Categories
Govinda Damodara Swamigal

கர்ம பக்தி ஞானம்


நம்ம ஸ்வாமிகள், தன்னை அண்டி வந்து நமஸ்காரம் பண்ணினவா எல்லாரையும் ஒரு ஸ்தோத்ர பாராயணம், ஒரு நாமஜபம், ராமாயண பாகவதம் படிக்கறது, இதெல்லாம் கூட தனிமையில் பண்ணுங்கோ. நாம வ்யாசர், வால்மீகி கூட ஸத்சங்கம் பண்ணலாம். தற்கால ஸத்சங்கங்கள் எல்லாம் சரியில்லைன்னு சொல்லி, இந்த பஜன மார்க்த்திலேயே செலுத்தினார் அப்படீன்னு சொல்லிண்டே வரேன். அப்போ அவர் மத்த நல்ல கார்யங்களை எல்லாம் ஒத்துக்கலையா?கர்ம மார்க்கமோ, ஞான மார்க்கமோ, அவர் அதைப் பத்தி என்ன சொன்னார்னு ஒரு கேள்வி வரது.

மஹா பெரியவாளே முசிறி தீக்ஷிதர் கிட்ட நானும் நீயும் கேட்க கூடிய பாகவதம் சொல்றார் இவர், அப்படீன்னு ஸ்வாமிகளைப் பத்தி சொல்லியிருக்கார். அதாவது மஹாபெரியவா ஸன்யாசி. முசிறி தீக்ஷிதர் யாகம் எல்லாம் பண்றவர். கர்ம மார்கத்துல இருக்கார். கர்ம மார்கத்தையும், ஞான மார்கத்தையும் தூஷணை பண்ணாம, பாகவதத்துல சொல்லியிருக்கற பக்தி மார்கத்தை எடுத்து சொல்றார் ஸ்வாமிகள், அப்டீன்னு மஹாபெரியவா certificate கொடுத்துருக்கா.

இதுல என்ன விசேஷம்னா, ஸ்வாமிகள் ஞான மார்கத்தையும்,க மார்கத்தையும் ரெண்டு தீவட்டி மாதிரி ரெண்டு பக்கமும் பிடிச்சுண்டுதான் இந்த பக்தி மார்கத்துல. மார்கம்னா வழிதானே, போகணும். இந்த வழில போறதுக்கு கர்மா, ஞானம் ரெண்டும் வெளிச்சம் காண்பிக்கறது அப்படீன்னு சொல்வார்.

நிறைய நல்ல கார்யங்களுக்கு ஸ்வாமிகள் encourage பண்ணி இருக்கார். நாராயண ஐயர் மடத்துக்கு கோதானம் பண்ணனும்னு ஆசைப்பட்ட போது “ஒரு தடவை பசு மாட்டை கன்னுகுட்டியோட கொண்டு விட்டுட்டு வந்தா போறாது. அந்த மாடு கறவை நின்ன பின்ன அதை கூட்டிண்டு வந்துட்டு, பின்ன வேற ஒரு மாட்டை கன்னுகுட்டியோட விட்டுட்டு வரணும். அப்பறம் இது சினை பிடிச்சு பால் கொடுக்கும் போது இதை கொண்டு விட்டுட்டு வரணும்” அப்டீன்னு சொல்லி கொடுத்து அந்த மாதிரி அவர் சில வருஷங்கள் பண்ணிண்டு இருந்தார்.

அதே மாதிரி விஸ்வநாத ஐயர் கிட்ட மஹாபெரியவாளே “எனக்கும் ஸ்வாமிமலை தான் குலதெய்வம். உனக்கும் சுவாமிமலை தான் குலதெய்வம். இந்த அறுபடை வீட்ல சுவாமிமலை கோயிலை நீ கட்டறியா?” அப்டீன்னு கேட்டு அவர் கட்டினார். அதுக்கப்புறம் நம்ம ஸ்வாமிகள் சொல்லி, அந்த தெய்வத்துக்கு சாந்நித்யம் கூடுவதற்காக, மயிலாப்பூர்ல ஒரு பாடசாலையில இருந்து பசங்களை எல்லாம் வேன் வெச்சுண்டு கூட்டிண்டு போய் அங்கே அந்த சுவாமிமலை முருகன் சன்னதியில் வேத பாராயணம் வாராவாரம் ரெண்டு மணி நேரம் பண்ணிட்டு வந்தா.

