Categories
Govinda Damodara Swamigal

ஆத்மா த்வம் கிரிஜா மதி: வள்ளிமலை சுவாமிகளும் சேஷாத்ரி சுவாமிகளும்


आत्मा त्वं गिरिजा मतिः सहचराः प्राणाः शरीरं गृहं
पूजा ते विषयोपभोगरचना निद्रा समाधिस्थितिः ।

सञ्चारः पदयोः प्रदक्षिणविधिः स्तोत्राणि सर्वा गिरो
यद्यत्कर्म करोमि तत्तदखिलं शम्भो तवाराधनम् ॥

“ஆத்மா த்வம் கிரிஜா மதி: சஹசரா: ப்ராணா: சரீரம் க்ருஹம்

பூஜா தே விஷயோப போக ரசனா: நித்ரா சமாதி ஸ்திதி: |

ஸஞ்சார: பதயோ: பிரதக்ஷிண விதி: ஸ்தோத்ராணி சர்வா கிரா:

யத்யத் கர்ம கரோமி தத் தத் அகிலம் சம்போ தவாராதனம் ||

ஆதி சங்கர பகவத்பாதாள் சிவமானஸ பூஜா ஸ்தோத்ரம் அப்படினு ஒரு ஸ்தோத்ரம் செய்திருக்கார். அதில் வருகிற ஒரு ஸ்லோகம் இது.

இதனுடைய அர்த்தம் என்னவென்றால்…

“எனக்குள் உறையும் ஆத்மா நீதான். என்னுடைய புத்தி தான் அம்பாள். என் உடலில் இருக்கக் கூடிய பிராணன்கள் எல்லாம் உன்னுடன் இருக்கும் கணபதி, முருகன் ஆகிய தெய்வங்கள். என்னுடைய சரீரமே நீ வசிக்கும் க்ருஹம். என்னுடைய பஞ்ச புலன்களைக் கொண்டு எந்த எந்த போகங்கள் எல்லாம் அனுபவிக்கிறேனோ, அதுவே உனக்கு பூஜை. என்னால் ஸமாதி நிலையில் எல்லாம் உன்னை த்யானம் செய்யத் தெரியவில்லை. நான் தூங்குவதே அந்த ஸமாதி என்று வைத்துகொள். என் கால்களை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் சுற்றுகிறேன். அந்த சஞ்சாரமே உனக்கு செய்யும் பிரதிக்ஷிணமாக வைத்துக் கொள். நான் பேசும் பேச்செல்லாமே உனக்கு ஸ்தோத்ரம். நான் என்னென்ன காரியங்கள் செய்கிறேனோ, ஹே பரமேஸ்வரா! அதெல்லமே உனக்கு செய்யும் ஆராதனமாக ஏற்றுக்கொள்.”

இந்த ஸ்லோகம் மூலமாக, பகவானை அடைய ஒரு எளிமையான பாவனையை நம் மனசுக்கு சொல்லிக்கொடுக்கிறார். ஆசார்யாள், அத்வைத சித்தி அடைந்தவர்… ப்ரஸ்தானத்ரய பாஷ்யம் எல்லாம் எழுதி பாடம் சொல்லிக் கொடுத்தவர்…. எளிமையா பக்தியினாலேயும் அந்த பகவானை அடையலாம் என்பதற்காக இந்த ஸ்லோகத்தை சொல்லியிருக்கார்.

இந்த ஸ்லோகத்திற்கு அருமையான விளக்கமாக ஒரு நிகழ்ச்சி சமீப கால வரலாற்றில் அமைந்தது. அது என்னவென்று பார்ப்போம்.

வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் என்று ஒரு மகான் இருந்தார். இன்று நாம் எல்லோரும், உலகம் முழுக்க திருப்புகழ் படிக்கின்றோம் என்றால் அது அந்த வள்ளிமலை ஸ்வாமிகள் அளித்த அருட்கொடை என்றே கூறலாம். அவர் ஒரு வள்ளல். அவர் திருப்புகழை விடாமல் அவர் காலம் முழுவதும் எல்லா இடங்களிலும் கானம் செய்ததால் தான் நாம் இன்று இவ்வளவு பேர் திருப்புகழை படிக்கின்றோம்.

அவருக்கு ஆரம்பத்தில் அர்த்தநாரி என்ற பெயர். சின்ன வயதில் வறுமையினால் படிக்க முடியவில்லை. அவர் தன்னுடைய மாமாவோடு சமையல் வேலை செய்ய மைசூர் அரண்மனை போய்விட்டார்.

