றதுல இருக்கு. ஒரு திதிப்பு கிதிப்பு சேர்த்துகற மாதிரி அப்படினு சொல்றா. அது மாதிரி நாமத்துல ருசி ஏற்பட்டு, அதுல ஊறி ஊறி ஊறி அந்த அம்ருதத்தை எப்போதும் பானம் பண்ணனும் கிறது தான் goal. அதை நோக்கி போயிண்டு இருக்கோமானு பாத்துக்கணம். அதுக்கு கூட்டிண்டு போறது தான் ஸத்சங்கம். அந்த ஞாபகம் இருக்கறதுக்கு நாம மஹாபெரியவா, சிவன் சார், கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் இவாள நினச்சுண்டோம்னா, இவா அடைஞ்ச நிலைமையை அடையறதுக்காக தான் நாம் நாம ஜபம் பண்றோம் அப்படிங்கற goal மறக்காம இருக்கும். யாராவது நம்மை ஸ்தோத்ரம் பண்ணினா கர்வம் வராது. நாமளே நூத்துக்கு முப்பது மார்க் வாங்கறோம். நம்மைவிட கம்மி மார்க் வாங்கறவன் நம்மை புகழ்ந்தா எதோ centum வாங்கின மாதிரி நினச்சுக்கறோம். இந்த மஹான்களை த்யானம் பண்ணினா, அப்படி கர்வப்பட்டு வழி தவறாம இருக்க, ஒரு ஹேதுவாக இருக்கும்.

ஆகையினால, நாக்கு இருக்கு. நாமம் இருக்கு. அப்பறம் பயம் ஏது? அப்படின்னு பெரியவா அபயம் குடுக்கறா. போதேந்த்ராள் சரித்ரத்துல ஒரு சம்பவம். ஒரு ஊமைப் பிள்ளைக்கு அவர் வாக்கு குடுக்கறார். ராமா னு சொல்லுனு சொல்றார். அவன் ராமானு சொல்றான். அப்பறம் பேச்சு வந்துடறது. அது ஏன்னா, இவனுக்கு நாமம் சொல்ல முடியாம இருக்கேன்னு போதேந்த்ரா ஸ்வாமிகளுக்கு கருணை ஏற்பட்டு, பகவான் கிட்ட வேண்டிண்டு அவனுக்கு அனுக்ரகம் பண்றார். நமக்கு நாக்கு இருக்கும் போது கவலை இல்லை. பயப்படவே வேண்டாம்.

கிம் வா பலதி மம அன்யை: பிம்பாதர சும்பி மந்தஹாஸ முகி |

சம்பாதகரி தமஸாம் அம்பா ஜாகர்தி மனஸி காமாக்ஷி னு

என் மனத்தில் மந்தஹாஸத்தோடு காமாக்ஷி அம்பாள் விளங்கும் போது எனக்கு மத்தவாளால என்ன ஆகப் போகிறது! என்று மூக கவி சொல்றா மாதிரி, காமம், கோபம், பயமெல்லாம் போகிற வரைக்கும் நாம ஜபத்தை விடாமல் பண்ணிண்டே இருக்கணும். நாமம் சொலறவனை எல்லாக் காலத்திலும், எல்லா இடத்திலும், எல்லாக் கோணத்திலும் பகவான் காப்பாற்றுகிறார் னு ஸ்வாமிகள் அடிக்கடி சொல்வார்.

