Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரை

சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 1, 2 தமிழில் பொருள் (17 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 1 and 2)

ஆதிசங்கர பகவத் பாதாள் நிறைய பக்தி க்ரந்தங்கள் அனுக்ரஹம் பண்ணிக் கொடுத்துருக்கா. அதுல சிவானந்தலஹரி ங்கிறது ரொம்ப ஸர்வோத்க்ருஷ்டமானது. நூறு ஸ்லோகங்கள் கொண்டது. அந்த ஸ்தோத்ரத்தை தினம் இரண்டு, இரண்டு ஸ்லோகங்களா படிச்சு அதோட அர்த்தத்தை மனனம் பண்ணலாம்னு ஒரு ஆசை. இன்னிக்கு ஸோம வாரமா இருக்கு. பரமேஸ்வரனுக்கு உகந்த நாள்.

சிவானந்தலஹரிங்கிற அந்த பேரே அவ்ளோ ஆனந்தமா இருக்கு. லஹரினா, அலைகள், வெள்ளம்னு அர்த்தம். காவேரியில ஜலம் வருமான்னு நாம காத்துண்டு இருக்கோம். அப்படி ஜலம் பொங்கி வந்துதுன்னா அதுல ஸ்நானம் பண்ணும் போது எவ்ளோ ஆனந்தமா இருக்கும்! நாம கடற்கரையில போய் நின்னுண்டு அலைகளை பார்த்துண்டே இருந்தாலே இந்த சந்தோஷம்னா சிவானந்தலஹரின்னு சொல்லப்படும் அந்த பேரானாந்தம் அலையைப் போல அடிச்சுண்டு இருந்தா, அது எவ்ளோ சந்தோஷமா இருக்கும்!

சிவானந்தலஹரி அத்வைத ஆச்சார்யாள் பண்ணியிருப்பாளான்னு ஒரு கேள்வி? அவர் தான் பண்ணியிருப்பார். ஏன்னா இந்த ஸ்தோத்ரத்துல பக்தியே ஞானம் ன்னு சொல்றார். பக்தியினால ஞானம் இல்லை. பக்தியே ஞானம்னு establish பண்றார் இந்த நூறு ஸ்லோகங்கள்ல. சிவானந்தம்ங்கிறதே அத்வைதம் தான்னு சொல்லிடறார். அதெல்லாம் பார்ப்போம். எல்லா அழகும் இருக்கு. உவமைகள் போன்ற அலங்காரங்கள், பலவித ரஸங்கள். சொல்றதுக்கே, வார்த்தைகளே ரொம்ப அழகா இருக்கும்

ஸந்த்⁴யாரம்ப⁴விஜ்ருʼம்பி⁴தம் ச்ருதிசிரஸ்தா²னாந்தராதி⁴ஷ்டி²தம்

ஸப்ரேமப்⁴ரமராபி⁴ராமமஸக்ருʼத் ஸத்³வாஸனாசோபி⁴தம் ।

ன்னு சொல்றதுக்கே நன்னா இருக்கும். பொருள் ரொம்ப கம்பீரமா இருக்கும். கம்பீரத்துக்கு மேல ரொம்ப மனசை உயர்த்தக் கூடிய ஒரு கவிதை இது. நமக்கு உத்தம பக்தியைப் பற்றி சொல்லித் தரார். நீ பகவானுக்கு என்ன கொடுக்கப் போறேன்னு கேட்டுண்டு மனமாகிய புஷ்பத்தைதான் கொடுக்க முடியும். அவன் மனசைத் தான் பார்க்கறானே தவிர உன்னுடைய செல்வதையோ, படிப்பையோ அவன் பார்க்கறது இல்லை எங்கிறதல்லாம் ரொம்ப அழகா சொல்லித் தருவார். ஒரு தைலதாரை போல பகவான் கிட்ட மனசு வந்துண்டே இருக்கணும். அவன் பாதத்துல நிக்கணும். அது பேரு தான் பக்தின்னு அந்த definition சொல்வார்.

