Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 22வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி ஸ்லோகம் 22 தமிழில் பொருள் (12 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 22)

இன்னிக்கு சிவானந்தலஹரில 22வது ஸ்லோகத்தை பார்ப்போம்,

प्रलोभाद्यैरर्थाहरणपरतन्त्रो धनिगृहे
प्रवेशोद्युक्तस्सन् भ्रमति बहुधा तस्करपते ।
इमं चेतश्चोरं कथमिह सहे शंकर विभो
तवाधीनं कृत्वा मयि निरपराधे कुरु कृपाम् ॥ २२॥

ப்ரலோபா⁴த்³யைரர்தா²ஹரணபரதந்த்ரோ த⁴நிக்³ருʼஹே
ப்ரவேஶோத்³யுக்தஸ்ஸந் ப்⁴ரமதி ப³ஹுதா⁴ தஸ்கரபதே ।
இமம் சேதஶ்சோரம் கத²மிஹ ஸஹே ஶங்கர விபோ⁴
தவாதீ⁴நம் க்ருʼத்வா மயி நிரபராதே⁴ குரு க்ருʼபாம் ॥ 22॥

‘ப்ரலோபா⁴த்³யை’ – லோபம்… அப்படின்னா… பேராசை, ‘ப்ரலோபா⁴த்³யை:’ –  பேராசை முதலிய கெட்ட குணங்கள்னால… ‘அர்தா²ஹரண பரதந்த்ர:’ – நிறைய பணத்தை எப்படியாவது நாம கவர்ந்து கொள்ளவேண்டும், பணம் நிறைய சம்பாதிச்சுடணும் அப்படிங்கிற ‘பரதந்த்ர:’ – அதுக்கு அடிமையாகி, ‘த⁴நிக்³ருʼஹே ப்ரவேஶோத்³யுக்தஸ்ஸந்’ – பணக்கராளுடைய வீட்டுக்குள்ள, நுழையறதுக்கு என்ன வழி, அப்படீன்னு யோசிச்சிண்டு, ‘ப்⁴ரமதி ப³ஹுதா⁴’ – பலவிதமா என்னுடைய ‘சேதஶ்சோரம்’ – என் மனமாகிய திருடன் இதே யோசனைலயே இருந்ததுண்டு இருக்கான் – அப்படீங்கறார்.  இது நமக்கு ஒண்ணும்புரியலையே… என் மனசு ஒண்ணும் திருடன் கிடையாதே அப்படீன்னு நம்ம நனைச்சுப்போம், எப்படி இதை புரிஞ்சுக்கணும்னா… ஒரு வேலைல இருந்தா இதைவிட பெரிய வேலை கிடைக்குமா? அது கிடைச்ச உடனே அங்க ஓடிப்போறது, இல்லைன்னு இன்னும் foreign போனா இன்னும் நிறைய பணம் வருமா,  பணக்காரா வீட்டுக்குள்ள போய் நிறைய பணத்தை எடுத்துக்கணும்… அப்படீங்கறது… நான் ஒண்ணும் திருடன் இல்லையேன்னு நினைச்சுப்போம்…ஆனா நம்ம  பேராசையை நாம உத்து கவனிச்சாதான்  தெரியும்… அது எவ்வளவுதூரம் நம்ம drive பண்றது அப்படீன்னு… அதைத்தான் சொல்றார்.  அப்பேர்ப்பட்ட என்னுடைய மனமாகிய திருடனை – ‘ஹே தஸ்கர பதே’ – நீ திருடர்களுக்கெல்லாம் தலைவன்- ‘தஸ்கணாநாம் பதேயே நம:’ அப்படீன்னு ஸ்ரீருத்ரத்துல சொல்றா இல்லையா, அந்த மாதிரி பகவான் என்ன திருடுறார்ன்னா… ‘உள்ளம் கவர் கள்வன்’,

