கணேஷ பஞ்சரத்னம் 1வது 2வது ஸ்லோகங்கள் பொருளுரை; Ganesha Pancharathnam sloakms 1 and 2 meaning

கணேஷ பஞ்சரத்னம் 1வது 2வது ஸ்லோகங்கள் தமிழில் பொருள் (17 min audio in Tamizh giving meaning of Ganesha Pancharathnam slokams 1 and 2)

நமஸ்தே. இன்னொரு பத்து நாள்ல, இந்த விளம்பி வருஷத்தோட சங்கர ஜயந்தி மஹோத்ஸவம் வர்றது. அதனால ‘சங்கர ஸ்தோத்திரங்கள்’ சிலதை எடுத்து, அதுக்கு பதம் பதமா அர்த்தம் சொல்றேளா?’ன்னு கேட்டுண்டா. அந்த மாதிரி பண்ணலாம்னு எனக்கும் ஆசையா இருக்கு. முதல்ல கணேச பஞ்சரத்னம் எடுத்துக்கறேன்.

அதுக்கு முன்னாடி மனசுலேருந்து காமாக்ஷி பேசணும்னு சொல்லி, ஒரு மூகபஞ்சசதி ஸ்தோத்ரம் சொல்லிட்டு ஆரம்பிக்கறேன்.

मनीषां माहेन्द्रीं ककुभमिव ते कामपि दशां
प्रधत्ते कामाक्ष्याश्चरणतरुणादित्यकिरणः ।
यदीये सम्पर्के धृतरसमरन्दा कवयतां
परीपाकं धत्ते परिमलवती सूक्तिनलिनी ॥100॥

மனீஷாம் மாஹேந்த்ரீம் ககுபமிவ தே காமபி தஶாம்
ப்ரதத்தே காமாக்ஷ்யாஶ்சரணதருணாதித்யகிரண: |
யதீயே ஸம்பர்கே த்ருதரஸமரந்தா கவயதாம்
பரீபாகம் தத்தே பரிமலவதீ ஸூக்தினலினீ ||100||

இந்த கணேச பஞ்சரத்னம்ங்கிறது ஆதிசங்கர பகவத்பாதாள் அதிகமா காசியில இருந்தார். அங்க டுண்டி கணபதின்னு ஒரு சன்னதி இருக்கு. பாரத தேசத்துல, பாரததேசம் என்ன உலகம் முழுக்க எல்லா தேசங்கள்லேயும் இன்னிக்கும் கணபதி விக்ரகங்கள் கண்டுபிடிச்சிண்டிருக்கா பூமியிலிருந்து. அந்த மாதிரி எங்கும் நிறைந்தவர் கணபதி. இந்த ஒருஸ்தோத்திரத்தோட அர்த்தத்தை நாம பார்க்கலாம். இந்த ஸ்தோத்திரத்துடைய  சொல் அலங்காரம், இதனுடைய வ்ருத்தம் அதுவே ஒரு யானை அசைஞ்சு, அசைஞ்சு வர மாதிரி அழகா இருக்கும். அந்தமாதிரி கூட நாட்டியம் பண்ணுவா இந்த ஸ்தோத்திரத்துக்கு யானை காது அசைஞ்சுண்டு வரமாதிரி.

मुदाकरात्तमोदकं सदा विमुक्तिसाधकं
कलाधरावतंसकं विलासिलोकरक्षकम् ।
अनायकैकनायकं विनाशितेभदैत्यकं
नताशुभाशुनाशकं नमामि तं विनायकम् ॥१॥

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் |
கலா தராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் |
அநாயகைக நாயகம் வினாஸி தேப தைத்யகம் |
நதாசுபாசு நாசகம் நமாமி தம் விநாயகம் || 1 ||

அப்படீன்னு சொல்றதுக்கே ரொம்ப அழகா இருக்கு இந்த ஸ்லோகம். இந்த ஸ்லோகத்துடைய அர்த்தத்தைப் பார்ப்போம்.

