Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரை


சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 3, 4 தமிழில் பொருள் (11 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 3 and 4)

சிவானந்தலஹரியில முதல் இரண்டு ஸ்லோகங்களைப் பார்த்தோம். இன்னிக்கு 3ஆவது 4ஆவது ஸ்லோகங்களைப் பார்ப்போம்

त्रयीवेद्यं हृद्यं त्रिपुरहरमाद्यं त्रिनयनं

जटाभारोदारं चलदुरगहारं मृगधरम् ।

महादेवं देवं मयि सदयभावं पशुपतिं

चिदालम्बं साम्बं शिवमतिविडम्बं हृदि भजे ॥ ३॥

த்ரயீவேத்³யம் ஹ்ருʼத்³யம் த்ரிபுரஹரமாத்³யம் த்ரிநயனம்

ஜடாபா⁴ரோதா³ரம் சலது³ரக³ஹாரம் ம்ருʼக³த⁴ரம் ।

மஹாதே³வம் தே³வம் மயி ஸத³யபா⁴வம் பசுபதிம்

சிதா³லம்ப³ம் ஸாம்ப³ம் சிவமதிவிட³ம்ப³ம் ஹ்ருʼதி³ ப⁴ஜே ॥ 3॥

ன்னு பரமேஸ்வரனுடைய ரூபத்தை தியானம் பண்றார். பெருமைகளையெல்லாம் நினைக்கிறார். த்ரயீவேத்³யம் – மூன்று வேதங்கள், ரிக் யஜூர்,ஸாம வேதம். இந்த மூன்று வேதங்களால் அறியப் படுபவர் பரமேஸ்வரன்னு சொல்றார். அதுக்கு ஒரு proofஏ இருக்கு. ரிக்,யஜூஸ், ஸாமம்னு மூன்று வேதங்கள். அதுக்கு மத்தியில இருக்கிறது யஜூர் வேதம், யஜூர் வேதத்துல ஏழு காண்டங்கள். அதுல மத்தியில இருக்கிறது 4 வது காண்டம். அதுல ருத்ர பிரச்னம்ங்கிறது மத்தியில இருக்கு. அதுக்கு மத்தியில பரமேஸ்வரனுக்கு உகந்ததான பஞ்சாக்ஷரம் இருக்கு. அதுல சிவ நாமம் இருக்கு. அப்படி சிவபெருமான் வேதங்களால் அறியப்படுபவர் எங்கிறதுக்கு proof. ஒரு ரத்தினத்தை பெட்டிக்குள்ள பெட்டிக்குள்ள பெட்டியில வைக்கற மாதிரி அந்த பரமேஸ்வரனுடைய சிவ நாமத்தை வேதத்துல வெச்சிருக்கான்னு மஹான்கள் சொல்லுவா. அந்த மாதிரி த்ரயி வேத்யம். வேதத்தால் அறியப்படும் வஸ்து எதுன்னா, அது பரமேஸ்வரன்தான்.

ஹ்ருத்யம்-நம் மனதிற்கு இனியவராக இருக்கிறார் பரமேஸ்வரன்னு சொல்றார். நாம பரமேஸ்வரனுடைய எந்த ரூபத்தை பார்த்தாலும் நடராஜாவை பார்த்தாலும் சரி, திருவண்ணாமலையில மலையை பார்த்தாலும் சரி, ஸ்வாமி சன்னதியில லிங்கத்தை பார்த்தாலும் சரி, மனசுக்கு ஒரு ஸந்தோஷம் ஏற்படறது. இதுக்கு மேல பரமேஸ்வர வடிவமான அடியார்களை பார்த்தாலே மனசுக்கு ஸந்தோஷம் ஏற்படறது. ஒரு விபூதி இட்டுண்டு, ருத்ராக்ஷம் போட்டுண்டு ஒருத்தரை பார்த்தாலே நமக்கு மனதுக்கு இனியவர்களா ஆயிடறா இல்லையா. அது மாதிரி ஹ்ருத்யம்.

