முகுந்தமாலா பூர்த்தி 45, 46 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 45, 46 ஸ்லோகங்கள் பொருளுரை (16 minutes audio Meaning of Mukundamala slokams 45 and 46)

முகுந்தமாலையில இன்னிக்கு கடைசி 45,46 ஆவது கடைசி இரண்டு ஸ்லோகங்கள் பார்க்கப் போறோம். நேத்திக்கு இரண்டு ஸ்லோகங்கள்ல, ‘இந்த உலகத்துல கபட ஸ்வபாவம் உள்ளவர்கள் பகவானுடைய நாமங்களை பேசாம மற்ற பேச்சுகளையே பேசிண்டிருக்கா. அமிர்தம் இருக்கும் போது அதை விட்டுட்டு விஷத்தை குடிக்கற மாதிரி இருக்கு இவா காரியம்’ ன்னு சொன்னார். ‘ படிக்காத பாமர ஜனங்கள் இப்படி இருக்கானா கவிகள் கூட, அவ்ளோ படிப்பு இருந்தென்ன, ஏதோ பெண்களை பற்றி வர்ணனை, ஒவ்வொரு ஊரா பார்த்துண்டு அதைப் பத்தின வர்ணனைகள், அப்படி பண்ணிண்டு மூடர்களா கவிகள் இதுல நாட்களை கழிக்கிறார்கள். பகவானோட பக்தர்கள் தான் கோவிந்தேதி ஜனார்தனேதி ஜகதாம் நாதேதி க்ருஷ்ணேதி ச வ்யாஹாரை: ஸமய: ததேகமனஸாம் பும்ஸாம் அதிக்ராமதி ன்னு பக்தர்களோட பாக்யத்தை சொல்றார். நமக்கும், இந்த மாதிரி நாமத்தை சொல்லிண்டு நம்முடைய நாட்கள் கழியணும். வீண் பேச்சு பேசக் கூடாதுங்கிற உபதேசமும் இருக்கு.

இன்னிக்கு 45ஆவது ஸ்லோகத்துல

अयाच्यमक्रेयमयातयामं अपाच्यमक्षय्यं अदुर्भरं मे |

अस्त्येव पाथेयमित:प्रयाणे श्रीकृष्णनामामृतभागधेयम् ॥ ४५ ॥

அயாச்யம் அக்ரேயம் அயாதயாமம் அபாச்யம் அக்ஷய்யம் அதுர்பரம் மே |

அஸ்த்யேவ பாதேயமித: பிரயாணே ஸ்ரீகிருஷ்ண நாமாம்ருத பாகதேயம் ||

ன்னு ரொம்ப ஆஸ்சர்யமான ஒரு ஸ்லோகம். என்னோட இந்த லோக யாத்திரை பண்ணி பகவான் கிட்ட போய் சேர்றதுக்கு நான் ஒரு கட்டு சாதம் வெச்சுண்டு இருக்கேன். இந்த சாப்பாட்டோட விசேஷம் என்னன்னா, ‘அயாச்யம்’ – யார் கிட்டயும் போய், பவதி பிக்ஷாந்தேஹின்னு யாசகம் பண்ணி கேட்டு வாங்க வேண்டாம். என் கிட்டேயே இந்த சாப்பாடு இருக்கு. ‘அக்ரேயம்’ – இதை விலை கொடுத்து வாங்க வேண்டியது இல்லை. இது free தான் ‘அயாதயாமம்’ – இது பொழுது விடிஞ்சா ஊசிப் போகும், கெட்டுப் போயிடும்ங்கிறது கிடையாது. இது கெடாத சாப்பாடு ‘அபாச்யம்’ – இதை சமைக்கவே வேண்டாம். அப்படியே இந்த சாப்பாட்டை சாப்பிடலாம். ‘அக்ஷய்யம்’ – சாப்பாடு எடுக்க எடுக்க குறையுமில்லையா? நாலு இட்லி எடுத்துண்டு போய் இரண்டு சாப்டுட்டா அடுத்த வேளைக்கு இரண்டுதான் இருக்கும். இது அப்படி கிடையாது. எடுக்க எடுக்க குறையாத அன்னம் இது ‘அதுர்பரம் மே’ – இந்த சாப்பாடு தூக்கறதுக்கு weight ஏ கிடையாது. ஊருக்கு trainல போனா luggage கூட சாப்பாடு மூட்டை ஒண்ணு heavyஆ இருக்கும். இதை தூக்கறதுக்கு கவலையே பட வேண்டாம் நீங்க. weightஏ இல்லாத சாப்பாடு. இதோட taste எப்படி இருக்கும்னா, அமிர்தம் போல இருக்கும். அப்பேற்பட்ட சாப்பாட்டை நான் இந்த லோக யாத்திரைக்காக வெச்சிண்டிருக்கேன். அது என்ன தெரியுமா? ‘ஸ்ரீகிருஷ்ண நாமாம்ருத பாகதேயம்’ அது பேரு ஸ்ரீ க்ருஷ்ணம்ன்கிற நாமாம்ருதம். அது தான் என்னோட பாக்கியம், செல்வம். அதை நான் எடுத்துண்டு போறதுனால லோக யாத்திரை எனக்கு கொஞ்சம் கூட பாரம் இல்லாம, களைப்பு இல்லாம, பசி இல்லாம நான் பண்றேன்னு சொல்றார்.