அந்த மாதிரி ஸ்வாமிகள் நல்ல கார்யங்களுக்கு நிறைய வழி காண்பிச்சிருக்கார். encourage பண்ணி இருக்கார். அதுவும் சந்த்யாவந்தனம் பண்ணனும்கிறது ஸ்வாமிகள் ரொம்ப கண்டிப்பா இருந்தார். பண்ணியாச்சா? சந்தியா வந்தனம் பண்ணிட்டுட்டு வந்து உட்கார் அப்படீம்பார். சந்தியாவந்தனம் காலத்துல பண்ணனும்னு சொல்வார். என்னவென்றால் இந்த கர்ம மார்கத்தோட purpose சித்த விருத்தி தூய்மையா ஆகணும்கிறது தான். அந்த நோக்கம் மாறாம கர்ம மார்கத்துல இருங்கோ. ஒரு stunt காகவோ, மத்தவாளுக்கு காமிக்கறதுக்காகவோ கர்ம மார்கத்துல இருக்க கூடாது அப்டீங்கறது ஸ்வாமிகள் சொல்வார். அதப் பத்தி watchful ஆக இருக்கணும். நாம ஒரு கர்மா பண்ணினோம்னா அதுனால ஒரு தெளிவு, எது right, எது wrong அப்படீன்னு புரிஞ்சுக்க முடியும். முக்காவாசி ஜனங்கள் எப்படி இருக்கா? என் கிட்டே பணம் இருக்கு. பொண்டாட்டி குழந்தைகள் எல்லாம் நன்னா இருக்கா. i am happy. i am fine. எதுக்கு நான் சந்தியாவந்தனம் பண்ணனும். எதுக்கு பூஜை பண்ணனும். எதுக்கு கோயிலுக்குப் போகணும். எதுக்கு சாமியார் வந்தா போய் பாக்கணும் அப்டீன்னு இருக்கா. அப்படி இருக்கற ஜனங்கள் ஸ்வாமிகள் கிட்ட வரவே முடியாது. அப்படி இருக்கறவாளுக்கு ஒரு குரு கிடைக்க மாட்டார். எனக்கு இதெல்லாம் இருந்தாலும் இதுல எல்லாம் கிடைக்காத ஒரு திருப்தி ஒரு சந்தோஷம் இருக்கா? அப்படீன்னு தேடறவாளுக்கு தான் ஸ்வாமிகள் மாதிரி ஒரு ஸத்குரு கிடைப்பார்.

அப்படி ஸ்வாமிகளை தேடி வந்து எது நல்லதுன்னு தெரிஞ்சுக்கும்போது, நீ திரும்பவும் என்கிட்டே பணம் இருக்கு அதை வெச்சு நான் ஹோமம் பண்றேன். கோயிலுக்கு கொடுக்கறேன் அப்டீன்னு சொல்லி பந்தா பண்ணாத. stunt ஆ பண்ணாமல் அடக்கமா பண்ணு. stunt ஆ பண்ணினா, அந்த சித்த விருத்தி தூய்மை ஆகணும்கிற purpose அடிபட்டுப் போய்டும் அப்டீங்கிற warning கொடுப்பார்.

அதுக்கு சில உதாரணம் சொல்றேன். சந்தியாவந்தனம் பண்ணு அப்படீன்னு சொல்வார். ஆனா நான் இங்க காத்துண்டு இருக்கேன். நீ மணிக்கணக்கா சந்த்யாவந்தனம் பண்ணிண்டு இருக்காதே. சீக்கரம் வா அப்படீனும் சொல்வார்.

அதே மாதிரி எனக்கு 25 வயசுல ஒருத்தர் வந்து காயத்ரி ஜபத்தை ஹோமமா பண்றதுதான் விசேஷம் அப்படீன்னார். ஸ்வாமிகள் “அது குழந்தைகள் தூங்காம இருக்கறதுக்காக ஆயிரத்தெட்டு சமித்து வெச்சு ஹோமம் பண்றா. உனக்கு 25 வயசாயிடுத்து. “யக்ஞானாம் ஜப யக்க்நோஸ்மி” னு கீதையில் இருக்கு. இதுக்கு மேல நீ ஜபம் பண்ணலாம். அதுதான் விசேஷம்” என்று சொன்னார்.

