Categories
Mukunda Mala

முகுந்தமாலா 19, 20 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 19, 20 ஸ்லோகங்கள் பொருளுரை (19 minutes audio Meaning of Mukundamala slokams 19 and 20)

முகுந்தமாலைல நேத்தி ஒரு அழகான ஸ்லோகம் பார்த்தோம்.

वात्सल्यादभयप्रदानसमयात् आर्तार्तिनिर्वापणात्

औदार्यादगशोषनात् अगनितश्रेयपदप्रापणा त् |

सेव्य: श्रीपतिरेव एव सततं सन्त्यत्र षड्साक्षिण:

प्रह्लादश्च विभीषणश्च करिराट् पाञ्चाल्यहल्या ध्रुव: ||

வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத்

ஔதார்யாத் அகஷோஷனாத் அகணிதஷ்ரேயபதப்ராபணாத் |

ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:

ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||

ன்னு பகவானுடைய ஆறு குணங்கள். வாத்ஸல்யம், அபயப்ரதானம், ஆர்த்தார்த்தி நிர்வாபணம், கஷ்டப்படறவாளோட துக்கத்தைப் போக்கறது, ஓளதார்யம் – தயாளகுணம், அகஷோஷணம் பாபங்களைப் போக்குவது, அகணித ஸ்ரேய: பதப்ராபணம் – நினைக்க முடியாத உயர்ந்த பதவியை அருளுவது இப்பேற்பட்ட குணங்கள் கொண்டவன் பகவான். அதற்கு ப்ரஹலாதனும், விபீஷணனும், கஜேந்திரனும், பாஞ்சாலியும், அகல்யாவும், த்ருவனும் முறையே சாக்ஷி, அதனால அப்பேற்பட்ட அந்த ஸ்ரீயப்பதியான ஸ்ரீமன் நாராயணனையே நாம் சேவிக்க வேண்டும், வேறுஒரு மனிதர்களை போய் சேவிக்கக் கூடாது அப்படிங்கிற ஸ்லோகத்தை நேத்தி பார்த்தோம். எனக்கு இந்த ஒவ்வொரு குணத்தை பார்த்த போது, இந்த பகவானோட குணங்கள் அப்படீன்னு, இங்க குலசேகர ஆழ்வார் சொல்றதெல்லாம் நம்ம மஹா பெரியவா கிட்டயும் இருந்தது அப்படீன்னு தோணித்து.

மஹா பெரியவாளோட நேரா பழகினவா சொன்ன அனுபவங்கள் எல்லாம் கேட்கற பாக்கியம் நமக்கு இந்த கடந்த பத்து வருஷங்களா நிறைய கிடைச்சுருக்கு.

