மனீஷாம் மாஹேந்த்ரீம்

ஸ்வாமிகள் சொல்லி அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தேன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் நான் திரும்பி வருவதற்கு என் அம்மா, அப்பாவும் ஒத்துக் கொண்டார்களே! இந்தக் காலத்தில் “நீ அங்கு இருந்து சம்பாதித்தால் போதும்” என்று சொல்பவர்களே அதிமாக இருக்கிறார்கள்.

எங்கள் அம்மா அப்பா மிகவும் திருப்தியான, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். ஏழ்மையை விரும்பி ஏற்றுக் கொண்டு அதனுள் மிகவும் சந்தோஷமாக எங்களை வளர்த்தார்கள். நாங்கள் வளரும் போது ஒவ்வொரு வருஷமும் கணேஷ சதுர்த்தி, ராம நவமி, க்ருஷ்ணாஷ்டமி, நவராத்திரி, தீபாவளி, சங்கராந்தி என்று எல்லா விசேஷங்களையும் ரொம்ப ஸ்ரத்தையா பண்ணுவார்கள். அப்பா பூஜை செய்வார். அம்மா பக்ஷணம் செய்வாள்.

எங்கள் அம்மா எது செய்தாலும் மிகவும் நேர்த்தியாக செய்வாள். ஒரு கோலம் போடுவதானாலும் சரி, சமைப்பதானாலும் சரி, அது அப்பாவுக்கு பிடித்த மாதிரி கேட்டு பார்த்து பார்த்து செய்வாள். எங்கள் அம்மாவிடமிருந்து தான் (quality) குவாலிடி என்பது பணத்தை பொறுத்த விஷயம் இல்லை. அது மனத்தை பொறுத்த விஷயம் என்று நான் தெரிந்து கொண்டேன்.

எங்கள் அப்பா காரியங்கள் செய்தால் ரொம்ப டீடெய்லெய்டா – ப்ளான் செய்து செய்வார். எந்த விசேஷமானாலும் எத்தனை பேரை கூப்பிடணும், என்னென்ன சாமான் வாங்கணும் என்று லிஸ்ட் போட்டு பட்ஜெட், ஷேட்யுல் (budget, schedule) என்று டீடைல் planning செய்து காரியங்கள் செய்வார்.

முருகன் திருவருட் சங்கத்தில் ஸ்கந்த ஷஷ்டி விழா, சங்கத்திலிருந்து ஏற்பாடு செய்யும் டூர்கள் என்று எல்லா சங்க காரியங்களையும் முன்னின்று நடத்தி வைப்பார். இதற்கும் மேல் எங்கள் அம்மா அப்பா மற்றவர்களுக்கு நிறைய பரோபகாரம் செய்து இருக்கிறார்கள். எத்தனையோ கல்யாணங்கள் நடத்தி வைத்து இருக்கிறார்கள். அந்த காலத்தில் கான்ட்ராக்டர்கள் எல்லாம் கிடையாது. ஆத்தில் கல்யாணம் வருகிறது என்று அப்பாவிடம் வந்து சொல்லுவார்கள். எங்கள் அப்பா முன்னின்று எல்லா காரியங்களையும் நடத்திக் கொடுப்பார். முடிவில் கூப்பிட்டவர்கள் நமஸ்காரம் செய்து ஒரு புடவை, வேட்டி வைத்துக் குடுப்பார்கள். ஆனால் அதைக் கூட அப்பா எதிர்பார்க்க மாட்டார். அப்படி “பரோபகாரம் இதம் சரீரம்” என்று வாழ்ந்தார்கள். எங்கள் அப்பா அப்படி ப்ராஜக்ட் மேனேஜ்மென்ட்டில் project management expert எக்ஸ்பர்டாக இருந்தார்.

இதையெல்லாம் நான் இன்று பாராட்ட முடிகிறது, கொண்டாட முடிகிறது என்றால், அது ஸ்வாமிகள் எனக்கு சொல்லிக் கொடுத்தது தான். நான் குவாலிடி மேனேஜ்மென்ட்டில் ஒரு பத்து வருடம் இருந்தேன். ப்ராஜக்ட் மேனேஜ்மென்ட்டும் செய்துப் பார்த்தேன். நான் ரொம்ப சென்சிடிவ் (sensitive). நான் காரியங்கள் செய்தால் என்னை யாரும் எதுவும் சொல்லக் கூடாது. எல்லாரும் அதை “நன்னா இருக்கு” என்று கொண்டாடிக் கொள்ள வேண்டும். இந்த குவாலிடி மேனேஜ்மென்ட், ப்ராஜக்ட் மேனேஜ்மென்ட் எல்லாவற்றிலும், சிலர் பேர் “நன்னா இருக்கு” என்று சொல்லுவார்கள். சிலர் “நன்னா இல்ல” என்று சொல்லுவார்கள். அதனால் இப்பொழுது வசதியாக, இதையெல்லாம் சொல்லித் தர ஆரம்பித்து விட்டேன்! சொல்லிக் குடுப்பவர்களை ரொம்ப குறை சொல்ல மாட்டார்களே! எல்லாரும் நன்னா பாடம் எடுக்கிறான் என்று சொல்கிறார்கள். எல்லாம் ஸ்வாமிகள் அனுக்ரஹம்.