பக்தி சாஸ்த்ரத்துல, நாரத பக்தி ஸூத்ரத்துல, பகவானோட குணங்களை போற்றணும், அவரோட ரூபத்தை தியானம் பண்ணனும், பூஜை பண்ணனும், இடையறாது அவரை நினைக்கணும், அவரோட சேவையை பண்ணனும், அவரை ஒரு நண்பரா நினைக்கணும். அவர் கிட்ட நட்பு பாராட்டணும், அவர் கிட்ட காதல் கசிந்து உருகணும், குழந்தையை போல நேசிக்கணும், தன்னையே அர்ப்பணம் பண்ணனும், அவரோடு தன்மயமா ஆகணும், அவரை பிரிஞ்சு ஒரு க்ஷணம் கூட தாங்காம இருக்கணும். இப்படி பக்திங்கிறது 11 விதங்களில் வெளிப்படும் அப்படின்னு நாரத பக்தி சூத்ரத்துல சொல்றார். அந்த 11 ம் இந்த சிவானந்த லஹரியில ஆச்சார்யாள் காண்பிக்கறார்.

இந்த உரையாசிரியர் பேரு சுப்ரமண்யம். அண்ணா ன்னு குறிப்பிடுவா. மஹா பெரியவா கூட ஆஸ்திகதுக்கு ஒரு அண்ணா ன்னு இவரை பாராட்டியிருக்கார். இவர் குடுமி பஞ்சகச்சத்தோட நம்ம சம்ப்ரதாயத்துல இருந்துண்டு ராமகிருஷ்ண மடத்துல சென்னையில் தான், அவாளோட மடத்துக்கு best publishing house இருக்கு. ஆயிரக் கணக்கான புஸ்தகங்கள் லக்ஷக் கணக்கான பிரதிகள் போடறா. தபஸ்யானந்தான்னு ஒரு தலைவர் இருந்தார். அவரும் இந்த சுப்பிரமணியன் அண்ணாவும், இங்க ராமகிருஷ்ணா மிஷன் குழந்தைகளுக்கு hostel இருந்தது. அதுல இந்த சுப்ரமணியன்ங்கிறவர் warden ஆ இருந்தார். நல்ல தீர்க்காயுசா 90 வயசுக்கு மேல இருந்தார். அவரும் இந்த தபஸ்யானந்தாவும் தான் இந்த புஸ்தங்கள் எல்லாம், நிறைய புஸ்தகங்கள் வெளியிட்டிருக்கா. அவாளோட பூஜா விதானம் தான் எல்லார் ஆத்துலயும் பூஜைக்கு standard ஆ இருக்கு. அப்படி பெரிய service.

அண்ணாவோட நூற்றாண்டு இப்ப கொண்டாடி ராமகிருஷ்ண மடத்துல உரையாசிரியர் அண்ணாவோட புஸ்தகங்கள்ல 30, 40 இருக்கு. திரும்பவும் publish பண்ணிண்டு இருக்கா. அதுல சுந்தரகாண்டத்தை proof பார்க்கிற பாக்கியம் எனக்கு கிடைச்சுது. நல்ல பெரிய எழுத்துல calico binding ல சுந்தர காண்டம் போட்டிருக்கா. உரையாசிரியர் அண்ணாவோட வார்த்தைகள் அவ்ளோ valuable. அது புரிஞ்சு அவா reprint பண்றா. அவர் சிவானந்தலஹரிக்கு சொன்ன உரையைத் தான் நான் வெச்சுண்டு, இந்த முகுந்த மாலைக்கு பெரியவா சொல்லி சுந்தராச்சாரியார் போட்டிருந்த மாதிரி உரையாசிரியர் அண்ணா சொன்ன உரையைத் தான் முக்கியமா reference ஆ வெச்சுண்டு இந்த அர்த்தம் சொல்லப் போறேன்.