அதுக்கப்பறம் மஹா பெரியவா கிருஷ்ண சைதன்ய மஹாப்ரபு, துகாராம், மீராபாய் அவாளை எல்லாம் ஸ்மரிக்கறா. அப்பேர்ப்பட்ட மஹான்களை ஸ்மரித்தாலே நமக்கு நாம பக்தி வந்துடும். அவாளை ஸ்மரித்தவுடன் பெரியவாளுக்கு கிருஷ்ண சைதன்ய மஹாப்ரபு பண்ணின சிக்ஷாஷ்டகம் ஞாபகம் வரது. நாம ரொம்ப humble ஆக இருக்கணும். அது தப்பு, இது தப்பு னுட்டு வெசுண்டு மாத்திரம் இருக்காதே. நீ லக்ஷம் நாமம் சொல்றது வெச்சுண்டுட்டா மத்ததை வையரதுக்கு நேரமே இருக்காதே. வெசா நாமத்துலேர்ந்து பகவதனுக்ரகம் வீணாபோயிடும் அப்படினு பெரியவா முக்கியமான ஒரு warning குடுக்கறா. இன்னிக்கு உலகம் இருக்கற தசையில, வியவஹாரங்களை விட்டுட்டு, ஒரு த்யாகம் பண்ணி, ஒருத்தர் ஒரு நல்ல கார்யம் பண்ணும் போது, அதை நாம ஏன் criticize பண்ணனும்? மத்த புண்ய கார்யங்களில் த்ரவ்ய தோஷம் முதலானது இருக்கும், நாம தனிமையில பஜனம் பண்ணனும் னு நினைச்சா அதை பண்ணிண்டே போ. ஒண்ணையும் வையாதே நீ. அந்தந்த மார்கத்துல அது சரி. நமக்கென்னமோ நாம ரொம்ப அல்பம், நமக்கு இதுதான் னு ரொம்ப humble ஆ இருந்துக்கோ. அப்போ இது உன்னை கடைத்தேறி விட்டுடும்.

த்ருணாதபி சுநீசேன தரோரபி ஸஹிஷ்ணுனா, அமானினா மானதேன கீர்தனீயஸ் ஸதா ஹரி: னு கிருஷ்ண சைதன்ய மஹாப்ரபு சிக்ஷாஷ்டகத்துல சொல்றார். த்ருணாதபி சுநீசேன – புல்லைக் காட்டிலும் அற்பமாக தன்னை நினைச்சுக்கணும். தரோரபி ஸஹிஷ்ணுனா – ஒரு மரத்தைக் காட்டிலும் பொறுமையா இருக்கணும். தன்னை வெட்டறவனுக்கு கூட மரம் பழங்களைக் குடுக்கிறது இல்லையா? அமானினா – கர்வப் படக்கூடாது. மானதேன – மத்த சாதுக்களை கௌரவிக்க வேண்டும். கீர்தனீயஸ் ஸதா ஹரி: – இப்படி இருந்துண்டு எப்பவும் ஹரி கீர்த்தனம் பண்ண வேண்டும்.

இங்கே “நாம அபராதா: தச” னு நாமத்துக்கு பண்ற பத்து அபராதங்கள் னு போதேந்திராள் சொல்லி இருக்கார். அதெல்லாம் தெரிஞ்சுண்டு அதை விலக்கி, நாம் நாம பக்தி பண்ணினோமான வெகு விரைவில் அனுக்ரஹம் கிடைக்கும். மூணு வருஷத்துல ஜீவன் முக்திங்கறது, இப்படி நாம அபராதங்களை விலக்கி இடையறாத நாம ஜபம் பண்ணினா கிடைக்கும். அந்த நாம அபராதங்கள் என்னனா

ஸந்நிந்தா – சாதுக்களை நிந்தனை பண்றது,

அஸதி நாம வைபவ கதா – அஸத்துக்கள் கிட்ட போய் நாம வைபவத்தை பேசறது.

ஸ்ரீசேஷயோர்பேததீ: – ஸ்ரீஷ: என்றால் ரமா பதியான விஷ்ணு பகவான். ஈச: என்றால் பரமேஸ்வரன். இவா ரெண்டு பேர்க்குள்ள பேத புத்தி பாராட்டறது.

அஷ்ரத்தா ஸ்ருதி சாஸ்த்ர தேசிக கிரௌ – ஸ்ருதி னா வேதங்கள், சாஸ்த்ரம்னா தர்ம சாஸ்திரங்கள்,  தேசிக கிரௌ  குரு சொன்ன வார்த்தை, அஷ்ரத்தா னா இதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கறது. இந்த மூணும் மூணு அபராதங்கள்.