இந்த முகுந்தமாலை, இந்த ஒரு ஆவர்த்தி படிச்சு, இதை ஸ்மரிச்சதுல, இந்த குலசேகராழ்வாருக்கு பகவானோட நாமங்கள்ல எவ்வளவு பக்தின்னு தெரிஞ்சுது. அப்படி ஒவ்வொரு ஸ்லோகத்துலயும் அந்த நாமத்தோட மஹிமையை சொல்லி இந்த கடைசி, பூர்த்தி ஸ்லோகத்துலயும், இப்பேற்பட்ட பாக்கியம் என் கிட்ட இருக்கு. கெட்டுப் போகாத உணவு என்கிட்ட இருக்கு. இதை எடுத்துண்டு இந்த லோகயாத்திரையை நான் ஸுகமா கழிச்சுடுவேன்னு சொல்லி, நாமத்தோட மஹிமையை சொல்லி முடிக்கிறார்.

இந்த நாமத்தை மஹான்கள் ஏன் ரொம்ப stress பண்ணி சொல்றான்னா, நம்மோட உலக யாத்திரைக்கு பல விஷயங்களை நம்பறோம்.

படிப்பை நம்பறோம். என் கிட்ட இந்த வித்தை இருக்கு. இதைக் கொண்டு ஏதோ சம்பாதிப்பேன். அதைக் கொண்டு என் காலத்தை தள்ளுவேன்னு நாம நினைக்கறோம். ஆனா படிப்பு மறந்து போயிடறது. மறதின்னு படிப்புக்கு எதிரி ஒண்ணு இருக்கு.

அதே மாதிரி என் உடம்பு. நான் ஸ்வஸ்தமா excercise லாம் பண்ணி வெச்சிண்டிருக்கேன். என் உடம்பு நான் சொன்னா கேட்கும்னு நினைக்கிறோம். ஆனா முதுமைன்னு ஒண்ணு வந்து தான் தீரர்து. எவ்ளோ நாம பார்த்துண்டாலும் முதுமை வர்றது. என்னுடைய 41 வயசுல வெள்ளெழுத்து கண்ணாடி போட வேண்டியிருந்தது. அந்த கண்ணாடி கடைக்காரர் கிட்ட நான் சொன்னேன். ‘எனக்கு ரொம்ப நன்னா கண்ணு தெரியும். தூரத்துல இருக்கறது எல்லாம் கூட நன்னா தெரியும். ரொம்ப அதைப் பத்தி நான் பெருமையா இருந்தேன். இப்ப என்னடான்னா எனக்கே வெள்ளெழுத்து வந்துடுத்து. எனக்கே பக்கத்துல இருக்கறதை கூட படிக்க முடியல’ன்னேன். அவர் ரொம்ப விவேகத்தோட இருக்கற கடைக்காரர். அவர் ‘அந்த 40 வயசுல பகவான் அந்த மணி அடிக்கணும். இல்லேன்னா மனுஷா ரொம்ப ஆடுவா’ ன்னு சொன்னார். எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. அது மாதிரி அந்தந்த வயசுல பகவான் மணி அடிச்சுடுவார். அதுக்கு தயாரா இருக்கணும்ங்கிறதை அழகா அவர் சொல்லிக் கொடுத்தார். அப்படி எவ்ளோ நாம சுக்காட்டம் உடம்பை வெச்சுண்டு இருந்தாலும் முதுமைன்னு ஒண்ணு வர்றது. அதனால இந்த உடம்பை நாம நம்ப முடியாது.