कलाभ्यां चूडालङ्कृतशशिकलाभ्यां निजतपः-

फलाभ्यां भक्तेषु प्रकटितफलाभ्यां भवतु मे ।

शिवाभ्यामस्तोकत्रिभुवनशिवाभ्यां हृदि पुन-

र्भवाभ्यामानन्दस्फुरदनुभवाभ्यां नतिरियम् ॥ १॥

கலாப்⁴யாம் சூடா³லங்க்ருʼதசசிகலாப்⁴யாம் நிஜதப:-

ப²லாப்⁴யாம் ப⁴க்தேஷு ப்ரகடிதப²லாப்⁴யாம் ப⁴வது மே ।

சிவாப்⁴யாமஸ்தோகத்ரிபு⁴வனசிவாப்⁴யாம் ஹ்ருʼதி³ புன-

ர்ப⁴வாப்⁴யாமானந்த³ஸ்பு²ரத³னுப⁴வாப்⁴யாம் நதிரியம் ॥ 1॥

ன்னு முதல் ஸ்லோகம் சிவாப்⁴யாம் நதிரியம் ன்னு பரமேஸ்வரனை பத்தி சொல்லணும்னு ஆரம்பிக்கும் போது இந்த முதல் ஸ்லோகத்துல பார்வதி பரமேஸ்வரனுக்கு நமஸ்காரம்னு ஆரம்பிக்கறார். அப்படி அம்மாவையும், அப்பாவையும் பிரிச்சு அவரால பார்க்க முடியல. சௌந்தர்யலஹரி ஆரம்பிக்கும்போதும் “சிவசக்த்யா யுக்தஹ” ன்னு ன்னு இரண்டு பேரையும் சேர்த்து ஆரம்பிச்சார். அந்த மாதிரி இந்த சிவானந்தலஹரி முதல் ஸ்லோகத்துல பார்வதி பரமேச்வராளுக்கு நமஸ்காரம் ன்னு சொல்றார்

वागर्थाविव संपृक्तौ वागर्थप्रतिपत्तये । जगतः पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ ।।

வாகர்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த-ப்ரதி பத்தயே |
ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ-பரமேச்வரௌ ||

ன்னு காளிதாசன் சொன்ன மாதிரி, ஒரு வார்த்தையில இருந்து அந்த அர்த்தத்தை பிரிக்க முடியுமா? ஒரு பேனா அப்படீன்னு சொன்ன உடனே அந்த பேனான்னு பொருள் ஞாபகம் வர்றது இல்லையா. அந்த மாதிரி அம்பாளையும் பரமேஸ்வரனையும் பிரிச்சு பார்க்க முடியாது. மேலும் அம்பாளுடைய அனுக்ரஹம் இருந்தா தான் இந்த சிவானந்தலஹரியை நாம் பருக முடியும். அனுபவிக்க முடியும். மூகபஞ்ச ஸதியில

प्रत्यङ्मुख्या दृष्टया प्रसाददीपाङ्कुरेण कामाक्ष्याः ।

पश्यामि निस्तुलमहो पचेलिमं कमपि परशिवोल्लासम् ॥

ப்ரத்யங்முக்²யா த்³ருʼஷ்டயா ப்ரஸாத³தீ³பாங்குரேண காமாக்ஷ்யா: ।

பச்யாமி நிஸ்துலமஹோ பசேலிமம் கமபி பரசிவோல்லாஸம் ॥

ன்னு ஒரு ஸ்லோகம் சொல்றார் மூக கவி. ‘ப்ரத்யங்முக்யா த்ருஷ்ட்யா’ உள்ள திரும்பின திருஷ்டி, அந்தர்முகமா உள்ளே திரும்பி நாம பார்க்கும் போது, கண்ணை மூடிண்டா என்ன தெரியறது? ஒண்ணும் தெரியமாட்டேங்கிறது. இருட்டாதான் இருக்கு ‘ப்ரஸாத³தீ³பாங்குரேண காமாக்ஷ்யா:’  காமாக்ஷியினுடைய பிரசாதம், காமாக்ஷியினுடைய அனுக்ரஹம்ங்கிற விளக்கு, தீபத்தை வெச்சுண்டு பார்த்தோமானா, என்ன தெரியும்? ‘பஷ்யாமி’ – நான் பார்க்கறேங்கிறார். விவேகானந்தர் ‘நீங்க கடவுளை பார்திருக்கேளா? ன்ன போது ராமகிருஷ்ணர் ‘நான் உன்னை பார்க்கறதை விட பக்கத்துல பார்த்திருக்கேன். தெளிவா பார்த்திருக்கே’ ன்னு சொன்னா மாதிரி இந்த மூக கவி அம்பாள் அனுக்ரஹத்துனால “பரஸிவோல்லாஸம்” பரமேஸ்வரனுடைய அந்த உல்லாசம், சிவானந்தலஹரியை நான் எனக்குள் ‘பஷ்யாமி’ நிஸ்துலம் – அதுக்கு துல்யமானது ஒண்ணுமே கிடையாது ‘அஹோ’ அந்த சந்தோஷத்தை சொல்றார் ‘பசேலிமம்’ ரொம்ப பழுத்த ஞானம் அது. அதை எனக்கு அம்பாள் அனுக்ரஹம் பண்ணிட்டான்னு சொல்றார். அப்படி அந்த அம்பாளுடைய அனுக்ரஹம் இருந்தா தான்  பரேஸ்வரனுடைய ஞானம் கிடைக்கும். அதைத் தான் மனசுல வெச்சுண்டு இங்க முதல் ஸ்லோகத்துலயே பார்வதி பரமேச்வராளை சேர்ந்து நமஸ்காரம் பண்றார்.