நாம்னி அர்த்தவாத ப்ரம: ஏஷமே சர்வ தர்மாணாம் தர்மோதிகமதோ மத: | யத் பக்த்யா புன்டரீகாஷம் ஸ்தவை: அர்சேந் நர: ஸதா || நானறிந்த தர்மங்களிலே மிக சிறந்த தர்மம் – கமலக்கண்ணனை, அன்போடு, ரிஷிகள் எடுத்துக் கொடுத்துள்ள, ஆயிரம் நாமங்கள் கொண்ட இந்த ஸ்தோத்ரத்தை வாயினால் பாடி அர்ச்சனை செய்வதே, அப்படின்னு பீஷ்மாசார்யாள் சொல்ற வார்த்தையை “இதெல்லாம் அதிஷயோக்தி exaggeration அப்படின்னு நினைக்காதே. ஸத்யம்னு நம்பு. நம்பி நாம ஜபம் பண்ணணும். இன்னொருத்தர் வேற ஒரு புண்ய கார்யம் பண்ணலாம் வான்னு சொன்னா போகப்படாது. நீ நாம ஜபத்தையே பண்ணனும். நாம ஜபத்தின் மேல் அசையாத நம்பிக்கை இருந்தால், தான் விடாமல் பண்ண முடியும்.

“நாமாஸ்தீதி நிஷித்த கர்ம விஹித த்யாகோ” னுட்டு ஸத்கர்மாவை விடறது, கெட்ட கார்யத்தை செய்யறது, இதெல்லாம் பண்ணாதே. சந்த்யாவந்தனம், தர்ப்பணம், ஸ்ராத்தம் இதெல்லாம் கூட பண்ண வேண்டாம். பஜனை பண்ணினால் போதும் அப்படின்னு போகாதே. முடிஞ்ச வரைக்கும் நல்ல கார்யங்களை சத்கர்மாக்களை பண்ணு. நான் நாம ஜபம் பண்றேன் என்ன வேணா தப்பு பண்ணலாம் னு நினைக்காதே. விஷய சுகங்களை தோஷ புத்தியோடு அனுபவிச்சுண்டு, பக்தி பண்ணு. அப்ப அது உன்னை விட்டுடும்.

தர்மாந்தரை: ஸாம்யம் நாமநி – இன்னொரு தர்மத்துக்கு சமமாக நாம ஜபத்தை நினைக்காதே. இதுவே எல்லாத்துக்கும் மேலான தர்மம் அப்படிங்கற ஞாபகத்தோடு இரு.

சங்கரஸ்ய ச ஹரே: நாம அபராதா: தச. இது சிவ நாமத்துக்கு, ஹரி நாமத்துக்கு ஏற்படும் பத்து அபராதங்கள். இதை விலக்கிட்டு நாம ஜபம் பண்ணுங்கோ அப்படினு இந்த நாம அபராதா: தசங்கறதையும் பெரியவாஅந்த அஞ்சு நிமிஷ உபன்யாசதுல கொண்டு வந்துட்டா.

இந்த நாம அபராதத்தை பத்தி பேசும் போது, சேஷாத்ரி ஸ்வாமிகள் சரித்ரத்துல ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வரது. குழுமணி நாராயண சாஸ்த்ரிகள்னு ஒரு பெரியவர் தான், சேஷாத்ரி ஸ்வாமிகள் கிட்ட வினயமாக பழகி, விஷயங்களை க்ரஹிச்சுண்டு, அவருடைய சரித்ரத்தையும் உபதேசங்களையும் ஒரு புஸ்தகமாக எழுதி இருக்கார். ரமண பகவான் அந்த சரித்ரத்தை ரொம்ப கொண்டாடி இருக்கார். நாராயண சாஸ்த்ரிகள் அந்த புஸ்தகத்தில் தன்னை ரேணுனு குறிப்பிட்டுப்பார். பாத தூளினு அர்த்தம். சேஷாத்ரி சுவாமிகள் பலபேருக்கு ராம நாமம், நாராயண நாம ஜபம் உபதேசம் பண்ணி இருக்கார். இந்த நாராயண சாஸ்த்ரிகளுக்கும் ராம நாமத்தை உபதேசம் பண்ணி இருக்கார்.

