Categories
Govinda Damodara Swamigal

பாகவதத்தில் சொல்லிய பக்தி – கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு

Swamigal reading Srimad Bhagavatham

பாகவதத்தில் சொல்லிய பக்தி (8 min audio in tamizh, same as the transcript above)

योगीन्द्राणां त्वदङ्गेष्वधिकसुमधुरं मुक्तिभाजां निवासो

भक्तानां कामवर्षद्युतरुकिसलयं नाथ ते पादमूलम् ।

नित्यं चित्तस्थितं मे पवनपुरपते कृष्ण कारुण्यसिन्धो

हृत्वा निश्शेषतापान् प्रदिशतु परमानन्दसन्दोहलक्ष्मीम् ॥

யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதிக ஸுமதுரம் முக்திபாஜாம் நிவாஸோ

பக்தாநாம் காமவர்ஷ த்யுதரு கிஸலயம் நாத தே பாதமூலம் |

நித்யம் சித்தஸ்திதம் மே பவநபுரபதே க்ருஷ்ண காருண்யஸிந்தோ

ஹ்ருத்வா நிஸ்சேஷதாபான் ப்ரதிசது பரமாநந்தஸந்தோஹலக்ஷ்மீம் ||

இது நாராயணீயத்தில் நூறாவது தசகத்தில் உள்ள ஸ்லோகம். ஸ்வாமிகள் செப்டம்பர் 2003 ல் ஒரு நாள் இந்த ஸ்லோகத்தை என்கிட்ட சொன்னார். ரொம்ப கணீரென்று சொன்னார். “முன்ன மாதிரி சொல்ல வரதான்னு பார்த்தேன்” என்றார். ஏன்னா அப்ப அவருக்கு உடம்பு ரொம்ப தளர்ந்து இருந்தது. ஸ்லோகத்திற்கு பதம் பிரித்து அர்த்தமும் சொன்னார். அன்னிக்கு சொன்னார் – “இன்னிலேர்ந்து நூறாவது நாள் கார்த்திகை இருபத்தி எட்டாம் தேதி “நாராயணீயம் தினம்” னு கொண்டாடுவா. அன்னிக்கு பூர்த்தி ஆகிற மாதிரி நூறு நாள் பின்னாடி எண்ணிக்கொண்டு தினம் ஒரு ஸர்கமாக ஒரு ஆவர்த்தி பண்ணிண்டு இருக்கேன். பட்டத்ரி அப்படி தான் தினம் ஒரு தசகமாக ரசனம் பண்ணினார்னு ஒரு நம்பிக்கை” என்று சொன்னார்.

அந்த ஆவர்த்தியை பூர்த்தி பண்ணிட்டு தை மாதம் வந்தவுடன் ஸ்வாமிகள் சித்தி அடைந்து விட்டார். அவருக்கு கார்த்திகை இருபத்து எட்டாம் நாள்  கிருஷ்ண தர்சனம் கிடைத்து விட்டது. அதற்கு அப்பறம் போதும் என்று உடம்பை உகுத்து விட்டார் என்று என் நம்பிக்கை.

அந்த ஸ்லோகத்தில் “பக்தாநாம் காமவர்ஷ த்யுதரு கிஸலயம் நாத தே பாதமூலம்” பக்தர்களுக்கு கேட்டதை கொடுக்கும் கல்பக வ்ருக்ஷத்தின் தளிரைப் போல குருவாயூரப்பனின் பாதங்கள் விளங்குகிறது என்று சொல்கிறார். ஸ்வாமிகள் சொல்வார் – “குருவாயூரப்பன் குழந்தை இல்லையா. அதனால அவர் பாதங்களை பட்டத்ரி தளிரைப் போல இருக்கிறது என்று சொல்கிறார். நேரே தர்சனம் பண்ணினதால அப்படி சொல்ல முடிகிறது” என்பார். இப்படி பகவானுடைய பாதங்கள் கேட்டதைக் கொடுக்கும் கல்பக வ்ருக்ஷமாக இருக்கிறது.

“முக்திபாஜாம் நிவாஸ:” – முக்தியை விரும்புபவர்களுக்கு பகவானுடைய பாதம் என்றும் வசிக்கும் இடம். அதாவது அவா மனஸ் அங்கேயே இருக்கு.

“யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதிக ஸுமதுரம்” – முக்தி அடைந்த யோகிகளுக்கு உன் திருவுருவத்தில் அந்த பாதம் தான் ரொம்ப மதுரமானது.

