Categories
mooka pancha shathi one slokam

காமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி

பாதாரவிந்த சதகம் 36வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி

महामन्त्रं किञ्चिन्मणिकटकनादैर्मृदु जपन्
क्षिपन्दिक्षु स्वच्छं नखरुचिमयं भास्मनरजः ।
नतानां कामाक्षि प्रकृतिपटुरुच्चाट्य ममता-
पिशाचीं पादो‌sयं प्रकटयति ते मान्त्रिकदशाम् ॥

மஹாமந்த்ரம்ʼ கிஞ்சின்மணிகடகநாதை³ர்ம்ருʼது³ ஜபன்
க்ஷிபந்தி³க்ஷு ஸ்வச்ச²ம்ʼ நக²ருசிமயம்ʼ பா⁴ஸ்மனரஜ꞉ |
நதானாம்ʼ காமாக்ஷி ப்ரக்ருʼதிபடுரச்சாட்ய மமதா-
பிஶாசீம்ʼ பாதோ³(அ)யம்ʼ ப்ரகடயதி தே மாந்த்ரிகத³ஶாம் ||

இது பாதாரவிந்த ஶதகத்தில் 36வது ஸ்லோகம்.
காமாக்ஷியினுடைய பாதங்களை ஒரு மந்திரவாதின்னு சொல்றார்.

ஹே காமாக்ஷி அயம் பாத:³ – உன்னுடைய இந்த திருப்பாதங்கள்
மாந்த்ரிகத³ஶாம் ப்ரகடயதி- மந்திரவாதினுடைய நிலைமையை காட்டுகிறது, அப்படிங்கறார். எப்படி காமாக்ஷியினுடைய பாதம் மந்த்ரவாதி ஆச்சுன்னா?
மஹாமந்த்ரம்ʼ கிஞ்சின்மணிகடகநாதை³ர்ம்ருʼது³ ஜபன் –
மந்த்ரவாதிங்கறவன் ஏதோ முணுமுணுக்கறமாதிரி, ஜபங்கள் எல்லாம் பண்ணுவான். அந்த மாதிரி, இந்த உன்னுடைய பாதங்கள்
மணிகடகநாதை³: – காலில் போட்டுண்டு இருக்கிற சலங்கை ஒலியினால், ஏதோ மஹாமந்த்ரம் ஜெபிக்கறா மாதிரி,
ம்ரு’ʼது³ ஜபன் – மெதுவாக ஜபிக்கறது.
க்ஷிபந்தி³க்ஷு ஸ்வச்ச²ம்ʼ நக²ருசிமயம்ʼ பா⁴ஸ்மனரஜ꞉ –
உன்னுடைய நகருசி – நககாந்தி வெள்ளை வெளேரென்று இருந்துண்டு, நாலா பக்கமும் பரவரது. அது இந்த மந்த்ரவாதி, விபூதியை எல்லா பக்கமும் தூவற மாதிரி இருக்கு. அப்படின்னு ஒரு மந்த்ரவாதி பண்ற காரியங்கள் எல்லாம் சொல்றார். அப்போ என்ன பண்றான் அவன்? எதாவது பிசாசு ஓட்டுறானான்னா? ஆமாம், ஆமாம்.

