Categories
Govinda Damodara Swamigal

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் சிவபக்தி

ஸ்வாமிகள் எப்போதும் ராமாயண, பாகவத, பாராயணம், பிரவசனம் செய்து கொண்டிருப்பார். அதனால் அவருடைய ராம பக்தி, கிருஷ்ண பக்தி எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் பரம சாம்பவரும் கூட. அதை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். (விஷ்ணு பக்தர்களை வைஷ்ணவர்கள் என்று சொல்வார்கள். அது போல சிவ பக்தர்களை சாம்பவர்கள் என்று சொல்வார்கள்)

எப்பவும் நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டிருப்பார். இதைப் பேச ஆரம்பிக்கும் போதே, ஸ்வாமிகள் அதிஷ்டானத்திலேயே லிங்கப் பிரதிஷ்டை செய்திருப்பது ஞாபகம் வருகிறது. அதைச் சொல்லும் போதே, மஹாபெரியவா, காமாக்ஷி வடிவமாக இருந்து, கணக்கில்லாத சந்திர மௌலீஸ்வர பூஜை செய்திருப்பதும், ஆனால் அவருடைய அதிஷ்டானம், பிருந்தாவனமாக (துளசி மாடம்) வைத்திருப்பதும் ஞாபகம் வருகிறது.

ஆதி சங்கரர் வழியில் வந்தாலே, அவருடைய அவதாரமாகவே இருப்பதாலே ஆதிசங்கரரைப் போலவே, மஹாபெரியவாளுக்கும் சிவ-விஷ்ணு பேதம் கிடையாது. ஷண்மதத்தில் எந்த பாகுபாடும் இல்லாமல், எல்லா தெய்வத்தின் உள்ளே உறையும் பரப்ரம்மம் ஒன்றே என்ற ஞானத்தில் இருந்தார்கள்.

அதனால்தான், மஹாபெரியவாளை போய் தரிசனம் செய்பவர்களுக்கு, வரவா சிவ பக்தராய் இருந்தால், மஹாபெரியவா சாக்ஷாத் பரமேஸ்வரனாக தெரிந்தார். அவா விஷ்ணு பக்தராய் இருந்தால், மஹாபெரியவா சாக்ஷாத் மஹாவிஷ்ணுவாகத் தெரிந்தார்.

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் என்று ஒரு பெரியவர் இருந்தார். தீவிர வைஷ்ணவரான அவர், காஞ்சிபுரத்தில் நீண்ட காலம் ஜீவியவந்தராய் இருந்தார். வைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு நிறைய உழைச்சிருக்கார். வைஷ்ணவத்தைப் பற்றி எழுதுவதும், பேசுவதும், பிரவசனம் செய்வதும், சொல்லிக் கொடுப்பதுவும் என்று தினமும் இருபது மணி நேரம் உழைத்தவர். அப்படிப்பட்ட மஹான். வேற யாரையும் நமஸ்காரம் செய்ய மாட்டார். ஆனால் மஹாபெரியவா ஒருவரை மட்டும் நமஸ்கரிப்பார். மஹாபெரியவாளும் அவரிடம் மிகுந்த அன்பு பாராட்டுவார்.

அது போல வடகலை சம்பிரதாயத்தை சேர்ந்த அஹோபில மடத்தில், இப்போது பட்டத்தில் உள்ள ஜீயர் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸ்வாமிகள் அத்யந்த மஹாபெரியவா பக்தர். பால்யத்தில் மஹாபெரியவா தான் அவரை வேதம் படிக்கச் சொல்லி, அவரை வெளிநாட்டு போகாமல் தடுத்து, உன்னதமாய் அவரை உருவாக்கி, இன்று அவர் அந்த மடாதிபதியா இருக்க காரணமாய் இருந்தார். இதைக் குறித்து அவரே இன்றும் மணிக்கணக்காய் உருக்கமாக, மஹாபெரியவாளைப் போற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்.