ஒரு தடவை இவர் இந்த “நாம அபராதா: தச” பத்தி தெரிஞ்சுண்டு அந்த ஸ்லோகத்தை ஒரு பேப்பர்ல எழுதி தன்னோட பாகவத புஸ்தகத்துல வெச்சுண்டு, சேஷாத்ரி சுவாமிகள் கிட்ட வரார். அன்னிக்கு அவரோடு படுத்துக்கறார். அன்னிக்கு அவருக்கு ஒரு கனவு வரது. அதில் இவர் ராம நாம ஜபம் பண்ணிண்டு இருக்கார். சேஷாத்ரி ஸ்வாமிகள் இவரை ஒரு கத்தியால் வெட்ட வரார். இவர் பயப்படுகிறார். அப்போ ஸ்வாமிகள் “இப்படி தான் நாம ஜபம் பண்றதா?” அப்படின்னு கேட்டு விட்டு, அவர் உட்கார்ந்துண்டு, பட்ட கட்டை போல மணிக்கணக்காக ஜபம் செய்கிறார். சாஸ்த்ரிகள் முழிச்சுண்ட போது ரொம்ப ஆச்சர்யப் பட்டு, இது ஒரு உபதேசம்னு எடுத்துக் கொள்கிறார். அப்போ தன் பாகவத புஸ்தகத்தை எடுத்து பார்க்கும் போது, அந்த நாம அபராதா: தச எழுதி வெச்சுருந்த அந்த  பேப்பரை சேஷாத்ரி ஸ்வாமிகள் கிழிச்சு அதில் வெச்சுருக்கார். அப்போ இவர் “கத்தியால் வெட்டினாலும் தெரியாத அளவுக்கு லயிச்சு ராம நாம ஜபம் பண்ணினால் நாம அபராதம் பத்தி கூட கவலைப் பட வேண்டாம்” னு புரிஞ்சுண்டேன் னு எழுதி இருக்கார். இந்த நிகழ்ச்சியை படிக்கும் போது நம் ஸ்வாமிகள் ரொம்ப ரசிப்பார்.

கடைசில மஹா பெரியவா “நாம ஜபம் நமக்கு ரொம்ப சுலபமான உபாயம். எப்ப நாம வேணும்னாலும் அதை நாம உபயோகப்படுத்திக்கலாம். நம்ம மதத்துல எல்லாம் கஷ்டமா இருக்கே, கடினமா இருக்கே அப்படீன்னு சந்தேஹமா இருந்ததானா, இதைக் காட்டிலும் சுலபமான வழியே கிடையாதுங்கறதும், நம்ம மதத்துலதான் இருக்கு. அதுனால எல்லாம் என்ன பிரயோஜனமோ அந்த பிரயோஜனம் இதுனால சுலபமா வந்துடும்”னு சொல்றா.

ஒரு வாட்டி மஹா பெரியவா ரா ங்கிறது தான் மூலாதாரம். ம ங்கிறது சஹஸ்ராரம். ராம நாம ஜபம் தான் குண்டலினி யோகம் னு சொல்லி இருக்கா. ஸ்வாமிகள் ரொம்ப ஆச்சர்யப் பட்டு “இப்படி ஒரு ரஹஸ்யமான விஷயத்தை மஹா பெரியவா யாருக்கோ சொல்லி இருக்கா. நமக்கு இது தெரிஞ்சது, கிடைச்சது பெரிய பாக்யம். ராம நாம ஜபம் பண்ணு” னு சொல்வார்.

“அந்த மாதிரி எல்லாம் பகவன்நாமா தான். ஆரக்கண்டாலும் நாமாவைச் சொல்லிச் சொல்லிச் சொல்லி உன்னுடைய க்ஷேமத்தை அடை” அப்படிங்கற மார்கத்தை போதேந்த்ராள் உபதேசம் பண்ணி அனுக்ரஹம் பண்ணி இருக்கா” அப்படீன்னு முடிக்கறா பெரியவா. அந்த மார்கத்துல போய் க்ஷேமத்தை அடைஞ்ச ஒரு மஹான் நம்முடைய கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்.