ஒரு தடவை ஸம்க்ஷேப தர்ம சாஸ்த்ரம் என்ற புஸ்தகத்தை வாங்கிண்டு போனேன். இதுல இருக்கறதை எல்லாம் follow பண்ணலாம்னு இருக்கேன்னு சொன்னேன். ஸ்வாமிகள் அந்த புஸ்தகத்தில் தேடி ஒரு ஸ்லோகத்தை எடுத்தார். ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம அப்படீன்னு 21 ஆவர்த்தி ஜபிச்சா பிரம்மஹத்தியாதி தோஷங்கள் போகும் அப்படீன்னு ஒரு ஸ்லோகம் இருக்கு. அந்த ஸம்க்ஷேப தர்ம சாஸ்திர புஸ்தகத்தோட அட்டையில ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் படம் இருந்தது. ‘அந்த ராம பட்டாபிஷேக படத்தை தொட்டு கண்ல ஒத்திக்கோ. இந்த ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம 21 ஆவர்த்தி ஏதாவது தோஷங்கள் வந்திருக்குன்னு நினைச்சேன்னா இத ஜபம் பண்ணு’ அப்படீன்னு சொன்னார். மத்தபடி இந்த புஸ்தகத்துல இருக்கற எல்லாத்தையும் follow பண்ணனும்னு நினைச்சா ரொம்ப கஷ்டம் என்று சொன்னார்.

நான் foreign போயிட்டு வந்தபின் என் கல்யாணத்தின் போது “நான் வரதட்சணை வாங்க மாட்டேன் அப்டீன்னு என் ஜாதகத்துல எழுத போறேன்” என்று சொன்னேன். நீ foreign போய் டாலர்ல சம்பாதிப்பாய். அப்புறம் வந்தவுடனே மஹாபெரியவா பக்தி. வரதட்சணை வாங்கமாட்டேன். என்னதுக்கு stunt? பேசாம இரு” அப்டீனார். அப்புறம் ஏதோ அவரோட அனுக்ரஹத்துல இந்த வரதட்சணை சீர் செனத்தி என்ற பேச்சே இல்லாம எங்க கல்யாணம் நடந்தது. எங்க அப்பா அம்மாவோட பரந்த மனசு. அதனால அவா அந்த பேச்சையே எடுக்கல.

அந்த மாதிரி சுவாமிகளுக்குப் மஹாபெரியவா பக்திங்கிறது ஒரு stunt ஆ போயிடக்கூடாது. அப்புறம் உனக்கு ஆத்மலாபம் கிடைக்காம போய்டுமே எங்கிறதுனால அவர் warn பண்றார்.

அதே மாதிரி ஞான மார்கத்தை பத்தி பாத்தோம்னா, சுவாமிகள் பண்ணிண பக்தியே ஞான மார்க்கம் தான். அவர் இந்த பாகவதம் படிச்சதும் பிரவசனம் பண்றதும் கேட்டவாளுக்குத் தெரியும். அட்டையிலிருந்து அட்டை இந்த புஸ்தகம் materialism தை வெறுக்கறது. மனசை பத்னி, புத்ராள், பணம் அதுல இருந்து எடுத்து பகவான்கிட்ட வெக்கணும்கிறது தான் message. வைராக்கியத்துக்காகத் தான் பாகவதம் படிக்கணும். பாகவதம் படிச்சா ஞானம் வரும் என்று அழுத்தமாகச் சொல்வார். “நான் இதையே படிச்சுண்டு இருக்கேன்” என்று சொன்ன போது, “இல்லை, நீ வேலைக்குப் போ” அப்படீன்னு ஏன் சொன்னார்னா, என் அப்பா அம்மாக்கு நான் ஆற்ற வேண்டிய கடமைகள் இருப்பதைச் சொல்லித் தான் என்னை convince பண்ணினார். அந்த கால கட்டத்துல நான் வேற ஒரு சந்யாசிக்கிட்ட போய் இராமாயண பாகவதமே படிச்சுண்டு உட்கார்ந்திருக்கேன் அப்படீன்னு சொன்னபோது அவர் “நீ officeக்கு சட்டை போட்டுண்டு போயிட்டு வந்து சாயங்காலம் வேஷ்டி மாத்திக்கற மாதிரி, வேலையையும் பாரு. பஜனமும் பண்ணு” என்று சொன்னார். சுவாமிகளிடம் சொன்ன போது “இதைச் சொல்றதுக்கு ஸன்யாசி என்னதுக்கு?” ன்னு கேட்டார். அந்த மாதிரி ஸ்வாமிகளுக்கு அந்த sense of urgency about வைராக்யம், ஞானம், பகவத் தரிசனம் இருக்கணும். ஸ்வாமியை பாக்கணும் என்ற அந்த ஆவல் இருக்கணும். ‘இதுவும் பண்ணலாம். அதுவும் பண்ணலாம். எதை விட முடியறது?’ அப்டீங்கிற பேச்சை அவர் ரசிக்க மாட்டார்.