சரி, எனக்கு அப்பா, அம்மா, அண்ணா, தம்பி, குழந்தைகள் எல்லாம் இருக்கான்னு உறவுக்காராளை நம்பலாம் னா, இந்த உறவுகளைப் பிரிய வேண்டியிருக்கு. நம்மை விட பெரியவாளா இருந்தா, அவா காலமான உடனே பிரிய வேண்டியிருக்கு. இல்லை, வேற ஊருக்கு போயிட்டா பிரிய வேண்டியிருக்கு. நம்ம குழந்தைகளை நம்பினோம்னோ, அவா கிட்ட நாம பாசம் வைக்கறோம். வெள்ளம் பள்ளத்துல பாயும்ன்ங்கிற மாதிரி, அவா வேற ஒருத்தர் மேல பாசம் வைக்கறா. அதனால உறவுக்காராளை நம்பிண்டு இந்த லோக யாத்திரையை பண்ண முடியாது.

இந்த ஊர் எனக்குப் பிடிச்ச இடம். beach ஓரமா இருக்கேன். தினம் sea breeze வர்றது. சௌக்யமா இருப்பேன் நான் ன்னு நினைச்சா transfer பண்ணிடுவான். இந்த ஊரு, இங்க நான் நல்ல பேரு வாங்கியிருக்கேன்.இதுனால என்னை இங்க வேலையிலிருந்து எடுக்க மாட்டான்னு சொன்னா, புது boss வந்தா எவ்ளோ நல்ல பேர் வாங்கியிருந்தாலும், அவனுக்கு வேண்டிய ஆளைப் போட்டுட்டு நம்மளை எடுத்துடுவான்.

இதுக்கெல்லாம் மேல இந்த காலத்துல ஜனங்கள் பணத்தை ரொம்ப நம்பறா. பணத்தை நம்பவே முடியாது. பணம் இருந்தா எல்லாம் சௌக்யமா இருக்கப் போறோம்னு நினைச்சுக்கறா. அதுவும் உண்மையில்லை. ‘அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்’ ன்னு மஹான்கள் சொல்லி கொடுக்கறா.

அதுனால இது எதையும் நீ நம்பாதே. நீ பகவானோட நாமத்தை நம்புன்னு, முதல்லேருந்து நாமத்துல ருசி வந்து, அது மூலமா பகவானோட அனுபவம் நமக்கு கிடைச்சுடுத்துன்னா, நாம் கொஞ்சம் கூட குறைப்படாம எந்த ஒரு பயமோ, சோகமோ, மோஹமோ இல்லாம இந்த லோகயாத்திரையை நடத்தலாம்ங்கிறதை இந்த கவி ரொம்ப அழகான விதத்துல சொல்லிக் கொடுக்கிறார்

அயாச்யம் அக்ரேயம் அயாதயாமம் அபாச்யம் அக்ஷய்யம் அதுர்பரம் மே |

அஸ்த்யேவ பாதேயமித: பிரயாணே ஸ்ரீகிருஷ்ண நாமாம்ருத பாகதேயம் ||

அயாச்யம் – இதை இன்னொருத்தர் கிட்ட போய் கேட்க வேண்டாம். இந்த லோகயாத்திரைக்கு ஒரு ரொம்ப ருசியான கெட்டுப் போகாத ஒரு அமிர்தம் போன்ற உணவு எனக்கு இருக்கு. அதை இன்னொருத்தர் கிட்ட போய் பிச்சை கேட்க வேண்டாம். என் கிட்டயே இருக்கு. அக்ரேயம் – விலை கொடுத்து வாங்க வேண்டாம். நாளானா கெட்டுப் போகாது. இதை சமைக்க வேண்டாம். இது எடுக்க எடுக்க குறையாது. இது தூக்கறதுக்கு ரொம்ப பாரம் கிடையாது. அப்பேற்பட்ட அமிர்தமயமான ருசியோடு கூடிய ஒரு அன்னம் இருக்கு. என்னோட வழி பிரயாணத்துக்கு. அது என்னன்னா ஸ்ரீகிருஷ்ணா நாமாம்ருத பாகதேயம் ன்னு நாம அமிர்தம் இருக்கு என்கிட்ட. கிருஷ்ணனோட நாமம் இருக்கு ன்னு சொல்றார்.

