பக்ஷிநோபி பிரயாசந்தே சர்வ பூதானுகம்பினம்

ஸ்வாமிகள் சொல்வார் – நாம மஹா பெரியவாளோட சந்நிதியில் போய் நின்றாலே போதும். மஹா பெரியவா பதிமூணு வயசுல காமகோடி பீடத்தில் அமர்ந்ததுலேர்ந்து எத்தனை சந்த்ரமௌலீஸ்வர பூஜை, எத்தனை தீர்த்த யாத்திரை, எத்தனை தான தர்மங்கள், எத்தனை கோவில் கும்பாபிஷேகங்கள் என்று கணக்கில்லாம புண்ய கார்யங்கள் பண்ணி இருக்கா. ஞானிகளுக்கு புண்யமோ பாபமோ அவாளை ஒட்டாது. அவாளை யார் ஸ்தோத்ரம் பண்றாளோ அவாளுக்கு அந்த புண்யங்கள் போகும். யார் அவாளை நிந்தை பண்றளோ அவாளுக்கு பாபம் போகும் னு சாஸ்த்ரத்துல இருக்கு. மஹா பெரியவா புண்யமே ஒரு வடிவமா இருக்கா. “குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி” னு சொல்லி மஹா பெரியவாளை நமஸ்காரம் பண்ணினால் அந்த புண்யம் நமக்கு கிடைக்கும். இப்படி சுலபமான ஒரு உபாயம், அவா அவதாரம் பண்ணின போது நாமும் பிறந்து இருப்பதால் கிடைத்து இருக்கிறது. அதனால அவாளைப் போய் தரிசனம் பண்ணு. அந்த சந்நிதியில போய் நின்றால் போதும். அனுகம்பா என்ற கருணை அவாளோட இயல்பு. அதனால் தானா நமக்கு க்ஷேமம் ஏற்படும்” என்று சொல்வார்.

இந்த சந்நிதி விசேஷத்தை நம் ஸ்வாமிகள் சந்நிதியிலும் நான் அனுபவித்து இருக்கேன். ஸ்வாமிகளும் அளவற்ற புண்யம் பண்ணி இருக்கார். ஒரு தடவை சுந்தர காண்ட பாராயணத்துக்கே அவ்வளவு புண்யம் னு சொல்லி இருக்கு

ஈஸ்வர உவாச – கிம் பஹூக்தேன கிரிஜே யாம் சித்திம் படனான் நரஹ | ஸ்ரீமத் சுந்தர காண்டஸ்ய ன லபேத ன ஸாஸ்தி ஹி || என்று பரமேஸ்வரன் பார்வதி தேவி கிட்ட சொல்றார் – ஒரு ஆவர்த்தி சுந்தர காண்டத்தை முழுக்க பாராயணம் பண்ணினால் அதன் புண்யத்தால் கிடைக்காததே இல்லை. எல்லாமே கிடைக்கும்.

ஏகஹ்னே யஹ் படேத் ப்ராதாஹ் சமாரப்ய அபரான்னதஹ | ப்ராகேவ பூரயேத் காண்டம் அவ்யக்ர பதம் உச்சகைஹி || தஸ்ய புண்ய பலம் வக்தும் நைவ சேஷோபி ஷக்னுயாத் || பகல் ஒரு மணிக்கு முன்பு பூர்த்தி ஆகும்படி அக்ஷர சுத்தமாக சுந்தர காண்டத்தை முழுவதும் பாராயணம் செய்தால் அதற்கு அபரிமிதமான பலன். அது எவ்வளவு புண்யம் என்பதை ஆயிரம் நாவு படைத்த ஆதி சேஷனால் கூட சொல்லி விட முடியாது, என்று உமா சம்ஹிதையில் சொல்லி இருக்கிறது.

