Categories
Govinda Damodara Swamigal

ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – சுந்தர காண்டம்

சுந்தர காண்டம்

  1. யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே

ஹனுமார் ‘ராம பாணம் போலச் சென்று ஸீதாதேவியை கண்டு வருவேன்’ என்று நண்பர்களுக்கு வாக்களித்து விட்டு ஆகாசத்தில் பறந்து செல்கிறார். இடையில் வந்த மைனாக மலையை தீர்மானத்தாலும், ஸுரஸா என்ற நாகமாதாவை புத்தியாலும், ஸிம்ஹிகை என்ற ராக்ஷஸியை பலத்தாலும் வென்று லங்கையை அடைகிறார். லங்கையின் காவலாக இருந்த ஒரு அரக்கியை விளையாட்டாக ஜயித்து, பின் உள்ளே சென்று அந்த நகரத்தின் அழகையும், பாதுகாப்பையும், ராக்ஷஸர்களின் போக வாழ்வையும், புஷ்பக விமானத்தையும் கண்டு வியக்கிறார்.

ராவணன் அந்தப்புரத்தில் ஸீதையை தேடுகிறார். ‘பிறன் மனைவியை தூங்கும் போது பார்த்தோமே’என்று கவலைப் படுகிறார். ‘என் மனம் சலிக்கவில்லை. மேலும் ராம கார்யத்துக்காக, அவர் சொல்லி, இங்கு வந்தோம். அதனால் தவறில்லை’என்றெண்ணி மேலும் தேடுகிறார். மந்தோதரியை ஸீதையோ என்றெண்ணி நிற்கிறார். பின்னர் தௌந்து, மற்ற இடங்களில் தேடுகிறார்.

எங்கும் தேடியும் ஸீதையை காணாமல் வருந்தி, பலவாறு புலம்பி உயிரையும் விடத் துணிகிறார். பின்பு அது சரியில்லை என்று முடிவு செய்து, ‘எது வரையில் ஸீதாதேவியை பார்க்கிறேனோ அது வரையில் மீண்டும் மீண்டும் தேடுவேன்.’ என்று கிளம்பி அசோக வனத்தில் தேடுகிறார். கார்ய ஸித்திக்காக ராமலக்ஷ்மணர்களையும் ஸீதையையும், மற்ற தெய்வங்களையும் வேண்டுகிறார். ஸீதாதேவியை தரிசிக்கிறார். உடனே மரங்களுக்குள் தன்னை நன்றாக மறைத்துக் கொள்கிறார்.

———————————————-

காமினி காஞ்சனத்தில் பற்றுகள் போய், ஆசா பாசங்கள் விலகி இருப்பது ஒரு உயர்ந்த நிலை. ஆனால் ‘நான்’ என்ற ego அஹங்காரம் முழுமையாக மறைந்து பகவானை ஸூத்ரதாரியாகக் கண்டு கொள்வது, (ஹனுமார் இருந்தது போல) முடிந்த முடிவான நிலை. கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அந்த நிலையில் விளங்கினார். அதனால் தான் அவருக்கு எந்த சறுக்கலும் இல்லாமல், கடைசி மூச்சு வரையில் பக்தி பண்ணிக் கொண்டு இருக்க முடிந்தது.

அப்படி தெய்வத்தின் கையில் தன்னை ஒரு கருவியாக உணர்ந்ததால் தான், மஹா பெரியவாள் என்ற ஞானிக்கு பாகவதம் சொன்னது, சிவன் ஸார் உத்தரவின் பேரில், வீட்டில் இருந்தபடியே யதீந்தராய் விளங்கியது, ராமாயண பாகவதத்தை படிக்கும் போதே அதில் லயித்து புற உலகை மறந்து தெய்வத்தோடு ஒன்றிவிடுவது, ரொம்ப கீழ்ப் படியில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் நம்பிக்கை குடுத்து வாழவைத்தது, போன்ற நினைத்து பார்க்கவே முடியாத அரிய பெரிய காரியங்களை ஸ்வாமிகளால் செய்ய முடிந்தது. தன்னைச் சுற்றி ஒரு ஸங்கம், டிரஸ்ட், கூட்டம், கௌரவம் இதெல்லலாம் வராமல் அவரால் தடுத்துக் கொள்ள முடிந்தது.

ஹனுமார் desparate ஆகி புலம்புவது போல ஸ்வாமிகளும் புலம்புவார். “எனக்கு க்ருஷ்ண தர்சனம் கிடைக்குமா?” என்று அவர் கண் ஜலத்தோடு கேக்கற sincerity, பணத்துக்காக மட்டுமே அழும் கல் நெஞ்சைக் கூட உருக்கும். அவருக்கு வந்த pressure, sugar எல்லாம் கூட உலக விஷயங்களில் anxiety னால் நமக்கு வர மாதிரி இல்லை. மாறி மாறி பகவானுக்கு ஏங்குவதாலும், இனிமையை அநுபவிப்பதாலும் என்று எனக்கு தோன்றும். heart attack கூட ஸ்வாமிக்காக அழுதழுது நெஞ்சு வெடித்ததால் தான் என்று நினைப்பேன். அந்த period ல அவ்வளவு desparate ஆ இருந்தார்.