‘முதாகராத்த மோதகம்’ -ரொம்ப ஆனந்தமாக கைகளில் மோதகத்தை வைத்துக் கொண்டிருப்பவரும்,மோதகம்ங்கிறது நம்மளுடைய கொழுக்கட்டை. வெளியில வெள்ளையா அரிசிமாவை வெச்சு தோல் இருக்கும்.உள்ளுக்குள்ள தேங்கால வெல்லத்தை கலந்து பூர்ணம்னு சொல்வாளே அதை வெச்சு அது மேல இந்த அரிசி மாவு வெச்சு பண்றது. இந்த மோதகம் பிள்ளையாருக்கு ரொம்ப பிடிக்கும். இந்த மோதகத்தை சந்தோஷமா கைகளில் வைத்துக் கொண்டிருப்பவரும்,

‘ஸதா விமுக்தி ஸாதகம்’ -மோக்ஷத்தை விரும்பும் பக்தர்களுக்கு, அந்த முக்திக்கு எப்பொழுதும் சாதகமாக, ஒரு துணையாக, அந்த முக்திக்கு வழிகாட்டும் ஒருமூலப் பொருளாக இந்த கணபதி இருக்கார்னு வர்றது. எனக்கு இந்த முதல் வரியை படிச்சபோது, இந்த இரண்டுமே connected, அதாவது கைல அவர் மோதகத்தை வெச்சிண்டிருக்கிறதும் முக்திக்கு வழி காமிக்கறதுமே அதுலேயே இருக்கு அப்படீன்னு தோணித்து.

எப்படீன்னா, தக்ஷிணாமூர்த்தியுடைய சின்முத்திரைக்கு எவ்வளவோ அரத்தங்கள் சொல்வா. ஆள்காட்டிவிரல் – ஜீவன். மத்த மூணு விரலும் ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரங்கள்.  அதுல இருந்து ஜீவன் தன்னை பிரிச்சு, இந்த கட்டைவிரல் – பரமாத்மா. அதோட போய் சேரணும் அப்படீன்னு சொல்லுவா. இந்த மூணு விரலும் ரஜஸ், தமஸ், ஸத்வம் அதுலேருந்து ஜீவன் பிரிஞ்சு பகவான் கிட்ட போய் சேரணும்அப்படீன்னு எல்லாம் நிறைய இருக்கு. அது பெரிய subject.

பிள்ளையார் கையில் வெச்சிண்டிக்ருகிற மோதகத்தை பார்த்தோம்னா, வெளியில இருக்கிறது தோல், அதுக்குள்ள இருக்கிறது பூர்ணம். அந்த மாதிரி தோலால் ஆன இந்த உடம்புக்குள்ளயே பூரண வஸ்துவான பரமாத்மா தித்திக்க தித்திக்க இருக்கார். அது நமக்கு தெரிய மாட்டேங்கறது. இந்த தோலோட சுகத்துலேயே நின்னு போயிடறோம். அப்படியில்லாமல் அந்த உள்ளுக்குள்ள இருக்கிற சுகத்தை உணர்வது தான் முக்தி. அந்த முக்திக்கு, ‘இந்த பிள்ளையாருடைய ரூபம், அவருடைய ஸ்தோத்ரம், அவரை நமஸ்காரம் பண்றது’ இது வழிகாட்டுதலாக இருக்கும்னு இந்த முதல்வரிக்கு ஒரு அர்த்தம் தோன்றது. யாராவது இந்த வெளியில இருக்கிற தோல் மட்டும் தின்னுவாளோ? ரொம்ப thick ஆயிட்டாக் குழந்தைகள் கூட nice ஆ வெளியில இருக்கிற இந்த தோலை எடுத்து வெச்சிட்டு, உள்ளுக்குள்ள இருக்கிற பூரணத்தை சாப்பிடுவாளே தவிர, யாராவது இந்த பூரணத்தை தூக்கிப் போட்டுட்டு, தோலை சாப்பிடுவாளோ? அந்த மாதிரி நாம பண்ணிண்டிருக்கோம். உள்ள இருக்கிற ஆனந்தத்தை தேடாம, வெளியில இந்த தோலோட சுகத்துலேயே நின்னு போயிடறோம்.அப்படி இல்லாம இருக்கணும்னா, பிள்ளையார் கிட்டப் போய் பக்தி பண்ணனும்.

