முகுந்தமாலா 7, 8 ஸ்லோகங்கள் பொருளுரை

Narakanthaka / Hrushikesha meaning controller of senses by Keshav

முகுந்தமாலா 7, 8 ஸ்லோகங்கள் பொருளுரை (14 minutes audio Meaning of Mukundamala slokams 7 and 8)

முகுந்தமாலா ஸ்தோத்திரத்துல ஆறு ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். நேத்திக்கு “நாஹம் வந்தே” அப்படீங்கிற ஸ்லோகத்துல ‘எனக்கு நரக வாதனை இருக்கக் கூடாது, சொர்க்க போகங்கள் வேணும், இல்லை, என்னுடைய ஆசா பாசங்கள் போகணும், இப்படியெல்லாம் எந்த ஒரு குறிக்கோளும் வெச்சுண்டு உன்கிட்ட நான் பக்தி பண்ணலை. ஹே முகுந்தா, என் மனக்கோவிலில் உன்னை எழுந்தருளப் பண்ணி உன்னை நினைச்சுண்டு உட்கார்ந்திருக்கிறதே எனக்கு பிடிச்சிருக்கு. இதுதான் எனக்கு ப்ரயோஜனமே. இந்த பக்தியினால எனக்கு வேற ஒண்ணு வேணும்னு நான் கேட்கவே இல்லை. உன்னை மறக்காம இருக்கிற ஒரு வரம் மட்டும் கொடு’, அப்படீன்னு கேட்டார். அதையே இன்னொரு வாட்டி reiterate பண்றார். இந்த ஏழாவது ஸ்லோகத்துல

नास्था धर्मे न वसुनिचये नैव कामोपभोगे
यद् भाव्यं तद् भवतु भगवन्पूर्वकर्मानुरूपम् ।
एतत्प्रार्थ्यं मम बहुमतं जन्मजन्मान्तरेऽपि
त्वत्पादाम्भोरुहयुगगता निश्चला भक्तिरस्तु ॥ ७ ॥

நாஸ்தா² த⁴ர்மே ந வஸுனிசயே நைவ காமோபபோ⁴கே³
யத்³ பா⁴வ்யம் தத்³ ப⁴வது ப⁴க³வன்பூர்வகர்மானுரூபம் ।
ஏதத்ப்ரார்த்²யம் மம ப³ஹுமதம் ஜன்மஜன்மாந்தரேऽபி
த்வத்பாதா³ம்போ⁴ருஹயுக³க³தா நிஶ்சலா ப⁴க்திரஸ்து ॥ 7 ॥