‘எது வரையில் ஸீதாதேவியை பார்க்கிறேனோ அது வரையில் மீண்டும் மீண்டும் தேடுவேன்.’என்று ஹனுமார் சொன்னது போல ‘ஸ்வாமி தர்சனம் கிடைக்கும் வரையில் மீண்டும் மீண்டும் இந்த ராமாயணத்தை படிப்பேன்’ என்று சொல்வார். ‘ஹனுமார் ஸீதைதேவியை தரிசித்த பின் மரங்களுக்குள் தன்னை நன்றாக மறைத்துக்கொண்டார்.’ என்று வருவது போல், ஸ்வாமிகள் பகவத் தர்சனம் கிடைத்த பின் ஸந்நியாஸிக் கோலத்தில் அதிகமாக மௌனம் காத்து தன் ஞானத்தை மறைத்துக் கொண்டார்.

ஆனால் நமக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க விரும்பி, எந்தக் கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல், முக்யமாக உடம்பு வேதனையை பொறுத்துக் கொண்டு, கடைசி நாள் வரை அந்த ராமாயண பாகவதத்தை படித்து, சொல்லிக் குடுத்து கொண்டிருந்தார். அப்போது வௌப்பட்ட கருணை வார்த்தைகளும், இனிமையான ஸ்தோத்ர பாராயணங்களும் தான், இன்று நினைத்தாலும் ஆறுதல் தருகிறது.

  1. ஓருயிர் ஈருடலாய் விளங்கும் ஸதிபதிகள் வணக்கத்துக்கு உரிய தெய்வங்கள்

ராம பக்தியால் உள்ளே கனன்றும், முகத்தால் மிக வாடி இருக்கும் ஸீதையை கண்ட ஹனுமார் ‘கற்பின் கனலாய் விளங்கும் இந்த தெய்வப் பெண்ணைப் பிரிந்து ராமர் உயிரோடு இருப்பதே ஆச்சர்யமாய் இருக்கிறது. ஒருவர் உயிர் மற்றொருவரிடம் இருப்பதால் தான் அது சாத்தியம்’ என்று நினைக்கிறார்.

ராவணன் ஸ்தீரீகளுடன் அங்கு வந்து ஸீதையிடம் பலது பேசுகிறான். அவனைத் துரும்பு போல் மதிக்கும் ஸீதை ‘உயிர் பிழைக்க ஆசை இருந்தால் ராமரிடம் என்னை ஒப்படைத்து மன்னிப்பு கேட்டுக் கொள்’ என்று தைரியமாய்ச் சொல்கிறாள்.

அவன் போன பின் ராக்ஷஸிகள் ஸீதையை மிரட்டுகிறார்கள். ராமரை குறைத்து பேசும் போது மட்டும் ஸீதை ‘என்னை நீங்கள் கொன்று தின்றாலும் சரி. உங்கள் பேச்சைக் கேட்க மாட்டேன். என் கணவன் ராமனே என் தெய்வம்’ என்கிறாள். த்ரிஜடை என்ற ராக்ஷஸி ஸீதைக்கு நல்ல வேளை வரப்போவதைக் குறிக்கும் ஸ்வப்னம் கண்டதைச் சொல்லி, மற்ற ராக்ஷஸிகளை விலக்குகிறாள். ராமர் இத்தனை நாட்களாக வரவில்லையே, இறந்திருப்பாரோ என்ற எண்ணம் ஏற்பட ஸீதை தான் தன் உயிரை விடக் கிளம்புகிறாள்.

மரத்திலிருந்து எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த ஹனுமார், ஸீதாதேவி பயப்படாத படி எப்படி பேசுவது என்று யோசித்து, ராம கதையை அவள் கேட்கும்படி இனிமையாக சொல்கிறார். வியந்து பார்த்த ஸீதையை நெருங்கி வந்து ‘நீங்கள் யார்? ஏன் அழுகிறீர்கள்?’ என்று கேட்டு, அவள் பதில் சொன்ன பின், தான் ராம தூதனாய் வந்திருப்பதைத் தெரிவிக்கிறார். அவளுடைய பயம் ஸந்தேகம் எல்லாம் போகும் வரை மீண்டும் மீண்டும் நமஸ்கரிக்கிறார்.

———————————————-

வேற எதுக்கும் இல்லை என்றாலும், ஸ்வாமிகள் நிலைமையில், அவர் ஏகபத்னி விரதமாய் இருந்ததற்கும், அவர் மனைவி அவர் கொள்கைகளை ஏற்று அவர்கள் கூடி வாழ்ந்த வாழ்க்கைக்காகவே அவர்களுக்கு கோவில் கட்டி கும்பிடலாம். ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்’ என்ற குறளை இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில் ஏன் வைத்தார் என்பது இவர்களைப் பார்த்தால் புரியும். மேம்போக்கா பார்த்தா இல்லை. Deep inside, the attitude they had towards each other is where the difference was. ஸீதாதேவி ராமனிடத்தில் வைத்தது போன்ற பக்தியை ஸ்வாமிகள் மஹாபெரியவாளிடம் வைத்திருந்தார். தனக்கென்று ஒரு ஸங்கல்பமோ, ஸந்தேகமோ இல்லாமல், மஹாபெரியவா சொல்படி ராமாயண பாகவதம் படிச்சார். அந்த பஜனத்துலேயே ஆனந்தம் அடைந்து, ‘यद्यत् भव्यं भवतु भगवन् पूर्व कर्मानुरूपम्’ என்று, எந்தக் கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் கடைசி வரையில் படிச்சார்.

