குஷர் குஷநாபர் காதி

ஸ்வாமிகள் எங்கள் அப்பாவின் குணத்தை மிகவும் கொண்டாடுவார். “உன் அப்பா மிகவும் நிதானமாக இருக்கிறார். மிகவும் குறைவாகவே பேசுகிறார். அண்ணா, தம்பிகள் எல்லோரும் நன்றாக சம்பாதித்து விட்டார்களே என்று அசூயை கிடையாது. இன்றைக்கும் நீங்கள் சம்பாதித்துக் குடுக்கிறீர்கள் என்று பெருமை கிடையாது. இதெல்லாம் தான் முருக பக்தி, சிவ பூஜை பண்ணினதுக்கு லக்ஷணம். அதைப் பார்த்துக் கொள். அவரைப் போல இருந்தாலே போதும்” என்று எங்கள் அப்பாவைக் கொண்டாடுவார்.

ஸ்வாமிகள் இந்திர பவனில் மூன்றாம் நம்பர் ரூமில் இருந்தார். பக்கத்தில் முருகன் திருவருட் சங்க ஆபீஸ் இருக்கும். அங்கு சங்கத்தாரின் மீட்டிங் இருக்கும். “அந்த மீட்டிங் ஒரு இரண்டு மணி நேரம் இருக்கும். மீட்டிங் போது எல்லோருடைய குரலும் கேட்கும். ஆனால் மீட்டிங் முடிந்து எல்லோரும் கிளம்பும்போது “போய்ட்டு வரேன்” என்று உங்கள் அப்பா சொல்லும் ஒரு வார்த்தை தான் கேட்கும். அந்த அளவுக்கு உங்கள் அப்பா மிகவும் பேச்சைக் குறைத்து, அதனாலேயே மிகவும் சாந்தமாக இருந்தார்”, என்று ஸ்வாமிகள் எங்கள் அப்பாவின் பெருமையை எனக்குச் சொல்லித் தந்து அவரை புரிந்து கொள்ளவும் கொண்டாடவும் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்.

எனக்குக் கல்யாணம் ஆன போது ஸ்வாமிகள் ஆத்தில் எங்களை கூப்பிட்டு விருந்து சாப்பாடு போட்டு புடவை, வேஷ்டி வாங்கிக் குடுத்தார்கள். அங்கு வருடா வருடம் வேங்கடேச சமாராதனை செய்வார்கள். அந்த சமாராதனையின் போதும் எங்களைக் கூப்பிட்டு சாப்பாடு போட்டு மிகவும் அன்பு பாராட்டி இருக்கிறார்கள்.

எனக்குக் கல்யாணம் முடிந்து கொடைக்கானல் போய்விட்டு அப்படியே மதுரை மீனாக்ஷி அம்மனை தரிசனம் செய்து கொண்டு வந்தோம். ஒரு வருஷம் கழித்து பெண் குழந்தை பிறந்தாள். நான் என் அப்பாவிடம் “ எனக்கு ராமா ன்னு கொழந்தய கூப்பிடணும். ராம: என்றால் புல்லிங்கம். ராமா என்றால் ஸ்த்ரீலிங்கம். அதனால இவளை ராமான்னு கூப்பிடறேன்” என்று சொன்னேன். அப்பா “ நீ ஸ்வாமிகளைப் போய்க் கேட்டு அவர் சொல்ற பேரை வை. உனக்கு ராமா என்று கூப்பிட பிள்ளை பிறப்பான்” என்று சொன்னார். இதை ஸ்வாமிகளிடம் சொன்னேன்.

ஸ்வாமிகள் “மாதங்கி” என்று பெயர் வைக்கச் சொன்னார். மீனாக்ஷி என்று வைத்து விட்டு மாதங்கீ என்று கூப்பிடலாம். ஸ்வாமிகளுக்கு ஷ்யாமளா நவரத்ன மாலாவில் பிரியம் ஆதலால், “மாதங்கி” என்ற பெயரைச் சொன்னார். அதை இப்பொழுது எல்லோரும் ரசிக்கிறார்கள். அம்பாள் பெயராகவும் இருக்கிறது. மாடர்ன் ஆகவும் இருக்கிறது.