அபயப்ரதானம் – அப்படீங்கிறதுக்கு, சுந்தரராமன் ன்னு ஒருத்தர், அவர் இப்போ பெரியாவா கிட்டயே போய் சேர்ந்துட்டார், அவருடைய சின்ன வயசுல பதினஞ்சு வயசுல, அவர் பத்தாவதுல நல்ல mark வாங்கி pass பண்றார். அவர் அப்பா பெரியவாளுக்கு கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கார், உள்கட்டு, பூஜை எல்லாம் பாத்துக்குறார். பெரியவாளுக்கு பிக்ஷை பண்றது, ஸ்வாமி நைவேத்தியம் பண்றதுங்கறது எல்லாம் பண்ணிண்டு இருக்கார். அவரோட பிள்ளை இந்த சுந்தரராமன், இவருக்கு பெரியவா கிட்ட தனிச் சலுகை. பெரியவாளும் இவர் கிட்ட ரொம்ப நெருக்கமா, கருணையோட இருந்ததுண்டு இருக்கா. இவர் பத்தாவது முடிச்ச உடனே, “மேல என்ன பண்ண போற?”ன்னு பெரியவா கேட்கறா, “ஏதாவது வேலைக்கு போகணும் பெரியவா” அப்படீன்னு சொன்ன போது, “மேல நீ படி” அப்படீன்னு சொல்றா பெரியவா, எப்படி நான் படிப்பேன்ன போது, பெரியவா “நீ ஏன் இவ்ளோ பயப்படறே?” அப்படீன்னு கேட்கறா. “நீ மேல படி” அப்படீன்னு பெரியவாளே சிதம்பரம் college-ல seat வாங்கி கொடுத்து, சிதம்பரத்துல ஆறு பேர்கிட்ட, ‘வாரத்துக்கு ஒரு நாள் இந்த கொழந்தை வருவான் சாப்பாடு போடுங்கோ’ அப்படீன்னு, அவருடைய சாப்பாடுக்கு ஏற்பாடு பண்ணி, கை செலவுக்கு ஒரு முதலியார் கிட்ட சொல்லி அதுக்கு பணம் வாங்கி கொடுத்து, அப்படி அந்த குழந்தயை படிக்க வைக்கறார், அவன் படிச்சு நன்னா வந்து சௌக்யமா இருந்தான்ங்கறது தவிர, அந்த வயசுல வந்து என்ன ஆகுமோ, நமக்கு வாழ்க்கைல அப்படிங்கற அந்த பயம், அந்த பயத்தை பெரியவா போக்கினா. அவர் சொல்றார் “பெரியவா அன்னிக்கி ஸ்நானம் பண்றதுக்கு, போகும் போது “ஏன் நீ பயப்படறே? நன்னா நீ மேல படி, நான் உனக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணி தரேன், என் மேல் உனக்கு நம்பிக்கை இருக்கோல்லியோ?” அப்படீன்னு கேட்கறார், “இருக்கு பெரியவா” அப்படீன்ன ஒடனே. “நான் உன்னை படிக்க வெக்கறேன்” அப்படீன்னு பெரியவா சொல்றா. அந்த மாதிரி படிக்க வைக்கறா. அந்த மாதிரி கடந்த அம்பது, நூறு வருஷங்கள்ல, சாதுக்களா இருக்கறவாளுக்கு, நம்ம நல்ல வழியில இருக்கணுமே அப்படீன்னு பயப்படறவா எல்லாருக்கும் மஹாபெரியவா, அபயம் கொடுத்து “நீ நல்ல வழியில போ, நீ பயப்படாதே” ன்னு அந்த அபயம் கொடுத்தா.

I lived with God – ABSOLUTELY A MUST READ

ஆர்த்தார்த்தி நிர்வாபணாத் – கஷ்டப் படரவாளோட துக்கத்தை பெரியவா துடைச்சது, நிறைய நாம கேட்கறோம். முக்கால்வாசி பெரியவா அனுபவங்கள் சொல்றவாள் எல்லாமே, இந்த மாதிரி பெரியவாட்ட போய் ஏதோ X-RAY எடுத்தா கருப்பா நிழல் தெரியரதுங்கறான் பெரியவா, பயமா இருக்கு பெரியவா, அப்படீன்ன போது, “நீ பயப்படாதே, இந்தா” அப்படீன்னு ப்ரசாதம் கொடுத்தா, “இந்த எலுமிச்சை பழத்தை பிழிஞ்சு சாப்பிடு” அப்படீன்னு சொன்னா, ஆத்துக்கு வந்து பார்த்தா, அந்த கருப்பு நிழல்எல்லாம் இருக்காது. நேத்தி ‘operation’னு சொன்ன டாக்டர், இன்னிக்கி ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். ஏதோ மாத்திரை சாப்பிடுங்கோ’ அப்படீன்னு சொல்லுவா, அந்த மாதிரி பெரியவா வந்து, கஷ்டத்தை துயர் துடைக்கறதுங்கறது பெரியவாதான்.