‘கலாப்⁴யாம் சூடா³லங்க்ருʼதசசிகலாப்⁴யாம்’ கலாப்யாம்னுசொல்லி ஆரம்பிக்கறார். ‘ககார ரூபா கல்யாணி’ ன்னு லலிதா த்ரிசதியில வர்றது. இந்த தேவியோட பஞ்சதசாக்ஷரியோட முதல் எழுத்து “க” ன்னு அண்ணா இங்க mention பண்ணியிருக்கார். அப்படி மங்களகரமான அந்த க என்கிற எழுத்தை கொண்டு இந்த ஸ்லோகத்தை ஆரம்பிக்கறார்

‘சூடா³லங்க்ருʼதசசிகலாப்⁴யாம்’ சசினா சந்திரன். சசிகலா ன்னா சந்திரனோட பிறை. சந்திரனோட பிறையை ‘சூடா³லங்க்ருʼத’ இரண்டு பேருமே அலங்காரமா அணிந்து கொண்டு இருக்கிறார்கள். பரமேவரனும் சந்திரனோட சாபத்தை போக்கறதுக்காக இந்த பிறையை எடுத்து தலையில வெச்சுண்டார். காமாட்சிக்கும் தலையில சந்திர பிறை. அப்படி இரண்டு பேருக்கும் ஒரே ரூபம்.

“சிவாப்யாம்”ங்கிற பதமே அழகு. சமஸ்க்ருதத்துல தான் இந்த பெருமை. பரமேஸ்வரன் பார்வதி இரண்டு பேரயும் சேர்த்து சொல்ற ஒரே வார்த்தை. மற்ற பாஷைகளில் அம்மாஅப்பான்னு சேர்த்து தான் சொல்லணும். சமஸ்க்ருதத்துல பிதரௌ ன்னா அம்மாஅப்பா ன்னு சேர்ந்து ஒரே வார்த்தை வர்றது. சிவாப்யாம் ங்கிற வார்த்தைக்கே பார்வதி பரமேஸ்வரா ன்னு அர்த்தம். அதை எடுத்துண்டு இந்த ஸ்லோகம் பண்ணியிருக்கார். dualனு சொல்வா.

கலாப்யாம் என்கிற இந்த வார்த்தைக்கு கலைகளின் வடிவமா இருக்கார். கவிதை ஒரு கலை. நாட்டியம் ஒரு கலை. இயல், இசை, நாடகம் வடிவமா இருக்கக் கூடிய இந்த பார்வதிபரமேச்வரா இந்த கவிதையை எனக்கு அமைச்சு கொடுக்காட்டும்னு வேண்டிக்கறார். இரண்டு பெரும் சந்திரக் கலையை தலையில அணிந்து கொண்டு இருக்கிறார்கள்

‘நிஜதப: ப²லாப்⁴யாம்’ ஒருத்தர் பண்ண தபஸ்னால இன்னொருத்தர் கிடைச்சா. பார்வதி தபஸ் பண்ணி பரமேஸ்வரனை அடைஞ்சா. பரமேஸ்வரன் தபஸ் பண்ணி பார்வதியை அடைஞ்சார். பார்வதி தபஸ் பண்ணா நமக்கு தெரியும். குமார ஸம்பவத்துல கூட சொல்றார். புராணங்கள் ல கூட இருக்கு. பார்வதி இலையை கூட சாப்பிடாம தபஸ் பண்ணா. அபர்ணான்னு பேரு. பரமேஸ்வரன் விளையாட்டு பண்ணிண்டு கல்யாணம் பண்ணின்டார் ன்னு படிச்சிருக்கோம்.