ஸ்வாமிகளின்பூர்வாச்ரம மனைவி அவரிடம் அந்த மாதிரி இருந்தா. அவாளுக்கு hysteria என்று சொல்லி தான் கேட்டிருக்கேன். நான் பார்த்த வரையில் ஒரு நாள் கூட அவா அவரிடம் அதிர்ந்து பேசினது கூட கிடையாது. ஸ்வாமிகளுக்கு எதாவது உடம்பு சிரமம் என்றால் தவிச்சுப் போயிடுவா. அவருடைய குணங்களை வாயாரப் போற்றுவா.

அந்தம்மா பணத்தாசை இல்லாமல் இருந்தது கூட பெரிசில்லை. தன் பிள்ளை, பெண்கள் மேல இருக்கிற பாசத்தினால், அவா கஷ்டப்படும் போது, இவரை படிக்க விடாமல் எழுப்பி இருக்கலாமே. on the contrary இவர் பண்ற காரியத்தை எப்பவுமே மதிச்சா. என்ன தாபம் ஏற்பட்டாலும் மாடிக்கு வந்து இவரை இந்த இரண்டு ஸ்வாமிகளை சொல்லச் சொல்லி கேட்டுட்டு போவா. It is a scene worth remembering forever.

केशपाशधृत पिञ्चिकावितति संचलन्मकरकुण्डलं

हारजाल वनमालिका ललितमङ्गराग घनसौरभम् ।

पीतचेलधृत काञ्चिकाञ्चित-मुदञ्चदंशुमणि नूपुरं

रासकेलि परिभूषितं तव हि रूपमीश कलयामहॆ ॥

वल्लिदेवयानिका समुल्लसन्तमीश्वरं

मल्लिकादि दिव्यपुष्प मालिका विराजितम् ।

झल्लरी निनाद शंखवादन प्रियं सदा

पल्लवारुणं कुमारशैल वासिनं भजे ॥

ஒரு முறை ஸ்வாமிகளிடம் ‘த்யாகராஜ ஸ்வாமிகள் சரித்ரம்’ படித்துக்கொண்டு இருந்தேன். அதில் த்யாக்ராஜ ஸ்வாமிகளின் தர்மபத்னி ஒரு நாள் அவரிடம் வந்து நமஸ்கரித்து ‘உங்களுக்கு கைங்கர்யம் பண்ணும் பாக்யம் கிடைத்தது. தர்மஸம்வர்த்தனி அம்மா என்னை கூட்டிண்டு போக வந்திருக்கா. உத்தரவு தரவேண்டும்’ என்ற இடம் படிக்கும் போது ஸ்வாமிகள் ‘கீழே இருக்கறவாளால (ஸ்வாமிகள் மனைவி) எனக்கு ச்ரமம் என்பது தான் உலகத்துக்கு தெரியும். அவாளோட அன்பும் விச்வாசமும் எனக்கு தான் தெரியும். எந்த புற்றில் எந்த பாம்போ? யார் புண்யத்தை யார் கண்டா?’ என்று சொன்னார். இதில் இவருடைய ஏகபத்னி வ்ரதமும் தெரிகிறது.

ஸ்வாமிகள் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்ட பின், அவருடைய பூர்வ ஆச்ரமத்தைப் பற்றி பேசவேண்டுமா என்று தோன்றலாம். நான் பார்த்துப் புரிந்து கொண்ட வரை, ஸ்வாமிகள் பிறந்த நாளிலிருந்து கடைசி நாள் வரை, ஒவ்வொரு ஆச்ரமத்திலும், ஒவ்வொரு நாளின் எல்லா வேளைகளிலும் செய்தது எல்லாமே சாஸ்த்ர சம்மதமானது, ராமாயணத்திற்கு ஒரு விளக்கம் போல அமைந்தது அவர் வாழ்க்கை. அதனால் அது புண்யச்லோகம். (அதைப் பேசினால் புண்யம் கிடைக்கும்.) அவருக்கு ச்ரமங்கள் இருந்தது என்பது உண்டு. ஆனால் அந்த ச்ரமத்திலும், அவர் ஸத்யத்தையும் தர்மத்தையும் கைவிடாமல், இடையறாத பக்தி பண்ணிண்டு இருந்தார்.