ன்னு அழகான ஒரு ஸ்லோகம். ‘நாஸ்தா தர்மே. ‘ந தர்மே ஆஸ்தா’ – ‘எனக்கு நிறைய தர்மம் பண்ணனும், புண்ணிய கார்யங்கள் பண்ணனும் என்பதில் ஈடுபாடில்லை. ஒரு அன்னதானம் பண்ணனும், கோ ஸம்ரக்ஷணை பண்ணனும். யாகங்கள் பண்ணனும். படிப்பு சொல்லி தரணும். ஸ்கூல் வைக்கணும். ஆஸ்பத்திரி வைக்கணும். அந்த மாதிரி நிறைய புண்யங்கள் பண்ணி எனக்கு நல்லபேர் வாங்கணும் என்கிற எண்ணம் இல்லை’, அப்படீங்கிறார். ‘ந வஸு நிசயே’ – நிறைய பணத்தை சேர்க்கறதுலயும் ஆசை இல்லை. ‘நைவ காமோபபோகே’ காம போகங்கள் அனுபவிக்கணும் அப்படீங்கறதுல ‘நைவ ஆஸ்தா; எனக்கு ஆசையே இல்லேங்கறார். அதை ஒரு stress பண்ணி ‘எனக்கு அதுல ஆசையே’ இல்லேங்கறார். எவ்ளோ பெரிய பாக்கியம், எவ்வளவு உத்தம பக்தர். ‘யத் யத் பவ்யம் பவது பகவன் பூர்வ கர்மானு ரூபம்’ என்னுடைய பூர்வ வினைப்படி தர்மார்த்தகாமங்கள் எல்லாம் எது எது வரணுமோ அது அது அந்த அந்த நேரத்துல வரட்டும்ங்கிறார். இந்த புருஷார்த்த சதுஷ்டயம் எல்லாம் பகவத் பக்தனுக்கு எந்த முயற்சியும் இல்லாமலே வரும். அவன் பாடுபட்டுத் தான் பணம் வரணும்கிறது இல்லை. அவன் முயற்சி பண்ணித் தான் புண்ணியத்தை தேடணும்ங்கிறது இல்லை. யாராவது வந்து கூட்டிண்டு போவா. ‘காமாக்ஷி கோயில் போறேன், வாங்கோ. வண்டியில ஏறிக்கோங்கோ’ ன்னு கூட்டிண்டு போவா. அப்படி அது நடக்கும் போது, இந்த பக்தனோட பெருமை என்னன்னா, அவன் அதை கொண்டு பெருமிதம் படமாட்டான். ஆஹா நான் இவ்ளோ சம்பாதிச்சேன், இவ்ளோ சுகப் பட்டேன். அல்லது இவ்ளோ புண்ணியம் பண்ணியிருக்கேன், அப்படீன்னு நினைக்க மாட்டான். குறையும் பட மாட்டான். என்னமோ நான் அவ்ளோ hardwork பண்ணேன். எனக்கு promotion கிடைக்க மாட்டேங்கிறதுன்னு குறையும் பட மாட்டான். அவன் மனசு, எப்படி ஒரு தாயாரோட மனசு எவ்ளோ வேலை பண்ணிண்டிருந்தாலும் குழந்தை கிட்டயே இருக்கோ, அந்த மாதிரி இந்த பக்தனுடைய மனசு பகவான் கிட்டயே இருக்கு. அதனால அவன் இந்த உலகத்தில் தர்மார்த்தகாமமோக்ஷங்கள்ல கிடைக்கறதை வெச்சுண்டு அவனோட பக்திக்கு அதைப் பிரயோஜனமா நினைச்சு அதை measure பண்ணவே மாட்டான். அவனுக்கு பகவானை தியானம் பண்றதுல கிடைக்கற சுகம், அதுவே போதுமாக இருக்கு. அதுனால தான் ‘எனக்கு வாழ்க்கையில நடக்கறது எல்லாம் நடக்கட்டும்’ ‘ஏதத் ப்ராத்யம்’ – ஆனா நான் ஒண்ணு வேண்டிக்கறேன். ஒண்ணுமே வேண்டிக்காம இருக்கியா? இல்ல, நான் ஒண்ணு வேண்டிக்கதான் போறேன். ‘ஏதத் ப்ராத்யம் மம பஹுமதம்’ நான் எதை ஒண்ணை பஹுமதமாக ரொம்ப முக்யமாக, பிரயோஜனமா நினைக்கிறேனோ அந்த ஒண்ணு நான் உன்கிட்ட பிரார்த்தனை பண்ணிக்கறேன். ‘ஜன்ம ஜன்மாந்திரரேஷு’ எத்தனை ஜன்மம் எடுத்தாலும் ‘த்வத் பாதாம்போருக யுக கதா’ – உன்னுடைய இரண்டு திருவடித் தாமரைகளில் ‘நிஸ்ச்சலா பக்திரஸ்து’. அசையாத பக்தியை எனக்கு கொடுன்னு கேட்கறார்.

இந்த பக்திங்கிறதும் ஞானம்ங்கிறதும் ஒண்ணுதான். நிரந்தரமான தியானம். அந்தரம்னா இடைவெளி. காலத்துலயோ தேசத்துலேயோ space லயோ timeல யோ இடைவெளி இல்லாமல் பகவானோட கலந்து இருக்கிறது, அந்த கிருஷ்ண த்யானத்துல தோய்ஞ்சு இருக்கிறது பக்தர்களோட ultimate goal ஆ இருக்கு. ஞானிகளுக்கு அந்த நிர்குண ப்ரம்மத்துல ஒடுங்கி உட்கார்ந்து இருக்கிறது அவாளோட ஒரு goal ஆக இருக்கு. இந்த இரண்டும் ஒண்ணா இருந்தாலும், உலகத்துல ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ருசி. எனக்கு இந்த ருசிங்கிற மாதிரி சொல்றார். எனக்கு நான் பக்தியை வேண்டிக்கறேன். இதுல என்ன போச்சுங்கிற மாதிரி, எனக்கு இந்த பக்தியை மட்டும் கொடுன்னு சொல்றார்.