முதல் முதலாக ஸ்வாமிகளைப் நான் தரிசனம் செய்த போது நமஸ்காரம் செய்தேன். அபிவாதயே சொன்னேன். இன்னார் பிள்ளை என்று அறிமுகம் செய்து கொண்டேன். ஸ்வாமிகள் என்ன நக்ஷத்திரம் என்று கேட்டார். மூல நக்ஷத்திரம் என்று சொன்னேன். “சங்கீதத்தில் ஆர்வம் இருக்குமே” என்று சொன்னார். அட! மைண்ட் ரீடராக (மனதை படிக்கும் மாயம் தெரிந்தவராக) இருக்கிறாரே என்று நினைத்தேன். ஏனென்றால் ம்யூசிக் அகாடமியில் ம்யூசிக் காலேஜ் ஸ்டூடன்ட் எல்லாரும் குறைவான விலையில் சீசன் டிக்கட் வாங்கிக் கொண்டு, பாடகர்கள் பின்னாடி உட்கார்ந்துக் கொள்ளலாம். நான் அப்போது அந்த டிக்கட்டை எப்படியோ வாங்கிக் கொண்டு எல்லாக் கச்சேரிகளையும் கேட்டுக் கொண்டு இருந்தேன். அப்போது அவ்வளவு சங்கீதப் பித்தாக இருந்தேன். என்னை சங்கீதத்திலிருந்தும் தமிழிலிருந்தும் ஸ்வாமிகள் மெதுவாக வால்மீகி ராமாயணத்திற்கு எப்படி கூட்டிக் கொண்டு வந்தார் என்று பின்னொரு நாள் சொல்கிறேன். அப்படி அவர் கேட்டவுடனே நான் அசந்து விட்டேன். எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்டேன். அதற்கு அவர் “இல்ல! நீ மூல நக்ஷத்ரம்னா கேது தசை கொஞ்ச வருஷம் இருந்து இருக்கும். அதன் பின் இருபது வருஷம் சுக்ர தசை. சுக்ர தசை எங்கறதுனால சங்கீதத்துல ஆர்வமான்னு கேட்டேன்” என்று சொன்னார். அவரை காலச் சக்கரத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் கிருஷ்ண பரமாத்மா என்று அப்புறம் நான் புரிந்து கொண்டேன். அவர் முக்காலமும் உணர்ந்த முனிவர் என்று நான் புரிந்து கொண்ட சில நிகழ்ச்சிகள் உண்டு. அன்றைக்கு அவர் அப்படி ஒரு விளையாட்டு செய்தார்.

அப்புறம் அவர் “நீ கேது காலில் இருக்கும் மூல நக்ஷத்திரத்துல பொறந்து இருக்க. நாராயணீயத்தில் पुरा हयग्रीवमहासुरेण என்று ஆரம்பிக்கும் 32ஆவது தசகம் மத்ஸ்யாவதார தசகம். கேது ப்ரீதிக்கு மத்ஸ்யாவதாரம் படிப்பா. நான் அதைப் படிக்கிறேன்” என்று படித்தார். ஒரு நான்கைந்து நாள் அதையே படித்தார். எனக்கு மனப்பாடம் ஆகி விட்டது. மிகவும் சந்தோஷப்பட்டார்.

ஸ்வாமிகளிடம் வருபவர்கள் எல்லோரும் ஏதோ ப்ரார்த்தனை செய்கிறார்கள் என்று நான் கவனித்தேன். உனக்கு ஏதாவது வேண்டுமா என்று அவர் கேட்டார். “எங்க அப்பா அம்மா எல்லாம் எங்கிட்ட ரொம்ப பிரியமா இருக்கா. நான் எங்க அம்மா கிட்ட ரொம்ப கடுமையாக எதாவது சொல்லிடறேன். அவா ரொம்ப வருத்தப் படறா. இதுக்கு எதாவது மந்திரம் இருந்தா சொல்லுங்கோளேன்” என்று கேட்டேன். ஸ்வாமிகள்