மற்ற பக்தர்கள் கதையில் வருவது போல ‘பகவானால் ஆட்கொள்ளப் பட்டபின் தூய்மை அடைந்தார்கள்’ என்பது போல நம் ஸ்வாமிகளை நினைக்கக் கூடாது. அநுபூதியுடனே பிறந்த அவதார மஹானான அவர், தபஸினால் மேலும் தூய்மையில் உயர்ந்து, துறவி, ஞானி போன்ற நிலைகளை அடைந்தார். அதைத் தான் சிவன் ஸார் ‘அவர் தனியாக ஸந்யாஸம் வாங்கிக் கொள்ள வேண்டுமா என்ன?’ என்று முதலில் கேட்டுவிட்டு பின்னர் ஸந்யாஸத்துக்கு அநுமதி வழங்கி, ‘அமோகமாக இருப்பார்’ என்று ஆசீர்வதித்தும், ஸந்யாஸம் வாங்கிக் கொண்டபின் ‘அவா யதீந்த்ராள்’ என்று கொண்டாடியதில் இருந்தும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்வாமிகள், தம்பதிக்களுக்குள் ஒற்றுமை வளர, சாயங்கால வேளையில் நெய் விளக்கு ஏத்தி ‘शिव शंकर सर्वात्मन् श्रीमातर्जगदम्बिकॆ’ என்று ஒரு ஸ்லோகம் சொல்லச் சொல்லுவார். அப்போ இந்த ஸதிபதிகளையே பார்வதீ-பரமேச்வரர்களாக நினைத்து வணங்குவோம்.

  1. பொய்யை நிந்திக்க வேண்டும், உண்மையை சாதிக்க வேண்டும்

ஹனுமார் ஸீதாதேவியிடம் ராமலக்ஷமணர்களின் அங்க அடையாளங் களையும், ராமருடைய குணங்களையும், ஸுக்ரீவனோடு நட்பையும், வாலி வதத்தையும், வானரர்கள் நான்கு திக்குகளில் ஸீதையைத் தேடுவதையும், தான் கடலைக் கடந்து வந்து அவளைக் கண்டதையும் கூறி, ராம நாமம் பொறித்த அவருடைய மோதிரத்தை ஸீதாதேவி யிடம் அளிக்கிறார். ஸீதை சோகம் தீர்ந்து மகிழ்ச்சி அடைகிறாள்.

‘ராமர் என்னை மறக்காமல் இருக்கிறாரா? ஏன் இன்னும் என்னை மீட்க வரவில்லை?’என்று வருந்தும் ஸீதையிடம் ஹனுமார் ‘இனி அழ வேண்டாம். விரைவில் ராமர் வந்து தங்களை மீட்டுச் செல்வார்’என்று மீண்டும் மீண்டும் கூறி சமாதானம் செய்கிறார்.

ஹனுமார் விச்வரூபம் காட்டி ‘இப்போதே வேண்டுமானால் என் முதுகில் ஏற்றிக் கொண்டு போய் உங்களை ராமரிடம் சேர்க்கிறேன்’ என்று சொன்ன போது ஸீதை, ‘ராமரே வந்து இந்த ராவணாதி ராக்ஷஸப் பதர்களை அழித்து, என்னை மீட்டுக் கொண்டு போவது தான் அவர் புகழுக்கு அழகு. ஒரு மாதம் நான் உயிர் தரிப்பேன். ஹனுமான், நீ போய் சீக்கிரம் அவர்களை அழைத்து வா’ என்கிறாள். தன் சூடாமணியை அடையாளமாக ஹனுமாரிடம் தருகிறாள்.

ஹனுமார் அசோகவனத்தை அழித்து, ராவணன் அனுப்பிய 80000 ராக்ஷஸர்களை தவிடு பொடியாக்குகிறார். ‘நான் ராமதாஸனான ஹனுமார். ஆயிரம் ராவணர்கள் வந்தாலும் என்னை எதிர்க்க முடியாது’ என்று கர்ஜிக்கிறார். 5 ஸேனாபதிகளையும், 7 மந்திரி குமாரர்களையும், ராவணன் புதல்வனான அக்ஷகுமாரனையும் வதம் செய்து, இந்தரஜித்தைத் தத்தளிக்கச் செய்து, பின் அவன் ஏவிய ப்ரம்மாஸ்திரத்திற்கு தாமாக கட்டுப் படுகிறார்.

ராவணனைப் பார்த்து சிறிதும் கலங்காமல் அவன் செய்த தவற்றை சுட்டிக்காட்டி, ராமரின் மஹிமையையும், வானரர்களின் வீரத்தையும் எடுத்துச் சொல்லி, ஸீதையை ராமரிடம் ஒப்படைக்கவில்லையானால் ஸர்வ நாசம் ஏற்படும் என்று அறிவுறுத்துகிறார். இப்படி ஹனுமார் உண்மைப் பொருளான ராமரின் பெருமையை எங்கும் நிலை நாட்டுகிறார். பொய்யின் வடிவமான ராவணனுடைய ராக்ஷஸர்களை ஹதாஹதம் செய்து, அவனையும் நிந்திக்கிறார்.