அந்த பகவானோட அனுக்ரஹம் எப்பவும் நமக்கு தயாரா இருக்கு. நாம இந்த படிப்பு, உடம்பு, உறவு, ஊரு, பேரு, பணம் இதிலெல்லாம் ரொம்ப நம்பிக்கை வெச்சு, அந்த அனுக்ரஹத்தை நாம தான் அஹங்காரம்ங்கிற குடையைப் பிடிச்சு தடுக்கறோம். மழையாட்டம் அந்த அனுக்ரஹம் கொட்டிண்டிருக்கு. அதை நான் அனுபவிக்கணும்னா அதுக்கு பகவானோட presenceஐயும், அவரோட அனுக்ரஹத்தையும் நாம feel பண்ணணும்னா, அவரை உணரனும். அதுக்கு மஹான்கள் எப்பவும் சௌகரியமா பண்ணக் கூடிய நாம ஜபம் என்கிற வழியை சொல்லித் தரா. மத்ததுல எல்லாம் ரொம்ப addict ஆகாதே. பணம் சம்பாதிக்கறதுலயோ, படிப்புலயோ, உறவு மேலேயோ, பேர்லயோ, உடம்பு பார்த்துக்கறதுலயோ அதை moderateஆ பண்ணு. இந்த பகவானோட பக்தியை அளவுக் கடந்து பண்ணு. இதுல moderation வேண்டாம். ஏன்னா இது அமிர்தம்னு சொல்லி

மூகபஞ்சசதியில கடாக்ஷ சதகத்துல

அத்யந்தஶீதலமதந்த்³ரயது க்ஷணார்த⁴ம்
அஸ்தோகவிப்⁴ரமமனங்க³விலாஸகந்த³ம் ।
அல்பஸ்மிதாத்³ருʼதமபாரக்ருʼபாப்ரவாஹம்
அக்ஷிப்ரரோஹமசிரான்மயி காமகோடி ॥

ன்னு ‘அபார க்ருபா பிரவாஹம்’ மழையாட்டம் அந்த அனுக்ரஹம், காமாக்ஷியோட கடாக்ஷம் நம்ம மேல கொட்டிண்டிருக்கு. அது என் மேல படட்டும்னு வேண்டிக்கறார். அது படறதுக்கு நாம மத்ததெல்லாம் நம்பாம இந்த நாமத்தை நம்பி அதுல அதிகமா நாம addict ஆனோம்னா அந்த அனுக்ரஹம் கிடைக்குன்னு எல்லா மஹான்களும் சொல்லியிருக்கா.

குலசேகர கவியும் இந்த 46 ஸ்லோகங்கள்ல அதைத் தான் ரொம்ப stress பண்ணி சொல்றார்ங்கிறது ஒரு inference, ஒரு realization இந்த ஆவர்த்தி படிக்கும் போது. இந்த 45 ஸ்லோகங்கள்ல பக்தியோட பெருமையையும், நாமத்தோட மஹிமையையும் சொல்லி, நமக்கு கிருஷ்ண பக்தியில ஊர்றதுக்கும், அதை அனுபவிக்கறதுக்கும், அதை வ்ருத்தி பண்ணிக்கரதுக்கும் அழகழகான வழிகள் சொல்லிக் கொடுத்து, எதையெல்லாம் தவிர்க்கணும், எதையெல்லாம் சேர்க்கணும்னு சொல்லி கொடுத்தார்.

இந்த கடைசி ஸ்லோகத்துல

यस्य प्रियौ श्रुतिधरौ कविलोकवीरौ मित्रे द्विजन्मवरपद्मशरावभूताम् ।

तेनाम्बुजाक्षचरणाम्बुजषट्पदेन राज्ञा कृता कृतिरियं कुलशेखरेण ॥ ५६॥

யஸ்ய ப்ரியௌ ச்ருதித⁴ரௌ கவிலோகவீரௌ

மித்ரே த்³விஜன்மவர பாராசவாவபூ⁴தாம் ।

தேநாம்பு³ஜாக்ஷசரணாம்பு³ஜஷட்பதே³ன

ராஜ்ஞா க்ருʼதா க்ருʼதிரியம் குலசேக²ரேண ॥ 46 ॥

ன்னு எனக்கு இரண்டு அன்பான நண்பர்கள் இருக்கா. ஒருத்தர் பிராம்மண ஜாதியில பிறந்தவர். இன்னொருத்தர் மிஸ்ர ஜாதியில பிறந்தவர். இரண்டு பேரும் நன்னா படிச்சவா ‘கவிலோகவீரௌ’ இரண்டு பேரும் கவிலோக வீரர்கள். அதாவது கவிஸ்ரேஷ்டர்கள். இப்பேற்பட்ட இரண்டு நண்பர்கள் எனக்கு இருக்கா. தாமரை கண்ணனான அம்புஜாக்ஷனுடைய முகுந்தனுடைய திருவடித் தாமரைகள்ல வண்டு போல என் மனம் எப்பவும் இருக்கு. அந்த குலசேகரன் என்ற ராஜாவால் இந்த முகுந்தமாலை என்ற ஸ்தோத்ரம் செய்யப் பட்டதுன்னு வர்றது.