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

அப்படீன்னு சம்பந்த பெருமான், அம்பாளுடைய அநுகிரஹம் கிடைச்ச உடனே பாடின முதல் பாட்டுலயே ‘உள்ளம் கவர் கள்வன்’ அப்படீன்னு பகவானை சொன்னார்.  அந்த உள்ளம் கவர் கள்வன்… ஆதிசங்கரர் சொல்றார்.. “அந்த திருடன்… அவர் ‘சங்கர:’ , ‘தஸ்கரபதி:’, ‘விபு:’ – அப்படீன்னா எங்கும் நிறைந்தவர்ன்னு அர்த்தம். ‘ஹே சங்கரா!’, ‘ஹே விபோ!’, ‘ஹே தஸ்கரபதே!’… ‘இமம் சேதஶ்சோரம்’ – என்னுடைய  மனமாகிய இந்த திருடனை, ‘தவாதீ⁴நம் க்ருʼத்வா’ – உனக்கு அதீனமாக, உனக்கு அடங்கியதாக என் மனசை நீ ஆக்கிண்டு, ‘மயி நிரபராதே⁴ குரு க்ருʼபாம்’ – ஒரு தப்பு பண்ணாத என்கிட்ட தயவு பண்ணு”, அப்படீன்னு சொல்றார்.

இந்த காமமாவது… பசி அப்படீன்னா சாப்பாடு போட்டா அடங்கும்,  கோபம் … நம்ம நினைக்கிறதுக்கு மாறுதலா நடந்தா கோபம் வரும், நினைச்ச மாதிரி நடந்துதுன்னா கோபமாவது அடங்கும். இந்த பேராசைங்கறது அடங்காம வளர்ந்துண்டே போகும், எவ்வளவு feed-பண்ணாலும் இன்னும் இன்னும் வளரக்கூடியது பேராசை. அதனால இந்த பேராசையினால் உந்தப்பட்டு என் மனமாகிய திருடன், மேலும் மேலும் தப்புகள் பண்றான்… என்ன காப்பாத்தது… அப்படீன்னு சொல்றார்.

மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறு மொழிந்து மொழிந்திலனே!
அகம் ஆடை மடந்தையர் என்று அயரும்
சக மாயையுள் நின்று தயங்குவதே!

இங்கயே நின்னு தயங்கிண்டே இருக்கே, உன்கிட்ட வரமாட்டேங்கிறதே என் மனசு… அப்படீன்னு அருணகிரிநாதர், ‘முருகா… முருகா’ அப்படீன்னு சொல்லுன்னு குரு சொல்லி கொடுத்தார்.  ‘ஆறுமுகம்… ஆறுமுகம்… ஆறுமுகம்’ சொல்லுன்னார், ‘முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே’ இதை சொல்லிண்டே இருக்கேன், ஆனாலும் இந்த அகம், மாடை, மடந்தையர்… அப்படிங்கிற இந்த ஜகமாயையிலேயிருந்து இது ஒழியமாட்டேங்கறது, இதுலேர்ந்து விலகறதுக்கு முடியலையே அப்படீன்னு சொல்றார். அந்த மாதிரி… என்னுடைய மனசுன்னு  ஒண்ணு இருக்கு, எப்படி கை, கால், உடம்பு எல்லாம் இருக்கோ அந்த மாதிரி, மனசுங்கறதும் ஒரு element… அதுவும் முக்குணங்களால் ஆனது…  ‘நிரபராதே⁴ மயி குரு க்ருʼபாம்’ அப்படிங்கறார்… ஒரு தப்பு பண்ணாத என்கிட்ட… ஒரு பாவமும் அறியாத என்கிட்ட தயவு பண்ணு அப்படிங்கறார்.  ஒரு மஹான் தர்சனம் கிடைச்சா, அவர்கள் பேரானந்தத்துல திளைச்சு இருக்கறத பார்க்கும்போது… நம்ம கண்ணை மூடிண்டா உள்ளுக்குள்ள ஒண்ணும் தெரியல… இருட்டாதான் இருக்கு.  மனசுன்னு ஒண்ணு இருக்கு அது ஓயாத உளறிண்டே இருக்குங்கிறது தான் தெரியறது.. நம்மள கண்ட கண்ட காரியத்துல ஏவறதுங்கிறது தெரியறது.  ஆனா மகான்களை பார்க்கும்போது, அந்த மனசு அடங்கி சாந்தமா இருக்கா… இந்த ஓட்டத்துல இல்லாத ஒரு சுகத்தை அவா அநுபவிச்சிண்டு இருக்காங்கிறதை நாம பார்க்கறோம்.  அப்படி ஒரு மஹானை பார்த்து,  அவா கிட்ட போய் நாம நமஸ்காரம் பண்ணி கேட்டா “உங்களுடைய இந்த பேரானந்தத்துக்கு காரணம் என்ன?” அப்படீன்னு கேட்டா அவா என்ன சொல்றான்னா…