ஸ்வாமிகள் போலிகளை கண்டிப்பது, நாத்திகர்களை சாடுவது என்று open ஆக பண்ணவில்லை. ஆனால், அவர் வாழ்வின் மூலமே எதை ஒத்துக் கொண்டார், எதை தவிர்த்தார், எதைக் கண்டித்தார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

அவர் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்வதற்கு முன் அருகில் இருந்த ஒரு ஆச்ரமத்திலும், மடத்திலும், ஒரு ஸந்நியாஸி அங்கு வந்து இருப்பதானால் அவர்களுடைய rules and regulations என்ன என்று கேட்டுக் கொண்டு வரச் சொன்னார். ஒரு இடத்தில் ‘என்ன capital வெச்சுருக்கார்?’ என்று கேட்டா. இன்னொரு இடத்தில் ‘எவ்வளவு contribution குடுப்பார்?’ என்று கேட்டா. என்னிடம் ‘மனவடக்கத்தைச் செல்வமாகக் கொண்ட யோகிகளுக்குத் தான் அம்பாள் அருள் கிடைக்கும்’ என்ற ஸ்லோகத்தைக் காட்டினார்.

பாகவதம் படிக்கும் ஒரு பெரியவர் ‘enough and to spare என்ற அளவில் தேவைக்கு மேலயே பணம் வரது’ என்றார். ஸ்வாமிகள் ‘பைபிளில் ஒரு ராஜா கூட please give me my daily bread என்று பகவான் கிட்ட வேண்டிக்கணம் என்று வருகிறது. பாகவதம் படிக்கிறவா பணத்தை நம்பலாமா?’ என்று சொன்னார்.

ஸ்வாமிகள் ப்ரவசனம் செய்யும் போது பாகவதத்தின் core message ஆன பகவானை ஏற்றுக் கொள்றது, உலகத்தை (materialism) வெறுத்து தள்ளறது, இதை stress பண்ணி சொல்வார். கலி புருஷனிடம் பரீக்ஷித்து மஹாராஜா ‘மது, மாது, சூது, மாமிசம் இவற்றின் மூலம் வளர்ந்து கொள்’ என்று சொன்ன போது, அவன் இன்னும் கொஞ்சம் இடம் கேட்கிறான். ‘இவற்றில் இருக்கும் தோஷங்கள் க்ரோதம், காமம், மதம், ஹிம்ஸை அதெல்லாம் சேர்ந்து இருக்கும் பணத்தின் மூலம் வளர்ந்து கொள்’ என்று சொல்கிறார். ‘குடிகாரன், சூதாடி இவர்களையாவது உலகில் வெறுப்பார்கள். ஆனால் பணம் சேர்ப்பவர்களை போற்றுவார்கள். உண்மையாக பக்தன் அதைச் செய்யக்கூடாது’ என்பார்.

‘இதனால் தான் உங்களுக்கு பணம் வரமாட்டேங்கறது. மத்த ப்ரவசனம் பண்றவாளுக்கு பணம் கொட்றது’ என்று அவரிடம் சொன்ன போது, ‘எனக்குக் கொட்ட வேண்டாம். கொட்டினா அதைப் பொறுக்கவும் எண்ணவும் தான் time சரியா இருக்கும். எனக்கு பகவானை பேசிண்டு இருக்கறதே போதும்’ என்று சொன்னார். It is such poignant message. நாம, tax, investment, bills என்று அதுலியே எவ்வளவு time waste பண்றோம்!

ஒரு முறை, லீவ் போட்டுட்டு அவரோடே படிச்சுண்டு இருக்கப் போறேன்னு இருந்தேன். எனக்கு உலக ஆசைகள் பாக்கி இருக்குனு பார்த்ததால அவர் ‘இப்படி இருக்க முடியாது. திரும்ப வேலைக்கு போ. சொல்லிக் குடுத்த ஸ்தோத்ரங்கள் படிச்சுண்டு இரு’ன்னு அனுப்பி விட்டார். நான் US போன போது அவர் கிட்ட சொல்லிண்டு போகவில்லை. ‘என்னை தர்ம சங்கடத்தில் வைக்காமல் இருந்தான்’ என்று சொல்லி இருக்கார். 3-4 வருஷத்துக்கு அப்பறம் லீவில் வந்த போது ‘நெய்யை விட்டு நெருப்பை அணைக்க முடியுமா? அநுபவிச்சு தீர்க்கறது, சேர்த்து வெச்சுண்டு வரது என்பதெல்லாம் கிடையாது. அங்க இருந்தா நம்ம culture எல்லாம் போயிடும். திரும்பி வந்துவிடு. காமம், க்ரோதம், லோபம் அதையெல்லாம் feed பண்ணிண்டே இருந்தா, நரகத்தில் விழுந்து விடுவாய்.’ என்று சொன்னார். சொன்ன பேச்சைக் கேட்டு திரும்பி வந்ததுக்கு, ரொம்ப அன்போடு வால்மீகி ராமாயணம் சொல்லிக் குடுத்தார்.