நூறு வருஷம் அப்படி வந்தவாளை எல்லாம் கேட்டு கேட்டு ஆறுதல் சொல்லி இருக்கா. பொண்ணு பெரியவளா ஆகமாட்டேங்கற ரொம்ப வயசாயிண்டே போறதுன்னா, செம்பரத்தம் பூவை அரைச்சு பால்ல போட்டு கொடு, அப்படீன்னு சொல்லுவா. இப்படி என்ன கஷ்டங்கள் சொன்னாலும், ஆத்துல மாடு கன்னு போடறதுக்கு ஸ்ரமபடறதுன்னா கூட, பெரியவா ஆசீர்வாதம் பண்ணுவா சரியா போயிடும். அப்படி ஒவ்வொரு ஜனங்களோட கஷ்ட நஷ்டங்கள்ல பங்கு எடுத்து, எல்லா துக்கத்துக்கும் நிவர்த்தி கொடுத்து, அப்படி அந்த ஆர்த்தார்த்தி நிர்வாபணம்ங்கறதுதான் பெரியவா அவ்ளோ பண்ணியிருக்கா.

ஓளதார்யம் – அப்படிங்கறது, தாராள குணம். பெரியவாளை நமஸ்காரம் பண்ணி, நல்ல நிலைமைக்கு வந்தவா எத்தனையோ பேர். நெறய பேர் சொல்லலாம். லக்ஷ்மி நாராயணன்ங்கற மாமா, ரொம்ப சாப்பாட்டுக்கே கஷ்டப் பட்டுண்டு இருக்கார், அப்போ பெரியவா கனகதாரா ஸ்தோத்ரம் படின்னு சொல்லி, அதை படிச்ச பின்ன நல்ல சௌக்யமா, நெறய பணம் வந்து, மாம்பலத்துல ஒரு தெருவுல இருக்கற எல்லா வீட்டையும் நான் வாங்கிட்டேங்கறார் , அவ்வளவு செல்வம் வந்தது. அப்படி பெரியவாளை நமஸ்காரம் பண்ணவாளுக்கு, காமாக்ஷியைப் போல படிப்பையும், பணத்தையும் வாரி வாரி கொடுத்து இருந்தா.

ஆகஷோஷனாத் – பாபத்தை பெரியவா துடைச்சா அப்படீங்கறத்துக்கு, மஹா பெரியவா இருந்த காலத்துல தான் ரொம்ப நம்ம மதத்துக்கு ஹானி பண்ண கூடிய பலவிதமான கார்யங்கள் எல்லாம் பண்ணிண்டு இருந்தா. அரசியல்வாதிகளும் சரி, இந்த பத்திரிக்கைக்காராளும் சரி, சினிமாகாராளும் சரி ஆனா, பெரியவா கோச்சுண்டு இருந்தா என்ன ஆகியிருக்கும், ‘சாது மிரண்டால் காடு கொள்ளாதுங்கற மாதிரி – பெரியவா கோச்சுக்காம பொறுமையா இருந்து, அவாளே திருந்தி வந்து நமஸ்காரம் பண்ணின போது, அந்த பாபத்தை போக்கி, தன்னுடைய தபஸ்னால அவாளை நல்வழி படுத்திண்டே இருந்தார். சில பேர் பெரியவா கிட்ட வந்து, “அவன் பிள்ளையாருக்கு செருப்பு மாலை போட்டான், நானும் அவன் சிலைக்கு செருப்பு மாலை போட போறேன்”, அப்படீன்னு ஒருத்தர் வந்து சொல்றார். “அவாளை மாதிரி நம்ம இருக்கலாமாடா, நீ பொறுமையா இரு” பெரியவா அவ்வளோ பண்ண பாபத்தை எல்லாம் பொறுத்துண்டு, இன்னிக்கி நம்முடைய மதம், ஆஸ்திகம் இன்னிக்கு இவ்ளோ தூரம் வ்ருத்தி ஆகி இருக்குன்னா, பெரியவாளோட அந்த பாபத்தை தன்னுடைய தபஸுனால மன்னித்து அருளின அந்த குணத்துனால தான்.

