க்யாதி லாப பூஜாஸு வைமுக்யம் மே ஆகலய

ஸ்வாமிகளுக்கு நல்ல ஞாபக சக்தி இருந்துது, நல்ல மேதா சக்தி இருந்துதுன்னு என்று சொன்னேன். அதோடு அவருக்கு வந்து ‘பிரதிபா’ என்று சொல்லக்கூடிய அந்த “presence of mind” சமயோசித புத்தியும் இருந்தது. அழகாக விஷயங்களை எடுத்துச் சொல்வது என்ற கவித்துவம் இருந்தது. யாப்பிலக்கணம், சப்த கோஷம், தாது மஞ்சரி, அமரம் எல்லாம் தெரிஞ்சிருந்தது. சின்னச் சின்ன ஸ்லோகங்கள் எல்லாம் கூட எனக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார்.

ஆனால், அந்த கவிதை எழுதணும் என்கிற எண்ணத்தில் மனசை கொடுக்கவில்லை. அவர் சொல்லுவார், “இந்த மாதிரி நாம ஸ்லோகம் எழுத ஆரம்பிச்சா, எழுதியெழுதி எல்லார் கிட்டேயும் காட்டி, நன்னா இருக்கா என்று கேட்க ஆரம்பித்துவிடுவோம். அந்த மாதிரி நான் பார்த்திருக்கேன். இங்கே வருபவர் ஒருத்தர். ஒரு புஸ்தகம் எழுதி, அப்போ முதல் மந்திரியா இருந்த திரு பக்தவத்சலத்தை வச்சுண்டு வெளியிட்டார். ‘ஆயிரம் காப்பிப் போட்டேன், ஐநூறு கூட விக்கலை. ஜனங்கெல்லாம் மட்டி! மண்டூகம்!’, என்று சொல்லிக் கொண்டு இருப்பார். நம்ம அந்த மாதிரி ஆகிவிடக் கூடாதே என்று கவலைப் பட்டேன்.”

“எத்தனையோ மஹான்களோட ஸுக்திகள் இருக்கு. ஆதி சங்கரரோட வாக்குக்கு மேலேயா? ஆனந்த சாகரஸ்த்வம்,ஆக்யா ஸஷ்டி, முகுந்தமாலை இதெல்லாம் இருக்கே. மஹான்களோட வாக்கை வச்சுண்டே பகவானை ஸ்தோத்ரம் பண்ணலாமே! நாம என்னத்துக்கு எழுதணும்?மஹா பெரியவாளுக்கு மேலேயா? அவரே கவிதை அதிகம் பண்ணலையே என்று நினைத்து, நான் அதிலிருந்து மனசை எடுத்துவிட்டேன். அது முக்கியம்.” என்றார்.

ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாப்பிரபு என்று ஒரு மஹான் இருந்தார். வங்காளத்திலே அவதாரம் பண்ணி,

“ஹரே ராம! ஹரே ராம! ராம ராம! ஹரே ஹரே! ஹரே கிருஷ்ண! ஹரே கிருஷ்ண! கிருஷ்ண கிருஷ்ண! ஹரே ஹரே!”

என்ற மஹா மந்த்ரத்தை, அந்த தேனை, பாரத தேசம் முழுக்க மழையா கொட்டினார். அப்பேற்பட்ட மஹான் கடைசியிலே ஸன்யாசம் வாங்கிண்டு ஒரு அறையிலேயே பன்னிரண்டு வருஷம் தவம் இருந்தார். தான் கிருஷ்ணரின் ராதை என்ற உணர்விலேயே கிருஷ்ணரோட இருந்தார்.

அந்த மஹான் பகவானோட கலந்து விடும் முன்னே,சிஷ்யர்களுக்கு ஒரு எட்டு ஸ்லோகங்கள் அருளினார். அதற்கு சிக்ஷாஷ்டகம் என்று பெயர். இன்றைக்கும் கௌடியா மடத்தில் எல்லாம் தினமும் பாராயணம் செய்கிறார்கள். ஸ்வாமிகளும் தினம் அந்த எட்டுத்தையும் படிப்பார். ரொம்ப லலிதமா இருக்கும். பகவன் நாம பக்தியுடைய சாராம்சம்,நாம பக்தி எப்படி பண்ணனும் என்கிறதை சொல்லியிருக்கார்.