இன்னொரு பக்கம், மாத்வர்களுக்கு சிறுகமணி வேத பாடசாலை மிகவும் முக்கியம். அது மட்டும் இல்லை என்றால் மாத்வர்கள் இடையே வேத ஓதுபவர்கள் அரிதாகியிருக்கும். அந்த பாடசாலையில் படித்த வேத வித்துகள்தான், இன்று மந்த்ராலயத்திலும் மற்ற இடங்களிலும் வேதம் சொல்லிக் கொடுக்கிறார்கள். அந்த வேத பாடசாலை உருவாகி வருவதற்கும், வளர்வதற்கும் காரணம் மஹாபெரியவா தான். சிறுகமணி பாடசாலை நடத்தி வந்து சமீபத்தில் விஷ்ணு பதம் அடைந்த ஸ்ரீ பரசுராமாச்சார், “அத்வைதம் இன்று த்வைதத்தை வாழ வைத்திருக்கின்றது…” என்று மஹாபெரியவாளை போற்றியிருக்கிறார்.

சிறுகமணியிலும் சரி, அங்கிருந்து சென்று மந்த்ராலயத்தில் இன்று வேதம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார்களும் சரி, அவர்களுடைய வித்யார்த்திகளுக்கு பரீக்ஷை என்பது காஞ்சி மடத்தில் மஹாபெரியவா சொல்லி, ஸ்ரீ அண்ணாதுரை அய்யங்கார் நிர்வகித்த வேத ரக்ஷண நிதி டிரஸ்டின் மூலமாகத்தான் நடக்கிறது. பிரபலமான வக்கீலாய் இருந்து, மஹாபெரியவாளின் ஆக்ஞைப் படி பின்னாளில் தன் வாழ்நாள் முழுவதும் வேதத்திற்காக அர்ப்பணித்தவர் ஸ்ரீ அண்ணாதுரை அய்யங்கார். இப்படி வைஷ்ணவர்கள் பலர் மஹாபெரியவாளின் விஷ்ணு பக்தியைப் பற்றி புரிந்துக் கொண்டிருந்தார்கள்.

மஹாபெரியவா எத்தனையோ முறை வரதராஜ ஸ்வாமி கோயிலை ப்ரதிக்ஷிணம் செய்திருக்கிறார்கள். காஞ்சி மடத்தில் இருந்த போதும் சரி, சற்று தள்ளி தேனம்பாக்கத்தில் இருந்த போதும் சரி, வரதராஜ ஸ்வாமியை ப்ரதிக்ஷிணம் செய்துவிட்டு போவார்கள். வழி முழுக்க ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வார்கள். தினமும் மஹாபெரியவா ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் மூன்று ஆவர்த்தி சொல்லாமல் இருந்ததே கிடையாது. யாத்திரையின் போது கூட ஒரு சைக்கிள் வண்டியை பிடித்துக் கொண்டே போய் கொண்டிருப்பார்கள். அப்போது, நெற்றியில் குட்டிக்கொண்டார்கள் என்றால் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் ஆரம்பிக்க வேண்டியது என்று அர்த்தம்.

அது போல, மஹாபெரியவா பிக்ஷையின் போதும் யாரவது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வார்கள். மேலும், யாராவது நமஸ்காரம் செய்யும் போதும், மிகவும் திருப்தி என்றால் (எல்லோருடைய நமஸ்காரமும் அந்த நாராயணனையே அடைகிறது என்னும் பொருளில்) ‘நாராயண… நாராயண… நாராயண…’ என்று பகவன் நாமாவை சொல்லுவார்கள். சந்யாசிகள் யாராவது நமஸ்காரம் செய்தால் ‘நாராயண’ நாமாவை சொல்ல வேண்டும் என்பது சாஸ்திரம். அதை மிகவும் பிரியமுடன் சொல்லுவார்கள்.

பல வருடங்கள் தொடர்ச்சியாக ஸ்ரீ மாயவரம் பெரியவாளிடமும் (ஸ்ரீ சிவராம கிருஷ்ண சாஸ்திரிகள்) பிறகு நமது ஸ்வாமிகளிடமும் ஸ்ரீமத்பாகவத ஸ்ரவணம் செய்துள்ளார். ஸ்ரீரங்கம் கோபுரம் கட்டினார்கள். இப்படி மஹாபெரியவாளுடைய வைஷ்ணவ பணி மகத்தானது.