நல்ல புத்திமான். அதனாலே, நல்ல சமையல் செய்ய வருகிறது. நல்ல கெட்டிக்காரராய் இருக்கிறார். எல்லோரிடமும் நல்ல பேர் வாங்குகிறார். ரொம்ப புஷ்டியாகவும் இருக்கிறார். பயில்வானாய் இருக்கிறார். அதனால் மல்யுத்தம் போடும் அளவிற்கு நல்ல சக்திமானாகவும் இருக்கிறார்.

புத்திமானாகவும் சக்திமானாகவும் இருந்தவருக்கு பக்திமானாக ஆகும் வேளை வந்தது போலும். திடீரென்று ஒரு நாற்பது வயதில், மனைவி காலமாகி விடுகிறார். ஒரு பெண் குழந்தையும் காலமாகி விடுகிறார். இந்த கஷ்டங்களுக்கு மேலே அவருக்கு வயிற்றிலே ஒரு கடுமையான வலி வந்து விட்டது. என்னென்னவோ ராஜ வைத்தியங்கள் செய்தும் சரியாகவில்லை.

அப்போ ஒரு பெரியவர் சொல்கிறார். “நீ பழனி மலைக்கு போ! முருகப் பெருமானுக்கு சேவை செய்! அவருக்கு அபிஷேகம் செய்த பாலை சாப்பிடு உனக்கு உடம்பு சரியாகும்…” என்கிறார்.

சரி என்று இவரும் பழனி மலைக்கு வந்தார். அந்த காலத்தில் இப்போது இருப்பது போன்ற வசதிகள் கிடையாது. எது வேண்டுமென்றாலும் கீழே இருந்து காவடி கட்டி கொண்டு போக வேண்டும். அபிஷேகத்திற்கு ஜலமானாலும் சரி, பஞ்சாமிர்ததுக்கு பழமானாலும் சரி, சந்தனமானாலும் சரி, விபூதியானாலும் சரி எது வேண்டுமென்றாலும் கீழே இருந்துதான் போக வேண்டும். இப்படி இவற்றை எல்லாம் காவடி கட்டி எடுத்து வருவது போன்ற எல்லா சேவைகளையையும் இவர் செய்கிறார். பகவானுக்கு அபிஷேகம் செய்த அந்த பாலை சாப்பிட்டு அவருக்கு வயிற்று வலி குணம் ஆகிறது. முருகபக்தி ஏற்படுகிறது.

அந்த கால கட்டத்தில், பழனி கோயிலில் ஒரு நடனமங்கை நாட்டியம் ஆடுகிறாள்.

“சிங்கார ரூப மயில் வாகன நமோ நம…

கந்தா குமார சிவா தேசிகா நமோ நம…”

என்று வரிகளை கேட்டவுடன் இவருக்கு அந்த வரிகள் ரொம்ப பிடித்து விட்டது. இது என்ன? யாருடைய பாட்டு என்று கேட்கிறார். இது அருணகிரிநாதர் செய்த திருப்புகழ் என்று சொன்னவுடனே, “அந்த பாட்டை எனக்கு எழுதிக் கொடுங்கள்” என்று எழுதி வாங்கிக் கொள்கிறார். அவருக்கோ எழுத படிக்க தெரியாது. அதனால், வருகிறவர்களிடம், “இதைப் படியேன்!”, “இதைப் படியேன்!” என்று படிக்கச் சொல்லிக் கேட்டுக் கேட்டு அந்த திருப்புகழை மனப்பாடம் செய்து கொள்கிறார்.

அதற்கப்புறம், நாலாவது படிக்கிற ஒரு பள்ளிக் கூட பையனிடம் சிலேட்டு பல்பம் வைத்துக் கொண்டு ‘அ, ஆ, இ, ஈ,..”கற்றுக் கொண்டு, சென்னையில் திரு.வ.தா.சுப்ரமணிய பிள்ளை என்பவர் முதல் முதலில் திருப்புகழ் புத்தகம் போட்டிருந்தார். அதை வரவழைத்து, நிறைய திருப்புகழ் பாடல்களை கற்றுக் கொண்டு, அந்த திருப்புகழை ரொம்ப பிரியமாக ஓதிக் கொண்டிருந்தார்.

நடுவிலே இவர் சிருங்கேரி நரசிம்ம பாரதி ஸ்வாமிகளிடம், ‘எனக்கு ஸன்யாசம் கொடுங்கள்…’, என்று பிரார்த்தனை செய்த போது அவர், ‘உனக்கு வானப்ரஸ்தாஸ்ரமம் கொடுக்கிறேன்..’, என கொடுத்தார்.