நதானாம்ʼ காமாக்ஷி – நமஸ்காரம் பண்றவாளுக்கு, ஹே காமாக்ஷி
உச்சாட்ய மமதா-பிஶாசீம்ப்ரக்ருʼதிபடு: – ரொம்ப சாமர்த்திய சாலி அவன். பேய் ஓட்றவனுக்கு சாமர்த்தியம் வேணுமே, ‘உச்சாட்ய மமதா-பிஶாசீம்’ நமஸ்காரம் பண்றவாளுடைய மமதை அப்படிங்கிற பிசாச ஓட்டறான். அதனால், இந்த உன்னுடைய பாதங்கள் ஒரு மந்த்ரவாதி தான், அப்படிங்கறார். மமதானா என்னுடையது அப்படிங்கிற எண்ணம். நான்ங்கிற ego. என்னோடது, என்னோட குழந்தேள், என்னுடைய வீடு, என்னுடைய நகை, அப்படி எல்லாம் நம்ப வளர்த்துண்டு இருக்கோமே, அது பேர் மமதா. இந்த பேயை, காமாக்ஷி சரணத்தில் நமஸ்காரம் பண்ணா, அம்பாள் ஓட்டுவா, அப்படிங்கிறதை இவ்ளோ வேடிக்கையா சொல்றார். நம்ம சேர்ந்தவாள பத்தி ரெண்டு விதத்தில் கவலை படறோம். அவா கஷ்டப்பட்டா கவலைப்படறோம், அவா தப்பு பண்ணா கவலைப்படறோம். ரொம்ப பெரியவாளுக்கே, அவாளை சேர்ந்தவா, தப்பு பண்ணி, அவமானத்தை ஏற்படுத்தறதும், அவாளை சேர்ந்தவா, தன்னை மீறிண்டு வினைகளை அனுபவிச்சு துன்பப்படறதும் இருக்க தான் செய்கிறது. அவா அந்த மமதை இல்லாததுனால், அதை தள்ளிண்டு போறா, தாங்கிண்டு போறா. அந்த மமதை இருந்தா, உடம்புக்கு கெடுதல் மட்டும் இல்லை, நம்மளும் ஏதாவது ஒரு தப்பு பண்ணிவிடுவோம். நம்ம பாசத்தினால் ஏதாவது ஒரு பாப வழியில் போகாம தப்பு பண்ணாம இருக்கணும்னா, அவா தப்பு பண்ணும்போது அதுக்கு துணைக்கு போகாம, இது தப்பு, அப்படினு சொல்றதுக்கு ஒரு தைர்யம் வேணும்னாலே, நமக்கு மமதை இருக்க கூடாது. இந்த மாதிரி ரொம்ப பெரியவாளுக்கே கஷ்டம் வருதே, அப்படின்னு கேட்கும் போதே ஸ்வாமிகள் சொல்லுவார், ஸ்ரீமத் பாகவதம் படிச்சா இந்த கலக்கம் இருக்காது.
கிருஷ்ண பகவான், தான் பரமபதம் போக போறோம்ங்கிற போது, யாதவ குலமே அந்த காந்தாரியோட சாபத்தினால், தன் கண் முன்னாடியே அழிஞ்சு போறத பார்த்துண்டு இருந்தார். அவர் அதை மாத்தலை. அதே சாபத்தினால் தன் காலில் அம்பு பட்டு, தன்னுடைய அவதாரத்தையே முடிச்சுண்டார். இதெல்லாம் படிச்சு புரிஞ்சுண்டா, அவருக்கே ஏன் இந்த கஷ்டம், அப்படிங்கிற எண்ணம் வராது. அந்த பெரியவாளுடைய தூய்மையை பார்த்துண்டு, நம்ம அவாளை வணக்கத்துக்கு உரியவாளா வச்சுக்கணும். அவாளுக்கு வர கஷ்டங்களை பார்த்து நாம் எடை போடக்கூடாது, அப்படினு சொல்வார்.