இப்படி, மஹாபெரியவா காமாக்ஷியா இருந்து, ஸ்ரீ சந்திர மௌலீஸ்வர பூஜை கணக்கில்லாமல் செய்திருந்தாலும், இன்று அவருடைய அதிஷ்டானத்தில் துளசி மாடம் வைக்கப்பட்டிருப்பது மஹாபெரியவாளின் விஷ்ணு பக்தியை காட்டுவதாக கொள்ளலாம்.

நமது கோவிந்த தாமோதர ஸ்வாமிகளும், அது போலவே ஆதி சங்கரர், மஹாபெரியவா வழியிலேயே சென்றவர். ஸ்வாமிகளுக்கும் தெய்வங்களுக்குள் ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று உயர்ந்தது என்ற எண்ணமே கிடையாது. ஸ்வாமிகள் கணக்கில்லாமல் ஸ்ரீமத் ராமாயணமும், ஸ்ரீமத் பாகவதமும் பாராயணம் செய்திருந்தாலும், அவருடைய சிவ பக்தி உலகத்திற்கு தெரிவதற்காக என்ற ஏற்பாடோ என்னவோ தெரியவில்லை, ஸ்வாமிகளுடைய அதிஷ்டானத்தில் இன்று சிவலிங்கப் ப்ரதிஷ்டை ஆகியிருக்கிறது.

இப்படி மஹான்கள் சிவபரமாய் இருக்கிறார்கள் என்றோ இல்லை விஷ்ணுபரமாய் இருக்கிறார் என்றோ நாம் நமது குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்து ஏமாந்து விடக்கூடாது என்பதால் அந்த பரம்பொருளே நம்மீது அளவில்லாத கருணை கொண்டு, இப்படி ஒரு ஆச்சர்யமான ஓர் ஏற்பாட்டை இந்த இரண்டு அதிஷ்டானத்திலேயும் செய்துவிட்டது போலும்.

ஸ்வாமிகளுடைய சிவ பக்தியை பற்றி வாஸ்தவத்தில், அது அளவிட முடியாததாக இருந்தாலும் ஏதோ என் சிற்றறிவிற்கு புரிந்த மட்டும் சிலது சொல்கிறேன்.

எனக்கு கொஞ்சம் பக்தி ருசி வந்ததே திருவாசகம், திருப்புகழ் படித்தால் தான். பக்தி என்றால் என்ன என்பதற்கு, அந்த பாடல்களே விளக்கம்.

“பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய

ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய

தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!

யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவதினியே”

தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை, சங்கரா! யார் கொலோ சதுரர்?

அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன், யாது நீ பெற்றது ஒன்று என்பால்?

சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான், திருப்பெருந்துறை உறை சிவனே!

எந்தையே, ஈசா! உடல் இடம் கொண்டாய், யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே!

என்றெல்லாம் படித்துப் பக்தி மார்க்கத்தில் எனக்கு ஒரு ஈடுபாடு என்று சொல்லலாம். ஸ்வாமிகளை பார்க்கும் போது பரம வைஷ்ணவராய் தெரிந்தாலும், அவருடைய சிவ பக்தியை விரைவில் தெரிந்து கொண்டேன்.

ஸ்வாமிகள் தன்னைப் பற்றி எதுவும் கருத்தில் கொள்ளாமல், தன் வாழ்வை முழுமையாக பகவானிடம் விட்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும். அதனால், அவரிடம் எதுவுமே முரண் இல்லாமல் நடக்கும். ஏனென்றால், எல்லாமே ஈஸ்வர சங்கல்பத்தில் நடந்தது. அதற்கு ஒரு சில உதாரணங்கள் நினைவிற்கு வருகிறது.