அடுத்த வரி, ‘கலாதரா வதம் ஸகம்’ – சந்திரக் கலையை , கலைகளைக் கொண்ட சந்திரனை, அதுல மூன்றாம் பிறை சந்திரனை, தன் தலையில அலங்காரமாக வெச்சிண்டிருக்கார். மூக பஞ்சசதியில கூட ‘சந்திராவதம்ஸஸதர்மிணி’ ன்னு வரும். இந்த‘வதம்ஸகம்’ங்கிறதே வரும். இந்த இடத்துல பெரியவா சொல்றது ஞாபகம் வர்றது. மஹாபெரியவா, ‘பார்த்துண்டே இருக்கலாம், பார்க்க பார்க்க ஆனந்தத்தைக் கொடுக்கக்கூடிய வஸ்துக்கள் அப்படீன்னா யானை, குழந்தை, சந்திரன், கடல் அப்படியெல்லாம் சொல்வா. அது எல்லாமே இருக்கிறது பிள்ளையார் கிட்ட. பிள்ளையார் குழந்தையா இருக்கார், யானையா இருக்கார், தலையில சந்திரனை வெச்சிண்டிருக்கார். அப்படி அந்த ரூபமே மனோஹரமா இருக்கு.

இந்த சந்திரனை தலையில ஆபரணமா வெச்சிண்டிருக்கார்ங்கிறதுக்கு, ஒரு கதை இருக்கு. அது என்னன்னா, இவர் கைலாசத்துல நர்த்தனம் பண்ணிண்டிருக்கார். எல்லாரும் ஆனந்தப் படறா. பிள்ளையார், அதுவும் இத்தனை அழகான யானை முகம் கொண்ட ஒரு குழந்தை, குதிச்சு குதிச்சி நர்த்தனம் பண்ணிண்டிருந்தா, கோவில்கள்ல எல்லாம் நர்த்தன விநாயகர் சன்னதிக்குப் போனா, தனி குஷியாத்தான் இருக்கும். சித்திரத்துலேயும் அது தனி அழகு.  இந்த சந்திரனுக்கு,‘தான் ரொம்ப அழகு! நம்மளைதான் எல்லாரும் கொண்டாடுவா! நாம தான் ரொம்ப அழகு!’ன்னு ஒரு கர்வம். கணபதி ஆடறதை பார்த்து இதைப் பாத்து கை கொட்டி சிரிக்கிறான். ஹிஹிஹினு சிரிக்கறான். ஒடனே பிள்ளையாருக்கு கோபம் வந்துடுத்து. அவர் சொல்றார்,‘உனக்கு, நீ ரொம்ப அழகா இருக்க! உன்னை பார்த்து எல்லாரும் ரொம்ப ச்லாகிக்கறாங்கிறதுனால தானே ரொம்ப கர்வம்? இனிமே சந்திரனை பார்த்தா அவாளுக்கு அபவாதம் வரும்! கெட்டபேர் வரும்!’னு சாபம் கொடுத்துடறார். சந்திரனை பார்த்தா எல்லாரும் முகத்தை திருப்பிண்டு போறா. அவனை யாருமே பாக்க வரமாட்டேங்கறா. அவன் நொந்து போயிடறான். அப்புறம்பிள்ளையார் கிட்டபோய் போய் மன்னிப்பு கேட்கறான். அப்போ அவர் சொல்றார், ‘சரி.நாலாம்பிறை சந்திரனை பார்த்தா அபவாதம்  வரும். கணபதி பூஜை பண்ணா அந்த அபவாதம் விலகிடும்!’ அப்படீன்னு அவனுக்கு சாபத்துக்கு ஒரு விலக்கு கொடுக்கறார். அந்த மாதிரி கர்வத்தை இழந்து நமஸ்காரம் பண்ணதுனால அவனையே தூக்கி தன் தலையில வெச்சுக்கறார்! அதனால ஜனங்கள் எல்லாம் சந்திரனைப் பார்த்தே ஆகணும் இல்லையா! பிள்ளையாரைப் பார்க்கும் போது சந்திரனை பார்க்கணும்.