ஸ்ரீமத் பாகவதத்துல கலி புருஷன் “எனக்கு இருக்க இடம் கொடு”ன்னு கேட்கறான். அப்போ பரிக்ஷித்து “ஸ்த்ரீகளிடத்திலும், கசாப்புக் கடைகளிலும், சூதாட்டத்திலும், ஸுராபானத்திலும் போய் இருந்துக்கோ” அப்படீன்னு சொல்றார். அப்போ அவன் “இல்லை, இன்னும் வளர்வதற்கு இடம் வேணும்”னு சொன்னவுடன் “நீ தங்கத்துல போய் இரு” அப்படீன்னு பாகவத textல இருக்கு. ஸ்வாமிகள் “பணத்துல போய் இருன்னு சொன்னான்” என்று சொல்லணும். இந்த காலத்துல தங்கத்துல இருனு சொன்னான் என்றால் என்ன புரியும்? பணத்துல கலி இருக்கான்னு அப்டீன்னு சொல்றதுக்கே இந்த காலத்துல எல்லாரும் பயப்படறா. பாகவதம் பிரவசனம் பண்ண வந்த பின்ன materialism தை வெறுத்து பேசணும். நமக்கு எங்க பணம் வராம போய்டுமோன்னு நினைக்கறா. அதனால பணத்துல கலி இருக்கான். பணத்துல மனசு வெச்சா பைத்தியம் பிடிச்சா மாதிரி ஆயிடுவா. அதுனால அதில் இருந்து மனச எடுக்கணும். பகவான்கிட்ட மனச வெக்கணும். அப்டீங்கிறது தான் பாகவதத்தோட core message. அதை தைரியமா சொல்லணும்” என்பார்.

இந்த மாதிரி சித்த வ்ருத்தி தூய்மைக்காகத் தான் கர்ம மார்க்கம். அப்புறம் பக்தி பண்ணணும். உலக விஷயங்கள்ல இருந்து மனச எடுக்கணும். சீக்கரமா மனசைக் கொண்டு போய் பகவான் கிட்ட வெக்கணும் என்ற விஷயம் இந்த சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் என்று ஆதி சங்கரர் ஒரு ஸ்தோத்ரம் பண்ணியிருக்கார். அதுல ஒரு நாலு ஸ்லோகத்துல இந்த விஷயம் அழகா அதே வரிசையில் வரது

चन्द्रोद्भासितशेखरे स्मरहरे गङ्गाधरे शङ्करे

सर्पैर्भूषितकण्ठकर्णविवरे नेत्रोत्थवैश्वानरे ।

दन्तित्वक्कृतसुन्दराम्बरधरे त्रैलोक्यसारे हरे

मोक्षार्थं कुरु चित्तवृत्तिम अमलामन्यैस्तु किं कर्मभिः ॥

किं यानेन धनेन वाजिकरिभिः प्राप्तेन राज्येन किं

किं वा पुत्रकलत्रमित्रपशुभिर्देहेन गेहेन किम् ।

ज्ञात्वैतत्क्षणभङ्गुरं सपदि रे त्याज्यं मनो दूरतः

स्वात्मार्थं गुरुवाक्यतो भज मन श्रीपार्वतीवल्लभम् ॥

आयुर्नश्यति पश्यतां प्रतिदिनं याति क्षयं यौवनं

प्रत्यायान्ति गताः पुनर्न दिवसाः कालो जगद्भक्षकः ।

लक्ष्मीस्तोयतरङ्गभङ्गचपला विद्युच्चलं जीवितं

तस्मात्त्वां शरणागतं करुणया त्वं रक्ष रक्षाधुना ॥

वन्दे देवमुमापतिं सुरगुरुं वन्दे जगत्कारणं

वन्दे पन्नगभूषणं मृगधरं वन्दे पशूनां पतिम् ।

वन्दे सूर्यशशाङ्कवह्निनयनं वन्दे मुकुन्दप्रियं

वन्दे भक्तजनाश्रयं च वरदं वन्दे शिवं शङ्करम् ॥

சந்த்ரோத்பாஸிதஶேகரே ஸ்மரஹரே கங்காதரே ஶங்கரே

ஸர்பைர்பூஷிதகண்டகர்ணவிவரே நேத்ரோத்தவைஶ்வானரே |

தந்தித்வக்க்ருதஸுந்தராம்பரதரே த்ரைலோக்யஸாரே ஹரே

மோக்ஷார்தம் குரு சித்தவ்ருத்திம் அமலாம் அன்யைஸ்து கிம் கர்மபி ||

கிம் யானேன தனேன வாஜிகரிபிஃ ப்ராப்தேன ராஜ்யேன கிம்

கிம் வா புத்ர-கலத்ர-மித்ர-பஶுபிர்-தேஹேன கேஹேன கிம் |

ஜ்ஞாத்வைதத்க்ஷணபங்குரம் ஸபதி ரே த்யாஜ்யம் மனோ தூரத:

ஸ்வாத்மார்தம் குருவாக்யதோ பஜ மன ஶ்ரீபார்வதீவல்லபம் ||

ஆயுர்னஶ்யதி பஶ்யதாம் ப்ரதிதினம் யாதி க்ஷயம் யௌவனம்

ப்ரத்யாயாந்தி கதாஃ புனர்ன திவஸாஃ காலோ ஜகத்பக்ஷகஃ |

லக்ஷ்மீஸ்தோயதரங்கபங்கசபலா வித்யுச்சலம் ஜீவிதம்

தஸ்மான் மாம்ஶரணாகதம் கருணயா த்வம் ரக்ஷ ரக்ஷாதுனா ||

வந்தே தேவமுமாபதிம் ஸுரகுரும் வந்தே ஜகத்காரணம்

வந்தே பன்னகபூஷணம் ம்றுகதரம் வந்தே பஶூனாம் பதிம் |

வந்தே ஸூர்யஶஶாங்கவஹ்னினயனம் வந்தே முகுந்தப்ரியம்

வந்தே பக்தஜனாஶ்ரயம் ச வரதம் வந்தே ஶிவம் ஶங்கரம் ||

பரமேஸ்வரா! மோட்சம் அடையறதுக்கு என் சித்த வ்ருத்தியை தூய்மைப்படுத்த வேண்டும். மத்த கார்யங்களால ஆகப் போறது என்ன? வண்டி இருந்து என்ன, பணம் இருந்து என்ன, வேலைக்காரர்கள் இருந்து என்ன, ராஜ்ஜியம் இருந்து என்ன, பதவி இருந்து என்ன, பிள்ளைகள், மனைவி, friends,pets இருந்தென்ன? இந்த உடம்புதான் சாஸ்வதமா, பெரிய வீடு இருந்து என்ன பிரயோஜனம்? இதெல்லாம் ஒரு க்ஷணத்துல மறைந்து போய்விடும். மனசை இதுல இருந்து தள்ளி வை. உன்னுடைய ஆத்மாவுக்கு க்ஷேமமான கார்யத்தை செய். குரு சொன்ன வழியை பின்பற்றி அந்த பார்வதிபதியான பரமேஸ்வரனை பஜனம் பண்ணு.

அதைக்கூட சீக்கரம் பண்ணு. ஆகட்டும் ஆகட்டும் னு நினைக்காதே. ஒவ்வொரு நாளும் ஆயுஸு குறைஞ்சுண்டே வர்றது. உன்னுடைய யௌவனம் போயிண்டே இருக்கு. போன நாள் திரும்பி வராது. இந்த காலம்கிறது உலகத்தை முழுங்கிண்டே இருக்கு. லக்ஷ்மி தேவியோடு கண் அசைவுக்காக காத்துண்டு இருந்து, அதாவது பணம் வருமா, பணம் போய்டுமா என்று கவலைப்பட்டு கவலைப்பட்டு வாழ்க்கையே ஒரு மின்னலாட்டம் மறைஞ்சு போய்டும்.

ஹே பரமேஸ்வரா! நான் உன்னை சரணடைகிறேன். என்ன காப்பாத்து.

நம பார்வதீ பதயே!!! ஹர ஹர மஹா தேவ!!!

கர்ம பக்தி ஞானம் (12 min audio in Tamizh, same as the transcript above)

One reply on “கர்ம பக்தி ஞானம்”

Dear Sir,
https://mahaperiyavaa.blog/2017/07/15/autobiography-of-shri-ganapathi-sthapathi/
With reference to the above link by Padmashri Ganapathy Stapathi. He spoke about a sloka VAMANGASTHE JANAKI as the basis of moola moorthi of badrachala rama. He said the sloka is from adi shankara Rama Karnamrutham. If possible can you provide the slokas in your blog.It will be of great help if u can recite them and provide explanations. Thanks in advance.
Rama.. Rama..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.