प्रत्यङ्मुख्या दृष्ट्या प्रसाददीपाङ्कुरेण कामाक्ष्याः ।
पश्यामि निस्तुलमहो पचेलिमं कमपि परशिवोल्लासम् ॥

ப்ரத்யங்முக்²யா த்³ருʼஷ்டயா ப்ரஸாத³தீ³பாங்குரேண காமாக்ஷ்யா: ।
பஶ்யாமி நிஸ்துலமஹோ பசேலிமம் கமபி பரஶிவோல்லாஸம் ॥ 77 ॥

அப்படீன்னு சொல்றா. நமக்கெல்லாம் வெளிப்பார்வைதான் இருக்கு.  அவாளுக்கு ‘ப்ரத்யங்முக்²யா த்³ருʼஷ்டயா’ – உள்ளுக்குள்ள பார்க்கறா அவா … அந்த திருஷ்டி கிடைச்சுடறது… அந்த திருஷ்டியை கொண்டு பார்க்கும்போது… ‘ப்ரஸாத³தீ³பாங்குரேண காமாக்ஷ்யா:’  – காமாக்ஷி கொடுத்த தெளிவு என்ற ஒரு torch இருக்கு.. ஒரு தீவெட்டி… ‘தீ³பாங்குரேண காமாக்ஷ்யா:’ பஶ்யாமி நிஸ்துலம்’ – நான் ஒன்றை பார்க்கிறேன்… அது ‘நிஸ்துலம்’ அதுக்கு  துல்யமே சொல்ல முடியாது… ‘பரஶிவோல்லாஸம்’ – சிவானந்தம்… அது ‘பசேலிமம் கமபி பரஶிவோல்லாஸம் ‘
‘பசேலிமம்’ன்னா நல்ல பழுத்த ஞானம் அது. ‘கமபி’- அது என்னன்னு நான் வார்த்தையால உனக்கு சொல்ல முடியாது. ஆனா அதுதான் ஜன்மாவோட லக்ஷ்யம் அப்படின்னு மஹான்கள் சொல்லித்தரா.

உடனே நாம அதைப் பார்க்க “நான் என்ன பண்ணனும்?” – அப்படின்னா…  அவா ரொம்ப எளிமையா ராம நாம ஜபம் பண்ணு, ஸ்தோத்ர பாராயணம் பண்ணு அப்படின்னு சொல்றா.  அந்த காரியத்தின் மூலமா அவாளோட தியானம் பண்றோம்.  அது மூலமா அவா காண்பிச்சு கொடுத்த அந்த பகவானுடைய அநுகிரஹம் கிடைக்கறது.  இந்த காரியத்துல நம்மை மஹான்களா இருக்கிறவா வழி நடத்தறா.  அப்படி பண்ணிண்டிருக்கும்போது நமக்கு அப்பப்போ ஒரு சந்தேகம் வந்துடறது.  அதுக்கும் இந்த ஸ்லோகங்கள்லேயே இந்த மாதிரி பிரார்த்தனை இருக்கு. ஒரு மூகபஞ்சசதி ஸ்லோகம்.  78வது ஸ்லோகம் பாதாரவிந்த சதகத்துல…

विशुष्यन्त्यां प्रज्ञासरिति दुरितग्रीष्मसमय-
प्रभावेण क्षीणे सति मम मनःकेकिनि शुचा ।
त्वदीयः कामाक्षि स्फुरितचरणाम्भोदमहिमा
नभोमासाटोपं नगपतिसुते किं न कुरुते ॥

விஶுஷ்யந்த்யாம் ப்ரஜ்ஞாஸரிதி து³ரிதக்³ரீஷ்மஸமய-
ப்ரபா⁴வேண க்ஷீரண ஸதி மம மன:ரககினி ஶுசா ।
த்வதீ³ய: காமாக்ஷி ஸ்பு²ரிதசரணாம்போ ⁴த³மஹிமா
நபோ⁴மாஸாடோபம் நக³பதிஸுதே கிம் ந குருதே॥ 78 ॥