இந்த வ்ருத்தாந்தம் ‘ஸ்யமந்தகமணி உபாக்யானம்’னு ஸ்ரீமத் பாகவதத்துல இருக்கு. கிருஷ்ணர் இந்த மாதிரி ஒரு நாலாம்பிறை சந்திரனைப் பார்த்ததுனால,‘அவர் ப்ரசேனஜித்தை கொன்னு ஸ்மயந்தக மணியை எடுத்துண்டார்’னு அபவாதம் வர்றது. அப்புறம், கணபதி பூஜை பண்ணி, அந்த அபவாதம் போறது. அந்த மணியை ஒரு சிங்கம் தான் ப்ரசேனஜித்தை அடிச்சிப் போட்டுட்டு எடுத்துண்டு போறது. அந்த சிங்கதுகிட்டயிருந்து ஜாம்பவான் எடுத்து வெச்சிண்டு இருக்கார். அந்த ஜாம்பவானை ஜெயிச்சு, அந்த ஸ்யமந்தகமணியை மீட்டுண்டு வந்து, அதை சத்ராஜித் கிட்ட கிருஷ்ணர் கொடுத்துடறார். அதோட அபவாதம் போயிடறது. போன இடத்துல, ஜாம்பவான் தன்னோட பெண்ணான  ஜாம்பவதியையும்  கல்யாணம் பண்ணிக் கொடுக்கறார். அப்படி ஒரு ரத்னத்துக்கு ரெண்டு ரத்னமா அவருக்கு கிடைக்கறது. ஆனா இந்த கிருஷ்ணருடைய  அஷ்டோத்ரத்துல ‘ஸ்யமந்தகமணேர் ஹர்த்ரே நம:’அப்படீன்னு வர்றது. ஸ்யமந்தகமணி திருடனுக்கு நமஸ்காரம். அந்த அபவாதம் வந்துட்டு போச்சுங்கிறதை ஞாபகம் படுத்தற மாதிரி ஒரு ஸ்தோத்ரம். தெய்வங்கள் எல்லாம் உள்ளது உள்ளபடி சொன்னா விரும்புவாங்கிறது அந்த அஷ்டோத்ரங்கள் எல்லாம் பார்த்தா தெரியும். உள்ளது உள்ளபடி அப்படியே  சொல்லியிருப்பா.

தலையில கணபதி சந்திரனை வெச்சிண்டிருக்கிறது அவருடைய கிருபையை காண்பிக்கறது. தப்பு பண்ணா கோவிச்சுப்பார். ஆனா நமஸ்காரம் பண்ணினா மன்னிப்பார்ங்கிறதையும்காண்பிக்கறது.

‘விலாஸிலோக ரக்ஷகம்’ -உலகத்தை எல்லாம் காப்பாற்றுபவர் பிள்ளையார்.இதுல ‘விலாஸி’ங்கிறதுக்கு விளையாட்டாகன்னு ஒரு அர்த்தம். விளையாட்டாகவே உலகத்தை எல்லாம் காப்பாத்துவார்னு ஒரு அர்த்தம். இன்னொரு அர்த்தம், இந்த literature world ல இருக்கிறவா, கவிகளுடைய உலகத்தை காப்பாற்றுபவர்னு ஒரு அர்த்தம். இன்னொரு அர்த்தம், எப்போவும் விளையாட்டா இருக்கறவா யாரு? குழந்தைகள். குழந்தைகளை எல்லாம் எப்பவும் பார்த்துண்டு இருக்கிறவர் பிள்ளையார்தான்னு ஸ்வாமிகள் எனக்கு சொல்வார். அம்மா வாசல்ல குழந்தைகளை விளையாட அனுப்பிச்சுயிருப்பாளே தவிர, அவ மனசு முழுக்க அங்கேயேதான் இருக்கும்.இங்க சமையல் ஓடிண்டிருக்கும். ஆனா,‘அவன் வாசல்ல அவன் என்ன பண்றானோ? விழுந்துடாம இருக்கணுமே!’, அப்படீன்னு மனசு அங்கேயே இருக்கும். அப்படி விளையாடற குழந்தைகளை actualஆ யாரு பாத்துக்கறா? பகவான் தானே. எவ்ளோ ஆபத்துக்கள் இருக்கு! அப்படி பார்த்துக்கிறவர் பிள்ளையார்தான்.அதனால சமைக்கறச்ச ‘ஸுமுகஸ்ச்ச’ சொல்லிண்டே சமைச்சா, அவர் அந்த குழந்தைகளை பார்த்துப்பார் – ‘விலாஸிலோக ரக்ஷகம்’.