பரமேஸ்வரன் என்ன தபஸ் பண்ணார் பார்வதியை அடையறதுக்குன்னா, அதை மூக கவிதான் சொல்றார்

ராகாசந்த்³ரஸமானகாந்திவத³னா நாகாதி⁴ராஜஸ்துதா

மூகாநாமபி குர்வதீ ஸுரது⁴னீனீகாசவாக்³வைப⁴வம் ।

ஸ்ரீகாஞ்சீனக³ரீவிஹாரரஸிகா சோகாபஹந்த்ரீ ஸதாம்

ஏகா புண்யபரம்பரா பசுபதேராகாரிணீ ராஜதே ॥ 11॥

ன்னு பரமேஸ்வரன் பண்ண புண்ய பரம்பரை, அவர் பண்ண புண்யமெல்லாம் சேர்ந்து காமாக்ஷிங்கிற ஆகாரத்துல, உருவத்துல வந்துடுத்து ன்னு சொல்றார். அப்படி கணவன் பண்ணின தபஸ் தான் மனைவி. மனைவி பண்ணின தபஸ் தான் கணவன். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு அதுக்கும் வரம் இருந்தா தான் கிடைக்கும். அப்படி ‘நிஜதப: ப²லாப்⁴யாம்’ ஒருத்தர் பண்ண தபஸ்க்கு பலனா இன்னொருத்தர் கிடைச்சிருக்கா. ‘ப⁴க்தேஷு ப்ரகடிதப²லாப்⁴யாம்’ இரண்டு பெரும் சேர்ந்து பக்தர்களுக்கு இஷ்டப்பட்ட பலன்களை எல்லாம் கொடுப்பா.

இங்க ‘பவது மே’ ன்னு இருக்கு. இது சிவாப்யாம் இந்த பார்வதி பரமேஸ்வராளுக்கு பவது மே இயம் நதி: –  நதினா நமஸ்காரம் நுதின்னா ஸ்தோத்திரம் மே இயம் நதி: என்னுடைய இந்த நமஸ்காரம் சிவாப்யாம் பவது – என்னுடைய இந்த நமஸ்காரம் பார்வதி பரமேஸ்வராளுக்கு உரித்தானதாக ஆகட்டும்னு வெச்சுக்கணும். அங்க சேர்த்துக்கனும்.

‘அஸ்தோகத்ரிபு⁴வனசிவாப்⁴யாம்’ – அஸ்தோகம்னா அளவற்ற ன்னு அர்த்தம். மூவுலகதுக்கும் குறைவற்ற மங்களங்களை அருள்பவர்கள். அப்படி பக்தர்களுக்கு இஷ்டபட்ட பலன்களை கொடுக்கறா. உலகத்துக்கு எல்லாம் இவா மங்களங்களை பண்றா.

‘ஹ்ருʼதி³ புனர்ப⁴வாப்⁴யாம்’ ஒவ்வொரு தடவை மனசுல நினைக்கும்போதும் புதிது புதிதாக தோன்றுகிறார்கள். இரண்டு பேரையும் தினமும் ஸ்வாமி கோயில்ல பள்ளியறை பூஜையின் போது சேர்த்து வெச்சு பார்க்கறோம். புதுசா தானே இருக்கு. நேத்திக்கு பார்த்தோமே. இன்னிக்கு வேண்டாம்னு தோணமாட்டேன்கிறது. திரும்ப பார்க்கணும்னு தோன்றது. பிரதோஷம் அன்னிக்கு ரிஷப வாகனத்துல வரும் போது பார்க்கணும்னு தோன்றது. திரும்பியும் அவா புதுசா தெரியறா.

இதுக்கு இன்னொரு அர்த்தம் கூட சொல்லலாம். நாம பார்க்கற எல்லா கணவன் மனைவியுமே பார்வதி பரமேஸ்வரா தான். அப்படி ஒவ்வொரு தம்பதிகளை பார்க்கும் போது புதுசா தானே இருக்கா. இவாளுக்குள்ளே பார்வதி பரமேஸ்வரனா பகவான் இருக்கார். இது ஒரு புதுமையான ஒரு வடிவம். இன்னொரு கணவன் மனைவியை பார்த்தா அவா ஒரு பார்வதி பரமேஸ்வரா. அப்படி உலகம் முழுக்க இந்த பார்வதி பரமேஸ்வரன் அம்மாவாகவும், அப்பாவாகவும் காட்சி அளிக்கற அந்த பகவான்.

