சிவன் சார் அபய வாக்கு

ஸ்வாமிகள் கிட்ட நான் முதன்முதலில் போன போது “நம்ம சுந்தரத்தோட பிள்ளையா? வா வா” என்று சொல்லி என்னைச் சேர்த்துக் கொண்டார். எங்கப்பா பேர்ல இருந்த மதிப்பினால் என்னை அருகில் வர அனுமதித்தார். ஸ்வாமிகள் காலடியிலே உட்கார்ந்து இருக்கிறேன் என்றதால் சிவன் சார் என்னை அவர் அருகில் அமர்த்திக் கொண்டார்.

சிவன் சாரை தரிசனம் பண்ணி அவருக்கு கொஞ்சம் கைங்கர்யம் பண்ணி இருக்கேன். அவர் ஸ்வாமிகளைப் பற்றி பேசும் போதேல்லாம் “ஒரு உத்தம ஜீவன். அவர் கார்யங்கள் பண்ணுவதை பார்த்துக்கொள். அவர் சொல்வதை எழுதி வைத்துக்கொள். அவரை நினைத்தாலே புண்யம்.” என்று சொல்வார்.

ஒரு தடவை நான் சாருக்கு ஒரு போஸ்ட் கார்டில் ஒரு கடிதம் எழுதி போட்டேன். “நான் உங்களுடைய ஏணிப்படிகளில் மாந்தர்கள் படிக்கிறேன். அதை படிச்சா எங்கிருந்து எப்படி இந்த படிகளில் மேலே போகிறது என்றே தெரியவில்லை. மஹாபெரியவாளை தர்சனம் பண்ணி இருக்கேன். உங்களை நமஸ்காரம் பண்ணி இருக்கேன். ஸ்வாமிகளை ஆச்ரயித்து இருக்கேன். ஆனாலும் உங்கள் புஸ்தகத்தைப் படித்தால் பயமாக இருக்கிறது. எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும். ஒரு அபய வாக்கு வேண்டும்” என்று எழுதி அனுப்பினேன்.

சிவன் சார் அப்போது வ்யாசராவ் தெருவில் இருந்தார். நான் ஒரு அஞ்சு நாள் கழித்து அவரை தரிசனம் செய்ய போனேன். அப்போது தான் அந்த கார்ட் வந்தது. அப்போது திருவாரூர் கணபதி சுப்பிரமணியன் என்ற ஒருவர் அங்கே இருந்தார். சார் அவரை அந்த கடிதத்தை படிக்க சொன்னார். படித்து முடித்தவுடன் சார் என்னைப் பார்த்தார். நான் எழுந்து நமஸ்காரம் பண்ணினேன். சார் சொன்னார் – “நீ தான் திருவல்லிகேணி ஸ்வாமிகளை நம்பி இருக்கியே! அவரை தியானம் பண்ணிண்டு இருந்தாலே மேலே போகலாம்” என்றார். அதாவது ஸ்வாமிகளை நம்பி இருந்தாலே தெய்வீகத்திலும் ஆன்மீகத்தில் மேன்மை அடையலாம். என்று சொன்னார். ரொம்ப சந்தோஷமும் நிம்மதியும் அடைந்தேன்.

அதை அப்பறம் ஸ்வாமிகளிடம் சொன்ன போது “தியானம் பண்றதுனா என்ன? ஏதாவது “transcendental meditation” கத்துகணும்னு கிளம்பிடாதே! நான் சொல்லிக் குடுத்த மூகபஞ்சசதீ, விஷ்ணு சஹஸ்ரநாமம், வால்மீகி ராமாயணம் இதெல்லாம் படிக்கறது தான் தியானம்.” என்று சொன்னார். அந்த வார்த்தைகளை ஸ்வாமிகள் சொன்னதுனால இன்னிக்கும் நான் இந்த ஸ்தோத்ரங்களை கொஞ்ச நேரம் எடுத்து படிச்சாலே ஸ்வாமிகள் ஞாபகம் வருகிறது. அவருடைய த்யானமாக அது அமைந்து விடுகிறது.

மூக பஞ்சசதீ ல ஒரு ஸ்லோகம் இருக்கு – ஆர்யா சதகம் 60 வது ஸ்லோகம்.