திரிபுரம் மூன்று புரங்களை அழித்தவர்னு  இதுக்கு அர்த்தம். இதுக்கு ஸ்தூல, சூக்ஷ்ம,காரண சரீரங்கள் ன்னு மூன்று சரீரங்கள் நமக்கு இருக்கு. இந்த மூன்றையும் அழித்தாலே அதுக்குள்ள இருக்கக் கூடிய ஞானம் நமக்கு புரிந்து விதேக முக்தி அடைய முடியும். அதைத் தவிர புராணக் கதை ஒண்ணு இருக்கு. தாரகாக்ஷன், கமலாக்ஷன்,வித்யுத்மாலின்னு மூன்று பேர் தங்கம், வெள்ளி, இரும்பு கோட்டைகள் பண்ணிண்டு ஆகாசத்துல பறக்கிறா. பெரிசா நகரம் மாதிரி இருக்கு. அதுல ஸஞ்சாரம் பண்ணுவா. அதுல எங்கேயாவது ஒரு இடத்துல போயி இறங்குவா. அதுக்கு கிழே இருக்கிறது எல்லாம் அழிஞ்சு போயிடும். ரொம்ப ஹிம்சை பண்ணிண்டு இருந்தா. இந்த மூன்று கோட்டைகளும் ஒரு கோட்டுல ஆயிரம் வருஷங்களுக்கு ஒரு தடவை வரும். அப்ப ஒரே அம்பால அடிச்சா தான் அவாளை வதம் பண்ண முடியும்ன உடனே எல்லாரும் பரமேஸ்வரனை வேண்டிக்கறா. எல்லா தேவர்களும் ஸஹாயம் பண்றதுக்கு வரா. ஒருத்தர் சக்ரமா வரார். ஒருத்தர் வில்லாகவும், ஒருத்தர் அம்பாகவும் வரார். கடைசியில பரமேஸ்வரன் அந்த மூன்று கோட்டைகளையும் சிரிச்சுண்டு ஒரு அம்பு போட்டு எரிச்சுடரார்னு புராண கதை. ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரங்களை அழித்து விதேக முக்தி கொடுக்கிறார்னு ஒரு அர்த்தம். த்ரிபுரஹரம்

ஆத்யம் ஆதிசிவன். எல்லாருக்கும் முன்னாடி வந்தவர் பரமேஸ்வரன் தான். த்ரிநயனம்-மூன்று கண்களை கொண்டவர். சூரியன்,சந்திரன்,அக்னி மூன்றுமே அவரோட கண்கள்.  ஜடாபா⁴ரோதா³ரம் – ஜடாபரத்தினால ரொம்ப கம்பீரமா இருக்கார். இமயமலையினுடைய சிகரங்களை எல்லாம் பார்க்கும் போது அதுதான் பரமேஸ்வரனுடைய ஜடாபாரம் ன்னு தியானம் பண்ணனும். அதுலேயிருந்து தானே கங்கை பெருகி வரது. எவ்ளோ கம்பீரமா இருக்கு. கண் வெச்சா எடுக்க முடியாம இருக்கு அந்த காட்சிகள். அப்படி பரமேஸ்வரனுடைய ஜடாபாரம். ஜடாபாரத்தோட அவரை தியானம் பண்ணனும்

சலது³ரக³ஹாரம் – அசையும் பாம்புகளை மாலைகளாக அணிந்தவர். வாஸுகி, தக்ஷகன் எல்லாம் எடுத்து மாலையா போட்டுண்டு இருக்கார். அவ்ளோ பராக்ரமம். ம்ருகதரம் – கையில மான் வெச்சுண்டு இருக்கார். மான் என்கிறது துள்ளும் மனசுக்கு ஒரு அடையாளம். அதை அவர் அடக்கி வெச்சிருக்கார். மஹாதேவம் – எல்லா தெய்வங்களுக்கும் மேலான பெரிய கடவுள். தேவம்- இன்னொரு வாட்டி தேவம்ன்னு வறது. இங்க ஸ்வயம் பிரகாசமானவர். தானே ஒளி விடுபவர்னு அர்த்தம்.

மயி ஸதய பாவம் – என்னிடத்துல தயா பாவம் இருக்கு அவருக்கு. அதுதானே நமக்கு வேணும்.பரமேஸ்வரனுடய தாயை கிடைச்சுதுன்னா வேற என்ன வேணும்?சிவபெருமான் கிருபை வேணும். வேற என்ன வேணும்னு பாடினாரே. பசுபதிம் – எனக்கு மட்டும் தயை இல்லே. எல்லா ஜீவன்களுக்கும் அவர்தான் தலைவர். நான் பக்தி பண்றதுனால  எனக்கு தயை காண்பிக்கறார்

சிதாலம்பம் – அறிவுக்கு உறைவிடம். மோக்ஷ சாதனமான ஞானத்தை கொடுப்பவர் பரமேஸ்வரன். ஸாம்பம் – அம்பாளோட கூடினவர். அம்பாளோட சேர்த்து த்யானம் பண்ணினாதான் நமக்கு அனுக்ரஹம் சீக்கிரம் கிடைக்கும். அம்மா தப்பு பண்ணினாலும் பொறுத்துண்டு ஏதாவது சிபாரிசு பண்ணுவா. சிவம் அதிவிடம்பம் – சிவம்னா பரம மங்களமானவர்னு அர்த்தம். இவர் நாடகம், நாட்யம், ஹாஸ்யம், இது மாதிரி எல்லாம் விடம்பமா பண்ணி நம்மளை சந்தோஷப் படுத்தறார். ஹ்ருதி பஜே-என்னுடைய ஹ்ருதயத்தில் இந்த பரமேஸ்வரனை சிவம் பஜே நான் பூஜிக்கறேன்னு அழகான ஸ்லோகம்.