அப்படி பகல் ஒரு மணிக்குள் சுந்தர காண்டத்தை ஸ்வாமிகள் மூவாயிரம் தடவை பாராயணம் செய்திருக்கிறார். இன்னும் எத்தனையோ உபவாசங்கள், மந்த்ர ஜபங்கள். அப்பேற்பட்ட மஹான் அவர். அவருடைய சந்நிதி விசேஷத்துனால நாம அங்க போய் நின்னா போரும். ஒண்ணும் முறையிட வேண்டாம். எதோ குறைகளை சொல்லிண்டா ஆறுதல் வார்த்தைகள் சொல்வார். அபயம் தருவார். ஆனா அதெல்லாமே வேண்டாம். அவர் சந்நிதிக்கே எவ்வளவு மகிமை என்பதற்கு சில நிகழ்ச்சிகள் சொல்றேன்.

முல்லக்குடி சுந்தரேச சாஸ்த்ரிகள் னு ஒரு மஹான். அவர் பாரதத்தை நாற்பதெட்டு நாட்களில் பிரவசனம் பண்ணுவாராம். அவர் உச்சிஷ்ட கணபதி உபாசகர். பகலில் ஒரு வேளை நன்னா சாப்பிடுவாராம். அதுக்கு வேண்டிய பணம் முந்தின நாள் உயன்யாசத்துல ஜனங்கள் தட்டுல போடற பணம் தான். அப்படி அந்த காலத்துல மஹான்கள், படிச்சவா, எளிமையாக வறுமையைப் பற்றி கவலைப் படாமல் நம்ம மதத்துக்கு சேவை பண்ணி இருக்கா.

ஒரு நாள் சாயங்காலம் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் உயன்யாசம். ஸ்வாமிகளும் கேட்க போயிருக்கார். சாஸ்த்ரிஒவ்வொரு நாளும் தன் ப்ரவசனத்தோட ஆரம்பத்தில் மூக பஞ்சசதியில் இருந்து ஒரு ஸ்லோகத்தை ரொம்ப ராகத்தோடு பாடுவாராம். அன்னிக்கு அவர் ப்ரவசனத்துக்கு உட்கார்ந்தவுடன், மேகம் மூடிக்கொண்டு பலத்த மழை வரும் போல இருந்தது. உடனே அவர்

मरालीनां यानाभ्यसनकलनामूलगुरवे

दरिद्राणां त्राणव्यतिकरसुरोद्यानतरवे ।

तमस्काण्डप्रौढिप्रकटनतिरस्कारपटवे

जनो‌sयं कामाक्ष्याश्चरणनलिनाय स्पृहयते ॥

மராலீனாம் யானாப்யஸனகலனாமூலகுரவே

தரித்ராணாம் த்ராணவ்யதிகரஸுரோத்யானதரவே |

தமஸ்காண்டப்ரௌடிப்ரகடனதிரஸ்காரபடவே

ஜனோ‌sயம் காமாக்ஷ்யாஶ்சரணனலினாய ஸ்ப்ருஹயதே ||

என்று உருகிப் பாடினாராம். மேகங்கள் உடனே கரைஞ்சு போயிடுத்தாம். தரித்ராணாம் த்ராணவ்யதிகர ஸுரோத்யான தரவே என்றால் அம்பாளுடைய பாதாரவிந்தம் ஏழைகளின் துயர் துடைக்கும் ஒரு கற்பகத் தரு என்று அர்த்தம்.

பிரவசனம் முடிந்த போது ஸ்வாமிகள் போய் நமஸ்காரம் பண்ணினாராம். அவரிடம் ‘உங்கள் பாட்டைக் கேட்டு அம்பாள் மழையை விரட்டி விட்டாளே’ என்று சொன்னாராம். அவர் கண் ஜலத்தை துடைத்துக் கொண்டு ‘கல்யாணம், அந்த பிரார்த்தனையை நீ கேட்டு புரிந்து கொண்டு விட்டாயே!’ என்று சொன்னாராம். எனக்கு இதைக் கேட்ட போது ஸ்வாமிகளும் அங்கு இருந்து அந்த பிரார்த்தனையை புரிஞ்சுண்டு அவரும் கூட பிரார்த்தனை பண்ணினதுனால அம்பாள் அருள் செய்தாள் என்று தோன்றுகிறது.