எனக்கு வெளிநாட்டில் ஒரு நண்பர் இருந்தார். அவருக்கு உடம்பு முடியவில்லை என்று ஸ்வாமிகளிடம் சொன்ன போது, ‘அச்சுதானந்த கோவிந்த…’ என்ற ஸ்தோத்ரம் சொல்லக் சொன்னார். அவர் யாரென்றே ஸ்வாமிகளுக்கு தெரியப் படுத்தவில்லை. அவர் ஒரு மாத்வர். அவருக்கு சொல்லும் போது, சிவ ஸ்தோத்ரம் வரவில்லை.

அது போலவே, என் தம்பி பிள்ளைக்கு ஸ்வாமிகள் ‘ராமபத்ரன்’ என்று பெயர் வைத்தார். என் தம்பியின் மாமனார் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியிடம் ஈடுபாடுடையவர். ‘பத்ரம்’ என்ற வார்த்தை ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியின் மந்திரத்தில் வருகிறது போலும். அதனால், அவனுடைய மாமனாருக்கு திருப்தியாகி விட்டது. இப்படி எல்லாம் தானாகவே நடக்கும்.

அது போல எனக்கு ஸ்வாமிகளுடைய சிவ பக்தியை, புரிந்து கொள்வதற்கு ஸ்வாமிகளின் கருணையால் வாய்ப்பு கிடைத்தது. அதில் சிலவற்றை சொல்கிறேன்.

பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை த்ரயோதிசி திதியும், பிரதோஷ வேளையும் (சாயங்காலம் நாலரை மணியிலிருந்து ஏழரை மணி வரை) சேர்ந்து வரும் போது அது மஹா பிரதோஷம் எனப்படும். ஒவ்வொரு மஹா பிரதோஷத்தில் போதும், ஸ்வாமிகள் சிவானந்த லஹரியின் 100 ஸ்லோகத்தையும் பாராயணம் செய்வார். அந்த சிவானந்த லஹிரியில் ஒரு பத்து ஸ்லோகத்தை ஸ்ரீ ரமண மஹரிஷி எடுத்துக் கொடுத்திருக்கிறார். அந்த பத்து ஸ்லோகத்தையும் தினமுமே பாராயணம் செய்வார். அதைத் தவிர அங்கே வருபவர்கள் ஸ்ரீ ஆதிசங்கரரின் ஸ்தோத்திரங்கள் படிப்பார்கள். முக்கியமாக, ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம், ஸ்ரீ சிவாபராதக்ஷமாரபண ஸ்தோத்ரம், ஸ்ரீ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் என்று சிவ ஸ்தோத்ரங்கள் நிறைய படிப்பார்கள். அவ்வளவையும் நமது ஸ்வாமிகள் கண் ஜலத்துடன், ஆனந்தமாக கேட்பார்கள்.

ஸ்வாமிகள் திருச்சியில் பிறந்தவர். அதனால் யாராவது சுகபிரசவம் ஆக வேண்டும் என்று சொன்னால்,

हे शंकर स्मरहर प्रमथाधिनाथ मन्नाथ साम्ब शशिचूड हर त्रिशूलिन्|

शम्भो सुखप्रसवकृत् भव मे दयालो श्री मातृभूत शिव पालय मां नमस्ते||

“ஹே, சங்கர, ஸ்மரஹர பிரமாதிநாத

மன்னாத ஸாம்ப சசி சூட ஹர திரிசூலின் |

சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாளோ

ஸ்ரீ மாத்ருபூத சிவ பாலய மாம் நமஸ்தே!” ||

என்று ஒரு ஸ்லோகம் இருக்கிறது. அதைச் எழுதிக் கொடுத்து, திருச்சியில் மலைக்கோட்டையில் உள்ள ஸ்ரீ தாயுமான ஸ்வாமியிடம் வேண்டிக் கொண்டு இந்த ஸ்லோகக்தை பாராயணம் செய்யுமாறு சொல்லுவார். சுகப்ரசவம் ஆன பின், முடிந்தால் அந்தப் பக்கம் போகும் போது, அந்த கோவிலில் ஒரு வாழைத் தாரை கட்டுமாறு சொல்லுவார்.