அப்படிங்கறார்.  காமாக்ஷியே! ‘நக³பதி சுதே’ – மலையரசனின் மகளே.. ‘ப்ரஜ்ஞா’ – அப்படின்னா ஞானம், நல்லறிவு… ‘ப்ரஜ்ஞாஸரிதி’ – ஞானம்ங்கிற ஒரு ஓடைன்னு சொல்லலாம் இல்லே நதின்னு சொல்லலாம்… அந்த நதியானது ‘து³ரிதக்³ரீஷ்மஸமய’ – என்னுடைய பாபங்கள் என்ற கோடைக் காலத்துனால ‘விஶுஷ்யந்த்யாம்’ – வத்திப் போயிடுத்து.  இப்ப அங்க நதி இருந்த இடத்துல ஒண்ணுமே இல்லை.  நதியே இல்லை.  அதாவது என் ஞானமும்… குரு சொன்னபோது தெளிவா இருந்த மாதிரி இருந்தது.  அதுவும் வத்தின மாதிரி இருக்கு. ‘க்³ரீஷ்மஸமய- ப்ரபா⁴வேண’ – என்னோட பாபங்கள் என்ற கோடை காலத்தின் பிரபாவத்தினால் என் மனசிலிருந்த ஞானம்கிற நதி வத்திப் போயிடுத்து.  அப்ப என் மனமாகிய மயில்… அது ரொம்ப க்ஷீணமா இருக்கு.  மனசு வாடியிருக்கு அப்படிங்கிறதை மூக கவி இவ்ளோ கவித்துவமா சொல்றார்.  ‘த்வதீ³ய: காமாக்ஷி ஸ்பு²ரித சரணாம்போ ⁴த³ மஹிமா’ – உன்னுடைய பாதமாகிய மேகம்… அதனோட மஹிமையினால… காமாக்ஷி! ‘நபோ⁴மாஸாடோபம்’ – ஆவணி மாதத்தோட காரியத்தை… அதாவது… அந்த அநுகிரஹம்ங்கிற மழையை… ‘கிம் ந குருதே’ – ஏம்மா பண்ணலை. நான் மனசு கெட்டு, பாபச் செயல்கள் பண்ணி… என் மனசு வருந்தியிருக்கு… அறிவிழந்து நான் நிக்கறேன்.  உன்னுடைய சரணம்… அந்த மேகம் பொழிஞ்சுதுன்னா, என் மனமாகிய மயில் திரும்பியும் சந்தோஷத்துல நர்த்தனமாடும்… அப்படின்னு சொல்றார். இந்த மாதிரி பிரார்த்தனைகள் இருக்கு.