‘அநாயகை கநாயகம்’- இதுக்கு இன்னொரு நாயகர் இல்லாத, அவருக்கு மேல ஒரு தலைவர் இல்லாத ‘ஏக நாயகம்’ – தனி ஒரு தலைவர் அப்படீன்னு அர்த்தம். தனக்கு தலைவர் இல்லாத ஏழை ஜனங்களுக்கு, தீனர்களுக்கு தலைவர்னு ஒரு அர்த்தம். தனக்கு நிகர் இல்லாத, தனக்கு மேல ஒருத்தர் இல்லாதவர்ங்கறது பிள்ளையாருக்கு பொருந்தும். ஏன்னா, பார்வதி பரமேஸ்வரா எல்லாருக்கும் மேலான தெய்வம். அந்த பார்வதி பரமேஸ்வராளே இவரை பூஜை பண்ணிட்டு தான் ஒரு காரியத்தை ஆரம்பிக்க முடியும். அதை மறந்துட்டான்னா இவர் விட மாட்டார். தேர் அச்சை முறிச்சார் இல்லையா. அந்த மாதிரி பிள்ளையார் பூஜை பண்ணிட்டு தானே பரமேஸ்வரனே முப்புரத்தை எரிக்க முடிஞ்சுது. எல்லாருக்கும் மேலான தெய்வம். பெரிய இடத்துப் பிள்ளைங்கறதுனால இந்த பிள்ளைக்கு மட்டும் ‘பிள்ளையார்!’னு ‘ர்’ விகுதி போட்டு சொல்லியிருக்கா.

‘விநாசிதேப தைத்யகம்’ –‘விநாசித இப தைத்யகம்’ -கஜமுகாசுரன்னு ஒருத்தன் இருக்கான். அவன் தேவர்களுக்குகெல்லாம் இம்சை பண்ணிண்டிருக்கான். அவனை அடக்கி, அவனை தன்வாகனமாவே, கஜ வாகனமாகவே வெச்சுக்கறார்னு புராணம் – ‘இப தைத்யகம் விநாசித:’

‘நதாஸுபாசு நாசகம்’ – நமஸ்காரம் பண்றவாளோட,‘நத அஸுப ஆசு நாசகம்’ -தன்னை நமஸ்காரம் பண்ணுகிறவர்களுடைய அஸுபங்களை, தீமைகளை,கெட்டவினைகளை ‘ஆசு’ – வெகு விரைவில் போக்குபவர்.

‘நமாமி தம் விநாயகம்’ -அந்த விநாயகரை நமஸ்கரிக்கறேன்.

அருணகிரினாதருடைய திருப்புகழ் எல்லா பஜனைகள்லயும்இது தான் முதல்ல பாடுவா.

கைத்தலநிறைகனிஅப்பமொடவல்பொரி

கப்பியகரிமுகன் …… அடிபேணிக்

கற்றிடும்அடியவர்புத்தியில்உறைபவ

கற்பகம்எனவினை …… கடிதேகும்

அந்த பிள்ளையாரை ‘கற்பகவிநாயகா!’ன்னு சொன்னா ‘வினை கடிது ஏகும்!’. அவாளுடையவினைகள், கெட்ட வினைகள் எல்லாம்வெகு விரைவில் போயிடும்.அந்த மாதிரி, பிள்ளையாருடைய ஸ்தோத்திரத்தை படிப்பவர்களுடைய மனதில் உறைபவர். இந்த மாதிரி ஸ்தோத்திரங்களைப் படிச்சிண்டே இருக்கணும்.

அடுத்த ஸ்லோகத்தைப் பார்க்கலாம்,

नतेतरातिभीकरं नवोदितार्कभास्वरं
नमत्सुरारिनिर्जरं नताधिकापदुद्धरम् ।
सुरेश्वरं निधीश्वरं गजेश्वरं गणेश्वरं
महेश्वरं तमाश्रये परात्परं निरन्तरम् ॥२॥

நதேதராதி பீகரம்  நவோதிதார்க்க பாஸ்வரம் |
நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம் |
ஸுரேச்வரம்  நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேஸ்வரம் |
மஹேஸ்வரம் தமாஸ்ரயே பராத்பரம் நிரன்தரம் || 2 ||

”நதேதராதீ பீகரம்” – ‘நத இதர அதி பீகரம்’, தன்னை வணங்காதவர்களுக்கு அதிகமாக விக்னங்களை கொடுத்து பயமுறுத்துபவர்னு அர்த்தம்.