ஸ்வாமிகள் உடைய மனைவிக்கு உடம்பு சரி இல்லாம இருந்தது hystericalஆ இருந்தா கொஞ்ச நாளைக்கு. அப்போ ஸ்வாமிகள் சொல்வார், அப்போ நான் யார் யார் என்ன சொன்னாளோ, அதெல்லாம் நான் பண்ணேன். சாஸ்த்ரோத்தமா இருந்தா, கடனை வாங்கியாவது நான் பண்ணேன். ருத்ர ஏகாதசி பண்ணுனா, சரி பண்ணேன், எனக்கு இந்த காமாக்ஷியினுடைய சரணங்கள் என்கிற மந்த்ரவாதி மேல தான் நம்பிக்கை, இருந்தாலும் ஜனங்கள் சொல்லும் போது கேட்டுக்கணுமேன்னு பண்ணேன், அப்படின்னு சொன்னார். அவ்ளோ lifeல ஸ்வாமிகள் பொறுமையாக இருந்து இருக்கார். இந்த மமதாங்கிற பிசாசு அவ்ளோ சுலபமா நம்மால ஓட்டவே முடியாது. மஹாபெரியவா ‘ஶிவ ஶிவ பஶ்யந்தி சமம்’ அர்த்தம் சொல்லும் போது, ஒரு பாச்சை விழுந்தா கூட உடம்பு உலுக்கறது, அந்த அளவுக்கு உடம்பில் ‘நான்’ங்கிற எண்ணம் இருக்கு. ஏன் இந்த ஒரு தூண் மாதிரி நினைச்சுப்போமே, இந்த உடம்பில் நான் என்ன, நான் எங்க வந்தது, அப்படினு சொல்றார். அவரால சொல்ல முடியும். நம்மால வந்து உடம்பை இந்த தூண் மாதிரி நினைச்சுக்க முடியுமா? அவ்வளோ நமக்குள்ள அந்த உடம்பில் என்னதுங்கிற எண்ணம் இருக்குங்கிறத பெரியவா புரிஞ்சுண்டு, விஷயங்கள் எல்லாம் என்னுடையதுங்கிற எண்ணம் இருக்குங்கிறதை பெரியவா புரிஞ்சுண்டு அந்த levelல இருக்கறவனை, அம்பாளுடைய சரண த்யானத்தினால் காமம் எல்லாம் அறுந்து போய் விடும். அந்த சரண த்யானத்தை நம்ப பண்ணா, நம்ப நிறைஞ்சு இருக்காளாம், அப்படின்னு சொல்றார். அந்த அளவுக்கு அது வரைக்கும் பெரியவா நம்ப கையை பிடிச்சு கூட்டிண்டு போவாங்கிற அந்த ஒரு உபன்யாசத்தில், அவ்ளோ நம்பிக்கை வருது. நான் முதன் முதலில் lifeல கேட்ட பெரியவா உபன்யாசம் அவருடைய குரலை கேட்டதே ‘ஶிவ ஶிவ பஶ்யந்தி’ தான், நான் ரொம்ப மயங்கி போயிட்டேன், அவருடைய அந்த வாக்குக்கு. இந்த மமதாங்கிறது ஒரு பிசாசு அதை ஓட்டணும்ங்கிறது ரொம்ப பொருத்தம். ஏன்னா, அது தான் நம்மளை புடிச்சு ஆட்டிவைக்கறது. நமக்கு குழந்தேள் இருக்கா, அப்பா அம்மா இருக்கா, உறவுக்காறா இருக்கா. ஸ்வாமிகள் வேடிக்கையாக சொல்லுவார். கல்யாணம் நிச்சயதார்த்தமான பின்ன, அந்த பொண்ணு அந்த பையன் கிட்ட ஒரு period சொல்லி எனக்கு typhoid வந்துடுத்து ரொம்ப கஷ்டப்பட்டேன் அப்படி எல்லாம் சொல்லிக்கும்போது, இவன் வந்து அப்படியா அப்படின்னு சொல்லி கண் ஜலமே வந்து விடும். ஆனா அந்த timeல இவன் examல firstல pass பண்ணி கொண்டாடிண்டு இருந்துருப்பான், hotel போய் சப்பிட்டுண்டு. என்ன சேர்ந்தவள் அப்படிங்கிற எண்ணம் வரும் போது, அந்த சுகம் துக்கம்லாம் கூட சேர்ந்து வந்து ஒட்டிக்கறது, அப்படின்னு சொல்லுவார். அந்த மாதிரி அவா அவாளுடைய கர்ம சுமையை எடுத்துண்டு அவா அவா வந்துருக்கா, அவா அவா அதை வாழ போறா, ஆனா என்னுடைய குழந்தேள் அப்படினு நினைச்சுண்டு நம்ப எவ்வளவு தவிக்கறோம், pressure, sugarஏ வந்துடறது, அவாளை பத்தி கவலை பட்டு கவலை பட்டு. அதில் இருந்து மீள்றதுக்கு அந்த பிசாசோட பிடி கொஞ்சம் விட்டா கூட, அந்த அளவுக்கு நமக்கு நிம்மதி, அது காமாக்ஷியோட சரணங்கள் தான் பண்ண முடியும். நம்ம காமாக்ஷியோட சரணங்களில் நமஸ்காரம் பண்ணனும்.