நம்ம மதத்தோட பெருமை என்னன்னா… அந்த மகான்கள்…( ஒரே ஒரு மஹான்தான். அதுக்கு மேல யாருமே கிடையாது… அந்த பேச்சு பேசினாலே பாபம்கிறது மத்த மதங்கள்)… நம்ம மதத்துல மஹான்கள் வந்துண்டே இருக்கா. தங்கத்தை தொட்டா  தங்கம் ஆக முடியுமா? அனா மஹான்கள் கடாக்ஷம் பட்டதுன்னா ஒரு சாதாரண ஜீவன்கூட மஹான் ஆக முடியும்ங்கிறது நம்ம மதத்தோட பெருமை.  அந்த மாதிரி ஒரு ஸ்லோகத்துலேயே…
खण्डं चान्द्रमसं वतंसमनिशं काञ्चीपुरे खेलनं
कालायश्छवितस्करीं तनुरुचिं कर्णेजपे लोचने ।
तारुण्योष्मनखम्पचं स्तनभरं जङ्घास्पृशं कुन्तलं
भाग्यं देशिकसञ्चितं मम कदा सम्पादयेदम्बिके ॥
க²ண்ட³ம் சாந்த்³ரமஸம் வதம்ஸமநிஶம் காஞ்சீபுரே கே²லனம்
காலாயஶ்ச²விதஸ்கரீம் தனுருசிம் கர்ணேஜபே லோசனே ।
தாருண்யோஷ்மநக²ம்பசம் ஸ்தனப⁴ரம் ஜங்கா⁴ஸ்ப்ருʼஶம் குந்தலம்
பா⁴க்³யம் தே³ஶிகஸஞ்சிதம் மம கதா³ ஸம்பாத³யேத³ம்பி³கே ॥ 15 ॥
அப்படின்னு ஒரு அழகான ஸ்லோகம்… 15ஆவது ஸ்லோகம் ஸ்துதி சதகத்துல.
‘க²ண்ட³ம் சாந்த்³ரமஸம் வதம்ஸமநிஶம்’ – தலையில சந்திரனுடைய கண்டத்தை அணிந்து கொண்டு… ‘காஞ்சீபுரே கே²லனம்’ – காஞ்சிபுரத்தில் திருவிளையாடல்கள் புரிபவள்… ‘காலாயஶ்ச²விதஸ்கரீம் தனுருசிம்’  – இரும்பு… அதோட அந்த கருப்பு காந்தியையும் அபகரிக்கக் கூடிய காந்தி – அம்பாளுடைய அந்த காந்தி… ‘கர்ணே ஜபே லோசனே’ –  காதுவரைக்கும் நீண்ட கண்கள்… ‘தாருண்யோஷ்மநக²ம்பசம் ஸ்தனப⁴ரம்’ – ஸ்தனங்கள்… ‘ ஜங்கா⁴ஸ்ப்ருʼஶம் குந்தலம்’ – முட்டி வரைக்கும் நீண்ட குந்தலம்… இந்த சொத்தை என் குருநாதர் சம்பாதிச்சு வெச்சுருக்கார்… அது எனக்கு எப்ப கிடைக்கும்?  ‘பா⁴க்³யம் தே³ஶிகஸஞ்சிதம் மம கதா³ ஸம்பாத³யேத³ம்பி³கே’ – அப்படின்னு ஒரு ஸ்லோகம்.  என்ன அர்த்தம்ன்னா… என் குருநாதர் காமாக்ஷியினுடைய ஸாரூப்யத்தை அடைந்தார்.  நான் எப்ப அந்த மாதிரி அடையப் போறேன்? அப்படின்னு அந்த குரு சொன்ன வழியில போகும்போது இந்த மாதிரி எல்லாம் மனசுக்கு ஆறுதலான வார்த்தைகள் எல்லாம் படிச்சிண்டே வந்து… நம்பிக்கையோட இருக்கும்போது… அந்த உள்ளம் கவர் கள்வனான பகவான் வந்து நம்முடைய மனஸ் அப்படிங்கிற elementஅ போக்கிட்டு, பாக்கி மிஞ்சற அந்த ஸொச்சமான ஆனந்த அநுபவத்தை கொடுக்கறார் அப்படிங்கிறது, இந்த ஸ்லோகத்துல தாத்பர்யம்….
प्रलोभाद्यैरर्थाहरणपरतन्त्रो धनिगृहे
प्रवेशोद्युक्तस्सन् भ्रमति बहुधा तस्करपते ।
इमं चेतश्चोरं कथमिह सहे शंकर विभो
तवाधीनं कृत्वा मयि निरपराधे कुरु कृपाम् ॥ २२॥
ப்ரலோபா⁴த்³யைரர்தா²ஹரணபரதந்த்ரோ த⁴நிக்³ருʼஹே
ப்ரவேஶோத்³யுக்தஸ்ஸந் ப்⁴ரமதி ப³ஹுதா⁴ தஸ்கரபதே ।
இமம் சேதஶ்சோரம் கத²மிஹ ஸஹே ஶங்கர விபோ⁴
தவாதீ⁴நம் க்ருʼத்வா மயி நிரபராதே⁴ குரு க்ருʼபாம் ॥ 22
அப்படின்னு பகவானுடைய பரமேஸ்வரனுடைய கிருபையினால்தான் அந்த ஞானம் கிடைக்கும்.  அவர்தான் நம்முடைய மனதை கவர்ந்து… அப்புறம் மனதை போக்கி ஞானத்தை கொடுக்கணும் அப்படிங்கிற பிரார்த்தனை… அழகான ஒரு ஸ்லோகம்.
நம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ.
Series Navigation<< சிவானந்தலஹரி 21வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 23வது ஸ்லோகம் பொருளுரை >>

4 replies on “சிவானந்தலஹரி 22வது ஸ்லோகம் பொருளுரை”

எல்லாவற்றிற்கும் தலைவன் யார் ? பரமேஸ்வரன் அல்லவா? அவர் திருடருக்கெல்லம் கூட தலைவர் இல்லையா?
அவர் அனுகிரகம் இருந்தால்தான் மனம் என்னும் திருடன்…ஸதா ஏதாவது ஒன்றை சுவீகரிக்க புத்தி , அந்த நினைவை அகற்றி ஸத் குணம் அருலச் செய்பவர் ஸ்ரீ ருத்ரத்தில் சொல்லுமாபோல்
‘ ‘தஸ்கரபதே” என விலிக்கிரார் ஆசார்யாள்!