ஞானிகளா இருக்கிறவாளே பக்தியைத் தான் வேண்டிக்கறா. ஏன்னா, அவா ஞானம் அடைஞ்ச பின்ன கூட, உலகத்துல எல்லாத்துலயும் கிருஷ்ணனை பார்க்க தெரிஞ்ச பின்ன கூட, அவா அந்த கிருஷ்ணனோட கதைகளைப் பேசிண்டு, அவனுடைய நாமத்தை ஜபிச்சுண்டு, அவன் ரூபத்தை தியானம் பண்ணிண்டு உட்கார்ந்திருக்கிறது தான் இருக்கறதுக்குள்ள safest. இந்த ஜன்மா கடைசி ஜன்மாவா இருக்கனுமேயானால் ஜாக்ரதையா இருக்கணும். திரும்பவும் போயி நாம அந்த சேத்துல விழுந்துடக் கூடாது எங்கிறதுல பெரிய பெரிய ஞானிகள் கூட அவ்ளோ ஜாக்ரதையா இருக்கா.

ஒரு நிகழ்ச்சி சொல்வா. ரமண பகவான் கிட்ட ஒரு ராணி ஒருத்தி ரொம்ப பக்தியா இருந்தா. அவ ஒரு வாட்டி இந்த cinema-scope, cinema மாதிரி ஏதோ ஒண்ணு கொண்டு வந்து போட்டு காண்பிச்சாளாம். ரமணர் பத்து நிமிஷம் பார்த்திண்டு இருந்தாராம். அப்புறம் வேற ஒரு cinema அடுத்த நாள் போட வந்தாளாம். அதுக்கு நடுவுல ஒரு பாட்டி ரமணர் கிட்ட வந்து நீங்க இந்த cinema ல்லாம் பார்க்கலாமா? வேண்டாமே’ அப்படீன்ன உடனே அவர் சரிம்மானுட்டாராம். அடுத்த நாள் அந்த ராணி இன்னிக்கு ஒரு documentary தான். அதை பார்க்கலாமே, அப்படீன்ன போது, ரமணர் ‘வேண்டாம்’ அப்படீங்கறார். அப்போ அந்த ராணி சொல்றா. ‘நீங்க எவ்ளோ பெரிய ஞானி. உங்களை இது போய் பாதிக்கப் போறதா?’ ன்ன உடனே ‘அப்படி நினைக்கக் கூடாது. யாரையும் பாதிக்கும். அதுனால நான் நெருப்போட விளையாடற விஷயத்துக்கே நான் வரலை. இது வேண்டாத சமாச்சாரம். எனக்கு வேண்டாம்’ ன்னு சொல்லிட்டு அவர் அவரோட புஸ்தகத்தை எடுத்துப் படிக்கறார்.