அகணித ஸ்ரேய: பதப்ராபணாத் – ன்னு, நினைச்சு பார்க்க முடியாத உயர்ந்த பதவியை பெரியவா கொடுப்பா அப்படீங்கற வார்த்தைக்கு, இப்போ அஹோபில மடத்துல ஜீயரா இருக்காரே அவர் ஒரு உதாரணம். நிறைய பேர் உதாரணம். TV ஸ்வாமிநாதன் அப்படீன்னு ஒருத்தர். அவர் பெரியவாகிட்ட கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கார், இருபது வயசுல. பெரியவா கிட்ட யாரோ வந்து ;இங்க வரவா எல்லாம் collector-ன்னு நினைச்சிக்கிறா, எங்களை போட்டு விரட்டறா’ அப்படீன்னு ஒரு சிப்பந்தி சொல்றார். பெரியவா இந்த ஸ்வாமிநாதனை காண்பிச்சு, “collector-ன்னா கெடுபுடி பண்ணுவா தாட் பூட் பண்ணுவான்னு நினைக்கிறியா, இவனை மாதிரிதான் இருப்பா’ அப்படீங்கறா. “நீ collector-தானே’ அப்படீங்கறா, இவர் ‘நான் collector-ஆ? IAS பரிக்ஷை எழுதற வயசே எனக்கு தாண்டிடுத்து பெரியவா’, அப்படீங்கறார் அந்த ஸ்வாமிநாதன்.

‘ஓ சரி’ ங்கறா பெரியவா. அடுத்த நாள் பத்திரிகைல, IAS பரிக்ஷைக்கு வயசு கூட்டி இருக்கா, IAS officers நிறைய இல்லைங்கறதுனால, IAS பரிக்ஷை இருபத்திரண்டு வயசு வரைக்கும் எழுதலாம். யார்லாம் வேணுமோ application form கொடுங்கோ அப்படீன்னு சொல்லி, பெரியவா இதை பாரு form போடு, அவர் அதை வந்து சட்டை பண்ணல, நமக்கு என்னத்துக்கு IAS அப்படீன்னு நினைக்கிறார் ஸ்வாமிநாதன், அப்போ Delhi-லேருந்து C.S. ராமச்சந்திரன்னு ஒருத்தர் வரார், அவர் கிட்ட “இந்த பையன் collector பரிக்ஷை எழுத போறான், நீ போய் அவன்கிட்ட form வாங்கிக்கோ”, அப்படீன்னு அவர் கையால formஅ fill பண்ண வெச்சு அதை வாங்கிண்டு போய், அவர் collector-ஆகி, அப்பறம் அம்பது வருஷம் கேரளால இருந்து, அவரை முதல்ல பீகார்ல போடறா, பெரியவா “நம்முடைய ஆச்சார்யாள் அவதாரம் பண்ண கேரள தேசத்துல நீ இருந்தேன்னா, நன்னா இருக்குமேனு நினைச்சேன்” அப்படீன்னு பெரியவா சொல்றா. உடனே அடுத்த வாரம் order மாத்தி அவரை கேரளால போட்டுடறா. கேரளால இருந்ததுண்டு, மடத்துக்கு நெறய service பண்ணி இருக்கார் இந்த ஸ்வாமிநாதன். அந்த மாதிரி பெரியவா, collector பதவி கொடுத்தா.