அப்புறமாக எனக்குத் தெரிய வந்தது. ஸ்வாமிகளிடம் பழகிய குடும்பங்களுக்குள் மாதங்கி என்ற பெயரை ஸ்வாமிகள், நாலைந்து பெண் குழந்தைகளுக்கு வைத்து இருக்கிறார். “ரகுராமன்” என்ற பெயரும் நாலைந்து குழந்தைகளுக்கு வைத்திருக்கிறார்.

மாதங்கி பிறந்து மூன்று வருடங்களுக்கு அப்புறம், ஸ்வாமிகள் சொல்லி ஒரு ஸ்லோகம் ஜபித்து அப்புறம் மனைவி கர்ப்பமாகி ஒரு பிள்ளை பிறந்தான். அப்படி கருணாமூர்த்தியாக இருந்த ஸ்வாமிகளோடு பழகும்போது நம் கையில் ஒன்றுமே இல்லை என்பது தெரியும். அந்த பிள்ளை பிறந்தபோது ஸ்வாமிகள், “புத்ரோத்ஸவமா? எல்லோருக்கும் ஸ்வீட் வாங்கிக் கொடு” என்று சொல்லி தன் ஆத்து உத்சவம் போல் சந்தோஷப்பட்டார். அப்படி கொண்டாடினார். குழந்தைக்கு ஸ்வாமிகள் “ரகுராமன்” என்று பெயர் வைக்கச் சொன்னார். நான் அப்போது “ராமா” என்று கூப்பிடுகிறாற் போல் “ராமகிருஷ்ணன்”, “ராமசந்திரன்” என்று பெயர் வைக்கலாமே என்று சொன்னேன். “ரகுராமன்” என்றால் எல்லோரும் ரகு என்று கூப்பிடுவார்களே என்று சொன்னேன். ஸ்வாமிகள் சொன்னார் – “மாதங்கி பிறந்த போது ஒங்கப்பா “ராமா” னு கூப்பிட உனக்கு ஒரு பிள்ளை பிறப்பான் என்று ஆசீர்வாதம் பண்ணினார். ராமாயணம் பால காண்டம் முப்பத்தி நாலாவது ஸர்கத்தில் விஸ்வாமித்ரர் ராம லக்ஷ்மணர்களுக்கு தன் பூர்வர்கள் (முன்னோர்கள்) கதையை சொல்கிறார். பிரம்மாவுக்கு பிள்ளை குசர். குசருக்கு பிள்ளை குசநாபர். குசநாபர் பிள்ளை காதி. நான் காதியுடைய பிள்ளை. என்று சொல்லும்போது – குசநாபர் ஒரு அஸ்வமேத யாகம் பண்ணுகிறார். அப்போது அவருடைய அப்பா குசர் “உனக்கு தர்மிஷ்டனான ஒரு பிள்ளை பிறப்பான்” என்று ஆசீர்வாதம் பண்ணுகிறார். அதன்படி காதி பிறந்தார். என்று வருகிறது. அது போல நீ ராமாயணம் படிச்சே. அதற்கு மேல் உங்க அப்பா “உனக்கு பிள்ளை பிறப்பான்” என்று மூன்று வருடத்திற்கு முன்பு ஆசீர்வாதம் பண்ணி இருக்கிறார். அதனால் இவன் பிறந்தான். அது மாதிரி, ரகு வம்சத்தில் வந்த ராமன் என்பது போல சுந்தர மாமாவின் பேரன், அவர் ஆசீர்வாதத்தால் இவன் பிறந்தான் என்று எல்லாருக்கும் தெரியட்டும். உனக்கும் ஞாபகம் இருக்கட்டும். அவருடைய நல்ல குணங்களும் இவனுக்கு வரட்டும்” என்றார்.

அப்படி ஸ்வாமிகளுடைய அன்பையும் அப்பாவுடைய ஆசீர்வாதத்தையும் என்றென்றும் நினைத்து உருகும் படியாக செய்துவிட்டார்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!

குஷர் குஷநாபர் காதி (5 min audio in Tamizh, same as the script above)

Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.