அப்படி பெரிய பெரிய மஹான்கள் எல்லாம் நடத்தி காண்பிச்சிருக்கா. ஸ்வாமிகளும் அப்படித்தான். எந்த modern gadgets கிட்டயே வர மாட்டார். newspaper, TV, எல்லாம் lifeல பார்த்ததே கிடையாது. அவர் சொல்வார். 1954ல அந்த மாதிரி எப்பவோ ஔவையார் னு ஒரு படம் பார்த்தேன். சுவாமி படம்னு friend கூட்டிண்டு போனான். ஆனா எனக்கு போறும்னு ஆயிடுத்து. அதுக்கப்புறம் நான் cinema வே பார்த்ததில்லை, அப்படீம்பார். ராமகிருஷ்ண பரமஹம்சர் கூட ‘பாத்திரத்தை தேய்ச்சு தேய்ச்சு வச்சாதான் பளிச்சுன்னு இருக்கும். அது மாதிரி நம்ம மனசை எந்த அழுக்கும் ஏறாம பாத்துக்கணும்’ என்பார். ராமகிருஷ்ணருக்கு கிடைக்காத பகவத் அனுபவமா. காளி தேவியினுடைய செல்லப் பிள்ளையா இருந்தார். அவர் தோத்தாபுரி கிட்டயிருந்து நிர்விகல்ப ஸமாதியை தெரிஞ்சுண்டார். ஸீதையா இருந்து ராமனைப் பார்த்தார். ராதையா இருந்து கிருஷ்ணனைப் பார்த்தார். அப்படி ஞானியா இருந்தவரே தினம் கார்த்தால எழுந்துண்டு ஹரிபோல், ஹரிபோல்னு சொல்லிண்டு வர்றவாள்கிட்ட பக்தியை பத்தி பேசிண்டு ஸாது சங்கத்துலயே இருந்துண்டு போயிட்டா. “ஏணிப்படிகளில் மாந்தர்கள்” புஸ்தகத்தைப் படிக்கும்போது எனக்கு அந்த மாதிரி தோணும். அவர் எதுக்காக இந்த புஸ்தகம் எழுதினார் அப்படீன்னா, நீ வந்து ஏதோ கொஞ்சம் நல்ல வழியில இருக்கேன் என்கிறதுனால, ‘நான் பக்தன் அல்லது நான் ஆத்ம விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சுண்டிருக்கேன்’, அப்படீன்னு நினைச்சுக்காதே. எவ்வளவோ dangers இருக்கு. கொஞ்சம் அஜாக்ரதையா இருந்தா கூட, ஏதோ ஒரு cricket தானே, cinemaதானே, politics தானே அப்படீன்னு அதை நீ பார்த்தேன்னா நீ பாமரன் அப்படீன்னு சொல்றார். அந்த 180 செய்யுள்ல படிச்சா பலவித warning இருக்கும். இதுல எதுல நீ கொஞ்சம் மனசை கொடுத்தாலும் பாமரனா போயிடுவ, ஜாக்ரதையா இரு. மஹான்ங்களோட சரித்ரத்தை படி. அவா எப்படி இதுல இருந்து விலகி தெய்வீகத்துலயும், ஆத்மீகத்துலயும் மூழ்கி இருந்தா அப்படீங்கிறதை அடிக்கடி சிந்தனை பண்ணனும், அப்படீங்கிறதுக்காகவே இரண்டாவது part ல ஞானிகளோட சரித்ரத்தை அப்படி அனுபவிச்சு எழுதியிருக்கார் அவர்.

இந்த உலகத்துல இருக்கிற கடைசி நாள் வரைக்கும் ஞானிகளுக்கும், பக்தர்களுக்கும், எல்லாருக்கும் அந்த உயர்ந்த ஸ்திதிங்கிறது natural ஆ பக்தியாதான் இருக்கு. அதனால அவா பக்தியை வேண்டி கடைசி நாள் வரைக்கும் அதுலயே இருந்துட்டு போயிடறா. எட்டாவது ஸ்லோகத்துலயும் அதைத் தான் கேட்கறார்.

दिवि वा भुवि वा ममास्तु वासो
नरके वा नरकान्तक प्रकामम् ।
अवधीरितशारदारविन्दौ
चरणौ ते मरणेऽपि चिन्तयामि ॥ ८ ॥

தி³வி வா பு⁴வி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக ப்ரகாமம் ।
அவதீ⁴ரிதஶாரதா³ரவிந்தௌ³
சரணௌ தே மரணேऽபி சிந்தயாமி ॥ 8 ॥

திவி ன்னா மேல் உலகம். புவி ன்னா இந்த உலகம். இந்த பூ உலகத்துலயோ இல்ல சொர்க்கத்துலயோ, இல்ல நரகத்துலயோ ப்ரகாமம்: எவ்ளோ நாள் வேணா நான் இருக்கேன். மமாஸ்து வாஸ: எத்தனை நாள் வேணாலும் நான் அங்க வஸிக்கறேன். எனக்கு அதுல ஒண்ணும் குறை இல்லை. எனக்கு வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான். என்னோட வாழ்க்கை சுகமா கழியணும்னு நான் எதிர்பார்க்கலை. என் வாழ்க்கையில கஷ்டங்கள் வரட்டும். இல்ல சுகங்கள் வரட்டும். எப்படி இந்த பூமியில வாழ்க்கையைத் தள்ளிண்டு இருந்தாலும் மரணேபி – கடைசி நாள் வரைக்கும் என்னுடைய மரணம் ஏற்படும் வரைக்கும் உன்னுடைய சரணாரவிந்தத்தை நான் சிந்தனை பண்ணனும். இது வேணும் எனக்குன்னு கேட்கறார். இந்த இடத்துல நரகாந்தக: அப்படீங்கிறதுக்கு நரகனை கொன்றவர் விஷ்ணு பகவான் சத்யபாமா தேவியைக் கொண்டு நரகனை கொன்றார். அதனாலதான் நாம நரக சதுர்தசி, தீபாவளி கொண்டாடறோம், அப்படீன்னு சாதாரண பொருள். இந்த ராகவானந்தர் வ்யாக்யானத்துல