தம்பதிகளுக்குள் ஒற்றுமைக்காகவும், ஆத்தில் குழந்தைகள் கல்யாணத்திற்காகவும், தினமும் சாயங்காலம் பிரதோஷ வேளையில் 1008 ஆவர்த்தி, “சிவ சங்கர ஸர்வாத்மன் ஸ்ரீ மாதர் ஜகதம்பிகே!” என்று முடிந்தால் ஒரு நெய் விளக்கு ஏற்றி வைத்து ஜபம் செய்யுமாறு சொல்லுவார்.

மேலும், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண, ஸ்ரீமத் பாகவத பாராயணத்தில், அவர் கூறும் விளக்கங்கள் சில, அவருடைய சிவ பக்தியை எடுத்துக் காட்டும் வகையில் இருக்கும். அதிலும், ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் நாலைந்து இடங்கள் என் மனதில் நீங்கா இடம் பிடித்தவைகளாகும்.

கங்காதரணம் கதையில், பகீரதன் பத்தாயிரம் வருஷங்கள் தவம் இருந்து, ஸ்ரீ பிரம்மதேவர் தரிசனம் தருகிறார். அப்போது, ஆகாஸ கங்கை பூமியில் வர வேண்டும் என்றும், பிறகு பாதாளத்தில் உள்ள தான் மூதாதையர்களின் அஸ்தியை கரைத்து அவர்கள் நற்கதி அடைய வேண்டும் என்றும், மேலும் தனக்கு சந்ததி வேண்டும் என்றும் வேண்டுகிறார்.

அதற்கு ஸ்ரீ பிரம்மதேவர், “ஆகாஸ கங்கை பூமியில் பாயும் போது, பூமியை உருட்டிக் கொண்டு போய் விடுவாள். அந்த கங்கையின் வேகத்தை தாங்குவதற்கு அந்த பரமேஸ்வரர் ஒருவரால் தான் முடியும். அதனால் நீ சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்!” எனக் கூறுகிறார். அந்த பரமேஸ்வரரை குறித்து பகீரதன் ஒற்றைக்காலில் நின்று அன்ன ஆகாரம் இல்லாமல், பஞ்சாக்னி மத்தியில் நின்று, ஒரு வருஷம் தபஸ் செய்கிறார். இதைக்கண்டு பரமேஸ்வரர் திருப்தியாகி தரிசனம் தருகிறார், “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்க, அதற்கு பகீரதன், கங்கையை தலையில் தாங்கி பூமியில் விட வேண்டும் என வேண்டிக் கொள்கிறார். அவரும் அதற்கு அனுக்கிரஹம் செய்வதாக பதில் கூறுகிறார்.

இங்கே ஸ்வாமிகள், “பரமேஸ்வரர் ஆசுதோஷி. பத்தாயிரம் வருஷம் தபஸ் செய்து ஸ்ரீ பிரம்ம தேவர் தரிசனம் கொடுத்தார். ஆனால், ஒரு வருஷத்திலே, பரமேஸ்வரர் திருப்தியாகி தரிசனம் தந்து விடுகிறார்”, என்று கூறுவார். அது மட்டுமல்ல ஸ்ரீ ப்ரம்ம தேவர், ‘அந்த பரமேஸ்வரர் ஒருவரால்தான் அதைச் செய்ய முடியும்!’ என்று சொன்னதை அழுத்திச் சொல்லுவார். மேலும், இப்போது சொல்லப் போவதை, உத்தம சிவ பக்தராய் இருந்தால்தான் ஒருவரால் சொல்ல முடியும்.

ஆகாசத்தில் இருந்து விழும் போது, கங்கை தன் கர்வத்தை காட்டுகிறாள். பரமசிவன் அந்த நதியை தன் ஜடாபாரத்தில் பிடித்து வைத்து கொள்கிறார். அப்புறம், ஒரு வருஷம் கழித்து வெளியே விடுகிறார். அந்த கங்கை ப்ரவாகமாய் போகும் போது, ஜன்னு மஹரிஷியின் யாக சாலையை அடித்துக் கொண்டு போய் விடுகிறாள். அதனால், ஜஹ்னு மஹரிஷி கங்கா தேவியை எடுத்து குடித்துவிடுகிறார். அப்போது, பகீரதனுக்காக தேவர்களெல்லாம் ஜஹ்னு மகரிஷியிடம் வேண்டிக் கொள்கிறார்கள். மகரிஷியும் மனமிரங்கி தான் காது வழியாக கங்கையை வெளியே விடுகிறார். அதனால், கங்கைக்கு ஜாஹ்னவி என்றும் ஒரு பெயர்.

