குழந்தையிலிருந்தே ராமபக்தி

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பிறந்ததுலேர்ந்தே ராம பக்தியில் ஊறி வளர்ந்திருக்கார். ராம பக்தி அவருக்கு குடும்ப சொத்தாக வந்திருக்கு. அவருடைய பிதாமஹர் (அப்பாவிற்கு அப்பா) தினமும் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு லக்ஷம் ராம நாம ஜபம் பண்ணியிருக்கார். ஸ்வாமிகளோட அப்பா வேதம் படிச்சு வைதீகம் பண்ணிண்டு இருந்தார். ராமாயண பாகவதம் படிச்சு அனந்தராம தீட்சிதர், மாயவரம் பெரியவா பிரவசனத்தின் போது, மூல பாராயணம் பண்ணி இருக்கார். அவர் பேரே வெங்கடராம சாஸ்த்ரிகள். ஸ்வாமிகளுக்கு கல்யாணராமன் என்று பெயர் வெச்சுருக்கா.

ஸ்வாமிகளின் அப்பாவோட சித்தப்பா, வால்மீகி ராமாயணத்தை தம்புரா போட்டுண்டு கானம் பண்ணி, அம்பது வருஷங்கள் பிரவசனம் பண்ணி இருக்கார். ஒரு ஊர்ல, பிரதி ஸ்லோகம் அர்த்தம் சொல்லி ராமாயண பிரவசனம் ஒரு வருஷம் பண்ணி இருக்கார். அந்த ஊர்க்காரா இன்னொரு வாட்டி சொல்லணும்னு திரும்ப திரும்ப கேட்டுண்டு அப்படி அஞ்சு வருஷம் ராமாயணம் சொல்லிண்டு அந்த ஊர்ல இருந்திருக்கார். சித்தி அவரோட எல்லா ராமாயண பிரவசனத்தையும் கேட்டிருக்கா. அவாளுக்கு குழந்தைகள் இல்லாததுனால ஸ்வாமிகளோட அப்பாவை ஸ்வீகாரம் எடுத்து வளர்த்திருக்கா. ஸ்வாமிகளுக்கு மூணு வயசுல ஸ்வாமிகளோட அம்மா முக்தி அடைஞ்சுட்டா. அதுனால அந்த சித்தி பாட்டி தான் ஸ்வாமிகளை வளர்த்திருக்கா. அவாளும் அம்பது வருஷம் ராமாயணம் கேட்டதுனால ஸ்வாமிகளுக்கு அப்படி ஆனந்தமா ராமாயணத்தை சொல்லி இருக்கா.

ஒரு நாள் அவா ஸ்வாமிகளுக்கு ராமாயணத்தை சொல்லிண்டு இருக்காளாம். திண்ணையில உட்கார்ந்து அவா அப்பா ராமாயணம் பாராயணம் பண்ணிண்டு இருக்கார். அவா திருச்சில மலைக்கோட்டைக்கு பக்கத்துல இருந்திருக்கா. அந்த சித்தி பாட்டி சொன்னாளாம் “கல்யாணம், சுக்ரீவன் ரிச்யமூக மலையிலிருந்து பார்த்துண்டு இருக்கான். ராம லக்ஷ்மணா வரா. இப்ப நம்மாத்து வாசல்ல ராம லக்ஷ்ணமா வரான்னு வெச்சுக்கோ, உச்சி பிள்ளையார் கோவில்லேர்ந்து சுக்ரீவன் பார்க்கறான்” அப்படீனு சொன்னாளாம். அவா அப்பா உள்ள ஓடி வந்துட்டாராம். “சித்தி, எத்தனை வருஷமா நானும் ராமாயணம் படிக்கிறேன், கேட்கறேன். நம்மாத்து வாசல்ல ராம லக்ஷ்மணா வரான்னு எனக்கு தோணலையே. அந்த பாவம் (bhavam) எனக்கு வரலையே. இப்படி ராமாயணத்தை கண்ணால காக்ஷியா நீ கண்டுருக்கியே” அப்படின்னு கொண்டாடினாளாம். இந்த சித்தி சொல்லி சொல்லி ஸ்வாமிகளுக்கு ராமாயணத்துல ரொம்ப ப்ரியம் வந்துடுத்து.

ஸ்வாமிகள் இன்னொரு நிகழ்ச்சி சொல்வார். ஸ்வாமிகளுக்கு பாலாரிஷ்டம். பல வியாதிகள் வந்திருக்கு. ஒரு தடவை டைபாயிட் (typhoid) வந்து திண்ணையில போட்டுட்டாளாம். இனி பிழைக்க மாட்டான் னா அந்த காலத்துல அப்படி பண்ணுவா. அப்போது அவா அப்பா ராமாயணத்துலேர்ந்து ஒரு ஸ்லோகம் சொல்றார்.

இந்த தசரதரால தெரியாமல் அடிபட்டு விழுந்து, ஒரு முனிகுமாரன் உயிர் பிரிந்து விடுகிறது. அதனால அவருக்கு சாபம் ஏற்பட்டு, கடைசி காலத்தில் ராமரைப் பிரிஞ்சு கஷ்டப்படறார். அந்த கதை. அந்த முனிகுமாரனோட அப்பா, இறந்த குழந்தையை மடியில போட்டுண்டு புலம்பறார். “எங்களை இனிமே யார் உன்னை மாதிரி பார்த்துப்பா? கண் இல்லாத எங்களுக்கு கண்ணா இருந்தியே. சம்பாதிக்க வழி இல்லாத எங்களுக்கு சாப்பாடு போட்டு, குளிப்பாட்டி அன்பாக பார்த்துக் கொண்டாயே” என்று புலம்பும் போது, “நீ ரொம்ப காதுக்கு இனிமையாக ஸ்லோகங்கள் படிப்பியே. அதை இனிமே எங்க கேட்கப் போறேன்” னு புலம்பறார்.