मनीषां माहेन्द्रीं ककुभमिव ते कामपि दशां

प्रधत्ते कामाक्ष्याश्चरणतरुणादित्यकिरणः ।

यदीये सम्पर्के धृतरसमरन्दा कवयतां

परीपाकं धत्ते परिमलवती सूक्तिनलिनी ॥

மனீஷாம் மாஹேந்த்ரீம் ககுபமிவ தே காமபி தஷாம்

ப்ரதத்தே காமாக்ஷ்யா: சரண தருணாதித்ய கிரண: |

யதீயே சம்பர்க்கே த்ருதரஸ மரந்தா கவயதாம்

பரீபாகம் தத்தே பரிமளவதி சூக்தி நலினீ ||

என்ற “அம்பாளுடைய சரணமாகிய சூரியன் மனதில் உதயமானால் நல்ல இனிமையான வாக்கு எங்கிற தாமரை மலரும்” என்ற அர்த்தம் தரும் ஸ்லோகத்தை எழுதிக் கொடுத்தார். அதைச் சொல்லிக் கொண்டு வந்தேன். இது போல் அம்மாவை சந்தோஷப் படுத்த வேண்டும் என்று நினைக்கிற ஒரே காரணத்தால் என்னையும் அம்பாள் பக்தனாக எண்ணிக் கொண்டு “நீ காஞ்சிபுரத்தில் மடத்திற்குப் போனால் மூக பஞ்ச சதீ என்ற ஸ்தோத்திரம் இருக்கு. அதை வாங்கிண்டு வா. நாம அதை படிப்போம்” என்றும் கூறினார். நானும் அன்றைக்கே போய் இரண்டு புத்தகங்கள் வாங்கிக் கொண்டு வந்தேன்.

அதிலிருந்து தினம் 50 ஸ்லோகம், 100 ஸ்லோகம் என அடுத்த பத்து வருஷம் அப்படி அந்த மூக பஞ்ச சதீ ஸ்தோத்ரத்தைப் படித்துக் கொண்டே இருந்தார். எனக்கு மட்டும் அதை ஒரு 500 ஆவர்த்தி படித்து இருப்பார். சில சமயம் நான் அங்கு செல்லும்போது அவர் அவ்வளவு அயர்வாக இருப்பார். உடம்பிலும் பிரஷர், ஷுகர், ஹார்ட் ட்ரபிள் என்று நிறைய கஷ்டங்கள் இருந்து வந்தது. ஆனாலும். என்னைப் பார்த்த உடனே படுத்துக் கொண்டு இருந்தாலும் எழுந்து விடுவார். “இருக்கட்டுமே” என்று சொன்னால் “அம்பாளைப் பேசினா சக்தி குடுப்பா” என்று சொல்லி 50, 100 ஸ்லோகம் படிப்பார். அந்த மூக பஞ்ச சதீ ஸ்தோத்ரத்தை அவ்வளவு இனிமையாகப் படிப்பார்.

ஒருவருக்கு நம் மீது அக்கறை வரும்போது அதை அளவிட முடியாது. அதுவும் மஹான்களுக்கு நம் மீது அன்பு வரும்போது அதை எவ்வளவு என்று சொல்லவே முடியாது. நான் அமெரிக்காவிற்குப் போன போது அவர் “திரும்பி வா” என்று சொன்ன உடனே திரும்பி வந்தேன். அப்போது அவர் “நீ முதலில் இங்கு வந்தபோது மனீஷாம் மாஹேந்த்ரீம் என்ற ஸ்லோகத்தைக் கேட்டுண்ட. அதுல செகண்ட் பார்ட் ல நல்ல வாக்கு வரும்னு இருக்கு. ஃபர்ஸ்ட் பார்ட் ல புத்தி ஒரு தனி பரிபாகத்தை அடையும்னு இருக்கு. அந்த மாதிரி அம்பாள் உன் மனசில ஒரு பரிபாகத்தைக் கொடுத்து உன்னை அமெரிக்காலேந்து மீட்டு, உன்னோட அம்மா அப்பா கிட்ட கொண்டு வந்து சேர்த்து இருக்கா” என்று சொன்னார். என் பதினைந்து வயதில் நடந்த ஒரு நிகழ்ச்சியை முப்பது வயதில் ஞாபகம் வைத்துக் கொண்டு சொன்னார். அப்படி ஒரு அன்பை நான் ஸ்வாமிகளிடம் அனுபவித்து இருக்கிறேன்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!

மநீஷாம் மாஹேந்த்ரீம் (7 min audio in Tamizh, same as the script above)

Share

Comments (3)

 • Rajaraman

  Dear Sir,

  My Son is also “Moola Nakashtra”. We have many connects. Could you please provide more information about “32ஆவது தசகம் மத்ஸ்யாவதார தசகம்”.

  Paranams,
  Rajaraman A

  • Dear Rajaraman,

   For every Nakshatram there is a planet associated. For appeasing 9 planets 9 different avatars of Vishnu are worshiped. Like that for Moola nakshathram which is in the leg of Kethu, Mathsya Avatharam of Vishnu is worshiped and so on. You have great faith in aparajitha pingaksha namaste ramapoojitha. Keep with that itself. agala uzhuvadilum aazha uzhuvade mel. eka bhakthir vishishyathe.

 • Rajaraman

  Dear Sir,

  Understood. Many thanks for timely advise. I will take this word as its come from our swamigal.I have increased by aparajitha pingaksha namaste 1008 in the morning and 1008 before bed along with 45 mins RAMA nama chanting for past 30 days.

  Humble Paranams,
  Rajaraman

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.