அதே நேரத்தில் மஹாபெரியவா, பருத்தியூர் கிருஷ்ண சாஸ்த்ரிகள், போலகம் ராமா சாஸ்த்ரிகள், தேதியூர் ஸுப்ரமண்ய சாஸ்த்ரிகள், இவாளைப் பேசும் போதும், பகவானுடைய ஸ்தோத்ரங்கள் படிக்கும் போதும் எவ்வளவு thrill ஆவார் என்று நேரில் பார்த்திருக்கிறோமே! நாமும் இப்படி ஸத்தியப் பொருளான ஒரு ஸத்குரு நமக்கு கிடைத்தார் என்பதை எண்ணி, ப்ரியத்தோடு அவருடைய வாழ்வையும், வாக்குகளையும், குணங்களையும், கொள்கைகளையும் போற்றிக் கொண்டே இருந்தால் தான், ஞாபகமாவது இருக்கும். அடுத்த தலைமுறையினருக்கு தெரியும். அவர்களும் அவருடைய ஆராதனையை செய்து க்ஷேமம் அடைவார்கள்.

மனஸ் தானாக பணத்தையும், பெண்களையும், குழந்தைகளையும், வீடு, gadgets போன்ற போகப் பொருள்களையும் புகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதிலிருந்து கஷ்டம், சுகம் ரெண்டும் வரது. பொய்யான அவை கூட வரப்போவதில்லை. அவற்றை நிந்திக்க வாய் வரலைன்னாலும், ஸ்வாமிகள் என்ற ஸத்தியப் பொருளை சாதிச்சுண்டே இருந்தால், அதுக்கு ஒரு effect இருக்கும்.

  1. ஜீவாத்மாவை பரமாத்மாவிடம் சேர்க்க குரு பண்ணும் உதவி

நல்ல புத்தி சொன்ன ஹனுமாரை, ராவணன், கோபத்துடன் கொல்லுமாறு உத்தரவிடுகிறான். விபீஷணன் தடுத்து, ‘தூதனைக் கொல்லக் கூடாது’ என்று சொன்னவுடன், ராவணன் ஹனுமாரின் வாலில் தீ வைக்கச் சொல்கிறான். ராக்ஷஸர்கள் கொக்கரித்துக் கொண்டே அதைச் செய்கிறார்கள். தெருவில் அவரைக் கொண்டு செல்லும் போது ராக்ஷஸிகள் கைக்கொட்டிச் சிரிக்கிறார்கள்.

ஸீதையிடம் ராக்ஷஸிகள் இதை கேலியாகச் சொன்னவுடன், ஸீதை அக்னி பகவானிடம் ஹனுமார் வாலில் சுடாதிருக்கும் படி வேண்டுகிறாள். உடனே ஹனுமாரே வியக்கும் வண்ணம், அவர் வாலில் தீ குளிர்ச்சியாகி விடுகிறது.

ராமரின் மஹிமை அறியாமல் கொட்டமிடும் ராக்ஷஸர்களை பயமுறுத்துவோம், என்றெண்ணி ருத்ராம்சமான ஹனுமார், தன் வாலில் வைத்த தீயினால், விபீஷணன் கிருஹத்தைத் தவிர, லங்கையின் எல்லா மாளிகைகளுக்கும் தீ வைக்கிறார். ஸீதைக்கு தீயினால் ஆபத்து உண்டாகி இருக்குமோ, என்று தன் கோபத்தை நொந்து கொள்ளும் ஹனுமார், அவள் பத்திரமாக இருக்கிறாள் என்று உறுதிப் படுத்திக் கொண்டு, அவளிடம் உத்தரவு பெற்று கிளம்புகிறார்.

கடலைக் கடந்து திரும்பி வந்து நண்பர்களிடம் ஹனுமார் ‘दृष्टा सीता – கண்டேன் ஸீதையை’ என்று முழங்குகிறார். ஸீதாதேவியின் ராமபக்தியை போற்றி, அவளை ராமரோடு சேர்த்து வைக்க எல்லா வானரர்களும் யுத்தம் செய்ய வேண்டும் என்று உற்சாகப் படுத்துகிறார். வானரர்கள் வழியில் மதுவனத்தில் தேன் குடித்து வெற்றியை கொண்டாடிய பின், ராமரிடம் போய்ச் சேருகிறார்கள்.

ஹனுமார் ராமரிடம் ஸீதையின் சோக நிலைமையையும், மாறாத பக்தியையும் எடுத்துக் கூறி, அவள் தந்த சூடாமணியை ராமரிடம் தருகிறார். ஸீதையை நினைத்து புலம்பும் ராமரிடம், மேலும் மேலும் அவளைப் பற்றிப் பேசி, அவள் ராமரிடம் வைத்திருக்கும் அன்பையும் நம்பிக்கையையும் சொல்லி ராமரின் வீரத்தை வளர்க்கிறார்.

ராமர் ஹனுமாரை ஆலிங்கனம் செய்து ‘இன்று நீ என் குல கௌரவத்தை நீ காத்தாய்’ என்று பூஜிக்கிறார். எப்படி கடலைத் தாண்டுவது, எப்படி லங்கையை தகர்ப்பது என்று கவலைப்படும் ராமரை ‘நாங்கள் இருக்கிறோம். எல்லாம் வெற்றிகரமாக முடியும். உடனே கிளம்ப உத்தரவு செய்யுங்கள்’ என்று தைரியம் சொல்ல, ராமர் உத்தரவின் பேரில் வானரப் படை கிளம்புகிறது.