இப்ப அஹோபில மடத்துல ஜீயரா இருக்கிறவர், சின்ன வயசுல பெரியவா தான் அவரை வேதம் படிக்க வச்சு, அவரைத் தானே சமைச்சுக்க சொல்லி, நல்ல ஆசாரங்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்து, அவர் foreign போறதுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கார், பெரியவாகிட்ட வந்து சொல்லக்கூட இல்லை, நமஸ்காரம் பண்ண உடனே, ‘நீ வெளிநாடு போகாதே. ரொம்ப உனக்கு ஸ்ரேயஸ் காத்துண்டு இருக்கு, இவ்ளோ ஆசாரமா இருக்க, இவ்ளோ படிச்சு இருக்க’, அவர் உபாத்யாயத்துக்கு போறேன்-ன்ன போது வேண்டாம், நீ வேதத்துக்கு மேல சாஸ்திரங்கள் எல்லாம் படி, வேதத்தின்னுடைய பாஷ்யங்கள் எல்லாம் படி, அப்படீன்னு நெறய பெரியவா stipend கொடுத்து படிக்க வச்சு, foreign போறதைத் தடுத்து, அவர் இன்னிக்கி ஜீயராக இருக்கார். அந்த அஹோபில மடம் ஜீயர் என்கறது, வைஷ்ணவாளுக்கு ரொம்ப ஒரு உயர்ந்த ஆசார்ய ஸ்தானம், அந்த மாதிரி அவர் அந்த பதவியை அலங்கரிக்கிறார், இவருக்கு சன்யாசம் கொடுத்து இவரை ஜீயர் ஆக்கறத்துக்கு முன்னாடி, அவரோட குரு சொன்னாராம், ‘நீ அந்த மஹாபெரியவா மாதிரி ஒரு தேஜஸோட விளங்கணும்’ அப்படி எல்லாரும் பெரியவாள் கிட்ட பக்தியா இருந்து இருக்கா. அப்படி ‘அகணித ஸ்ரேய: பதப்ராபணாத்’ அப்படீங்கறது பெரியவா நிறைய பேருக்கு பண்ணி இருக்கா.  நமஸ்காரம் பண்ணவாளை அம்பாள், மஹாசாம்ராஜ்ய தாயினின்னு சொல்றா மாதிரி, பெரியவா எவ்ளோ பேர ராஜாவா ஆக்கி இருக்கா. R. வெங்கடராமன் ஜனாதிபதி ஆனார். பெரியவா பக்தர். அப்படி எத்தனையோ பேருக்கு உயர்ந்த பதவிகள் குடுத்துருக்கா.

இந்த “வாத்ஸல்யாத்” அப்படின்னு முதல்ல ப்ரஹலாதன் கிட்ட வாத்ஸல்யத்த காண்பிச்சார் அப்படீங்கற போல எனக்கு பெரியவா உண்மையான வாத்ஸல்யத்தை யார்கிட்ட காண்பிச்சார்ன்னா, கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் கிட்ட காண்பிச்சார்.

வாத்ஸல்யம்கறது என்ன? ப்ரஹலாதன் படாத கஷ்டமா? அவன நெருப்புல தள்ளினா, மலையிலேர்ந்து உருட்டினா, விஷத்த குடுத்தா. அதெல்லாம் ஒண்ணும் பண்ணாம, அதுலேர்ந்து எல்லாம் மீண்டு வந்து, அந்த ப்ரஹல்லாதனுக்கு நரசிம்ஹரா அவதாரம் பண்ணி, அனுக்ரஹம் பண்ணினார்.

அந்த மாதிரி ஸ்வாமிகள், இந்த கலிப் ப்ரவாஹத்த தடுத்துண்டு, இந்த கலிதான் ஹிராண்யகசிபு மாதிரி அவருக்கு மேலும் மேலும் கஷ்டங்கள குடுத்துது. உண்மையான பக்தி பண்ணிண்டு, ஒரு நேர்மையா இருக்கணும்னு தான் இருந்தார். அவருக்கு அவ்வளவு இடைஞ்சல்கள் வந்துது. ஆனா, அவர் கொஞ்சம்கூட தன்னோட கொள்கைகள்லேர்ந்து மாறாம, மஹா பெரியவா, “நீ உன் முன்னோர்கள் பண்ணின பாகவத ராமாயண பாராயணம், ப்ரவசனம் பண்ணிண்டு இரு” அப்படின்னு சொன்ன வார்த்தையை காப்பத்தறதுக்காக அவ்வளவு கஷ்டப்பட்டார். ஆனா பெரியவா அவர்கிட்ட அவளோ வாத்ஸல்யத்த காண்பிச்சா. கஷ்டங்கள் தீரல, ஆனா கடைசில ஸன்யாஸம் குடுத்தா பெரியவா, அப்படி ஞானத்தை குடுத்தா பெரியவா. இது தான் வாத்ஸல்யம் அப்படின்னு எனக்கு தோணித்து.