அப்புறம் அவரை நமஸ்காரம் பண்ணா அந்த விக்னங்களைப் போக்குபவரும் அவர்தான்.‘பயக்ருத் பயநாசன:’ ன்னு விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலயும் வர்றது. நமக்கு பயங்களை கொடுப்பவனும் பகவான்தான்! பயங்களைப்போக்குபவரும்பகவான்தான்! இதை வந்து ஸ்வாமிகள் நிறைய பேருக்கு ஏதாவது பயப்பட்டுண்டு வந்தா, ‘பயப்பட வேண்டாம். எதோ பயத்தைக் கொடுப்பார். அதாவது அம்மா குழந்தை நெருப்பை தொட்டுடப் போறதேன்னு பூனை மாதிரி கத்துவா! உடனே வந்து அம்மா காலை கட்டிண்டிடும் குழந்தை. அது மாதிரி நாம வேற எந்த ஆபத்துலேயும் போயி மாட்டிக்க கூடாதேங்கறதுக்காகபகவான் நமக்கு பயத்தை கொடுக்கறார். நாம பகவானையே நெருங்கணும் எங்கிறதுக்காக தான். நீங்க இந்த பஜனை பண்ணுங்கோ. உங்க பயம் நிவர்த்தி ஆயிடும்!’னு ஸ்வாமிகள் சொல்வார்.நான் இதை நிறைய பார்த்திருக்கேன். அங்க உட்கார்ந்திருக்கும்போது.

கௌதா லலித் மனோகர்னு ஒருத்தர், அவருடைய மகாபெரியவா experience ரொம்ப அழகா இருக்கும். படிச்சவர். அது கேட்க வேண்டியது. அதுல பெரியவா அவருடைய press ல தங்கிண்டிருக்கா. அந்த இடத்துல பெரியவா வந்தா தங்கிக்கலாமான்னு கேட்டு, அவருக்கு மடத்தைப் பத்தியோ, பெரியவாளைப் பத்தியோ தெரியாது. அங்க வந்து கேட்டவாளோட ஹோதா அவருக்குப் பிடிக்கலை (முதல்ல வந்து கேட்டவளோட). இல்ல வசதி இல்லேன்னு சொல்றார். நான் எங்க போவேன். இது என் சொந்த  வீடுன்னு சொல்லிடறார். பெரியவாளோட சொந்த தம்பி,சாம்பமூர்த்தி சாஸ்த்ரிகள் வந்து, ‘நீங்க அங்கேயே இருக்கலாம். உங்களுக்கு ஒரு சிரமமும் இல்லை. உங்களோட outhouse ல இருக்கிற கோயில்ல, பெரியவாஅதுக்குப் பக்கத்துல ஒரு கொட்டகை போட்டு அங்க பூஜை பண்ணிப்பா’ன்னு சொல்லி அழகா பேசின உடனே,‘ஆஹா!’ன்னு சொல்லிட்டு 10 நாள் தங்கலாம்னு போன பெரியவா ரெண்டு மாசம் இருந்து நவராத்திரி எல்லாம் கொண்டாடிட்டுவரா.அப்புறம் திரும்பவும் வரா அங்க சங்கர ஜெயந்தி கொண்டாட. அந்த மாதிரி பிரியமா இருக்கா. அப்படி பெரியவா இருக்கும் போது அவருக்கு ஒரு குழந்தை பொறக்கறது. அந்த குழந்தைக்கு,‘cleftlip’னு சொல்லிட்டு உதடு மடிஞ்சு இருக்கு. அப்ப பெரியவா ‘பயக்ருத் பய நாசன:’ ன்னு சொல்லி, ‘நீ கவலைப்படாதே!’ அந்த காலத்துல எல்லாம் plastic surgeryலாம் ஒண்ணுமே கிடையாது. யாரோ ஒரு ரஷ்யன் plastic surgeon எதேச்சையா அங்க வந்து ‘அவர் என்ன பண்ணப் போறார்?அவரை என்னை வந்து பார்க்க சொல்லு’ன்னு, அவர்கிட்ட பெரியவா எல்லா detail லாம் கேட்டுண்டு அதை allow பண்ணி, அந்த குழந்தைக்கு அது சரியாயிடறது. ‘பயக்ருத் பயநாசன:’ ன்னு ‘நத இதர அதி பீகரம்’ – நமஸ்காரம் பண்றவாளுக்கு பயமுறுத்துவார். நமஸ்காரம் பண்றவாளுடைய,‘நத சுப ஆசு  நாசகம்’ – அதுவும் அவரே தான்.