இங்கே, தேவர்களெல்லாம் வேண்டிக் கொண்டார்கள் என்று வருகிறது. அதற்கு, ஸ்வாமிகள், “பகீரதன் ஏற்கனவே பரமசிவனை வேண்டிக் கொண்டார். அதன் பிறகு எல்லாமே வெற்றிதான். அதனால், தேவர்கள் எல்லாம் அவனுக்காக வேண்டிக் கொண்டார்கள்” என்பதை கூறிவிட்டு அதில் உள்ள சூக்ஷ்மமான ஒன்றையும் கூறுவார். அதாவது, “பரமசிவனை வேண்டிக்கொண்டால் அதன் பிறகு வேறு ஒரு தெய்வத்தை வேண்ட தேவை இருக்காது!” என்பார். உள்ளே ஆழமான சிவ பக்தி இருந்தால்தானே இப்படி ஒரு அர்த்தத்தை சொல்ல முடியும்?

அடுத்தது அமிர்தம் கடைந்த போது, ஆலாகல விஷம் உண்டாகிறது. எல்லோரும் வேண்டிக் கொள்ள, பரமேஸ்வரரும், அந்த விஷத்தை தானே உண்டு எல்லோரையும் ரக்ஷிக்கிறார். அவருடைய உள்ளேயும் அண்ட சராசரங்கள் உள்ளதால், விஷத்தை தன் கண்டத்திலேயே தக்க வைத்துக் கொள்கிறார். இந்தப் பெருமையையும், மிகவும் சந்தோஷமாக சொல்லுவார்.

அடுத்தது கர வதத்தின் போது, வால்மீகி முனிவர், ‘எப்படி ஸ்வேதாரண்யத்தில் (திருவெண்காட்டில்) அந்த பரமசிவன் அந்தகாசுரனை எரித்தாரோ, அது போல ஸ்ரீ ராமரும் கர-தூஷணாதிகளை ஆக்னேயாஸ்தரத்தை போட்டு எரித்தார்’ என்று கூறுவதை முக்கியமாக எடுத்துச் சொல்வார்.

பிறகு ராமர், அகஸ்தியர் சொன்னபடி பஞ்சவடியில் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு தங்குகிறார். அங்கே கோதாவரியில், ஸ்ரீ ராமரும், ஸீதாதேவியும், ஸ்ரீ லக்ஷ்மண ஸ்வாமியும் ஸ்நானம் செய்து விட்டு வருகிறார்கள். அதை ஸ்ரீ வால்மீகி முனிவர், ‘பரமசிவனும், பார்வதி தேவியும், நந்திகேஸ்வரரும் ஸ்நானம் செய்துவிட்டு வருவது போல் வந்தார்கள்.’ என்று கூறுவதை சந்தோஷமாக எடுத்துக் கூறுவார். “இதைப் படிக்கும் போது மஹாபெரியவா பண்ணும் சந்த்ரமௌலீஸ்வர பூஜை ஞாபகம் வருகிறது. இதுவே ஒரு பட்டாபிஷேகம்” என்று கொண்டாடுவார்.

அடுத்து கும்ப-நிகும்ப வதத்தின் போது, ஸ்ரீ ராமர் தன் வில்லில் டங்காரம் செய்கிறார். ‘அந்த ஒலியே ராக்ஷஸர்களுக்கு நடுக்கத்தை கொடுத்தது!’, என்று வரும். அந்த இடத்தில், ‘பவோ வேத மயம் தனு:’ என்று வருகிறது. ‘அந்தப் பரமேஸ்வரன் வேத மயமான தனுவை வைத்துக் கொண்டு நிற்பது போல ஸ்ரீ ராமர் நிற்கிறார்!’, என்று பொருள். இதை ஸ்வாமிகள் நிறுத்திச் சொல்லுவார்.