तृणादपि सुनीचेन तरोरपि सहिष्णुना। अमानिना मानदेन कीर्तनीयः सदा हरिः ॥

த்ருணாதபி ஸுநீசேன தரோர் அபி ஸஹிஷுனா |

அமானினா மானதேன கீர்தனீய: ஸதா ஹரிஹி ||

புல்லைக் காட்டிலும் தன்னைக் கீழா நினைக்கணும். மரத்தைக் காட்டிலும் பொறுமையா இருக்கணும். தன்னைப் பெரியவனா நினைக்கக் கூடாது, மற்ற சாதுக்களை கௌரவிக்க வேண்டும். இப்படி இருந்துகொண்டு எப்பவும் ஹரி-கீர்த்தனம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டும்.

அதில் இன்னொரு ஸ்லோகமும் இருக்கு.

न धनं न जनं न सुन्दरीं कवितां वा जगदीश कामये।

मम जन्मनि जन्मनीश्वरे भवताद् भक्तिरहैतुकी त्वयि॥

ந ஜனம்! ந தனம்! ந ஸுந்தரீம் கவிதம் வா ஜகதீச காமயே |

மம ஜன்மனி ஜன்மனி ஈஸ்வரே பவதாத் பக்திர்அஹைதுகி த்வையீ ||

எனக்கு ஜனங்களோட ஆதரவோ, பணமோ, பெண்களோ, “கவிதையோ” கூட வேண்டாம்! நீ என் ஈஸ்வரன்! உனக்கு அடிமையா எல்லா ஜென்மத்திலும் இருக்கணும். அதுதான் எனக்கு வேணும்.

ஸ்வாமிகள் சொல்லுவார், “இதையே தான் ஆண்டாளும் சொல்கிறார். குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது. இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நங்காமங்கள் மாற்றேலோரெம்பாவாய்! இப்படி எல்லா மஹான்களும் ஒரே மாதிரி சொல்கிறார்கள்”,என்று இந்த கவிதையை விரும்பக்கூடாது அவர் குறிப்பாக வேண்டிக்கொள்கிறார். “கவிதை எழுதவேண்டும் என்று மனசு வச்சா அது ஒரு distraction…”, என்று சொல்லுவார்.

ஸ்வாமிகள் ராமாயணத்தை விரும்பி படிப்பார். “நீங்க இந்த ராமாயணத்தையே படித்துக் கொண்டிருத்தால், இந்த உலகத்திலேயும் சௌக்கியமா இருந்து விட்டு, பின் பகவான் கிட்டே ஸ்ரீ ராமர் கிட்டே போய் சேர்ந்து விடுவீர்கள். ஆனால்,பாகவத்திலே இரண்டாவது ஸ்லோகத்திலே, ‘இந்த பாகவதத்தை சேவிக்கறவா தாபத்ரியோன் மூலனம்’,அதாவது மூன்று விதமான தாபங்களில் இருந்து விடுபடுவார்கள் என்று வருகிறது. அதுக்கு ஒரு எடுத்துக்காட்டா, எங்களுக்கெல்லாம் ஒரு குருவா நீங்க இருக்கணும் என்று மஹா பெரியவா உங்களை பாகவதமே படிக்க வச்சுட்டா” என்று நான் சொல்லுவேன். சிரிப்பார்.

ஸ்ரீ நாராயண ஐயர், “ஸ்வாமிகள் குடும்பத்தில அதிக சிரமங்கள் இருக்கு…” என்று சொன்னப் போது மஹா பெரியவா, “அவர் உங்களை எங்கிட்ட சொல்லச் சொன்னாரா?” என்று கேட்கிறார். ஸ்ரீ நாராயண ஐயர் “இல்லை எங்களுக்கு தான் பார்க்க கஷ்டமா இருக்கு. அதனால சொல்லணும்னு நினைச்சேன்” என்றார்.

மஹா பெரியவா மெல்லப் புன்னகைத்துக் கொண்டே, தன் மார்பிலே கையை வைத்துக் கொண்டு, “அவரைப் பத்தி நீயும் நானும் கவலைப் படவேண்டாம். அவர் பாகவதம் படிச்சுண்டே இருக்கார். அவர் ஜன்மா ஸார்த்தகமாகும். (பிறவிப் பயனை அடைவார்) அவருக்கு ஞானம் வந்துடும்”,என்றார்.

