செந்தமிழார் பகர் ஆர்வம் ஈ!

ஸ்வாமிகளுக்கு தமிழ், ஸம்ஸ்க்ருதம் இரண்டும் இரண்டு கண்ணாக இருந்துது. இரண்டுத்துலேயும் பிரியம் உண்டு. இன்னும் சொல்லப் போனால் எல்லா பாஷைகளிலுமே ரொம்பப் பிரியம் உண்டு.

விஷ்ணு என்ற ஒரு பக்தர் அங்கே வந்து ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளோட கிருதிகள் எல்லாம் தெலுங்கில் பாடுவார். ஸ்வாமிகள் அதை ரொம்ப ஆர்வமாய் கேட்பார். தெரியாத வார்த்தைக்கு புத்தகத்தை வைத்து பொருள் சொல்லச் சொல்லுவார். அதைக் கேட்டு ரொம்ப சந்தோஷப் படுவார். ஸ்வாமிகள் மேதாவியா இருந்ததனாலே ஒரு முறை பொருள் சொன்னாலே அவர் மனசுல பதிஞ்சுடும். பாடலில் அந்த இடத்துல ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகளோட பாவம்(bhAvam) என்ன என்பதை மனதில் வாங்கிவிட்டார் என்றால், அடுத்த முறை பாடும் போது ‘ஆஹா’வென ரொம்ப சந்தோஷிப்பார்.

விஷ்ணுவிற்கு மதுரை மணி ஐயர் பாட்டில் ரொம்ப விருப்பம். அவரோட காசட்டைக் கேட்டுக் கேட்டு அதே மாதிரிப் பாடுவார். அதைக் கேட்டு ஸ்வாமிகள் “மனசுக்கு ரொம்ப உருக்கமா இருக்கிறது” என்று சந்தோஷப்படுவார்.

விஷ்ணு, ஸ்வாமிகள் மாதிரியே கோவிந்த தாமோதர ஸ்தோத்ரம் படிப்பார். ஸ்வாமிகள் அவருக்கு பாகவதம் படிக்க சொல்லிக்கொடுத்தார். நிறைய ஸ்தோத்ரப் பாராயணங்கள் எல்லாம் கற்றுக்கொண்டார். அவர் ஒரு நாள் கேட்டார், “எனக்கு போக வர எப்பவும் மனசிலே சங்கீதமே ஓடிண்டு இருக்கு. இந்த பாராயணங்கள் எல்லாம் உட்கார்ந்து படிக்கிறேன். ஆனா சங்கீதம் தான் எப்பவும் ஓடிண்டு இருக்கு” என்றவுடனே, “அதுவே போறுமே…சங்கீதமே போறுமே. அதுவே ஒரு யோகம்தானே” அப்படீன்னு சொன்னார்.

அப்படி அவருக்கு எல்லா பாஷையும் பிடிக்கும் னு சொல்லிண்டு இருந்தேன். தமிழில் உயர்ந்த கருத்துக்கள் ஏதேனும் சொன்னால் ரொம்ப சந்தோஷமா கேட்டுப்பார். அதிலே எனக்கு ஒரு ஆசை. நான் படிச்சுண்டு வந்து திருப்புகழ் பாராயணம் பண்ணுவேன். அவர் கேட்காதது இல்லை. அவருக்கு தெரியாதது இல்லை. இருந்தாலும் பகவத் விஷயமா இருந்தால், அதையெல்லாம் விருப்பத்தோடு கேட்பார். அதே நேரத்தில், எதை எடுத்துக் கொள்ள வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் தெளிவுபடுத்துவார்.

“ஒரு முறை, சரவணபவ என்று சொன்னால் நினைத்ததெல்லாம் கிடைக்கும் என வேதம் சொல்கிறதே. நான் அனந்த தரம் சொல்லிவிட்டேனே!’ என்று ஒரு பாடல் வந்தது. ஸ்வாமிகள், “இது என்னோட approach கிடையாது. நாராயணீயத்தில் பட்டத்ரி, ‘உன்னுடைய கருணை ஏற்படற வரைக்கும் நான் பஜனம் பண்ணுவேன்!’ அப்படீன்னு சொல்கிறார். அந்த மாதிரி…

ஞான மார்கத்தில் அவா புத்தியினால எதோ முயற்சி பண்ணறா. கர்ம மார்கத்தில் அவா உடம்பால உழைக்கிறா. அதுலயாவது கர்வம் வருவதற்கு வாயிப்பிருக்கிறது. பக்தி மார்கத்தில்…humble-ஆ இருக்கிறதற்காகத்தான் பக்தி மார்க்கம். அதனால, ‘உன்னுடைய கருணைக் கிடைக்கணும்’ அப்படீன்னு நாம humble-ஆ இருக்கணும். நான் இவ்வளவு பண்ணினேன்னு நினைச்சா frustration வந்துடும். எந்த மஹானும் நான் இத்தனைக் கோடி ஆவர்த்தி பண்ணினேன்னு சொல்லறதில்லை. உன் கருணையினால எனக்கு தரிசனம் கிடைச்சுது-னு தான் சொல்லியிருக்கா…” அப்படீன்னு சொல்லுவார்.