அடுத்த ஸ்லோகம்

सहस्रं वर्तन्ते जगति विबुधाः क्षुद्रफलदा

न मन्ये स्वप्ने वा तदनुसरणं तत्कृतफलम् ।

हरिब्रह्मादीनामापि निकटभाजामसुलभं

चिरं याचे शंभो तव पदांभोजभजनम् ॥ ४॥

 

ஸஹஸ்ரம் வர்தந்தே ஜக³தி விபு³தா:⁴ க்ஷுத்³ரப²லதா³

ந மன்யே ஸ்வப்னே வா தத³னுஸரணம் தத்க்ருʼதப²லம் ।

ஹரிப்³ரஹ்மாதீ³நாமாபி நிகடபா⁴ஜாமஸுலப⁴ம்

சிரம் யாசே சம்போ⁴ தவ பதா³ம்போ⁴ஜப⁴ஜனம் ॥ 4॥

இந்த ஸ்லோகத்துல ஸஹஸ்ரம் வர்தந்தே ஜக³தி விபு³தா:⁴ – உலகத்துல ஆயிரக் கணக்கான தெய்வங்கள் இருக்கு. ஒவ்வொருத்தர் ஒண்ணு ஒண்ணு வழிபடறா. அந்த தெய்வங்கள் எல்லாம் என்ன கொடுக்கறதுன்னா

க்ஷுத்³ரப²லதா³ – சாதாரண பலன்களை கொடுக்கும். கீழான பலன்களை கொடுக்கும். வீடு வாங்கணும்னா இந்த ஸ்வாமியை வேண்டிக்கோ. பணம் வேணும்னா குபேரனை வேண்டிக்கோ. நவக்ரஹங்களை வேண்டிக்கோ. அவாளாம் ஓரளவு தான் பலன்களை கொடுக்க முடியும். பரமேஸ்வரன்தான் எல்லாருக்கும் மேலான தெய்வம். எவ்ளோ பெரியவர்னா ஹரிப்³ரஹ்மாதீ³நாமாபி நிகடபா⁴ஜாமஸுலப⁴ம் – நாம எல்லாம் எங்கேயோ தள்ளி இருக்கோம். ஹரி: ன்னா விஷ்ணு, பிரம்மா இவாள்லாம் பரமேஸ்வரனுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கா. ஆனா அவாளுக்கு கூட அசஸுலபம். கிடைத்தற்கரியதான ஒண்ணு இருக்கு. அது என்னன்னா, ‘தவ பதா³ம்போ⁴ஜப⁴ஜனம்’ – உன்னுடைய பாத தாமரைகளை வழிபடுவது என்ற அந்த பலன். அது கிடைச்சுடுத்துன்னா உலகத்துல இருக்கிற எல்லா விஷயங்களும் கிடைச்சுடும். முக்தியும் கிடைச்சுடும். அதனால நான் மத்த சாதாரண தெய்வங்களை எல்லாம் ந மன்யே ஸ்வப்னே வா – என் ஸ்வப்னத்துல கூட நான் அவாளை நினைக்க மாட்டேன் தத³னுஸரணம் – அவா பின்னாடி நான் போகமாட்டேன் தத்க்ருʼதப²லம் – அவா கொடுக்கிற பலன் எனக்கு வேண்டாம் சம்போ – சம்போன்னா ஞானத்தினுடைய பிறப்பிடம். சந்தோஷத்தின் பிறப்பிடமான அப்பேற்பட்ட அந்த பரமேஸ்வரன் தான் என் தெய்வம். ஹே பரமேஸ்வரா தவ பதா³ம்போ⁴ஜப⁴ஜனம் – உன்னோட பாதத்தை வழிபடும் அந்த காரியத்தை சிரம் – உடனடியாக பாத பக்தியை உடனே எனக்கு கொடுன்னு கேட்கறார்.

இந்த சிவானந்தலஹரில பக்தியும், ஞானமும் ஒண்ணு தான்னு சொன்னதுனால ஞான தாதா மகேஸ்வர: ன்னு பரமேஸ்வரன் தான் ஞானத்தை கொடுக்க முடியும். அதனால எனக்கு ஞானத்தை கொடு. உத்தம பக்தியை கொடு. அதை வெச்சுண்டு நான் எல்லாத்தையுமே தள்ளிண்டு போயிடுவேன்னு சிவ பக்தியை வேண்டிக்கறார். ஏக பக்தியை வேண்டிக்கறார்.