இரண்டாவது மனைவியும் காலமான பின் இவர் திருப்புகழை ஓதிக்கொண்டு வட நாட்டுக்கு யாத்திரையாய் போகிறார். அங்கே ஒரு பெரியவர், இவருக்கு ‘சச்சிதானந்தா’ என்று இவருக்கு தீக்ஷா நாமத்துடன் ஸன்யாசம் அளித்தார். அப்படியெல்லாம் சுற்றினாலும், ‘எனக்கு பூரணத்வம் ஏற்படவில்லையே?’ என்ற ஒரு தாபத்திலேயே இருந்தார். அப்போ அவர் கனவிலே பழனி மலை முருகன் தரிசனமளித்து, ‘நீ, திருவண்ணாமலைக்கு போ!’ என்று கூறினார். அங்கே திருவண்ணமலையிலே ஸ்ரீ ரமண பகவானை பார்த்தவுடனே, பழனியாண்டியே கோவணத்தோடு வந்திருப்பதாக ஏற்றுக் கொண்டு, ரமணருக்கு சேவை செய்து வந்தார்.

இப்படி இருக்கும் போது, ஒரு நாள் ஸ்கந்தாஸ்ரமத்தில், மலைமேலே இருக்கும் போது, “நீ, கீழே போ, எழுந்து ஓடு!ஓடு!” என்று ஸ்ரீ ரமணர் சொன்னார். இவருக்கு, “என்னடா! போகச் சொல்லுகிறாரே…” என்று ஒரே தாபமாக இருக்கிறது. ஆனாலும் குரு வார்த்தையைக் கேட்டு, அதன்படி மலை இறங்கி செல்கிறார். அந்தப் பணிவு இருக்கிறதா என்று பரீக்ஷை செய்துதான், மஹான்கள் அனுக்ரஹம் செய்வார்கள். உடனே இவர் இறங்கி வருகிறார். அப்போது எதிரில் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் வந்து தரிசனம் கொடுத்தார்.

ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள், ஒரு பெரிய சித்த புருஷர். அவர் காஞ்சீபுரத்தில் பிறந்தவர். அவருக்கு பரமேஸ்வரனே ஸ்ரீ பாலாஜி ஸ்வாமிகள் என்ற பேரில் நாலு சிஷ்யர்களோடு வந்து தக்ஷிணாமூர்த்தியாக தரிசனம் தந்து ஸன்யாசம் தந்தார். அவரோட அப்பா அம்மா அவர் சின்ன வயசில இருக்கும் போதே காலமாகி விடுகிறார்கள். “அவர் மூக பஞ்சசதியை சொல்லிக் கொண்டு இரவு முழுவதும் காமாக்ஷி கோயிலை ப்ரதக்ஷிணம் செய்வார்”, என்று ஸ்ரீ மஹாபெரியவா நம் ஸ்வாமிகளிடம் சொல்லி இருக்கிறார். அப்பேற்பட்ட மகான். அவருக்கு ஞானமும் ஏற்பட்டு விடுகிறது. வட நாட்டிலில் இருந்து ஒரு ஸன்யாசி நாலு சிஷ்யர்களோட வந்து இவருக்கு ஸன்யாசம் கொடுத்து விட்டு மறைந்து போய் விடுகிறார். அவரை அவரோட சித்தி சித்தப்பா தான் வளர்க்கிறார்கள். அவரோ “நான் ஒரு ஸன்யாசி வீட்டுக்குள் வரமாட்டேன்!”, என்கிறார். அவரோட சித்தி சித்தப்பாவிற்கு, “இப்படி இவர் சொல்கிறாரே! நாம் சரியாக கவனிக்காமல் விட்டோமோ?”, என்று கவலை வந்து விடுகிறது.

அப்போது ஒரு நாள், சேஷாத்ரி சுவாமிகளுடைய அப்பா ஸ்ராத்தம் வருகிறது. அவரோ, “எனக்கு ஸ்ராத்தம் எல்லாம் இல்லை. நான் ஒரு ஸன்யாசி, எனக்கு கர்மாக்கள் எல்லாம் இல்லை”, என்கிறார். அவரோட சித்தி சித்தப்பாவும் என்னடா இப்படி சொல்கிறாரே என்று அவரை பிடித்து, “ஸ்ராத்தம் முடியும் வரை நீ ஆத்துல தான் இருக்கணும்”, என்று கூறி அவரை ஓர் அறையில் அடைத்து வைத்து விடுகிறார்கள். ஸ்ராத்தம் முடிந்து அந்த அறையை திறந்து பார்த்தால் அவரைக் காணவில்லை. அவர் மறைந்து விடுகிறார். அவர் அதோடு திருவண்ணாமலைக்கு போய் விடுகிறார். அப்படி ஒரு மகான். சித்த புருஷர்.