ஜகன்னாதாச்சாரியார் அப்படீன்னு ஒரு தமிழ் பண்டிதர் இருந்தார். ஒரு முறை என்னை அவர்கிட்ட அனுப்பி சில பாடல்களுக்கு பொருள் கேட்டுக் கொண்டு வரச் சொன்னார். அப்ப அவருக்கு 90 வயது.

  1. கம்ப ராமாயணத்தில் இருந்து, “மும்மைசால் உலகுக் கெல்லாம்…” (வாலி ராம நாமத்தை அம்பில் பார்த்தான்-னு ஒரு செய்யுள்,
  2. ”நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே…” அப்படீன்னு ராம நாம மஹிமை சொல்லும் அருமையான ஒரு செய்யுள்
  3. ”அலங்கலில் தோன்றும் பொய்மை அரவென…”

இந்த மூன்று செய்யுளையும் போய் அவரிடம் அர்த்தம் எழுதிண்டு வரச் சொன்னார். ஜகன்னாதாசாரியார் அதை விஸ்தாரமா ஒரு மணி ஒன்னரை மணி நேரம் எனக்கு explain பண்ணிட்டு, அவர் கையாலேயே பொருள் எனக்கு எழுதிக் கொடுத்தார். அதை ஸ்வாமிகள் கிட்டே கொண்டு வந்து கொடுத்தேன்.

நான் ஸ்வாமிகள் கிட்டே பழகும் போது, சில பெரியவாள் கிட்டே எல்லாம் இது மாதிரி அனுப்புவார். Prof. வீழிநாதன் மாமா கிட்டே ஒரு தடவை அனுப்பினார். பிரதோஷம் மாமாவை “பார்த்து விட்டு வா”-னு ஒரு தடவை அனுப்பினார். இப்படி எல்லோர் கிட்டேயும், ஒவ்வொருத்தரையும் “போய் பார்த்து விட்டு வா” னு அனுப்பினார். நான் அங்கெல்லாம் போவேன், பழகுவேன். அப்புறம் ஸ்வாமிகள் கிட்டே திரும்பி வந்துவிடுவேன். “எனக்கு இங்கேதான் மனசு ஓட்டறது” அப்படீன்னு சொல்லி இங்கேயே உட்கார்ந்திருப்பேன். நான் foreign போயிருந்த போது ஸ்வாமிகள், “அவன் உட்கார்ந்து உட்கார்ந்து அந்த சுவர் காரை போயிடுத்து, வெள்ளையாயிடுத்து…” என்று என் அப்பா அம்மாவிடம் காண்பிப்பார். “அங்கேயே உட்கார்ந்திருப்பான் கொழந்தை…” என்று சொல்லுவார். அப்படி அவர் நினைத்ததாலே நான் திரும்பி வந்தேன்.

அந்த மாதிரி பெரியவான்னு சொல்லி ஸ்வாமிகள் யார்கிட்டே எல்லாம் அனுப்பினாளோ, நான் அவாளை எல்லாம் போய் பார்த்தேன். பிரதோஷம் மாமா, ஸ்ரீமஹா பெரியவா ஜெயந்தி எல்லாம், ரொம்ப வைபவமா பண்ணுவார். அதெல்லாம் போய் பார்க்கணும்னு ஆசையாய் போய் பார்த்தேன். அவர் கோபம் ரொம்ப பிரசித்தம். ஒரு வாட்டி என்கிட்டே, “நீ என்ன? அங்க மஹான் இருக்கார். அங்கே சர்வீஸ் பண்ணாம நீ எங்கே இங்கே வந்தே நீ? ஒரு குலமகளுக்கு ஒரு கொழுனன் தான். உனக்கு குரு, திருவல்லிக்கேணியில இருக்கிற ஆங்கரை பெரியவாதான். இனிமே நீ இங்கே வரப்டாது!” அப்படீன்னு சத்தம் போட்டார். எனக்கு அது ஒரு அனுக்ராஹமாப் போயிடுத்து. பெரியவாளோட கோபம் என்பது கூட ஒரு அனுக்ரஹம் தான் என்பதற்கு இது ஒரு உதாரணம். அதிலே இருந்து நான் ஸ்வாமிகள் கிட்டேயே சொல்லிட்டேன், “என்னை எங்கேயும் அனுப்பாதீங்கோ. இங்கே இருந்து நான் எதோ கத்துக்கிறேன்…” அப்படீன்னு சொன்னேன்.