இந்த இடத்துல ஏக பக்தியைத் தான் நாம முக்யமா புரிஞ்சுக்கணும். நஹிநிந்தா நியாயம்னு ஒண்ணு இருக்கு. எந்த வஸ்துவையும் நிந்தனை பண்றதுல அவாளுக்கு நோக்கம் இல்லை. மஹான்களுக்கு தான் வழிபட வந்த தன் இஷ்ட தெய்வத்தை உயர்த்தி பேசறதுதான் அவாளோட நோக்கம். அந்த மாதிரி பரமேஸ்வரனுடைய பெருமையை நினைக்கும்போது, ஆசார்யாளுக்கு எல்லாத்துக்கும் மேலான தெய்வம் இந்த பரமேஸ்வரன். இந்த பரமேஸ்வர பக்தியே வேணும்னு வேண்டிக்கறார். வேற தெய்வங்களை குறைச்சு பேசறதா அர்த்தம் எடுத்துக்க கூடாது. ஏகபக்திங்கிறது எல்லா தெய்வங்களுக்கும் மூல வஸ்து அந்த பரம்பொருள்தான். அது தெரிஞ்சதுனால தான் ஆதி சங்கரர் பரமேஸ்வரனை பாடும்போது இப்படி சொல்றார். அடுத்தது, சுப்ரமண்ய ஸ்வாமியை பாடற போது ‘குஹாத் தேவமன்யம் ந ஜானே ந ஜானே’ ன்னு சொல்றார். இப்படி அந்தந்த தெய்வங்களை பக்தி பண்ணும்போது அதுக்கு பின்னாடி இருக்கிற பரம்பொருளை உணர்ந்து அவாளால அப்படி பக்தி பண்ண முடியறது. அதுதான் உண்மையான பக்தி.

மத்த தெய்வங்களை வெறுத்தா அதுக்கு பேர் பக்தி கிடையாது. ஆனா ஏதாவது ஒரு தெய்வத்துக் கிட்ட நாம மனசை வைக்கணும். அந்த தெய்வத்தினுடைய சரித்ரத்தை, ரூபத்தை, நாமத்தை அதிகமா நாம பண்ணிண்டே போனோம்னா ‘ஏக பக்திர் விஷிஷ்யதே’ ன்னு கீதையில கூட கிருஷ்ண பரமாத்மா சொல்றார். ஸுலபமா ரொம்ப சீக்ரத்துல நமக்கு பலன் கிடைக்கும். ஒரு இடத்துல 50 அடி தோண்டினா ஜலம் கிடைக்கும். 50 இடத்துல ஒரு ஒரு அடியா தோண்டினா ஜலம் கிடைக்குமா? அந்த மாதிரி ஏக பக்தி பண்ணனும். நம்முடைய பூர்வ புண்யத்துனால பூர்வ வாசனையினால ஒவ்வொரு தெய்வத்தோட குணம் நமக்கு பிடிக்கும். ரொம்ப பாக்யசாலிகளுக்கு நல்ல குரு கிடைச்சா அந்த குருவை குணத்தை தியானம் பண்ணிண்டிருந்தாலே போறும். அந்த மாதிரி ஏதாவது ஒரு இடத்துல மனசை வெச்சா அந்த concentration, constancy யோட பஜனம்னு ஸ்வாமிகள் சொல்வார். அது பண்ணினா இவர் கேட்கற இந்த உத்தம பக்தி வந்துடும். அப்புறம் ஞான வைராக்யம் தானா வரும் என்கிறதுனால மஹான்கள் இந்த வழியை காண்பிக்கறா. அப்படி பரமேஸ்வரனுடைய பாதத்தில் ஏகபக்தி வேணும்னு வேண்டிப்போம்

பரமேவரனுடைய பாத பஜனத்தை வேண்டிப்போம். “ஆடும் பரிவேல் அணி சேவலென பாடும் பணியே அருள்வாய்” னு அருணகிரி கேட்டா மாதிரி பகவானோட பஜனம் பண்றதுக்கு பிரார்த்தனை பண்ணிக்கறார்.

அடுத்தது ஸ்ம்ருதௌ சாஸ்த்ரே ன்னு ஒரு ஸ்லோகம். அதை நாளைக்கு பார்ப்போம்.

 

நம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ

Series Navigation<< சிவானந்தலஹரி 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரைசிவானந்தலஹரி 5, 6 ஸ்லோகங்கள் பொருளுரை >>

2 replies on “சிவானந்தலஹரி 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரை”

Thank u for giving me the opportunity. Heard Sivananda Lahari 4 slokas so kindly forwarded by you. Your sloka chanting and word-by-word explanations are excellent. I feel really fortunate to have received your acquaintance through Mr.Srinivasan and Sri Vishnu Sahasranama Samithi. I am so thankful to the Lord for the same. Praying Lord to give you dheergayusu to get into His worship and service more and more in future. Namaskaram.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.