Govinda Damodara Swamigal

அப்படி வாத்ஸல்யம், அபயப்ப்ரதானம், ஆர்தார்த்திநிர்வாபணம், ஔதார்யம், அகஸோஷணம், அகணிதஷ்ரேய: பதப்ராபணம் அப்படீங்கற பகவானுடைய எல்லா குணங்களையும், நம்ம மஹாபெரியவாகிட்டயே நாம பார்த்தோம் அப்படீன்னு நேத்திக்கு அந்த ஸ்லோகத்த படிச்சபின்ன தோணிண்டே இருந்துது.

இன்னிக்கு,

जिह्वे कीर्तय केशवं मुररिपुं चेतो भज श्रीधरं

पाणिद्वन्द्व समर्चयाच्युतकथाः श्रोत्रद्वय त्वं श्रृणु ।

कृष्णं लोकय लोचनद्वय हरेगर्चछाङिघ्रयुग्मालयं

जिघ्र घ्राण मुकुन्दपादतुलसीं मूर्धन् नमाधोक्षजम् ॥ १९ ॥

ஜிஹ்வே கீர்தய கேஶவம் முரரிபும் சேதோ ப⁴ஜ ஶ்ரீத⁴ரம்

பாணித்³வந்த்³வ ஸமர்சயாச்யுதகதா:² ஶ்ரோத்ரத்³வய த்வம் ஶ்ருʼணு ।

க்ருʼஷ்ணம் லோகய லோசனத்³வய ஹரேர்க³ச்சா²ங்க்⁴ரியுக்³மாலயம்

ஜிக்⁴ர க்⁴ராண முகுந்த³பாத³துலஸீம் மூர்த⁴ன் நமாதோ⁴க்ஷஜம் ॥

அப்படீன்னு, இந்த உடம்பு விசித்தரமான அவயவங்களோட பகவான் படைத்து இருக்கார். ஒவ்வொண்ணுக்கு ஒரு கார்யம் கொடுத்து இருக்கார். ஞானேந்த்ரியங்கள், கர்மேந்த்ரியங்கள் எல்லாம் இருக்கு. எல்லாத்தையும் அவனோட காரியங்கள்ளே தான் அர்ப்பணம் பண்ணனும், அப்படின்னு இந்த ஸ்லோகத்துல சொல்றார்.

‘जिह्वे कीर्तय केशवं’ – ஹே நாவே! நீ கேசவனைப் பாடு. ‘मुररिपुं चेतो भज’ – மனமே! முரனை அழித்த, முரனுக்கு சத்ருவான அந்த விஷ்ணு பகவான ஸ்மரணம் பண்ணு. ‘पाणिद्वन्द्व श्रीधरं अर्चय’ – இரண்டு கைகளே! அந்த லக்ஷ்மிகாந்தனான நாராயணனுக்கு அர்ச்சனை பண்ணுங்கோ. ‘अच्युतकथा: श्रोत्रद्वय त्वं श्रृणु’ – காதுகளே! அச்யுதனுடைய கதைகளை நீங்கள் இடைவிடாது கேளுங்கள். ‘कृष्णं लोकय लोचनद्वय’ – இரண்டு கண்களே! இந்த கிருஷ்ணனுடைய அழகைப் பாருங்கள், பருகுங்கள். ‘हरेगर्चछाङिघ्रयुग्मालयं’ – கால்களே! ஹரியினுடைய ஆலயத்துக்கு நீங்க போங்கோ, அங்க போய் ப்ரதக்ஷிணம் பண்ணுங்கோ. ‘जिघ्र घ्राण मुकुन्दपादतुलसीं’ – ஹே மூக்கே! முகுந்தனுடைய பாதத்துல பூஜை பண்ணின அந்த துளசிய எடுத்து நீ அதை முகர்ந்து பார். ‘मूर्धन् नमाधोक्षजम्’ – தலையே! நீ அதோக்ஷஜனை வணங்கு. அப்படீன்னு, இந்த உடம்ப வெச்சுண்டு நம்ம பண்ணவேண்டியது, பகவானோட கார்யம்தான்னு இந்த ஸ்லோகத்துல சொல்றார்.