‘ஆனந்த³ஸ்பு²ரத³னுப⁴வாப்⁴யாம்’ இவா ஆனந்த அனுபவத்துல திளைச்சியிருக்கா. என்ன ஆனந்த அனுபவம்னா ஆத்மானுபவம் தான். இப்பேற்பட்ட பார்வதி பரமேஸ்வராளுக்கு சிவசக்தி ஐக்ய வடிவமா இருக்கக் கூடிய அந்த பார்வதி பரமேஸ்வராளுக்கு என் நமஸ்காரம் உரித்ததாகட்டும்னு

நம  சிவாப்யாம் நவயௌவனாப்யாம்
பரஸ்பரா ஸ்லிஷ்ட வபுர் தராப்யாம் |
நாகேந்திர கன்யா வ்ருஷ சகேதனாப்யாம்
நமோ  நம  சங்கர பார்வதீப்யாம் || ன்னு உமா மகேஸ்வர ஸ்தோத்ரத்துல சொன்னார் இல்லையா. அப்படி இவா இரண்டு பேரையும் சேர்த்து நமஸ்காரம் பண்ணி ஆரம்பிக்கறார்.

அடுத்த ஸ்லோகம்

गलन्ती शंभो त्वच्चरितसरितः किल्बिषरजो

दलन्ती धीकुल्यासरणिषु पतन्ती विजयताम् ।

दिशन्ती संसारभ्रमणपरितापोपशमनं

वसन्ती मच्चेतोहृदभुवि शिवानन्दलहरी ॥ २॥

க³லந்தீ சம்போ⁴ த்வச்சரிதஸரித: கில்பி³ஷரஜோ

த³லந்தீ தீ⁴குல்யாஸரணிஷு பதந்தீ விஜயதாம் ।

தி³சந்தீ ஸம்ஸாரப்⁴ரமணபரிதாபோபசமனம்

வஸந்தீ மச்சேதோஹ்ருʼத³பு⁴வி சிவானந்த³லஹரீ ॥

ன்னு சிவானந்தலஹரின்னு அந்த சிவானந்த வெள்ளம், அந்த வெள்ளப் பெருக்கு ங்கிற இந்த வார்த்தை இந்த ச்லோகத்துல தான் வர்றது. இந்த ஸ்லோகத்தை கொண்டு தான் இந்த ஸ்தோத்ரத்துக்கு  சிவானந்தலஹரின்னு பேரு வந்திருக்கு. இந்த வெள்ளம் என்னுடைய மனமாகிய மடுவில் வந்து தங்கட்டும் ‘மச்சேதோஹ்ருʼத³பு⁴வி வஸந்தி’ என் மனசு என்கிற மடுவில் இந்த சிவானந்த வெள்ளம் தங்கட்டும்னு வேண்டிக்கறார். ‘க³லந்தீ சம்போ⁴’ த்வச்சரிதஸரித: – இந்த வெள்ளம் எங்கிருந்து கிளம்பறதுன்னா ‘த்வச்சரிதஸரித:’ உன்னுடைய கதைகள் என்கிற நதியிலிருந்து ‘க³லந்தீ’ –  பெருகி வர்றது. பகவனோட கதைகளை கேட்டா சிவானந்தம் அங்கேயிருந்துதான் உதிக்கறது. பகவானோட கதைகளை கேட்கணும். கேட்டா அந்த சிவானந்த ஊற்று எடுக்கும்.

பிறகு ஓடி வரும்போது ‘கில்பி³ஷரஜோ த³லந்தீ’ என்னுடைய பாவங்கள் என்கிற புழுதியை போக்கிடறது. ஒரு நதியில ஜலமே இல்லேன்னா பலவிதமான அழுக்கு சேர்ந்திருக்கும். ஜலம் வந்ததுன்னா எல்லா அழுக்கையும் அடிச்சிண்டு போயிடும். அந்த மாதிரி நம்ம மனசுல இருக்கிற அழுக்கு எல்லாத்தையும் கில்பிஷம் – பாபங்களை இந்த சிவானந்த லஹரி என்கிற வெள்ளம் அடிச்சுண்டு போறது