கோவிந்த கோவிந்த ஹரே முராரே

கோவிந்த கோவிந்த முகுந்த கிருஷ்ணா

கோவிந்த கோவிந்த ரதாங்கபாணே

கோவிந்த தாமோதர மாதவேதி

ன்னு ஸ்வாமிகள் சொல்லும் போது அவருக்கு தொண்டை கத்கதமாகும். ஆனந்தகண்ணீர் பெருகும். மயிர்கூச்செறியும். அப்படி நாம ஜபத்தில் பேரானந்தத்தை கண்ட ஒரு மஹானை நாம தர்சனம் பண்ணி இருக்கோம். அவர் ராம நாம ஜபம் பண்ணுனு உபதேசம் பண்ணி இருக்கார்.

நாக்கு இருக்கு, ராம நாமம் இருக்கு! பயம் ஏதுங்கிற மஹாபெரியவா அபய வாக்கும் இருக்கு. ராம ராம, ராம ராம ராம ராம னுசொல்லிண்டே இருக்க வேண்டியது தான்.

ஜானகீ காந்த ஸ்மரணம்! ஜய ஜய ராம ராம!

7 replies on “‘Greatness of Bhagavan Nama’ explained by Mahaperiyava with commentary from Govinda Damodara Swamigal”

Namaste Rama Rama.,

So happy to see this talk which is so inspiring and prodding one to act. very important message by Mahaperiyava and very nicely explained with Swamigal’s thoughts (like Konar notes). Brilliant piece..

Today feels like a special day with these audios and completed well by today’s Gondavalekar’s Grid (27/04) message.

When I first heard of “oru mani japam” of Mahaperiyava there was so much desire to somehow start on the same. But there were so many personal troubles right from waking up, regularity etc etc..

But when I heard this (2 talks) for the first time was not able to stop hearing this for few days. Simply hearing has acted as a wake up call since then. Still a long way to go in terms of quality of the Japam, but HIS grace will not stop is my great hope. There will be times when Japam may flag (prakruthi), just going back to these talks will act as an encouragement is my great TRUST.

Thank you so much for all the effort to transcribe and making it a prominent post as it helps to do a silent reading when one cannot hear.

Dhanyosmi Dhanyosmi..

Regards
Sujatha.R

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே !ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!
இரண்டு எழுத்து ராம, சிவ
நாமத்தையும், நாவும் கொண்டு எந்த வித ஆபத்தையும் கடந்து விட முடியும்.
மஹா பெரியவாளின் ஒலியில் இந்த அறிவுரை எத்தனை தைரியம் கொடுக்கிறது.
ஸ்ரீ சுவாமிகள் நாம மகிமையை மிகவும் போற்றியுள்ளதையும், மஹா பெரியவாளின் உரையையும் மிக நுட்பமாக அலசி அளித்த அருமையான விளக்கம் செவிகளுக்கு அமுது.
ஸ்ரீ பகவன் நாம போதேந்த்ராள் ஆராதனை அன்று அவருடைய மிக விருப்பமான வழிபாடு முறையில் ராம நாமத்தை ஸ்மரிக்க செய்த தங்களுக்கு வணக்கம் 🙏

I always wondered if its ok to just saying Rama nama or Shiva nama without putting our mind/heart/soul into it. Thank you for clarifying that we can and should do atleast that.

I always wondered how the group bajans with lot of bells/whistles/pomp would help. Thank you for clarifying it doesn’t except it is better than watching TV!

I agree reading about some of the saints stories/poems/stotrams brings great tears that we cannot do in public during bhajans. I have felt that if i was the only one like lunatic getting ectastic thinking about some of these things. I remember how Udhava was asked to go and meet Gopikas by Krishna and how Udhava was clarified of certain points about devotion

Thank you

From one perspective, one gets less hopeful of relief after reading about Swamigal’s life as you described. You said His problems didn’t go away or get solved even though He did so many parayanams of all these great slokas. Is one to take that there is no solution for some of individual’s problem only resigned acceptance of effects of Karma?

Swamigal looked at his material life as a dream and didn’t get disturbed at all. So he went through his prarabhda as Guruvayoorappan prasadam. He didn’t ask for relief. Whereas to get devotees like me to get glued to bhajanam, he showed that the slokams will give relief from pains and bestow boons. (not instantaneously but when taken up as a daily duty and practiced with faith and constancy)

Leave a Reply to subbaraya Bhat.Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.