இப்படி ஒருத்தன் பண்ணிண்டு இருந்தா மத்த காரியங்கள் எல்லாம் யார் கவனிக்கறது அப்படீன்னு கேட்டா, க்ருஷ்ணர் பகவத்கீதைல, “तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्‌” அப்படீன்னு promise பண்ணிருக்கார். அவர் வாக்கு கொடுத்துருக்கார். “நானே அவாளுடைய யோகக்ஷேமத்த பார்த்துப்பேன்” அப்படீன்னு வாக்கு கொடுத்துருக்கார். அந்த வாக்கை நம்பி, அம்பரீஷ மஹாராஜா போல பகவான்கிட்ட பாரத்தை விட்டு, பகவானுடைய பஜனத்த பண்ணிண்டு, அதுனால ஒரு குறையும் இல்லாம நிறைய பேர் இந்த உலகத்துல இருந்துருக்கா. அந்த மாதிரி, பகவானுடைய காரியதுக்குக்காகத்தான் புத்தியும், மனசும், உடம்பும் பண்ணனும் அப்படீன்னு அந்த அழகான ஸ்லோகம்.

அடுத்த ஸ்லோகம்,

हे लोकाः श्रुणुत प्रसूतिमरणव्याधेश्चिचिकित्सामिमां

योगज्ञ: समुदाहरन्ति मुनयो यां याज्ञवल्क्यादय: ।

अन्तर्ज्योतिरमेयमेकममृतं कृष्णाख्यमापीयतां

तत्पीतं परमौषधं वितनुते निर्वाणमत्यन्तिकम् ॥ २०॥

ஹே லோகா: ஶ்ருணுத ப்ரஸூதிமரணவ்யாதே⁴ஶ்சிகித்ஸாமிமாம்

யோக³ஜ்ஞா: ஸமுதா³ஹரந்தி முனயோ யாம் யாஜ்ஞவல்க்யாத³ய: ।

அந்தர்ஜ்யோதிரமேயமேகமம்ருʼதம் க்ருʼஷ்ணாக்²யமாபீயதாம்

தத்பீதம் பரமௌஷத⁴ம் விதனுதே நிர்வானமத்யந்திகம் ॥ (20)

ப்ரஸுதி, மரணம், வ்யாதி – இந்த இருக்கற காலத்துல உடம்புக்கு நிறைய வ்யாதி வருது. “ப்ரஸுதினா” ஜனனம், “மரணம்” கடைசில வருது, திரும்பி திரும்பி இந்த உடம்புல வந்து வந்து பொறந்துண்டே இருக்கோமே, இதல்லவா பெரிய வ்யாதி. இருக்கற நேரத்துல கொஞ்சம் உடம்பு சரியா இருந்துதுனா, ஸொஸ்தமா இருக்கோம்னு நெனச்சுக்காத. என்ன ஆனாலும் மரணம் வரப்போறது, நீ பகவான அடையலன்னா திரும்பி வந்து பொறக்கணும். இது ஒரு பெரிய வ்யாதி இல்லையா? அதுனால, இந்த வ்யாதிக்கு நான் ஒரு மருந்து சொல்றேன். இந்த மருந்த நான் சொல்லல, “याज्ञवल्क्यादय:” – யாக்ஞவல்க்யர் முதலிய “योगज्ञ:” – யோகம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். உடம்ப பாத்துக்கறதுக்கு, யோகாஸனம் பண்றோம். ஆனா, இந்த உடம்புல மீண்டும் மீண்டும் பிறக்காம இருக்கறத்துக்கு, யோகிகள் சொன்ன மருந்த நான் சொல்றேன். நன்னா யோகம் படிச்சவா அவாள்ளாம், அப்படீங்கறார். “अन्तर्ज्योति” – உள்ளுக்குள்ள இருக்கற ஒரு ஜ்யோதி. அதுக்கு என்ன தெரியுமா பேரு? “க்ருஷ்ணன்”னு பேரு. அந்த மருந்த நீங்க குடிங்கோ. அதுக்கு வந்து அபார வீர்யம். அந்த மருந்த குடிச்சேள்னா ஸாஷ்வதமான ஆரோக்யம், நித்ய மோக்ஷானந்தம் உங்களுக்கு கிடைக்கும். இது பரம ஔஷதம். இந்த மத்த மருந்துகளெல்லாம் சாப்ட்டா உடனே அதுக்கு பத்தியம் இருக்கணும்னு சொல்லுவா. மத்ததெல்லாம் சாப்பிடாதே, புளி சாப்பிடாதே, காரம் சாப்பிடாதே அப்படி ஏதாவது பத்தியம் சொல்லுவா. இந்த “க்ருஷ்ணன்”ங்கற மருந்த குடிக்கறதுக்கு பத்தியமே கிடையாது. இந்த மருந்தே போதும், பரம ஔஷதம் இது அப்படீன்னு சொல்றார். இன்னும் ஒண்ணு, இது அம்ருதம், கசக்காது. மருந்துன்னா கசக்கும். இந்த மருந்து கசக்காது “एकममृतं” – இது தனியான ஒரு மருந்து. ஏன்னா இந்த மருந்த மட்டுமே சாப்பிடலாம். மத்த மருந்த சாப்ட்டா, அதுகூட இத கொஞ்சம் சேர்த்துகொங்கோ, இதோட கலந்து சாப்புடுங்கோ அப்படீன்னு சொல்லுவா.