அமரும் பதிகே ளகமா மெனுமிப்
பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம்பொரு தானவ நாசகனே

அப்படின்னு ஒரு கந்தர் அநுபூதி பாட்டு. இதே பிரார்த்தனை தான் இருக்கு அதுலயும்.

அமரும்பதி – அப்படின்னா நம்ப பொறந்த ஊர், எங்க ஊரு அதுல ஒரு attachment. எங்க ஊரு அப்படின்னு சொல்லும் போது, கேள் – அந்த ஊரில் இருக்கிற என்னுடைய உறவினர்கள்,கேள்வர். அமரும் பதி கேள்.
அகம் மாம் – நான் என்னோடது.
என்னும் இப்பிமரம் – பிமரம்ன்னு தமிழ்ல வார்த்தை கிடையாது. ‘பிரமம்’ என்கிற சமஸ்க்ரித வார்த்தையை எதுகை மோனைக்காக ‘பிமரம்’ன்னு போட்டு இருக்கார்.’பிரமம்’’பிமரம்’னு போட்டு இருக்கார். ஆனா இதுவும் ஒரு வேடிக்கையாக இருக்கு. இந்த என்னுது, நான் அப்படிங்கிறது ஒரு மயக்கம் தானே. மயங்கி போயி அவர் வார்த்தையில் ‘பிமரம்’னு ஆயிடுத்து.
மெய்ப்பொருள் பேசியவா – அந்த பிரமம் போறதுக்கு ஒரு உபதேசம் பண்ணார் என் குருநாதர். அந்த பிசாசு என்ன விட்டு விட்டது. குருநாதர் பண்ண உபதேசம் என்னன்னா? நீ உலக விஷயங்கள் மேல, உறவுக்காரா மேல பற்றை விட்டுடு, அன்பை வளர்த்துக்கோ. அப்படின்னு சொல்லிக்கொடுத்தார்ன்னு.. எழுதியிருக்கார்.அநுபூதி விளக்கம்ன்னு அற்புதமான ஒரு புஸ்தகம். அந்த இடத்தில், இந்த பாரதியார் பாட்டை quote பண்றார் கீ.வா.ஜா.

காக்கை,குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும்,மலையும் எங்கள் கூட்டம்;
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக்களி யாட்டம்.

அப்படின்னு எல்லாத்தலையும் நம்மளை பார்க்க கத்துண்டா நான் என் மேலே, நம்ப உடம்புமேல, நம்ப குழந்தேள் மேல வைக்கிற அன்பை, உலகத்தில் எல்லா மேலயும் வைக்க கத்துண்டா, நோக்க நோக்கக்களி யாட்டம். உலகத்தில் எதை பார்த்தாலும் நமக்கு களியாட்டமாக இருக்குமே அப்படின்னு குரு சொல்லி தரார். இது ஒரு ஞானி சொல்லிகொடுத்து அனுக்கிரஹம் பண்ணா, நமக்கு மாறாத அனுபவமா ஆகும், அது தான் காமாக்ஷியோட சரணம் பண்ற அனுக்கிரஹம். காமாக்ஷி சரணம்ங்கிறது குருநாதர் தான். குமரன் அப்படிங்கிறது மாறனையும் ஜெயிக்ககூடிய அழகுபடைத்த முருகக் கடவுள். மாறன்ங்கிறவன் தான் மயக்கத்தை உண்டு பண்றான். அது குமரனுடைய காலை பிடிச்சுண்டா அந்த மயக்கம் தெளியும்,
கிரிராச குமாரி மகன் – அம்பாளும் கருணையே வடிவான ஞான தாதா. அதனால அம்பாளுடைய பிள்ளை. அதுவும் கிரிராச குமாரி மகன்- ஹிமவானுக்கு பெண்ணாக பிறந்த பார்வதி தேவிக்கு பிள்ளையா முருகன் அவதாரம் பண்ணார். அந்த அவசரத்தில், இன்னும் அதிகமான, அம்பாளுடைய பல விதமான ரூபங்கள் இருக்கு. அதில் பார்வதி குமாரனாக இருக்கும் போது, இன்னும் அதிகமாக கருணை பண்றா.
சமரம்பொரு தானவ நாசகனே – யுத்தத்தில் தானவர்களை நாசம் பண்ணவன்னு அர்த்தம். இந்த மமதா போறதுங்கிறது உள்ளுக்குள்ள நடக்கற ஒரு யுத்தம் தான். அதில் ஆசுர சக்திகள் எல்லாம் நாசம் பண்ணி, நம்முடைய அந்த ‘அஹம் மாம்’ அப்படிங்கிற பிரமத்தை முருகப்பெருமான் போக்குவார், அப்படின்னு இந்த ஸ்லோகத்தில் அழகான ஒரு ப்ரார்த்தனை.