நான் நேத்தி நினைச்சேன். இந்த ஸ்லோகம் யாராவது ஒரு பக்தர் இந்த குலசேகராழ்வாரைப் பத்தி சொல்லி அவரால இந்த ஸ்தோத்ரம் இயற்றப்பட்டதுன்னு சொல்றார்னு. ஏன்னா அப்படி இருக்கு. குலசேகரர் என்ற அரசரால் இந்த பிரபந்தம் இயற்றப்பட்டது ன்னு meaning வர்றது. ஆனா குலசேகர ஆழ்வாரே கூட இதை சொல்லியிருக்கலாம். மஹான்கள் அந்த மாதிரி ரொம்ப எளிமையா இருப்பா. தன்னைப் பத்தி straight forward introduction. அப்படி குழந்தை போல இருப்பா. அதுமாதிரி நண்பர்களை நினைச்சு எப்பவுமே நன்றி பாராட்டுவா. இதை நான் ஸ்வாமிகள் கிட்ட பார்த்திருக்கேன். 35, 40 வயசுல, பகவானுக்காக எல்லாத்தையும் விட்டு பஜனம் பண்ணிண்டு இருக்கும் போது, உலகம் தூற்றும் போது யாரோ ஒரு இரண்டு friends அவரை போற்றி ‘நீ பட்டாம்பூச்சி போல பறந்து போயிடுவ. நீ கவலைப்படாதே. நீ இந்த பஜனத்தை பண்ணு. உன்னை மாதிரி sincereஆ யார் இருக்கா’ ன்னு சொன்ன அந்த ரங்கராஜ ஐயர், ராகவன்னு நாலு, அஞ்சு friends சொல்வார் ஸ்வாமிகள். அவாளை எல்லாம் ரொம்ப நன்றியோட நினைச்சு அவா பிள்ளைகள், பேரன்கள் வரைக்கும் எல்லாருக்கும் நன்றி பாராட்டிண்டு வந்தார். அவாள்லாம் வந்தா ‘உங்க தாத்தா எனக்கு இந்த மாதிரி ஆறுதல் சொன்னார். ‘ஸுஜன ஜீவன, ஆஸ்ரித சந்தன’ ன்னு பாடுவார். எனக்கு பூனைனா பயம். ராத்திரியில இருட்டிடுத்துன்னா எங்காத்துக்கு கொண்டு வந்து விடுவார்’ ன்னு எல்லாம் சொல்லி, அந்த பேரனுக்கு நாராயணீயம் சொல்லி வைப்பார். அப்படி நன்றி பாராட்டுவார். அது மாதிரி இந்த ஸ்லோகத்துல தன்னோட நண்பர்களை நினைச்சு முகுந்தனோட திருவடித்தாமரைகள்ல வண்டு போல இருக்கக் கூடிய இந்த குலசேகர கவியால் இந்த ப்ரபந்தம் இயற்றப்பட்டது எங்கிறது, அவரே கூட சொல்லியிருக்கலாம்னு எனக்கு இன்னிக்கு தோன்றது.

இந்த மஹான்கள் குலசேகர கவி, ஆதி சங்கரர், கிருஷ்ண சைதன்யர், மஹாபெரியவா, சிவன் சார்,கோவிந்தா தாமோதர ஸ்வாமிகள், சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமண பகவன், அப்படி அந்த அடியார் கூட்டம் எல்லாருமே ஒருத்தர் தான். அவா எல்லாமே பவக்கடலை தாண்டிட்டா. ஒரு கோடு மாதிரி. அதை தாண்டிட்டா அவா. தாண்டின உடனே அடியார் கூட்டத்துல சேர்ந்து, பகவானோட அனுபவம் அவாளுக்கு கிடைச்சு, அந்த பேரானந்தத்துல மூழ்கி, அதுல சில பேர், நம்மோட சிலதை பகிர்ந்துக்கறா. அந்த ஸ்தோத்திரங்களை படிக்கற பாக்கியம் நமக்கு கிடைச்சிருக்கு. நாமும் என்னிக்காவது ஒரு நாள் பகவானோட அடியார் கூட்டத்துல சேரணும்னு வேண்டிக்கணும். நமக்கு பகவானோட அனுபவம் கிடைக்கறதோ இல்லையோ, அது வேணும் என்று, அதுக்கு motivation இருக்கோ இல்லையோ, இந்த அடியார்கள் பெற்ற பேறு, அவாளுடைய கதைகள் எல்லாம் படிக்கும் போது நானும் அடியார் கூட்டத்துல சேரணும் என்கிற பிரார்த்தனைக்காகவாது, அவா சொன்னதைக் கேட்டு அந்த பக்தி மார்க்கத்துல போகணும். நாமும் பக்தி பண்ணனும். நாம ஜபங்கள் எல்லாம் பண்ணனும்.