ஸீதை என்ற ஜீவாத்மாவை ராமர் என்ற பரமாத்மாவிடம் சேர்த்து வைக்க, ஹனுமார் என்ற குரு, ஒரு காரணமின்றி, தன் இயல்பான கருணையினல் உதவி செய்கிறார்.  ராவணாதி ராக்ஷஸர்கள் என்ற பாபிகளினால் ஏற்படும் கஷ்டத்தையெல்லாம் பொறுத்துக் கொண்டு, லங்கையென்ற பூர்வ வினைகளை எரித்து, பகவானிடம் ஜீவன் படும் கஷ்டத்தையும், அவரையே நம்பி இருப்பதையும் எடுத்துச் சொல்லி, பகவானை அழைத்து வருகிறார். வானரர்கள் என்ற மற்ற தெய்வங்களும் அந்த ஜீவனுக்கு அநுகூலமா இருக்கும்படி செய்கிறார்.

———————————————-

பகவானால் அனுப்பப்பட்ட நம் ஸ்வாமிகளைப் போன்ற மஹான்களால் தான் குருவாக இருந்து, அது போன்ற கருணையைச் செய்ய முடியும். முன்னே ஒரு இடத்தில், சிஷ்யர்களுக்கு பாபம் வராமல் இருப்பதற்காக தன்னை ஒரு friend என்று தான் ஸ்வாமிகள் சொல்லிக் கொள்வார் என்று சொன்னேன்.

ஆனால், ஓரளவு கர்வத்தை விட்டு, அவர் மேன்மையை உணர்ந்து, அவரை குருவாக ஆச்ரயித்தவர்களுக்கு எவ்வளவு கருணை பண்ணியிருக்கார்! திரும்பத் திரும்ப ஸ்வாமியை நினைக்க சொல்லிக் குடுத்தும், தன் புண்யத்தால் அவர்கள் பக்தி பண்ண ஹேதுவான environment ஏற்படுத்திக் குடுத்தும், அந்த சிஷ்யர்களை, சுற்றியுள்ள materialists ஏளன வார்த்தை பேசும் போது ஆறுதல் சொல்லியும், பரிவோடு பாபத்திலிருந்து விலக்கி, ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றியும், வினைகளைப் எரித்தும், கடைசி நிமிஷம் ஸ்வாமி ஞாபகத்தோடு உயிர் பிரிய அநுக்ரஹித்தும் – இது நமக்கு தெரிந்தது.

குழந்தைகளுக்காக அம்மா அப்பா கவலைப்படுவது குழந்தைகளுக்கு புரியாதது போல, அவர் ஸ்வாமி கிட்ட நமக்காக மன்றாடினது நமக்கு தெரியாதது. ‘நீ இந்த ஸ்லோகத்தை சொல்லிண்டு hospital போ. நானும் நாராயணீயம் படிக்கறேன். ஸ்வாமி காப்பாத்துவார்’என்று சொல்லி அனுப்பிட்டு நம்மை விட உருக்கமாக பகவானை வேண்டிக் கொள்ளும் கருணையை நம்மால் புரிஞ்சுக்க முடியுமா?

ஸ்வாமிகள் தெய்வம் போல கருணையோடு இருந்தார் – அது ஒன்றே போதும் அவரை ஆச்ரயிக்க. ஆனால் அவர் குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று ராமாயணத்தில் சொல்லி இருக்கோ அந்த எல்லா லக்ஷணங்களும் பொருந்தி இருந்தார். ராமாயணம் முதல் ஸர்கத்தில் நாரத மஹரிஷயிடம் வால்மீகி முனிவர் ராம சரித்ரத்தை குருமுகமாக கேட்டுக் கொண்டு, பிறகு ப்ரம்மாவின் ஆக்ஞைப்படி அதை விஸ்தாரமாக, காவ்யமாக படைக்கிறார். முதல் ச்லோகத்தில் நாரதரைப் பற்றி स्वाध्याय निरतम्, तपो निरतम्, वाग्विदां वरम्, मुनिपुङ्गवम् என்று நான்கு அடைமொழிகள் குடுக்கப் பட்டுள்ளது. இந்த நான்கு அடைமொழிகளும் நம் ஸ்வாமிகளுக்கு முழுமையா பொருந்துகிறதே!