அவருடைய லீலைகள் அற்புதம். அவரோட பெருமையை சொல்லணும்னா ஒரே நிகழ்ச்சியில் சொல்லி விடலாம். நம்முடைய மஹாபெரியவா காஞ்சிபுரத்தில் அவர் பிறந்த வீட்டை தேடி கண்டு பிடித்து ஒரு பூஜா ஸ்தலமா வைத்திருக்க எற்பாடு செய்திருக்கார். அந்தப் பணியை பரணீதரன் என்ற ஒரு எழுத்தாளரிடம் கொடுத்தார். அந்த பரணீதரன் அந்த வீட்டை கண்டு பிடித்தவுடன், அந்த வீட்டில் வைப்பதற்காக ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் உட்கார்ந்திருக்கிற மாதிரி ஒரு சித்திரம் வரைய மஹாபெரியவா எற்பாடு செய்ய சொன்னார். அப்போது, ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் எப்படி யோகாசனத்தில், குக்குடாசனத்தில் உட்கார்ந்திருப்பார் என்று மஹாபெரியவா உட்கார்ந்து காட்டினாராம். அப்போது, “இப்படித்தான் அவர் உட்கார்ந்திருப்பார். இதை பார்த்துக்கோ! அப்புறம் அவருடைய பழைய சித்திரம் எல்லாம் பார்த்துக்கோ! இதை வச்சு அவருடைய படம் வரை…”, என்று சொன்னார்.

அப்போ மஹாபெரியவா, “சேஷாத்ரி ஸ்வாமிகள் போல ஆசனத்தில் வேண்ணா நான் உக்காரலாம். ஆனா, அவரைப் போல ஒரு நிலை வர எனக்கு எத்தனை ஜன்மா ஆகுமோ?”, அப்படீன்னு சொன்னாராம். அதைப் போல ஸ்ரீ ரமணரும், ஒரு சோபா போட்டு “உட்கார்ந்துக் கொள்ளுங்கள்”, என்றவுடன், “ஆமா! நான் இருக்கேன். சோபா இருக்கு. உட்கார்ந்துக்க போறேன். தெரியறதே! நான் என்ன சேஷாத்ரி ஸ்வாமிகளா?” என்றாராம். அப்படி எல்லோரும் பிராத்தனை பண்ணக் கூடிய உயர்ந்த ஞான நிலையிலே ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் இருந்தார்.

அந்த சேஷாத்ரி ஸ்வாமிகள், இந்த பரிபக்குவமான ஆத்மா, இந்த அர்த்தநாரி, சச்சிதானந்த ஸ்வாமிகள் வருகிறார் என்றவுடன், எதிரில் பார்த்து, “உனக்கு மந்திரம் திருபுகழ்தானே!”, என்று கேட்கிறார். சச்சிதானந்த ஸ்வாமிகளுக்கு ரொம்ப ஆச்சர்யம், ரொம்ப ஆனந்தம். “ஆமாம் ஸ்வாமி!”, என்கிறார். ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் அவரை கட்டிண்டு அன்பு பாராட்டி, இந்த, “ஆத்மா த்வம்கிரிஜா மதிஹி…” என்ற ஸ்லோகத்தை சொல்லி, அதனுடைய கருத்ததைச் சொல்லி, “இது போன்ற அத்வைத கருத்துக்கள் திருப்புகழில் இருக்கா?” என்று கேட்கிறார்.

அதற்கு சச்சிதானந்த ஸ்வாமிகள் திருப்புகழில் இருந்து,

“எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதய பாவ னாதீதம் …… அருள்வாயே” என்ற பாடலை சொல்கிறார்.

அதாவது இந்த உடம்பில் ‘எனது! யான்!’ என்ற எண்ணம் வேறாகி, ‘எல்லோரும் எல்லாமும் இந்த உள்ளே இருக்கிற வஸ்துவான ஆத்மாதான்!’, என்ற இதய பாவனைக்கு மீறிய அந்த நிலையை அருள்வாய்” இது ‘பாவனா அதீதம்’, அதாவது மனசால் புரிந்துக் கொள்ளகூடிய நிலை இல்லை அது. அந்த நிலையை அருள வேண்டுமென்று அருணகிரிநாதர் பிரார்த்தனை செய்கிறார்.