கிருஷ்ண பகவான் கீதையில் “ஆர்த்தி, அர்த்தார்த்தி, ஜிஞாஸு, ஞானி என்று நாலு விதமான பக்தர்கள். எல்லாருமே எனக்கு பக்தர்கள் தான்.” என்கிறார். அதாவது ஆர்த்தி என்றால் கஷ்டத்தில் இருப்பவன். அர்த்தார்த்தி என்றால் பணத்தை, சுகத்தை விரும்புபவன். ஜிஞாஸு என்றால் மோக்ஷத்தை விரும்புபவன். ஞானி என்றால் மோக்ஷம் அடைந்தவன். இவா எல்லாருமே என்னிடம் பக்தி பண்ணிண்டு இருக்கா” என்று பகவான் சொல்கிறார்.

ஸ்வாமிகள் எப்படி ரொம்ப கருணையோடு ஆறுதல் வார்த்தைகள் சொல்வார், பரிகாரங்கள் சொல்வார், கஷ்ட நிவர்த்தி குடுப்பார் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அதுக்கு இந்த யோகீந்த்ராணம் ஸ்லோகமும் இந்த கீதை ஸ்லோகமும் தான் ஆதாரம். “நான் பெரியவன். நான் புரட்டி விடுவேன் என்று நினைக்காமல் கஷ்ட நிவர்த்தி வேண்டும் என்றால், இன்னும் பணம், சுகம் வேண்டும் என்றால் பகவானை பிரார்த்திப்பவர்கள் பக்தர்கள் தான்.” என்பார். அங்கே வரவா சில பேர் “இன்னார்கிட்ட போனேன். பகவானிடம் எதுவும் கேட்கக் கூடாது என்று சொன்னார். ஆனாலும் கஷ்டம் தாங்க முடியவில்லை. நிவர்த்திக்காக உங்க கிட்ட வந்தேன்” என்று சொல்வார்கள். ஸ்வாமிகள் சொல்வார் “அதெப்படி, ஸ்வாமி கிட்ட வேண்டக் கூடாதா? ஆத்தில் குழந்தைக்கு உடம்பு சரி இல்லை என்றால் மனசு தவிக்காதா? ஒரு கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருக்கோம். எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று வேண்டிக்க மாட்டோமா? ஸீதாதேவியே காட்டிற்கு கிளம்பும் போது கங்கா தேவியிடமும்  யமுனா தேவியிடமும் “நல்லபடியாக திரும்பி வர வேண்டும்” என்று வேண்டிக் கொள்கிறாள். நாம் அதற்கும் மேலேயா? வேண்டிக்கறது தப்பில்லை. அது நம் மதத்தில் இருக்கற விஷயம் தான்.” என்பார்.

ஆனால் இது ஒரு படி. ஆரம்பத்தில் கஷ்ட நிவர்த்திக்காக வேண்டுகிறோம். ஆனால் “முக்திபாஜாம் நிவாஸ:” என்று முக்தியை விரும்பும் முமுக்ஷுக்களுக்கு பக்தி என்பதின் விளக்கம் வேறு என்று சொல்லி அதை எழுதிக் குடுத்தார்.

ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லிய பக்தியாவது :- 

வாழ்க்கையில் ஏற்படும் சோகம், (இது கிடைக்கவில்லையே என்றோ, இது கைவிட்டுப் போய்விட்டதே என்றோ) 

மோஹம் (சாஸ்திரம் முதலியவற்றை கவனிக்காமல் உள்ளவனுக்கு மேல்நாடுகளில் போய் அதிக சம்பாத்யம் கிடைக்கிறதே என்றோ) 

பயம் (காலத்தில் எல்லோருடைய மனதும் சரியில்லாத போது, நம் போன்ற பக்தர்களை யார் ஆதரிப்பார்கள் என்றோ)

இந்த மூன்றும் போகி பகவானிடத்தில் ஈடுபட்டால் தான் என்று தெரிந்து, நாம் உண்மையான பக்தியுள்ளவன் என்று தீர்மானித்துக் கொள்ளணும்.

பாண்டவர்களுக்கு அபார பக்தி என்றும், கண்ணன் அவர்களிடம் மிகவும் ஈடுபட்டான் என்றும், எதுதான் பாண்டவர்களுக்கு செய்யவில்லை என்றும் ஸ்ரீமன் நாரயணீயம் 86வது தசகம் சொல்கிறது.