இந்த “க்ருஷ்ணன்”ங்கற மருந்த தனியா சாப்பிடலாம், அது அம்ருதமா இருக்கும், அது சாப்ட்டா ஒரு பத்தியமும் பண்ண வேண்டாம், நீங்க அத சாப்ட்டாலே போதும். உங்களுடைய, இந்த ஜென்மத்தோட வ்யாதி இல்ல, இந்த ஜென்மா, ஜரா ம்ருத்யுங்கற அந்த வ்யாதியையே போக்கிடும். நீங்கள் மோக்ஷானந்தத்தை அடைவீர்கள், அப்படீன்னு அழகான ஒரு ஸ்லோகம் சொல்றார்.

வயசாக வயசாக இந்த மருந்துகள் கிட்டயே ஒரு addiction வந்துடறது. இந்த மருந்து சாப்ட்டாதான் எல்லாம் சரியா இருக்கும் அப்படீன்னு மருந்து மருந்துன்னு மனசுல அதுகிட்ட ஒரு attachment வந்துடறது. அந்த மருந்த நம்பாதிங்கோ, க்ருஷ்ணன்ங்கற மருந்த நம்புங்கோ அப்படீன்னு ஒரு அழகான ஸ்லோகம் சொல்றார்.

இந்த ரெண்டு ஸ்லோகம் இன்னிக்கு பார்த்தோம். நாளைக்கு, हे मर्त्या: (ஹே மர்த்யா:) அப்படீன்னு சொல்லி, ஒரு மந்த்ரோபதேசம் பண்ணி உங்களுக்கு பரம ஹிதமான ஒண்ண சொல்றேன்னு, நாராயண நாமத்த மந்த்ரோபதேசம் பண்றார். அத நாளைக்கு பார்ப்போம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்…கோவிந்தா கோவிந்தா.

Series Navigation<< முகுந்தமாலா 17, 18 ஸ்லோகங்கள் பொருளுரைமுகுந்தமாலா 21, 22 ஸ்லோகங்கள் பொருளுரை >>

One reply on “முகுந்தமாலா 19, 20 ஸ்லோகங்கள் பொருளுரை”

அருமையான பதிவு ! எல்லா மஹான்களையும் சம்பந்தப் படுத்தி, இடையில் பக்தர்களின் அனுபவங்களையும் கொணர்ந்து, அழகிய பூக்களால் கட்டிய பூ மாலை போன்று பரிமளிக்கிறது ! கைவண்ணம் !!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.