அதைக் கேட்டதும் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள், “இது போன்ற உயர்ந்த வேதாந்த கருத்துக்கள் எல்லாம், திருப்புகழில் இருக்கு. திருப்புகழ் ஒரு மஹா மந்திரம். அதுவே உனக்கு போதும். நீ வள்ளிமலையில் போய் தபஸ் பண்ணு. நான் வரேன்,” என்று அனுக்ரஹம் செய்தார். அதைக் கேட்ட சச்சிதானந்த ஸ்வாமிகள் வள்ளிமலைக்குச் சென்றார்.

அங்கே வள்ளிமலையில் ஒரு குகை இருக்கு. அதை தன் கையாலேயே பெரிது பண்ணி, அங்கேயே பன்னிரண்டு வருடம் திருப்புகழையே ஓதி, தபஸ் பண்ணி சித்தி அடைந்தார். அங்கே ஒரு ஆஸ்ரமம் கட்டிண்டு இருந்தார்.

அப்புறம் சென்னைக்கு எல்லாம் வந்து, முருகப் பெருமானின் பன்னிரண்டு கையிலேயும் இருக்கிற ஆயுதங்களின் பெயராலேயும் பன்னிரண்டு திருப்புகழ் சபைகள் நிறுவி, எல்லோரும் திருப்புகழை பாடும் படிச் செய்தார். அவருடைய அனுக்ராஹத்தினால் தான் இன்று சென்னையில் என்று இல்லாமல், தமிழ்நாட்டில் என்று இல்லாமல், உலகம் முழுக்க திருப்புகழ் என்ற அமுதத்தை அனைவரும் பருகுகின்றார்கள். திருப்புகழ் பாராயண தவநெறி திருமுறை வள்ளிமலை ஸ்வாமிகள் தந்த அருட்கொடைதான். அதனால்தான் வள்ளிமலை வள்ளல் என்று கூறக் காரணமாயிற்று. அப்படி வள்ளிமலைக்கு இவர் சென்று சித்தி பெற்று நமக்கு திருப்புகழை தருவதற்கு, ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளும், ஸ்ரீ ரமண பகவானும் காரணம். அவர்களுக்கு பிடித்தது இந்த, “ஆத்மா தவம் கிரிஜா மதிஹி…” என்ற ஸ்லோகம். இந்த வள்ளிமலை ஸ்வாமிகள் சரித்ரத்தை நம் ஸ்வாமிகள் என்னிடம் பல முறை சொல்லி இருக்கிறார்.

வெற்றி வேல் முருகனுக்கு… அரஹரோஹரா!

ஆத்மா த்வம் கிரிஜா மதி: (11 min audio in Tamizh, same as the transcript above)

3 replies on “ஆத்மா த்வம் கிரிஜா மதி: வள்ளிமலை சுவாமிகளும் சேஷாத்ரி சுவாமிகளும்”

ஆத்மார்ப்பணம் என்பதை எளிய வழியில் ஆசார்யாள் சொல்லியிருக்கார். இதே கருத்துள்ள ஸ்லோகம் சௌந்தர்ய லஹரி 27 வது ஸ்லோகத்தில் நாம் காணலாம் ! நாம் நித்ய வாழ்வில் அனிச்சையாக செய்யர ஒவ்வொரு செயலும் பகவானுக்கும் அம்பாளுக்கும் ஆராதனையா வனக்கமா ஏற்றுக்கச் சொல்லி ஆசார்யாள் சொல்றார். !
ஜபோ கல்ப சில்பம் ஸ கலமபி முதரா விரசனா கதி பிராதக்ஷின்யம் எனத் தொடங்கும் இது நம்மை இறைவனுக்கு அர்ப்பணம் விதமாக , அனிச்சையாக நாம் செய்யும் செயல்கள் அவருக்கே அர்ப்பணம் ஆகிறது !
ஶ்ரீ வள்ளிமலை சுவாமிகளின் வரலாறு எழுதிய வீதம் பாரரையும் ஈர்க்கும் விதமாக இருந்தது !
ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள், ஶ்ரீ ரமண மஹரிஷி போல் நாநெப்போது ஆவேன் என மஹா பெரியவா சொண்ணதிலிருந்தே இந்த மஹான்களின் உயர்வு நமக்குப் புலனாகிறது! கணபதியின் பிரவசனமும் எழுத்தும் எளிமையும் , அழகும், சாதாரண மனிதரையும் சென்றடையும் விதமாக நன்றாக இருந்தது !
திருப்புகழ் என்ற அமுதினை நம் போல் எளியோர் பாராயணம் செய்யவும், வேல் மாறல் மந்திரம் லோகம் பூரா ஒலிக்கk காரணமான வள்ளிமலை சுவாமிகளுக்கு வந்தனம் !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.