நிலையாத சத்திரமான சம்சாரத் துறைக் கணில் மூழ்கி என்ற திருப்புகழ் சொல்வது போல் மனம் போன போக்கெல்லாம் போகும் வாழ்க்கை இது .
அந்த மாதிரி மனத்தைத் தங்கள் ஆதீனத்தில் கொண்டு வந்து, எந்தவித குற்றமற்ற வாழ்வை அறுல கிருபை செய்யுங்கள் ஈசா ‘ எனப் பிரார்த்தனை இது !
இதனால் ஜீவன் மனதின் சம்பந்தமில்லாமல் எந்தக் குற்றங்களையும் செய்வதில்லை என்ற கருத்து இங்கு சொல்லப் படுகிறது! மனம் அடக்கினால் ஜீவன் முக்தி பெறலாம் என்பது கருத்து !
இதனை ஒத்த ஸ்லோகம்.கொடுத்து பொருள் விளகத்திடன் சொன்னது தெளிவாக இருந்தது !
பாபங்கள்.எல்லாம் கோடை கால வெயிலாக மாறி, பிரக்ஞை என்ற நதியைத் தண்ணீர் வற்ற செய்வதால் , மனம் எனுமயில்.துக்கத்தால்.மெலிந்து வாடுகிறது ! அப்போது தேவியின் தாமரைப்.பாதங்கள் கரூகிலாய்.மாறி,ஆவணி.மாதத்தும்மழையாகப்.பொழிகிறது ! அதுபோல் கருணை என்ற மழை பொழிய பிரார்த்தனை இங்கின்செய்யப்படுகிறது
குருவின் அருளால் குருவை அடையச் கூடியவள் காஞ்சியில் குறைவாகவே th திகழ்வது நம் பாக்யம் ,!
பௌர்ணமி அன்று அம்பாள் கருணையை சிவனோடு ஒப்பிட்டது மிகப் பொருத்தம் !
ஜய ஜய சங்கரா…
ஜகதம்ப் சரணம்….

அற்புதமான ஸ்லோகம்.அழகான விளக்கம். மூகபஞ்சசதீ மேற்கோள்கள் எல்லாம் மிக அருமை.

ஆச்சார்யாள் இந்த ஸ்லோகத்தில் அபரிக்ரஹ தர்மத்தை கூறுகிறார். ‘நீ ஜீவிப்பதற்கு எது அத்யாவச்யமோ அதற்கு அதிகமாக ஒரு துரும்புகூடச் சேர்த்துக் கொள்ளாதே’ என்பதுதான் அபரிக்ரஹ தர்மம். 

வரவு சிறுத்து செலவு பெருகினால் அதுவே ஒரு திருட்டு என்று வசனமிருக்கிறது. கீதையில் பகவான் லோக வாழ்க்கைக்கானவற்றை தேவ சக்திகளிடமிருந்தே பெறுகிற மனிதனானவன் அவற்றை அவர்களுக்கு அர்ப்பணிக்காமல் அநுபவித்தால் அதுவே ஒரு திருட்டு தான் என்கிறார். 

நம் மனமோ ஓயாமல் உடைமைகளை சேர்த்துக் கொள்வதில் குரங்காக இருக்கிறது. அதற்குத்தான் ஆச்சாரியாளே திருடர்களுக்கெல்லாம் தலைவனான பரமேச்வரனை ‘என் மனம் ஆகிய திருடனை உனக்கு அடங்கியதாக ஆக்கிக்கொள்’ என்கிறார். மனசு அவருடைய ஆதீனத்தில் வந்துவிட்டால் நாம் ஒரு தப்பும் பண்ணாதவர்களாக ஆகிவிடுவோம். 