‘நவோதி தார்க்க பாஸ்வரம்’-‘அர்க்கம்’னா சந்திரன். ‘அர்க்க பாஸ்வரம்’ –‘சூரிய ஒளி போல. எந்த சூரிய ஒளி?’ன்னா,‘நவ உதித’ -அப்பொழுது தான் உதயமான சூரிய ஒளியைப் போல ஒளியோடு விளங்குபவர்.

‘நமத் ஸுராரி நிர்ஜரம்’ – ‘ஸுரஅரி’ன்னா தேவர்களுடைய எதிரிகள், அதாவது அசுரர்கள். ‘நிர்ஜரம்’ – ‘ஜரா’ன்னா வயசு. வயசே ஆகாதவர்கள்ன்னா- தேவர்கள். தேவர்களும் அசுரர்களும் எல்லோரும் வணங்குபவர்கள் பிள்ளையார்.

‘நதாதிகாபதுத்தரம்’ –‘நத’ – நமஸ்காரம் பண்றவாளுடைய,‘அதிக ஆப துத்தரம்’ -பெரிய ஆபத்துகளையும் போக்கி விடுபவர். துன்பங்களைத் துடைப்பவர்.

‘ஸுரேச்வரம்’ -தேவர்களுக்கெல்லாம் தலைவர்.‘நிதீஸ்வரம்’ -எல்லா செல்வங்களுக்கும் தலைவர். ‘கஜேஸ்வரம்’ -யானைகளுக்கெல்லாம் தலைவர்னு வெச்சுக்கலாம். ஏன்னா, அவர் யானைகளுக்கு ராஜா மாதிரி தான். ஆனா,‘யானை தெய்வம்’ அப்படீன்னு தான் இங்க அர்த்தம். இன்னொன்னு, அந்த யானை வடிவில இருக்கிற அந்த தெய்வத்தை பெரியவாளே கூட சொல்லியிருக்கா,‘இங்க இருந்து ஆரம்பிச்சு இப்படி பார்த்தா ஓங்கார வடிவம் தெரியும்!’ அப்படீன்னு.  அப்படி ஓங்கார வடிவமானவர், ‘கணேஸ்வரம்’ -பூத கணங்களுக்கெல்லாம் தலைவர். அதனால தான் கணேஸ்வரம்னு பேரு.

‘மகேஸ்வரம்’ -பெரிய தெய்வம். ‘பெரிய கடவுள் காக்க வேண்டும்!’,அப்படீங்கறார் பாரதி. எல்லாருக்கும் மேலான பெரிய கடவுள்.

‘தம்ஆஸ்ரயே பராத்பரம் நிரந்தரம்’ -அந்த தெய்வத்தை நான் நிரந்தரமாக ஆஸ்ரயிக்கிறேன். அந்த தெய்வம் என்னன்னா, ‘பராத்பரம்’ –‘உயர்ந்த வஸ்துக்கள் எல்லாத்தைக் காட்டிலும் உயர்ந்தது! உயர்ந்தவர்! மேன்மையானவர்!’ இந்த கணபதி. அவரை நான் ஆஸ்ரயிக்கிறேன்னு ரெண்டாவது ஸ்லோகம்.இன்னிக்கி இது வரைக்கும் இருக்கட்டும். மீதி நாளைக்கு பார்ப்போம்.

சித்தி விநாயக மூர்த்திக்கு… ஜெய்!

Series Navigationகணேஷ பஞ்சரத்னம் 3வது 4வது ஸ்லோகங்கள் பொருளுரை; Ganesha Pancharathnam sloakms 3 and 4 meaning >>
Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.