கிரிவாய் விடுவிக்ரம வேல் இறையோன்

பரிவா ரமெனும் பதமே வலையே

புரிவாய் மனனே பொறையா மறிவால்

அரிவா யடியோடு மகந்தையையே

ன்னு கந்தர் அனுபூதியில ஒரு பாட்டு இருக்கு கிரிவாய் விடுவிக்ரம வேல் இறையோன் – கிரௌஞ்ச கிரியில வேலை விட்ட அந்த இறைவன் முருகப் பெருமானுடைய பரிவாரம் எனும் பதம் மேவலையே – அந்த பரிவாரத்தை சேர்ந்தவர்கள், அடியார் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், என்ற பதம் அந்த பதத்தை அடைய வேண்டும். அந்த பதத்தை மேவ வேண்டும். ‘பதம் மேவலையே புரிவாய் மனமே’ – மனமே அதுக்கு மட்டும் நீ ஆசை படு. உன்னுடைய ‘பொறையாம் அறிவால்’ – பொறைன்னா பொறுமை. பொறையாம் அறிவால் ‘அரிவாய் அடியோடும் அகந்தையே’ – உங்களுடைய ego வை அடியோட வெட்டிப் போட்டுடு. அந்த வாளை வெச்சுண்டு ‘பொறையாம் அறிவால் அடியோடும் அரிவாய் ன்னா வெட்டிப் போடறது. ‘அரிவாய் அடியோடு அகந்தையையே’ ன்னு சொல்றார். அப்படி அந்த அகந்தையை அகற்றி அந்த அடியார் கூட்டத்துல சேர்ந்துட்டோம்னா அப்புறம் நம்ம ஜன்மா ஸார்த்தகம் ஆயிடும். அதுக்கு ப்ரார்த்தனை பண்ணுவோம். இந்த 46 ஸ்லோகங்களை 23 நாட்கள் படிக்கறதுக்கு பகவான் அனுக்ரஹம் பண்ணார். ராம பக்தி, கிருஷ்ணபக்தி பண்ணா ஹனுமாரை தியானம் பண்ணி பூர்த்தி பண்ணுவா. அந்த மாதிரி

யத்ர யத்ர ரகுநாத கீரத்தனம்

தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்

பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்

மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் னு

எங்கெங்கெல்லாம் பகவான் ராமனோட நாமங்களை சொல்றோமோ அங்கெல்லாம் தலை மேல கை கூப்பி கண் ஜலத்தோட காட்சி தரக் கூடிய ஹனுமாரை நான் த்யானிக்கறேன்னு இந்த ஸ்லோகத்துல வர்றது. இந்த முகுந்தமாலை முழுக்க நாம பக்தியை ரொம்ப அழுத்தம் திருத்தமா சொல்லிக் குடுத்ததுனால இந்த ஸ்லோகத்தை தியானம் பண்ணி ஹனுமாருக்கு மங்களம் சொல்லி பூர்த்தி பண்ணிக்கறேன்.

ஜானகி காந்த ஸ்மரணம்…ஜய ஜய ராம ராம.

Series Navigation<< முகுந்தமாலா 43, 44 ஸ்லோகங்கள் பொருளுரைமுகுந்தமாலா தமிழில் பொருளுடன் புத்தக வடிவில் (Mukundamala with Tamizh meaning as a PDF book) >>
Share

Comments (1)

  • மிகவும் அருமையான விளக்கம்.
    கட்டுச் சோறு எல்லோரிடமும் உண்டு. இன்று எனக்கு தெரிந்தது. உபயோகப் படுத்துவேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.