அப்படி அந்த மமதா பிசாசு கிட்ட இருந்து என்ன விடுவிக்கனும் அம்மா, அப்படின்னு இந்த ஸ்லோகத்தை சொல்லி வேண்டிப்போம்.

மஹாமந்த்ரம்ʼ கிஞ்சின்மணிகடகநாதை³ர்ம்ருʼது³ ஜபன்
க்ஷிபந்தி³க்ஷு ஸ்வச்ச²ம்ʼ நக²ருசிமயம்ʼ பா⁴ஸ்மனரஜ꞉ |
நதானாம்ʼ காமாக்ஷி ப்ரக்ருʼதிபடுரச்சாட்ய மமதா-
பிஶாசீம்ʼ பாதோ³(அ)யம்ʼ ப்ரகடயதி தே மாந்த்ரிகத³ஶாம் ||

நம: பார்வதி பதயே !!! ஹர ஹர மஹாதேவா !!!

One reply on “காமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி”

இந்த ஸ்லோகத்தில் தேவியின் பாதங்களே மந்திரவாதி, நூபுற சப்தங்கள் மந்திரங்கள் ! நகங்களின் வெண்ணிற காந்தியே விபூதி என்று வர்ணிக்கிறார் மூல கவி ! என்ன அழகான கற்பனை ?

தேவியை நமஸ்கரிக்க பக்தர்களின் மமதை என்ற பிசாசை விரட்டி அடிக்கும் மந்த்ரவாதியாக இங்கு அவள் பாதம் வர்நிக்கப் படுகிறது !
அவளை துதிப்பவர்கள் மமாகாரம், அகங்காரம் அடியோடு விலகிவிடுவதாகச் சொல்கிறார் கவி ! எத்தகைய உண்மை !
Total surrender to Her Holy Feet makes you humble ! That can be experienced onlly by true dedicated bhakti ,!
பக்தி என்னதான் செய்யாது?

அருணகிரிநாதர் பல பாடல்களில்
திருவடியின் சிறப்பை வர்ணிக்கிறார் !
ஒரு பொழுதும் இரு சரண நேசத் தேவை துனரேனே என்றும்,
வெகு மலறது கோடு வேண்டியாகிலும், ஒரு மலரிலை கொடி மோர்ந்து யானுமை பரிவோடு வீழ்ந்து தாழ்தொழ அரு லவாயே என்ட்ரும், சேமக் கோமள பாதத் தாமரை எனவும், மறை போறறறிய ஒளியாய்ப் பரவு மலர் தாட்கமலம் என்றும் போற்றுகிறார் !
எல்லாவிதத்திலும் ஆண்டவனின் பாதம் பற்றினால் எந்த வினையும் எந்த விட மும் , படரும் எந்த இகலும் பழியும் எந்த வழுவும் பிணியும் எந்த இகள்வுங்கொடிய எந்த வசியும் சிறிதும் அணுகாது என்று சொல்கிறார் அருணகிரியார்.!
ஜய ஜய ஜாகதம்பா சிவே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.