ஸ்வாமிகள் யஜுர் வேத அத்யயனம், ஸ்கூல் சேர்த்ததால் தடைப்பட்டாலும், பின்னர் முழுவதும் அத்யயனம் செய்து பூர்த்தி செய்தார். மேலும், வேத துல்யமான வால்மீகி ராமாயணத்தை மிகுந்த ப்ரீதியோடு அநவரதம் அத்யயனம் செய்து வந்தார் – स्वाध्याय निरतम्

அந்த ராமரையே சிந்தித்து, அந்த ராமாயண தர்மங்களையே தன்  வாழ்க்கையில் ஆசார அனுஷ்டானமாக நடத்திக் காண்பித்த ஸ்வாமிகளின் வாழ்வே ஒரு தபஸ் தானே – तपो निरतम्

அந்த ராமாயண பாகவத தர்மங்களை, சத்தியத்தால் தூய்மையடைந்த தன் வாக்கினால், ஞானிகளும் போற்றும்படி உபந்யஸித்த ஸ்வாமிகள் நா பெற்ற பயனை முழுமையாக அடைந்தாரே, அவரே – वाग्विदां वरम्

முனி என்றால் மௌனமாய் இருப்பவர். பகவத் விஷயம் பேசுவது மௌன பங்கம் இல்லை என்று சாஸ்த்ரம். ஸ்வாமிகள் பேச வேண்டிய அதை பேசினார் என்பதோடு, உலக விஷயங்களை அந்த நாவினால் பேசவே இல்லையே! ஒரு தடவை கூட பணம் படைத்தவர்களையோ, material world யோ போற்றினதே கிடையாதே! ஸ்வாமிகள் मुनिपुङ्गवम् என்பதில் ஆக்ஷேபணை ஏது! இவரை ஸத்குருவாக அடைந்த நம் பாக்யமே பாக்யம்!

அவர் காதுல போட்டாலே கேட்டது கிடைத்ததும், கஷ்டங்கள் தீர்ந்ததும் ஆச்சர்யமில்லை. இதில் நிஜமான கருணை என்னவென்றால், ‘இந்த மாதிரி எல்லாம் கிடைச்சாலும், வாழ்க்கைத் தவிப்பை நம்மால் விடமுடியவில்லை. ஆனால், இவர் எந்த ஆசையும் இல்லாமல், சுத்தி உள்ள ஒரு ப்ரச்னையும் பாதிக்காமல் இருக்காறே, அது எப்படி?’ என்று யோசிக்க ஒரு வாய்ப்பு குடுத்தாரே, அது தான் நிஜமான கருணை. அந்த நிலையை ஸ்வாமிகள் எப்படி அடைந்தார் என்ற கேள்விக்கு பதில், ‘அவர் பகவானை முறைப்படி சரணாகதி பண்ணி அந்த ஞான நிலையை அடைந்தார்’ என்பது தான். அவரைப் பார்த்ததால் தான், நாமும் அப்படி ஆகவேண்டும் என்ற ஆசை ஒரு கொஞ்சமாவது ஏற்பட்டு, அவரையே சரணடைந்து, அவர் சொன்னதைச் செய்ய முற்படுகிறோம்.

ஸ்வாமிகள், புராண புருஷர்களை இக்கால மனிதர்களோடு ஒப்பிட மாட்டார். அது போல இவ்வளவு நேரம் அவரை ராமராகவும், ஸீதையாகவும், ஹனுமாராகவும், தெய்வமாக பேசிவிட்டு அவரைப் போல் ஆகவேண்டும் என்று பேசுவதே சரியா என்ற கேள்வி வருகிறது. கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னை உண்மையாக நம்பினவர்களுக்கு அந்த நம்பிக்கை குடுத்தார். தன் ஈச்வர வாக்கால் ‘விஷ்ணு ஸஹஸ்ரநாமம் தினமும் சொல்லி வர, இகத்தில் நல்ல வாழ்க்கையும், உயர்வற உயர்நலமான மோக்ஷமும் கிடைக்கும்’ என்று சொல்லி எழுதி கூட குடுத்திருக்கிறாரே!

அது தான் ஸத்குரு செய்யும் அபார கருணை. அவர் பேரைச் சொல்லுவதால், இந்த கோரக் கலியிலும், ஓரளவாவது நிம்மதி, சந்தோஷம், கொஞ்சம் கஷ்டங்களைத் தாங்கும் சக்தி எல்லாம் இருக்கு என்று மட்டும் நமக்கு தெரிகிறது. முழுக்க அவரை நம்பி சரணாகதி பண்ணினா என்ன கிடைக்கும் என்றால், அவராகவே ஆகிவிடலாம்.

ஆனா சரணாகதி பண்றதுனா என்ன என்பதும் அவர் காட்டிக் குடுத்திருக்கிறார். That is in the next chapter  – விபீஷண சரணாகதி

Series Navigation<< ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – கிஷ்கிந்தா காண்டம்ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – யுத்த காண்டம் >>

3 replies on “ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – சுந்தர காண்டம்”

ஸ்வாமிகள், தம்பதிக்களுக்குள் ஒற்றுமை வளர, சாயங்கால வேளையில் நெய் விளக்கு ஏத்தி ‘शिव शंकर सर्वात्मन् श्रीमातर्जगदम्बिकॆ’ என்று ஒரு ஸ்லோகம் சொல்லச் சொல்லுவார். அப்போ இந்த ஸதிபதிகளையே பார்வதீ-பரமேச்வரர்களாக நினைத்து வணங்குவோம்.ஸ்லோகத்தை தமிழில் தர இயலுமா?
அடியேனுக்கு hindi, sanskrit இரண்டுமே தெரியாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.