आदिक्षन्मम गुरुराडादिक्षान्ताक्षरात्मिकां विद्याम् ।

स्वादिष्ठचापदण्डां नेदिष्ठामेव कामपीठगताम् ॥

ஆதிக்ஷன் மம குருராட் ஆதி க்ஷாந்த அக்ஷராத்மிகாம் வித்யாம் |

ஸ்வாதிஷ்ட சாப தண்டாம் நேதிஷ்டாமேவ காமபீட கதாம் ||

ஸ்வாதிஷ்ட சாப தண்டாம் – இனிமையாக ஒரு தண்டத்தை – அதாவது கரும்பை வில்லாக கொண்டு காஞ்சிபுரத்தில் காமபீடத்தில் நித்ய வாசம் செய்துகொண்டு அருளும் ஒரு தெய்வம் இருக்கிறது. அந்த காமாக்ஷி தேவியை குருராட் – என் குரு மஹாராஜ் நேதிஷ்டாமேவ – சமீபம் என்பதின் superlative மிக மிக சமீபத்தில் அதாவது எனக்குள்ளேயே இருப்பதை ஆதிக்ஷத் – காண்பித்து குடுத்து விட்டார். அந்த காமாக்ஷி யார் என்றால் – ஆதி க்ஷாந்த அக்ஷராத்மிகாம் வித்யாம் – அ முதல் க்ஷ முடிவான அக்ஷர வடிவமான வித்யா ஸ்வரூபிணி. இதை படிக்கும் போது எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் – இந்த புஸ்தகங்கள் அதில் உள்ள ஸ்தோத்ரங்கள் “அ” விலிருந்து “க்ஷ” முடியும் எழுத்து வடிவத்தில் உள்ளது அல்லவா? இந்த மூக பஞ்ச சதீ ஸ்தோத்ரமே காமாக்ஷி! இந்த ஸ்தோத்ரத்தை படித்தால் காஞ்சிபுரம் போக வேண்டியதில்லை. நமக்குள்ளேயே காமாக்ஷி வடிவமான மஹாபெரியவா வந்துடுவா. ராமாயணம் பாராயணம் பண்ணினால் ராமர் நம்முள் தோன்றுவார். என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் சிவன் சாரும் ஸ்வாமிகளும் உணர்த்தினார்கள்.

எனக்கு கல்யாணம் நடப்பதற்காக ஸ்வாமிகள் “சுந்தர காண்டத்தை நவாஹமாக படி” (ஒன்பது நாட்களில் ஒரு தடவை) என்று சொன்னார். அப்படி இரண்டு வருஷம் படிச்சேன். ஒவ்வொரு முறை பாராயணம் முடிச்சவுடன் ஸ்வாமிகளிடம் சொல்லுவேன். எதுக்காக? “நீங்கள் சொன்னதை பண்ணிண்டு இருக்கேன். பலன் கிடைக்க வேண்டும்” என்று ஞாபகப் படுத்த தான்! ஸ்வாமிகள் சொல்வார் “நீ எத்தனை ஆவர்த்தி படிக்கிறயோ அத்தனை நல்ல பெண்ணாக வருவா. உன்னை ராமாயணம் பாராயணம் பண்ண விடுவா! என்று சொல்வார். கல்யாணம் நடந்து பெண் குழந்தை பிறந்த போது மாதங்கி என்று பெயர் வைத்தார். அடுத்து பிள்ளை பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை. “கணபதி, நீ வால்மீகி ராமாயணத்தை முழுக்க பாராயணம் பண்ணு. பிள்ளை பிறப்பான்.” என்று ஆசீர்வதித்தார். பிள்ளை பிறந்து அவனுக்கு ரகுராமன் என்று பெயர் வைத்தார்.

ஒரு நாள் சொன்னார் – அன்று வரை, பதினைந்து வருடமாக அவரிடம் பாடம் படித்து வருகிறேன். பணமே அதிகம் கொடுத்தது இல்லை. இப்போது நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்து இருந்தேன். பணம் குடுக்க முற்பட்ட போது சொன்னார் – “கணபதி ஸுப்ரமணியன், நீ ராமாயணம் படிப்பது எனக்கு அவ்வளவு சந்தோஷம். எனக்கு நீ பணம் தர வேண்டாம். அப்பா குடுப்பது போதும். நீ நிறைய பாராயணம் பண்ணு. அது தான் எனக்கு வேண்டும்.” என்றார். அப்படி இந்த பாராயணத்தில் ஒரு பிடிப்பு, ருசி ஏற்படுத்தினார். அதன் பலனை இன்றும் அனுபவித்து வருகிறேன்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!

சிவன் சார் அபய வாக்கு (6 min audio in Tamizh, same as the script above)

Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.