இன்னொரு நிகழ்ச்சி – அனந்தராம தீட்சிதருக்கு ஒரு முறை ஒரு உடம்பு வந்துவிட்டது. அவர் ஒரு போர்வையால் உடம்பை போர்த்திக் கொண்டு சில காலம் நாராயணீயம் ராமாயணம் எல்லாம் பிரவசனம் பண்ணி இருக்கார். ஒரு தடவை ராமாயணம் சொல்லிண்டு இருக்கார். ஸ்வாமிகள் கேட்டுண்டு இருக்கார். அயோத்யா காண்டத்தில் ராமர் காட்டிற்கு கிளம்பும் போது வயசான பிராம்மணர்கள், தலையெல்லாம் நரைச்சு போன அவாளுக்கு உடம்பு நடுங்கறதாம். ஆனா அவா பெரிய குடைகளை எடுத்துண்டு கூட வரா. அவா சொல்றா – “ராமா, பிராம்மணர்களுக்கு நீ தெய்வம் போன்றவன். நீ காட்டுக்கு போய்விட்டால் அப்பறம் இங்க எங்களுக்கு யார் இருக்கா? வாஜபேய யாகம் செய்தபோது உன் அப்பா எங்களுக்கு பிடிச்ச குடையை எடுத்துண்டு வந்திருக்கோம். காட்டில் வெயில் மழையிலிருந்து இது உன்னை காப்பற்றும், எங்களுக்கு நாங்கள் படித்த வேதம் சாப்பாடு போடும். வீட்டில் உள்ள எங்கள் மனைவிகளை அவர்கள் கற்பு காப்பாற்றும். நாங்கள் உன்னோடு வருகிறோம்” என்று வருகிறார்கள். அவா அப்ப சொல்றா – पक्षिणोपि प्रयाचन्ते सर्व भूतानुकंपिनम् “பக்ஷிநோபி பிரயாசந்தே சர்வ பூதானுகம்பினம் – எல்லா உயிர்களிடத்திலும் கருணை செய்யும் ஹே ராமா! உன்னை இந்த மரத்தில் அமர்ந்திருக்கும் பக்ஷிகள் கூட போகாதே என்று வேண்டுகின்றன”

அன்னிக்கு உபன்யாசத்தும் போது அனந்தராம தீட்சிதர்

யாசந்தே

பிரயாசந்தே

பக்ஷிநோபி பிரயாசந்தே

அனுகம்பினம்

பூதானுகம்பினம்

ஸர்வ பூதானுகம்பினம்

பக்ஷிநோபி பிரயாசந்தே சர்வ பூதானுகம்பினம் என்று திரும்ப திரும்ப சொல்லிக் கதறினாராம்.

ஸ்வாமிகள் “ஹே குருவாயூரப்பா! உன் பக்தர் இப்படி கதறுகிறாரே! அவருடைய கஷ்டத்துக்கு ஒரு நிவர்த்தி குடு” என்று வேண்டிக் கொண்டாராம். அடுத்த தடவை அவருடைய ப்ரவசனத்தின் போது வியாதியெல்லாம் சொஸ்தமாகி உடம்பு தங்க ரேக்காக ஆகிவிட்டது. இரண்டு கைகளையும் மேலே தூக்கிண்டு “யோகிந்த்ரணாம் த்வதங்கேஷு” னு ஆனந்தமாக ஸ்லோகம் சொன்னாராம். இங்கேயும் ஸ்வாமிகள் இருந்ததால் அவர் வேண்டுதலுக்கு பகவான் செவி சாய்ச்சார், என்று எனக்கு தோன்றுகிறது. ஸ்வாமிகள் சந்நிதி விசேஷம் அப்பேற்பட்டது.

இன்னிக்கும் பழூரில் அவர் அதிஷ்டானதிலும், எங்கே அவரை நினைத்துக் கொண்டு அவர் சொன்ன ஸ்தோத்ரங்கள் ராமாயணம் பாகவதம் பாராயணம் பண்ணினாலும் அவருடைய சந்நிதி விசேஷத்தை அனுபவிக்கலாம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!

பக்ஷிணோபி ப்ரயாசந்தே (6 min audio in Tamizh, same as the script above)

Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.