ஒன்று கவனிக்கணும். அர்ஜுனன் பக்தன். அதனால் தேரோட்டினான். அந்த பெயரையே பெருமையாகக் கொண்டு இந்த திவ்யதேசத்தில் அர்ச்சா ரூபியாய் விளங்குகிறான்.

அந்த பார்த்தஸாரதி மறுநாள் அர்ஜுனனை காக்க வேண்டி சூரியனை மறைத்து ஜயத்ரதவதம் நடக்கச் செய்தான். ஆனால் முதல் நாள் அர்ஜுனனுடைய புத்ரனை அபிமன்யுவை பகவான் காப்பாற்றவில்லை என்று எந்த புத்தகமும் சொல்லவில்லை.

தற்காலத்தவர்கள் தனக்கு பகவான் செய்துள்ள plus point எவ்வளவு என்று பார்க்காமல் ஏதேனும் குறை தீராவிடில் பகவானை பஜித்து என்ன ஆச்சு என்கிறார்கள்.

நிற்க, பகவானை பஜிக்காதவர்கள் மனதில் எவ்வளவு வேதனையோடு இருக்கிறார்கள் என்பதைப் பாராமல் வெளித் தோற்றத்தில் அவர்கள் நல்லபடியாக இருப்பது போல நினைக்கிறார்கள். ஓரளவு அது உண்மையானாலும் வாழ்நாள் முழுவதும் அவர்கள் எப்படி இருக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியுமா?

நம் கண் முதலானது சரியாய் இருப்பது பகவான் கருணை என்று நன்றியுடன் பஜிப்பவனுக்கே முன் ஜன்ம கர்மத்தால் கஷ்டங்கள் வருகிறது என்றால் – அந்த நன்றியின் அடையாளமே இல்லாதவன் எப்படி இருப்பான்?

(50 அடி தோண்டினால் நீர் கிடைக்கும் என்றால் ஒரே இடத்தில 50 அடி தோண்டுவது போல) பக்தியுள்ளவன் பகவானைத் தொடர்ந்து வழிபட்டால், நமக்கு எது நல்லதோ அதை அளித்தும், எதனால் நமக்கு தீமைதான் ஏற்படுமோ அதை விலக்கியும் மனம் பரிபூர்ண சாந்தியுடன் இருக்க வைப்பார்.

தக்ஷிணாயன புண்யகாலம் (16-7-1993)

என்று அவர் எழுதிக் குடுத்த விஷயத்தை பூஜ்யமாக வெச்சுண்டு இருக்கேன்.

ஸ்வாமிகள் முந்தைய ஜன்மங்களில் பக்தியின் பல நிலைகளை கடந்து விட்டார். இந்த ஜன்மத்தில் “ஜீவஸ்ய தத்வ ஜிஞாஸா” நமக்கு இந்த ஜன்மா அருளப்பட்டிருப்பது பணத்தில் முன்னேறுவதற்கு என்று நாமெல்லாம் நினைக்கிறோம். ஜன்மா குடுத்து இருப்பது உண்மையை அறிந்து மீண்டும் பிறக்காமல் இருக்க வேண்டி என்ற ஞானம் ஸ்வாமிகளுக்கு பிறவியிலேயே இருந்தது. பாகவத பக்தி என்பது அவர் பிரச்சாரம் பண்ணவேண்டி சொல்லவில்லை. இதை அவர் எழுதிக் குடுத்த போது அவருக்கு அறுபத்து மூன்று வயது. அத்தனை வருடங்கள் அந்த பக்தியில் மூழ்கி இருந்து வாழ்ந்து காண்பித்து பின்னர் அதை எழுதிக் குடுத்தார்.

அப்படி “முக்திபாஜாம் நிவாஸ:” என்பதின் விளக்கமாக வாழ்ந்து பின் “யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதிக ஸுமதுரம்” என்று அந்த பகவானின் மதுரமான திருப்பாதங்களில் லயித்து அதிலேயே கலந்து விட்டார். நமக்கும் பக்தி இருக்கு. அதுவும் ஸ்வாமிகள் சொல்லிக் கொடுத்தது தான். ஸ்வாமிகள் பக்தி உத்தம பக்தி. அதுவும் நமக்கு வேணும். அதுக்கும் அவரைத் தான் வேண்டிக்கணும்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்!!! கோவிந்தா!!!! கோவிந்தா!!!

2 replies on “பாகவதத்தில் சொல்லிய பக்தி – கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.