அந்த ஏக பக்தி வந்த பின் ஸ்வாமிகளோட கருணையும் கிடைத்தது. அப்புறம் அவர் எனக்கு ஸம்ஸ்க்ருதத்துலேinfant reader வாங்கிக் கொடுத்து, அ, ஆ, இ, ஈ, சொல்லி வச்சார். நான் எதோ நிறைய மார்க் வரும்னு பிளஸ் 2-வில் பிரெஞ்சு எடுத்து படிச்சேன். அப்போ கூட ஸம்ஸ்க்ருதம் படிக்கணும்னு அறிவு வரலை. ஸ்வாமிகள் தான் ஸம்ஸ்க்ருதம் சொல்லி வச்சு, “படன் த்விஜஹ வாக்வ்ரிஷபத்வமீயாத்…” पठन्द्विजो वागृषभत्वमीयात् அப்படீன்னு “இந்த ராமாயணத்தை படிக்கறதனாலே ஸம்ஸ்க்ருதம் வரும்… ஸம்ஸ்க்ருதம் படிச்சவாதான் ராமாயணத்தை படிக்கணும்க்றது இல்லை… நீ இந்த ராமாயணத்தைப் படி, நீ இதன் மூலமாவே, ராம அனுக்ராஹத்தினாலேயே நீ முழு ராமாயணத்தையும் படிப்பே!” அப்படீன்னு சொன்னார். அவர் அனுக்ரஹத்தினால் நான் ராமாயணம் படித்துக் அநுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த ஸம்ஸ்க்ருததுல பிரியம் ஏற்படறதுக்கு அவர் ஒண்ணு சொன்னார். அது எனக்கு ரொம்ப மனசிலே பதிஞ்சு இருக்கு.

“சிகாராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற்

பகரார்வமீ, பணி பாசசங் க்ராம பணாமகுட

நிகராட் சமபட்ச பட்சி துரங்க ந்ருபகுமார

குமராட் சசபட்ச விட்சோப தீர குணதுங்கனே.”

என்று கந்தர் அலங்காரத்திலே ஒரு பாட்டு இருக்கு. இது முழுக்க ஸம்ஸ்க்ருதம். இதற்கு திரு செங்கல்வராயப் பிள்ளை உரை எழுதும் போது, “ஹே முருகா! எனக்கு உன்னை பாட வரும் போது ஒரே ஸம்ஸ்க்ருதமா வாயில் வருகிறது. “செந்தமிழாற் பகரார்வமீ – உன்னை தமிழில் பாட எனக்கு ஆர்வத்தைக் கொடு’ என்று வேண்டிக் கொள்கிறார். அப்புறம், அந்த ஸம்ஸ்க்ருதமா மனசில் வந்ததை பாடி முடிக்கிறார்”, அப்படீன்னு அவர் எழுதி இருக்கிறார்.

ஸ்வாமிகள் அந்த அலங்காரத்துக்கு இப்படி அர்த்தம் சொன்னார். “அருணகிரிநாதர் ‘செந்தமிழாற் பகரார்வமீ’அப்படீன்னு பிரார்த்தனை பண்ணிண்டு, நல்ல தமிழ் என்பது ஸம்ஸ்க்ருதம்தான், அதனால ஸம்ஸ்க்ருததிலேயே பாடி முடித்தார்”, அப்படீன்னு சொன்னார்.

என்கிட்டே திருப்புகழில், ஏன் தமிழ் மொழியிலேயே, முருகப் பெருமான் மேலே ரொம்ப அழகான ஒரு ஸ்தோத்ரம் எடு அப்படீன்னா, நான் “உதிதியுடை கடவு மரகத வருண…” அப்படீங்கற சீர் பாத வகுப்புதான் எடுப்பேன். அந்தப் பாட்டுல 60 ஸம்ஸ்க்ருத வார்த்தை இருக்கு.

அந்த மாதிரி ஸ்வாமிகள், ஸம்ஸ்க்ருதம் தமிழ் இரண்டையும் இரண்டு கண்ணாக பார்க்கறத்துக்கு ஸ்வாமிகள் சொல்லிக் கொடுத்தார்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!

செந்தமிழாற் பகர் ஆர்வம் ஈ (7 min audio in Tamizh, same as the script above)

 

 

Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.