சிவானந்த லஹரி 20வது ஸ்லோகத்திலும் ‘என் மனஸைக் பக்தி என்கிற கயிற்றினால் கட்டி உன் ஆதீனத்திலேயே வைத்துக்கொள்ளு” என்று பிரார்த்திக்கிறார். பெரியவா இதற்கு விளக்கம் சொல்லும்போது, ” இரண்டு வகை பக்தியில் பூனைக் குட்டி முறை ஒன்று. குரங்குக் குட்டி முறை இன்னொன்று. ‘தாய் விட்டபடி’ என்றிருக்கும் பூனைக் குட்டிபோல் பகவானை சரணமடைய நமக்குப் பக்குவமில்லை. குரங்காகத் திரிகிறது நம் மனசு. ஆனாலும் குரங்குக் குட்டிபோல் அவனை பற்றிக்கொள்ளவும் நமக்குப் பக்குவமில்லை. குரங்கு குட்டியாக இருந்துகொண்டே, பூனையம்மாவின் ரக்ஷணையைக் கேட்பவர்களாக இருக்கிறோம்!  அதற்காக நாம் மனம் தளர்ந்து விடாமல், நம் நிலையிலும் ஸாத்யப்படுகிறமாதிரி, “பக்தி வரம் தா அப்பா!” என்று பிரார்த்திக்க, ஆசார்யாள் மூன்றாவது வழி சொல்லிக் கொடுக்கிறார்.

‘ஹ்ருதய கபிம் அத்யந்த சபலம்’ என்று ஆசார்யாள் சொல்கிறபடி, மகா சபலத்துடன் தாவிக்கொண்டேயிருக்கிற மனக் குரங்கை ஈச்வரன் கட்டி வைத்து, முதலில் அது கயிற்றின் நீளத்துக்குத் தாவுகிற மாதிரி விட்டுப் பிடித்தாலும், அப்புறம் அது அவன் ஆட்டினால்தான் ஆடுவது என்று குரங்காட்டியின் குரங்கு மாதிரிச் சும்மா இருக்கிறபடி செய்துவிடுவான். மனஸ் இப்படித் துளிக்கூடத் தானாக நகராதபோது, அதை அவனும் ஆட்டி வைக்காவிட்டால், அதுதான் மனமே அழிந்துபோய் ஆத்மா மட்டும் பிரகாசிக்கற அத்வைத சித்தியான மோக்ஷம். இப்படிப்பட்ட அத்வைதத்தைத் தருவதும் பரமாத்மாவின் கையில்தான் இருக்கிறது என்கிற மாதிரி இங்கே கயிற்றை அவன் கையிலேயே கொடுத்திருக்கிறார்!

ஆகவே, ஆசார்யாளின் மூன்றாவது வழியைப் பின்பற்றி  ‘பக்தியைக் கொடு; அப்படிக் கொடுப்பதே உன் அருள்தான்’ என்று வேண்டிக் கொள்ள வேண்டும். அப்புறம் நம் பக்திக்கு இரங்கி மோக்ஷம் தரவேண்டும். இப்படிப் புருஷப் பிரயத்தனமும், தெய்வாநுக்ரஹமும் கலந்து வரவேண்டும்.” என்கிறார்.

🙏🙏🙏🙏

Hello Sir

I have a doubt for a long time which I try to brush it away because it has some profound implications.

In this Acharya says I am sinless it’s my manam ( I don’t think mind as a word captures essence of the Sanskrit or Tamil word manas) that’s thief I.e seperate from me ( not necessarily seperate but appears as though to act independently ).

I don’t know if Achayra meant the sentence here as poetry with no basis in reality . Or if He meant to describe as is the true physical (may not the most appropriate word since nothing ever lasts) nature of existence like one feels wind in the face.

If it’s not just Kattu kadhai (; -)) isn’t that true for every one? So nobody ever sinned and all perceived actions is nothing but illusion! I.e the Self is a witness (like the 2 parrot story in Bhagavatam) but we all keep imagining that we said/did/thought this and that?

Please let me know your thoughts

Thank you

There are a few slokams in Shivanandalahari where Acharya wants Parameshwara to take control of his mind. (kalyaninam sarasa chitra gathim savegam) Mind is an element made of three gunas. Eswara is above three gunas. In bhakthi we try to completely surrender our mind (and in turn our senses) to Eswara and make it devoid of gunas. There is satvik, rajasik and tamasik food. But eswara prasadam is above three gunas and so on.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.