அடுத்து, ஸ்ரீ ராமர், ராவணனின் மிகவும் பயங்கரமான, மூலபல சேனையை கந்தர்வாஸ்திரத்தை செலுத்தி வதம் செய்கிறார். பிறகு, “இந்த அஸ்தரம் எனக்கும் அந்த முக்கண்ணனான பரமேஸ்வரருக்கும்தான் தெரியும்!”, என்று கூறுவதை எடுத்துச் சொல்லுவார்.

ஆஞ்சநேயர் ருத்திராம்சம். ஹனுமார் லங்கையை எரித்த போது, ‘ருத்திரன் திரிபுரத்தை எரித்தது போல…’ என்று வரும். அதையும் சொல்லுவார். இப்படி வால்மீகி முனிவரின் அந்த சிவ பக்தியை காட்டும் இடங்களை ஸ்வாமிகள் விடாமல் சொல்லுவார்.

அதே நேரத்தில் சிவோத்தகர்ஷத்தினால் விஷ்ணுவை குறைவாய் சொன்னாலோ, அல்லது விஷ்ணு பக்தியினால் சிவனை குறைவாய் சொன்னாலோ, ஸ்வாமிகள் ரசிக்கவே மாட்டார்.

பிணி எலாம் வரினும், அஞ்சேன்; பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்;

துணி நிலா அணியினான் தன் தொழும்பரோடு அழுந்தி, அம்மால்,

திணி நிலம் பிளந்தும், காணாச் சேவடி பரவி, வெண் நீறு

அணிகிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

என்று மாணிக்கவாசகர் ஸ்வாமிகளின் ‘அச்சப் பத்து’ பாட்டில் வரும்.

‘நான் சாவுக்கும் பயப்பட மாட்டேன்… நோய்க்கும் பயப்பட மாட்டேன்… ஆனால், நெற்றியில் திருநீறு இடாதவரை கண்டால் அஞ்சுகிறேன்!’ என்கிறார்.

அதை போல ஸ்வாமிகள், சிவ துவேஷமோ, விஷ்ணு துவேஷமோ காட்டுபவர்களை கண்டால், ‘நம்முடைய பக்தி போய்விட கூடாது. இது மாதிரியானவர்களை கண்டால் ஒதுங்கி இருக்க வேண்டும்’, என்று தன் பேச்சைக் கேட்பவர்களை எச்சரிப்பார்.

அவர் ஸன்யாசம் வாங்கிய பிறகு, சந்யாஸத்தைப் பற்றி ஒரு புத்தகம் பார்க்க நேரிட்டது. அதில், “சாப்பிடும் போது, ‘மஹாதேவ! மஹாதேவ! மஹாதேவ!’ என்று சொல்லிக் கொண்டே சாப்பிட வேண்டும்”, என்று வந்தது. அதற்கு ஸ்வாமிகள், “நான் இது வரைக்கும் ‘கோவிந்த! கோவிந்த! கோவிந்த!’ என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டேன். இனியும் அப்படியே பண்ணப் போகிறேன்… இவர் ரொம்ப சிவ பக்தர் போல் இருக்கு,” என்றார்.