‘தீ⁴குல்யாஸரணிஷு பதந்தீ’ நதியில ஜலம் ஓடித்துன்னா வாய்க்காலெல்லாம் ஜலம் போகும். புத்திங்கிற வாய்க்கால் வழியா இந்த ஜலம் ஓடறதுங்கிறார். நம்முடைய புத்தியை பகவானோட சரித்ரத்துல தான் நாம செலுத்தணும். வீண் கார்யங்கள்ல செலுத்தக் கூடாது. அப்படி பண்ணா அந்த புத்திகுள்ளேயும் அந்த சிவானந்தம்ங்கிற ஆனந்தம் வரும். நாம புத்திக்கு இந்த காரியத்தை கொடுத்து நாம பகவானோட சரித்ரத்தை கேட்டு அவருடைய பக்தியை பண்ணோம்னா இந்த சிவானந்தலஹரி வந்தா

‘தி³சந்தீ ஸம்ஸாரப்⁴ரமணபரிதாபோபசமனம்’ இந்த பிறவிச்சுழல்ங்கிற வாழ்க்கையில அலைஞ்சு அலைஞ்சு அதனால ஏற்படற அந்த ‘பரிதாபம்’ நமக்கு ஏற்படற அந்த கவலைகள் எல்லாத்தையும் ‘பரிதாப உபசமனம் தி³சந்தீ’ அதை இல்லாம போக்கிடும். அப்பேற்பட்ட அந்த சிவானந்தலஹரி ‘மச்சேதோஹ்ருʼத³பு⁴வி வஸந்தி’ என்னுடைய மனமாகிய மடுவில் வந்து தங்கட்டும். இந்த சிவானந்தலஹரி விஜயதாம் – வெற்றியோடு விளங்கட்டும்.

இந்த சிவானந்தலஹரியோட ஒரு திவலை தான் நாம உலகத்துல அனுபவிக்கற மத்த ஆனந்தங்கள் எல்லாம். அதனால நாமளும் இந்த சிவானந்தலஹரி கிடைக்கணும் னு வேண்டிப்போம். இந்த சிவானந்தலஹரி என்கிற ஸ்தோத்ரம் நூறு ஸ்லோகங்கள் இருக்கு. படிச்சு முடிக்கணும் எங்கிறதையும் வேண்டிப்போம்.

நம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ

Series Navigationசிவானந்தலஹரி 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரை >>

6 replies on “சிவானந்தலஹரி 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரை”

Hello Ganapathy Sir, I follow your audio recordings and consider it as a blessing- please continue this. It is not possible now to see the Mahans that you mention,only through your experience narrations we learn and feel their presence. You are indeed blessed to have the opportunity to interact with great mahans like Sri MahaPeriyavaa, Sri Damodara Swamigal.

You mentioned about Sundarakaandam in one of the recent posts.Please if possible, kindly post audio recordings of Sundarakaandam.
Look forward to listening to your audio recordings.

நமசிவாய நமசிவாய.
சிவானந்த லஹரி, ஸ்லோகம் முதல் ஸ்லோகம், இரண்டாம் ஸ்லோகம் ரொம்ப அருமையா இருக்கு.
ஒவ்வொரு பதத்தையும் ரொம்ப அழகா விளக்கமா சொல்லி இருக்கேள். ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு முறை ஆனந்த சாகரத்தில் மூழ்கி எழுந்தால் போல இருக்கு.
எந்த தம்பதிகளைப் பார்க்கும் போதும் பார்வதி பரமேஸ்வராளா நினைக்கணும் அப்படின்னு சொல்லுவா. இது எப்பேர்பட்ட உசந்த எண்ணம். நம்முடைய கலாச்சாரம், கலையம்சம் எல்லாம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்கிறது.
மனைவி செய்யற தவம் கணவன் அமைவது, கணவன் செய்யற தவம் மனைவி அமைவது ரொம்பப் பிரமாதமான விளக்கம். இது நூற்றுக்கு நூறு உண்மை.
இதுக்கெல்லாம் கிரீடம் வெச்சா போல காளிதாசரோட ஸ்லோகம் இருக்கு.
பார்வதி பரமேஸ்வராள பிரிக்கவே முடியாது.
மேற்கொண்டு மற்ற ஸ்லோகங்களை படிக்கிறேன் நன்றி🙏🙏🌹🌹

மிக ஆனந்தம் அளிக்ககூடிய உரை
பணிவான நமஸ்காரங்கள் பல கோடி

Namaskarams Mama.
please upload soudharya lahari also. in that way many will learn and get benefitted. with namaskarams

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.