அந்த வார்த்தையை ஸ்ரீ நாராயண ஐயர் வந்து ஸ்வாமிகள் கிட்ட சொன்னப்போது, “மஹா பெரியவா எனக்கு “பாகவதமே படித்துக் கொண்டிரு” என்று ஆக்ஞை போட்டிருக்கா…” என்று தினமுமே பாகவதம் படித்தார். வருஷத்தில் ஐந்து முறை ராமாயணம், மீதி நேரமெல்லாம் பாகவத சப்தாஹம் பண்ணுவது என்று வைத்துக் கொண்டார்.

அவருடைய வாழ்க்கை அனுபவங்களும் அப்படி இருந்தன. அவருடைய ஜாதகத்தில் 120% spiritualism (ஆன்மிகம்) -20% materialism (லௌகீகம்) இருந்தது என்று ஜோசியர்கள் சொல்லுவார்கள்.

ஒரு ஜோசியர், “இவர் ஜாதகம் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஜாதகம் மாதிரி இருக்கு…” என்று சொல்லியிருக்கார்.

இப்படி வைராக்கியம் வேண்டிப் பெற்றார் ஸ்வாமிகள். அவர் நினைத்தால் கஷ்டத்தை தீர்த்துக் கொண்டிருக்கலாம். ஒரு பிரார்த்தனை பண்ணா, அவர் பண்ணின புண்யத்திற்கு பகவான் எல்லா கஷ்டத்தையும் தீர்த்திருப்பார். அந்தக் கஷ்டமெல்லாம் வந்துக் கொண்டே இருந்தாலும், அந்தக் கஷ்டங்கள் எல்லாம் ஒண்ணுமே பண்ணாது என்று உலகத்திற்கு தெரிய வேண்டி மஹா பெரியவா பண்ணிண ஒரு நாடகமே அது. அப்படி ஒரு மகானுடைய வாழ்க்கையை நாம் பார்ப்பதற்கு, அதை இப்படி பேசிப் பேசி நாமும் கடைத்தேறுவதற்கு ஒரு பாக்கியம் கிடைத்து இருக்கிறது.

ஸ்வாமிகள் மஹா பெரியவா பாதுகை முன்னாடி தினமும் நமஸ்காரம் பண்ணி “க்யாதி லாப பூஜாஸு வைமுக்யம் மே ஆகலய…” என்று ஒரு ஸ்லோகத்தை சொல்லி வேண்டிப்பார். வேதாந்த தேசிகரை அவரோட பிள்ளை ஒரு ஸ்லோகத்தில், “க்யாதி லாப பூஜையில் இருந்து விடுபட்டவர்”, என்று புகழ்ந்து பாடுகிறார்.

‘க்யாதி’ என்றால் புகழ். இந்த உலகத்தில் நல்ல பேர் வேண்டும் என்று நினைப்பது.

‘லாபம்’ என்றால் பணம், வசதிகள். பகவத் பக்தி பண்ணுவதால் ஒரு லாபம் வேண்டும் என்று நினைப்பது.

‘பூஜை’ என்றால், பணம், புகழ் தேவை இல்லை என்று இருந்தாலும், தனக்கென்று இருக்கும் நாலு சிஷ்யர்களாவது தன்னை கௌரவப்படுத்த வேண்டும், பூஜிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே அது. அதைக் கூட விரும்பாதவர் ஸ்வாமிகள்.

பணம், புகழ், கெளரவம் எல்லாம் படமெடுக்கும் பாம்பு மாதிரி நினைத்து பயந்து ஒதுங்கியிருந்தார்கள் மஹான்கள். ஒரு முறை, திருவல்லிக்கேணி தவநோத்சவ பங்களாவில் 5000பேர் ஸ்வாமிகளுடைய பிரவசனத்தை கேட்டனர். ஆனால்,ஸ்வாமிகள் தனக்கு ‘க்யாதி லாப பூஜை’ வேண்டாம் என்று பகவானை பிரார்த்தித்தார். அதற்கு அடுத்த ப்ரவசனம் ஒரேயொரு மடி பண்ணிக் கொண்ட பாட்டி மட்டும் கேட்கும்படி அமைந்தது.

பணம் கூட்டமெல்லாம் இந்த லௌகீக உலகத்தில் நம்மை பிடித்து வைத்துவிடும்! பகவான் கிட்டே போவதற்கு இதெல்லாம் தடை! என்று ஸ்வாமிகள் வைராக்கியத்தை வேண்டி ஸன்யாஸ ஆஸ்ரமத்தை அடைந்தார். அப்பேற்பட்ட மஹான்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!

க்யாதி லாப பூஜாஸு வைமுக்யம் (7 min audio in Tamizh, same as the script above)

Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.