ஸ்வாமிகளுக்கு ஸத்குரு ஸ்வாமிகள் பரம்பரையில் வந்த ஸ்ரீ நாகராஜ ஐயர் என்பவர் சேவை புரிந்து வந்தார். அவர் நன்றாக பாடுவார். பழூர் கிராமத்தை சேர்ந்தவர். அவருடைய உறவுக்காரர்கள் தான் இன்று அதிஷ்டானத்தை பார்த்துக் கொள்கிறார்கள். அந்த ஊரில் ஒரு ஸ்ரீ ராம பஜனை மடம் பல நூறு வருடங்களாய் இருக்கிறது. அங்கே வருஷத்தில் ஐந்து நாள் ஸ்ரீ ராம நவமி உற்சவம் கொண்டாடுகிறார்கள். ஸ்ரீ நாகராஜ ஐயர் அதில் எல்லாம் நன்றாக பாடுவார். அதனால், ஸ்வாமிகள் சாப்பிடும் போது, மிக இனிமையாக ‘கோவிந்த… கோவிந்த… கோவிந்தா! கோவிந்த… கோவிந்த… கோவிந்தா!’ என்று பாடுவார். அவர் அப்படி பாடுவதை கேட்டால், சாப்பிடுவது தேனாக இருந்தாலும் புளிக்கும். அப்படி அவ்வளவு இனிமையாக அந்த ‘கோவிந்த’ நாமத்தை பாடுவார். அப்படி பதினைந்து வருஷமாய் ‘கோவிந்த’ நாமாவைக் கேட்டு சாப்பிட்ட ஸ்வாமிகள், ஸன்யாசம் வாங்கிய பிறகு, ‘மஹாதேவ’ நாமாவை கேட்டு சாப்பிட வேண்டும் என்ற போது, “இல்லை. எனக்கு, ‘கோவிந்த’ நாமாவே போதும்”, என்றார்.

ஸ்வாமிகள் ‘கோவிந்த’ நாமாவை சொல்லும் போதும் அவ்வளவு ருசிக்கும்.

‘கோவிந்த கோவிந்த ஹரே முராரே….

கோவிந்த கோவிந்த முகுந்த கிருஷ்ணா…

கோவிந்த கோவிந்த ரதாங்கபாணே….

கோவிந்த தாமோதர மாதவேதி…” என்ற பாடும் போது அப்படி இனிக்கும்.

ஸ்ரீமத் ராமாயணத்தில் அல்லது ஸ்ரீமத் பாகவதத்தில், சிவ துவேஷமாகவோ, ‘சிவனுக்கு மேல் விஷ்ணு’ என்றோ பின்னால் வந்த சிலர், ஏதாவது ஓரோர் வரி நடு நடுவில், மூலத்தில் இல்லாததை நுழைத்து இருக்கிறார்கள். அது மாதிரியான இடத்தை ஸ்வாமிகள், “அதை பிராக்கெட் (bracket) பண்ணிடு!”, என்பார். அதாவது “அந்த வரியை அடித்துவிடு” என்று சொல்ல மாட்டார். “அடிப்பதற்கு நமக்கென்ன உரிமை? இந்த புஸ்தகம் போட்டவர், இதை ராமாயணம் என்று நினைத்து போட்டிருக்கார். ஆனால், நம்ம மனசுக்கு இது ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் அதை பிராக்கெட் (bracket) பண்ணிடு!”, என்பார். அப்படியென்றால், அந்த புஸ்தகத்தை நாம் படிக்கும் போது பிராக்கெட் (bracket) செய்த இடத்தை படிக்காமல் விட்டுவிட வேண்டுமென்பது அர்த்தம்.

அதனால், ஸ்வாமிகள் ‘ப்ராக்கெட் (bracket) பண்ணிடு!’ என்பதை, எந்த விதமான சிவ துவேஷமோ, விஷ்ணு துவேஷமோ செய்பவர்களை கண்டால், ‘விட்டுத் தள்ளு! மேலே போனால் மேன்மை கிடைக்கும்’ என்று ஸ்வாமிகள் சொன்ன ஒரு உபதேசமாகவே வைத்துக் கொண்டுள்ளேன்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா கோவிந்தா…

ஸ்வாமிகள் சிவ பக்தி (15 min audio in tamizh, same as the script above)

2 replies on “கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் சிவபக்தி”

அருமையான ப்ரசங்கம், எழுத்து! கோர்வையா ஸ்வாமிகள் சொல்லும் வியாக்யானத்தை இணைத்து, சிவ, வைஷ்ணவ பேதம் இல்லாமல் எழுதப்பட்ட விளக்கம்! இதற்கு விமரிசைக்க, கருத்து எழுத என் போல் நிரக்ஷரகுக்ஷிக்கு எவ்வித அதிகாரமும் இல்லை ! நம:பார்வதி பதே ஹர ஹர மஹாதேவா என்பதை த் தவிர !

Leave a Reply to Mythili SrinivasanCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.