‘நராணாம் கம், வைஷையிக சுகம், தஸ்ய அந்தம், அவஸானம் கரோதீதி நரகாந்தக:’

ன்னு ஒரு அழகான ஒரு அர்த்தம் போட்டு ‘நரர்களுடைய விஷயப் பற்றுகளைப் போக்கடித்து காப்பாற்றுபவன்’ ன்னு நரகாந்தக: என்கிறதுக்கு அழகான meaning சொல்லி இருக்கார். நரகனை சத்யபாமா வதம் பண்ணதுனால கிருஷ்ணனுக்கு நரகாந்தக: எங்கிறது அவ்ளோ பொருத்தம் இல்லை. அதனாலயும் இந்த அர்த்தம் அவ்ளோ பொருத்தமா இருக்கு. “தேஷாமகம் ஸமுத்தார்த்தா ம்ருத்யு ஸம்சாரசாகராத்” அப்படீன்னு ம்ருத்யு சம்ஸார ஸாகரத்துல இருந்து அவாளை கை தூக்கி விடுவேன். உலக பற்றுகள்லயிருந்து, விஷய பற்றுகள்லேயிருந்து அவாளை காப்பாத்துவேன்னு கீதையில கிருஷ்ணன் சொல்லியிருக்கார். அதைக் கொண்டு இந்த நரகாந்தக: என்கிறதுக்கு அழகான அர்த்தம் சொல்றார். ‘அவதீரித சாரதாரவிந்த:’ ன்னா சரத் காலத்தில் தாமரைப் பூ ரொம்ப அழகா இருக்கும். நிறைய இதழ்களோட ரொம்ப அழகா மலர்ந்திருக்கும். அதோட அழகை தோற்கடிக்கும்படியான பாதங்கள் என்று தாமரைப் பூவை தோற்கடிக்கக் கூடிய அவ்ளோ அழகு மிகுந்த உன்னுடைய இரண்டு சரணாரவிந்தங்களை நான் உயிர் போற வரைக்கும் தியானம் பண்ணிண்டே இருக்கணும்னு ஒரு பிரார்த்தனை பண்றார்.

அப்படி பக்தி பண்ணும்போது ‘இதுனால materiel ஆகவோ spiritual ஆகவோ நான் முன்னேறிண்டு இருக்கேனா’ ன்னு பார்க்க வேண்டாம். எனக்கு பக்தி பண்ணதுனால மோக்ஷம் வேணும்னு நினைக்கறது கூட frustration வரும். குருவை தியானம் பண்ணிண்டு இருந்தா அதுல கிடைக்கற சந்தோஷத்தை விட ‘நான் குருவாவே ஆகணும்’ அப்படீன்னு நினைச்சு ‘அவர் மாதிரி நான் இல்லையே, எனக்கு ரொம்ப குறைபாடுகள் இருக்கே’ அப்படீன்னு வருந்திண்டே இருந்தா என்ன பிரயோஜனம்? ‘குருவோட மஹிமை அபாரம். அதை நினைச்சு நினைச்சு நாம சந்தோஷப் படலாம். மத்ததை அவர் பார்த்துப்பார்’ னு வெச்சுண்டா இருக்கிற காலம் ஆனந்தமா இருக்கும். அந்த மாதிரி கிருஷ்ண பக்தி, ராமாயணம், அப்படி எந்த பஜனத்தில் நம்ம மனசு ரமிச்சுண்டு இருக்க முடியுமோ அதைப் பண்ணினா குறையே இருக்காது. பக்தி பண்ணி குறைபடாம இருக்கலாம். அதைத் தான் குலசேகர கவி சொல்றார். நாளைக்கு அடுத்த இரண்டு ஸ்லோகம் பார்ப்போம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்….கோவிந்தா கோவிந்தா

Series Navigation<< முகுந்தமாலா 5, 6 ஸ்லோகங்கள் பொருளுரைமுகுந்தமாலா 9, 10 ஸ்லோகங்கள் பொருளுரை >>
Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.