அந்த ஸ்லோகத்தை ஸ்வாமிகள் அப்பா சொல்லி “கல்யாணம் நீ போயிட்டா, எனக்கு உன்னை மாதிரி இனிமையாக ஸ்லோகங்களெல்லாம் இனிமே யார் சொல்லிக் காண்பிக்க போறா?” என்று சொல்றார். அப்ப சித்தி சொன்னாளாம். “அந்த ஸ்லோகத்தை சொல்லாதேடா. குழந்தை பொழச்சு வர வேண்டாமா?” னு சொன்னாளாம். அதாவது இறந்த குழந்தையைப் பார்த்து சொன்னா ஸ்லோகத்தை உயிரோட இருக்கற இந்த குழந்தை விஷயத்தில் சொல்லாதே, அப்படிங்கற அளவுக்கு அந்த ஸ்லோகங்கள் எந்த இடத்தில வரது, அதோட பொருள், இடப் பொருத்தம் எல்லாம் தெரிந்து கொள்ளும் படியாக அவ்வளவு உன்னிப்பாக வால்மீகி ராமாயணத்தை கேட்டு அனுபவிச்சுருக்கா. அப்பேற்பட்ட சித்தி பாட்டி வளர்த்த குழந்தை நம்ம ஸ்வாமிகள்.

ஸ்வாமிகள் பத்து வயசுலேர்ந்து தானே வால்மீகி ராமாயணத்தை படிச்சிருக்கார். மூகபஞ்சசதி னு ஒரு ஸ்தோத்ரம். அதை எடுத்து படிச்சுண்டு இருக்கும்போது 318 வது ஸ்லோகம்

कुण्ठीकरोतु विपदं मम कुञ्चितभ्रू-

चापाञ्चितः श्रितविदेहभवानुरागः ।

रक्षोपकारमनिशं जनयञ्जगत्यां

कामाक्षि राम इव ते करुणाकटाक्षः ॥

குண்டீகரோது விபதம் மம குஞ்சிதப்ரூ-

சாபஞ்சித: ச்ரித விதேஹ பவானுராகஹ |

ரக்ஷோபகாரம் அநிசம் ஜனயன் ஜகத்யாம்

காமாக்ஷி ராம இவ தே கருணா கடாக்ஷ: ||

இதை படிச்சவுடன் திண்ணையிலிருந்து ஓடி வந்து அப்பா கிட்ட “இந்த ஸ்லோகத்துல நம்ம ராமரைப் பத்தி வரது அப்பா” னு சொன்னாராம். அப்ப அங்க யாரோ ஒரு மஹான் இருந்திருக்கார். அவர் கல்யாணத்தை தனியாக பக்கத்துல ஒரு அம்மன் கோவிலுக்கு கூட்டிண்டு போய் “குழந்தே! உனக்கு அம்மா இல்லை. இந்த மூக பஞ்சசதி ஸ்தோத்ரத்தை விடாம சொல்லிண்டு இரு. காமாக்ஷியே உனக்கு அம்மாவா இருந்து காப்பாத்துவா” னு சொல்லி இருக்கார். ஸ்வாமிகள் அவரை அப்பறம் பார்க்கவே இல்லையாம். அந்த பத்து வயசிலிருந்து ஸ்வாமிகள் மூக பஞ்சசதியை கெட்டியாக பிடிச்சுண்டு இருக்கார். அந்த ஸ்தோத்ரத்தையே அம்மாவாக, அம்பாளாக வெச்சுண்டு உபாசனை பண்ணி இருக்கார். ஸ்வாமிகள் சொல்வார் “நான் ரொம்ப சென்சிடிவ் (sensitive). யாராவது ஏதாவது சொல்லிட்டா

कृपाधाराद्रोणी कृपणधिषणानां प्रणमतां

निहन्त्री सन्तापं निगममुकुटोत्तंसकलिका ।

परा काञ्चीलीलापरिचयवती पर्वतसुता

गिरां नीवी देवी गिरिशपरतन्त्रा विजयते ॥

க்ருபா தாரா துரோணீ கிருபண திஷணானாம் ப்ரணமதாம்

நிஹந்த்ரீசந்தாபம் நிகம முகுடோத்தம்ஸ கலிகா |

பரா காஞ்சீ லீலா பரிசயவதீ பர்வத ஸுதா

கிராம் நீவீ தேவீ கிரிஷ பரதந்த்ரா விஜயதே ||

அப்படின்னு “நிஹந்த்ரி சந்தாபம்” என்றால் தாபத்தை போக்குபவள் என்பது புரியும். இந்த மாதிரி ஸ்லோகங்களை ஒரு அரச மரத்தடியில போய் உட்கார்ந்து கொண்டு ஊருக்கே கேட்கற மாதிரி உரக்கச் சொல்லி மனசை ஆத்திப்பேன்” என்று சொல்வார்.

அந்த அம்பாள் பக்தியினால, ஸ்வாமிகள் எல்லாப் பெண்களிடத்தும் ரொம்ப கருணையோட இருந்து இருக்கார். அதை அடுத்துது பார்ப்போம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!

குழந்தையிலிருந்தே ராமபக்தி (6 min audio in tamizh same as the script above)

 

Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.